முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு
     
  காமேக் புகான் ஓராங் சிதோக்... 23
- நோவா -
 
 
 
 

பெண் மது

சரவாக் என்பது நம் தீபகற்ப மலேசியாவை விட விசாலமானது. நமது பணிகளுக்கிடையே ஒவ்வொரு இடத்தையும் போய் பார்ப்பது என்பது அவ்வளவு சுலபமானது அன்று. இருந்தும் அதற்கான ஆவல் மட்டும் அடங்கவில்லை. ஒவ்வொரு பயணத்திலும் நேரமும் சூழலும் மாறுபடுவதால் எல்லாமே புதிதாய் தோன்றுகிறது. சரவாக்கில் நதிகள் அதிகம் இருப்பது போலே மலைகளும் அதிகம். அதோடு மட்டுமின்றி மலையேறுவது எனக்கு பிடித்தமான ஒன்றாதலால் சிறிது நீண்ட விடுப்பு வந்தாலே எதாவது ஒரு மலையை ஏற தொடங்கி விடுவேன். ஆனால் இம்முறை மலை பயணத்தில் என் வாழ்வின் மூன்று நாள்கள் இரண்டு இரண்டு இரவுகள் ஈபான் குடும்ப உறுப்பினராவே வாழ ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்தது. இதற்கு காரணமான என் நண்பர் கனகராஜா @ கண்ணாவுக்கு தான் நன்றி தெரிவிக்க வேண்டும்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ஒரு நான்கு நாட்கள் தொடர்ந்தாற்போல் விடுமுறை வந்ததில் எனக்கு என்ன செய்யலாம் என்று தெரியாதால் வழக்கம் போல வீட்டை சுத்தப்படுத்தி கொண்டிருந்தேன். அப்போது கண்ணா என்னை அழைப்பேசியில் அழைத்து ஏதும் விடுமுறை திட்டம் இருக்கிறதா என வினவ, நானும் இல்லை என சொல்ல அப்போதே ஒரு புது திட்டம் உருவானது. கண்ணாவின் சக நண்பர் ஜேம்ஸ் சார்ந்துள்ள மலையேறும் சங்கம் இம்முறை பெத்தோங் வட்டாரத்தில் உள்ள சடோக் என்னும் மலையை ஏற திட்டம் தீட்டிருந்தது. எனவே பெரிய கூட்டத்துடன் மலையேறலாம் என்ற எண்ணத்தில் நானும் இந்த பயணத்துக்கு ஒப்புக்கொண்டேன். ஒரே மணி நேரத்தில் காரில் செரியான் சென்று சேர்ந்து, அங்கிருந்து நானும் கண்ணாவும் 4 மணி நேரத்தில் பெத்தோங் சென்று சேர்ந்தோம்.

கூச்சிஙிலிருந்து சென்றால் பெத்தோங் சீபூவுக்கு முன்னாலேயே உள்ள ஒரு சின்ன பட்டணம். சீபூ பயணத்தின் போது சென்ற அதே பாதையில் தான் இம்முறை பயணமும் தொடர்ந்தது. பேருந்தில் பயணம் செய்த போது தூங்கிவிட்டேன், ஆனால் இம்முறை தூங்கவில்லை. நான் தூங்கியதும் கண்ணாவும் என்னைப்பார்த்து தூங்கிவிட்டால் என்ன ஆவது? எனவே இருவரும் கதை பேசி கொண்டே பெத்தோங் வந்து சேர்ந்து விட்டோம். தூரப்பயணங்களில் கண்ணாவுக்கு அனுபவம் அதிகம். எனவே அவரை வழிக்காட்டியாக கொண்டு எங்கு வேண்டுமானாலும் போகலாம். அவரின் நண்பர் ஜேம்ஸை நான் பார்த்ததில்லை. நாங்கள் தங்கவிருந்தது ஜேம்ஸ் மனைவி மேரி குடும்பத்தாரின் நீண்ட வீடு. ஜேம்ஸும் அவர்தம் மனைவியும் ஆசிரியர்கள் தாம். ஜேம்ஸ் கப்பிட்காரர். மேரியின் ஊர் பெத்தோங். திருமணத்துக்கு பின் இங்கே ஆண் பெண் வீட்டாரோடு சார்ந்த்திருப்பது இங்கே வழக்கம்.

