முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு
     
  சூஃபி இசை - ஆன்மாவின் இசை
- அகிலன் -
 
 
 
 

சூஃபி இசை நமக்கு பரிட்சையமான ஒன்றுதான், கஜல் வழியும் நாகூர் ஹனிபா அவர்களின் பாடல் வழியும். ஆனால் இவைகள் இந்திய இசை மரபை உள்வாங்கிக் கொண்ட இசை. அசலான சூஃபி இசை உயிரின் இசை. அதன் சாரம்சமே இந்து யோகிகள் சொல்லும் சமாதி நிலையினை அடைதல் அல்லது பேரின்ப நிலை அடைதல்.

சூஃபி இசை வடிவம் இந்தி இசையமைப்பாளர் ஹிமேஸ் ரேஷ்மையாவின் இசையின் மூலம்தான் எனக்கு அறிமுகப்பட்டது. அதற்கு முன்னமே ஏ ஆர் ரஹ்மானும் நுஸ்ரத் ஃபதே அலிகானும் இந்திய இசையில் சூஃபி இசையை பிரபலப்படுத்தியிருந்தாலும். ஹிமேஸ் அதை தனது இசையடையாளமாக பிரகடனப்படுத்தியதால் எனக்கு சூஃபி இசை என்பது என்ன என்று அறியும் ஆவல் அதிகமானது.

ஏ ஆர் ரஹ்மானின் டெல்லி 6 இல் வரும் அர்ஜியான் (Arziyan), ராக் ஸ்டாரில் வரும் யானுசாமுதே, ஜோடா அக்பரில் வரும் க்வாஜாஜி, இன் லம்ஹோன், போஸ் படத்தில் வரும் அல்லஹ்ஹூ என்ற பாடல். மற்றும் குரு திரைப்படத்தில் வரும் ஆருயிரே மன்னிப்பாய மன்னிப்பாய போன்ற பாடல்கள் இந்திய சூஃபி இசையின் சிறந்த உதாரணங்கள். இந்த சூஃபி இசை சம்பந்தமாக இளையராஜாவின் ஒரு இசையை குறிப்பிட்டாக வேண்டும். அது ஆச்சரியமாக இருக்கலாம், நீங்கள் தீர்க்கமாக மறுக்கவும் செய்யலாம். ஆனால் உறுதியாக நான் அதை அவரின் மிகச்சிறந்த சூஃபி இசையாகத்தான் கருதுகிறேன். அதை விளங்கி கொள்ள வேண்டும் என்றால், சூஃபி இசை என்றால் என்ன என்பதை நாம் புரிந்துக்கொண்டால், நீங்களும் அதை உணர, அனுபவிக்க முடியும்.

சூஃபி இசை என்பது என்ன? சூஃபி என்பது இஸ்லாத்தின் ஒரு பிரிவு. இஸ்லாத்தில் இரண்டு மிகப்பெரிய பிரிவுகள் உண்டு. ஒன்று சுன்னத் மற்றது சியா. சுன்னத் முஸ்லீம்கள் இஸ்லாத்தின் பெரும் பிரிவு அதாவது 80-90 சதவிகித முஸ்லிம்கள் சுன்னத் பிரிவை சேர்ந்தவர்கள் என்று விக்கிபிடியா கூறுகிறது. இதில் சூஃபி சியாத் பிரிவின் கீழ்வரும் ஒரு கிளை. ஆனால் சூஃபியை ஒரு மார்க்கமாகவோ அல்லது தத்துவமாகவோ கொள்ளல் கூடாது என்பது சூஃபி வழி என்ற நூலை எழுதிய நாகூர் ருமியின் வாதம்.

சூஃபி சுன்னத் முஸ்லீம்களால் தடைசெய்யப்பட்ட போதனையாகும். அதற்கு பலகாரணங்கள் உண்டு அதில் அதி முக்கியமானது சூஃபி நம்பிக்கையாளர்கள் வலிமார்கள் எனப்படும் சூஃபி குருக்களின் கல்லரைகளை அதாவது தர்க்காக்களை வணங்குவது. அது இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட ஒன்று. இறைவனுக்கு இணையாக அல்லது இறைவனைத் தவிர வேறு யாரிடமிமும் தலைவணங்களாகாது என்பது இஸ்லாத்தின் முக்கிய கோட்பாடு.

