|
டாக்டர் சபா
இராஜேந்திரன் எழுதி, சிங்கப்பூர்த் 'தங்கமீன் பதிப்பக' வெளியீடாக
மலர்ந்திருக்கும் 'கலவை' என்னும் சிறுகதைத் தொகுப்பில் பத்துச்
சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கதைகளின் சில தொடக்கங்களை
எடுத்துக் கொண்டு அவை படிப்போரின் வாசிப்பு ஆர்வத்தை எப்படித்
தூண்டுகின்றன என்றும், கதைத் தலைப்புக்குள், கதைமாந்தர்களின்
மனப்போக்குகள் குணநலன்கள் முதலியவற்றோடு அவை எவ்வாறு இணைந்து
செயல்படுகின்றன என்றும் கண்ணோட்டம் இடுவோம்.
'இன்னா செய்தாரை..' என்ற கதையின் தொடக்க வரிகள், 'ஒரு முடிவுக்கு
வர சாந்தியால் இயலவில்லை. இவனா? அல்லது அவனா?' என்று
தொடுக்கப்பட்டுள்ளன.
இந்த ஆரம்ப வாக்கியங்கள், சாந்தியின் முடிவு என்ன? அவளுடைய இவன்
யார்? அவளுடைய அவன் யார்? போன்ற கேள்விகளை எழுப்பி வாசகர்களின்
ஆவலைத் தூண்டிவிடுகின்றன.
சாந்தியின் முடிவு அவளுடைய வாழ்க்கைத்துணையைத் தெரிவு செய்வதுதான்.
இவன் என்பவன் சுதாகர். அவன் என்பவன் மூர்த்தி. இருவரும் சாந்தி
பயிலும் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள்; சிறந்த
படிப்பாளிகள்; பேச்சாளிகள்; அழகர்கள். இவர்களுள் யாரை மணந்து
கொள்வது என்பதை பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் சங்கத்தின் அந்த
வருடத்திய விவாதப் போட்டியில் வெற்றிபெறும் அணித்தலைவரை
முன்னிட்டுத்தான் என்று சாந்தி முடிவு செய்கிறாள்.
'மீண்டும் வேதாளம்' என்ற சிறுகதையின் துவக்கம், 'அடுத்தபடியாகத்
தான் என்ன செய்யவேண்டும் என்பதில் அவனுக்குச் சிறிதும் சந்தேகமே
இல்லை. ஆனால், அதை எப்படி நிறைவேற்றுவது என்று தீர்மானிப்பதில்தான்
அவனுக்குக் குழப்பம்' என்று எழுதப்பட்டுள்ளது.
'அவன் யார்? அவன் அடுத்தப்படியாக என்ன செய்ய வேண்டும்? அவன் அதனை
எப்படி நிறைவேற்ற வேண்டும்?' என்ற ஆர்வத் துடிப்போடு வாசகர்கள்
கதையைத் தொடர்ந்து வாசிக்கையில், அவன் சிவக்குமார் என்றும், அவன்
தற்கொலை செய்து கொள்ளப்போகிறான் என்றும் அறிந்து கொள்கிறார்கள்.
சிவக்குமார் தன் உயிர்த்துறப்பை எந்த வழியில் நிறைவேற்றுவான்?
தூக்க மாத்திரைகளை விழுங்கிச் சாவானா? நஞ்சு அருந்தி மாய்வானா?
கடலில் மூழ்கி இறப்பானா? மலையிலிருந்து கீழே விழுந்து உயிரை
விடுவானா? சிவக்குமாரின் தீர்மானம் மலையில்தான் தன்னுடைய மரிப்பு
என முடிவாகிறது.
சிவக்குமார் எதற்காகத் தற்கொலை செய்து கொள்ள முற்படுகிறான்? தன்
ஒரே சொத்தான வீட்டை விற்று, அதை பங்குச் சந்தையில் போட்டு,
சிவக்குமார் நஷ்டமடைகிறான். அவன் உறவினர்களும் நண்பர்களும் பகடி
செய்து, அவனை மிகவும் அவமானப்படுத்தி விடுகிறார்கள்.
'தடுமாற்றம்' சிறுகதை, 'இந்த இரண்டு வருடங்களில் சிதம்பரநாதனின்
வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது; என்று ஆரம்பமாகிறது.
சிதம்பரநாதனின் வாழ்க்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற
நிகழ்ச்சிகள், அவரை இன்று ஓர் இக்கட்டில் சிக்க வைத்துள்ளன.
