|
தலைப்பு : என் அம்மாவுக்கு ஒரு மணி
கிடைத்தது.
காலம் : சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு
இடம் : கெடா மாநிலத்தில் உள்ள கம்போங் செட்டி
கம்பத்தில்
நோக்கம் : ஒன்றும் இல்லை
சரியாக மதியம் 2:20-க்கு நீங்கள் ஐஸ்காரரை எங்கள் கம்பத்தில்
பார்க்கலாம்.அவரது துல்லியமான வருகை என்னை எப்போதும் அதிசயிக்க
வைக்கும்.ஒரு நாளாவது அவர் ஒரு நிமிடம் முந்தியோ அல்லது பிந்தியோ
வரும்போது அவரிடம் ஏன் இந்தக் கால மாற்றம் என உரிமையோடு கேட்கலாம்
என நினைத்து வைத்திருந்தேன்.அதற்கு எப்போதும் அவர் இடம்
கொடுத்ததில்லை.ஓர் 'ஆமை ஹெல்மட்' அணிந்து கொண்டு இடது கையில்
பிடித்திருக்கும் மணியை ஆட்டியபடி ஒய்யாரமாக எங்கள் கம்பத்தில்
இருக்கும் எல்லா வீடுகளையும் 2:21 வருவதற்குள்ளாக கடந்தபடி
சென்றுவிடுவார்.இந்தியர்கள் வசிக்கும் கம்பங்களில் எதுவுமே அதிகம்
விற்பனையாகாது என்ற நம்பிக்கைக் கொண்ட சராசரி சீனராக இருந்ததால்
மோட்டார் சைக்கிளை நிறுத்துவதையோ குழந்தை களை அன்பொழுக பார்ப்பதையோ
அவர் விரும்புவதில்லை.
அவர் சென்ற அரை மணி நேரத்திற்கு பிறகுதான் கச்சான் தாத்தா
வருவார்.அவர் நிலக்கடலைகளோடு கெட்டி ஐஸ்ஸையும் ஒரு வெள்ளைப்
பெட்டியில் போட்டு எடுத்து வருவார்.கச்சான் தாத்தாவுக்கு
கம்பத்தில் அமோக ஆதரவு. நீண்ட பையில் கட்டப்பட்ட கெட்டியான மைலோ
ஐஸ், அசாம் ஐஸ் அனைத்தும் பத்து காசுக்கு கிடைக்கும். தனது நிரந்தர
வாடிக்கையா ளர்களுக்கு இலவசமாக நிலக்கடலைகளைக் கொடுப்பார்.
தாத்தாவிடம் கடனுக்கு கூட தின்பண்டங்கள் கிடைக்கும்.
மணியெல்லாம் இல்லாததால் அவர் தனது வருகையை 'ஹேஹ்' என சத்தமிட்டபடி
தெரிவிப்பார். முதலில் அந்தச் சத்தத்தை ஏதோ ஒரு சொல் என்றே
நினைத்து அதிக கவனத்துடன் கேட்கத்தொடங்கினேன். பிறகு அந்தச்
சத்தத்துக்கு ஏதும் அர்த்தம் இல்லாதது தெரியவந்தது. வெறும்
சத்தம்.காற்றை அடி வயிற்றிலிருந்து உப்பி வெளியிடும் சத்தம்.
சீனன் விற்கும் ஐஸ் இருபது சென் என்றாலும் அவர் வருகைக்கு நான்
அதிகம் ஏங்கியது அவன் கையில் இருந்த மணியினால்தான்.
மணியோசயின் மீது எனக்கு எப்போதுமே அலாதிப்பிரியம்.வீட்டின் அருகே
இருந்த மாரியம்மன் கோயிலுக்கு தினம் இரவு ஏழு மணிக்கெல்லாம் நான்
போவது அங்கு கொடுக்கும் புளி சாதத்திற்காக என அம்மா தவறாக கணித்து
வைத்திருந்தாள்.அபூர்வமாக யாராவது வந்து போகும் அந்தக் கோயிலில்
நான்தான் ஆஸ்தான மணியடிப்பவனாக இருந்தேன்.அது பெரிய மணி.கோயில்
நுழைவாயிலின் வலது புறத்தில் இருக்கும். 'நன்கொடையாக வழங்கியவர்
முனியாண்டி' என பொரிக்கப்பட்டிருக்கும்.அதன் சத்தம் ஆழமானது.காலி
சில்வர் மங்கின் நடுவில் கரண்டியைக்கொண்டு அடித்தால் சத்தம்
ஒடுங்கியபின் கேட்கும் 'ங்' ஓசைதான் அந்த மணியை அடித்தாலும்
வெளிப்படும். எனக்கு அதை அடிப்பதில் அவ்வளவு நாட்டமில்லை. பூசாரி
கையிலிருக்கும் மணியைத்தான் என்றாவது தொட்டுப்பார்த்துவிட ஆசை
தூண்டும்.பூசாரி எப்போதும் அதற்கு அனுமதித்ததில்லை.
