|
‘மலேசியத் தமிழிலக்கியத்தில் பெண் இலக்கியவாதிகள்’ எனும் தொகுப்பை இந்த
வருடம் கெடா மாநில தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மூலம் அதன் தலைவர்
க.பாக்கியம் அவர்கள் தொகுத்து வெளியீடு செய்திருந்தார். தற்செயலாக அந்தத்
தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது.
ஒரு காலக்கட்டத்தில் தொகுக்கப்படும் ஆவணம் என்பது எப்படி இருக்க வேண்டும்?
பாராபட்சம் பார்க்காமல் அக்காலக்கட்டத்தில் இயங்கிய அனைவரையும், அனைத்துப்
படைப்புகளையும் தொகுப்பதுதான் அதைச் செய்பவர்களாகத் தன்னைக்
காட்டிக்கொள்பவர்களின் நேர்மை.
இந்தப் பெண்ணிலக்கியவாதிகளின் தொகுப்பில் கெடா மாநில எழுத்தாளர் சங்கத்தின்
தலைவர் க.பாக்கியம் அவர்கள் ஞாபக மறதியாலோ அல்லது தனிப்பட்ட வெறுப்பு
காரணமாகவோ அவரின் தொகுப்பிலிருந்து 2000 முன்பிருந்தே எழுதி வரும் பெண்
படைப்பாளிகளான யோகி, பூங்குழலி போன்ற வல்லினத்தைச் சேர்ந்த பெண்களின்
படைப்புகள் குறித்த தகவல்களையும் அவர்களின் நூல் குறித்த தகவல்களையும்
தவிர்த்திருக்கிறார். பெண் இலக்கியவாதிகளின் விபரங்கள் எனும் வரிசையில்கூட
அவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. பூங்குழலி, யோகி போன்ற கவிஞர்கள்
மலேசியத் தமிழ் இலக்கியத்தில் எத்தனையோ மாற்றங்களையும் துணிவான எழுத்தையும்
பகிர்ந்தவர்கள். அவர்களை நிராகரித்து வெளியிடப்பட்டுள்ள இந்தத் தொகுப்பில்
தங்கள் தகவல்களெல்லாம் இருக்கின்றது என்பதற்காக ஒதுங்கிப் போக மலேசியப்
பெண் படைப்பாளிகள் நினைப்பார்களா? அல்லது நியாயமான ஆய்வில்லை என
விமர்சிக்கப் போகிறீர்களா? எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ராஜம் இராஜேந்திரன் அவர்கள் கவிதைகள் பற்றிய கட்டுரையில் பூங்குழலி, யோகி,
தோழி எனப் போகிற போக்கில் குறிப்பிட்டுள்ளார் என்பதற்காகவும் அவர்களின்
கவிதையின் சில வரிகள் சொல்லப்பட்டிருப்பதாலேயும் அவர்கள் பற்றிய விவரங்கள்
தொகுப்பில் இடம் பெற்றுள்ளன எனக் காரணம் சொல்லி போய்விட முடியாது. பட்டியல்
மற்றும் விவரங்கள் தொகுப்பிற்கு அடிப்படையானது. தொகுப்பில் ஒரு தனிமனிதர்
எழுதும் கட்டுரை என்பதைவிட தொகுப்பின் தரவு சார்ந்த ஒருங்கிணைப்பு என்பது
அது கொடுக்கும் பட்டியல் மற்றும் விபரங்களைச் சார்ந்ததாகும். அப்படிப்பட்ட
பட்டியல்கள் 6 வகையாகத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. அவை பின்வருமாறு:
அ. மலேசியப் பெண் இலக்கியவாதிகள் வெளியீடு செய்த சிறுகதைத் தொகுப்பு
நூல்கள்
ஆ. மலேசியப் பெண் இலக்கியவாதிகளின் பத்திரிகை, வார மாத இதழ்களில் வந்த
தொடர்க்கதைகள்
இ. மலேசியப் பெண் இலக்கியவாதிகள் வெளியீடு செய்த நாவல்கள்
ஈ. மலேசியப் பெண் இலக்கியவாதிகள் வெளியீடு செய்த கட்டுரை நூல்கள்
உ. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சான்றோர் விருது பெற்ற
பெண்ணிலக்கியவாதிகள்
ஊ. தான் ஸ்ரீ ஆதிநாகப்பன் இலக்கிய விருது பெற்ற பெண்ணிலக்கியவாதிகள்.
