|
|
|
|
|
|
கவிதை
- பா. அ. சிவம் - |
|
|
|
|
|
உலகம் அழியும் காலம்
1.
பல்லாண்டுகளாய்
வேண்டிய கடவுளால்தான்
கைவிடப்பட்டீர்கள்
நெருங்கிப் பழகிய
நண்பர்களால்
காட்டிக் கொடுக்கப்பட்டீர்கள்
உரிய நேரத்தில்
யாரும் உதவாத நிலையில்
நடு வீதியில் நின்றீர்கள்
தெய்வீகம் என்றெண்ணி
மன்னித்து விட்டீர்கள்
மீண்டும் புறமுதுகில்
வாங்கிக் கொண்டீர்கள்...
அவமதித்தவர்களை
அரவணைத்தீர்கள்
மீண்டும் அவமதிக்கப்பட்டீர்கள்...
யாரோ செய்த தவற்றுக்காக
சூழல் கைதியாய்
பழிவாங்கப்பட்டீர்கள்...
இறுதியில்
நீங்களே உங்களை
கொன்று குவித்தீர்கள்...
2.
மீண்டும்
மீண்டும்
தள்ளிப் போகிறது
பயணம்
தோட்டத்திற்கே
திரும்பி விட்ட
நண்பனைக்
கட்டிப் பிடித்து
அழவேண்டும் போலிருக்கிறது...
வாழ்வதாகவேத் தெரியவில்லை...
நெடுந்தூர ஓட்டப் போட்டியில்
நிற்காமல்
ஓடிக்கொண்டேயிருப்பதாக
தோன்றுகிறது...
நின்று
ஒருநிமிடம்
வாய்விட்டு
அழவேண்டும் போலிருக்கிறது...
அழுதாலும்
ஒன்றும் ஆகப் போவதில்லை
நாய் வேடத்திற்கு
குரைத்துத்தான் ஆக வேண்டும்...
3.
முழுமையாக
நனைவதற்குள்
நின்று விட்ட மழை
அருந்துவதற்குள்
கீழே விழுந்து
உடைந்து சிதறியக் கிண்ணம்
உறக்கத்திலே
கலைந்து போன
தெய்வீகக் கனவு
மலர்வதற்குள்
பாசியிலேயே
கருகி உதிர்ந்த ரோஜா
பெருநாளன்று
நிகழும்
உறவுக்காரர்களின் மரணம்
ஆண்டுக்கணக்காய்
இழுத்துக் கொண்டிருக்கும்
தாத்தாவின் உயிர்
கூடாமலேயே
பிரிந்து போன
காதலர்களின் சாபம்
பிறப்புக்கு முடிவு
இறப்பென்று தெரிந்திருந்தும்
தேடி தொலைய வைக்கும்
வாழ்வின் புதிர்
4.
நாய் நன்றியுள்ளது
என்கிறார்கள்...
ஆனால்
நன்றிக்கெட்ட நாயே
என வைகிறார்கள்...
நாயைப் பற்றி
என்னத் தெரியும்
மனிதர்களுக்கு?
மனிதர்கள் போல்
மானங்கெட்டது அல்ல
நாய்...
ஓடிக்கொண்டே
ஒரு தூணைக் கண்டால்
கால் தூக்கி
சிறுநீர் கழிக்கும்...
யார் இருக்கிறார்கள்
என்றெல்லாம் பார்க்காமல்
நடு வீதியிலேயே
புணர்ச்சியில் ஈடுபடும்...
அவ்வளவு இயல்பு
அவ்வளவு வெகுளி
அவ்வளவு அசல்
நாய்
நாயாகத்தான் இருக்கிறது...
முகமூடி அணிந்து கொள்வதில்லை...
5.
எங்கிருந்தோ ஒருவர்
வந்து அறைந்து விட்டு
நகர்வது போல்
இருந்தது
உன் பிரிவைப் பற்றிய
செய்தி...
அடுத்த கணம்
என்ன செய்வதென்று
அறியாமல் புரியாமல்
அலைக்கழிக்கிறது காலம்...
உண்பதற்கு
உறங்குவதற்கு
வாழ்வதற்கு
உத்தேசமில்லை...