அவருடைய தடுமாற்றம் கதையின் 'தடுமாற்றம்' என்ற தலைப்போடு
பொருந்திவருவதாய் அமைந்துள்ளது.
ஓய்வுபெற்ற சிதம்பரநாதன் தாரம் இழந்தவர். கோல்ப் விளையாட அவர்
அடிக்கடி தாய்லாந்து செல்கிறார். விளையாட்டோடு அவர் அங்குக் காமக்
களியாட்டங்களில் திளைக்கிறார். மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற
தேசங்களுக்குப் போய், அங்குள்ள சூதாட்ட மடங்களில் சூதும்
ஆடுகிறார். சேமிப்புப் பணம் கரைந்து, சார்ல்ஸ் என்பவனிடம் அவர் ஓர்
இலட்சம் வெள்ளிக்குக் கடனாளி ஆகின்றார். தம் பாக்கியைத் தீர்க்க,
அவர் போதைப் பொருள் கடத்தும் ஒரு சூழலுக்குத் தள்ளப்படுகிறார்.
சிங்கப்பூரில் மரண தண்டனையை அளிக்கும் அந்தக் குற்றத்தைதான்
செய்வதா, கூடாதா என்ற ஒரு தடுமாற்ற நிலையில் சிதம்பரநாதன்
உழல்கிறார்.
'ஒரு தீர்ப்பு முழுமையானது' என்ற கதையின் தலைப்போடு
சம்பந்தப்படுத்திக்கொண்டு, 'அன்றைய தினம் சிவப்பிரகாசம் படித்துப்
பார்க்க வேண்டிய வழக்குகள் இரண்டு இருந்தன' என்று அந்தக் கதையின்
ஆரம்ப வாக்கியம் தொடங்குகிறது.
சிவப்பிரகாசம் விசாரிக்கவிருக்கும் ஒரு வழக்கின் உள்ளீடு, அவருடைய
பதின்மவயது தோழன் பாலுவின் அகால மரணத்தை அவருக்கு ஞாபகப்
படுத்துகிறது. குடிகார கணவனால் பாலுவின் தாயார் பல கொடுமைகளுக்கு
உள்ளானாள். அவற்றைக் கண்டு மனம் நைந்து உடல் நலிவுற்ற பாலு,
"அம்மாவை அடிக்காதீங்க! அம்மாவை அடிக்காதீங்க!" என்று ஜூர
வேகத்தில் பிதற்றியபடியே உயிர்விட்டான்.
தம் வழக்கின் தீர்ப்பில், மிகுந்த குடிபோதைக்கு ஆளான ஒரு
கணவனிடமிருந்து அவன் மனைவிக்கு விடுதலை பெற்றுத்தரும் நோக்கில்
அவளுக்கு விவாகரத்து அளிக்கிறார் நீதிபதி சிவப்பிரகாசம்.
'பாடங்கள் பலவிதம்' என்ற சிறுகதை, ' அன்று சிவராமனுக்கு மனசு ஒரு
நிலையில் இல்லாதவாறு அங்குமிங்கும் அலைமோதிக்கொண் டிருந்தது' என்று
ஆரம்பமாகிறது.
சிவராமன் நிலையில்லாமல் தவிப்பதற்கு அவருடைய சபல மனமே காரணம். அவர்
மனைவி உயிரோடு இல்லை. அவர் தம் சக பெண் ஊழியர்களைப் பற்பல
தினுசுகளிலே கற்பனை செய்து விரகதாபத்தில் வெந்து குமைகிறார்.
'ஒரு மாணவன்- ஓர் ஆசிரியை- ஒரு நாள்' என்ற கதையில், 'அவளால் தன்
காதுகளை நம்ப முடியவில்லை. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா?'
என்று தொடக்கம் அமைந்துள்ளது.
டாக்டர் கோகிலா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஓர் இணைப்
பேராசிரியை. அவளுக்கு வயது முப்பத்தாறு. அவளிடம் முதுகலை வகுப்பில்
படிக்கும் ஒரு மாணவன் சேகர். அவளைவிட ஆறு வயது இளையவனான அவன்,
கோகிலாவைக் காதலிக்கிறான்; திருமணம் புரிவதற்கு அவள் ஒப்புதலையும்
பெற்றுவிடுகிறான். அவர்களின் திருமணத்தைத் தடுக்க, சேகரின்
தந்தையான குமாரசாமி, தம் நண்பர் வரதனின் யோசனைப்படி கோகிலாவைத்
தாமே மணக்க விரும்புவதாக அவளிடம் கூறுகிறார். இதைக் கேட்கும்
கோகிலாவால் தன் செவிகளை நம்ப முடியவில்லை. குமாரசாமி, வரதன் போன்று
இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று அவள் விதிர்த்துப்
போகிறாள்.