அதேபோல் இசையும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று என்பது பொதுவான கருத்து. அதற்கு ஆதாரமாக நபி பெருமானின் பல ஹதித் வாசகங்களையும் திரு குரானின் சில வாசகங்களையும் சுன்னத்ப் பிரிவினர் மேற்கோள் காட்டினாலும். பெருநாள் சமயங்களில் இசை அனுமதிக்கப் படலாம் என்று அதே ஹதித்தில் நபி பெருமானார் கூறியிருப்பதாக வாதிடுபவர்களும் உண்டு.

சூஃபி என்பது இறவனுடன் இரண்டற கலக்கும் வழிமுறையை சொல்லும் போதனையும் பயிற்சியுமாகும். இதுதான் இஸ்லாத்தின் இறு��ி இலக்கு என்பது சூஃபிமார்களின் நம்பிக்கை. நாகூர் ரூமி அவர்கள் இது ஏறக்குறைய இந்துமதத்தின் அத்வைததிற்கு நெருக்கமானது என்கிறார். அதோடு நகூர் ரூமி அவர்கள் தனது புத்தகத்தில் நபித்தோழர் அபூஹுரைரா நபி மொழியென்ற வாசகத்தில் இப்படி கூறியதாக குறிப்பிடுகிறார், அதாவது ‘இரண்டுவிதமான நபிமொழிகளை நான் நபி பெருமானார் அவர்களிடமிருந்து கற்று மனனம் செய்துள்ளேன். அதில் ஒருவகையைத்தான் உங்களுக்கு அறிவித்துள்ளேன். இன்னொன்றையும் அறிவித்தால் நீங்கள் என் கழுத்தை அறுத்துவிடுவீர்கள்” என்று. அந்த இரண்டாவது நபி மொழிதான் சூஃபி போதனை என்கிறார் நாகூர் ரூமி.

சூபிகள் இறைவனின் காதலிகளாக தங்களை கருதுகிறார்கள். எல்லாவற்றிலும் இறைவனையே காண்பவர்கள். எல்லா செயலிலும் இறைவனை அனுபவிப்பவர்கள். அந்த அனுபவத்தை தங்களுக்குள் கொண்டுவருவதாகவும், தன்னிலை மறந்து இறைவனிடன் ஒன்றிவிடும் அனுபவத்தை பெறவும், அவனிடம் காதலால் கசிந்து கண்ணீர் மல்கி கரைந்து போகவும் இசையை ஒரு சாதனமாக உபயோகிக்கிறார்கள். “காதல் கொண்டவனின் சிந்தனை எப்படியிருக்குமோ அப்படிதான் இறையன்பர்களின் சிந்தனையும் இருக்கும் என்கிறார் சூஃபி மேதைகளில் ஒருவரான இமாம் கஸ்ஸாலி.

மலேசியா, சுன்னத் பிரிவு இஸ்லாத்தை ஆதாரமாக கொண்டமையால் சூஃபி வழிமுறை இங்கு தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் டிக்கிர் பாராத் எனப்படும் இசையும், திருமணங்களின் போது பறை போன்ற கருவியின் வழி அவர்கள் நிகழ்த்தும் இசை நிகழ்வும், மலாய்க்காரர்களின் நாட்டுப்புற இசையும் சூஃபி இசையின் ஆதார வடிவம்தான். சூஃபி வழியையும் இசையையும் தடை செய்யும் சுன்னத் வழிமுறையாளர்களான மலேசிய முஸ்லீமகளிடத்தில் இந்த சூஃபி இசையின் தாக்கம் எப்படி வந்திருக்கும் என்பது ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று. வரலாறை ஆய்வு செய்வதில் அதிக அச்சம் கொண்ட மலாய்க்காரர்கள் முறையான வரலாற்று ஆய்வுகள் செய்வார்களானால் மலேசியாவில் சூஃபி வழியின் வேர்களை கண்டறிய நிச்சயம் வழிவகுக்கும்.