நீ
என்னையும்
அழைத்துச் சென்றிருக்கலாம்...
ஆனால்
நான் வந்திருப்பேனா
என்றுதான் தெரியவில்லை...
6.
வகுப்பறையிலிருந்து எல்லாரும்
ஒன்றாகத்தான் வெளியேறியதாக
நினைவு...
நீண்ட சாலையில்
வெகு நேரம்
உரையாடிக் கொண்டே
நடந்து கொண்டிருந்தோம்
ஒரு முச்சந்தி
வரப்போகிறது என்பதை
அறியாமலே...
அவர் அவருக்கான
பாதைகளில்
எல்லார���ம் பிரியப்போகிறோம்
என்று
தெரிந்து கொண்டப் பின்னரும்
யார் முதலில் நகர்வது
எனும் கேள்வியில்
ஒருவரும் நகராமல்
நின்றுக் கொண்டிருந்தோம்...
பாதைகள்
மட்டுமே நடந்தன
அவற்றுக்கான வழித்தடங்களில்...
அதே இடத்தில்
நின்று
பார்த்துக் கொண்டிருக்கிறோம்
அவரவருக்கான நிழல்களையும்
நிகழ்களின் பாதங்களையும்...
7.
கக்கிய வாந்தியை
மீண்டும்
பருக முடிகிறது
உமிழப்பட்ட எச்சிலைத்
துடைத்துக் கொண்டு
மீண்டும் உமிழ்பட முடிகிறது
புறமுதுகில் குத்தி
முகத்தில் எரிதிராவகம் ஊற்றி
தப்பியோட முடிகிறது
பேசிக்கொண்டே
ஒரு குழியை வெட்டி
அதில் தள்ளிவிட்டு
நகர முடிகிறது
மன்னிப்பின் பிச்சையை
அதிகபட்சம்
எத்தனை முறையேனும்
உபயோகிக்க முடிகிறது
எல்லா மொழியிலும்
புரிந்து கொள்ள முடியாத
வார்த்தையாக
நன்றியைச்
சொல்ல முடிகிறது
எல்லாம்
எல்லாம் முடிகிறது
ஒன்றைத் தவிர...
8.
1)
தமிழ்த்திரைப்பட
போலீஸ் போல்
ஆகிவிட்டார்
எனது தலைமுறைக் கடவுள்...
போலீசாவது
காட்சி முடிவதற்குள்
வந்து விடுகிறார்கள்
கடவுளால்தான்
காட்சி முடிந்த பின்னரும்
வர முடிவதில்லை...
2)
பேரநியாயத்தின்
எல்லை எதுவரையென
சோதிக்கப்பட்டு
இறுதி சொட்டு கண்ணீரும்
மிச்ச மீதி குருதியும்
காய்ந்து போன பின்னரும்
கடவுள் வருவதற்கான
பாதை தெரியவில்லை...
3)
இன்னும்
சில நிமிடங்களில்
சாகத் துடிக்கும்
மனிதன் கேட்கிறான்
கடவுள் இருக்கிறாரா
இல்லையா?
வருவாரா
மாட்டாரா?
நல்லவரா
கெட்டவரா ?
4)
அவர்
வந்தே
பதில் சொல்லட்டும்...
9.
மாலையில்
தேநீர் அருந்த
முடியாததை விட
பெரிதாகத் தோன்றவில்லை
உன்னைப் பற்றிய
நினைவு
என்ன செய்வதென்று
தெரியாத வேளையிலும்
கைத்தொலைபேசியில்
அழைத்து பேசுவதற்கான
எண்ணம் வரவில்லை
உன்னை நினைவுபடுத்திய
பொருட்கள்தான்
உன்னை விட்டுப்
பிரிவதற்கான
திடத்தை தருகின்றன
பூச்செடிகளுக்கு
நீரூற்றுவது...
பூனைக்குட்டிகளை
ரசிப்பது...
மனுஷ்யபுத்திரனின்
கவிதைகளில்
காலத்தைக் கடத்துவது...
எவ்வளவு பெரிய சுகம்
என்பதை...
தோற்றுப்போனவனிடம்
கேட்டுப் பார்க்கலாம்...
