வல்லினத்தில் தேடுதல்

எழுத்துரு உதவி / Tamil Font Help 

 இதழ் 6
செப்டம்பர்-டிசம்பர் 2008
முகப்பு  |  உள்ளடக்கம்

சிறுகதை

 

மூன்றாம் தூதனின் மூன்று சுருள்கள்

மஹாத்மன்

 

       
 

என்னை அழைத்துக் கொண்டுச் செல்லும் இரண்டு தூதர்களிடம் ஒரு கேள்வியை கேட்கலாம் எனத்தோன்றியது. பரத்திலிருந்து வந்த வாகனத்தில் வாகாக உட்கார்ந்து ஒருமித்துப் பயணிக்கும் இச்சமயத்தில் கேட்பது இங்கிதமில்லைதான் ஆனாலும் கேட்க வேண்டிய அவசரமும் அவசியமும் உணர்ந்ததால் கேட்டே விட்டேன்.

"தீய மனச் செயல்பாடுகளை எவ்வாறு எழுதுவீர்?" இருவரிடமிருந்தும் பதிலில்லை. எனக்கு முக்கியமெனப்படும் கேள்வி அவர்களுக்கு முக்கிய மில்லாத வொன்றாக இருக்கக் கூடும். கருமமே கண்ணாயிருப்பதுபோல பிடித்தப் பிடியை விடாமலும் நோக்கியப் பார்வையை அகற்றாமலும் தங்கள் இலக்கை அடையும் தீவிரத்துடனும் இருந்தனர். 'என்னை உதாசீனப்படுத்துகிறார்களோ...' என்றெண் ணுகையில் இடது பக்க தூதனானவர் தன் தலையை திருப்பாமலேயே "வெகு சீக் கிரத்தில் எல்லாம் வெட்ட வெளிச்சமாகும்" என்றார்.

தூதரை 'ன்' என்றே குறிப்பிட வேண்டிய நான், 'ர்' என்று குறிப்பிடுவதற்கு காரணமுண்டு. சிருஷ்டிகரை கண்ணாரக் கண்டுக்கொண்டிருப்பவர்கள்; அவரின் விசேஷித்த சேனை; அவரின் கட்டளை களை இம்மிப் பிசகாமல் செய்து முடிப்ப வர்கள். எனவேதான் அந்த மரியாதை. இதற்கும் மேலான மரியாதையை அவர்கள் எனக்கு செலுத்துவதைக் கண்டு பிரமிப் படைந்தேன். ஒரு ஒளி ஆண்டு பயணத் திற்குப் பிறகு புரிபட ஆரம்பித்தது.

மனிதன் விசேஷமானவன். படைத்தவனுக்கு முன்பாக தனித்துவமான வன். படைக்கப்பட்டவைகளிடமிருந்து தனித்தன்மையானவன். அழியும் செடி, கொடி, தாவர, மிருகங்களும் சூரிய - சந்திர - நட்சத்திர - கிரகங்களும் மீண்டும் இன்னொரு முறை உருப்பெறாதவைகள். மனிதன் உயிர்த்தெழுகிறான், உதார ணத்திற்கு இதோ நான்.

மனிதன் பிறப்பதற்கு யாரும் மா தவம் செய்யவில்லை. பிறப்பெடுத்த ஒவ்வொரு மனிதனும் தன் சிருஷ்டிகரை நினைத்து நற்கிரியைகளை நடப்பித்து நித்திய வாழ்வுக்குரிய மா தவத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதே மனித வாழ்வின் பூரணத்துவம் என்று தெளிவுப்பெற்றேன்.

இரண்டாம் ஒளி ஆண்டின் பய ணப் பிரதேசத் தில் மந்த காசமும் கொஞ்சம் போல வெளிச்சமும் காரிருளையும் கண்டேன். எங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அம்மண்டல வான் வாசி களுக்கு மத்தியில் திடீர் சலசலப்பும் பரபரப் பும் உண்டானது. அவைகளின் மொழிச்சத் தத்தை அறியக்கூடாதவனாயி ருந்தேன். எமது பூமிக்கு போக்கு வரத்துமாயிருந்த அவைகளின் செயல்பாடுகள் மிகவும் ஒரு வேகத்துடன் மும்முரத்துடனும் வெறியுட னும் அமைந்திருந்தன. சினிமாக்களிலும் நாவல்களிலுமுள்ள அயல்கிரகவாசிகள் போலில்லை அவை.

