முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு
     
  மார்க்சீயமும் தமிழ் இலக்கியமும் : ஒரு வரலாற்றுக் கணக்கெடுப்பு
- எம். ஏ. நுஃமான் -
 
 
 
 

மார்க்சியம் உலகைப் புரிந்துகொள்வதற்கான ஒரு தத்துவம் என்ற வகையிலும், உலகை மாற்றுவதற்கான ஒரு வழிமுறை என்ற வகையிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து உலகில் பெரும் செல்வாக்குச் செலுத்திவருகிறது. மானுட விழுமியங்களை நோக்கிய மனிதனின் முழுமையான வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் சகல தளைகளையும் உடைத்து உண்மையான மனித விடுதலையைப் பெற்றுத்தரும் ஒரு தத்துவமாக அது கருதப்படுகிறது.

பூரண விடுதலைக்குத் தடையாக இருக்கும் தனியுடைமை, வர்க்க முரண்பாடு, சுரண்டல் ஆகியவற்றைக் களைந்து பொதுவுடைமை, சமத்துவம், சமூக நீதி, சமவாய்ப்பு, தனிமனித சுதந்திரம் என்பவற்றை உறுதிப்படுத்தும் ஒரு புதிய சோசலிச சமூகத்தை முன்மொழியும் ஒரு கோட்பாடு என்ற வகையில் ஒடுக்குதலுக்குள்ளான மிகப்பெரும்பாலான உலக மக்களின் ஒரு ஆதர்சமாக அது விளங்குகின்றது. அதே காரணத்தினால் அதிகார வர்க்கத்தினரின் அச்சத்துக்கும் பகைமைக்கும் அது ஏதுவாகியது. இதன் விளைவாக பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் பிந்திய சமூக அரசியல் சித்தாந்தங்கள் அனைத்தும் ஒருவகையில் மார்க்சீய சார்பானதாக அல்லது எதிர்பானதாக அமைந்திருப்பதைக் காணலாம்.

கடந்த நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து லட்சக்கணக்கான மக்களின் உயிர்த் தியாகத்தின் மீது, இரத்தத்தின் மீது கட்டப்பட்ட பல சோசலிச சமூகங்கள் உள் முரண்பாடுகளாலும் வெளிச் சக்திகளின் சதிமுயற்சிகளாலும் சரிந்த பின்னரும் கூட, உலகெங்கும் இனவாத, மதவாதப் பிளவுகளும் மோதல்களும் தூண்டிவிடப்பட்ட பின்னரும் கூட, இன்றும் விடுதலைக்காகப் போராடும் மக்கள் மத்தியில் சோசலிச இலட்சியங்கள் மீதான கவர்ச்சி மங்கிவிடாதிப்பதைக் காண்கிறோம். சோசலிச நடைமுறைகளின் குறைபாடுகளையும் மீறி அது முன்வைக்கும் சமூக, அரசியல், பண்பாட்டு விழுமியங்கள் மிகவும் கவர்ச்சிகரமானவை. இதனாலேயே முதலாளித்துவ ஜனநாயகச் சிந்தனைகளும் சமூக நீதி, சமூக நலம், மனித உரிமைகள் என்ற அடிப்படைகளில் இந்த விழுமியங்களை உள்வாங்க நேர்ந்தது. முதலாளித்துவ, நிலவுடைமை சார்பாளர் மத்தியில் வெவ்வேறு அடிப்படைகளில் மார்க்சிய எதிர்ப்பு எவ்வளவு தீவிரமாக இருப்பினும் அது முன்வைக்கும் சமூக அறநெறிகளை அவர்களாலும் நிராகரிக்க முடிவதில்லை.

2

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் குறிப்பாக 1917 ரஷ்யப் புரட்சிக்குச் சற்று முன்பின்னாக பொதுவுடமைச் சிந்தனை தமிழுக்கு அறிமுகமாகியது. பாரதியும் பாரதியின் சமகாலத்தவர்களான சிங்காரவேலர், நீலகண்டன், கிருஷ்ணசாமி சர்மா முதலியோரும் இதுபற்றி எழுதியுள்ளனர். போல்ஷ்விக், புரட்சி, பொதுவுடமை, சமத்துவம், அபேதவாதம் முதலிய சொற்கள் கடந்த நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்திலேயே தமிழில் புழக்கத்துக்கு வந்துவிட்டன. பாரதியின் எழுத்துகளில் - கவிதைகளிலும் கட்டுரைகளிலும் - இதனைக் காண்கின்றோம். பாரதியின் ‘புதிய ருஷ்யா’ கவிதை தமிழில் ரஷ்யப் புரட்சியின் தாக்கத்தைக் காட்டும் முதல் இலக்கிய வெளிப்பாடு எனலாம்.

இக்கவிதை 1917 பிப்ரவரியில் நிகழ்ந்த பூர்ஷ்வா புரட்சி பற்றியதா, ஒக்டோபரில் நிகழ்ந்த சோசலிசப் புரட்சி பற்றியதா என்ற மயிர் பிளக்கும் வாதங்கள் உண்டு. ரகுநாதன் (பாரதி: சில பார்வைகள்) இக்கவிதை ச��சலிசப் புரட்சி பற்றியது என்பார், கேசவன் (சோசலிசக் கருத்துகளும் பாரதியாரும்) இது பூர்ஷ்வாப் புரட்சிபற்றியது என்பார். இது அவ்வளவு முக்கியமல்ல. புரட்சியின் நோக்கம் பற்றியும், இவ்விரு புரட்சிகள் பற்றியும் பாரதி அறிந்திருந்தான் என்பது முக்கியம். அது ஜார் ஆட்சிக்கெதிராக போல்ஷ்விக்குகள் தலைமைதாங்கிய மக்கள் எழுச்சியின் வெற்றி என்பதும் அவனுக்குத் தெரிந்திருந்தது. அதனாலேயே அதை அவன் வாழ்த்தி வரவேற்றான். ‘நவீன ருஷ்யாலில் விவாக விதிகள்’ என்ற கட்டுரையில் அதுபற்றி பாரதி பின்வருமாறு எழுதுகிறான்:

“ருஷ்யாவில் ஜார் சக்ரவர்த்தியின் ஆட்சி பெரும்பாலும் ஸமத்வக் கட்சியார், அதாவது போல்ஷ்விஸ்ட் கட்சியாரின் பலத்தாலே அழிக்கப்பட்டது. எனினும் ஜார் வீழ்ச்சியடைந்த மாத்திரத்திலே அதிகாரம் போல்ஷ்விஸ்ட்களின் கைக்கு வந்துவிடவில்லை. அப்பால் சிறிதுகாலம் முதலாளிக் கூட்டத்தார் கெரென்ஸ்கி என்பவரைத் தலைவராக நிறுத்தி, ஒருவிதமான குடியரசு நடத்தத் தொடங்கினார்கள். ஆனால் கெரென்ஸ்கியின் ஆட்சி அங்கு நீடித்து நடக்கவில்லை. இங்கிலாந்து, ப்ரான்ஸ் ஆகிய நேச ராஜ்யங்களிடமிருந்து பலவகையில் உதவி பெற்றபோதிலும் புதிய கிளர்ச்சிகளின் வெள்ளத்தினிடையே, கெரென்ஸ்கியால் தலைதூக்கி நிற்க முடியவில்லை. சிலமாதங்களுக்குள்ளே கெரென்ஸ்கி தன் உயிரைத் தப்புவித்துக்கொள்ளும் பொருட்டாக ருஷ்யாவினின்றும் ஓடிப்போய், நேச வல்லரசுகளின் நாடுகளில் தஞ்சமென்று குடிபுக நேரிட்டது.”

ரஷ்யப் புரட்சிபற்றி பாரதிக்கிருந்த தெளிவு நமது மார்க்சிய ஆய்வாளர்களுக்கு இருக்கவில்லை என்பது வியப்புக்குரியது. பாரதியைப் பொறுத்தவரை ஒக்டோபர் புரட்சி பிப்ரவரியில் தொடங்கிவிட்டது. அதில் பிரதான பாத்திரம் வகித்து ஜாரின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தவர்கள் போல்n~விக்குகள். இடையில் சிலமாதங்கள் முதலாளிக் கூட்டத்தார் ஆட்சியில் இருந்தது ஒரு பொருட்டல்ல. அந்தவகையில் பாரதியின் புதிய ருஷ்யா முதலாளிகளின் வெற்றியைப் பாடியதல்ல, கொடுங்கோன்மைக்கு எதிரான மக்கள் எழுச்சியின் வெற்றியைப் பாடியது என்பது தெளிவு. ரகுநாதன்போல் பாரதியைத் தமிழின் முதலாவது பொதுவுடமைப் புரட்சிக் கவிஞனாகக் காட்டவோ, கேசவன்போல் பாரதியை ஒரு பூர்ஷ்வாக் கவிஞனாகக் காட்டவோ முயல்வது அபத்தம். தனது கருத்துக்குச் சார்பாகப் பாரதியிடமிருந்து பல மேற்கொள்களைக் காட்டும் கேசவன் (1987) ‘நவீன ருஷ்யாவில் விவாக விதிகள்’ என்ற கட்டுரையைக் கண்டுகொள்ளவே இல்லை.

ரஷ்யப் புரட்சியின் குறிக்கோள்களை – சமத்துவம், பொதுவுடமை முதலிய கொள்கைகளை- பாரதி வரவேற்கிறான், அதேவேளை அதன் வழிமுறைகள் சிலவற்றுடன், குறிப்பாக வன்முறை, அவனுக்கு உடன்பாடு இல்லை. ‘செல்வம்’ பற்றிய பாரதியின் இரண்டு கட்டுரைகளில் இது பற்றிய அவனுடைய கருத்துகளைக் காணலாம். இது நாம் புரிந்துகொள்ளக் கூடியதே. மார்க்சீய சித்தாந்தம், சோவியத் புரட்சி என்பவற்றின் தாக்கம் பாரதியின் எழுத்துகளில் காணப்படுகிறது என்பதே இங்கு நமக்கு முக்கியமானது.

பாரதி காலத்தில் சோவியத் விவகாரம் பற்றி பரவலான அறிவு இருந்ததாகத் தெரியவில்லை. இதுபற்றி ‘தமிழ்நாட்டின் விழிப்பு பத்திரிகைகளின் நிலைமை’ என்ற கட்டுரையில் பாரதியே ஒரு சுவையான தகவலைத் தெரிவிக்கிறான். அது வருமாறு:

“எனக்கு நாலைந்து முக்கியமான தமிழ்ப்பத்திரிகைகள் வருகின்றன. அவற்றுள் ஒன்று வாரப்பத்திரிகை. அது பழுத்த சுதேசியக் கட்சியைச் சேர்ந்தது. ஆனால் தக்க பயிற்சி இல்லாதவர்களால் நடத்தப்படுவது. சில தினங்களின் முன்பு அந்தப் பத்திரிகையில் யுத்த சம்பந்தமான தலையங்கம் ஒன்று எழுதப்பட்டிருந்தது. அதில் ருஷ்யாவில் “போல்ஷ்விக்” என்ற ஒரு மனுஷ்யன் இருப்பதாகவும், அவன் ஒரு கட்சி ஏற்படுத்தி நமது நேசக் கட்சிக்கு விரோதம் செய்வதாகவும் சொல்லியிருந்தது! அஃது அந்நாட்டில் ராஜ்யப் புரட்சிக் கூட்டங்களில் ஒன்றாகிய ‘மகிஸிமிஸ்த்’ கட்சிக்கு மற்றொரு பெயரென்றும் ஒரு மனுஷயனுடைய பெயர் அல்ல வென்றும் அந்தப் பத்திராதிபர் தெரிந்துகொள்ளவில்லை.”

1920 வரை தமிழில் மார்க்சியம் பரவலாக அறிமுகப்படவில்லை என்றே கூறலாம். 1920க்குப் பின்னரே கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் அரசியல் இயக்கம் இந்தியாவில் செயற்படத் தொடங்கியது. 1921ல் தாஷ்கண்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆயினும் 1925ல் கான்பூர் மாநாட்டில்தான் இந்தியாவில் முதல்முதல் பொதுவுடமைக் கட்சி தொடங்கப்பட்டது. இந்திய விடுதலை இயக்கத்தோடு பொதுவுடமைச் சிந்தனையும் தனியாக வளர்ச்சியடைந்தது.