சூஃபிமார்கள் 9ஆம் நூற்றாண்டில் தோன்றியவர்கள் என்று சில ஆய்வுகள் கருதுகின்றன. அவர்களில் அனேகர்கள் நபி பெருமானாரின் பேரர்களாவர். இஸ்லாத்தில் இலக்கியம், கலை மற்றும் இசை வளர இவர்கள் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள். அவர்கள் இறைநம்பிக்கையாளர்கள் மட்டுமல்ல சிந்தனை வாதிகளுமாவார்கள். சில உதாரணங்கள் இங்கே;

தூரத்தைப் போலவே அண்மை என்பதும் ஒரு திரைதான். நம் பிடரி நரம்பைவிட அருகில் இறைவன் இருப்பது உண்மையானால் 70,000 திரைகளைப் பற்றி ஏன் பேச வேண்டும்? - இப்னு அரபி

இஸ்லாம் புத்தகங்களில் இருக்கிறது. முஸ்லிம்கள் புதைகுழிகளுக்குள் இருக்கிறார்கள். - ஹஸன் பஸரி

சூஃபி இசையின் முக்கிய நோக்கமே தன்னிலை மறந்து இறை அனுபவத்தில் இரண்டற கலப்பதேயாகும். கர்நாடக இசை எப்படி இறைவனை அடைவதையே தனது ஆதார நோக்கமாக கொண்டதோ அதேபோல்தான் சூஃபி இசையும். ஆனால் கர்நாடக இசை சுருதி மற்றும் தாளம் போன்ற இலக்கண விதிமுறைகளுக்கு உட்பட்டது ஆனால் சூஃபி இசையில் இதுபோன்ற இலக்கண விதிமுறைகள் இல்லை. அது தியான நிலைக்குள் மனதை கொண்டு சென்று பிரபஞ்ச வெளியில் இரண்டற கலக்கும் ஒரு பயணம். இசை இலக்கணங்கள் பெரும்பாலும் இதில் கணக்கிலெடுப்பதில்லையென்றாலும், சமா எனப்படும் அவர்களின் இசைவடிவில் மூச்சுப்பிரயோகம், கடவுளின் பெயரை உச்சரிக்கும் தாள இடைவெளி என்று சில வழிமுறைகள் உண்டு. ஆனாலும் இவைகள் அடிப்படை விதிகள் கிடையாது.

ஞெ (nye) எனப்படும் குழல் இசை சூஃபி இசையின் அடிப்படை நாதம். தேவாலயத்தில் இசைக்கப்படும் ஆர்கன் இசைப்போல, கர்நாடக இசையில் இசைக்கப்படும் தம்பூரவை போல், திபேத் புத்த மந்திரம் அல்லது ஜபத்தினை போல, அடிநாத சுருதியில் இசைக்கப்படும் இசைக்கருவி. இந்துவின் ஓம் என்ற நாதமும் இதே சுருதியில் ஒலிப்பது என்பதையும் கவனத்தில் கொள்ளவும். இதன் நோக்கமே தனித்திருக்கும் உணர்வு வெளியை ஏற்படுத்துவது. ஆழ் மனநிலையை நோக்கி நமது சிந்தனையை செலுத்துவது. வெளியுலகை மறக்கடித்து உள்நிலை நோக்கி பயணிப்பது.

இதனுடன் திக்கிர் எனப்படும் பாடலை அல்லது ஜபத்தை இடைவிடாது பாடுவது. திக்கிர் எனப்படுவது, இறைவனின் திருநாமத்தையும், திருக் குரானின் வாசகங்களையும், நபி பெருமானையும் நினைவு கூறுவதாகும். அதோடு ஹூ என்ப்படும் இறைத்திரு நாமத்தை துதி செய்வதும் சூஃபி இசையின் இன்னொரு முக்கிய அம்சம். ஹூ என்பது அல்லாஹ்வை குறிக்கும் சொல்லாகவும் இறைதியானத்தின் முக்கிய அம்சமாகவும் கருதப்படுகிறது. விடும் மூச்சில் கூட ஹூ கலந்திருப்பதாக சூஃபிகள் கருதுகிறார்கள். சில சமயங்களில் அல்லாஹ்ஹூ அல்லது லா இலாஹா இல்லல்லாஹ் என்று பின்னனியிலும் ஜபிக்கப்படும்.