இவற்றில் குறிப்பிடத்தகுந்த விடுப்படல் என்னவென்றால் மலேசியப் பெண்
இலக்கியவாதிகள் எழுதி வெளியிட்ட கவிதை நூல்கள் பற்றிய தகவல்கள் ஆகும்.
கவிதையும் புனைவிலக்கியம்தானே? புனைவிலக்கிய வரலாற்றுப் பதிவுகள் என
உபக்குறிப்பிடப்பட்டு வெளியீடப்பட்டிருக்கும் தொகுப்பில் எப்படி நடுவில்
கொஞ்சம் பக்கம் காணாமல் போனது? 2009ஆம் ஆண்டு பூங்குழலியால் எழுதி
வெளியீடப்பட்ட கவிதை நூலான ‘ உயிர் வேட்டை’ குறித்த விவரங்களை எப்படித்
தொகுப்பாசிரியர் அறியாமல் இருந்திருக்க முடியும்? மலேசியாவில்
பிரசுரிக்கப்பட்டு வெளியீடு கண்ட ஒரு நூலை எப்படி வரலாற்றிலிருந்து அவர்
தவிர்த்திருக்க முடியும்? பூங்குழலியே முன்வந்து தான் நூல் வெளியிட்டதாகச்
சொல்வதன் மூலம்தான் ஒரு தொகுப்பிற்கான நேர்மை பூர்த்தியடையுமா?
தொகுப்பாசிரியர் எனத் தன்னைப் பிரகடனம்படுத்தும் ஒருவரின் செயல்பாடு
எப்படிம் இருந்திருக்க வேண்டும்? மலேசியாவின் மிக முக்கியமான நவீன கவிஞர்
பூங்குழலி. தொடர்ந்து பல வருடங்களாகச் செயல்பட்டு வருகிறார். அவர் என்ன
பெண் படைப்பாளி அல்ல என க.பாக்கியம் முடிவு செய்துவிட்டாரா? அல்லது
தனிப்பட்ட வெறுப்பு அவரின் கண்களை மறைத்துவிட்டதா? பூங்குழலி மற்றும் யோகி
போன்றவர்களின் தொலைப்பேசி எண்கள் கிடைப்பதில் என்ன சிரமம் உள்ளது?
பூங்குழலி பல பொது அமைப்புப் பணிகளில் உள்ளவர். யோகி ‘நம் நாடு’ எனும்
பத்திரிகையின் நிருபர். அவர்களைத் தொடர்புக்கொள்ள சிரமம் இருப்பது
சாத்தியமில்லை.
மலேசியப் பெண் படைப்பாளிகள் வெளியீட்ட நூல்கள் எனும் பட்டியலில் 2010
வரையிலேயே தகவல்கள் இருக்கின்றன. ஆனால், அதன் தொகுப்பாசிரியர் இந்தத்
தகவல்கள் திரட்டும் வேலையை செப்டம்பர் 2011 முதல் செப்டம்பர் 2012 வரை
நிகழ்ந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். (பார்க்க: பக்கம் xxi) வல்லினம்
வெளியீடாக மார்ச் 2012ஆம் ஆண்டு யோகி எழுதி வெளியிட்ட ‘துடைக்கப்படாத
இரத்தக்கறைகள்’ கட்டுரை தொகுப்பைப் பற்றி தகவல் குறிப்பிடப்படவில்லை.