1930களில்தான் தமிழ்நாட்டில் மார்க்சியச் சிந்தனை பரவலாகக் காலூன்றத் தொடங்கிற்று எனலாம். 1930, 40களில் இது தொடர்பாகத் தமிழில் பல நூல்கள் வெளிவந்தன. நீலகண்ட பிரமச்சாரி, எம். சிங்காரவேலு, ப. ஜீவானந்தம், ஈ. வே. ராமசாமி, சாமிநாத சர்மா, ராஜாஜி, அ. நடராசன் முதலியோர் கட்டுரைகளும் நூல்களும் எழுதி வெளியிட்டனர். இவ்வகையில் அ. நடராசனின் லெனின் - ருஷ்யாவின் விடுதலை வீரன் (1933), சாமிநாத சர்மாவின் கார்ல் மாக்ஸ் (1943), ருஷ்யாவின் வரலாறு (1948), ராஜாஜியின் அபேதவாதம், பெரியார் ஈ. வே. ராமசாமியின் குடியரசுப் பதிப்பகம் வெளியிட்ட சில நூல்கள் குறிப்பாக லெனினும் மதமும், பொது உடமைத் தத்துவங்கள் என்பன முக்கியத்துவம் உடையன. இக்காலகட்டத்தில் ப. ஜீவானந்தம், பி. ராமமூர்த்தி ஆகியோர் தொடங்கிய ஜனசக்தி இதழும் பொதுவுடமைச் சிந்தனையைப் பரப்பியது.

1940, 50களில் கம்யூனிஸ்ட் இயக்கம் இந்தியாவிலும் தமிழகத்திலும் வலுவாகக் காலூன்றிய பின்னரே தமிழில் மார்க்சீயச் சிந்தனை பரவலாகியது.

இலங்கையிலும் இதே காலகட்டத்தில் மார்க்சியச் சிந்தனை அறிமுகமாகியது. 1935ல் லங்கா சமாஜமாஜக் கட்சி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது. கருத்துநிலை முரண்பாடு காரணமாக இக்கட்சியிலிருந்து பிரிந்து சென்ற சிலரால் 1940ல் ஐக்கிய சோசலிசக் கட்சி உருவாக்கப்பட்டது. 1943ல் அது இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி என்று பெயர்மாற்றம் பெற்றது. 1930களிலிருந்தே தமிழர் மத்தியிலும் ஒரு வலுவான இடதுசாரி அரசியல், பண்பாட்டு மரபு இருந்தது. அ. வைத்தியலிங்கம், பி. கந்தையா, மு. கார்த்கேசன், என். சண்முகதாசன் முதலியோர் இலங்கையிலும், தமிழர் மத்தியிலும் கம்யூனிச இயக்க முன்னோடிகளுள் முக்கியமான சிலராவர்.

3

1950களின் இறுதிவரை அல்லது 1960களின் நடுப்பகுதிவரை தமிழுக்கு அறிமுகமான மார்க்சியம் பெரிதும் ஸ்டாலினால் வழிநடத்தப்பட்ட சோவியத் மார்க்சியம்தான். இது ஸ்டாலினிசம் எனப்பட்டது. ஸ்டாலினின் மறைவுக்குப் பின்னர் அதிகாரத்துக்கு வந்த குருட்சிவ் 1956ல் ஸ்டாலினைப் பகிரங்கமாக விமர்சித்து அவருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தபோது சீனா அவரின் நிலைப்பாட்டை நிராகரித்தது. இதன் விளைவாக கொள்கை அடிப்படையில் உலக கம்யூனிச இயக்கம் இரண்டாகப் பிளவுண்டது. ஒன்று, மாஸ்கோ சார்பான மிதவாத கம்யூனிசம். ஆயுதப் புரட்சியினால் மட்டுமன்றி பாராளுமன்றப் பாதையின் மூலமும் சோசலிசத்தை அடையலாம் என்று இது கூறியது. இது பின்னர் திரிபுவாதம் என அழைக்கப்பட்டது. மற்றது, சீன சார்பான தீவிரவாத கம்யூனிசம். இது ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்த பாட்டாளி வர்க்கப் புரட்சியே சோசலிசத்துக்கான ஒரேவழி என்றது. மா ஓ இசம் என இது அழைக்கப்பட்டது.

1960, 70களில் மூன்றாம் உலக நாடுகளின் இடதுசாரி இயக்கங்களும் தேசிய விடுதலை இயக்கங்களும் பெரிதும் மா ஓ இச சிந்தனையின் செல்வாக்குக்கு உட்பட்டன. நக்சல்பாரி, தெலுங்கானா இயக்கங்களாக இந்தியாவில் அது வளர்ச்சியடைந்தது. தமிழ்நாட்டிலும் அது செல்வாக்குப் பெற்றது. இலங்கையிலும் சீன சோவியத் பிளவு வலுவடைந்தது.

இவ்விரு சிந்தனைப் போக்குகளும் கட்சி சார்ந்தவையாக, கட்டிறுக்கமானவையாக, நெகிழ்ச்சி அற்றவையாக, கட்சித் தலைமைப் பீடத்தினால் ஒருமுகப்படுத்தப்பட்டவையாக அமைந்தன.

1970களின் நடுப்பகுதியிலிருந்து தமிழில் மார்க்சிய சிந்தனையில் ஒரு புதிய போக்கு காணப்பட்டது. இதனைக் கட்சிசாரா மார்க்சியம் எனலாம். அதிருப்தி காரணமாக கட்சிகளிலிருந்து வெளியேறிய பலர் இதில் பங்களிப்புச் செய்தனர். சர்வதேச ரீதியில் மார்க்சியம் எதிர்நோக்கிய நெருக்கடிகள், மா ஓ வுக்குப் பிந்திய சீனப் பிறழ்வு, உள்நாட்டு அரசியல் நெருக்கடிகள், இனத்தேசியவாதம், சாதியம் ஆகியவற்றின் எழுச்சி போன்றவற்றை இதற்குக் காரணமாகக் கூறலாம்.

கட்சிகளுக்குள் இருந்து அதிருப்தியுற்று வெளியேறிய பலரும், கட்சிகளுக்கு வெளியே இருந்தவர்களும், ஐரோப்பிய நேற டுநகவ இயக்கம் சார்ந்த சிந்தனைகளின் செல்வாக்குக்கு உட்பட்டு இந்திய – தமிழ்நாட்டு மார்க்சியத்தை மறுவிசாரணைக்கு உட்படுத்த முயன்றனர். எஸ். என். நாகராசன், ஞானி ஆகியோர் இந்திய ஆன்மீகத்துடன் மார்க்சீயத்தை இணைத்து அமைதிகாண முயன்றனர்.

தீவிர மார்க்சிய இயக்கங்களிலிருந்து அதிருப்தியுடன் வெளியேறிய எஸ். வி. ராஜதுரை 1970க்குப் பின் தமிழின் முக்கியமான ஒரு மார்க்சியச் சிந்தனையாளராக முன்னணிக்கு வந்தார். கட்சி மார்க்சியத்தின் இறுகிய தேக்கத்தை உடைப்பதில் இவருடைய பங்கு முக்கியமானது. அந்நியமாதல், எக்சிஸ்டென்~pயலிசம் (இருத்தலியல்) ஆகிய சிந்தனைகளை 1970களில் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். கட்டிறுக்கமான கட்சி மார்க்சியப் பார்வைக்கு மாற்றாக இந்த முயற்சிகள் மார்க்சியச் சிந்தனையில் ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்த முயன்றன. இலக்கியத்தில் ஸ்டாலினிசத்தின் வரட்டுப் பார்வைக்கு எதிரான தீவிர விமர்சனத்தை முன்வைத்தவர். அவ்வகையில் 1989ல் வெளிவந்த இவரது ரஷ்யப் புரட்சி இலக்கிய சாட்சியம் என்ற நூல் மிகுந்த முக்கியத்துவம் உடையது. தமிழ்ச் சூழலில் ஸ்டாலினிசத்தின் இலக்கிய சர்வாதிகாரம் பற்றிய ஒரு விரிவான ஆய்வை இந்நூல் முன்வைத்தது. கட்சி மார்க்சியத்தால் நிராகரிக்கப்பட்ட ஸொல்சினிற்சன், போரிஸ் பாஸ்டர்நக் ஆகியோரின் படைப்புகள் பற்றிய கூர்மையான, ஆக்கபூர்வமான இவரது விமர்சனங்கள் மார்க்சிய விமர்சனத்தை வளப்படுத்துபவை.

1980களின் பிற்பகுதியில் சோசலிச உலகில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. சோவியத் யூனியனின் உடைவும், கிழக்கு ஐரோப்பியக் கம்யூனிச அரசுகளின் வீழ்ச்சியும், சீனா போன்ற கம்யூனிச நாடுகள் தாராள பொருளாதாரக் கொள்கையைத் தழுவிக்கொண்டமையும் காரணமாக மார்க்சீயத்தின் மீதான நம்பிக்கையைப் பலர் இழந்தனர். பல்தேசிய முதலாளித்துவத்தின் எழுச்சியுடன் மேற்கில் முன்னணிக்கு வந்த அமைப்பியல், பின் அமைப்பியல் சிந்தனைகள் பலருக்கு மிகுந்த கவர்ச்சியாக அமைந்தன. மார்க்சியம் பின்னடைந்து தமிழ்த் தேசியம், தலித்தியம், பெண்ணியம் போன்ற சிந்தனைப் போக்குகள் முன்னணிக்கு வந்தன. மார்க்சியத்துக்கும் இவற்றுக்கும் இடையிலான உறவு பற்றிய சர்ச்சைகள் அவ்வப்போது நிகழ்ந்தபோதும், மார்க்சியம் முன்வைத்த வர்க்கப்போராட்டம், தொழிலாளி வர்க்கத்தின் ஒன்றிணைவு, சுரண்டலற்ற சமத்துவ உலகு, அனைவருக்கமான விடுதலை போன்ற கருத்துகள் பின்தள்ளப்பட்டன.

ஆயினும், உலகமயமாதல், பின்னவீனத்துவ மாயைகள் படிப்படியாகக் கலைந்துவரும் இன்றையச் சூழலில் உலகளாவிய நிலையில் மீண்டும் மார்க்சீயத்தின் மீதான ஆர்வம் துளிர்த்துவருவதையும் அவதானிக்க முடிகிறது.

4

இந்தப் பின்னணியிலேயே மார்க்சியத்துக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் இடையிலான உறவுபற்றி நாம் நோக்கவேண்டும். இலக்கியம் பற்றிய நமது மார்க்சியப் பார்வையில் ஏற்பட்டுவந்த மாற்றங்களையும் திருப்பங்களையும் தேக்கங்களையும் புரிந்துகொள்ள இது நமக்கு உதவக்கூடும். தமிழ் இலக்கியப் படைப்பிலும் இலக்கிய விமர்சனத்திலும் மார்க்சியத்தின் செல்வாக்கு பற்றி நாம் தனித்தனியாக இங்கு நோக்கலாம்.

மார்க்சியம் தமிழுக்கு சோவியத் புரட்சியின் ஊடாகவே அறிமுகமாகியதுபோல், தமிழ் இலக்கியத்தின் மீது அதன் தாக்கமும் சோவியத் மூலமாகவே நிகழ்ந்தது. தமிழ் இலக்கியத்தில் அதன் தாக்கத்தை முதலில் பிரதிபலித்தவன் பாரதியே என்பதையும், ரஷ்யப் புரட்சியை வாழ்த்தி அவன் எழுதிய ‘புதிய ருஷ்யா’ என்ற கவிதையே கம்யூனிச இயக்கம் தமிழ் இலக்கியத்தின்மீது பதித்த முதல் முத்திரை என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். அதன் பிறகு சுமார் இருபது ஆண்டுகள் தமிழ் எழுத்தாளர்கள் கவிஞர்கள் மத்தியில் அது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.

1930களின் இறுதியில் தமிழ்நாட்டில் சோசலிச இயக்கம் மெல்லத் தலைதூக்கத் தொடங்கியபோது ப. ஜீவானந்தம், பாரதிதாசன் ஆகியோர் பொதுவுடமை சார்பான சில பாடல்களை எழுதினர். பாரதிதாசனின் முதல் தொகுதியில் பொதுவுடமைச் சிந்தனையால் உந்துதல் பெற்ற பாடல்கள் சில உள்ளன. தளை அறு, கூடித் தொழில் செய்க, தொழிலாளர் விண்ணப்பம், புதிய உலகு செய்வோம் முதலியவற்றை எடுத்துக்காட்டலாம். பொதுவுடமை, தொழிலாளர் எழுச்சி என்பவற்றை இக்கவிதைகளில் பாரதிதாசன் பாடுகிறார். திராவிட இயக்கத்தின் பிரச்சாரகராக ஆகமுன் பாரதிதாசனிடம் பொதுவுடமைச் சிந்தனையின் செல்வாக்கு இருந்ததாகத் தெரிகிறது.