இரண்டாம் ஒளி ஆண்டின் வான் பிரதேசம் முடிவடையும் எல்லை தெரிந்தது. நூறு சூரியன்களின் பிரபஞ்சப் பிரகா சம்.கண்ணைக்கூசாத அழகான வெளிச்சம். எல்லையில்லா பேரானந்தம். 'பட்ட பாடு களுக்கேற்ப எமக்கான இளைப்பாறுதலை பெற்றுவிட் டோம்' என்ற எண்ணம் தோன் றிக்கொண்டிருக்கும் போதே சேனைகளின் தளபதிபோல இன்னொரு தூதன் எங்களை வழிமறிப்பதைக் கண்டேன். இவன் ஒளியிழந்தவனாய் ஆனால் வல்லமைப் படைத்தவனாய் இருந்தான். இவன் கண்களில் கடுங்கோபம் தெரிந்தது. அக்கோபத்தை அலட்சியப்படுத்தும் பார்வை எம் தூதர்களிடம். இருவரும் தம் தம் பட்டயக் கைப்பிடிகளின்மேல் தங்கள் கைகளை வைத்ததும் "நிறுத்துங்கள்" என்றான் வழிமறித்த தூதன். "இந்த மூன்று சுருள்களுக்கும் பதில் சொல்லி விட்டுப் போங்கள்..." என்று சொல்லிக்கொண்டே தன்னிடமுள்ள சாம்பல் நிற சுருள்களை எமது பிரதான தூதனிடம் கொடுத்தான். ஒன்றன்பின் ஒன்றாக இருவரும் படித்து முடித்ததும் என்னிடம் கொடுத்தார்கள். பேரமைதி நிலவியதின் அர்த்தத்தைப் புரிந்துக் கொண்டவனாய் அவைகளை படிக்கத் தொடங்கினேன்...

முதலாம் சுருள்:

'முன் குறிப்பு' என்ற இடத்தில் என் முழு விவரங்கள். நாடு - குலம் - கோத்திரம் - தோற்றம்- மறைவு... இன்னும் பலவற்றைக் கண்டேன். எனக்கே தெரியாத என் விபரங்களைக் கண்டு திகைப்படைந்தேன். மேலுமதில், எனது பதினேழாம் வயதின் சம்பவம் ஒன்றைத்தான் விவரிக்கப்பட்டி ருந்தது. அது, நான் மறந்துபோன ஒரு விஷயம். இப்போது என்னை பாதிக்கும் என்று தெரியவே தெரியாது.