அன்பு வெறுப்பாகும்
தருணம் பற்றி
தெரிந்து கொள்ள
ஒரேயொரு நிபந்தனைதான்
கண்ணீர்க்குளம்
வற்றியிருக்க வேண்டும்
அழுதாலும்
கண்ணீர் வரக்கூடாது
சரியென்றால்
நீங்கள் நேசிக்கும் நபரை
இப்போதிருந்து
வெறுக்கத் தொடங்கலாம்...
10.
நல்லவர்கள்
கெட்டவர்கள்
என்பதைத் தீர்மானிக்கும்
கருவிதான்
உதவி...
கேட்ட மாத்திரத்திலேயே
ஓடோடி வந்து
உதவி செய்யும்
அனைவரும்
நல்லவர்கள்...
கேட்ட மாத்திரத்தில்
பதில் இல்லாமல்
மெளனம் காப்பவர்கள்
அனைவரும் கெட்டவர்கள்...
உங்களுக்கே உதவுவதற்கு
ஒருவர்
தேவைப்படும் போதும்
பிறருக்கு உதவ
இயலாத போதும்
நீங்கள்
கெட்டவர்கள்தான்...
குடையின்றி
அடைமழையில்
நனைந்து கொண்டிருந்தாலும்...
செயலிழந்த மோட்டார் சைக்கிளை
வெகுதூரம்
தள்ளிச் சென்றுக் கொண்டிருந்தாலும்...
நடுத்தெருவில்
நிற்க வேண்டிய
வாழ்வின்
ஆகக் கொடுமையான கணம்
அருகில் வந்து நிற்கும் போதும்...
பிறர் கேட்டு
நீங்கள் செய்யாத
உதவிக்கு...
சமூகம் உங்களுக்கு
அளிக்கும்
ஆகச் சிறந்த விருது
கெட்டவன் என்பதாகும்...
சொன்னால் புரியாதவர்களுக்கு
சொல்லத் தேவையில்லை...
சொல்லத் தேவையில்லாதவர்களை
நினைக்கவும் வேண்டியதில்லை...
11.
இனி
பேசுவதற்கு
எவரும் இல்லாத
ஒரு காலம் வந்தது
அப்போது
ஒரு கவிஞன்
தனது கையைக்
கிழித்துக் கொள்கிறான்
குழாயிலிருந்து வெளியேறும்
நீரைப்போல்
மகிழ்ச்சிப் பொங்க
வெளியேறுகிறது ரத்தம்
ரத்தத்தைத் தொட்டு
நேசித்த மனிதர்களின்
பெயர்களை
வீட்டின் சுவரில்
எழுதுகிறான்
அந்தப் பெயர்களுடன்
பேசவும் தொடங்குகிறான்
பேசாத மனிதர்களுக்காக
கையேன் கிழிக்கப்பட்டதென
ரத்தம் ஏன்
மகிழ்ச்சி பொங்க வெளியேறியதென
பெயர்களுடன் உரையாடல்கள்
எவ்வாறு சாத்தியமென
உங்களுக்குத் தெரியாது
பேசுவதற்கு யாருமில்லாத
ஒரு காலம் வரும்
அனைவருக்கும்
12.
நிைறய சொற்கள்
இருந்தன உன்னிடம்
எனினும்
நீ ேதர்ந்ெதடுத்தது
விநோதமானது
நல்ல
சொற்கள்
ெகட்ட
சொற்கள்
என இரு வகையில்
பல சொற்கள்்
வரிசையில் நின்றன
எனினும்
உனது தேர்வு
மிகவும் விநோதமானது
குைறந்த பட்சம்
ஒரு
சொல்ைலக் கூட
அனுமதிக்கவில்ைல நீ
ஒரு தடித்த ெமளனம்
அதனுள் கோடான கோடி
புறக்கணிப்பு
கோடான கோடி
அலட்சியம்
விநோதமாய் இருந்தது
நீ என்ைனக் கொன்ற விதம்
13.