இந்த தியானத்துடன் அல்லது பாடலுடன் பல சமயங்களின் பறை போன்ற கருவியும் இசைக்கப்படும், மிகப் பெரிய தாள இடைவெளியில் (slow tempo-வில்). பிற்காலத்தில் சூஃபி குருமார்களின் கவிதைகள் பாடுபொருளாக சூஃபி இசையில் இடம் பெற்றது. பிறகு சூஃபிமார்கள் உலக முழுக்க பயண மேற்கொண்டு இஸ்லாத்தை பரப்பியபொழுது, இந்த சூஃபி இசை அந்தந்த நாட்டு கலை வடிவத்தை உள்வாங்கிக் கொண்டு பல்வேறு பிரிவுகளில் விரிந்தது. இந்தியாவில் கஜலாகவும், கவாலியாகவும் திரிபடைந்தது. நாகூர் மாவட்டதில் பாடப்படும் இஸ்லாமிய இசை மற்றொரு வகையான சூஃபி இசைவடிவமாகும்.

கஜல் பெறும்பாலும் காதல் கவிதைகளை அடிப்படையாக கொண்டிருந்தாலும் அது முழுவதும் இறை காதலை குறிப்பதாகும். சில சூஃபி கவிதைகளை தெரிந்து கொள்வதின் வழியாக சூஃபியையும் சூஃபி இசையையும் இன்னும் நெருக்கமாக அணுக முடியும் என்று நினைக்கிறேன்.

எனது நாயனை நான்
என்னிதயத்தின் கண்ணால் பார்த்தேன்
நீ யார் என்று கேட்டேன்
அவன் சொன்னான்:
நீதான்

- மன்சூர் அல்ஹல்லாஜ்

நாயனே,
உனது எல்லையில்லா ஒருமைக் கடலின் ஆழத்தில்
என்னை நுழைத்துவிடு

- இப்னு அரபி

என்ன செய்வது முஸ்லீம்களே
எனக்கே என்னை தெரியவில்லை
கிறிஸ்துவனோ யூதனோ
முஸ்லிமோ அல்ல நான்
கிழக்குமல்ல மேற்குமல்ல
நிலமுமல்ல கடலுமல்ல
மண்ணோ விண்ணோ
நீரோ நெருப்போ காற்றோ
எதுவுமல்ல
அரசனுமல்ல ஆண்டியுமல்ல
இந்தியனோ சீனனோ அல்ல
ஈராக்கியனோ கொராசானியனோ அல்ல
இம்மையைச் சேர்ந்தவனோ
மறுமையை சேர்ந்தவனோ அல்ல
சொர்க்கத்துக் குரியவனோ
நரகத்துக்குரியவனோ அல்ல
எனது இடமோ இடமற்றது
எனது தடமோ தடமற்றது
உடலோ உயிரோ அல்ல

இருமையை விட்டுவிட்டேன் நான்
தேடுவதும் தெரிவதும்
காண்பதும் அழைப்பதும் ஒன்றே

முதலும் முடிவும் அவனே
அகமும் புறமும் அவனே

போதையில் இருக்கிறேன்
என்பதைத் தவிர
சொல்வதற்கு ஏதுமில்லை.

- மெளலான ஜலாலுத்தீன் ரூமி

இறைவா
எங்கெல்லாம் இருப்பதாக நினைத்தேனோ
அங்கெல்லாம் நீ இல்லை
எங்கெல்லாம் இருக்க மாட்டாய்
என்று நினைத்தேனோ
அங்கெல்லாம்
நீ இருப்பதை கண்டேன்

- ஹ்வாஜா முயினுதின் சிஷ்தி

ஆயுத எழுத்து படத்தில் வரும் யாக்கை திரி காதல் சுடர், ஜீவன் நதி காதல் கடல் என்பது முழுக்க முழுக்க ஒரு சூஃபி கவிதைதான். அதற்கு ஏ ஆர் அவர்கள் தெக்னோ இசையமைத்து வித்தியாசப்படுத்தியிருந்த��ர். அவ்வப்போது பின்னனியில் அவரது குரலில் ஒலிக்கும் ஃபானா (fana) என்ற வார்த்தை சூஃபியில் முக்திக்கு ஈடாக குறிக்கப்படும் ஒரு வார்த்தை.

