முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு
     
  கதவைத் தட்டும் கதைகள்... 27
- ராஜம் ரஞ்சனி -
 
 
 
 

கோணங்கியின் ‘தாத்தாவின் பேனா’

சகோதரியின் மகள் பொன்னிக்கு மாமா கடிதம் எழுதுகின்றார். அதில் அவள் முந்தைய கடிதத்தில் கேட்டிருந்த பொம்மையை வாங்கி வைத்திருப்பதாகவும் அதோடு பேனாவையும் வாங்கி வைத்துள்ளதாக கூறுகின்றார். பேனாவைப் பற்றி குறிப்பிடுகையில் பொன்னியின் அம்மா அதாவது அவரின் சகோதரிக்குப் பால்ய பருவத்தில் தாத்தா தந்த பேனாவையும் தாத்தாவைச் சுற்றிய நினைவுகளையும் அசை போடுகின்றார் மாமா வனராஜ். கடித உள்ளடக்கமாய் விரிகின்றது கோணங்கியின் ‘தாத்தாவின் பேனா’ கதை. பீரோவில் தாத்தா சேகரித்து வைத்திருந்த பொருட்கள், பேனாக்கள் என வனராஜ்ஜின் நினைவு கடந்த காலத்தை அசை போடுகின்றது.

பால்யங்கள் எளிதில் மறக்கக்கூடியவை அல்ல. பால்யத்தில் நடந்து முடிந்தவைகள் இனிய அனுபவங்களாகவும் சந்தித்த மனிதர்கள் வாழ்க்கையில் அடிக்கடி பிரிதொரு உருவிலும் பாத்திரத்திலும் நடமாடுவதாகவும் பால்ய உணர்வுகள் புது உணர்வுகளை மீட்டெடுக்கின்றன. பால்ய காலங்களைச் சுமந்த பொருட்களும் அவ்வப்போது நினைவுகளில் தலைகாட்டவே செய்கின்றன.

தன் சகோதரிக்குத் தாத்தா தந்த பேனாவையும் அதனால் அவள் எழுத்து மாறிவிட்டதெனவும் பொன்னியிடம் விவரிக்கின்றார். வாழ்க்கையில் எதிர்பாராத வகையில் கிடைக்கும் பொருட்கள் வாழ்வின் பல தருணங்களை மாற்றியமைத்துவிடுவதைத் தவிர்க்க முடிவதில்லை. மாற்றங்கள் கொண்டு வரும் எதிர்பாராத தருணங்களும் முக்கியமானவை. வாழ்க்கை என்பதே மாற்றங்களின் கலவையாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

பேனாக்களுக்கும் பால்யத்துக்கும் எப்பொழுதுமே ஆழ்ந்த தொடர்புகள் இருந்து கொண்டே இருக்கின்றன. ஆரம்பப்பள்ளியில் கற்றுக்கொண்ட சுயசரிதை கட்டுரைகளில் பெரும்பாலும் பேனாக்கள் விடுபவதில்லை. ஆனாலும் பேனாக்களின் முடிவுகள் எப்போதுமே ஒரே மாதிரியாய் அமைந்துவிட்டதை நினைத்துப் பார்க்கையில் புன்னகை மெல்ல தவழ்கின்றது. பள்ளிக்கு எடுத்துச் செல்ல விரும்பி வாங்கிய பேனாக்கள், பேனாக்களுக்காக தேர்ந்தெடுத்த வண்ணங்கள், பேனாக்களின் அமைப்புகள் என ஒவ்வொன்றுமே நினைக்க நினைக்க இனிப்பான சுகத்தினைத் தருபவை.

மற்றுமொன்று பேனா நட்பு. இன்றைய சூழலில் இதன் பழக்கம் பலருக்கும் மறந்து போயிருக்கும். இன்றைய இளம் வயதினர் இதைப் பற்றியே கேள்விபடாமல் இருக்கலாம். நட்பைப் பேனாவின் மூலம் தக்க வைத்துக் கொண்ட ரகசியத்தை ஆராய்ந்து பார்த்தால் பேனாவின் எழுத்துக்களில் மறைந்திருக்கும் உண்மையான அன்பினை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும். பேனாக்களின் இடத்தைத் தற்பொழுது இணையங்கள் நிரப்பிவிட்டன.

பால்யத்திலே பென்சில் அல்லது பேனாவின் துணைகொண்டு அடையாளம் கண்ட எழுத்துக்களின் உருவங்கள் மாறாமல் நிலையானதொரு இடத்தில் மிளிர்ந்து கொண்டே இருக்கின்றன. என்றென்றும் தங்களின் நிலைகளை மாற்றி கொள்ளாது சுயத்தோடு இருக்கும் எழுத்துக்களை அறிமுகப்படுத்திய எழுதுகோல்களுக்கு நன்றிகள் உரித்தாகுக. பேனாக்களுக்கும் எழுத்துக்களும் இதனால் உண்டான உறவு இன்னும் மறக்க இயலாததாக உள்ளது. முதன் முதலாக பேனாவையோ அல்லது பென்சிலையோ கைகளில் பிடிக்க கற்றுக் கொண்டதை எண்��ிப் பார்த்தாலும் பலரது கதைகள் இன்னும் மகிழ்ச்சியை உருவாக்கிவிடும்.

மனதில் எழும் உணர்வுகளைப் பிரதிபலிக்க எழுத்துகளே பெரும்பாலும் துணை புரிகின்றன. அதனால்தான் இன்னும் பலரது வாழ்க்கையில் டைரி எழுதும் பழக்கம் முக்கியமானதாகி போகின்றது. பிறரிடம் சொல்ல இயலாதவற்றையும் மனதில் தோன்றும் எண்ணங்களையும் எழுத்துகளில் வெளிப்படுத்திவிடும்போது திருப்தி உண்டாகின்றது. பேனாவைக் குறிப்பிடுகையில் எழுத்துக்களின் ஆழ்ந்த அர்த்தங்களும் தானாகவே புதைந்திருப்பதை அறிய முடிகின்றது.

பால்யங்கள் தொலைந்து போகலாம். அதன் நீங்காத நினைவுகள் என்றென்றும் புதிதாய் உருவெடுத்துக் கொண்டே இருக்கின்றன. எண்ணங்கள் எழுத்துக்களாய் உருவெடுத்துக் கொண்டே இருக்கின்றன; இரண்டுமே சலிப்பதில்லை.

   
     

உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | Back to Top
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768