முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு
     
  காவியத் தமிழே கணினியில் பேசவா... 3
- மலாக்கா முத்துக்கிருஷ்ணன் -
 
 
 
 

கணினி வைரஸ் காதல் வைரஸ்

மனிதனை இரண்டு வகையான வைரஸ்கள் தாக்குகின்றன. அவனுடைய உடலைத் தாக்குவது ஒரு வகை. அதற்கு காய்ச்சல் வைரஸ் என்று பெயர். அவனுடைய உள்ளத்தைத் தாக்குவது மற்றொரு வகை. காதல் வைரஸ் என்று பெயர்.

காய்ச்சல் வைரஸைவிட, காதல் வைரஸ் சற்றே காட்டமானது. மகா மோசமானது என்று சொல்வதில் கொஞ்சம் இரக்கம் காட்டுவோம். கதவைத் தட்டாமலேயே, வீட்டுக்குள் நுழையும் அழைக்கப்படாத ஒரு விருந்தாளி. மதம் பிடித்த யானை தெரியும்தானே.

அந்த மாதிரி இழுத்துப் போட்டு துவைத்து, ஈரம் காய்வதற்கு முன்பே ’ஆள் அட்ரஸ்’ இல்லாமல் போய்விடும். மாயஜால வித்தைகள் அதற்கு அத்துப்படி. அப்புறம் உள்ளத்தின் ஓரங்களில் ஆழமான குழிகளைத் தோண்டி, அவற்றுக்குள் லேசான அமோனியா அமிலத்தை ஊற்றிவிடும். அலைச்சலின் உலைச்சல்களுக்கு விளைச்சல் பார்த்துவிட்டுப் போகும் ஒரு பேசா மடந்தை. அது ஒரு நகல் பெயர்.

காதல் வைரஸ் தாக்கியவர்களைப் பார்த்தாலே தெரிந்துவிடும். சமயங்களில் கொஞ்சமாகத் தாடி வளர்த்து இருப்பார்கள். போகப் போக தனிமைச் சிறைக்குள் காம்போதி ராகம் கேட்கும். அங்கே பாரிஜாதச் சுரங்களைத் தேடிக் கொண்டு இருப்பார்கள்.

காய்ச்சல் வைரஸுக்கு மருந்து மாத்திரை இருக்கிறது. மனிதனைத் தாக்கும் உயிரியல் வைரஸ்கள் உடலைத் தளர்த்துகின்றன.

ஆனால், காதல் வைரஸ் இருக்கிறதே அதற்கு மருந்தும் இல்லை. மாத்திரையும் இல்லை. முடிந்தவரை அந்த வைரஸ் நம்முடைய உடலுக்குள் நுழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆக, அதனிடம் கொஞ்சம் பத்திரமாக இருக்கப் பழகிக் கொள்ளுங்கள். சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன். சரியா.

கணினியைத் தாக்குவது ஒரு வகையான நச்சு அழிவி. மனிதனால் உருவாக்கப்படுவது. கணினியைத் தாக்கும் வைரஸ்கள், கணினியின் சேமிப்பில் இருக்கும் ஆவணக் கோப்புகளை அழிக்கின்றன. தரவுகளை நாசம் செய்கின்றன. தரவு என்றால் Data.

கணினி வைரஸ் என்பதை மனிதர்களைத் தாக்கும் கிருமிகள் என்று நினைக்க வேண்டாம். அவை சின்ன மென்பொருட்கள் அல்லது சின்ன Program - நிரலிகள். இவை கணினிக்குள் நுழைந்ததும் நாம் சேகரித்து வைத்திருக்கும் செய்திகள், படங்கள், ஆவணங்கள், செயலிகள் போன்றவற்றை அழித்துவிடும்.