இக்காலகட்டத்தில் மணிக்கொடி இதழ் மூலம் முன்னணிக்குவந்த நவீன எழுத்தாளர்களிடம் இதன் தாக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. புதுமைப்பித்தன் இதற்கு ஒரு விதிவிலக்கு எனலாம். அவருடைய சில கதைகளில் மறைமுகமாக இதன் தாக்கத்தைக் காணமுடியும். சமூகத்தின் அடித்தள மக்களின் பிரச்சினைகளை அவருடைய பல கதைகள் சித்திரிக்கின்றன. அவ்வகையில் அவரது பல கதைகள் தீவிர சமூக விமர்சனமாகவே அமைகின்றன. தன் காலத்து எழுத்தாளர்கள் யாரையும் விட உலக அரசியல் தொடர்பான தீவிர அக்கறையும் அறிவும் அவருக்கு இருந்தது. முசோலினி, ஹிட்லர், ஸ்டாலின் ஆகியோர் பற்றி அவர் எழுதிய பாஸிஸ்ட ஜடாமுனி, கப்சிப் தர்பார், ஸ்டாலினுக்குத் தெரியும் ஆகிய நூல்களும், அதிகாரம் யாருக்கு என்ற நூலும் ஏனைய எழுத்தாளர்களிடமிருந்து அவரை வேறுபடுத்திக் காட்டுகின்றன.

பாஸிசத்தையும் பொதுவுடமையையும் எதிரெதிரே நிறுத்தினாலும், பாஸிசத்தையும் முதலாளித்துவத்தையும் முற்றாக நிராகரிப்பதையும் பொதுவுடமையின் மீது அனுதாபம் கொண்டிருப்பதையும் அவரது மேல்குறிப்பிட்ட நூல்களில் பரவலாகக் காணலாம். ஸ்டாலினின் தலைமைத்துவத்தின் கீழ் சோவியத் யூனியனில் சோசலிசக் கட்டுமானம் பற்றிய ஒரு சாதகமான சித்திரத்தை ஸ்டாலினுக்குத் தெரியும் நூலில் புதுமைப்பித்தன் மிகவும் விஸ்தாரமாகத் தீட்டியிருக்கிறார். ஏனைய எழுத்துகளில் பொதுவுடமை பற்றி ஆங்காங்கே போகிறபோக்கில் விடுக்கும் குத்தல் விமர்சனங்கள் எதையும் இதில் காணமுடியவில்லை.

அக்டோபர் புரட்சி சமூகங்களுக்கிடையே சம உரிமையைக் கொண்டுவந்தது பற்றி புதுமைப்பித்தன் (2002) பின்வருமாறு எழுதுகிறார்:

“அக்டோபர் புரட்சி கழிந்த இரண்டாவது நாள் ரஷ்யத் தொழிலாளர்கள் குடியானவர்கள் சர்க்காரின் பிரகடனம் கையெழுத்திடப்பட்டது. பல ஜாதியினரின் கமிஸார் என்ற ரீதியில் ஸ்டாலின் அதில் கையெழுத்திட்டார். லெனின், ரஷ்யாவில் உள்ள சகல வர்க்க, ஜாதிய வேறுபாடுடைய மக்கள் யாவரும் சம உரிமை உள்ளவர்கள் என்பதை அங்கீகரித்தார். ஜார் ஆண்ட ரஷ்யாவைப் பல ஜாதீய மக்களின் சிறைக்கோட்டம் என்று வர்ணிப்பார்கள். இந்தப் பிரகடனம் அந்தச் சிறைச்சாலையின் பூட்டைத் திறந்த சாவி.”

இவ்வாறு கூறும் புதுமைப்பித்தன், "ஸோவியத் சமுதாயத்திலே மிகவும் கவுரவம் அளிக்கப்படும் பிரஜை கலைஞன்" என்றும் "ஸோவியத் மக்களுக்கு சுயமாகச் சிந்திப்பதற்குப் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது" என்றும் புகழ்ந்துரைக்கிறார். என்றாலும் சிதம்பர ரகுநாதன் (1994) புதுமைப்பித்தனைப் பற்றி இதற்கு மாறுபட்ட வேறுசில தகவல்களைத் தருகிறார். அவர் கூறும் விபரம் இது:

“1944ல் சென்னைக்குச் சென்று ‘தினமணி’ பிரசுராலயத்தில் உதவியாசிரியனாகச் சேர்ந்தேன். இந்தக் காலத்தில்தான் எனக்குப் புதுமைப்பித்தனின் நெருங்கிய நட்பும் அன்பும் கிட்டின. இவ்வாறு அவரோடு நான் நெருங்கிப் பழகிவந்த காலத்தில், நான் கம்யூனிச சித்தாந்த அனுதாபியாகவும், சோவியத் நாட்டை நேசிப்பவனாகவும் இருந்த விஷயம் அவருக்குப் பிடிக்கவில்லை. எழுத்தாளன் கம்யூனிச சித்தாந்தியாக மாறினால் அவனுடைய சுதந்திரம் பறிபோய்விடும் என்றே அவர் கருதினார். மேலும் அப்போது அவர் கம்யூனிச விரோதியாகவும் ஸ்டாலினைப் பற்றி நல்லெண்ணம் இல்லாதவராகவுமே இருந்தார். இதனால் கம்யூனிச அபிமானத்தையும் அனுதாபத்தையும் நான் கைவிடுவதற்கு அவர் எவ்வளவோ முயற்சிசெய்தார். அப்போதுதான் அவர் என்னிடம் மாஸ்கோவில் 1937இல் நடந்த விசாரணைகளைப் பற்றிக் கூறியதோடு, ஆர்தர் கீஸ்லர் அந்த விசாரணையைக் கருப்பொருளாகக் கொண்டு எழுதியுள்ள "Darkness at Noon" – நண்பகலில் கும்மிருட்டு – என்ற நாவலைப் படிக்குமாறு செய்தார். மேலும் கம்யூனிசத்துக்கு எதிர்காலமில்லை என்ற கருத்தை வலியுறுத்திய ஜேம்ஸ் பர்ன்ஹாம் எழுதிய Managerial Revolution – நிர்வாகப் புரட்சி – என்ற நூலை அவரே எனக்கு விலைக்கு வாங்கிக் கொடுத்தார். இதன் காரணமாக நான் கம்யூனிச விரோதிகளாக இருந்த அல்லது அவ்வாறு மாறிவிட்ட சில எழுத்தாளர்களின் நூல்களையும் படித்தேன். என்றாலும் நான் எனது கருத்து நிலையிலிருந்து மாறவில்லை”

புதுமைப்பித்தன் ஸ்டாலினுக்குத் தெரியும் என்ற நூலை 1941ல் எழுதியிருக்கிறார். ஆனால் இந்த நூலில் கம்யூனிச, ஸ்டாலின் விரோதக் கருத்தக்கள் எவையும் இல்லை. எனினும் இதற்கு முன்பே 1939ல் புதுமைப்பித்தன் ந. ராமரத்னம் என்பவருடன் இணைந்து ஹிட்லர் பற்றி கப்சிப் தர்பார் என்ற பெயரில் ஒரு நூல் எழுதியிருக்கிறார். இதில் முதல் 9 அத்தியாயங்கள் புதுமைப்பித்தனால் எழுதப்பட்டவை. இறுதி 9 அத்தியாயங்களையும் எழுதியவர் ராமரத்னம். ராமரத்னம் எழுதிய இறுதிப்பகுதியில் இடம்பெறும் பின்வரும் கம்யூனிச, ஸ்டாலின் எதிர்ப்புக்கருத்துக்களை ரகுநாதன் தருகிறார்:

“பாலும் தேனும் வழிந்தோடுவதாகச் சித்திரிக்கப்படும் ருஷ்யாவில் இன்று என்ன ஜனநாயகம் இருக்கிறது? 1917ஆம் வருட அக்டோபர் புரட்சிக்குத் தூண்கள் போலிருந்த பல பொதுவுடமைத் தலைவர்கள் ஏன் பீரங்கி வாய்க்கு இரையானார்கள்? ருஷ்யப் புரட்சிக் கோஷ்டியின் மேதையென்று புகழப்பட்ட டிராட்ஸ்கி இன்று அனாதையாக உலகெங்கும் சுற்றித் திரிவதற்குக் காரணம் என்ன? அதிகாரத்தைக் கைப்பற்றிய ஸ்டாலினை அவர்களுக்குப் படிக்கவில்லை. ஆகவே அவர்களுக்கு இந்தக் கதி நேர்ந்தது.”

“இப்பகுதியை ராமரத்னம் எழுதினாலும் இந்தக் கருத்து புதுமைப்பித்தனுக்கும் உடன்பாடானதே என்பதில் நமக்கு எந்தச் சந்தேகமும் இருக்கத் தேவையில்லை. நூலாசிரியர்கள் இருவரும் ஸ்டாலினையும் ஹிட்லரைப் போன்ற ஒரு சர்வாதிகாரியாகவே மதித்திருந்தனர் என்பதும் எனவே புதுமைப்பித்தன் 1939ஆம் ஆண்டிலேயே ஸ்டாலினை வெறுத்திருக்கிறார் என்பதும் தெளிவு” என்பது ரகுநாதன் கருத்து. இது உண்மையெனில் 1941ல் ஸ்டாலினுக்குத் தெரியும் என்ற பெருமளவு ஸ்டாலினுக்குச் சாதகமான நூலை புதமைப்பித்தன் எவ்வாறு எழுதினார் என்பது ஆய்வுக்குரியது.

இலக்கியத்தில் மார்க்சியத்தின் செல்வாக்கு வட இந்தியாவில் 1930களிலேயே வலுவாக வெளிப்படத் தொடங்கிவிட்டது. முல்க்ராஜ் ஆனந், பிரேம்சந் போன்றோர் அக்காலத்தில் பிரபலமாகி இருந்தனர். இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பிரேம்சந் தலைமையில் 1936ல் உருவாக்கப்பட்டது. ஆயினும் தமிழ்நாட்டில் 1940களின் பிற்பகுதியிலேயே மார்க்சிய சார்பான எழுத்தாளர்கள் சிலர் இலக்கிய அமைப்புகளைக் கட்டியெழுப்ப முயன்றனர். தானும் தி. க. சிவசங்கரனும் சேர்ந்து ‘கலைஞர் கழகம்’ என்ற பெயரில் 1947ல் ஒரு அமைப்பைத் தொடங்கியதாகவும், இதைத்தான் தமிழ்நாட்டில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முன்னோடி என்று சொல்லவேண்டும் என்றும், ஆயினும் இது சில மாதங்களே செயற்பட்டதாகவும் ரகுநாதன் கூறுகிறார். பின்னர் 1948, 1949, 1952ஆம் ஆண்டுகளில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைக்க எடுத்த முயற்சிகள் உருப்படியான பயன்தரவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

இலங்கையில் 1940களின் பிற்பகுதியிலிருந்து தமிழ் இலக்கியத்தில் மார்க்சியக் கருத்துநிலையின் செல்வாக்கைக் காணமுடிகிறது. அ. ந. கந்தசாமி, கே. கணேஸ் பி. ராமநாதன் ஆகியோரை இலங்கையில் முற்போக்கு இலக்கியதின் முன்னோடிகள் எனலாம். இவர்களுக்கு இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் தொடர்பு இருந்தது. 1946ல் கே. கணேஸ், பி. ராமநாதன் ஆகியோரின் முன்முயற்சியால் இலங்கை எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது. அச்சமயம் முல்க்ராஜ் ஆனந் இலங்கை வந்திருந்தார். இச்சங்கத்துக்கு சுவாமி விபுலாநந்தர் தலைவராகவும் மார்ட்டின் விக்ரமசிங்க உபதலைவராகவும் சரத்சந்திரா, கே. கணேஸ் அகியோர் செயலாளர்களாகவும் செயற்பட்டனர். ஆயினும் இது நீடிக்கவில்லை. 1954ல்தான் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நிறுவப்பட்டது. இச்சங்கத்தின் பொதுச்செயலாளராக பிரேம்ஜி ஞனசுந்தரமும் துணைச் செயலாளர்களுள் ஒருவராக இளங்கீரனும் செயற்பட்டனர். (முழு விபரத்துக்குப் பார்க்கவும், இளங்கீரன், 1994).