இவர்களின் கம்பத்துக்கு செல்ல வேண்டும் என்றால் ஒரு குன்றை தாண்டி செல்ல வேண்டும். எனக்கு காரில் குன்று ஏறுவது மிகவும் பயம் தரக்கூடிய ஒன்று. பயணம் நெடுக்க நான் பயணியாகவே வந்தேன். கண்ணா தான் ஓட்டுனராக அவதாரம் தரித்திருந்தார். சற்று முன் சொல்லப்பட்ட குன்றருகில் வந்ததும் நண்பர் ஜேம்ஸ் அவரது நான்கு சக்கர வண்டியில் வந்து எங்களை அழைத்து சென்றார். பெரிய சாலையிலிருந்து அந்த கம்பத்துக்கு செல்ல அரை மணி நேரம் பிடித்தது. ஜேம்ஸ் நல்ல கலகல டைப். பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் போனது தெரியவில்லை. அவர் கம்பதுக்கும் வந்து சேர்ந்து விட்டோம். அவரது கம்பம் இருந்தது ஒரு பெரிய நதியின் அக்கரையில். நாங்கள் இருந்தது இக்கரையில். இரண்டுக்கும் நடுவே இரும்பிலான தொங்கு பாலம். அதில் மிதிவண்டி, மோட்டார் வன்டியை தவிர்ந்து பெரிய வண்டிகள் போக முடியாது. எனவே காரை இக்கரையில் வைத்து விட்டு அக்கரைக்கு நடந்தே சென்றோம். பெரும்பாலானவர்கள் தத்தம் கார்களை இக்கரையில் வைத்து விட்டு செல்வதையே வழக்கமாக கொண்டிருந்தனர். எனவே கார்களை வைக்கவே ஒரு தனி இடம் இக்கரையில் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பழக்கத்தை நான் கண்டுணர்வது இரண்டாவது முறை. இதே மாதிரியான சூழலை கப்பிட் ரூமா பஞ்சாங் புண்டோஙிலும் பார்த்தேன். இது ஒரு பாரம்பரிய கட்டமைப்பாகவும் இருக்கலாம்.

நாங்கள் ஜேம்ஸ் மனைவியின் ரூமா பஞ்சாங்க்கு சென்று சேர்ந்த போது ஏறத்தாழ மதியம் மணி 5 இருக்கும். எங்கள் வருகையை ஜேம்ஸின் மனைவி மேரி இனிதே வரவேற்றார். கப்பிடில் பார்த்த அதே கட்டமைப்பு கொண்ட ரூமா பஞ்சாங். ஈபான் மக்கள் அவர்களின் இனப்பெருமையை தக்க வைத்து கொள்ள பாரம்பரியத்தை தவறாது கடைப்பிடிப்பதை என்னால் லேசாக உணரமுடிந்தது. அதோடு அந்த ரூமா பஞ்சாஙில் பெரும்பாலும் முதியவர்களும் சிறுவர்களுமே இருந்தனர். மீண்டும் ரூமா பஞ்சாங் புண்டோங் என் கண்ணில் காட்சி பிழையாகவே தெரிந்தது. அதே சூழல். இளைஞர்கள் இல்லாததால் பெருமளவு ரூமா பஞ்சாங் கலகலப்பை இழந்திருந்தது. இச்சூழல் எனக்கு ஒரு எங்கேயோ கேட்ட ஒரு குறிப்பை நினைவு படுத்தியது. அதாவது இளைஞர்கள் இருக்கும் இடத்தில் எப்போதும் மகிழ்ச்சியும் ஆரவாரமும் குடி கொண்டிருக்குமாம். முதியோர் அதிகமாய் இருக்கும் இடத்தில் கடந்த கால ரேகைகளும் அதிகமாய் படர்ந்திருக்குமாம். அவற்றுள் மகிழ்ச்சியின் சுவடுகளை விட காயங்களின் வடுகளே அதிகமாக படர்ந்திருக்குமாம். அப்படிதான் அந்த ரூமா பஞ்சாங்கும் வெறிச்சோடி போய் இருந்தது. இருந்தும் விடுமுறைகளுக்கு வீடு திரும்பும் குழந்தைகளால் அவ்வப்போது ரூமா பஞ்சாங்ஙும் உயிர்த்தெழும் என மேரியும் ஜேம்ஸும் கூறினர்.

