|
பத்திரிகைகளிலும் முகநூலிலும் சில இடங்களில் டாக்டர் சுப்ரமணியத்தின்
பத்திரிகை செயலாளர் பா.அ.சிவம் இறந்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.
ஒருவேளை இந்த அடையாளம் அவருக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பாகக்
கிடைத்திருக்கக்கூடும். சமூகம் அந்த அடையாளத்தின் வழி சிவத்தைக் கடக்க
நினைக்கிறது. ஆனால், பா.அ.சிவம் எனும் கவிஞன் தனது 20 வயது முதல் எழுதி
வருபவன்.
ஒரு கவிஞனாக வாழ்ந்தவன். எந்தப் பத்திரிகைகளிலும் சமீபத்தில்
எழுதாவிட்டாலும் ‘மௌனம்’ எனும் கவிதைக்கான சிற்றிதழில் கவிதைகளும் கவிதை
விமர்சனங்களும் எழுதிக் கொண்டுத்தான் இருந்தார். கவிதை மட்டுமே அவர்
இயங்கிய மகத்தான வெளி. சிவத்தின் கவிதைகள் ஆழ்ந்த உரையாடல். எப்பொழுதுமே
தனக்கான தனி அடையாளத்தைப் பெற்றவைத்தான் சிவத்தின் கவிதைகள். மௌனம் இதழில்
முன்பொருமுறை பா.அ.சிவத்தின் கவிதைகள் பற்றி எழுதியிருந்தேன். பெரும்பாலான
கவிதைகள் ஏக்க மனநிலையை வியப்பான சொல் தேர்வுகளின் வழி நம் முன்னே
வைக்கக்கூடியவை.
கவிதைகள் உணர்வை ஆராய்ந்து பிறப்பதில்லை. அவை சட்டென எதிர்ப்பார்ப்புக்கும்
ஏக்கத்திற்குமிடையே ஒரு பலகீனமான குரலாக வெளிப்படக்கூடியவை என சிவம்
அழுத்தமான நம்பிக்கை கொண்டிருந்தார். உளவியல் உலகம் எதிர்ப்பார்த்தலையும்
தொடர் ஏக்கங்களையும் ஒரு பலவீனக் கூறாகச் சொல்லக்கூடும். ஆனால் கவிதை
அப்படியெல்லாம் பிறக்கக்கூடியதல்ல எனத் தன் கவிதை குறித்து வல்லினத்தில்
சிவம் உரையாடியிருக்கிறார். மே 2008ஆம் ஆண்டு வல்லினம் கவிதை சிறப்பிதழாக
வெளிவந்தபோது அதில் பா.அ.சிவத்தின் சிறப்பு நேர்காணல் இடம் பெற்றிருந்தது
குறிப்பிடத்தக்கது.
2010ஆம் ஆண்டு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய கவிதை ஆய்வில்
அநங்கத்தில் பிரசுரமான பா.அ.சிவத்தின் கவிதையே சிறந்த கவிதையாகத்
தேர்வானது. தேர்வுக்கு வந்திருந்த 100க்கும் மேற்பட்ட மலேசியக் கவிதைகளில்
அவருடையதே மிகச் சிறப்பாக விமர்சிக்கப்பட்டிருந்தது.
சிவம் தன் காலத்தில் நிகழும் இலக்கிய மோசடிகளைக் கூர்மையாகக் கவனித்து
எதிர்வினையாற்றியிருக்கிறார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் செய்த
இலக்கிய நேர்மையின்மையைக்கூட வல்லினத்தில் குறிப்பிட்டு எதிர்வினை
எழுதியிருக்கிறார். நான் அவரை முதன் முதலாக மலேசியத் தேசிய
பல்கலைக்கழகத்தில் நடந்த வல்லினம் இலக்கியக் கூட்டத்தில்தான் சந்தித்தேன்.
அன்று அவர் கவிதை குறித்து மேடையில் பேசினார். இன்றைய கவிதை உலகம்
எதிர்க்கொள்ளும் மாற்றங்களையும் நவீன பாய்ச்சலையும் விரிவாகப் பேசினார்.
என் கவிதை பார்வை அப்பொழுது பரவலாக அறியாத சில விசயங்களைச் சிவத்தின் வழி
கவனிக்க முடிந்தது.
திண்ணை.காம் இதழில் தொடர்ச்சியாகக் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தேன்.
