முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு
     
  அவர்களின் பேனாவில் இருந்து கொஞ்சம் மை... 7
- அ. பாண்டியன் -
 
 
 
 

மீன்கள் எல்லாம் ஒரே நிறமா?

மலேசிய இந்தியர்களில் மலாய் இலக்கியத்தையோ இலக்கியவாதிகளையோ அறியாதவர் அனேகம் பேர் உள்ளனர். ஆனாலும் இரண்டு மலாய் இலக்கியவாதிகளை பல இந்தியர்கள் பெயர் அளவிலாவது அறிந்திருப்பது மகிழ்ச்சியான தகவலாகும். இச்சிறப்புக்குறிய முதலாமவர் ஏ.சாமாட் சைட். இரண்டாமவர் டத்தோ அப்துல்லா ஹுசேன். இவ்விரு மலாய் இலக்கியவாதிகளையும் நம்மவர்கள் இருவேறு முரணான நிலையில் அறிந்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏ. சாமாட் சைட்டை பல இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை ‘பெர்சே’ போராட்டத்தையே சாரும். இப்போராட்டத்தில் பெரிதும் பேச/ஏசப்படும் டத்தோ அம்பிகாவையும் முன்னின்று வழிநடத்துபவர் ஏ.சாமாட் சைட்தான். காரணம் பெர்சே போராட்டத்தின் முன்னோடியும் இன்றைய தலைவரும் அவர்தான். அவ்வகையில் (டத்தோ அம்பிகாவுக்கு) பக்கபலமாகவும் போராட்டவாதியாகவும் செயல்படும் ஏ. சாமாட் சைட் மேல் இந்தியர்கள் (அவரது எழுத்துக்களைக் கண்ணால் கூட பார்த்திராவிடினும்) நன்மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளனர்.

இதற்கு எதிராக மலேசிய தமிழர்கள் அதிகம் வெறுக்கும் ஒரு மலாய் இலக்கியவாதியாக திகழ்பவர் டத்தோ அப்துல்லா ஹுசேன்தான். இதற்கு காரணம் 1971 ஆண்டில் இவர் எழுதிய இந்தர்லோக் என்னும் நாவலாகும். இந்நாவலை 2011-ஆம் ஆண்டில் 5 ஆம் படிவ மாணவர்களுக்கு மலாய் இலக்கிய தேர்வு நூலாக்க கல்வி அமைச்சு முடிவு செய்த பின் இவரது பேர் தமிழர் இல்லங்களில் ஒலிக்கத்தொடங்கியது. இந்நாவல் முவ்வின மக்களின் செயல்பாடுகளும் நாட்டு வளர்ச்சியில் அவர்களின் பங்கும், ஆற்றவேண்டிய கடமைகள் குறித்தும் விவாதிக்கிறது.

ஆனால், அப்துல்லா ஹுசேன் இந்தியர்கள் குறித்து விளக்கும் போது, மலாயாவுக்கு வந்த தென்நாட்டு மக்கள் அனைவரும் பறையர்கள் என்றும் அவர்கள் நாகரீகமாக வாழத்தெரியாதவர்கள் என்றும் கூறிச்செல்வது ‘மானமிகு’ தமிழ்சமுதாயத்தை தட்டி எழுப்பி போராட வைத்து விட்டது. (அது எப்படி... அப்படி!! எல்லாரையும் சொல்லலாம்... எல்லாருமா பறையர்கள்? நாங்கள்ளாம் வேறல்ல!!!)

ஹஜி தஸ்மின் தலைமையில் ‘நியாட்’ என்ற போராட்ட குழு தொடங்கப்பட்டு இப்புத்தகத்தை பள்ளிகளில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கல்வி அமைச்சுக்கு தொடர்ந்து கொண்டுசெல்லப்பட்டது. ம.இ.கா வும் வேறு சில அரசியல் கட்சிகளும் (அப்போது பத்திரிக்கையில் அறிக்கை விட வேறு விஷயம் இல்லாததால்!) இந்நாவலை மூலதனமாக்கி ஏறக்குறைய ஓராண்டு காலத்திற்கு பேர் போட்டனர். சில இளைஞர்கள் புத்தகத்தை தீயிட்டு கொழுத்தி தங்கள் ஆட்சேபத்தையும் (அறிவீனத்தையும்) வெளிப்படுத்திக் கொண்டனர். இதுவரை நாட்டில் வேறெந்த பிரச்சனையிலும் இல்லாத அளவு மலேசிய தமிழர்கள் ஒற்றுமையாகவும் வீரியத்தோடும் போராடி இப்புத்தகத்தை பள்ளி பாட புத்தகமாக்கும் அரசாங்கத்தின் முடிவை பின்வாங்க செய்து சாதனை படைத்தனர். ஆனாலும் டத்தோ அப்துல்லா ஹுசேன் மலேசிய தமிழர்களால் மறக்கவியலாத ஒரு ‘வில்லன்’ ஆகிவிட்டது துரதஷ்டமே.

டத்தோ அப்துல்லா ஹுசேன். 1923 –ஆம் ஆண்டு கெடா மாநிலத்தில் பிறந்தவர் ஆவார். பல மொழி திறன் கொண்ட இவர் பல்வேறு சூழல்களில் ��ாழ்ந்து அனுபவம் பெற்றவர். எழுதாளராக, பத்திரிக்கையாளராக, வியாபாரியாக, அரசியல் பணியாளராக, ரகசிய ஏஜன்டாக பல்வேறு தொழில்களைச் செய்த அனுபவம் இவருக்கு உண்டு.

