முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு
     
  அஞ்சலி கட்டுரை:
பா.அ.சிவம் : தொலைந்து போன கவிதை பறவை!
- ம. நவீன் -
 
 
 
 

கைமாறு செய்கிற
எண்ணமெல்லாம்
சாம்பலாகிப் போனது
விபத்திலிறந்த என்னை
எரியூட்டுகிற பொழுது! - பா.அ.சிவம்

பா.அ.சிவம் இறந்துவிட்டார்.

இந்த உண்மையை முழுமையாக ஏற்றுக்கொண்ட பின்னரே மேற்கொண்டு எதையும் பேசவேண்டியுள்ளது. இன்று அவர் இல்லாததையும் இனி தொடரும் வாழ்வில் இதுபோன்ற இழப்புகளை வாழ்க்கை இரக்கமே இல்லாமல் வழங்கும் என்ற நிதர்சனத்தையும் ஒருமுறை ஒப்புக்கொண்டப் பின்னரே சிவம் மரணம் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீள வேண்டியுள்ளது. ஒரு எளிய மனிதனின் மரணமும் படைப்பாளனின் மரணமும் கொடுக்கும் தாக்கம் எப்போதும் ஒன்றாவதில்லை என சிவத்தின் மரணம் மீண்டும் ஒருமுறை நினைவு படுத்துகிறது.

சிவம் போன்ற ஒரு ஊடகவியலாளரை மீண்டும் பயிற்சிகள் மூலம் உருவாக்கலாம். சிவத்தின் அசலான அடையாளம் அவரது எழுத்துகள்தான். எந்தப் பயிற்சியின் மூலமும் சிவம் போன்ற ஒரு கவிஞனை உருவாக்க முடியாது. அதற்கான படிநிலைகள் அனுபவங்கள் மூலம் மனதில் உருவாகுபவை. அனுபவங்கள் வெவ்வேறானவை. அதன் மூலமே சிவத்தின் ஆழ் மனதை அடையாளம் காணமுடிகிறது. அவர் வெறுமையை, அங்கதத்தை, நட்பு மனதை, ஏமாற்றத்தை மீண்டும் மீண்டும் துய்க்க முடிகிறது.

மிகக்கவனமாக சிவத்தின் கவிதை தொகுப்பைத் திறப்பதிலிருந்து தவிர்த்தே அவர் படைப்புகள் குறித்து பேசும் தருணமாக இக்கட்டுரை அமைகிறது. இது நிச்சயமாக முரண்தான். மரணம் அத்தனை முரண்களையும் முறித்துப்போடுகிறது. மரணமடைந்த கவிஞனின் வரிகள் ஆபத்தானவை. அவை எப்போது வேண்டுமானாலும் நம்மை அழ வைத்துவிடும். இதுவரை எவ்வித அர்த்தமும் கொடுக்காத கவிதையின் சொற்களிலிருந்தும் அதன் இடைவெளிகளிலிருந்தும் கூட புதிய அர்த்தங்கள் புறப்பட்டு அலைக்கழிக்கலாம்.

சிவம் எனக்கு அறிமுகமானது ஒரு எதிர்வினை மூலமாகதான். மன்னன் மாத இதழில் நான் எழுதிய ஒரு தொடர்க்கதை தமிழுக்கே இழிவு என ஒரு வாசகர் கடிதம் அனுப்பியிருந்தார். அதை எதிர்க்கொண்டபோது எனக்கு வயது 18 அவருக்கு வயது 23. சிவம் அப்போதே நன்கு அறியப்பட்ட கவிஞராக இருந்தார். ஒவ்வொரு மாதமும் அவர் கவிதை செம்பருத்தியில் வரும். அவை பெரும்பாலும் சமூக சீர்க்கேடுகளைச் சாடியதாக இருக்கும். அதன் பின்னர் ஒருவருடத்திற்குள்ளாக அவரை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் புதுகவிதை திறனாய்வு கருத்தரங்கில் சந்தித்தேன். அம்முறை நிகழ்வு மலாக்காவில் நடந்தது.

