முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு
     
  சுவடுகள் பதியுமொரு பாதை... 24
- பூங்குழலி வீரன் -
 
 
 
 

சூரியனைக் காண விளக்குகள் தேவைப்படுவதில்லை - கவிஞர் கலாப்ரியா

எழுபதுகளில் எழுதத் தொடங்கிய கலாப்ரியா தமிழின் நவீன கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். சோமசுந்தரம் என்பது கலாப்ரியாவின் இயற்பெயர் ஆகும். இவர் இளம் வயதில் எம்.ஜி.ஆர் இரசிகனாய் திமுக தொண்டனாக தீவிரமாக இயங்கினார். சோமசுந்தரம் வண்ணநிலவனின் கையெழுத்துப் பத்திரிக்கையான 'பொருநை'யில் கவிதை எழுதும் போது தனக்குத் தானே 'கலாப்ரியா' என்று பெயர் சூட்டிக் கொண்டார். பின்னர் கசடதபறவில் கவிதைகள் வெளிவரும்போது அவர் கூர்ந்து கவனிக்கப்பட்டார். 'கசடதபற'விற்கு பின் வானம்பாடி, கணையாழி, தீபம் ஆகிய இதழ்களில் எழுதினார்.

பாலுணர்வு வெளிபாடுகளும், சில வேளைகளில் வன்முறையும் கலாப்ரியாவின் கவிதைகளில் கொஞ்சம் தூக்கலாக இருக்கிறது என்று சிலரும், இது அவரது கவிதை மாந்தர்கள் வாழ்வை ஒட்டியது என்று சிலரும் அபிப்பிராயப்படுவதுண்டு. நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வங்கிப் பணிகளுக்கு இடையில் தன்னை சுற்றி நிகழும் விஷயங்களை கவிதைகளில் பதிவு செய்து வருகிறார் 'கலாப்ரியா'. வெள்ளம் (1973), தீர்த்தயாத்திரை (1973), மற்றாங்கே (1980), எட்டயபுரம் (1982), சுயம்வரம் மற்றும் கவிதைகள் (1985), உலகெல்லாம் சூரியன் (1993), கலாப்ரியா கவிதைகள் (1994), கலாப்ரியா கவிதைகள் (2000), அனிச்சம் (2000), வனம் புகுதல் (2003) எல்லாம் கலந்த காற்று (2008), உருள் பெருந்தேர் (2011) கட்டுரைத்தொகுப்பு, நான் நீ மீன் (2011) கவிதைகள் போன்றவை கலாப்ரியாவின் படைப்புகளில் சில.

எந்தப் புத்தகத்தைப்
படித்தாலும்
நமக்குள் இருப்பதுதான்
புத்தகத்தில்
எழுதியிருக்கிறது
அதை மீறி ஒன்றுமில்லை. - நகுலன்-

மேற்கண்ட கவிதை மிக எளிமையானது. நான் இங்கு பகிர்ந்து கொள்ளப் போகும் கவிதையும் ஏறக்குறைய இதே சாரம்சத்தைத் தழுவியதொன்றைப் பற்றித்தான் பேசுகிறது. உலகின் யதார்தங்களை மறுத்து நாமே உருவாக்கியவை நம்மை அடிமையாக்கி வைத்திருக்குமொரு காலகட்டத்தில் வாழ்ந்தபடி இருக்கும் நமக்கு இது குறித்தெல்லாம் எந்தவொரு அக்கறையும் இல்லை. அப்படி கேட்பவனை மனப் பிறழ்வு அடைந்தவன் என்றும் பைத்தியம் என்றும் அழைத்துக் கொள்கிறோம் அவையெல்லாம் அப்படி சொல்பவர்களுக்குத்தான் அதிகம் இருக்கிறது என்பதை அறியாமலே. ஒவ்வொரு தலைமுறையையும் புதிதாக சிந்திக்க விடாமல் இருப்பதைக் கட்டிக் கொண்டு அழுகிற மனநிலையை நாம் உருவாக்குகிறோம். 3 வயதிலேயே பள்ளிகளில் புத்தகத்தில் இருப்பதை மட்டும் மீண்டும் மீண்டும் படிக்கச் சொல்லி பிள்ளைகளைக் காயடித்து விடுகிறோம்.