5

1950கள் தமிழில் முற்போக்கு இலக்கிய எழுச்சிக்காலம் எனலாம். பொதுவுடமைச் சிந்தனையின் செல்வாக்குக்கு உட்பட்ட பல எழுத்தாளர்களும் விமர்சகர்களும் இக்காலத்தில் உருவாகினர். ரகுநாதன், கு. அழகிரிசாமி, விந்தன், டி. செல்வராஜ், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் முதலிய தமிழக எழுத்தாளர்களும், கே. கணேஷ், இளங்கீரன், செ. கணேசலிங்கள், கே. டானியல், டொமினிக் ஜீவா, என். கே. ரகுநாதன், நீர்வை பொன்னையன் முதலிய ஈழத்து எழுத்தாளர்களும் முற்போக்கு இலக்கியத்தின் முதல் தலைமுறையினர் எனலாம். இவர்களில் சிலர், குறிப்பாக, சுந்தரராமசாமி, ஜெயகாந்தன் ஆகியோர் விரைவிலேயே முற்போக்கு இலக்கிய முகாமிலிருந்து விலகினர். இவர்களுள் பெரும்பாலோர் பொதுவாக வர்க்க, சாதி முரண்பாடுகளைத் தங்கள் எழுத்தில் முதன்மைப்படுத்தினர்.

நா. வானமாமலை, தி. க. சிவசங்கரன், ரகுநாதன், க. கைலாசபதி, கா. சிவத்தம்பி முதலிய முற்போக்கு விமர்சகர்களும் இக்காலப் பகுதியிலேயே உருவாகினர்.

பல முற்போக்கு இலக்கிய இதழ்கள் இக்காலகட்டத்தில் வெளிவந்தன. ரகுநாதனின் சாந்தி (1954), விஜயபாஸ்கரனின் சரஸ்வதி (1955), விந்தனின் மனிதன் (1956). கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட தாமரை (1959) என்பன இவற்றுள் முக்கிமானவை. இலங்கையிலிருந்து பாரதி, புதுமை இலக்கியம் முதலிய இதழ்கள் வெளிவந்தன.

சோவியத் இலக்கியங்கள் பல இக்காலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. குறிப்பாக முற்போக்கு இலக்கியத்தின் சோவியத் முன்னோடியான மாக்சிம் கார்க்கியின் படைப்புகளைக் குறிப்பிடலாம். கார்க்கியின் மிக முக்கியமான படைப்பான தாய் நாவலின் சுருக்கிய மொழிபெயர்ப்பு அன்னை என்ற பெயரில் 1948ல் வெளிவந்தது. இதை மொழிபெயர்த்தவர் ப. ராமசாமி. ரகுநாதனின் முழுமையான மொழிபெயர்ப்பு 1951ல் வெளிவந்தது. இக்காலகட்டத்தில் பிற இந்திய மொழிகளிலிருந்தும் முற்போக்கு இலக்கியங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. முல்க்ராஜ் ஆனந்தின் தீண்டாதான் நாவலை கே. கணேஷ் 1947ல் மொழிபெயர்த்தார். கே. ஏ. அப்பாஸின் பல சிறுகதைகளையும் இவர் மொழிபெயர்த்தார். தகழி சிவசங்கரன் பிள்ளையின் தோட்டியின் மகனை சுந்தர ராமசாமி மொழிபெயர்த்தார்.

1960, 70 களில் தமிழ் இலக்கியத்தின்; அரசியல் உள்ளடக்கத்தில் முக்கியமான மாற்றம் நிகழ்ந்தது. இக்கால கட்டத்தில் சர்வதேச மற்றும் உள்நாட்டு அரசியல் சூழ்நிலைகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக தமிழ் இலக்கியத்தில் மார்க்சீய அல்லது சோசலிச இலட்சியங்கள் முன்னணிக்கு வந்தன. இக்கால கட்டத்தில் பின்காலனிய மூன்றாம் உலக நாடுகளில் ஏகாதிபத்தியத்துக்கும் அதன் உள்நாட்டு ஆதரவு சக்திகளுக்கும் எதிரான போராட்டத்தில் மார்க்சியமும் மா ஓ இசமும் முக்கியமான பாத்திரம் வகித்தன. இந்தியாவிலும் இலங்கையிலும் கூட நாம் இந்த அரசியல் போக்கைக் காணலாம். பாராளுமன்றப் பாதையின் மூலம் சோசலிசத்தை அடையலாம் என்று நம்பிய இடதுசாரிக் கட்சிகள் தேசியவாதக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சிக்குவர முயன்றன. அதேவேளை சோசலிசத்தை அடைவதற்குப் பாராளுமன்றப் பாதையை நிராகரித்த, எண்ணிக்கையில் சிறுபான்மையினரான மாஓ இசக் கட்சிகளும் குழுக்களும் மாஓவின் புதிய ஜனநாயக் கொள்கையை ஏற்றுக்கொண்டு சோசலிசத்தை அடைவதற்கு இனத்துவ, சாதி எல்லைகளைக் கடந்து தொழிலாளி, விவசாயி வர்க்கங்களை ஒன்றிணைத்துப் போராடும் புரட்சிகரப் பாதையைப் பிசாரப்படுத்தின. சில குழுக்கள் செகுவேராவின் லத்தீன் அமெரிக்கப் புரட்சியால் கவரப்பட்டன. இக்காலகட்த்தில்தான் நக்சல் பாரி இயக்கம் இந்தியாவில் தீவிரமாகச் செயற்பட்டது. ஆயிரக்கணக்கான கிராமப்புற இளைஞர்களையும் யுவதிகளையும் பலிகொண்ட சிங்கள இளைஞர்களின் தோல்வியுற்ற புரட்சி இலங்கையில் நிகழ்ந்ததும் இக்காலப்பகுதியில்தான்.

வௌ;வேறு அளவில் சோசலிச இலட்சியங்களின் செல்வாக்குக்கு உட்பட்ட பெரும்பாலான எழுத்தாளர்களும் கவிஞர்களும் இடதுசாரி இயக்கங்களில் இணைந்து அல்லது அவற்றுக்கு ஆதரவாகச் செயற்பட்டார்கள். சோவியத் சார்பான கம்யூனிஸ்ட கட்சியின் அனுசரணையுடன் செயற்பட்ட கலை இலக்கியப் பெருமன்றத்துடன் வானமாமலை, ரகுநாதன் ஆகியோரின் வழிகாட்டுதலில் பல எழுத்தாளர்கள் இணைந்து செயற்பட்டனர். பொன்னீலன், பூமணி, போன்ற படைப்பாளிகளும் ஆ. சிவசுப்பிரமணியன், தோத்தாத்திரி, தி. சு. நடராசன் போன்ற ஆய்வாளர்களும் இதில் முக்கியமானவர்கள். 1970களின் தொடக்கத்தில் மிகுந்த சொற்தீவிரவாதத்துடன் கவிதைத் துறையில் வானம்பாடி குழு முன்னணிக்கு வந்தது. இந்திய பொதுவுடமைக் கட்சி (மா), இந்திய பொதுவுடமைக் கட்சி (மா. லெ) என்ற பெயர்களில் பிரிந்த தீவிர மார்க்சீயக் கட்சிகளின் சார்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், மக்கள் கலை இலக்கியக் கழகம், பரட்சிப் பண்பாட்டு இயக்கம் போன்ற சில இயக்கங்கள் தோன்றின. இவ்வியக்கங்கள் சார்பில் செம்மலர், மன ஓசை, புதிய கலாசாரம் முதலிய கலை இலக்கிய இதழ்கள் வெளிவந்தன. பழைய தலைமுறையைச் சேர்ந்த டி. செல்வராஜ், கு. சின்னப்ப பாரதி, இன்குலாப் போன்றோரும் புதிய தலைமுறையைச் சேர்ந்த பா. செயப்பிரகாசம், அஸ்வகோஷ், கந்தர்வன், மேலாண்மைப் பொன்னுச்சாமி, ரவிக்குமார் முதலியோரும் இவ்வகையில் முன்னணிக்கு வந்தனர். வேவ்வேறு புரட்சிகர இயக்கங்களுடன் தொடர்புடைய ஆய்வாளர்கள், விமர்சகர்கள் என்ற வகையில் எஸ். வி. ராஜதுரை, கோ. கேசவன், அ. மார்க்ஸ் முதலியோர் இக்காலப் பகுதியில் முக்கியத்துவம் பெற்றனர்.

தமிழ் இலக்கியத்தில் மார்க்சீயக் கருத்துக்களை முன்னெடுப்பதில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1960களின் தொடக்கத்தில் இருந்து முக்கிய பாத்திரம் வகித்தது. சமூக சமத்துவம், இன ஒருமைப்பாடு தேசிய ஐக்கியம் என்பவற்றில் இடதுசாரி எழுத்தாளர்கள் அனைவரும் நம்பிக்கை கொண்டிருந்தனர். சோசலிசமே இன முரண்பாட்டுக்கு ஒரே தீர்வு என்றும் அவர்கள் நம்பினார்கள். சாதி அடக்குமுறை, வர்க்க முரண்பாடு, பொருளாதாரச் சுரண்டல் என்பன இக்கால கட்டத்தில் படைக்கப்பட்ட புனைகதைகள், கவிதைகளின் சில பிரதான பொருளாகின.

1960களின் நடுப்பகுதியில் கம்யூனிச இயக்கத்தில் சீன, சோவியத் பிளவு ஏற்பட்டபோது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சோவியத் சார்பு நிலைப்பாட்டை எடுத்தது. அதிலிருந்து பிரிந்த முந்திய தலைமுறையைச் சேர்ந்த இளங்கீரன், செ. கணேசலிங்கன், நீர்வை பொன்னையன், டானியல் முதலியோருடன் பெனடிக்ற் பாலன், செ. கதிர்காமநாதன், செ. யோகநாதன் முதலியோர் மா ஓ இசச் சார்புடைய தீவிர இடதுசாரிகளாகப் புனைகதைத் துறையில் செயற்பட்டனர். புதிய தலைமுறையைச் சேர்ந்த பெரும்பாலான கவிஞர்களும்;, எழுத்தாளர்களும் தீவிர இடதுசாரிச் சார்புடையவர்களாகவே இருந்தனர். பசுபதி, சுபத்திரன், புதுவை இரத்தினதுரை, சாருமதி, சண்முகம் சிவலிங்கம், சி. சிவசேகரம் முதலியோர் இக்காலகட்டத்தின் தீவிர இடதுசாரிக் கவிஞர்களாவர். இவர்கள் வௌ;வேறு இயக்கங்களில் இணைந்து அல்லது தனித்துச் செயற்பட்டனர். முற்போக்கு விமர்சகர்கள் என்ற வகையில் கா. சிவத்தம்பி சோவியத் சார்பாளராகவும், க. கைலாசபதி சீன சார்பாளர்களாகவும் செயற்பட்டனர். புதிய ஜனநாயக் கட்சியின் கலாசார இக்கமாக 1973ல் உருவாக்கப்பட்ட தேசிய கலை இலக்கியப் பேரவை இன்றுவரை செயற்படுகின்றது. ஆரம்பத்திலிருந்து கைலாசபதி அதன் ஆலோசகராக இருந்தார். சிவசேகரம் இன்று அதன் முக்கிய செயற்பாட்டாளராக விளங்குகிறார். தாயகம் இதன் கலை இலக்கிய இதழாகும்.

1980க்குப் பின்னர் தமிழகத்திலும்சரி இலங்கையிலும்சரி இடதுசாரி இயக்கம் ஒரு சமூக அரசியல் சக்தி என்ற வகையில் பின்னடைவுற்றது என்றுதான் சொல்லவேண்டும். சர்வதேசரீதியில் நிதிமூலதனத்தின் எழுச்சியும், உலகமயமாதலும், சோவியத் யூனியனின் உடைவும், மா ஓவுக்குப் பிந்திய சீனாவின் திசைமாற்றமும்; இதற்கு முக்கிய காரணிகளாக அமைந்தன என்றால் உள்நாட்டில் ஏற்பட்ட மத அடிப்படைவாதம், இனத்தேசியவாதங்களின் எழுச்சி, சாதிப்போராட்டங்களும் தலித்தியம், பெண்ணியம் போன்ற சமூக அரசியல் இயக்கங்களின் எழுச்சி என்பனவும் காரணிகளாகின. அமைப்பியல், பின்னமைப்பியல், பின்னவீனத்துவம் என்பன மார்க்சீயத்துக்கு மாற்றான, அதன் போதாமையை நிறைவுசெய்யும் சிந்தனைகளாகவும் மிகுந்த ஆரவாரத்துடன் முன்வைக்கப்பட்டன. ஆனால் அவையும் இன்று பெரும்பாலும் காலாவதியாகிவிட்டன.

