|
கேலிச்சித்திரமெனும் சுத்திகரிப்பு அல்லது
ஆயுதம்
அது ஒரு கேலிச்சித்திரம். ஷோப்பிங் வளாகத்தில்
அமர்வதெற்கென இருக்கின்றன சில நாற்காலிகள். அங்கு இங்கும் ஆட்கள்
நடந்தவண்ணம் இருக்கின்றார்கள். ஒரு பெண் கையில் குழந்தையுடன்
அமர்ந்திருக்கிறாள். குழந்தைக்கு பசித்திருக்க வேண்டும். ஆள் நடமாட்டத்தை
பொருட்படுத்தாமல் அந்த பெண் தன் குழந்தையை தன் மார்போடு அணைத்து
பாலூட்டிக்கொண்டிருக்கிறாள். அருகில் அந்த வளாகத்தின் காவலாளி ஒருவரும்,
போலிஸ்காரர் ஒருவரும் அந்த பெண்ணிடன் இவ்வாறு சொல்கிறார்கள்.
“பொது இடத்தில் இப்படி ஆபாசமாக நடந்து கொள்வதால் உங்களை கைது செய்கிறோம்”.
அருகில் நடந்து கொண்டிருப்பவர்கள் எந்த ஒரு சலனமும் இல்லாமலே நடந்து
கொண்டிருக்கிறார்கள். அந்த இரு காவலாளிகளின் பொருப்புணர்ச்சியை
மதிப்பிடுவதற்கு முன்பாக அந்த பெண் குழந்தைக்கு பால் கொடுக்கும் இடத்தின்
அருகிலேயே இன்னொரு பெரிய போஸ்டர் இருக்கிறது. ஒரு நடிகை பாதி மார்புடன்,
மார் கச்சைக்கு விளம்பரம் செய்கிறார். மூன்றே மூன்று கைகுட்டையைத்தான் அந்த
விளம்பரத்தில் அவள் உடுத்தியிருந்தாள்.
கேலிச்சித்திரமாக இருந்தாலும் இதன் உள்ளர்த்தம் அரசியல் பொதிந்தது. அந்த
இரண்டு காவலாளிகளையும் ஒருவரை அரசாங்கமாகவும் இன்னொருவரை தமிழுக்காக உயிர்
கொடுப்போம் என கூட்டம் சேர்ப்பவர்களாகவும் ஒப்பிடலாம்.
கவனிக்க வேண்டியதை விட்டுவிட்டு, தன் அதிகாரத்தின் பெயரால் இப்படி
கிறுக்குத்தனமாக கடமையை செய்கின்றோம் தமிழை காப்பாற்றுகின்றோம் என
சொல்வபர்களை என்ன செய்யலாம்.
உண்மையில் கேலிச்சித்திரங்கள் செய்யும் கவன ஈர்ப்பை எழுத்தோ பாடலோ அவ்வளவு
எளிதில் பெற்றிடாது. எந்த தரப்பினரையும் ஒரு கணம் நின்று கவனிக்க வைப்பது
கேலிச்சித்திரத்தின் பலம். அதன் மூலம் சமகால அரசியல் தொடங்கி சாஸ்த்திர
சம்பிரதாயங்கள் என மதிமயங்கும் சமூகத்தையும் கேலி செய்யலாம். இந்த கேலி
செய்தல் என்பது புதிய சிந்தனையைக் கொடுக்கக்கூடியது. வரவது என்னவோ
கேலிச்சித்திரமாக இருந்தாலும் அதனை வரைகின்றவர்களுக்கு துணிச்சல் வேண்டும்.
சமீபத்தில் இப்படித்தான் அரசாங்கத்தை விமர்சனம் செய்து வரைந்த ஓவியர் கைது
செய்யப்பட்டார். அவருக்கெனக் ஆதரவு அதிகரிக்கவே செய்தது அந்த கைது. நம்
நாட்டிலோ கேலிச்சித்திரங்கள் மட்டுமல்ல அதனை வரைகின்றவர்களும் கேலியாகவே
நடமாடுகின்றார்கள்.