அவ்வீட்டில் தற்போது மேரியின் அம்மா மட்டுமே உள்ளார். மேரியும் ஜேம்ஸும் அவர்தம் குழந்தைகளும் செரியான் அருகில் உள்ளனர். மேரியின் தாயார் இருந்தால் வயது 60 இருக்கலாம். ஆனால் எறும்பு போல சுறுசுறுப்பாக தோட்ட வேலைகளை கவனித்து கொண்டே இருந்தார். அவருக்கு மெலிந்த உடல்வாகு. அவருக்கு மட்டுமல்ல அங்கிருந்த எல்லாருமே அப்படி தான் இருந்தனர். பருமனான உருவத்தை பார்க்க முடியவில்லை. அதோடு மட்டுமின்றி ஆண்களை விட பெண்களே பெருமளவு இருந்தனர். சராசரியாக ஆண்களை விட பெண்களுக்கு தான் ஆயுட்காலம் அதிகம் என்பது எல்லா இனத்தாருக்கும் பொருந்தும் போலும்.

மேரிக்கும் ஜேம்ஸுக்கும் ஒரு ஜோடி பிள்ளைகள். மகளுக்கு 4 வயது. மகனுக்கு 9 வயது. இருவருமே பெற்றோரை போல கலகலப்பு. நாங்கள் சென்ற நேரம் வீட்டில் தண்ணீர் இல்லை. எனவே அனைவருமே அருகில் இருந்த ஆற்றில் குளித்து விட்டு வந்து எங்களுக்காக மேரியின் தாயார் சமைத்து வைத்திருந்த உணவை உண்டோம். சாப்பாட்டில் அவ்வளவு வித்யாசம் தெரியவில்லை.

அன்றைய இரவு நாளைய நாளுக்கான ஆரம்பமாக இருந்தது. இரவு உணவுக்கு பின் நாளைய நீண்டநாளுக்கான தேவைகளை விவரிக்க இன்னுமொரு கம்பத்துக்கு சென்றோம். அங்கே இருந்தவர்களில் ஆசிரியர்கள், ராணுவ வீரர்கள், போலிஸ்காரர்கள் என அனைவரும் கலந்திருந்தனர். நாளைய மலையேறுதலுக்கான சட்டையை அனைவருக்கும் கொடுத்தப்பின் எங்களுடைய முழுப்பெயரையும் அடையாள அட்டை எண்ணையும் வாங்கிவிட்டு சொல்லவேண்டிய விஷயங்களை சுருக்கமாக சொல்லிவிட்டு ஒரு சின்ன விருந்தோடு வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். நான் சென்ற இடமும் ரூமா பஞ்சாங் தான். ஆனால் அது கொஞ்சம் நவீனமாக இருந்தது. அந்த வீட்டாரின் கூற்று படி அந்த ரூமா பஞ்சாங் பல முறை அழகான ரூமா பஞ்சாங் என அங்கீகாரம் பெற்றுள்ளதாம். அதற்கு ஏற்றாற்போல அந்த ரூமா பஞ்சாங் ரொம்பவும் அழகாகவும் நேர்த்தியாகவும் அலங்கரிக்க பட்டிருந்தது.

இதை பற்றி பேசிக்கொண்டிருக்கையிலேயே அந்த வீட்டு பெண் அரிசியிலான மதுவை எடுத்து அனைவருக்கும் பரிமாரினாள். என்னால் இதை நிராகரிக்க முடிவில்லை. அதை அனைவரும் தாப்பாய் பெரெம்புவான் (பெண் மது) என அழைத்தனர். அதற்கான காரணத்தை அதை அருந்திய பின்னரே என்னால் அறிய முடிந்தது. சரவாக்கு வந்து விட்டு இதை கூட ருசி பார்க்கஅமல் போவது எனக்கு ஒரு பெரிய நஷ்டமாக பட்டது. போதை எதுவும் ஏற்படவில்லை. லேசான தேன் வாசனை இருந்தது. தொண்டையில் இறங்கியது ஒரு சின்ன எரிச்சல். அவ்வளவு தான். அட ச்சே இவ்வளவு தான் விஷயமா என எனக்கே சப்பென்று போய் விட்டது. மரியாதை கருதியே அதை அருந்தினேன். அதற்கு பின்னர்தான் விஷயமே எனக்கு தெரிந்தது. ஒரு சின்ன குவளையில் அருந்தினால் போதை ஏறதாம். மூன்று குவளைக்கு பின்னர்தான் போதை ஏறுமாம். நல்ல வேளை நான் தப்பித்தேன். அதோடு நாங்கள் ஜேம்ஸ் வீட்டிற்குச் சென்று விட்டோம். அன்றய இரவு நன்றாக தூங்க வேண்டும் நாளைய அலுப்பு மிக்க நாளை எதிர்க்கொள்ள...

   
     

உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | Back to Top
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768