ேதடும் ¦ப¡ருள்
என்னெவன்று ெதரியவில்ைல
ேதடிக்¦க¡ண்டிருக்கிறேன்
¦த¡டர்பில்லாத
எதனையோ
இருளைத் ேதடிய கணம்
வந்து கிடைத்தது
சுடர்
ெவளிச்சத்ைதத் ேதடிய கணம்
கண்ைணக் கவ்வியது
இருள்
ேதடலின்
ஒவ்¦வ¡ரு ேவைளயிலும்
ஒவ்¦வ¡ரு காலத்திலும்
ேதடிய ஒன்று
கிடைத்ததில்ைல
பழைய நட்ைபத்
ேதடிய ேநரம்
அறிமுகம் ஆன
புதிய நண்பனாய்
இல்ைல
ஒவ்¦வ¡ரு ேதடலும்
குமாைரத் ேதடிப் போனால்
ஷான் கிைடக்கிறான்
லிங்கேசைத் ேதடிப்பபோனால்
சுதாஷ் வருகிறான்
எைதயாவது ேதட ைவத்து
ேவறு எதையாவது
ைகயில் திணித்து
காதில் பூ சுற்றுகிறது
காலம்.
14.
மழை பெய்து
வெகு நாட்கள்
ஆகின்றன
வரண்டு போன
நிலத்தைப் போல்
வானமும் மனமும்
ஆகாயம் இருள்வதற்குள்
மனிதர்களின் நடமாட்டம்
அடங்குவதற்குள்
பறவைகளின் சங்கீதம்
ஓய்வதற்குள்
அந்தியின் சிறகு
முறிவதற்குள்
இந்த அறையிலிருந்து
வெளியேறிவிட வேண்டும்
கால்கள்
ஒரு தேநீர் கடைக்கு
அழைத்துச் செல்லும்
சுடச்சுட
தொண்டைக் குழிக்குள்
இறங்கும் தேநீர்,
நிரப்பும்
மழைக்கான வெற்றிடத்தை
பின்னர்
நடந்தவாறு யோசிக்கலாம்
நீளும் பாதை
எதுவரையென
15.
தற்கொலை மகத்தானது
என எண்ணி
பத்தாவது மாடியைத்
தேர்ந்தெடுத்தது
தற்கொலை வீரமென்றெண்ணி
நஞ்சை
உணவில் கலந்தது
தற்கொலை தெய்வீகமானது
என்றெண்ணி
ரயில் தண்டவாளத்தில்
தலையை வைத்தது
இத்துடன்
இருபத்து மூன்றாவது முறையாக
தற்கொலை செய்து கொண்டது
மகிழ்ச்சியாக இருக்கிறது
ஒவ்வொரு முறையும்
உயிர் பிரிந்து
உயிர் வருவது
கொலைக்கும் தற்கொலைக்கும்
உள்ள
ஒற்றுமை-வேற்றுமைகளை
அறிவ��ற்காகவே
ஒவ்வொருவரும்
ஒருமுறையாவது
தற்கொலை
செய்து கொள்ள வேண்டும்
அதன் பின்னர்தான்
வாழ்க்கையே தொடங்குவதாக
எழுதி வைத்து விட்டு
மீண்டும்
தற்கொலை செய்ய முயல்கிறான்
ஒரு தெளிவான கவிஞன்...
16.
வருத்தப்படுவதற்கு
எதுவுமில்லை
தெரிந்துதானே
செய்யப்படுகின்றன தவறுகள்
மன்னிப்பதற்காகத்தானே
புரியப்படுகின்றன குற்றங்கள்
மறந்து விட்டு
போவதற்குத்தானே அநியாயங்கள்
இதில்
யாரைக் கேட்டு
துடித்துக்கொண்டிருக்கின்றன
காலத்தின்
ஒவ்வொரு நரம்பும்?
எல்லா குற்றங்களுக்கும்
தண்டனை விதிக்கப்படுவதாக
எல்லா குற்றவாளிகளும்
கழுவில் ஏற்றப்படுவதாக
ஒருபோதும் ஓருலகை
படைக்க முடியாது
உலகம் கெட்டது
என்பதை
கண்ணாடியில் பார்த்தால்
புரியும்
காணாதவரை
ஒரு மரம் மரமாகவும்
ஒரு கிளை கிளையாகவும்
ஓர் இலை இலையாகவும்
ஒரு வேர் வேராகவும்
மட்டுமே இருக்கும்...
17.
வாழ்வதற்கான
அத்தனை தேர்வுகளும்
வழங்கப்படுகின்றன...