ஏறக்குறைய அதேபோன்ற மணியை தான் ஐஸ் கடைக்காரரும்
வைத்திருந்தார்.அதன் நுனியில் அர்ச்சகரிடம் உள்ளது போல
நந்தியில்லை.ஆனாலும் அதன் ஓசை எந்தத் தடையும் இல்லாமல் காது வழி
புகுந்து நேராக இதயத்தில் ஒரு கொட்டுவிடும் கூர்மை கொண்டது.
அதே அளவில் ஒரு கைபிடி மணி எங்கள் வீட்டு பழைய பெட்டியில் இருந்தது
என்றால் முதலில் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள் பிறகு
சந்தோஷப்படுவீர்கள். எனக்கும் அப்படிதான் ஆனது.
ஊருக்கு சென்றுவிட்ட தாத்தாவின் பழைய பெட்டியை அம்மா
ஆராய்ந்தபோதுதான் அந்த மணி தட்டுப்பட்டது. அந்தப்பெட்டியினுள் ஒரு
பழைய நோட்டு புத்தகம்,சில காகிதங்கள், மந்திரித்த கயிறுகள்,புளி
கொட்டைகள்,உத்திராட்சை என நிறைய பொருட்கள் இருந்தாலும் நுனியில்
நந்தியிருந்த அந்த மணி அம்மாவை அச்சம் கொள்ள வைத்தது. ஒரு
குழந்தையைத் தூக்குவதற்கு நிகரான அக்கரையோடு அம்மா அதை வெளியே
எடுத்தாள்.அதிலிருந்து சத்தம் வெளிப்படாமல் நிறுத்தி வைத்து முருகா
என்றார்.அதை நான் ஒரு முறை குழுக்கிப்பார்க்க முயன்றபோது கையை
தட்டிவிட்டு 'முருகா' என்றாள்;முறைத்துப்பார்த்தாள்.
அம்மா எல்லா நேரத்திலும் 'முருகா' என்றே உச்சரிப்பாள். அது
வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு விதமாக தொனிமாறும்.கீழே அமர்ந்து
எழும்போது முக்கியமாக 'முருகா' என்பாள், அடுப்பில் சற்று அதிகமாக
சமையல் கருகிவிட்டால் 'முருகா...முருகா...முருகா' என
பதறுவாள்,கோபத்தைக் கட்டுப்படுத்தவும் கொஞ்சம் நீண்டு இழுத்து
'முருகா'என்பாள். முருகன் இதுவரை அம்மாவுக்கு உதவ முன்
வந்ததில்லை.முருகன் வந்து உதவும் முன்னரே சமர்த்தாக அவளே எல்லா
காரியங்களையும் செய்து முடித்து விடுவாள்.
அம்மா தனது பக்தியை எதற்காகவும் விட்டுக்கொடுக்காதவள்.இரண்டு
அறைகள் கொண்ட எங்கள் வீட்டில் ஓர் அறையை அம்மாவும் அப்பாவும்
எடுத்துக்கொள்ள மற்றொன்று சாமியறையானது.பத்து மணிக்கெல்லாம் பாய்
விரித்து ஹோலில் எனக்கான படுக்கையை அம்மா தயார் செய்துவிடுவாள்.