அதனால் அவற்றுக்கு தமிழில் அழிவி என்று பெயர். கணினிகள் செயல்படுவதற்கு செயலிகள் Programs தேவை. இந்தச் செயலிகளை எழுதும் கணினி நிபுணர்களே இந்த அழிவிகளையும் எழுதுகிறார்கள். தங்களுடைய திறமையைக் காட்ட வேண்டும் என்பதற்காக மற்றவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்கள்.

எந்த நேரத்தில் அழிவிகள் உங்கள் கணினியைத் தாக்கும் என்று தெரியாது. அதனால் உடனடியாக Anti Virus தடுப்பு நிரலியை வாங்கி கணினியில் பதித்துக் கொள்ளுங்கள். வெள்ளம் வருவதற்கு முன்பாக அணையைப் போடுங்கள்.

Avira, Kaspersky, Norton Anti Virus போன்ற தடுப்பு நிரலிகளின் சந்தாத் தொகை ஆண்டு ஒன்றுக்கு RM60. Avira, AVG, Avast போன்ற இலவச தடுப்பு நிரலிகளும் உள்ளன.

அவற்றின் இணையத் தளங்களுக்குச் சென்று இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Google தேடல் இயந்திரத்தில் அவற்றின் பெயர்களைத் தட்டச்சு செய்யுங்கள். சரியான இணையத் தளங்களி��் முகவரிகள் கிடைக்கும். அடுத்து ஒரு முக்கியமான விஷயத்திற்கு வருகிறேன்.

உங்கள் கணினி நச்சு அழிவிகளால் (Virus) பாதிக்கபட்டு இருந்தால் கீழ்க்கண்ட பிரச்னைகள் அல்லது அறிகுறிகள் தென்படலாம்.

• கணினியின் வேகம் குறைந்து கொண்டே வரும். (Very slow on computer speed).
• கணினி அடிக்கடி செயல் இழந்து போகும். (Computer Failure).
• கணினி அடிக்கடி தானாகவே அடைத்துக் கொள்ளும். அப்புறம் தானாகவே மீண்டும் இயங்கும். (Automatic Restart).
• கணினிக்கும் இருக்கும் நிரலிகள் (Computer Applications) சரிவர இயங்கா. குறுவட்டுகளைப் பயன்படுத்த முடியாது. (Disks, Disk drives will not be able to use.)
• ஆவணங்களை சரியாக முறையாக அச்சிட முடியாது. (Cannot print documents correctly.)
• அடிக்கடி தேவை இல்லாத பிழைச் செய்திகள் (Error Message) வரும்.
• அண்மையில் திறந்த ஆவணங்களுக்கு இரண்டு இரண்டு விரிவுகள் (Double extension) தோன்றலாம்.
• எந்த ஒரு காரணமும் இன்றி நச்சு நிரல் எதிர்ப்பி (Anti Virus Software) செயல் இழந்துவிடும். அதை மீண்டும் இயக்குவது கடினமாக இருக்கும்.
• நீங்கள் உருவாக்காத புதிய பணிக் குறிகள் (Short Cuts) திரைமுகப்பில் காணப்படும். அவை தேவை இல்லாமல் வினோதமான ஒலிகள் கேட்கும்.
• உங்கள் கணினியில் உள்ள முக்கியமான நிரலிகள் உங்களுக்குத் தெரியாமலேயே நீக்கப்பட்டு இருக்கும். (Important files are removed without your permission).
• எந்த ஒரு காரணமும் இல்லாமல் கணினியின் நினைவகக் கொள்ளவு குறைந்து போகும். (The computer's memory Reduced without any reason).
• வினோதமான செய்திகள் திரையில் தோன்றும். (Strange news appear on screen).
• வினோதமான கோப்புகள் கோப்புறைகளில் காணப்படும். (Strange files are in folders).
• உங்களுடைய கோப்புகளில் சில உங்களுக்குத் தெரியாமலேயே நகல் எடுக்கப்பட்டு இருக்கும். (Unbeknown to you, some of your files will be copied.)

மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால், உங்களுடைய கணினி வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த விளக்கம் போதும் என்று நினைக்கிறேன்.

சரி, அடுத்து தொட்டுக் கொள்ள கொஞ்சம் ஊறுகாய். அப்போது எனக்கு வயது 19. முதல் முறையாக காதல் வைரஸ் தாக்கியது. கொஞ்சம் பலகீனமான வைரஸ். இருந்தாலும் அப்போதைக்கு பெரிசு.

ஆறாம் படிவ மாணவிக்கு கணக்கு "டியூஷன்" சொல்லிக் கொடுக்கும் போது உருவாகிய மோகனத் திவளைகள். அந்தக் காலத்து மரபுப்படி தோல்வியில் போய் முடிந்தது. அவள் மலை ஆழத்துப் பெண். அடியேன் ஒரு தமிழ்ப் பையன். இதுதான் எங்களுக்குள் இருந்த பாகுபாடு. வேறு எந்த பாவத்தையும் நாங்கள் செய்யவில்லை. இரண்டு பேருக்கும் பல நாட்களுக்கு தூக்கம் இல்லை. ஒரே அழுகை மயம். சில வாரங்கள் சாப்பிட முடியவில்லை. வேதனையான நினைவுகள். ஓடிப் போக திட்டம் போட்டோம். அறியாத வயதில் புரியாத கோலங்கள். நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த நினைவுகள் நெஞ்சத்தில் நீர் இன்றும் கோர்த்து நிற்கின்றன.

அந்தப் பெண்ணும் இந்தியாவிற்குப் போய்ப் படித்து ஒரு மருத்துவரானார். இப்போது நான்கு சிறுசுகளுக்கு பாட்டி. சில ஆண்டுகளுக்கு முன் சந்தித்துப் பேசினோம். இப்போதும் கைப்பேசியில் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வார். சமயங்களில் பண உதவியும் செய்து இருக்கிறார். என்னவோ தெரியவில்லை. அவருடைய இதயத்தில் ஒரு காணி நிலத்தை ஒதுக்கி வைத்து இருக்கிறார். உண்மையைச் சொல்வதில் தப்பு இல்லை.

அடுத்து வந்தக் காதல்தான் இன்னும் நிலைத்து நிற்கிறது. வருவது எல்லாம் நன்மைக்கே என்று சொல்வார்கள். அதுவும் ஒரு வகையில் நல்லதுதான். இல்லை என்றால் அமேசான் காட்டு தேவதை கிடைத்து இருக்காது.

பழைய மெல்லிய காதலைப் பற்றி (Infatuation) மனையிடம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னாலேயே சொல்லிவிட்டேன். அவர் லேசாக சிரித்துக் கொண்டே ‘மனித வாழ்க்கையில் அது எல்லாம் சின்னக் கொசுக்கடி. தூக்கி வீசி விட்டுப் போங்கள். நீங்கள் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. உலகத்தில் வாழும் அத்தனை பேரும் கல்யாணத்திற்கு முன் யாரையாவது, சம்பந்தமே இல்லாமல் காதலித்து இருப்பார்கள். அது இயற்கையின் நியதி. உடல்கூறுகளில் உறங்கிக் கிடக்கும் ஒரு நீதி’ என்றார். புருசனைப் புரிந்து கொண்ட நல்ல ஒரு தேவதை. நன்றி.

காதல் வைரஸ், தூக்கத்தைக் கெடுத்து தொண்டை வரை துக்கங்களை அடுக்கி வைத்து பாதை போட்டுச் செல்லும் ஒரு ஜென்மக் கடாட்சம். சாகும் வரை அழியாத கோலங்களைப் போட்டு அழகு பார்க்கும் நல்ல ஒரு துர் மோகனம். வேறு எப்படி திட்டுவதாம். மீண்டும் சந்திக்கிறேன்.

   
     

உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | Back to Top
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768