முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு
     
  அரிசியும் அரசியலும்
- இரா.சரவணதீர்த்தா -
 
 
 
 

மலேசிய நாட்டில் இப்போதெல்லாம் அரிசிக்கு கெடுபிடி. கெடுபிடி ஆனதற்கு பற்றாக் குறை காரணமல்ல. பசியால் பற்றி எரியும் வயிறு ஒரு காரணம்.

எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் அரசியல் கரங்கள் குளிர்காய நினைப்பது மற்றொரு காரணம். இந்த அரிசிக்கு கெடுபிடி என்று சொன்னதுமே ஆடுகள் மேயும் இடமெல்லாம் "பிடி பிடி" என்ற சத்தமும் உடன் கேட்கத் தொடங்குகிறது. ஆட்டு பிரியாணி சமையல் செய்து இந்திய வாக்காளர்களுக்குக் கொடுத்தால் "அன்னமிட்ட கை என்று" நன்றி உணர்வோடு நமக்குத்தான் வாக்களிப்பர் எனும் உளவியல் பலப் பரீட்சையும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சோறு போட்டவர்களை வாக்களிக்கும் வரை நம்மை எப்படி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தாடலடி யோசனையில் மற்றுமொரு திட்டமும் பிறந்துள்ளது. எங்கெல்லாம் இந்தியர்களின் கூட்டம் கூடும் நிகழ்வு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதோ அங்கெல்லாம் ஆட்டிறைச்சி பிரியாணிய மணக்கும் படி செய்துவிடுகிறார்கள்.

எதுவுமே கிடைக்காமல் போகும் சூழலில் மனித மாமிசத்தையே வெட்டித் தின்னும் நிலைமை வந்துவிடுவதுண்டு. ஆதலால் பசித்திருப்பவனுக்கு முத்திரை ஒரு பொருட்டே கிடையாது. பசியை போக்கினால்தான் விழித்திருக்க முடியும். நாம் விழிக்காமல் இருக்க நம்மை பசித்திருப்பவர்களாக ஆட்டிப் படைக்கும் அரசியல், இன்று கையில் எடுத்துக் கொண்ட ஆயுதம் அரிசி. ஆயுத அரிசிக்கு வலு சேர்க்கும் ஆயுதமாக ஆட்டிறைச்சி.

அரசியல் கட்சிகள் அரிசியையும் ஆட்டிறைச்சியும் எப்படி ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர் என்பதை மலேசிய நண்பனில் வெளிவந்த கட்டுரை ஒன்றில் காண முடிந்தது. பிபிபி கட்சி கூட்டத்தைக் கூட்டுவதற்கு அரிசியையும் ஆட்டிறைச்சியையும் பயன்படுத்துகிறார்கள் எனும் அர்த்தத்தில் கட்டுரையின் உள்ளடக்கம் இருந்தது. ஆத்திரம் அடைந்த பிபிபி ஆதரவாளர்களும் நண்பன் அலுவலகத்தை முற்றுகையிட பத்திரிக்கை மட்டுமல்ல இணையத்தள தலைப்புச் செய்தியாக அச்சம்பவம் சூடு பிடித்தது. மறுநாள் அப்பத்திரிக்கையில் அறிக்கை மன்னர்களின் ஆதரவு ஆறிக்கைகள் பக்கம் பக்கமாக. இந்திய சமுதாயத்தின் குரல் தமிழ்ப் பத்திரிக்கை என்று ஆளுக்காளு பத்திரிகையில் கூவி தீர்த்துள்ளனர்.

பத்திரிக்கைக்கு அறிக்கை விட்டால் படம் வரும், நாலு பேரிடமிருந்து வாழ்த்து வரும் எனும் எல்லையோடு மட்டும் வலம் வரும் இந்த அறிக்கைகளால் யாருக்கு நன்மை? அடி வாங்கியதாகக் கூறப்படும் அந்த குறிப்பிட்ட நிருபருக்கா? இருந்தால் சந்தோசம். ஆனால் பெரும்பாலும் வாசகர்கள் மலேசிய நண்பன் பத்திரிகையிடம்தான் தங்களின் அனுதாபத்தைக் காட்டுவார்கள்.

'தினக்குரல்' பத்திரிக்கைச் சமுதாயக் குரலை எழுப்பும் பத்திரிகை. நீதி கிடைக்காத இடமெல்லாம் நீதிபதியாக நின்று நியாயத்தைக் கேட்கும் பத்திரிகை. உழைப்பவர்களுக்கு ஊதியம் இல்லையென்றால் குமுறி எழும் பத்திரிக்கை. இது வரை மட்டும்தான் மக்கள் பார்க்கின்ற உண்மை. ஆனால் இதுவரையிலும் அங்குப் பணி புரியும் நிருபர்களுக்கு இ.பி.எஃப் ஒதுக்கப்படாமல், சொக்சோ வெட்டப்படாமல் ஒரு வருடத்தை ஓட்டி விட்டது பத்திரிக்கை நிர்வாகம்.மாதச் சம்பளமும் ஒரு மாதம் கடந்து கையில் கிடைக்கிறது. அதுவும் தொல���பேசியில் பிச்சைக் கேட்பதுபோல கேட்டுக் கொண்டே இருக்க வேண்டிய நிலை.போக்குவரத்துச் செலவுக்குப் பணம் இல்லை.மருத்துவச் செலவுக்கும் பணம் இல்லை.போனஸ் இல்லை, சம்பள உயர்வு இல்லை. பணிபுரியும் நிருபர்களின் மனித உரிமைகளை மதிக்கத் தெரியாத நிர்வாகமாகத்தான் பல தமிழ்ப் பத்திரிகைகள் செயல்பட்டு வருகின்றன.