கோலாலம்பூரிலிருந்து புறப்பட்டு மலாக்கா செல்லும் பேருந்தில் முதன்முதலாகக் கைக்குலுக்கிக் கொண்டோம். அதோடு எங்களுக்கு இடையில் இருந்த இடைவெளி உடைந்தது. சிவத்திடமிருந்து அத்தனை வசீகரப் புன்னகை. அது பேச்சில் இடைவெளிகளில் வெளிப்பட்டது. மலாக்கா நிகழ்வுக்குப் பின்னர் பினாங்கு, கோலாசிலாங்கூர் என ஒன்றிரண்டு புதுக்கவிதை பட்டறைகளுக்குச் சென்றோம். பட்டறையில் கலந்துகொள்வதைவிட அச்சூழலைச் சாதகமாக்கி ஊர் சுற்றுவது பிடித்திருந்தது. அவ்வப்போது நாங்கள் காணாமல் போய்விடுவது சங்கத்தில் முக்கியப் புகாராக இருந்தது. எங்களுக்கு அதுபற்றி என்ன கவலை. பினாங்கு பகோடாவிலும், கோலாசிலாங்கூர் மின்மினி பூச்சி படகிலும் எங்கள் பயணங்கள் தொ���ர்ந்தன. ஒரு சந்தர்ப்பத்தில் பட்டறை எங்களை எவ்விதத்திலும் வளர்க்கவில்லை என்பதை உணர்ந்தோம். அங்குப் பேசப்படும் விசயங்களைத் தாண்டி தமிழ் இலக்கியம் எங்கோ போய்விட்ட சூழலில் அதில் இனி கலந்துகொள்வதில்லை என முடிவெடுத்து அகன்றோம். சந்திப்பது குறைந்தது.

நான் ஈப்போ ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படிக்கத்தொடங்கிய காலத்தில் அவருடன் தொலைபேசுவதோடு சரி. கோலாலம்பூர் வந்து இறங்கியதும் மோட்டாரில் ஏற்றிக்கொண்டு வீட்டில் வந்து சில முறை சேர்த்துள்ளார். அந்தக் குறுகிய நேர பயணம்தான் நாங்கள் பேசுவது. அப்போது அவர் தனது கல்விக்காகவும் குடும்ப சூழலுக்காகவும் டியூசன் எடுப்பதில் மும்முறமாக இருந்தார். அதுபோன்ற குடும்ப சுமைகள் எனக்கில்லாத சூழலில் அவரது மனச்சிக்கல்களை அறிந்துகொள்ள முடியவில்லை. அழைத்த நேரத்துக்கு வர மாட்டேன் என்கிறார் என்ற புகார்கள் மட்டுமே என்னிடம் இருந்தன. ஆனால், சிவத்தைப் புரிந்துகொள்ள ஒரு பிரிவு காரணியாக இருந்தது.

எங்கள் இருவருக்கிடையில் பொது நட்பாக இருந்த ஒரு தோழமை, ஒருவரை பற்றி மற்றொருவரிடம் புகார்கள் கூறியபடி இருந்தது. பேசிய சொற்கள் வேறொரு உருவத்தில் மூர்க்கமாகி அவர் காதுக்குள்ளும் என் காதுக்குள்ளும் நுழைந்து இடைவெளியைப் பெரிதாக்கியது. சிவம் அன்பானவர். முழுக்க நெகிழும் தன்மை கொண்ட இலகுவான மனம் அவருடையது. அவரால் மூர்க்கத்தைக் காட்ட முடியாது. மிகப் பிடிவாதமான மௌனத்தை ஒருவருடம் கடைப்பிடித்தார். அது ஒருநாள் பேரழுகையாக வெடித்தது.

எல்லோர் முன்பும் சிரிப்பது போன்று எல்லோர் முன்பும் அழ முடிவதில்லை. நாம் அழுவது இன்னொரு சந்தர்ப்பத்தில் கேலியான ஒன்றாக மாற்றப்படலாம். சோகம் வேடிக்கையாகும் அவலம் கொடுமையானது. ஆனால் அன்று இருவரும் அழுதுகொண்டோம். அப்போது சிவம் சொன்ன வார்த்தைகள் இன்னும் நினைவில் உண்டு. "எந்த நிகழ்விலும் நீங்க இருக்கிற இடமா தேடி, உங்க பக்கத்துலதானே உக்காருறேன்... என்குறைய என்கிட்ட சொல்லலாமே...". அதன் பின்னர் வெளிப்படையாகப் பேசிக்கொண்டோம். வதந்திகள் புரிய ஆரம்பித்தன.

