முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு
     
  விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்... 15
- ந. பச்சைபாலன் -
 
 
 
 

கடவுளும் நானும்

“நீங்கள் ஆத்திகமா? நாத்திகமா?”

இராஜராஜ சோழன் எழுப்பிய தஞ்சைப் பெரிய கோயில் எனும் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் நுழைகிறோம். கண்முன்னே 212 அடி உயரமுள்ள கோபுரம் எனக்குள் ஆச்சரியங்களை அள்ளி இறைக்கிறது. அண்ணாந்து பார்க்கிறேன். பிரமாண்டமான கோபுரம். கோயிலைச் சுற்றி உயர்ந்து நிற்கும் சுவர்கள் அந்த இடம் கோட்டையாக இருந்ததை உறுதிப்படுத்துகின்றன. கோபுரத்திற்கு எதிரே இருந்த பதினாறுகால் மண்டத்தில் ஒரே கல்லில் வடிக்கப்பெற்ற மிகப் பெரிய நந்தி கம்பீரமாய் வீற்றிருந்தது. பிரகதீஸ்வரர் ஆலயத்தின் உள்ளே செல்கிறோம். கண்களை மூடிச் சிவபெருமானை வணங்குகிறேன். ஏதோ இனங்காண முடியாத உணர்வுகள் என்னை நனைக்கின்றன.

நான் ஆத்திகமா? நாத்திகமா? மலேசியாவிலிருந்து இலக்கியப் பயணம் மேற்கொண்டு தஞ்சைப் பெரிய கோயிலில் நுழைந்தபோது, நண்பர் என்னிடம் கேட்டதை எனக்கு நானே கேட்டுக் கொள்கிறேன். ஆத்திகம், நாத்திகம் இரண்டின் தீவிர எல்லைக்குச் சென்று விடாமல் இடையிலே நாத்திகம் கலந்த ஆத்திகமாக நான் இருப்பதாகவே உணர்கிறேன். பூசை, புனஸ்காரங்கள், சடங்குகளுக்காகக் கோயில் கோயிலாக ஏறி இறங்குவதில் எனக்கு எப்பொழுதும் நாட்டம் இருந்ததில்லை. அதற்காகக்கோயில் பக்கமே எட்டிப் பார்க்காமல் கடவுள் இல்லை என நாத்திகம் பேசித் திரிவதிலும் உடன்பாடில்லை. இது ஒரு மாதிரியான இரண்டுங்கெட்டான் நிலைதான். ஆயினும், இந்த நிலைதான் என் மனத்திற்கு உகந்த நிலையாக இருக்கிறது.

கோயிலுக்குப் போவது எனக்குப் பிடித்தமான ஒன்று. தமிழகத்தில் சென்று பார்த்த ஒவ்வொரு கோயிலும் எனைப் பரவசப்படுத்துவதாக இருந்தது. சிதம்பரம் நடராஜர் கோயில், இராஜேந்திர சோழன் கட்டிய கங்கைகொண்ட சோழபுரம், மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருப்பரங்குன்றம், பழனி முருகன் கோயில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் இப்படி ஒவ்வொன்றும் அழகிய கலைநயத்தோடு விளங்கியது. ஒவ்வொரு முறையும் கோயிலுக்குள் நுழையும்போது என் உணர்வுகள் புதுப்பிக்கப்படுவதாக உணர்கிறேன். அதற்குக் காரணமாக அமைவது எது? கலைநயம் பொருந்திய கோயில் வளாகமா? அங்கு ஆட்சி செய்யும் ஆழமான அமைதியா? நடுநாயகமாக வீற்றிருந்து நம்மை உற்றுநோக்கும் சிலைகளா?கண்ணுக்குத் தெரியாத ஏதோ மகாசக்தியோடு தொடர்பு எல்லைக்குள் வந்துவிட்டோம் என்ற உணர்வா?