குழந்தைகளின் கையிலிருந்த புத்தகங்களைப் பார்த்து
புத்தகங்களே சமர்த்தாயிருங்கள்
குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்றான்

புத்தகங்கள்தான் இன்று குழந்தைகளைக் கிழித்து கூறு போட்டு கொண்டிருக்கின்றன. 3 வயது குழந்தைக்கு எதற்கு புத்தகம். இப்பொழுதெல்லாம் புத்தகங்களைக் கிழித்து விடாதீர்கள் என குழந்தைகளை நாம் கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. புத்தகங்களைப் பார்த்து தான் நாம் கெஞ்ச வேண்டியிருக்கிறது குழந்தைகளை ஒன்��ும் செய்து விடாதீர்கள் என்று. எல்லாவற்றையும் ஒரு நிகழ்வென கருதும் கவிஞனுக்குக் குழந்தைகளின் வலி புரிந்திருக்கிறது.

குழந்தைகளே பாடப் புத்தகங்களாக இருக்கிறார்கள்
அவர்கள் கையில் ஏன் காகிதக் குப்பைகளைத் தருகிறீர்கள்?
உங்கள் புத்தகங்கள் கண்களைத் திறப்பதில்லை
ஊற்றுக் கண்களைத் தூர்த்து விடுகின்றன

நாம் வெறுத்து ஒதுக்கி, வரட்சியாக்கும் அனைத்தையும் குழந்தைகள் ஆச்சரியத்துடன் கையிலெடுத்து முத்தமிடுகிறார்கள். அதில் தமது எச்சிலை ஒழுகவிட்டு உயிர்ப்பிக்கிறார்கள். ஒன்றின் உருவாக்கத்திற்குப் பின்னணியிலுள்ள இயற்பியல் கட்டமைப்பைப் பொருட்படுத்தும் நம்முடைய பார்வைகளை அகற்றி, அதிலொரு வண்ணத்துப்பூச்சி விட்டுச் சென்ற வர்ணம் இருப்பதைப் பற்றிப் பேசுகிறார்கள். குழந்தைகளின் கண்களின் வழியாக உலகைத் தரிசிக்கும் போதெல்லாம் மனம் சில்லிடுகிறது என்கிறார் தனது தீர்ந்துபோகாத வெண்கட்டிகள் நூலில் கே. பாலமுருகன்.

குழந்தைகளோடு நாம் செலவிடும் நேரங்கள் இப்போது அருகிவிட்டன. நாம் இப்போது அவர்களுக்கு மணலையும் களிமண் பொம்மைகள் செய்வதையும் பட்டங்கள் விடுவதையும் கற்றுக் கொடுப்பதில்லை. புத்தகங்களை அள்ளி அள்ளி திணித்து அவர்களை வாந்தி எடுக்க வைத்துக் கொண்டிருக்கிறோம். புத்தகத்திலே பார்த்து புத்தத்திலே படித்து அதிலே எழுதி வாழ்வியல் தொடுதலின்றி வாடிப் போய்க் கொண்டிருக்கின்றன குழந்தைச் செடிகள். இன்றைய நிலையில் வாழ்வின் யதார்த்தம் குறித்து நாம் குழந்தைகளிடத்தில் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம் இருக்கிறது. தொட்டு உணர்ந்து பரவசப்படுத்தப்பட வேண்டியவர்கள் குழந்தைகள் என்பதை முதலில் நாம் உணர வேண்டும்.

ஒவ்வொரு பூவும் பாடப் புத்தகமாக இருப்பதை
நீங்கள் அறிவதில்லை.

மிக உண்மையான வரிகள் இவை. மிகப் புதியதாய்ப் பூத்து மணம் பரப்பி வாழ்வின் முக்கியத் தருணங்கள்தோரும் உடன்வரும் பூ ஒரு குறுகிய காலகட்டமே தனது வாழ்நாளைக் கொண்டிருக்கிறது. ஆனால், வாழ்கிற குறுகிய தருணங்களிலும் தனக்கெனகொரு தனிச்சிறப்போடு வாழ்கிறது பூ. நாள்தோறும் நொடிநோறும் குழந்தைகளைக் படிக்கச் சொல்கிறோம். ஆனால், எதையுமே நாம் பழக்கப்படுத்துவதில்லை. ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா’ எனக் கேட்க மட்டுமே நமக்குத் தெரிந்திருக்கிறது. புத்தகங்கள் எல்லாம் தந்துபோகும் என நாம் நினைக்கின்றோம். காகிதம் என்பது எழுத்துகள் எழுதப்பட்டிருந்தாலும் காகிதம் என கன்னத்தில் அறைந்து இக்கவிதை சொல்கிறது.