மார்க்சியத்தின் தோற்றத்தை, அதன் வளர்ச்சியை நியாயப்படுத்துகின்ற சமூக முரண்பாடுகள், ஏற்றத்தாழ்வுகள், சுரண்டல், ஒடுக்குமுறை என்பன அதன் தோற்றகாலத்தை விட இன்று இன்னும் உக்கிரமடைந்துள்ளன. இந்நிலையில் மார்க்சியத்தின் தேவை காலாவதியாகிவிட்டது என்ற வாதம் ஏற்புடையதல்ல. ஆனால் அது பழைய வடிவில்தான் மீண்டும் வரும் என்பதற்கான சாத்தியப்பாடுகள் மிகக் குறைவாகும்.

6

இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து தமிழ் இலக்கியத்தில் மார்க்சியத்தின் செல்வாக்கு அழுத்தமாகக் காணப்படினும், முற்போக்கு எழுத்தாளர் என்று அடையாளம் காணப்படுகின்ற எழுத்தாளர்கள் பலர் இருப்பினும், முற்போக்கு இலக்கியம் என்ற அடையாளத்துடன் ஒரு கணிசமான இலக்கியத் தொகுதி நம்மிடம் இருப்பினும் இவர்களுள் தமிழின் மிகச் சிறந்த படைப்பாளிகள் எத்தனைபேர், இவற்றுள் தமிழின் மிகச் சிறந்த படைப்புகள் எத்தனை என்ற வினாக்களுக்கான விடைகள் அவ்வளவு சாதகமானவை அல்ல. அதேவேளை, மார்க்சிய, முற்போக்கு எதிர்ப்பாளர் கூறுவதுபோல் அவை அனைத்துமே வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் வீசி எறியப்பட வேண்டியவையும் அல்ல.

தமிழில் மார்க்சிய இலக்கியப் போக்குகள் பல்வேறு வகைப்பட்டாலும் அவற்றுக்கிடையே நாம் சில பொதுப் பண்புகளைக் காணமுடியும். அவற்றை நாம் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.

1. இலக்கியத்தின் அரசியல் உள்ளடக்கத்துக்கு முதன்மை கொடுத்தல்: இலக்கியம் சுரண்டப்படும், ஒடுக்கப்படும் மக்களின் வாழ்க்கையை, அவர்களின் பிரச்சினைகளை, அவர்களின் விடுதலையை அடிப்படையாகக் கொள்ளவேண்டும் என்ற பார்வை. அதாவது இலக்கியம் தொழிலாளி, விவசாயி வர்க்கம், தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்கள், சமூகத்தின் அடிமட்டத்தில் இருப்பவர்கள் பற்றியதாக இருக்கவேண்டும். அவ்வகையில் படைப்பாளியின் வர்க்க சார்பு முக்கியமானதாகக் கருதப்பட்டது. இவ்வகையில் ஒடுக்கப்பட்ட அடித்தள மக்கள் தமிழ் இலக்கியத்தில் முதல்முதல் முக்கியத்துவம் பெற்றனர்.

2. வெளிப்படையான அரசியல்: உழைக்கும் மக்களின் வெற்றியைக் கூறும் வர்க்கப்போராட்ட அரசியலை முதன்மைப்படுத்தியது. பிரச்சினையை மட்டும் விபரித்து மக்களைச் சோர்வுவாதத்துக்கு உள்ளாக்காமல், தீர்வுக்கான வழியையும் காட்டவேண்டும் என்ற கருத்து. அதாவது பாதிக்கப்பட்ட மக்கள் விழிப்புற்று எழுவதையும் காட்டுதல்.

3. பயன்பாட்டுவாத நோக்கு: அதாவது இலக்கியம் சமூக மாற்றத்துக்கான ஒரு கருவியாகப் பயன்பட வேண்டும் என்ற பார்வை.

இவை மூன்றுமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை, ஒன்றின் வௌ;வேறு அம்சங்கள் என்றுகூடக் கூறலாம். இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய இலக்கியக் கோட்பாடாக சோசலிச யதார்த்தவாதம் முன்வைக்கப்பட்டது. இலக்கியத்தின் பன்முகத் தன்மையை மறுத்து அதற்கு ஒருமுகத் தன்மையைத் திணித்தது என்று மார்க்சிய வாதிகளாலேயே இது பின்னர் விமர்சிக்கப்பட்டது.

சிக்கலான மனித வாழ்வை, மனித அனுபவத்தை வர்க்க நோக்கில் மிகை எளிமைப்படுத்தி சில வாய்ப்பாட்டுக்குள் திணித்து இலக்கியமாக்கும் போக்கு இதன்மூலம் முதன்மை பெற்றது. நேரடியான வர்க்க அரசியலுடன் தொடர்பற்ற மனிதப் பிரச்சினைகள் எல்லாம் வெளி ஒதுக்கப்பட்டன. அவற்றை இலக்கியத்தில் கையாள்வது பிற்போக்குத்தனம் என்றும் கருதப்பட்டது. முற்போக்கு எழுத்தாளர்களும் விமர்சகர்களும் இதில் ஒத்து இயங்கினர்.

காலத்தின் தேவை காரணமாக பொதுவான கருத்தியல் அடிப்படையிலேயே முற்போக்கு இலக்கியம் இங்கு பிரபலப்படுத்தப்பட்டுவந்தது. தனிப்பட்ட முறையில் இங்கு படைப்புகளையோ படைப்பாளிகளையோ விரிவான விமர்சனத்துக்கு உள்ளாக்கி அவற்றின் தாரதம்மியங்கள் மதிப்பிடப்படவில்லை. அதனால் எமது இலக்கியத்தின் அழகில் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க வாய்ப்பே இல்லாது போயிற்று. நமது முற்போக்குப் படைப்பாளிகளின் இலக்கியக் குறைபாடுகள் பரந்துபட்ட உலக இலக்கிய ஞானமுடைய நமது விமர்சகர்கள் பலருக்குத் தெரியாமல் இல்லை. தனிப்பட்ட பேச்சுக்களில் அவை வெளிப்பட்டுள்ளன. ஆயினும் தொடர்ந்தும் அரசியல் தந்திரோபாய ரீதியில் இவை விமர்சிக்கப்படாது பொதுமைப்படுத்தப்பட்ட கூற்றுக்களே முன்வைக்கப்பட்டன. இதனால் ஓர் ஐதீகம்போல் ‘முன்னணி முற்போக்குப் படைப்பாளிகள்’ என்ற பட்டம் எமது எழுத்தாளர்கள் பலரை வந்தடைந்தது. அவர்களும் அதில் சுயதிருப்தி அடைந்தனர். அரசியல் தந்திரோபாயத்தை இலக்கிய விமர்சனத்தில் கடைப்பிடித்ததன் பாதமான விளைவு இது எனலாம்.

இது எவ்வாறாயினும், வர்த்தக, பொழுதுபோக்கு, ஜனரஞ்சக இலக்கியத்துக்கு மாற்றாக இலக்கியத்தின் சமூக சார்பை வலியுறுத்தி நிலைநாட்டிய முக்கியத்துவம் தமிழ் இலக்கியத்தில் மார்க்சிய வாதிகளுக்கு உண்டு. மார்க்சியத்தின் வருகையின் பின்னரே தமிழ் இலக்கியச் சிந்தனையில் இலக்கியத்தின் சமூக சார்பு, அதன் சமூக, வர்க்க அடிப்படை அதிக அழுத்தம் பெற்றது. இலக்கிய வரலாறு, இலக்கிய ஆய்வு, இலக்கியத் திறனாய்வு என்பவற்றில் இது வெளிப்பட்டது.

தமிழ் இலக்கியத்தைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்ட ஐதீகங்களை உடைத்து, இலக்கியத்தை அதன் வரலாற்றுப் பின்னணியில் - அதன் சமூக – வர்க்க உறவின் அடிப்படைகளில் விளக்கும் போக்கை இது தொடக்கிவைத்தது. வானமாமலை, ரகுநாதன், கைலாசபதி, சிவத்தம்பி முதலியோர் இதில் முன்னோடிகளாவர். வரலாற்றுப் பொருள்முதல் வாதத்தின் பொதுக் கொள்கைகளை குறிப்பான தமிழ் இலக்கியச் சூழலுக்குப் பிரயோகிப்பது தொடர்பான பல குறைபாடுகள் காணப்படினும் மார்க்சியத்தினால் தமிழ் இலக்கியச் சிந்தனை வளம் பெற்றதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.

முற்போக்கு அல்லது மார்க்சிய விமர்சனத்தில் காணப்படும் மிக முக்கிய குறைபாடு கட்சி அல்லது இயக்கம் சாராத சமகால இலக்கியம் பற்றிய அதன் நிலைப்பாடாகும். வரலாற்றுப் பொருள்முல்லாதக் கண்ணோட்டத்தைப் பயன்படுத்தி பண்டைய இடைக்கால இலக்கியங்களைப் புறநிலையாக ஆராய்ந்த நமது முற்போக்கு விமர்சகர்கள், இயக்கம் சாராத சமகாலப் படைப்பாளிகளையோ படைப்புகளையோ அதே கண்ணோட்டத்துடன் ஆராய முற்படவில்லை. பாரதி ஆய்வில் காட்டிய புறநிலைப் பார்வையைக்கூட மற்றவர்களில் பயன்படுத்தவில்லை. தோத்தாத்திரி போன்ற மிகச்சிலரை ஒரு வரையறுப்பான அர்த்தத்தில் இதற்கு விதிவிலக்காகக் கொள்ளலாம். கட்சி சார்ந்தவை மக்கள் இலக்கியம், ஏனையவை நச்சு, நசிவு இலக்கியம் என்ற முரண் இதற்கு அடிப்படையாகும். மார்க்சியம் வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கான ஒரு தத்துவும் என்று இவர்கள் சொன்னாலும் மார்க்சிய அடிப்படையில் சமகால இலக்கியங்களையும் எழுத்தாளர்களையும் விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து அவற்றின் ஊடாக வெளிப்படும் வாழ்வையும் படைப்பாளியின் வாழ்க்கை நோக்கையும் புரிந்துகொள்ள இவர்கள் முயலவில்லை. மார்க்சும் ஏங்கல்ஸ{ம் பால்சாக்கைப் பார்த்ததுபோல், லெனின் டால்ஸ்டாயைப் பார்த்ததுபோல் நமது சமகாலப் படைப்பாளிகளை அணுகுவதற்கான சித்தாந்தத் தெளிவும் மனப்பாங்கும் நமது விமர்சகர்களிடம் இருக்கவில்லை என்றே சொல்லவேண்டும். வெள்ளை, கறுப்பு என்ற வக���யில் மக்கள் இலக்கியம், நச்சு இலக்கியம் என்ற வகையான மிகை எளிமைப்படுத்தித் தீர்ப்பு வழங்குவதற்கு இலக்கிய நுண்ணுணர்வு தேவையில்லை. அரசியல் சார்பு மட்டும் போதுமானது.

7

1970களின் நடுப்பகுதிவரை தமிழில் நிலவிய இலக்கியம் தொடர்பான மார்க்சியப் பார்வை இலக்கியம்பற்றிய ஒரு வரட்டுப்பார்வை என்ற குற்றச்சாட்டை புதிய தலைமுறையைச் சேர்ந்த மார்க்சிய விமர்சகர் சிலர் முன்வைத்தனர். இதில் பல்வேறு நோக்குநிலை உடையவர்கள் இருந்தனர். கட்சியில் தீவிரமாக இருந்து விலகிய அதிருப்தியாளர்கள், கட்சிசார்பற்றவர்கள், கல்வித்துறை சார்ந்தவர்கள் எனப் பல தரப்பினர் இதில் அடங்குவர். ஞானி, எஸ். வி. ராஜதுரை, அ. மார்க்ஸ், தமிழவன், ஏ. ஜே. கனகரத்தினா, எம். ஏ. நுஃமான் முதலியோர் இவர்களுட் சிலர். இவர்களுள் பிற்காலத்தில் மார்க்சியத்திலிருந்து பெரிதும் விலகிச் சென்ற முக்கியமான மூவரைப் பற்றி (ஞானி, அ. மார்க்ஸ், தமிழவன்) நாம் இங்கு சுருக்கமாக நோக்கலாம்.