மெழுகுத் தோட்டம் என்ற புனைப்பெயரைக் கொண்ட 'ஆனந்தக் குன்று' எஸ்டேட்டில்தான் நான் பிறந்து வளர்ந்து பதினேழாம் வயதைத் தொட்டது. தோட்டத்தின் முன்னும் பின்னும் வலதுபக்கமும் செம்பனை மற்றும் இரப்பர் காடுகள். இடது பக்கம் மலிவு வீடுகள். அதன் எதிர்ப்புறம் கடைவீடுகள். அதற்கும் பின்னால் செம்பனைக் காடுதான். மொத்தமே எழுபத்து நான்கு வீடுகள். ஆயாக்கொட்டகை ஒன்று; தோட்ட அலுவலகம் ஒன்று. தோட்ட வாயிலில் இந்துக் கோவில். வருவோருக்கும் போவோருக்கும் தெரிவது, ஓரத்தில் நிற்கும் முறுக்கிய மீசைக்கொண்ட முணியாண்டிச் சிலையும் கையிலிருக்கும் பெரியதொரு கத்தியும்தான். தோட்ட மக்கள் யாவரும் கூடிக்கொஞ்சி குழாவி குதூகலிப்பது தீபாவளி நாளில் அல்ல. தீபாவளி, இரண்டாம் இடத்தில். முதல் இடத்தில் கோவில் திருவிழா. என் பிறந்த நாளுக்குப் பிறகு வருகின்ற வெள்ளிக்கிழமை மாலை ஆற்றங்கரையோரத்தில் கேட்கும் அதிரடி இசையில் மனம் மயங்கும். உள்ளிந்திரியங்கள் அதிரும். சிறுவர்களில் சிலர் பயந்தும் சிலர் ஆட்டம்போட முயற்சிப்பதும் சிலர் என்ன ஏது என்று திருட்டுமுழி விழிப்பதுமாய் உலாவித் திரிவர். பச்சை வண்ணத்திலும் சிவப்பு வண்ணத்திலும் சாயம் பூசப்பட்ட ஆட்டுத் தோலுடைய 'எஸ்டேட் மேளத்தின்' அதிரும் அடிகளால் அருள் பெற்றோ மருள் பெற்றோ சாமியாட்டம் தொடங்கிவிடும். திடீர் திடீரென்று கூட்டத்திற் குள்ளிருந்து வெளிவரும் சாமியாடிகளைக் கண்டு அதிர்ச்சிக் கலந்த ஆச்சரியம் உண்டாகும். அமைதியேஉருவாய் கொண்ட வகுப்புத் தோழி யசோதா ஆடும் ஆட்டம் மாரியாத்தா. தபால்கார அண்ணா செங் கோடனின் ஆட்டம் அனுமார். தேங்காயை தன் தலையிலேயே உடைத்து, தாவித்தாவி, சாப்பிட்டு வரும். தோட்டத்திலேயே முதன் முதலாக தொலைக்காட்சிப் பெட்டி வைத்திருந்த வீராசாமிக்கு முணியாண்டிச் சாமி வரும். சுருட்டு பற்றவைக்கப்படும். நாக்கை தொங்கவிட் டுக்கொண்டு ஆங்காரமாய் காளியாட்டம் ஆடும் மைனா அக்கா. இவர்களையெல்லாம் மிஞ்சும் ஆட்டம் நாகேந்திர ஐயாவினுடையது. அவருக்குள் எந்தச் சாமி வந்து இறங்கியது என்று யாராலும் அனுமானிக்க முடியாது. அவரின் சாமியாட்டத்தை யாராலும் கட்டுப்படுத்தவே முடியாது. ஆட்டம் தொடங்கி முடிகிற வரை அந்த விறுவிறுப்பு கொஞ்சம்கூட குறையாது. வாயருகே கன்னத்தில் செருகிய வேல் நீளமாக பாரம்கொண்டதாக இருந்தாலும் அது இல்லாது போலிருக்கும் அவராட் டத்தில். எல்லா சாமியாடிகளின் நெற்றிகளில் திருநீறைத் தூவி அமைதிப்படுத்தும் பூசாரியால் நாகேந்திர ஐயாவை ஒன்றும் செய்ய இயலாது. தானே படிகளில் ஏறி சிலையின் முன்பாகயிருக்கும் திருநீற்றையோ குங்குமத்தையோ எடுத்திறங்கும் பத்தாவது தடவையில் அல்லது பதினொன்றில், தானே தன் நெற்றியிலடித்து அமைதிப்படும்போது பூசாரி பூரித்துப்போவார். கோவிலில் அவரின் உச்சக் கட்ட ஆட்டத்தை பார்ப்பதற்காகவே தோட்ட மக்களும் பக்கத்துக்கம் பத்திலுள்ள குடிவாசிகளும் மற்ற மற்ற தோட்டத்தி லிருக்கும் சனங்களும் கூடிவிடும்போது நெருக்கடியுண் டாகும். பூசாரி எல்லோரையும் உட்காரும்படி கேட்டுக் கொண்ட பிறகே காணும் காட்சி கண்கொள்ளாக் காட்சி ஆகும்.

நாகேந்திர ஐயா, திருவிழாவிற்கு முன்னதாக மூன்று நாட்கள் விரதம் எடுப்பதாக கேள்வி. கண்காணிப் புக் குழு தலைவர் என்பதால் அவரின் விரத முயற்சி சாத்தியப்படும். விரத நாட்களில் அவரின் முகம் திருமுகமாய் படுசாந்தத்தோடு மிளிரும். நடை, உடை, பாவனை யாவும் மாறும். நல்ல வார்த்தைகளில்கூட யாரையும் ஏசமாட்டார். திருவிழா முடிந்தும்கூட நெட்டையான அவர் உடலில் பட்டை நாமம் வரிகளாய் வரிந்திருக்கும். காலை பத்துமணியளவிலும் மாலை ஆறுமணியளவிலும் எதேட்சையாய் பார்க்க நேரிடும் போது என் வலது கையை நெஞ்சில்வைத்து இலேசாய் தலை குனிவதுண்டு.

திருவிழா இரவுகளில் திரைச்சீலைக்கட்டி சினிமா காண்பிக்கப்படும். முன்கூட்டியே எங்களுக்கான பாய்கள் மண்தரையில் விரிக்கப்பட்டிருக்கும். அப்பாய்களில் என் அம்மாவோடு நாகேந்திர ஐயா துணைவியாரான கன்னியம்மா அக்கா குசுகுசுவென்று பேசிக்கொண்டே இருப்பார்கள். தாயின் மடியில் கண்ணியம்மா அக்காவின் கடைசிப் பிள்ளை மாலதிக் குட்டி உறங்கிக் கொண்டிருப்பாள். வீட்டில், நான் என் தாயின் வயிற்றிலிருந்து வெளிவருவதற்குரிய பிரசவம் பார்த்தது கண்ணியம்மா அக்காவின் அம்மாதானாம். அதன்பேரில் எங்கள் இரு குடும்பங்களுக்கிடையே பற்றும் பாசமும் அதிகரித்தது எனலாம்.