உங்களுக்குக் கண்ணீர்த் துளிகளைப்
படிக்கத் தெரிந்திருந்தால்
நீங்கள் மனிதனின் சாரத்தை அறிந்திருப்பீர்கள்

நாம் புத்தகங்களைப் படிக்கின்ற சமுதாயமான பிறகு வாழ்வில் இழந்து நிற்பது ஏராளம். அதை மிக நுட்பமாக உணர்ந்துள்ள கவிஞர் தனித்து பேசும் ஒரு கவிதையைப் பதிவு செய்தவர் ஆகிறார். வெற்றிகளையும் அழகியலையும் புறந்தள்ளிவிட்டு தோல்வியின் பதிவுகளை எந்தவொரு சமரசமுமின்றி பதிவு செய்திருக்கிறார். எல்லாரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என வாதமிட்டபடி இருக்கும் ஒன்றை பெரும்பாலும் வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்டபிறகு பிறகு அதையே யதார்த்தம் என கடைப்பிடிக்கத் தொடங்குகிறோம். அதனால், ஒவ்வொரு ஒவ்வொரு தலைமுறைக்கும் இடையே மிகப்பெரும் வேறுபாடுகள் ஏற்பட்டு இடைவெளிகளை நிரப்ப வழியின்றி வாழ்நாட்களை கடத்தியபடி இருக்கிறோம்.

உங்கள் புத்தகங்கள் விளக்குகளாக இருக்கின்றன.
சூரியனைக் காண விளக்குகள் தேவைப்படுவதில்லை.

கலாப்ரியாவின் இக்கவிதை காலத்திற்கு மிகத் தேவையான ஒரு கவிதையாக விளங்குகிறது. மலேசியாவில் கற்றல் கற்பித்தலை மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் ஏன் என்ற கேள்விக்கு இக்கவிதை நல்லதொரு பதில் ஒன்றினை இக்கவிதை வழங்குகிறது. மீண்டும் மேல்குறிப்பிட்டுள்ள நகுலனின் கவிதையைப் படித்து பாருங்கள். உங்களுக்கும் விளங்கலாம் காலத்தின் தேவை எதுவென.

அந்த முழுக்கவிதை இதுதான்.

புத்தகம்

பித்தன் மழைக்காகப் பள்ளிகூடத்தில் ஒதுங்கினான்

குழந்தைகளின் கையிலிருந்த புத்தகங்களைப் பார்த்து
புத்தகங்களே சமர்த்தாயிருங்கள்
குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்றான்

அவன் மேலும் சொன்னான்...

குழந்தைகளே பாடப் புத்தகங்களாக இருக்கிறார்கள்
அவர்கள் கையில் ஏன் காகிதக் குப்பைகளைத் தருகிறீர்கள்?
உங்கள் புத்தகங்கள் கண்களைத் திறப்பதில்லை
ஊற்றுக் கண்களைத் தூர்த்து விடுகின்றன

காகித ஓடங்களை நம்பி இருப்பவர்களே!
நீங்கள் எப்படி அக்கரை போய்ச் சேர்வீர்கள்?

இதோ! இரவு பகல் என்ற ஏடுகள்
உங்களுக்காகவே புரளுகின்றன

நீங்களோ அவற்றைப் படிப்பதில்லை
இதோ உண்மையான உயிர் மெய் எழுத்துக்கள்
உங்கள் முன் நடமாடுகின்றன
நீங்களோ அவற்றைக் கற்றுக் கொள்வதில்லை

ஒவ்வொரு பூவும் பாடப் புத்தகமாக இருப்பதை
நீங்கள் அறிவதில்லை.

நீங்கள் நட்சத்திரங்களைப் படிக்க கற்றிருந்தால்
உச்சரிக்க முடியாத எழுத்துக்களில்
அதிகமான அர்த்தம் இருப்பதை அறிந்திருப்பீர்கள்

நீங்கள் மின்னலின் வாக்கியங்களை
வாசிக்க முடிந்திருந்தால்
ஒளியின் ரகசியத்தை அறிந்திருப்பீர்கள்,

உங்களுக்குக் கண்ணீர்த் துளிகளைப்
படிக்கத் தெரிந்திருந்தால்
நீங்கள் மனிதனின் சாரத்தை அறிந்திருப்பீர்கள்.

எழுத்துக்களால் அல்ல
காயங்களால் கற்பதே கல்வி
என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

உங்கள் புத்தகங்கள் விளக்குகளாக இருக்கின்றன.
சூரியனைக் காண விளக்குகள் தேவைப்படுவதில்லை

(குறிப்பு: கலாப்பிரியா பற்றிய தகவல் விக்கிபீடியாவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள தகவல்கள் துணைகொண்டு எழுதப்பட்டது.)

   
     

உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | Back to Top
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768