தை, தமிழர்களின் புத்தாண்டு என்று வாழ்த்துச் சொன்ன பத்திரிகையின் நிருபர்களுக்கு அன்று சம்பளம் போடவில்லை. வீட்டில் இருக்கும் அரிசியைப் பொங்க வைப்பதா அல்லது சம்பளம் போடும் வரை மிச்சப்படுதுவதா என்று புலம்பிக் கொண்டிருந்த அவல நேரங்களையும் கடக்கவேண்டியாகிவிட்டது. தமிழ் பத்திரிகை நிருபர்களும் அரிசிக்கு மாரடிக்கும் நிலைதான் போலும்.

தமிழ்ப் பத்திரிகையின் நிர்வாகங்களும் அரசியல் நடத்துகின்றன. பத்திரிகை தொடங்கி ஒரு வருடம் ஆகியும் நிருபர்களோடு ஒரு சந்திப்புக் கூட்டம் கூட வைக்கவில்லை. இங்கே அரிசியும் ஆட்டிறைச்சியையும் போடாமலேயே நிருபர்கள் பத்திரிகைக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். எழுதிய செய்து வரும், அதில் என் பெயர் வரும், படித்தவர்கள் பாராட்டுவார்கள் என்ற மாயையிலும் வாழும் நிருபர்களும் உண்டு. வெளியே கிடைக்கும் பிச்சைகளை வாங்கிக் கொண்டு வயிறு நிரப்புவர்களுக்கு சம்பளம் போட்டால் என்ன? போடாட்டி என்ன? கொள்கையோடு வாழ்பவர்களுக்கு பத்திரிகைத் துறை ஒரு தூக்கு மேடை என்று உணரமுடிகிறது.

"விறைப்பாக இருக்காதே, வளைந்து கொடு, நீ எழுதி இந்த சமுதாயம் திருந்தப் போவது இல்லை, நீ நன்றாக இருந்தால்தான் உன் குடும்பம் நன்றாக இருக்கும், நீயே ஒரு வெள்ளிக்கு டிங்கி அடித்துக் கொண்டு அடுத்தவரின் வறுமையை எழுதினால் சரிவருமா? என்று என்னை நோக்கி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எனக்கு பதில் சொல்லத் தெரியாவிட்டாலும் நிர்வாகம் பதில் சொல்லத் தெரிந்த ஒரே ஒரு கேள்வியை நான் வைத்திருக்கிறேன்.

"சரியான வழியில் உழைத்து, முறையான சம்பளத்தில் வாழ விரும்புகிறேன். நான் பிழைப்பதற்கு அடுத்தவன் பணம் எதற்கு? என் உழைப்புக்குக் கிடைக்க வேண்டிய ஊதியத்தை மாதா மாதம் என் வங்கியில் செலுத்தினாலே போதும். போக்குவரத்து,அலுவலகம், இதர செலவுகளுக்கான பணத்தை கொடுத்தாலே போதும். நான் பிழைத்துக் கொள்வேன். அது உங்களால் செய்ய முடியுமா? என்ற என் கேள்விக்கு பதில் சொல்லத் தெரிந்த நிர்வாகிகள் இதுவரையிலும் நான் பார்க்கவில்லை.

வாடகை வீட்டை விட்டு வெளியேற வேண்டும் எனும் அழுத்தம் வந்துவிட்டது. வீடு வாங்க வேண்டும் என்று வங்கிக்குச் சென்றால் சம்பள சிட்டையையும், இபிஎஃப் கணக்குகளையும் கேட்கின்றனர். வேலைக்குப் புகுந்த நாள் முதல் இன்று வரை நிருபர் அட்டை கிடையாது, வேலை நியமனம் கடிதம் கிடையாது, சேமநிதி கிடையாது, சொக்சோ கிடையாது. அடிபட்டு இறக்கும் என் குடும்பமும் பிரியாணி வரிசையில் நிற்கும் நிர்பந்தத்தை தமிழ்ப் பத்திரிக்கை நிர்வாகம் ஏற்படுத்தி விடுமா என்ற கேள்வியும் நாளுக்கு நாள் பதிலாக அமையக் கூடிய சாத்தியத்தைப் பார்க்க முடிகிறது.

காலப்போக்கில் அரசியல் வாதிகளின் ஆட்டிறைச்சி பிரியாணி வரிசையில் நிருபர்களையும் காண முடியும் என்று நம்புகிறேன். நான் சைவம் என்பதால் அவர்கள் சைவ பிரியாணியை வைத்தாவது என்னை பிடிக்க முயற்சி செய்யக் கூடும். எனக்கு சோறுபோட நினைக்கும் அவர்கள், உழைத்த உழைப்புக்கு சோறு தின்னக்கூட முடியாமல் செய்யும் இவர்களைவிட எவ்வளவோ உயர்ந்தவர்கள் என்பதை நம்பித்தான் ஆகவேண்டி உள்ளது.

"தம்பி நான் இப்போ தினக்குரல்தான் வாங்குகிறேன். கிழி கிழினு கிழிக்கிறீங்க. வாழ்த்துகள்" என்று கூறி செல்லும் வாசகர்களுக்குத் தெரியுமா நிருபர்களின் உள்ளாடைகளில் எத்தனை கிழிசல்கள் இருக்கிறதென்று?

   
     

உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | Back to Top
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768