2009-இல் என் அனைத்துத் திண்ணை கவிதைகளையும் வாசித்து அவ்வப்போது
சந்திக்கும்போது இன்னும் கவிதையைக் கூர்மையாக்குங்கள் அதற்கான வாய்ப்புகள்
உங்கள் கவிதைகளில் இருக்கின்றது எனத் தவறாமல் கருத்துரைப்பார். ஒருமுறை
திண்ணையில் வெளிவந்த என்னுடைய ‘பிற்பகல் வெயில்’ எனும் சிறுகதையைப்
படித்துவிட்டு உடனே தொலைப்பேசியின் வாயிலாக அழைத்துப் பாராட்டினார். சிவம்
மட்டுமே அச்சிறுகதை குறித்து பாராட்டியவர். கவிஞர் பா.அ.சிவம்
பாராபட்சமில்லாமல் படைப்பாளிகளை தன் விமர்சனத்தின் வழி
ஊக்கப்பட்டுத்தியவர். தான் இயங்க்கியக் காலக்கட்டங்களில் அவர் இதைத்
தவறாமல் செய்து வந்தார். சீ.முத்துசாமியின் மண் புழுக்கள் நாவல் குறித்து
தீவிரமான விமர்சனத்தை முன்னெடுத்தவரும் பா.சிவம்தான். 2009ஆம் ஆண்டு
‘அஞ்சடி’ விவாதத்தின் வழி நான் மிக மோசமாக விமர்சிக்கப்பட்ட காலத்தில் என்
மனத்தின் உணர்வைப் புரிந்துகொண்டு என் கருத்தியலுக்கும் அப்பாற்பட்டு என்னை
ஒரு மனிதனாகப் பார்த்தவர் சிவம் மட்டுமே. முதலில் அவர் மட்டுமே என்னை
ஆதரிக்கும்வகையில் என் பலவீனங்களைப் பெரிதாகக் காட்டாமல் இதைக் கடக்க
வேண்டிய சூழலும் புரிதலும் நமக்கு இருக்கின்றது என அனைவரிடமும்
உரையாடினார்.
கடைசியாக அவருடன் நெருக்கமாக இருந்த நிகழ்வு 2011ஆம் ஆண்டு மௌனம் ஏற்பாடு
செய்திருந்த கவிதை சந்திப்புக் கூட்டத்தில்தான். நான், பா.அ.சிவம்
சை.பீர்முகமது அவர்களும் கோலாலம்பூரிலிருந்து காரிலேயே மலாக்காவிற்குப்
பயணம் செய்தோம். அப்பொழுதே சிவம் காரை வேகமாகத்தான் ஓட்டினார். முதலில்
மிகக் குறைவாகவே பேசினோம். ஏற்கனவே ஏற்பட்டிருந்த சில கருத்து முரண்கள்
கொஞ்ச நேரத்திற்கு எனக்கும் அவருக்கும் இடைவெளியை உருவாக்கி வைத்திருந்தது.
ஆனால், மலாக்கா சென்றடைந்ததும் வெகு இயல்பாகச் சராசரி நிலைக்குத்
திரும்பினோம். அன்று நானும் சிவமும் மேடையில் உரையாற்றினோம். என் உரைக்குப்
பிறகு உங்களின் கவிதை பார்வை ஒரு துல்லியமான அரசியல் நிலைக்குத்
தாவியுள்ளது எனப் பாராட்டினார். அப்பொழுதும் சிவம் தன் உண்மையான உணர்வை
வெளிப்படுத்தத் தவறியதில்லை.
அவரின் மரணச் செய்தியைக் கேட்டதும் சிறிது நேரம் மௌனமானேன். அது பொய்யான
செய்தியாக இருக்க வேண்டும் என சிவா பெரியண்ணனுக்கு உடனே அழைத்தேன். கொஞ்ச
நேரத்தில் மீண்டும் நவீனுக்கு அழைத்தபோது அவருடைய மரணம் உறுதியானது.
நிசப்தம். மனம் ஒரு கவிஞனை இழந்ததைவிட ஒரு நல்ல மனிதனை இழந்துவிட்டோம் என தவித்தது. அருகில் இருந்தவர்களிடம் சொல்லிப் புலம்பிக்கொண்டிருந்தேன்.
முகநூலில் யோகியின் பக்கத்தில் இந்த வாசகத்தைப் படிக்க நேர்ந்ததும் மனம்
மேலும் இறுக்கமானது. ‘சிவம்.. இது நடந்திருக்ககூடாது...’.
பாப்பாத்தி
வீட்டைச் சுற்றி சுற்றி
வந்து கொண்டிருந்தது
ஒரு வண்ணத்துப்பூச்சி
தலையில் அமர்ந்தது
முதலில்
தோளில் இறங்கியது
பின்னர்
விரட்ட முயன்றேன்
மனமில்லை
எனினும்
கன்னத்தை வருடியது
நெற்றியில் அமர்ந்துகொண்டு
எழவில்லை வெகுநேரம்
விட்டுவிட்டேன்
அதன்போக்கில்...
வேறு யார் செய்வார்
இதையெல்லாம்
அம்மாவின் நினைவு நாளில்
-பா.அ.சிவம்
|
|