பள்ளிக்கூடம் விட்டு மாலை வகுப்பு, தோட் டத்து பொது மண்டபத்தில் நடைபெறும். என்னைவிட ஏழு வயது மூத்தவரான என் அண்ணன்தான் வகுப்பை நடத்துவார். அதில் ஆங்கிலம், அறிவியல் மற்றும் கணக்குப் பாடங்கள் முக்கியத்துவம் பெறும். நாகேந்திர ஐயாவின் பிள்ளைகளான தாஸ், சங்கர், மாறன் ஆகியோரும் வகுப்பிற்கு வரும் மாணவர்கள். தனி வகுப்பு ஆரம்பிக் கப்பட்ட ஒரு நாளில் நாகேந்திர ஐயா அண்ணனைப் பார்க்க வந்திருந்தார். அண்ணனோடு கைக்குலுக்கியப் பின் "தம்பி... ஏம்பிள்ளைன்னு பாக்க வேணாம். கண்ணு, மூக்கு, காது, வாயை மட்டும் விட்ரு... மத்ததெல்லாம் உரிச்சாலும் பரவால்லே... படிப்புதான் முக்கியம். என்ன...." என்று சொல்லியபோது ஒப்புக்காக தலையை ஆட்டிக்கொண்டார் அண்ணன். அருகில் இருந்த எனக்கு எரிச்சல் ஏற்பட்டது. பள்ளிக்கூடத்தில் கணக்கு வாத்தி யார் எனது வயிற்றைக் கிள்ளி மேலெழுப்பி, மேசைமேல் நிற்க வைத்தபோது என் வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட முதல் நபர் ஆனார். என் வெறுப்புப் பட்டியலில் புதிதாக இடம் பெற்றுக் கொண்டார் நாகேந்திர ஐயா.

ஒரு ஞாயிறு மதியத்தில் புதிதாக வந்தடைந்த கைலிகளின் ஒரு கட்டு மாத்திரம் என்னிடம் தந்து கண்ணியம்மா அக்காவிடம் கொடுத்துவரச் சொன்னார் அம்மா. அக்காவின் வீட்டை நெருங்குகையில் சங்கர் மாறனோடு மாலதிக்குட்டியின் அழும் குரல் சத்தங்கள் கேட்டன. பின்வாசல் கதவு திறந்திருந்தது. எட்டி ஒரு கண் வைத்துப் பார்த்தேன். தன் வார்ப்பட்டையினால் தாஸின் முது கை அடித்துக் கொண்டிருந்தார் ஐயா. அக்கா அவரின் காலைப் பிடித்துக்கொண்டு விட்டுவிடும்படி கெஞ்சிக் கொண்டிருந்தார். ஒரு பேயின் பிடியில் அகப்பட்டவன்போலத்தான் இருந்தான் தாஸ். பார்க்கப் பார்க்க சகிக்க முடியாமல் வீட்டை நோக்கி ஓடினேன்.

கொண்டுப் போன பொருள் அப்படியே திரும்பியதைக் கண்டு அம்மா கேட்டார்.

"ஏன்டா...?! வீட்ல யாருமே இல்லையா?"

"இருந்தாங்க... தா..தாஸூக்கு பயங்கரமா அடி விழுவுது. அந்தக்கா ஐயாவோட காலப் பிடிச்சிக் கெஞ்சிக்கிட்டிருக்காங்க. அவரு என்னம்மா அப்படி நடந்துக்கிறாரு... மிருகத்தைக்கூட நாம அப்படி அடிக்கிறதில்லையே..." என்றேன் சிடுசிடுப்போடு.

"அந்தாளு குடிச்சிட்டு வந்திருப்பா போல... குடிச்சா தான் கண்ணு மண்ணு தெரியாதே..."

"இல்லையே... ஆண்டியப்பா அண்னே அப்படி இல்லையே. சசி யண்னே ஆடிக்கிட்டுதான் வருவாரு. அப்படியா போட்டு அடிக்கிறாரு..."