பிடித்தமானதைச் செய்து
கொள்ள...
வெறுக்கத்தக்கதை
உதறித்தள்ள...
முகத்திற்கு நேரே
காரி உமிழ...
எல்லாவித முன்னேற்பாடுகளுடன்
புறமுதுகில் குத்த
தேர்வுகள் வழங்கப்படுகின்றன...
ஒரு பொய்யை
ஓர் உண்மையெனச் சொல்லி
நம்ப வைத்து
ஏமாற்றிச் செல்வதற்கான
அத்தனை திறமைகளும்
வாய்த்திருக்கிறது எனக்கு...
எனக்கு என்பதை
உனக்கானதாகவும்
பிறருக்கானதாகவும்
எல்லாருக்குமானதாகவும்
எடுத்துக் கொண்டாலும்
உண்மையெனச் சொல்லப்பட்ட பொய்
உண்மையாகப் போவதில்லை
எப்போதும்...
ஒருவேளை
அது பொய்யெனத் தெரிய வரும்
வேறு வழியில்லாத ஒரு தருணத்தில்
நான் இறந்திருக்கக் கூடும்...
நான் என்பதை
நீயாகவும்
நீங்களாகவும்
எல்லோராகவும்
எடுத்துக் கொண்டாலும்
சாம்பலிலிருந்து
எழுந்து வரப்போவதில்லை
உண்மையாகிப் போன
ஒரு பொய்...
18.
1)
விஷம் கக்கும்
பாம்பைக் காண்பதற்கு
ஒரு நிலைக்கண்ணாடி
போதாதா?
2)
திருடனுக்கும்
கொலைக்காரனுக்கும்
ஊரில் இருக்கும்
எல்லாம் வல்ல கெட்டவர்களுக்கும்
பக்தனைப் போலவே
பாவப்பட்டவனைப் போலவே
பரம ஏழையைப் போலவே
இருக்கிறது
நியாயமும் தர்மமும்...
3)
நடுஇரவில்
உறங்கிக் கொண்டிருந்தவனை
எழுப்பி
முகத்தில்
சிறுநீர் அடித்துச் செல்கிறது
சாலையில் எதிர்கொண்ட
பூசணம் பிடித்த
நாயின் சடலம்...
4)
இன்னும்
புரிந்து கொள்ள
முடியவில்லை
என்னை....
19.
ஒரு பறவை போல்
பறக்க வேண்டும்
வானில்
எல்லைகளற்று
கட்டுப்பாடற்று
நிபந்தனைகளற்று
கால வரையறையற்று
காற்று கொண்டு செல்லும்
திசையில்
எல்லாம் மறந்து
எதனையோ தேடி
எதுவும் கிடைக்காமல்
ஒரு பறவையாகவே
கூடு திரும்ப வேண்டும்
எதுவும் இல்லாததற்கான
பயணம்
எப்படி இருக்குமென
தெரிந்து கொள்ள
ஒரு சிறகை
வைத்துக் கொண்டாவது
ஒரு பறவை போல்
பறக்க வேண்டும்...
பறத்தல்
சாவதற்கு முன்னரே
சாத்தியமாகட்டும்...
20.
எனக்குத் தெரியும்
இந்த பாதையின்
நீளம் எதுவரையென...
உதிர்ந்த இலையைத்
துரத்தும் காற்றின் வலிமை
எங்கு போய் முடியுமென...
சொல்லாதிருக்கும்
சொற்களின் தணல்
எப்படி பொசுக்குமென...
பிரிவின் துயர்
எழுதும் வரிகளுக்கு
இலக்கணம் இல்லையென...
ஓய்ந்த பின்னர்
எழும் பேரமைதி
எழுவதற்கான தியானமென
சாம்பலாகிப் போனாலும்
சபித்துப் போட்டாலும்
இன்னும் வாழமுடியுமென
எனக்குத் தெரியும்
இந்தக் கவிதையின்
காலம் எதுவரையென...
|
|
|
|
|
|
|
|
உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் |
Back to Top |
|
|
|
|
வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine
For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved.
2012. | Designed by CVA | Best View in : Mozilla Firefox | Best
resolution : 1024 X 768
|