அதேபோல நான் என் விருப்பம் இன்மையைச் சொல்லியும் எழுத்தாளர் சங்கத்தில் உதவி தலைவராக அவர் இணைந்து பட்ட மனவேதனையை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். அதன் உச்சமாக எவ்வளவு மறுத்தும் வைரமுத்துக்கு மேடையில் மாலையிட வற்புறுத்தப்பட்ட அவமானம் அவரைத் தொற்றி இருந்தது. ஒரு நவீன கவிஞனுக்கு நிகழும் கொடுமையாக அதை அவர் வர்ணித்தார். தன்னால் சங்கத்தில் எதையுமே மாற்ற முடியவில்லை எனக்கூறி அதிலிருந்து வெளியேறியபோது சிவம் பழைய துடிப்புடன் காணப்பட்டார். மீண்டும் அவர் வாசிப்பும் எழுத்தும் தீவிரமடைந்தது.

அவரின் வாசிப்புத் தேர்வும் சுவாரசியமானது. பிரபலியங்களை அவர் விரும்புவதில்லை. தனது சுய தேடலில் புதிய படைப்பாளிகளைத் தேடி வாசிப்பவராக இருந்தார். பல புதிய எழுத்தளர்களின் பெயர்களைச் சொல்வார். அதேபோல இலக்கியம் தொடர்பான அபிப்பிராயங்கள் அவரிடம் எப்போதுமே அசலாக வெளிப்பட்டது. யாருடைய நகலாகவும் அவர் இருக்க விரும்பியதில்லை. அதே போல படைப்புகளை பிரசுரிப்பதில் அவரிடம் அவசரமும் இருந்ததில்லை. ஒருவருடம் கூட ஒன்றையும் இதழ்களில் பிரசுரிக்காமல் இருந்திருக்கிறார். எழுத்தை ஒரு போட்டியாகவோ… அடையாளப் படுத்தும் தொழிலாகவோ எண்ணி செயல்பட்டு நான் பார்த்ததில்லை. ஆனால் எழுதும் பணி அவரிடம் தொடர்ந்தே இருந்தது.

வெளிப்படையான பேச்சுக்குப்பின் தெளிவானப்பின்பும் எங்களிடம் பழைய ஒட்டுதல் வரவில்லை. நாங்கள் மீண்டும் எங்கள் அழுகையைப் பற்றி பேசிவிடுவோமோ என்ற தயக்கமாக இருக்கலாம். ஒரு சிறு தடுமாற்றத்துடன்தான் சூழலை அணுகினோம். பின்னர் 'காதல்' இதழ் உருவானபோது சிவம் அதில் தடையில்லாமல் இணைந்துகொண்டார். 2005ல் நவீன இலக்கியம் தொடர்பான தேடல்கள் உருவான காலம் அது. காதல் இதழ் நின்று 'வல்லினம்' உருவானபோது. எட்டாம் இதழ்வரை அவ்விதழின் துணையாசிரியராக இருந்தார். வல்லினம் முதல் கலை இலக்கிய விழாவில் அவரது மொழிப்பெயர்ப்புக் கவிதையைப் பதிப்பித்தபொது எவ்வளவு மறுத்தும் எனக்கு அந்நூலைச் சமர்பித்தபோது நெகிழ்ந்து போனேன். பின்னர் அத்தொகுப்பு பாவண்ணன் (தமிழகம்), மேமன்கவி (இலங்கை) உட்பட பல எழுத்தாளர்களாலும் பாராட்டப்பட்டபோது சிவம் தான் மிகுந்த திருப்தியில் இருப்பதாக ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். அதில்.. ‘இது போதும் எனக்கு நவீன்’ என இருந்தது.