"நீ போய் பாத்தியா? பாத்த மாதிரி பேசுற...சரி. நாளைக்கு கொடுத்துக்கலாம். மிச்ச மீதி கேள்வியை ஒங்கப்பாக்கிட்ட கேட் டுக்க. என்ன ஆளவுடு. சமையலை பாக்கணும்" என்று சொல்லி நழுவினார்.

அங்கு கண்ட காட்சி கனவில் வந்து தொலைத்தது. இன்னும் கொடூரமானது. தோட் டத்திலுள்ள அப்பாமார்கள் யாவரும் தங்கள் பிள்ளைகளை போட்டு விளாசிக்கொண்டிருந் தார்கள். அடிக்காத என் அப்பாகூட என்னை அடித்துத் துவைத்திருந்தார்.

விடிந்ததும் அதிகம் பேசாத அப்பா விடம் "இது வரைக்கும் என்னை நீங்க அடிச்சதேயில்லையே, ஏன்?" என்றேன். ஒரு சிரிப்பு சிரித்தார். "பன்னென்டு வயசுக்கு கீழுள்ளவனை அடிக்கலாம். மீசை முளைச்சவனை அடிச்சா வீட்டை விட்டு ஓடினாலும் ஓடிடு வான். இல்ல ..... எதிர்த்து அடிப்பான். தேவையா அது... அதனாலே கண் டிக்கனும். இப்போ... நீயொரு வங்காளிச்சிக்கூட சுத்றேன்னு காத்து வாக்ல சேதி வருது. அதுக்காக ஒன்னை அடிக்கவா முடியும்... ஆனா ஒன்னு. அந்தப் பொண் ணோட அப்பா கத்தியைத் தூக்கிக்கிட்டுத் தேடி வர வைச் சிராதே. அதான் முக்கியம். உன் னைப் பத்தி எனக்கு தெரியும். இருந்தாலும் ஒரு வார்த்தை இப்பவே சொல்லிடறது நல்லதில்லையா...." என்று சொல்லி மீண்டும் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டுப் போனார். 'போச்சுடா. கேட்காமலேயே இருந்திருக் கலாம்' என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு 'கப்சிப்' ஆனேன். நவம்பர்- டிசம்பர் மாத பள்ளிவிடுமுறையில் தமிழ்த் தொண்டர் - சிறு தொழில திபர் ஜெகநாதன் நூலகத்திற்கு சென்று வருவது வழக்கம். புகழ் பெற்ற, தீவிர இலக்கியம் சார்ந்த, பரிசுப் பெற்ற சிறுகதைகளும் நாவல் களும் எழுத்தாளரின் பெயர் கிரம மாக அடுக்கிவைக்கப் பட்டிருக்கும். இரண்டாம் மாடிக்குச் சென்றால் ஆங்கிலப் பிரிவு. ஜனரஞ்சக ரசனையை முடித்துக் கொண்ட நான் தீவிர இலக்கியம் சார்ந்த தமிழ் நாவலொன்றும் ஆங்கில நாவலொன்றும் எடுத்து வந்திருந்தேன்.

ஆங்கில நாவலில் இடம்பெற்றிருந்த, எனக்கு அறிமுகமில்லாத வார்த்தைகளுக்கு அகராதியில் பொருள் தேடிக்கொண்டிருந்த ஓர் இரவில் பின்வாசற்கதவை தட்டும் பலத்த சத்தத்தினால் கவனம் கலைந்தது. "ரமேஸம்மா! ரமேஸம்மா! கதவைத் திறங்க... காப் பாத்துங்க... காப்பாத்துங்க..." என்ற அடிக்குரலின் கதறல் கன்னியம்மா அக்காவினுடையது என உடனே உணர வைத்தது. அம்மா அரக்கப் பறக்க எழுந்து "டே ரமேஸூ! தொறக்க வேண்டியதுதானே... கல்லு மாதிரி ஒக்காந்துக்கிட்டு முழிக்கிறத பாரேன்..." என்று சொல்லிக்கொண்டே கதவை திறந்தார். தலைவிரி கோலமாய் ஆங்காங்கே அடித்த காயமும் இரத்த வடிதலு மாய் நின்றுக்கொண்டிருந்த கண்ணியம்மா அக்காவைப் பார்த்து பதறிப் போனார் அம்மா. "ஐயோ...ஆத்தா! என்னம்மா ஆச்சு...ஐயோ கடவுளே!" என்றவாறே அணைத்து உள்ளே வரவழைத்து எனது படுக்கையறைக் கட்டிலில் உட்கார வைத்தார். அண்ணன் அப்போ தில்லை. அப்பா அவரறையில் மல்லாந்த வாக்கில் குறட்டை விட்டுக்கொண்டிருந்தார். அவரை எழுப்பாமல் அலமாரியின்மேலிருந்த சிறு மருந்துப்பெட்டியை எடுத்துக்கொண்டு அடுத்தறைக்கு விரைந்தேன். அம்மாவின் அருகில் அதனை வைத்துவிட்டு வெளிச்சம் வேண்டி மின்விசையை தட்டிவிட்டேன். அப்பா முனகியவாறே தலையோடு போர்த்திக் கொண்டார். அம்மாவினருகில் செல்லுகையில் "டேய்! மாலதி பாப்பாவை மட்டும் தூக்கிட்டு வந்திரு ... போ!" எனக் கட்டளையிட்டார். 'பக்' கென்று பயம் குடிகொண்டது மனதில். காட்டிக்கொள்ளாமல் அக்காவின் வீட்டை ஒரு நிமிடத்திற்குள் அடைந்தேன். அங்கே பையன்கள் யாரும் வீட்டினுள் இல்லை. மாலதிக் குட்டியை தலைக்கு மேல் தூக்கிப்போட்டு பிடித்து மறுபடியும் தலைக்குமேல் தூக்கிப்போட்டு பிடித்தவண்ணமிருந்தார் நாகேந்திர ஐயா. வீறிட்டு அழுதுகொண்டிருந்தாள் மாலதிக்குட்டி. கொஞ்ச நேரத்திற்குப் பிறகு அவர் சிறுநீர் கழிக்க கழிவறைக்குச் சென்றதும் பாப்பாவை தூக்கிக் கொண்டு ஒரே ஓட்டமாய் ஓடிவந்து சேர்ந்தேன்.