கொசுமருந்து கொழுத்திவிடுவாள். வெளிச்சமாக இருக்கிறதென முனங்கினால்
டிவிடியில் ரெஸ்லிங் பார்க்கும் அப்பாவிடம் கூட டிவியை
அடைத்துவிடும்படி சண்டையிடுவாள். ஒரே பிள்ளையென்பதால் அம்மாவுக்கு
என்மீது பிரியம் என்றாலும் தனது சாமி அறையை எத்தனைமுறை கேட்டும்
எனக்காக விட்டுக்கொடுத்ததில்லை.தனது சாமி அறையைப் பற்றி எந்நேரமும்
லட்சுமி அண்டியிடமும் பாஞ்சாலை கிழவியிடமும் பெருமைபட பேசிக்கொண்டே
இருப்பாள்.அம்மா அவர்களிடம் கூறியது போல இதுவரையில் முருகனின்
கையில் விபூதி ஒட்டிக் கிடந்தையோ பிள்ளையாரின் காலுக்கடியில்
குங்குமம் சிதறிக்கிடந்ததையோ நான் கண்டதில்லை.ஆனாலும் அம்மா
கொடுக்கும் விபூதி குங்குமத்தை மிக பக்தியுடன்அவர்கள்
பெற்றுக்கொள்வதைப்பார்க்க பெருமையாகவே இருக்கும்.வியாழக்கிழமை
எந்தச் சாமிக்கு உகந்தது என்றும் சாமி அறையில் என்ன வர்ணத்தில்
பல்பு எரிய விடலாம் என்பன போன்ற பக்தி மார்க்கமான கேள்விகளைச்
சுமந்து கொண்டு அவர்கள் அம்மாவை நாடி வருவது கூடுதல் சிறப்பு.அம்மா
எங்கள் கம்பத்தில் முக்கிய சமய வழிகாட்டியாக இருந்தாள் என்றுகூட
கூறலாம்.
மணி கிடைத்த அன்றே அம்மா அதை ஒரு காகிதத்தில் சுற்றி யார்
கண்ணிலும் படாமல் கோயிலுக்கு எடுத்துச்சென்றாள்.மாரியம்மனின்
காலடியில் வைத்து தண்ணீரில் கொஞ்சம் நனைத்து,நந்திக்கு பொட்டு
வைத்து, ஒரு முறை பூசாரி ஆட்டிப்பார்த்து,சில்க் சுமிதா இடுப்பில்
கட்டுவதுபோல் ஒரு சிறிய மஞ்சள் துணியை கட்டிவிட்டபிறகு, மணி எங்கள்
வீட்டு சாமி அறையில் புக தகுதி பெற்றது.
மறுநாள் மதியமே தெருக்கோடியில் இருக்கும் மாலா அக்கா மணி
சத்தத்தைப்பற்றி விசாரிக்கும் அளவிற்கு அம்மா அதை வேகமாகவும்
மூர்க்கமாகவும் கையாள கற்றிருந்தாள்.தினம் காலை இரவு என அம்மாவின்
மணியோசை ஓயாமல் கம்பத்தைச் சுற்றிவந்து கொண்டிருந்தது. மணியைப்
பற்றி விசாரிப்பவர்களிடம் அது தமிழகத்திலிருந்து
தருவிக்கப்பட்டதென்றும் ஆறுபடை வீட்டிலும் அர்ச்சனை செய்து அதை
ஊருக்குச் சென்றிருக்கும் தனது மாமனார் அனுப்பிவைத்திருப்ப தாகவும்
கூறினாள்.சிறப்பம்சம் கொண்ட அந்த மணியையும் அதன் ஓசையையும்
அம்மாவின் பூஜையையும் பார்க்க வெள்ளிக்கிழமை தோறும் சில பெண்கள்
வரத்தொடங்கினர்.வருபவர்கள் வெறுங்கை யுடன் வராமல் தங்கள் வீட்டு
தோட்டத்திலிருந்து கனகாம்பரம்,மல்லிகை என மலர்களையும்
வாழைப்பழங்களையும் கொண்டுவந்தனர்.நாளடைவில் வெள்ளிக்கிழமை தோறும்
எங்கள் வீட்டில் கூட்டம் சேர்ந்தது.
மணியடிப்பதில் அம்மா காட்டும் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்தது.
சாமி அறை மட்டுமல்லாது படுக்கையறை வரவேற்பறை குளியறை என சகல
இடங்களில் மணியை சுமந்து கொண்டு திரிந்தாள். பயத்தில் காய்ச்சல்
கண்ட குழந்தை களை தவறாமல் வீட்டிற்கு அழைத்துவந்து அம்மாவின்
மணயோசையை கேட்கவைப்பதில் பல தாய்மார்கள் அதிக அக்கறை
எடுத்துக்கொண்டனர். அம்மா கேட்காமலேயே தட்சணையாக சில்லரைகாசுகளைத்
தட்டில் வைத்தனர். அம்மா ஒரு போதும் அவற்றை எடுத்துப்
பயன்படுத்தியதில்லை. விபூதியில் மூழ்கி அவை நாணயம் என்பதற்கான
அடையாளத்தை இழந்து வணங்க வேண்டிய ஒன்றாக பரிணமித்திருந்தது.