பள்ளிக்கூடம் படிக்கும் சமயத்திலும் என்னுடம் படித்த மாணவன் ஒருவன்
அப்படியே ஒருவரை வரைந்து காட்டுவான். கோணல்மாணலாக இருந்தாலும் யாரை
வைந்திருக்கிறான் என சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிந்துவிடும்.
அப்படி ஒருமுறை அவன் வரைந்த படத்தை பார்த்த ஆசிரியர் அவனை;
“நீயெல்லாம் உருப்படவே மாட்ட, படிக்கற புக்குல என்னடா படம் இது... வரைய வேற
எதுவும் கிடைக்கலையா... முதல்ல பாட புக்குல வரைவ்வ... அப்புறமா கழிவறைல
அசிங்கசிங்கமா படம் வரைவ... ஒழுங்கா இந்த படத்தை இப்பவே அழிக்கற...
இல்லன்னா உங்க அப்பாகிட்ட சொல்லிடுவேன்” என்றான்.
எந்த சலனமும் இல்லாமல் அந்தப் படத்தை அழித்துக் கொண்டிருந்தான் அவன்.
வகுப்பே அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தது. அவனை தாக்காத துக்கம் எங்களை
தாக்கியது. எங்கள் எல்லோருக்கும் எங்களைபோலவே படம் வரைந்து
கொடுத்திருக்கிறான் அவன். உணவு இடைவேளையில் அவனிடம் ஆசிரியர் திட்டியது
குறித்து விசாரித்தோம். மிக சாதாரணமாக சொன்னான் அவன், “நல்லவேளைடா.. அந்த
சாரு படத்தை சரியா பாக்கல.. நான் வரைஞ்சதே அவரைத்தான்...” அவன் உட்பட
எல்லோருமே சிரித்தோம்.
இப்படிக் கேலிச்சித்திரம் வழியாக பலவற்றை விமர்சன பார்வையாக பார்க்கலாம்.
இங்கு பத்திரிகைகளும் கேலிச்சித்திரங்களுக்கு முறையான இடமோ
கொடுக்கப்படுவதில்லை. வண்ணங்களை சேர்த்து கண்ணுக்கும் மனதிற்கும்
குளிர்ச்சி கொடுக்கும் ஒவியர்களுக்கு கொடுக்கும் கவனத்தையும் அந்த
ஓவியங்களுக்கு கொடுக்கும் மதிப்பையும் இம்மாதிரி கேலிச்சித்திரத்தை
வரைகின்றவர்களுக்கு கொடுப்பதுமில்லை அவர்களின் கேலிச்சித்திரத்தை முறையாக
பிரசுரிப்பதும் இல்லை.
சமூகத்தையும் சமகால அரசியல் சூழலையும் விமர்ச்சிக்க கேலிச்சித்திரம்தான்
சரியாக இருக்குமோ எனத்தோன்றுகிறது. பக்கம் பக்கமாக படித்து புரிய வைக்க
வேண்டியதை சில கட்டங்களுக்குள்ளேயே புரியவைத்துவிடலாம்.
ஓர் உதாரணம்; முதல் கட்டத்திகுள். ஒருவர் கண்ணாடி அணித்து எல்லோரையும்
கூப்பிட்டு, கூப்பிட்டு ஆளுக்கொரு தொகையைக் கொடுக்கின்றார். இரண்டாவது
கட்டத்திற்குள்; கண்ணாடி அணிந்தவர் அமர்ந்திருக்கிறார். அவர் முன் பணம்
குவிந்து கொண்டே இருக்கிறது. மூன்றாவது கட்டம், முன்பு பணம் வாங்கியவர்கள்
அழுதுகொண்டே டோல்சாவடியில் பணம் கட்டுகின்றார்கள், அழுதுக்கொண்டே
அத்தியாவசியப் பொருட்களை வாங்குகின்றார்கள், அழுதுகொண்டே வாகனங்களுக்கு
எண்ணெயை ஊற்றுகிறார்கள். இன்னும் சிலர் காலி சட்டை பையை பார்த்து
அழுகிறார்கள்.
இது போதும் கேலிச்சிதிரத்தின் முக்கியத்துவம் சொல்வதற்கு.
|
|