தன் தாயைப் பார்த்ததும் அழுகையை நிறுத்திக் கொண்டது மாலதிக்குட்டி. என்னைக் கண்டதும் தன்னைத் திருப்பிக்கொண்டார் கண்ணியம்மா அக்கா. மேலாடையின்றி உள்ளாடையும் இன்றி இருந்தார். முதுகில் பட்டை பட்டையான சிவப்பு வரிக்கோடுகள். அம்மாவை விட சற்று அதிகச் சிவப்பு கண்ணியம்மா அக்கா. 'அழகு துன்பம் அனுபவிக்கிறதே...' என மனம் அங்கலாய்த்துக் கொண்டது. திரும்பி என்னைப் பார்த்த அம்மா "நாங்க இங்க படுத்துக்கிறோம். அப்பா ரூம்ல படு. போ." என்றார். தூங்கப்போனேன்.

பாரமான எதுவோ ஒன்று அழுத்துவது போலிருந்தது. தம்பிடித்து எழுந்துக் கொண்டேன். சுவர்க்கடிகாரம் மணி மூன்று நாற்பதைக் காண்பித்தது. 'இன்னும் விடியவில்லை. அட! மின்விசையை அணைக்க மறந்துவிட்டார்களோ...' என்றெண்ணியவாறே விசையின்மேல் விரலை வைக்கும்போது பக்கத்து அறைக்கு பார்வை தானாய் போயிற்று. ஒருக்களித்து தூங்கிக் கொண்டிருந்தார் அம்மா. தன் தாயின் போர்வையை மாலதிக்குட்டி இழுத்துவிட்டிருக்கக் கூடும். கண்ணியம்மா அக்காவின் நிர்வாண மார்பகங்களில் ஐந்து காசளவில் சூடு போட்ட பல காயங்கள். பூசப்பட்ட மருந்து விலகியிருந்தது. விளக்கை அணைத்து படுத்தாலும் தூக்கம் வரவில்லை. துக்கம் வந்தது. புரண்டு புரண்டு படுத்தேன்.

'நேரில்தான் அவரை அடிக்க முடியாது. கனவிலாவது அடித்துக் கிழிப்போம்' என்று ஓங்கி ஒரு குத்து குத்தினேன். என் தோளை அப்புறப்படுத்திய அப்பா "இத்தன நாளா கருவிக்கிட்டிருந்தியா, என்னகுத்துறதுக்கு..." என்றார். பார்த்ததைச் சொன்னேன். ஒரு தடவை நெற்றியில் அடித்துக் கொண்டதுடன் "மனுஷனா அவன்... நல்லச் சாவே வராது அவனுக்கு" சொல்லிக் கொண்டே எழுந்து குசுனிக்குப் போனார். மணி பார்த் தேன். விடியப்போகிறது. பக்கத்து அறையில் ஒருவரையும் காணவில்லை.