சிறிது நாட்களில் அம்மாவின் சாமி அறையில் புகும் அனைத்துப்
பொருளுமே வணக்கத்திற்குரியதாக மாறிவிடும் அதிசயம் கண்டேன் . அதில்
எனது தமிழ் பாட நோட்டும் அடங்கும். முன் இரண்டு பக்கங்களில்
எழுதியிருந்த திருக்குறளைக் கிழித்துவிட்டு முருகனுக்கான சமஸ்கிருத
மந்திரத்தை எழுதி அதன் முகப்பில் சந்தனம் இட்டதோடு எனக்கும் அந்த
நோட்டுக்குமான தொடர்பு அற்றுப்போனது.அதை நான் தொட்டு வணங்கக்கூட
தொடங்கியிருந்தேன்.
சில நாட்களில் அம்மாவின் பெயர் முன்புறம், மணி ஒட்டிக்கொண்டு, மணி
மங்களம் என அழைக்கப்பட்டாள்.அவள் இப்போதெல்லாம் தெய்வ உருவப்
படங்களைவிட மணியை வணங்குவது அதிகரித்திருந்தது.அதிகாலை நான்கு
மணிக்கெல்லாம் எழுந்து மணிக்கு பூஜை செய்த பின்பே அதை பயன்படுத்தத்
தொடங்கினாள்.தனக்குத் தெரிந்த சொற்ப தமிழ் சொற்களைக்கொண்டு
மணிக்காக ஒரு பாடல்கூட இயற்றி பாடத்தொடங்கியிருந்தாள்.அம்மாவின்
புழக்கம் வீட்டில் குறைந்திருந்தது.காலை, இரவு என எந்நேரமும் சாமி
அறையிலேயே அம்மா மணியை ஆட்டிக்கொண்டிருந்தாள்.அம்மாவின் குரல் கூட
மணியோசைபோல மாறியிருந்தது. அம்மா, மணியின் மூலமாக ஏதோ பேசுவதாக
எனக்குத் தோன்றும்.
அம்மாவின் மணி சத்தம் தினமும் அறைக்குள் இருக்கும் அப்பாவின்
தூக்கத்தையே கெடுத்ததென்றால் என் தூக்கத்தைப்பற்றி கொஞ்சம்
நினைத்துப் பாருங்கள்.பூஜைகளுக்கு இடைவேளை கொடுக்கும் சொற்ப மணி
துளிகளில்தான் எங்களால் தூங்கவும் அம்மா தனக்கே உரிய சமையல்
,துவைத்தல் போன்ற கடமைகளில் ஈடுபட முடிந்தது.அதோடு அம்மாவின்
தூங்கும் நேரமும் வெகுவாகக் குறைந்திருந்தது.அம்மா எங்களிடம்
பேசுவதை பெரும்பாலும் குறைத்திருந் தாள்.அம்மாவை சந்திக்க
வருபவர்களிடமும் மணியோசையின் மூலமே பேசினாள்.அம்மாவின் மொழி
மாறியிருந்தது.
இப்படி சகல துன்பங்களும் கொடுத்த என் அம்மாவின் மணி ஒரு நாள்
காணாமல் போனது.
பின் விளைவுகள் :
என் அப்பாவும் அம்மாவும் பதினைந்து
ஆண்டுகளாகப் பேசிக்கொள்வதில்லை.
அம்மா, வீட்டை மாற்ற அடம்பிடித்து
இன்று ரூமா மூராவில் வசிக்கிறோம்.
எங்கள் கம்பத்து கச்சான்
காரருக்கும் வாடிக்கையாளர்களை
அழைக்க மணி கிடைத்துள்ளது.
நன்மைகள்:
நானும் அப்பாவும் நிம்மதியாகத் தூங்குகிறோம்.
புதிய வீட்டின் பக்கத்தில் சுகுனா இருக்கிறாள்.
|
|