எந்தப் பட்டியலிலும் குறிப்பிட்ட ஆண்டுவரை வெளியிடப்பட்ட நூல்கள்தான்
இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன என்ற வரையறையெல்லாம் வைத்துக்கொள்ளாத நிலையில்
யோகியின் நூல் குறித்த தகவலை இணைத்துக்கொள்ளாமல் விட்டதற்கு தனிப்பட்ட
விருப்பு வெறுப்பே காரணி எனத் தோன்றுகிறது.
அதனையடுத்து மலேசியப் பெண் படைப்பாளிகள் பெற்ற விருதுகள் என்ற
குறிப்புகளிலும் பூங்குழலி பற்றிய தகவல் மறுக்கப்பட்டிருக்கிறது. 2011 ஆம்
ஆண்டு சிலாங்கூர் மாநிலத்தின் கலை கலாச்சார விருதை கவிதை துறையில்
பூங்குழலி பெற்றிருந்தார். இது குறித்த முழுமையான தகவல்கள் நாளிதழிலும்
இணையத்திலும் வல்லினத்திலும் இடம் பெற்றிருந்தது. அதை அவர்
கவனிக்கவில்லையா? அல்லது தொகுக்கும்போது விட்டுவிட்டாரா? ஒருநாட்டில்
கொடுக்கப்பட்டும் முக்கியமான விருதை யார் எந்த வருடத்தில் பெற்றால்
என்பதைத் தேடிக் கண்டறிவதில் என்ன சிரமம் உள்ளது? தொகுப்பு
என்றாகிவிட்டதால் அதற்காக உழைப்பதுதானே தர்மம். எனக்கு தெரிந்து பூங்குழலி
விடுப்பட்டிருக்கிறார், ஆனால் இந்தப் பட்டியல் ஆய்வுக்குப் பிறகு நீளுமா
இல்லையா என்பது தெரியவரும்.
பூங்குழலி மற்றும் யோகி சமக்காலத்தில் தொடர்ந்து இயங்கி வரும் பெண்
படைப்பாளிகள்.நூல் வெளியிடாத போதும் தோழியில் கவிதைகளும் பரவலாக
அறிமுகமானவையே. இவர்கள் உலக தமிழ் இலக்கியச் சூழலில் நன்கு
அறிமுகமானவர்கள். இவர்களைப் பற்றிய குறிப்புகளையும் தகவல்களையும் மறுப்பதோ
அல்லது மறப்பதோ க.பாக்கியம் வெளியிட்ட தொகுப்பின் நேர்மையைச் சந்தேகிக்க
வைக்கிறது. அல்லது இந்தத் தவறைச் செய்த அவர் வெளிப்படையாக இந்தத் தொகுப்பு
ஒரு முழுமையானது அல்ல என ஒப்புக்கொள்வாரா? அவர்தான் சொல்ல வேண்டும். மேலும்
தொகுப்பின் மீதான குறைகளை இங்குப் பகிங்கரமாகச் சொல்வதற்கு இரண்டு
காரணங்கள் உள்ளன.
1. அந்தத் தொகுப்பை நான் வாங்க நேர்ந்ததன் மூலம் அதனை வாசகர்களுக்காக
வெளியிடப்பட்டதால் அத்தொகுப்பின் வாசகனாகிவிட்டேன்.
2. க.பாக்கியம் அவர்களுக்கும் வல்லினத்திற்கும் உள்ள பிரச்சனை முரண்
காரணமாக அவர் வேண்டுமென்றே வல்லினம் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த பெண்களின்
தகவல்களைக் குறிப்புகளைத் தவிர்த்துள்ளார் என எழுந்திருக்கும் சந்தேகம்.
இரண்டாவது காரணம் வலுபெற அந்நிகழ்வில் க.பாக்கியம் ஆற்றிய உரையும்
சான்றாகிறது. இந்நிகழ்வில் பேசிய கா.பாக்கியம் வெளியிட்ட சில கருத்துகளை
நண்பர்கள் மூலம் அறிய முடிந்தது. அவை பொதுவில் தைரியத்துடன் முன்வைக்க
வேண்டிய கருத்துகள்தான். ஆனால், தனது கருத்துகள் மேல் வலுவான நம்பிக்கையற்ற
க.பாக்கியம் போன்றவர்கள் அதை ஒரு அறைக்குள் முடக்கிக் கொள்கிறார்கள்.