பெரட்டுக்குப் போய்வந்த அம்மாவிடம் விசாரித் துக் கொண்டிருந்தார் அப்பா. எழுந்து தூணில் மறைந்துக் கொண்டேன். " அவனையெல்லாம் சும்மா விடக்கூடாது, போலீசுக்குச் சொல்லி கம்பியெண்ண வைக்கணும். அப்பத்தான் அந்த கம்ணாட்டிக்கு புத்தி வரும்..." என்றார். அம்மாவோ "வேண்டாம்னிட்டா. தாங்கிக் கிறேங்கிறா. பிடிவாதக்காரி. யார் கிட்டேயும் சொல்லிறாதீங்கிறா. அவ தலையெழுத்து. போகட்டும்" என்றுச் சொல்லி வேலைக்கு கிளம்பினார். அப்பாவும் வாயை மூடிக்கொண்டு பின் சென்றார்.

என்னால் சும்மா இருக்க முடியாது. சும்மா விடவும் கூடாது.

காலை பத்துமணிபோல அவரை பார்த்தபோது 'சுர்'ரென்று கோபம் தலைக்கேறியது. தலையை திருப்பிக் கொண்டு நடந்தேன். 'மானங்கெட்ட நாய்க்கு மரியாதை வேண்டுமா, மண்ணாகிப் போக. இவனுக்கு நல்லச் சாவே வரக்கூடாது..' என மனதிற்குள் சொல்லிக் கொண்டேன். தோட்ட மளிகைக் கடைவரை சபித்துக் கொண்டே இருந்தது மனம்.

அவரை பார்க்கும்போதேல்லாம் 'இவனை சும்மா விடக்கூடாது, இவனை சும்மா விடக்கூடாது....' என்ற மனதின் ஆத்திரம் வெறியாய் மாறி எதிரொலித்துக் கொண்டிருந்தது கனவில். ஐயாவின் உடல் முழுக்க சிகரெட் துண்டினால் சூடு போட்டுக்கொண்டிருந்தேன்.

வெறி அடங்கும் முன்னே கோவில் திருவிழா வந்தது. நாகேந்திர ஐயா ஞானப்பழமாய் மாறினார். எனக்குள் பற்றிக்கொண்டு வந்தது. புது அக்கினி உருவானது. கோவிலில் யாருமில்லாதபோது தனியனாய் உட்கார்ந்தேன். தேவாரங்களையும் பாசுரங்களையும் எனக்கு மட்டும் கேட்கிறவிதமாய் பாடிக்கொண்டி ருந்தேன்.

வீட்டில் எப்போதும் இரண்டு முறை சாப்பிடும் நான் அரைவயிறு மட்டிலும் நிறுத்திக்கொண்டேன். திருநீறை சிறுகோடுபோல நெற்றியில் போட்டுக் கொள்ளும் நான் பட்டையாய் தீட்ட ஆரம்பித்தேன். தாயும் தகப்பனும் தங்கள் புருவங்களை மேலுயர்த்தி ஆச்சரியப்பட்டார்கள். 'அதிகப்படிப்பு பையனை திருமகனாய் மாற்றியதோ...' என தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். அம்மா மாத்திரம் அடிக்கடி என்னை சந்தேகக் கண்ணால் பார்த்து வந்தார். அவரின் பார்வையை தவிர்த்து வந்தேன்.

கோவிலில் செவனேயென்று கிடப்பதும் வீட்டில் சிவ பக்தனாய் காட்சியளிப்பதும் பலருக்கு ஆச்சரியம் கொடுத்தது. வீடு தேடிவந்து "ரமேஸம்மா.... தம்பிக்கு என்ன, வேண்டுதலையா..." என்று பரிவோடு கேட்டனர். அம்மா எதனையோ சொல்லிச் சமாளித்து வந்தார். உணவு வேளையில் தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.

வெள்ளிக்கிழமை மாலை ஆற்றங்கரையில் அந்த அதிரடி இசையில் உடல் நடுங்கி சாமி வந்தது எனக்கு. "யார் இது.." என்றும் "வந்தது யார்.." என்றும் கேட்டவர்களின் கன்னத்திலெல்லாம் அறை விழுந்தது. "ஆஆ... இது ஆங்கார சாமிடோய்.." என்று என் சாமியாட்டத்திற்கு பெயரிட்டார்கள். ஒரு சிலர் "ஆங்காரச் சாமின்னா....காளியா, மூலியா, காட்டேரியா, இல்ல... ஆசாமியா" என்று கேட்டு நச்சரித்தனர். அருகினிலிருந்த சாமியாடியின் கரத்திலிருந்து சாட்டையைப் பிடுங்கி ஒரு சுழற்று சுழற்றியதும் கேட்டவர்கள் காணாமல் போயினர். மற்றவர்கள் மிரண்டு போயினர். பீலியிலிருந்து வடிந்த பால் கட்டியாவதைப்போல அம்மாவின் முகம் இறுகிப்போனது.