சிறுவனாக இருந்தபோது, பொங்கல் சாதம் கிடைக்குமே என்பதற்காகத் தோட்டத்தில் மாரியம்மன் கோயிலுக்கு நண்பர்களோடு போவேன். சமயங்களில் பொங்கல் சாதத்துக்காக வரிசையில் நிற்பவர்களின்எண்ணிக்கை கூடிவிடும். கோயில் பூசாரி, பானையில் கையை விட்டுச் சாதத்தைப்பிசைந்து உருட்டி “வாடா, வந்திட்டுங்கான்க..” என மகா கடுப்போடு முணுமுணுத்தவாறு கையில் சாதத்தை வைத்தது இப்பொழுதும் மங்காத காட்சியாக என்னுள்ளே பதிவாகியிருக்கிறது.

என் அப்பா தமிழகத்தில் சேலத்துக்குப் பக்கமிருக்கும் வெண்ணுந்தூர் என்ற பகுதியிலிருந்து பதின்ம வயதில் மலாயா வந்தவர். வரும்போது கூடவே முருக வழிபாட்டையும் உடன் கொண்டு வந்தவர். அவர் வாழ்ந்த கிராமத்தில் முருகன் கோயிலும் வழிபாடும் இருந்திருக்க வேண்டும். வீட்டில் பூசை இடத்தில் முருகன் படத்தை வைத்திருந்தார். அப்பாவின் வழியில் நானும் முருகனை முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொண்டேன் . ஒரு மரபின் தொடர்ச்சியாக அப்பாவின் மரணத்துக்குப் பின் முருகனை வணங்கி வருகிறேன். திடீர் பாயாசம், திடீர் பலகாரம் என்பதுபோல புதிதாக முளைத்துவரும் கடவுள்களும் குருமார்களும் என்றும் என்னை ஈர்ப்பதில்லை. ‘உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன், முருகா’ என உறுதிமொழி தந்த பிறகு ஏனைய புதிய கடவுளர்களை ஏறெடுத்தும் பார்க்க மனம் ஒப்புக்கொள்வதில்லை.

கடவுளை வழிபடும் முறை எப்படி என்பது சிறுவயதில் யாரும் கற்றுக்கொடுக்கவில்லை. கோயிலுக்குப் போனால் இறைவனைக் கையெடுத்து வணங்குவது, தெரிந்த தேவாரப் பாடல்களை மனத்துக்குள் பாடுவது, கோரிக்கைகளை முன் வைப்பது. இப்படித்தான் என் வழிபடும் முறை இருந்தது. பதின்ம வயதை அடையும்போது ஏதோ உள்ளே வெற்றிடமாக இருந்ததை உணர்ந்தேன். தோட்டத்துக் கோயிலில் தீமிதி விழாவும் கொண்டாட்டமும் மற்ற இனத்தவரின் வேடிக்கை பார்க்கும் நிகழ்வாக இருந்ததால் எனக்கு நம் சமய நடவடிக்கைகளில் ஒரு வகையான ஏமாற்றமும் வெறுப்பும் ஏற்பட்டது. தீமிதி விழாவைவிட சமயச் சொற்பொழிவுகளும் தேவாரப் பாடல்களும் உண்மையான சமயம் பற்றிய புரிதலை ஏற்படுத்துமே என நம்பினேன். ஒரு முறை, ரவாங்கிலிருந்து தோட்டத்துக்கு வந்த என் நண்பன் ஆவடையார், தீமிதி திருவிழாவின்போது என் கருத்தை வாய்விட்டுச் சொல்லிவிட்டான். அவ்வளவுதான். கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் சண்டைக்கே வந்து எங்கள் இருவரையும் திட்டித் தீர்த்துவிட்டார். போதுமடா சாமி எனக் கோயிலிருந்து வீட்டுக்கு நடையைக் கட்டினோம்.