மார்க்சியம், இலக்கியம் தொடர்பாக ஞானி ஏராளமாக எழுதியிருக்கிறார். 1988ல் வெளிவந்த இவருடைய மார்க்சியமும் தமிழ் இலக்கியமும் என்ற நூல் இவ்வகையில் முக்கியமானது. ஏனைய விமர்சகர்களைவிட பலதரப்பட்ட தமிழ்ப் படைப்பாளிகளை விமர்சனத்துக்கு உட்படுத்தியிருப்பது இவரது சிறப்பு எனலாம். ஆயினும் இவரது கருத்துக்களில் ஒருமைப்பாடுகாண முடியாதிருக்கும். ‘தற்காலத் தமிழ்க் கவிதை இயக்கத்துக்கு வளமான படைப்புகளைத் தந்தவர் நா. காமராசன்’ என்பார். ஆனால் அதே பத்தியில் நா. கா. குழப்பமான கருத்துக்களைக் கொண்டிருந்தார் என்றும் சொல்வார் (பக். 75). கருத்துக் குழப்பம் உள்ள ஒருவர் வளமான கவிதைகளைத் தருவது எப்படி என்ற ஐயம் நமக்கு எழும். ஆனால் ஞானிக்கு அது பிரச்சினை அல்ல. வானம்பாடிகளைப் பற்றிய ஞானியின் ஒரு மதிப்பீடு பின்வருமாறு:

“இவர்களின் கற்பனை ஆற்றல் உயர் நிலையில் இயங்குகிறது. வானத்தையே கீறி வைகறைகளைப் பறித்தெடுக்கும் இவர்கள் நம்பிக்கை அற்புதமானது. சிந்தனையாளர்களாகிய இவர்கள் தமது சிந்தனைக்கே உரிய வேகத்துடனும் கலை வெடிப்படனும் கவிதை படைப்பதன் தேவையை வெளிப்படுத்துகிறார்கள்” (பக். 72).

ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதிய பிறிதொரு கட்டுரையில் வானம்பாடிக் கவிஞர்களையும் வேறுசில கவிஞர்களையும் பற்றிய அவரது மதிப்Pடு பின்வருமாறு:

“இவர்களைப் பற்றிய விமர்சனத்தினூடே ஒரு உண்மையை நாம் மையமாகக் குறிப்பிடலாம். தாம் கவிதைக்குரிய கருவாக எடுத்துக்கொள்ளும் பொருளைப்பற்றி இவர்கள் அரைகுறையாகவே சிந்தித்திருக்கிறார்கள். தங்கள் மனத்தில் ஏற்பட்ட முதற்பாதிப்பையே இவர்கள் பெரும்பாலும் கவிதையாக்கிவிடுகிறார்கள்…. பிரச்சினையின் விரிவை இவர்கள் பார்ப்பதில்லை. தங்கள் மனப் பாதிப்பைக்கூட இவர்கள் தொடர்ந்து பார்ப்பதில்லை. தங்கள் வாழ்வுக்கும் இந்தப் பாதிப்புக்கும் உள்ள உறவு என்ன என்பது பற்றி இவர்கள் கருத்துச் செலுத்துவதில்லை” (பக் 84).
இரண்டு ஆண்டுகளுக்குள் அவரது மதிப்பீட்டில் காணப்படும் இந்த வேறுபாடு ஆச்சரியமானது.

வரட்டு மார்க்சியத்துக்கு எதிராகத் தொடர்ந்து எழுதிவரும் ஞானியின் பார்வையிலேயே வரட்டு மார்க்சியத்தின் செல்வாக்கையும் நாம் காணலாம். உதாரணமாக இன்குலாப் பற்றிய அவரது பின்வரும் குறிப்பை எடுத்துக் காட்டலாம்.

“இந்த அடிப்படையில் புரட்சிக் கண்ணோட்டம் மென்மேலும் விரிவடைய வேண்டியுள்ளது. இந்நிலையில் விடியல் கீதம் இசைக்கும் கவிஞன்,

காலங்கள் ஆயிரம் காலங்களாய் - நம்
கைகள் ஓய்ந்த துண்டா?
மாலைகள் வசந்த மாலைகளில் - நாம்
மயங்கிக் கிடந்த துண்டா?
வாலிபம் ஆசை வாலிபத்தை – நாம்
வாழ்வில் சுவைத்த துண்டா?
கோலங்கள் காதல் கோலங்களைக் – கண்ணில்
கொண்டு திரிந்த துண்டா?

என்று பாடமுடியாது. கைகள் ஓய்ந்துவிட, மாலைகளில் மயங்கிக் கிடக்க, வாலிபத்தைச் சுவைக்க, காதலில் திரிய புரட்சியை நாட முடியாது.”

இந்தப் பார்வை வெளிப்படையாகவே வரட்டு மார்க்சிய, ஸ்தானோவிஸப் பார்வைதான். ஆனால், இதனாலேயே இவரை ஒரு வரட்டு மார்க்சிய விமர்சகர் என்று கூறிவிட முடியாது. வரட்டு மார்க்சிய விமர்சகர்கள் தனிமனித நச்சு இலக்கியம் என்று சுலபமாக ஒதுக்கிவிடும் பசுவையா, பிரமிள் கவிதைகளை தமிழின் உன்னதமான படைப்புகளாகக் காண்பதில் இவருக்கு எவ்வித சிரமமும் இருப்பதில்லை. அவர்களுடைய கவிதைகளுக்கு வரும்போது தன்னுடைய மார்க்சிய அளவுகோல்களை மூடிவைத்துவிட்டு ரசனை முறைத் திறனாய்வைக் கையில் எடுத்துக்கொள்வார். ‘இன்றையத் தமிழ்க் கவிதையில் ஒரு தேக்கம்’ என்ற இவரது கட்டுரையில் வரட்டு மார்க்சியரின் பயன்பாட்டுவாதம் தூக்கலாகத் தெரிகிறது. மரபுரீதியான முற்போக்கு விமர்சனக் குரலே அதில் கேட்கிறது. ஆனால் ‘பசுவையா கவிதைகள் என் அனுபவம்’ (பக்.89-95), ‘தர்மு சிவராமின் கவிதைகளினூடே ஒரு நெடும் பயணம்’ (பக். 100 - 120) ஆகிய கட்டுரைகளில் அனுபவவாதம்தான் முன்னிற்கிறது. இரண்டு பார்வைகளுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உண்டு. சமீபத்தில் எஸ். பொன்னுத்தரை பற்றி இவர் எழுதிய கட்டுரை எவ்வித விமர்சன அடிப்படைகளுமற்ற வெற்றுப் புகழுரையாகவே உள்ளது.

ஞானியின் விமர்சனப் பார்வையில் உள்ள தளம்பல்களையும் முரண்பாடுகளையும் இவை காட்டுகின்றன. ஞானியின் எழுத்துகளை மொத்தமாகப் பார்க்கும்போது அவருடைய குழப்பங்களே முன்னுக்கு வருகின்றன. மார்க்சியத்தின் வர்க்க சார்பைத் தளர்த்தி, பொருள்முதல் வாதத்தைத் தளர்த்தி, இந்திய ஆன்மீக சாயம் பூசிய, தமிழ்த் தேசியவாதத்தை உள்வாங்கிய ஒரு அதிதாராளவாத மார்க்சியத்தை அவர் முன்வைக்கிறார். எதிர் முரணான எல்லாச் சிந்தனைப் போக்குகளையும் தழுவிச் செல்லும் ஒரு அதிதாராள மார்க்சியம் இவருடையது. அதிதீவிர வரட்டு மார்க்சியப் பார்வைக்கு இது ஒரு மாற்றீடாக அமைய முடியாது என்பதே என் கருத்து.

அதிதீவிர மார்க்சியவாதியாக கம்யூனிச இயக்கத்தில் செயற்பட்டவர் அ. மார்க்ஸ். கார்ல் மார்க்ஸின் மீது அவருக்கிருந்த பற்று பக்திபூர்வமானது. 1990 வரை ‘பேராசான்’ என்ற அடைமொழியைப் பயன்படுத்தாமல் அவர் மார்க்ஸின் பெயரை உச்சரித்ததில்லை. 80களின் பிற்பகுதியில் ஒரு அதிருப்தியாளராக வெளியேறிய இவர் ஆரம்பத்தில் அமைப்பியலை ஐயத்தோடு பார்த்து, பின் அதில் ஐக்கியமாகி, மார்க்சியத்தை நிராகரித்து பின்னவீனத்துவத்தின் தீவிர பிரச்சாரகராக மாறியவர். தமிழில் எழுதிய மார்க்சிய வாதிகளில் ஏராளமாக எழுதியவர்களுள் இவரும் ஒருவர். அரசியல், தத்துவம், கலை, இலக்கியம், மருத்துவம், கல்வி, தலித்தியம், பெண்ணியம் என பல்வேறு துறைகள் பற்றியும் இவர் அதிகம் எழுதியிருக்கிறார்.

எது கவிதை என்பது இலக்கிய விமர்சனத்தில் அவரது ஆரம்பகால நூல்களுள் ஒன்று. அவர் தீவிர இடதுசாரியாக இருந்த காலத்தில் எழுதப்பட்டது. ஜோர்ஜ் தொம்சனின் மானுட சாரம் (Human Essence), கிறிஸ்தோபர் கால்ட்வெல்லின் மாயையும் யதார்த்தமும் (Ilusion and Reality) நூல்களின் அடிப்படைக் கருத்துகளைத் தழுவி இருந்தாலும் இலக்கியத்தின் அரசியல் உள்ளடக்கத்தை, அதன் பயன்பாட்டுவாதத்தை ஊன்றி வலியுறுத்தும் கட்சிசார்ந்த மார்க்சியக் கோட்பாட்டின் இலக்கணமாக அமைந்த நூல் இது.

இன்று தமிழில் எழுதும் கவிஞர்களை உண்மையான கவிஞர்க��், போலிக் கவிஞர்கள், ஆளும் வர்க்கக் கவிஞர்கள் என்று இவர் மூன்றுவகைப்படுத்துவார். இவருடைய கருத்துப்படி உண்மைக் கவிஞன் என்பவன் ‘விடுதலையே கவிதையின் இறுதிக் குறிக்கோள்’ என்பதை உணர்ந்தவனாக, ‘சமூக இயக்க விதிகளையும், சமூக விடுதலையைச் சாத்தியப்படுத்துகிற புரட்சி பற்றிய தெளிவான கண்ணோட்டத்தையும்’ கொண்டவனாக இருப்பான். இதுவே அன்றைய கட்சிசார்ந்த தீவிர மார்க்சியக் கருத்தாக இருந்தது. கட்சிக் கொள்கைக்கு விசுவாசமான கவிஞர்களைத் தவிர்த்து ஏனையவர்களை வெளி ஒதுக்கும் கொள்கையே இது. இக்கொள்கை பாரதியைக்கூட ஒரு உண்மைக் கவிஞனாக அங்கீகரிப்பதில்லை. பாரதியைப் பற்றி அ. மார்க்ஸ் இவ்வாறு எழுதுகிறார்:

“அடிக்கடி நாம் பாரதியை மேற்கோள் காட்டுவதென்பது இந்த நூற்றாண்டில் வாழ்ந்த நம்மெல்லோருக்கும் பழக்கப்பட்டட ஒரு மகாகவி என்ற வகையில்தான். மற்றப்படி பாரதியை நமது இலட்சியமாகவோ, வழிகாட்டியாகவோ கொள்ளமுடியாது. இன்றைய சகாப்தத்தின் விடுதலைக்கான கவிதையாகப் பாரதியின் கவிதையை நாம் கொள்ளமுடியாது. அவ்வாறு கொள்ளமுடியாதென்பது பாரதியை அவமதிப்பதாகவு மாகாது. விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருப்பவர்கள் பாரதிக்கு விழா எடுத்து மகிழ்ந்து கொண்டிருக்க முடியாது.”