சிவம் அப்போது தொலைக்காட்சியில் தமிழ்ச்செய்தி பிரிவில் பணியாற்றியதால் நல்ல தொடர்புகள் இருந்தன. அத்தொடர்புகள் மூலம் தொடக்ககால வல்லின செயல்பாட்டுக்கு பணச்சிக்கல் வராமல் பார்த்துக்கொண்டார். இடையில் எனக்கு கால் அறுவை சிகிச்சையால் நடமாட முடியாமல் இருந்தபோது வல்லினத்தின் சில பொறுப்புகளை முன்னின்று செய்தார். அவருக்கு எதை யாருக்கு எப்போது செய்ய வேண்டுமென தெரிந்திருந்தது. ஆனால், கட்டுப்பாடுகள் இல்லாத எல்லையற்ற எங்கள் பேச்சுகள் ஏதோ மனத்தடையால் முடங்கியே கிடந்தது. சிவத்துக்கு எல்லாவற்றையும் மீறி நண்பர்கள் முக்கியமாக இருந்தனர். 'எனக்கு நண்பர்கள் என்றால் கொள்ளை விருப்பம்' என அவரே தன் எழுத்தில் சொல்லியிருப்பார். நண்பர்களுக்காக எதையும் செய்யக்கூடியவராக இருந்தார். அதனால் நட்பின் நிகழும் சின்ன விரிசல்கூட அவருக்கு மன பாரத்தைக் கொடுத்தது. அவ்வாறான ஒரு விரிசல் மீண்டும் நிகழ்ந்தது.

வல்லினம் இணைய இதழாக வந்தப்பின்னர் இலக்கிய அரசியல் தொடர்பான காத்திரமான எதிர்வினைகள் சிவத்துக்கு உவப்பானதாக இல்லை. அவர் வல்லினத்தில் தனது பெயரை நீக்கிவிடும்படி கூறினார். சமரசம் செய்துகொள்ள முடியாத இருவேறு இடங்களில் நாங்கள் நிர்ப்பதை அப்போது நான் உணர்ந்தேன். சிவம் வல்லினத்தில் எழுதுவதை நிறுத்தினார். பேசுவதும் குறைந்தது. என்னால் இறங்கி வர இயலவில்லை. படைப்பிலக்கியம் மட்டுமே பேசிவிட்டு அகல்வதால் இந்நாட்டின் இலக்கியச் சூழல் கொஞ்சமும் மாறப்போவதில்லை என இப்போது போல அப்போதும் நம்பியதால் நானும் மௌனத்தை நீடித்தேன். அது இறுகி ஈகோவானது. எங்கள் மௌனம் ஒரு எதிர்வினையில் உடைந்தது.

ஒரு இணைய நேர்காணலில் மலேசியாவில் முக்கியக் கவிஞராக யாரைக் கருதுகிறீர்கள் எனக்கேட்கப்பட்டக் கேள்விக்கு நான் சிவத்தின் பெயரைக் குறிப்பிட்டு, ஆனால் இன்று அவர் அதிகாரத்துடன் இணைந்திருப்பதால் இனி அவரால் சுதந்திரமாக கவிதை எழுத முடியுமா எனத்தெரியவில்லை எனச்சொல்லியிருந்தேன். சிவத்திடமிருந்து இரண்டாவது முறையாக எதிர்வினை வந்து வல்லினத்தில் பிரசுரமானது. அதோடு சேர்வது இனி சாத்தியமில்லை என்றுதான் நினைத்தேன். ஆனால் பிரிவு என்பது எங்கள் இருவருக்குமே சாத்தியமாகவில்லை. ஆச்சரியமாக சிவம் மீண்டும் வல்லினத்துக்குக் கவிதைகள் எழுதினார். மீண்டும் பேசத்தொடங்கினோம். அவர் வல்லினம் செயல்பாடுகளுக்கு ஏதாவது ஒருவகையில் உதவ மும்முறமாக இருந்தார். அவருக்கு அதன் செயல்பாட்டில் நம்பிக்கை வந்திருந்தது. பழைய மனக்கசப்புகள் மறந்திருந்த ஒருதினத்தில் சிவம் வீட்டுக்கு வந்தார். அவர் பூச்சோங்கில் வீடு வாங்கியிருப்பதாகவும் சின்ன விருந்தொன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறினார். 'இலக்கிய நண்பர்கள் யாரையும் அழைக்கல ���வீன் உங்களை மட்டும்தான்' என்றபோது நான் பழைய சிவத்தைப் பார்த்தேன். சிவம் அப்போது அமைச்சர் சுப்ரமணியத்தின் பத்திரிகைத்துறை செயலாளராக இருந்தார்.