'கலவை' சிறுகதையின் தொடக்க வாக்கியங்கள், 'மனிதன் என்பவன் ஒரு
கலவை. நல்ல குணங்களும், கெட்ட குணங்களும் சேர்ந்த ஒரு
கலவை'என்பதாகப் பதிவாகியுள்ளன.
இவ்வரிகள் சிறுகதையின் 'கலவை' என்ற தலைப்போடு ஒன்றி இருப்பதோடு
கதையில் வருகின்ற நல்ல மாணவனான சிவக்குமாரனையும், கெட்ட மாணவனான
ரமணியையும் சுட்டிக்காட்டுகின்றன. மேலும், இந்த வாக்கியங்கள்,
தொகுப்பிலுள்ள அனைத்துக் கதைகளின் கதாமாந்தர்களையும்
பிரதிபலிக்கக்கூடியனவாயும் ஒளிர்கின்றன.
ரோஜாவும் அதன் முள்ளும்போல, சந்திரனும் அதன் களங்கமும் போல, சேறும்
அதிலுள்ள தாமரையும் போல, மனிதன் என்பவன் நல்ல குணங்களும் தீய
குணங்களும் அமைந்த ஒரு கலவை ஆவான். அவனிடம் தேவதையும் சாத்தானும்
ஒரு சேரக் குடிகொண்டி ருக்கிறார்கள். நிஜ உலகிலும் சரி கதை
உலகிலும் சரி நூறு சதவிகிதம் நல்லவர்கள் என்று யாரும் இல்லை.
அதேபோன்று, நூறு விழுக்காடு கெட்டவர்கள் என எவரும் இல்லை.
Goodness is hidden in evilness. Likewise evilness is hidden in
goodness. நல்லது என்பது கெட்டதிலும் கெட்டது என்பது நல்லதிலும்
மறைந்து கிடக்கின்றன.
'கலவை' கதையில் உலவும் நல்லவனான சிவக்குமாரனிடமும் சில கெட்ட
தன்மைகள் உண்டு. கெட்டவனான வனிடமும் நல்ல அம்சங்கள் சில
உறைந்துள்ளன.
'தடுமாற்றம்' சிறுகதையில் போதைப்பொருள் கடத்தும் சூழலில் சிக்கும்
சிதம்பரநாதன், அக்குற்றத்தைப் புரியாமல், போதைப் பொருள் பாவித்தோர்
மறுவாழ்வு மையத்தில் தொண்டூழியம் செய்யப்போகிறார்.
'தண்டனையைத் தேடி' படைப்பில், புனிதாவிற்குக் கடந்த மூன்று
ஆண்டுகளாக நல்ல கண வனாய்த் தோற்றம் தந்த கோபால், தன் அந்தரங்க
வாழ்க்கையில் ரேகா என்பவளைக் கெடுத்து, அவளை ஏமாற்றிய ஒரு துரோகியே
என்பது அவளுக்குப் பிறகுதான் தெரிய வருகிறது.
'நெஞ்சினிலே நெருப்பு' ஆக்கத்தில் அறிமுகமாகும் கிருஷ்ணன், தேவதை
குணத்திற்கும் சாத்தான் குணத்திற்கும் இடையே ஊசலாட்டம் போடுகிறார்.
ஒரு சிறுகதையின் கூறுகளுள் அதன் தொடக்கம் மிகவும் இன்றியமையாதது.
இதனை நன்கு உணர்ந்த சிறுகதைப் படைப்பாளரான டாக்டர் சபா
இராஜேந்திரன், அதிகக் கவனம் செலுத்தித் தம் சிறுகதைகளின்
ஆரம்பங்களை வடிவமைத்திருக்கிறார். அவை வாசகர்களிடம் படிக்கும்
ஆர்வத்தைத் தூண்டி அவர்களைக் கதைகளோடு தக்க வைத்துக் கொள்வதோடு
கதைத் தலைப்புகள், கதை மாந்தர்களின் மனப்போக்குகள், குணக் கலவைகள்
முதலியவற்றோடு இணைந்தும் காரியம் ஆற்றுகின்றன.
கதைத் தொடக்கங்களைப் பாங்குடன் அமைக்கும் இந்தத் திறனே, ஆசிரியரின்
கதை சொல்லும் தோரணைக்குக் கூடுதல் மெருகு தந்து, கதைகளை வாசகர்கள்
தடையின்றிப் படிக்கவும் உதவி செய்கின்றது.
|
|