கட்சி மார்க்சியத்தின் பயன்பாட்டுவாதம் இங்கு மிகவும் வெளிப்படையாக உள்ளது. எந்தக் கவிஞனையும் இலட்சியமாகவோ, வழிகாட்டியாகவோ கொள்வதை மார்க்சிய மூலவர்கள் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். எதையும், யாரையும் விமர்சனத்துக்கு உள்ளாக்குகின்ற விமர்சனச் சிந்தனையையே மார்க்சியம் வலியுறுத்தும். பாரதியைப் புறமொதுக்கி இன்குலாபை இந்த யுகத்தின் சிறந்த கவிஞனாகக் காண்பது கட்சி மார்க்சியப் பார்வையே தவிர விமர்சன மார்க்சியப் பார்வை அல்ல. புரட்சிப் பாடல்கள் எழுதிய மயகோவ்ஸ்கியை விட புஷ்கின் சிறந்த கவிஞர் எனக் கூறிய இலக்கியத்தில் கட்சிசாராத லெனினின் பார்வை இவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கவில்லை.

1980களின் நடுப்பகுதியிலிருந்து கொர்பச்சேவின் வருகையை அடுத்து தமிழ்ச் சூழலில் மார்க்சிய அரசியல் நடைமுறையை மீள்பரிசீலனைக்கு உட்படுத்தியவர்களுள் அ. மார்க்ஸ{ம் ஒருவர். இக்கட்டுரைகள் சிலவற்றின் தொகுப்பு மார்க்சியத்தின் பெயரால் என்ற தலைப்பில் 1994ல் வெளிவந்தது. மார்க்சிய மூலக் கோட்பாடுகளில் அன்றி மார்க்சிய அரசியல் நடைமுறைகளிலேயே பிரச்சினை இருந்தது என்பது இந்நூலின் சாரம் எனலாம். மார்க்சியத்தின் மீது இன்னும் அவருக்கு நம்பிக்கை இருந்ததை இந்நூலில் காணலாம். இதே காலகட்டத்தில் இலக்கியம் பற்றி இவர் எழுதிய கட்டுரைத் தொகுதி மார்க்சியமும் இலக்கியத்தில் நவீனத்துவமும் என்ற தலைப்பில் 1991ல் வெளிவந்தது. 1980களில் தமிழுக்கு அறிமுகமான அமைப்பியல் பற்றிய ஆரவாரமான வரவேற்பு இந்நூலில் இல்லை. “தகுதிக்கு அதிகமான கூச்சலுடனும் ஆர்ப்பாட்டத்துடனும் தமிழுக்கு அறிமுகப்படுகிற அமைப்பியல்” என்றும் (பக். 90), “இதுவரை அமைப்பியல்வாத அடிப்படையிலான தமிழ் விமர்சனம் குறிப்பிடும்படியாக எதையும் சாதிக்கவில்லை என்பது எவ்வளவு உண்மையோ அத்தனை உண்மை மார்க்சியர்களின் பணி புறக்கணிக்கக் கூடியதல்ல என்பதும்” என்றும் இந்நூலில் அவர் எழுதினார் (பக். 92).

“அமைப்பியல், பிற்கால அமைப்பியல் போன்றவை பாய்ச்சிய வெளிச்சத்தில் நாம் புதிய அடிகளை எடுத்துவைக்கும்போது அது எந்த அளவிற்குப் பழைய மரபு, செவ்வியல் கோட்பாடுகள் போன்றவற்றுக்கு உண்மையாக இருக்கிறது அல்லது விலகிச் செல்கிறது என்கிற அளவுகோலைவைத்துப் பார்க்காமல் இவை எத்தகைய புதிய சாத்தியக்கூறுகளைக் முன்வைத்துள்ளன, செயல்திறனை எந்த அளவுக்கு முடுக்கியுள்ளன, எத்தகைய புதிய செயல்வடிவங்களைத் தோற்றுவித்துள்ளன என்ற கேள்விகளை முன்வைத்து நாம் மாற்றங்களை உரசிப்பார்க்க வேண்டும்” என்றும் ஒரு சரியான பார்வையை முன்வைத்தார் (பக். 93). அதேவேளை, அவரது முன்னைய பாரம்பரிய இறுக்கமான மார்க்சியப் பார்வையிலிருந்து சற்று நெகிழ்ச்சியை இந்நூலில் காணமுடியும்.

ஆயினும், மிக விரைவிலேயே அவருடைய பார்வை முற்றிலும் மாற்றமடைந்தது. 1990களின் நடுப்பகுதியிலிருந்து மார்க்சியத்தைக் கைவிட்டு அமைப்;பியல், பின்னமைப்பியல் சிந்தனைகளின் தீவிர பிரச்சாரகராக மாறினார். உடைபடும் மௌனங்கள் (1994), பின்நவீனத்துவம், இலக்கியம், அரசியல் (1996), உடைபடும் புனிதங்கள் (1997), கலாச்சாரத்தின் வன்முறை (2001) ஆகிய அ. மார்க்சின் நூல்களில் இந்த மாற்றத்தை நாம் காணலாம். விசாரணையற்ற ஒரு வரட்டு மார்க்சியப் பார்வையின் இடத்தில் அதேபோன்ற விசாரணையற்ற ஒரு வரட்டு பின்நவீனத்துவப் பார்வை (ய எரடபநச pழளவஅழனநசnளைவ எநைற) இவருடையதாயிற்று. மார்க்சியம் முதலிய எல்லாத் தத்தவங்களையும் பெருங்கதையாடலாக நிராகரிக்கும் இவர்போன்ற பின்னவீனவாதிகள் பின்னவீனத்துவத்தையே ஒரு பெருங்கதையாடலாக மாற்றினர். 1995க்குக்குப்பின் அ. மார்க்ஸ் அதில் முன்னணிவகித்தார் எனலாம். ஒரு புதிய கோட்பாட்டின் பின்னால் இலகுவாக இழுபட்டுச் செல்லக்கூடிய பலவீனம் அவருடைய குறைபாடு எனலாம். ஒரு புதிய கோட்பாடு பல்வேறு சமூக அரசியல் காரணிகளால் முன்னணிக்கு வரும்போது இதுவரை இருந்த கோட்பாடுகள் எல்லாம் வரலாற்றுக் குப்பைக்கூடைக்குள் வீசப்பட்டுவிடுகின்றன என்ற பிரமைக்கு சிலர் எளிதில் ஆட்பட்டுவிடுகின்றனர். அ. மார்க்ஸ் அவர்களுள் ஒருவராகவே எனக்குத் தோன்றுகின்றார். 1990களின் நடுப்பகுதிவரை கார்ல்மார்க்ஸ், ஏங்கல்ஸ் முதலியோரின் கூற்றுகள் இவருக்கு ஆப்தவாக்கியங்களாக இருந்தன. அதன் பின் நீட்சே, கான்ட், ஃபூக்கோ, டெரிதா, லியோதார்த் போன்றோரின் கூற்றுக்கள் இவரின் ஆப்தவாக்கிங்களாக மாறின. ஆப்தவாக்கியங்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை. அவ்வகையில் ஆப்தவாக்கியங்களின் பின்னால் செல்வதே உண்மையான கலாசார அடிமைத்தனம். பின்நவீனத்துவத்தை வழிபடுவதைவிட அதை விமர்ர்சனபூர்வமாக அணுகுவதே பயனுடையது.

தமிழவன் 1970களில் விமர்சனத் துறைக்கு வந்தவர். 1971ல் வெளிவந்த இருபதில் கவிதைதான் அவரது முதல் நூல் என்று நினைக்கிறேன். மார்க்சிய விமர்சகர் என்று பெரிதும் அடையாளப்படுத்தப்பட்டவர் அல்ல அவர். ஆரம்பத்தில் ந. வானமாமலையின் பரிச்சயமும் தாமரை, ஆராய்ச்சி இதழ்களின் தொடர்பும் ஒரு மார்க்சியச் சார்பை அவருக்குத் தந்தன என்று தெரிகிறது. ஞானக்கூத்தனைப் பற்றித் தாமரை இதழுக்கு எழுதிய கட்டுரைதான் மார்க்சியப் பார்வையில் தான் எழுதிய முதல் கட்டுரை என்று அவரே சொல்கிறார். 1989ல் வெளிவந்த அவரது படைப்பும் படைப்பாளியும் நூல் முன்னுரையில் தனது மார்க்சியப் பார்வை பற்றி அவர் கூறும் பின்வரும் தகவல்கள் முக்கியமானவை.

“நானும் மார்க்சிய நோக்கு என்று அன்று பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பார்வையின்படி ஞானக்கூத்தனின் கவிதைகள் மேல்நாட்டு சர்ரியலிசப் பாணிக் கவிதைகள் என்று விவாதித்து, சோவியத் புத்தகங்களில் சர்ரியலிசப் பாணிக் கவிதைகளுக் கெதிராய்க் கூறும் விவாதங்களை முன்வைத்து விரிவான ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன்…. எனக்கு அன்றைய இடதுசாரிகள் மத்தியில் வரவேற்புக் கிடைத்தது.”

பலகாலம் தனக்குப் பூச்சாண்டி காட்டிக்கொண்டே வந்த மார்க்சிய அறிவும் அணுகுமுறையும் இக்கட்டுரையின் மூலம்தான் தனக்குச் சித்தித்ததாகச் சொல்கிறார்(பக். 2-3).

ஞானக்கூத்தன் பற்றிய அந்தக் கட்டுரையைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. ஆயினும், “ஓடும் கவித்துவச் சரடு ஒன்று: ஞானக்கூத்தன்” என்ற ஞானக்கூத்தன் பற்றிய அவரது பிறிதொரு கட்டுரை படிக்கக் கிடைத்தது. அது ரசனைமுறையில் அமைந்த ஒரு கட்டுரை என்பதற்குமேல் அதுபற்றி விசேசமாகச் சொல்லதற்கு எதுவுமில்லை என்பதே என் அபிப்பிராயம்.

மார்க்சியத்தின் அடிப்படைத் தத்துவம் இயக்கவியல் பொருள்முதல்வாதம். ஆனால் தமிழவனுக்கு அதில் உடன்பாடு இல்லை. “கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் என்னும் பாகுபாடு முழுமையாக மனிதனின் உந்துதல், அவனது கருத்துக்களின் உருவாக்கம், உலகில் அவனது செயல்பாடு பற்றியெல்லாம் சரியான எண்ணங்களை முன்வைக்கவில்லை என்று இக்காலத்தில் உணர்ந்தேன். எனவே கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் என்ற பாகுபாட்டு அடிப்படையில் உலகை அறிதல் தவறு என்னும் கருத்தில் கொஞ்ச காலம் இருந்தேன்” என்று கூறும் தமிழவன், தன் தேடலில் ஸ்ட்ரக்சுரலிசம் அகப்பட்டபின் பொருள்முதல்வாதம் ஒரு பொதுப்பார்வையாய் ஏற்கப்படவேண்டிய நிர்ப்பந்தத்தைக் கண்டதாகவும், ஆனால் இந்தப் பொருள்முதல்வாதம் பழைய பொருள்முதல்வாதத்திலிருந்து வேறுபட்டது என்பதை அறிந்துகொண்டதாகவும் கூறுகிறார். இதற்குப்; புதுப் பொருள்முதல்வாதப் பார்வை என்று பெயரிடுகிறார் (பக். 4). இதை மார்க்சியப் பார்வை என்று அவர் சொல்வதில்லை. இதை வேண்டுமென்றால் நாம் ‘தமிழவனின் அமைப்பியல் பொருள்முதல்வாதம்’ என்று குறிப்பிடலாம்.

தமிழவன் ஓர் அமைப்பியல் விமர்சகராகவே இன்று அறியப்படுகிறார். 1982ல் அவர் வெளியிட்ட ஸ்ட்ரக்சுரலிசம் (அமைப்பியல்) நவீன தமிழ் இலக்கிய விமர்சன வரலாற்றில் அவருக்கு ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. ஆனால் இந்த நூலைத் தமிழில் எத்தனைபேர் படித்துப் புரிந்துகொண்டார்கள் என்பது ஒரு முக்கியமான வினா. இது வெளிவந்த காலத்திலேயே நான் இந்த நூலைப் படித்தேன். அப்போது என் மனதில் தோன்றிய கருத்து இதுதான்: ‘தமிழ் மட்டும் தெரிந்தவர்களுக்கு இந்நூல் புரியாது. ஆங்கிலத்தில் படிக்கக் கூடியவர்களுக்கு இது பயனற்றது.’ கோட்பாடுகளை விளங்கித் தெளிவாக எழுதப்பட்ட நூல் அல்ல அது. அவருடைய மொழி ரொம்பச் சங்கடப்படுத்துவது. இத்தனையையும் மீறி அது இன்றும் பேசப்படும் ஒரு நூலாக இருப்பது ஆச்சரியம்தான்.