மறுநாள் காலை அதே ஆற்றங்கரையில் பால்காவடியை தோளில் சுமக்க வைத்தனர் பெற்றோர். இரவோடு இரவாக அவசரமாக அலங்கரிக்கப்பட்ட காவடி. பன்னிரெண்டு வயது வரை ஒரு பெண்ணைப் போல் வளர்த்த கூந்தலை பத்துமலை அடிவாரத்தில் சிரைக்கப்பட்டப்பின்பு எடுத்துச் சுமந்த பால் காவடி- பன்னீர் காவடி, இப்போதுதான் சுமக்கிறேன். நல்ல வேளை, கன்னத்தில் வேலும் முதுகில் கொக்கிகளும் செருகப்படவில்லை. திருத்தரிசன உலாவின்போது தக தக வெனத்தகித்தது கதிரொளி. புத்துணர்ச்சியை உற்பத்தி செய்தது மஞ்சள் நீராட்டு.

கோவிலைச் சுற்றி கூட்டம் அலை மோதியது. காவடிகள் யாவும் இறக்கிவிடப்பட்டன. சின்ன வேல் களும் நீள் வேல்களும் மெதுமெதுவாக எடுக்கப்பட்டன. தெய்வச் சிலைகளுக்கு முன்பாக பூசாரி. பூசாரிக்கு முன்பாக ஒவ்வொரு சாமியாடிகளும் அமைதிப் படுத்தப்பட்டனர் அல்லது மலையேற்றப்பட்டனர். மீதமிருப்பது நானும் ஐயாவும். பின்னித் தைத்திருந்த சாட்டை ஞாபகத்தில் வந்தது. தடவிப் பூசியது காய்ந்திருக்கக்கூடும்.

உச்சக்கட்ட அதிரடியிசை காதைப் பிளந்தது. மனம் முழுவதும் அதிர்ந்தது. எதிரொலி கேட்டது. படிகள் ஏறும் ஒவ்வொரு முறையும் ஐயாவுக்கு முன்பாக நின்று வழிமறித்தபடி ஆடினேன். முணியாண்டிச் சிலையின் கீழுள்ள சாட்டையை எடுத்துவர ஆங்காரமாய் ஓங்காரமாய் குரலெழுப்பி அரை நிமிடத்திற்குள் சாதிக்க முடிந்தது. ஆறடி உயரம்போல இருந்த ஐயாவை இரண்டு மூன்று முறை சாட்டையினால் அடித்து இழுக்கையில் முதுகின் தோலும் நெஞ்சின் தோலும் பிய்த்துக் கொண்டு தெறித்து விழுந்தது. ஜனங்கள் திக்பிரமைப்பிடித்து பார்த்துக் கொண்டிருந்தனர். ஆத்திரம் அடங்காமல் இன்னும் ஆறேழு அடிகள் அடித்துவிட்டேன். மயங்கி விழுந்தார் நாகேந்திர ஐயா. நான் படிகளில் ஏறி திருநீற்றை எடுத்து நெற்றியில் அப்பிக்கொண்டு 'பொத்' தென்று விழுந்து மயங்கினேன்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நாகேந்திர ஐயா அவசரப் பிரிவில் சேர்க்கப்பட்டு ஏழாவது நாளில் மரணமடைந்தார். 'சாமியடித்து செத்துவிட்டார்' என்று ஊர்சனங்கள் பேசிக் கொண்டார்கள். வீட்டின் நடுவில் பிரேதமாய் ஐயா கிடக்கையில் மார்பிலடித்துக் கொண்டு கதறியழுது கொண்டிருந்தார் கண்ணியம்மா அக்கா. அவரின் பிள்ளைகளைப் பார்த்தேன். பையன்கள் எவரும் அழவில்லை. "ஐயோ... ஐயோ... போய்ட் டீங்களே..." எனக் கதறித் துடிக்கும் அப்பெண்மையைக் கண்டு முதன் முதலாக வெறுப்பு வந்து வெளியேறினேன். கூடியிருந்தவர்களில் ஒரே ஒரு ஜோடிப் பார்வை மட்டும் என்னையே முறைத்துக் கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. எனக்கோ பரம திருப்தி.

 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
  முகப்பு  |  உள்ளடக்கம்  
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768