ஜப்பானியர் ஆட்சியில், ஜப்பானிய ராணுவ முகாம்களில் பல்வேறு வேலைகளைச் செய்துள்ளார். இந்தோனேசிய புரட்சியை (இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர் தோல்வி கண்டு தாயகம் சென்ற பின் டச்சுக்காரர்கள் மீண்டும் இந்தோனேசியாவுக்குள் வர விடாமல் தடுக்க மக்கள் புரட்டி மூண்டது) முன்நின்று நடத்தியவர்களில் இவரும் ஒருவர்.

1936 முதல் தொடர்ந்து இலக்கியம் படைத்து வரும் அப்துல்லா ஹுசேன். இதுவரை 27 நாவல்களை எழுதியுள்ளார். பல சிறுகதை தொகுப்புகளும் கவிதை, கட்டுரை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். பல உலக இலக்கியங்களை மலாய் மொழிக்கு பெயர்த்து மலாய் இலக்கியத்திற்கு அறிய சேவை செய்துள்ளார். ஹமிங்வேயின் கடலும் கிழவனும் மற்றும் நகுயுப் மாஃபோஸின் ‘மிடாக் ஹேலி’ போன்ற அற்புத நாவல்கள் குறிப்பிடத்தக்கவை. மேலும், எட்டாவது தேசிய இலக்கியவாதியாக அரசாங்கத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அன்மையில் நான் படித்த இவரது சிறுகதை ‘தன்னை தொலைத்தவர்கள்’ (Dirinya yang hilang) என்பதாகும். 1971 ஆண்டு எழுதப்பட்ட இக்கதை இவரது மற்ற கதைகள் போன்றே கதையை மிக நேரடியாக சொல்லும் பாணியைக் கொண்டுள்ளது. எடுத்துக் கொண்ட கருத்தை நோக்கி மிக துரிதமாக நகரும் இவரது கதைகளில் தவிர்க்க இயலாத பிரச்சார குரல் ஆங்காங்கே கேட்கிறது.

இக்கதை, முஸ்லீம் மதத்துக்கு மாறிய ஆங்கிலேயர் ஒருவர் தன்னை முழுமையாக மலாய் பண்பாட்டு நேசராக மாற்றிக் கொள்ள விரும்புவதையும் ஆனால் எதிர்பாரா விதமாக மலாய் சமுதாயமே அதை ஆதரிக்காத நிலையையும் காட்டுகிறது.

உயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ஹஜி ஹெமில்டன் பின் அப்துல்லாவுக்கு ஒரு மாலை விருந்துக்கு அழைப்பு வருகிறது. அவரும் அவ்விருந்துக்கு செல்ல முடிவெடுக்கிறார். ஆனால் அவர் அந்த விருந்துக்கு மலாய் பாரம்பரிய உடை (எழுத்தாளர் தேசிய உடை என்று குறிப்பிடுகிறார்) அணிந்து செல்ல முடிவெடுக்கிறார். பல உயர்நிலை அதிகாரிகளும் கணவான்களும் கலந்து கொள்ளும் அவ்விருந்துக்கு அனைவரும் அப்படித்தான் வருவார்கள் என்று அவர் நினைக்கிறார்.

ஆனால் விருந்துக்கு வந்தவர்கள் எல்லோரும் மேற்கத்திய உடை அணிந்து வந்து ஹஜி ஹெமில்டனை தர்மசங்கடமாகுகின்றனர். இவர் மலாயில் பேசுகிறார்; அவர்கள் ஆங்கிலத்தில் பதில் சொல்லுகின்றனர். அவர்களின் பார்வை அவரை ஏளனம் செய்கிறது. “நாங்கள் மலாய் காரர்கள்... நாங்களே நாகரிகமாக உடுத்தும் போது உனக்கென்ன வந்தது” எனக் கேட்பது போல அங்கு கூடியிருப்போரின் பார்வை இருக்கிறது.

கலாச்சார வேறுபாடுகளை இக்கதை முன்வைக்கவில்லை. மாறாக அவர் அவர் இருப்புக்கு ஏற்ற கலாச்சாரத்தை தேர்வு செய்ய வேண்டியதே சிறப்பு என தெளிவு படுத்துகிறது. ஆனாலும் பல மலாய் எழுத்தாளர்களிடம் காணப்படும் அதே ‘தெளிவின்மை’ அப்துல்லா ஹுசேனிடமும் காணப்படுகிறது. மதத்துக்கும் இனத்துக்குமான வேறுபாட்டை அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ ‘மூடியே’ எழுதுகிறார்கள். ஒரு மனிதன் இஸ்லாத்துக்கு மாறினால் அவன் மலாய் மொழியையும் பண்பாட்டையும் முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றே அவர்கள் நம்புகின்றனர். மொழியும் பண்பாடும் இனத்தோடே பெரிதும் சார்ந்து நிற்பவை என்கிற பிரக்ஞையே பலருக்கும் இருப்பதில்லை.

அதே போன்று மலேசிய மக்கள் எனப்படுவோர், ஒரே மொழி பேசி ஒரே பண்பாட்டில் பயணிக்க வேண்டிய மக்கள் என்ற ஒற்றைக் கருத்தை மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்றெல்லாம் நாம் போடும் கூப்பாடு அவர்கள் காதில் விழுவதே இல்லை. (தேர்தல் காலங்களில் அரசாங்கம் முன்வைக்கும் ‘தோற்றங்களை’ பொருட்படுத்த தேவை இல்லை) தேசியம் என்கிற ஆற்றில் கலக்கிற நீரின் நிறம் வேண்டுமானால் ஒரே நிறமாகிப் போகலாம். அதில் வாழும் மீன்கள் கூடவா ஒரே நிறமாக மாறி விடும்?

   
     

உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | Back to Top
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768