8

அமைப்பியல் சசூரின் மொழியியல் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. சுசூரின் மொழியியல் நவீன மொழியியலின் தொடக்க காலத்துக்குரியது. சசூருக்குப் பின் மொழியியல் வெகுதூரம் வளர்ந்துவிட்டது. அமைப்பியல் அவற்றையெல்லாம் கருத்தில் கொண்டதல்ல. சசூரின் அமைப்பு மொழியியல் ஆய்வுமுறையை அனைத்துப் பண்பாட்டு ஆய்வுகளுக்கும் பிரயோகிக்கலாம் என்ற எடுகோளை அமைப்பியல் அடிப்படையாகக் கொண்டது. இந்தக் கருதுகோளை சசூரிடமிருந்தே அமைப்பியலாளர் பெற்றனர். கலை இலக்கிய ஆய்வுக்கு இதை அப்படியே பிரயோகிக்கும்போது அதன் அழகியல் ஆன்மாவை விட்டுவிட்டு வெறும் அமைப்புச் சட்டகத்துக்கே முதன்மை கொடுக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு அமைப்பியலாளர் ஆளாகினர். இலக்கியம் என்ற புனிதத்தை உடைத்து பிரதி என்ற பிறிதொரு புனிதத்தை உருவாக்கினர். ஒரு இலக்கியப் பிரதியையும் ஒரு பற்பொடி விளம்பரத்தையும் பிரதிகள் என்ற வகையில் சமம்படுத்தினர். பிரதிக்கோட்பாடு இவர்களுக்கு புனிதப்பொருளாயிற்று. ஆசிரியனை மரணிக்கச் செய்து அதன் இடத்தில் வாசகனை உயிர்ப்பித்தனர். பிரதிக்கென்று ஒரு பொருள் இல்லை, வாசகன் கொடுப்பதே அதன் பொருள் என்றனர். அவ்வகையில் ஒரு பிரதி எண்ணற்ற பொருள் விளக்கத்துக்கான களம் என்றனர். இவ்வாறு ஒரு பிரதி மாயாவாதத்தை உருவாக்கினர்.

ஆனால், இவர்கள் கொள்கையில் இவர்களுக்கே நம்பிக்கை இல்லை. ஒரு பிரதிக்கு எண்ணற்ற பொருள் விளக்கம் சாத்தியம் என்று சொல்லிக்கொண்டே தனது விளக்கம்தான் சரியான விளக்கம் என்று வாதிட்டனர். ஆசிரியன் இறந்துபோனான் என்று சொல்லிக்கொண்டே ஆசிரியனைத் தோலுரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டனர். ஆசிரியன் உருவாக்கிய பிரதிவேறு, வாசகன் உருவாக்கிய பிரதிவேறு என்றால், வாசகனின் பிரதியை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியனைத் தோலுரிப்பதும் விமர்சிப்பதும் தர்க்க முரண் என்பது இவர்களுக்குப் புரிவதில்லை. மார்க்சிலிருந்தும் ஃபூக்கோவிலிருந்தும் பாரதியிலிருந்தும் புதுமைப்பித்தனிலிருந்தும் மேற்கோள் காட்டி இதுதான் அவர்களுடைய கருத்து என்று வாதிக்கும்போது தங்கள் கொள்கைக்கும் தங்கள் நடைமுறைக்கும் இடையிலான தர்க்க முரணை இவர்கள் உணர்வதில்லை.

ஒரு பிரதிக்கு எண்ணற்ற பொருள் உண்டு என்று வாதிப்பது மொழிமூலம் தொடர்பாடல் சாத்தியமல்ல என்று வாதிப்பதற்குச் சமனானது. மொழி மனிதர்களின் கூட்டுச் செயற்பாட்டின் ஒரு கண்டுபிடிப்பு. மனிதர்கள் மொழியைப் பயன்படுத்தத் தொடங்கிய காலத்திலிருந்து பிரதானமாக மொழிமூலமே தொடர்பாடல் செய்துவருகின்றனர், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்கின்றனர். இன்றுவரையான மனித வளர்ச்சி மொழிமூலமே சாத்தியமாகி இருக்கிறது.

அடிப்படையில் மொழி ஒரு தொடர்பாடல் சாதனம் என்பதே மொழியியலின் நிலைப்பாடு. மொழிமூலம் தொடர்பாடல் எவ்வாறு சாத்தியமாகிறது என்பதையே மொழியியல் பிரதானமாக ஆராய்கிறது. மொழியின் அமைப்பு, மொழி பயன்படுத்தப்படும் சந்தர்ப்ப சூழல் என்பன எவ்வாறு பொருளைத் தீர்மானிக்கின்றன என்பதை அது ஆராய்கிறது. ஒரு கூற்றின் நேர்பொருள், அதன் மறைபொருள்கள், பொருள் மயக்கம் என்பவற்றை நாம் எவ்வாறு இனங்காண்கிறோம் என்பதை அது விளக்க முயல்கிறது. சுருக்கமாகச் சொன்னால் மனிதரின் மொழித் திறனின் ரகசியத்தைக் கண்டுபிடிப்பதே மொழியியலின் நோக்கம் எனலாம். ஆனால் மொழியியல் கோட்பாடுகளை விட மொழி அதிக இயங்குதிறனுடையது. இந்த இயங்குதிறனைக் கையகப்படுத்தவே மொழியியல் கோட்பாடுகள் முனைகின்றன. ஆனால் மொழி அதற்குள் முழுமையாகக் கையகப்படாமல் நழுவிக்கொண்டே இருக்கின்றது. இதைக் கையகப்படுத்தும் முயற்சியிலேயே மொழியியல் கோட்பாடுகள் தமமைப் புதுப்பித்துக் கொள்கின்றன அல்லது புதிய கோட்பாடுகள் தோன்றுகின்றன. ஆனால் எந்த மொழியியல் கோட்பாடும் ஒரு கூற்றுக்கு எண்ணற்ற பொருள் உண்டு, ஆகவே மொழியினால் தொடர்பாடல் சாத்தியமல்ல என்று கூறாது.

இலக்கியக் கோட்பாடுகள் எல்லாம், அது மார்க்சியக் கோட்பாடாயினும் அல்லது வேறு எந்தக் கோட்பாடாயினும், யானை பார்த்த குருடர்கள்போல், இலக்கியத்தின் வௌ;வேறு அம்சங்களையே பிரதானப்படுத்திப் பேசுகின்றன. இலக்கியத்தின் எல்லா அம்சங்களையும் உள்ளடக்கிய பூரணமான இலக்கியக் கோட்பாடுகள் என்று எவையும் இல்லை. அவ்வகையில் இலக்கியத்தை முழுமையாகப் புரிந்து கொள்வதில் எல்லாக் கோட்பாடுகளும் வௌ;வேறு அளவில் நமக்கு உதவமுடியும். புதிய கோட்பாட்டின் மோகத்தில் பழைய கோட்பாடுகள் பயனற்றவை என்று கைகழுவிவிடுதல் அறிவின் பாற்பட்டதல்ல.

மார்க்சியக் கோட்பாடு இலக்கியத்தின் சமூக அடித்தளத்தை, அதன் சமூக வேர்களைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகின்றது. இலக்கிய வரலாற்றை அற்புத நிகழ்வுகளாக அன்றி சமூக அசைவியக்கத்தின் வெளிச்சத்தில் காண நமக்கு உதவுகின்றது. பட��ப்பாளியின் சமூக்க கடப்பாட்டை அது வலியுறுத்துகின்றது. அதேவேளை அரசியல் அதிகாரத்தின் இறுக்கத்துள் அதன் சுயாதீனம் நசுங்குண்டுபோகும் ஆபத்தையும் அது நமக்கு உணர்த்துகின்றது.

இலக்கியத்தை ஒரு அறிதல் முறையாக ஏற்றுக்கொண்டு வாழ்க்கை அனுபவத்தை இலக்கியம் எவ்வாறெல்லாம் வெளிப்படுத்துகின்றது என்பதைப் புரிந்துகொள்ளவும், படைப்பாளியின் கருத்துநிலைக்கும் இலக்கியப் படைப்புக்கும் இடையே உள்ள உறவைப் புரிந்துகொள்ளவும், இலக்கியத்தின் சிக்கல்தன்மைக்கு வாழ்க்கையின் சிக்கல்தன்மை எவ்வாறு அடிப்படையாக அமைகின்றது என்பதைப் புரிந்துகொள்ளவும் மார்க்சியத் திறனாய்வு நமக்கு உதவமுடியும். இலக்கியம் பற்றிய நமது புரிதலை அது ஆழப்படுத்தும். உடனடியான அரசியல் இலக்குக்கு அப்பாலான அத்தகைய அகன்ற பார்வை நம் மார்க்சிய விமர்சகர்களிடம் இருக்கவில்லை என்பது மார்க்சியப் பார்வையின் குறைபாடு ஆகாது.

(இக்கட்டுரை விபவி கலாசார அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு பெண்கள் ஆராய்ச்சி, கல்வி மையத்தில் 31.10.1998ல் ஆற்றிய உரை, சென்னையில் நடைபெற்ற தமிழ் இனி 2000 (1,2,3 செப்டம்பர் 2000) மாநாட்டில் மார்க்சிய விமர்சனம் என்ற தலைப்பில் ஆற்றிய உரைக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு விரித்து எழுதப்பட்டது. முதல்முதல் இப்போதுதான் பிரசுரமாகின்றது)

பயன்பட்ட நூல்கள்:

- இராசேந்திர சோழன் (2005), “தமிழகத்தில் மார்க்சிய இலக்கியம்: ஒரு பரந்த பார்வை”, தமிழ் இனி 2000, மாநாட்டுக் கட்டுரைகள், (பஆ. பா. மதிவாணன், உ. சேரன்), காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில்.
- இளங்கீரன், சுபைர், (1994), ஈழத்து முற்போக்கு இலக்கியமும் இயக்கமும், எழுத்தாளர் கூட்டுறவு வெளியீடு, கொழும்பு
- கேசவன், கோ. (1987) சோசலிசக் கருத்துகளும் பாரதியாரும், ரசனா புக் ஹவுஸ், சென்னை.
- ஞானி (1988), மார்க்சியமும் தமிழ் இலக்கியமும், பரிமாணம் வெளியீடு, கோவை
- தமிழவன் (1982), ஸ்ட்ரக்சுரலிசம், பாரிவேள் பதிப்பகம், திருநெல்வேலி
- தமிழவன் (1989), படைப்பும் படைப்பாளியும், காவ்யா, பெங்களுர்
- தமிழவன் (1991), அமைப்பியல்வாதமும் தமிழ் இலக்கியமும், கவ்யா, பெங்களுர்
- புதுமைப்பித்தன் (2002), புதுமைப்பித்தன் கட்டுரைகள் (பஆ. ஆ.இரா.வேங்கடாசலபதி), காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.
- மார்க்ஸ், அ. (1984), எது கவிதை, இராதா பதிப்பகம், புதுக்கோட்டை
- மார்க்ஸ், அ. (1991), மார்க்சியமும் இலக்கியத்தில் நவீனத்துவமும், பொன்னி புத்தக மையம், சென்னை
- மார்க்ஸ், அ. (1994), மாக்சியத்தின் பெயரால், விடியல் பதிப்பகம், கோவை
- மார்க்ஸ், அ. (1996), பின்னவீனத்துவம், இலக்கியம் அரசியல், விடியல் பதிப்பகம், கோவை
- ரகுநாதன், தொ. மு. சி. (1982) பாரதி: சில பார்வைகள் , மீனாட்சி புத்தக நிலையம், சென்னை
- ரகுநாதன், தொ. மு. சி. (2008) பாரதியார்: காலமும் கருத்தும், மீனாட்சி புத்தக நிலையம், சென்னை
- ரகுநாதன், தொ. மு. சி, பொன்னீலன், (1994) முற்போக்கு இலக்கிய இயக்கங்கள், சென்னை

 
     

உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | Back to Top
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768