இப்படியான சூஃபி இசையை பாலிவூட் சினிமா இன்று அரேபி இசைக்கருவிகளையும் அரேபிய ரிதம்களையும் மட்டும் முதன்மை படுத்தி சினிமா காதல் வரிகளின் மூலம், சூஃபி இசை என்றப் போர்வையில் கொச்சைப்படுத்தி வருகிறது. சூஃபி இசையின் சில உதாரணங்கள் இங்கே.

திக்கிர் எனப்படும் இறைவாசகத்தை அல்லது நபிமொழியை நினைவுகூர்ந்து பாடுவது என்பது சூஃபி இசைகளில் ஒன்று என்று பார்த்தோம். இந்த நபி மொழி வாசகத்தை பாருங்கள்.

ஏதோ நாளைக்கே சாகப்போவதைப் போல ‘அந்த’ உலகத்துக்காக செயலாற்றுங்கள் - ஹதித். இந்த வாசகத்துடன். அல்லாஹ்ஹூ என்ற ஜபமும், சில இசைக்கருவிகளும் சேர்ந்துக்கொண்டு தியானிக்கப்படுமென்றால் அதுதான் சூஃபி இசை.

இப்பொழுது இளையராஜாவின் பூவார் சென்னி மன்னன் என்ற திருவாசகப் பாடலை கேளுங்கள். ஹுஹா ஹுஹா என்ற பின்னனியில், காலம் நெருங்கி விட்டமையால், நிலையான இறைவனை வணங்க மக்களை அழைக்கும் திருவாசகக் கவிதையும், slow tempoவில் வரும் தாளமும், இளையராஜாவின் குரலும் நிச்சயம் சூஃபி இசை அனுபவத்தைதான் தரும். ஹதித்தும், 6ஆம் நூற்றாண்டில் தோன்றிய திருவாசகமும், எப்படி கருத்தில் ஒத்துப்போகிறதோ அதேபோல் அல்லாஹ்ஹூ என்ற சூஃபி இசையும் ஹூஹா ஹூஹா என்ற பின்னனியில் ஒலிக்கும் பூவார் சென்னி மன்னன் பாடலும் ஒரே நாதமாகதான் ஒலிக்கிறது. சூஃபி இசைக்கும் இளையராஜாவின் இந்த திருவாசக இசைக்கும் எந்த வேற்றுமையும் என்னால் காணமுடியவில்லை.

இஸ்லாம், இசையை மதுவைப்போல் ஹராம் என்றாலும், இஸ்லாத்தைப் போல் கார்ல் மார்க்ஸூம் இசையை மதுவென்றாலும், உலக முழுக்க, இறை அனுபவத்தில் லயிக்க செய்யும், பிரபஞ்ச வெளியுடன் ஆன்மாவை ஒன்றிட செய்யும் எல்லா இசையின் நாதமும் ‘ஹூ’ என்று அல்லாஹ்வின் திருப்பெயரிலேயே ஒலிக்கிறது என்று நினைக்கிறேன்.

கட்டுரைக்கு உதவிய இதர புத்தகங்களும், வலைதளமும்

1. சூஃபி வழி - நாகூர் ரூமி, கிழக்கு பதிப்பகம்
2. The Legacy off Mediaeval Persian Sufism, ed. by Leonard Lewisohn, foreword by Dr. Javad Nurbakhsh, Introduction by S.H. Nasr, London, 1992 (277-287)
3. http://en.wikipedia.org/wiki/Sufism
4. http://sufipoetry.wordpress.com/2009/11/26/the-rubaiyat-of-rumi/
5. http://vilambi.blogspot.com/2010/03/fethullah-gullen.html
6. http://panbudan.com/story/unnul-vizikkum-sufi
7. http://en.wikipedia.org/wiki/Islam

   
     

உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | Back to Top
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768