ஆயினும், என் மனத்தில் தோன்றிய கருத்துகளை மெருகேற்றி ஒரு சிறுகதையாக எழுதினேன். என் இருபத்திரண்டாவது வயதில், தமிழ் நேசனில் ‘விடிவுகள் நிச்சயம்’ என்ற தலைப்பில் அ•து அச்சேறியது. இளைஞர்கள் கூடி தோட்டத்தில் தீமிதித் திருவிழா வேண்டாம் என்ற முடிவெடுத்து அதனைச் செயல்படுத்த முனைந்த வேளையில் தோட்டத்துப் பழைய ஆத்மாக்கள் தீவிரமாக எதிர்க்கிறார்கள். தோட்ட நிர்வாகி இந்த மாற்றத்தை ஆதரிக்கிறார். அப்பொழுது, பக்கத்துத் தோட்டத்தில் நடந்த தீமிதித் திருவிழாவின் போது தீக்குழிக்குள் தவறி விழுந்த சிலர் மருத்துவனையில் சேர்க்கப்பட்ட செய்தி நாளிதழ்களில் வெளிவருகிறது. தோட்டத்தில் எதிர்ப்புக் குறைவதாகவும் தொடர்ந்து புதிய மாற்றங்களோடு சித்ரா பௌர்ணமி விழா அங்கு நடைபெற்றதாக எழுதியிருந்தேன். உண்மையில் நான் வசித்த தோட்டத்துக்குப் பக்கத்துத் தோட்டத்தில் அப்படியொரு உண்மைச் சம்பவம் நடந்தது. அது என் சிறுகதைக்கு ஆதார சுருதியாக அமைந்தது.

இன்றும்கூட கோயிலுக்குப் போகும்போது எனக்குள் சில மனத்தடைகள் என்னை வழிமறிக்கின்றன. காலணிகளைக் கழற்றும்போது அதோடு சேர்த்து என் உயிரனைய தமிழையும் கழற்றிவைத்துவிட்டு உள்ளே நுழைவதாக உணர்கிறேன். இறைவழிபாட்டுக்கு வாழும் தமிழைப் பயன்படுத்தாமல் இறந்தமொழியான சமஸ்கிரதத்தைப் பயன்படுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால், பூசை செய்வதை நான் தவிர்த்துவிடுகிறேன். தமிழ்க்கடவுள் முருகன் என்கிறார்களே. முருகனுக்குத் தமிழ் தெரியாதா? மொழி என்பதே மனிதன் படைத்ததுதானே? அதெப்படி வழிபாட்டு மொழியாக, மந்திர மொழியாக இந்த மொழிதான் என்று தீர்மானித்தார்கள்?

கோயில்கள் வெறும் பூசை மடங்களாக ஒரு குறுகிய வட்டத்துக்குள் முடங்கிபோவதும் என்னால் ஏற்கமுடியவில்லை. சமுதாயத்தின் தேவைகளுக்குப் பங்களிப்பை வழங்காமல் சமுதாயத்திலிருந்து தம்மை நாடுகடத்திக்கொள்ளும் கோயில் நிர்வாகங்கள் மீது எப்படி மதிப்பு வரும்? லட்சக்கணக்கில் வசூல் நடத்தும் கோயில்கள் பள்ளி மாணவர்களுக்கு ஏதோ பெரும் சேவை செய்வதாகக் கட்டுக்கட்டாக நோட்டுப் புத்தகங்களைத் தந்துவிட்டு ஏடுகளில் செய்தியாக இடம்பெறும் நிலை வேதனைக்குரியதாக இருக்கிறது. அந்த ஆதங்கத்தினால் ஒரு முறை இப்படி எழுதினேன்:

தைப்பூச உண்டியல்
ஏக்கமாய்ப் பார்க்கும்
ஏழைச் சிறுமி

நவீன கவிதையில் ‘கடவுள்’ என்ற நம்பிக்கை மீதான கட்டுடைப்பு என் சமகாலக் கவிஞர்களால் நிகழ்த்தப்படுகிறது. நவீன கவிதையில் கால் நனைக்கும் முயற்சியில் உள்ள என்னால் இந்தக் கட்டுடைப்பை ஏற்க முடியவில்லை. என் மன வார்ப்பும் அடிமனத்தில் இழையோடும் ஒரு மரபின் தொடர்ச்சியும் கண்ணுக்குப் புலப்படாத ஏதோ ஒரு பெரும் சக்தியின் ஆற்றலை நம்பும் மனமும் இதற்குக் காரணமாகின்றன. கட்டுடைப்பில் சிதைந்த கடவுளை மீண்டும் மறுஉருவாக்கும் செய்யும் முயற்சியில் என் மனம் ஈடுபடுகிறது இப்படி:

கடவுள் மீதான வன்முறைகள்

கூடிக்கொண்டே இருக்கின்றன
கடவுள் மீதான வன்முறைகள்

கழிவறைக் காகிதத்தில்
கடவுளின் பேரைக் கிறுக்கிக்கொண்டு
தனக்குத்தானே பேசினான் ஒருவன்

தலைதெறிக்க ஓடிவந்தவன்
கடவுள் தன்னைக் கொல்லப் பார்ப்பதாகப்
புகார் கூறினான்

தானறிந்த கடவுள்
இறந்து விட்டதாக ஒருவன்
தன்னிலை விளக்கம் தந்தான்

கடவுள் நல்ல கற்பனை என்று
கடவுள் மீது பின்னப்பட்ட சிந்தனைகளைக்
கலைத்துக்கொண்டிருந்தான் ஒருவன்

போரில் சிதிலமான கோயில் சிலைகளைப்
பூட்ஸ் காலால் உதைத்துச்
சிரித்துக்கொண்டிருந்தான் ஒருவன்

தான்தான் கடவுள் என்றும்
கடவுளின் அம்சம் தனக்கு உண்டென்றும்
மாயஜாலத்தில் நம்பச் செய்துகொண்டிருந்தான் ஒருவன்

எதையும் பொருட்படுத்தாமல்
நேர்த்திக் கடனை நிறைவேற்ற
ஒரு மனிதக்கூட்டமே
கோயிலை நோக்கிச்
சஞ்சரித்துக்கொண்டிருந்தது

தமிழகத்தில் மேல்மருவத்தூர் கோயிலுக்குப் போனபோது, பங்காரு அடிகளார் அந்தக் கோயில் வளாகத்தில் நிகழ்த்திவரும் அரிய செயல்களைப் பார்த்து வியந்துபோனேன். ஆன்மிகப் பணிகளோடு கல்வி, மருத்துவப் பணிகள் அங்குச் சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன. கோயில்தானே என உள்ளே நுழைந்தால் அங்கே, ஆதிபராசக்தி மருத்துவமனை, பொறியியல் கல்லூரி, போலிடெக்னிக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, தாதியர் பயிற்சி மையம், கணினிக்கல்லூரி, நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இலவச மருத்துவம் என அகன்ற வளாகத்தில் அற்புதப் பணிகள் நடைபெறுவதைக் காண முடிகிறது. அன்பே சிவம் படத்தில் கமலஹாசன் பாடும் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது. ‘ஆத்திகம் பேசும் அடியவர்க்கெல்லாம் சிவமே அன்பாகும். நாத்திகம் பேசும் நல்லவர்களுக்கு அன்பே சிவமாகும்’. மனிதம் மறக்காத ஆன்மிகப் பணி, பூசையில் முடங்காத புனிதப் பணி என்றால் மனம் அதைப் போற்றுகிறது.

சிறு வயது தொடங்கி இன்றுவரை சில கேள்விகள் என்னை விடாமல் துரத்துகின்றன. அவை விடைகாண முடியாத கேள்விகள். இந்த உலகின் மூலம் எது? கடவுள் என்றால் கடவுளைப் படைத்தவர் யார்? தானே ஒன்று எப்படித் தோன்ற முடியும்? இப்படிச் சிந்திக்கும்போதெல்லாம் தலை ‘வின்’னென்று வலிக்கும்.

கடவுளை நேரில் பார்த்ததில்லை. ஆயினும், எத்தனையோ சூழல்களில் அவர் என்னை நெருங்கி வந்து கடந்துபோனதாக உணரும்படி பல நிகழ்வுகள் நடந்துள்ளன. அவை வெறும் உணர்வுதானா? மனம் தானே எதையாவது கற்பித்துக்கொள்கிறதா? விடைகாண முடியாத பிரபஞ்சப் புதிர்கள்போல் இந்தக் கேள்விகளும் என்னைப��� பின் தொடர்கின்றன.

   
     

உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | Back to Top
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768