வல்லினம் செயல்பாடுகள் தொடர்பாக அவரை பூச்சோங்கில் சந்தித்த போது அம்மைத் தழும்புகளுடன் காணப்பட்டார். காரில் பல இடங்களில் தேய்மானம் இருந்தது. அடிக்கடி எங்காவது இடித்துவிடுவதால் பழுதுபார்க்காமல் வைத்திருப்பதாக மெல்லிய சிரிப்புடன் கூறினார். கவனமாகக் கார் ஓட்டச் சொன்னேன். அன்று இரவுதான் நாங்கள் அதிகமாகப் பேசியது. மெல்ல மெல்ல அப்பேச்சு கட்டுப்பாடுகளை உடைத்துச் சென்றது. நாங்கள் சில வருடங்கள் பின்நோக்கிய உணர்வுக்குச் சென்றுக்கொண்டிருந்தோம். அப்போதுதான் மூன்றாம் நபரால் எங்களுக்குள் ஏற்பட்ட பிரிவு குறித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அந்நபர் என்னிடமிருந்து இன்னும் யாரையெல்லாம் பிரிக்க முயன்றார் என்றும் பட்டியலிட்டு சிரித்துக்கொண்டோம். சிவம் 'அதெல்லாம் ஒரு நோய்' என்றார். அதை சொல்லும் பக்குவம் சிவத்துக்கு வந்திருந்தது. வாழ்வில் பெரிய சிக்கல்களையும் அதிகமான மனிதர்களையும் பார்த்தவர்களுக்கு ஏற்படும் பக்குவம் அது. மிகப்பெரிய இறுக்கம் அன்று அர்த்தம் இல்லாமல் உதிர்ந்து போனது. இலக்கியம் அல்லாத ஒரு கிசு கிசுப்பைப் பேசும் சுதந்திரம் மீண்டும் கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது.

கடைசியாக அவரிடம் தொலைப்பேசியில் பேசியபோது, தனது மடிக்கணினி காணாமல் போனதால் பாதி எழுதிய நாவல் காணாமல் போய்வீட்டது என்றார். பேசும்போது எப்போது இழையோடும் மெல்லிய சிரிப்பு அதனூடே இருந்தது ஆச்சரியத்தைக் கொடுத்தது.

அந்த இழப்பின் கவலை கலந்த மெல்லிய சிரிப்புதான் நான் கடைசியாகக் கேட்டது. இப்போதுவரை அதுதான் நினைவில் நிற்கிறது.

ஒருவேளை சிவத்திடம் இப்போது பேச முடிந்தால், அவர் தனது விபத்து குறித்தும் மெல்லிய சிரிப்பைக் கலந்து பேசத் தொடங்கலாம்.

அவர் பேசுவாரா என ஒருதரம் கைத்தொலைபேசிக்கு அழைத்தேன். 'இந்நபர் தற்போது தொடர்பின் இல்லை' என கணினி நம்பிக்கையுடன் சொன்னது. தற்போது தொடர்பில் இல்லை என்றால் வருங்காலத்தில் பேசுவார் எனக் கணினி சொல்கிறதா எனத் தெரியவில்லை.கணினி போல மனமும் இயந்திரமாகச் செயல்பட்டால் வாழ்க்கை எவ்வளவு நன்றாக இருக்கும்.

வேறு வழியில்லாமல் சிவத்தின் கைப்பேசி எண்ணை கனத்த மனதுடன் அழித்தேன்.

குறிப்பு: 'பா.அ.சிவத்தின் கவிதைகள்' என்ற தொகுப்பு வல்லினம் பதிப்பகம் மூலம் தயாராகிறது. சிவத்தின் இதுவரை நூலாகாத கவிதைகளை வைத்திருக்கும் தனிநபர்கள் மற்றும் ஊடகங்கள் vallinammagazine@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குக் கவிதைகளை அனுப்பலாம்.

   
     

உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | Back to Top
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768