அதனால் அவர்களுக்கு இரு நன்மைகள். ஒன்றாவது, அவருக்கு அதற்கான எவ்வித
எதிர்வினையும் வராது. இரண்டாவது, அரங்கில் உள்ளவர்கள் முன் தன்னை / தன்
கருத்தை எவ்வித தடையும் இல்லாமல் முன்னிறுத்திக்கொள்ளலாம். ஏதோ ஒரு
தமிழ்ப்படத்தில் கவுண்டமணி தனக்கு வேட்டையாடத் தெரியும் என புலி இல்லாத
நகரத்தில் துப்பாக்கியோடு சுற்றுவதுபோல பாக்கியமும் தனது பொம்மை
துப்பாக்கியை அவ்வப்போது வானத்தை நோக்கி காண்பித்துக்கொண்டிருக்கிறார்.
அவர் பேச்சில் வெளிபட்ட சில விடயங்கள் குறித்து பேச வேண்டியுள்ளது.
அவ்வரங்குக்கு 30க்கும் குறைவானவர்கள் வந்திருந்தாலும் உண்மையை எப்போதுமே
சொல்லிக்கொண்டிருப்பதில் எண்ணிக்கை ஒரு பொறுட்டல்ல. அவ்வரங்கில் நான்
கலந்துகொள்ளாத நிலையில் நிகழ்ச்சியில் பேசப்பட்டதைக் குரல்
பதிவின்(sound/voice recording) வழியே கேட்டுதான் இவ்வெதிர்வினையை
எழுதுகிறேன். ஒருவேளை அவர்கள் கூறிய கருத்தை நான் திரித்துக்கூறுவதாக
தோன்றினால் தாராளமாக மறுக்கலாம். ஆதாரங்கள் நம்மிடையே இருக்கின்றன.
க.பாக்கியம் தனது பேச்சில் சொன்ன முதல் விடயம், கோ.புண்ணியவான் எழுதும் ஒரு
தொடரில் மலேசிய பெண் எழுத்தாளர்கள் அம்பை போன்றும் சிவகாமி போன்றும் எழுத
வேண்டும் எனச் சொன்னதாகவும். அவர்கள் வாழ்க்கைச் சூழல் வேறு நமது வாழ்க்கை
சூழல் வேறு. எனவே வாழ்க்கைச் சூழலைத்தான் படைப்பாக்க முடியும். அவர்கள்
வாழ்வை நாம் எழுத முடியாது என்றாராம். க.பாக்கியம் குறிப்பிட்டக் கட்டுரைத்
தொடரை நானும் வாசித்துள்ளேன் என்பதால் இதுகுறித்து கொஞ்சம் பேச
வேண்டியுள்ளது.
கோ.புண்ணியவான் சொன்னது தமிழக வாழ்வை எழுதுவது குறித்தல்ல. அம்பை
போன்றவர்கள் வாழ்வை எவ்வாறு கூர்ந்து பார்க்கிறார்கள் என்பது குறித்து.
அதற்கு உதாரணமாகதான் ஓர் ஆண் பாலியல் தொழிலாளர் குறித்த அம்பையின்
சிறுகதையை உதாரணமாகக் காட்டியிருந்தார். மலேசியாவிலும் ஆண் பாலியல்
தொழிலாளர்கள் உண்டு. நமது நாட்டில் அது குறித்து படைப்பிலக்கியங்களில்
பேசப்படாததை அவர் சுட்டிக்காட்டினார் அவ்வளவே. மலேசிய வாழ்வின் ஒரு பெண்
படைப்பாளி பேச வேண்டிய விடயங்கள் ஏரளமாக இருப்பதையும் ஆனால், இன்னமும் பலர்
குறிப்பிட்ட கருவை மட்டுமே சார்ந்திருப்பதையும் கோ.புண்ணியவான்
சுட்டிக்காட்டியது தவறில்லை. அது இக்காலத்தில் எழ வேண்டிய குரல்தான்.
க.பாக்கியம் போன்றவர்கள் கோ.புண்ணியவான் சொன்ன ஒன்றின் கருத்துகளைத்
திரிக்க முனைந்து அதற்கெதிராகக் குரல் கொடுப்பது போலெல்லாம் போராடுவது
வேடிக்கையானது.
க.பாக்கியத்தின் மற்றுமொரு குற்றச்சாட்டு கொஞ்சம் பழசுதான். இருந்தாலும்
அது பற்றி பேச வேண்டியுள்ளது. அதாவது மலேசியாவுக்குச் சிலர் தமிழக
எழுத்தாளர்களை அழைத்து வந்து மலேசிய இலக்கியத்தை மோசம் எனத் திட்ட
வைக்கிறார்களாம். இந்தக் குற்றச்சாட்டை ஜெயமோகன் மலேசியாவுக்கு
வந்��திலிருந்து வைத்துக்கொண்டிருக்கிறார். ஜெயமோகன் மலேசியாவில் ஒட்டுமொத்த
தமிழ் இலக்கியப்பரப்பில் வைக்கக்கூடிய நாவல் இல்லை என்றார். ஜெயமோகனின்
கூற்று ஒட்டுமொத்த தமிழக எழுத்தாளர்களின் கூற்றா என்ன? அதற்குப் பின் வந்த
தமிழவன் மஹாத்மனின் சிறுகதைகள் உலகத்தரமானவை என்றதையும் ஆதவன் தீட்சண்யா
மலேசிய இலக்கியத்தை தமிழக இலக்கியத்துடன் ஒப்பிட வேண்டியதில்லை என்பதையும்
அ.மார்க்ஸ் தொடர்ச்சியாக மலேசிய இலக்கியம் குறித்து எழுதுவதையும்
மறைத்துவிட்டு அல்லது மறந்துவிட்டு இவ்வாறான குற்றச்சாட்டை வைப்பது தன்னை
ஒரு போராட்டவாதியாகக் காட்டிக்கொள்ள அவர் எடுக்கும் முயற்சியை மட்டுமே
காட்டுகிறது. எப்படி இதுபோன்ற உண்மைகளை முன்வைக்காமல் அல்லது
கருத்தில்கொள்ளாமல் அவரால் தன் குற்றசாட்டை முன்வைக்க முடிகிறது?
நான் மீண்டும் மீண்டும் சொல்வது, உலகம் முழுக்க இருக்கின்ற தமிழ் இலக்கிய
வாசகர்களுக்கு பரிந்துரைக்க நம்மிடம் எவ்வாறான இலக்கிய விமர்சனப் போக்கு
உண்டு என்பதே. பல ஆண்டுகளாக எழுதப்பட்டு தொகுக்கப்பட்ட அனைத்தையுமே நாம்
நமது பட்டியலில் சேர்ப்பது ஆய்வுக்கும் தகவலுக்கும் உதவலாமே தவிர ஒரு
இலக்கிய ரசனைக்கான பரிந்துரைக்கு நம்மிடம் முதலில் தீவிரமான வாசிப்பு
நிகழ்ந்துள்ளதா? ( தகவல் நூலைக்கூட முறையாக வெளியிடாத உங்களிடம் அதை
எதிர்ப்பார்க்க முடியாதுதான்) தீவிரமான வாசிப்பின் வழி ஒவ்வொரு காலத்திலும்
நாம் முக்கியமான படைப்பிலக்கியவாதியையும் படைப்பிலக்கியத்தையும் அடையாளம்
காட்டியுள்ளோமா? அது குறித்த நமது கருத்தை விரிவாக வெளியிட்டுள்ளோமா? தரம்
என்றால் ஏன் என்றும் தரம் இல்லை என்றால் ஏன் என்றும் விவாதிக்க முன்
வந்துள்ளோமா? இவையெல்லாம் நிகழாத நமது நாட்டு இலக்கியச் சூழலில் கையில்
கிடைப்பதை வாசித்துவிட்டு கருத்து சொல்ல அவரவருக்கு உரிமை உண்டு. அதை ஏற்க
வேண்டும் என்பதல்ல என் வாதம். அதற்கு எதிர்வினையாற்ற கொஞ்சம் கூட உழைப்பைச்
செலுத்தி வாசித்து , "இவையெல்லாம் தரமானது" எனச்சொல்ல வக்கில்லாமல் ...
சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பதன் மூலம் ஆகப் போவதில் ஒன்றும் இல்லை.
அதே நிகழ்வில் நான் தனேந்திரன் தலைமையில் சக்தி அறவாரியம் மூலம் வெளியீடு
கண்ட நூல்கள் குறித்து கூறியதற்கும் கா.பாக்கியம் விளக்கம் கொடுத்துள்ளார்.
சில மாதங்களுக்குப் பிறகாவது அவருக்குத் தன் நிலைபாட்டைச் சொல்ல நேரம்
கிடைத்துள்ளது. அவர் வெளியிட்ட சொற்களின் வழி அவர் நிலைபாடு இப்போது
தெளிவாகப் புரிகிறது. அதாவது 'சக்தி அறவாரியம்' செய்தது மாபெரும் சாதனை.
மலேசிய இலக்கிய வரலாற்றில் இதுபோல நடந்ததில்லை. என்பது கா.பாக்கியத்தின்
அவதானிப்பு.
மிகத்தெளிவாகச் சொல்வதென்றால்,ஒரு தமிழ் எழுத்தாளனின் நூல் நாடு முழுதும்
செல்வதற்கான வழிவகைகளைச் செய்யாமல்... டேவான் பஹாசா போன்ற தமிழில் அரசு
சார்புடைய ஒரு நிறுவனம் மூலம் தொடர்ச்சியான நூல் வெளியீடுகள் நடக்காமல்...
எப்போதுமே ஒரு அரசியல்வாதியின் தயைவை நாடிக்கொண்டு... அவன் கொடுக்கும்
திகதியிலும்... அவன் நிர்ணயிக்கும் இடத்திலும் நூல் வெளியீட்டை
வைத்துக்கொண்டு... நூல் வெளியீட்டில் நூலை எழுதிய எழுத்தாளன் ஒரு வார்த்தை
பேசாமல் அரசியல்வாதிகளே தங்கள் பிரசாரத்தைச் செய்துகொண்டு...
நூலைப்பதிப்பிக்கும் உரிமை படைத்த அறவாரியம் முழு சுதந்திரமாக சம்பந்தம்
இல்லாத சாமியார்களின் ஆசியுரையை இணைத்துக்கொண்டு... கூட்டம் சேர்ந்தது...
பணப்பை நிரைந்தது ... மாலை விழுந்தது ... அப்பாடா மலேசியாவுல எலக்கியம்
வளந்துடுச்சி என புலங்காகிதம் அடையலாம் என்கிறார்.
அவ்வாறென்றால் அந்த அறிய கருத்தை மறுக்க நான் யார்? நல்லது. அதையே
தொடர்ந்து செய்யுங்கள்.
ஆக மொத்தத்தில் கருத்துகள் ரீதியிலும் வெளியிடப்பட்ட தொகுப்பின்
அடிப்படையிலும் நிகழ்ந்துள்ள தவறுகளை இளம் தலைமுறை எழுத்தாளர்கள்
புரிந்துகொள்வார்களேயானால் இது போன்ற அமைப்புகளின் வெற்று கோஷங்களிலிருந்து
விடுபட்டு தனித்து செயல்படலாம்.
|
|