முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 30
ஜூன் 2011

  மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள் ...5
ஏ. தேவராஜன்
 
 
       
நேர்காணல்:

“பயங்கரங்களை மட்டுமே விரும்புகிற அரசும் அதன் படைகளும் இழைத்தவை எல்லாமே குற்றங்கள்தான்”

தீபச்செல்வன்



பத்தி:

மே தினம் 2011 : பல்லின சங்கமத்தில் ஒரு நாள்
சு. யுவராஜன்

மே மாதம் : அமெரிக்கா, சிங்கப்பூர், தமிழ்நாடு
கெ. எல்.



புத்தகப்பார்வை:

பறவையின் தடங்கள் : மலாய் மொழிக்கவிதைகள்
பாவண்ணன்



கேள்வி பதில்:

ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்தி



தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...12
எம். ஜி. சுரேஷ்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

சுவடுகள் பதிவுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு
ம‌. ந‌வீன்

தர்மினி பக்கம்
தர்மினி

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...20

ஷம்மி முத்துவேல்

வீ. நித்தியா

ஏ. தேவராஜன்



எதிர்வினை

மனநோயாளிகளிடையே என் அப்பாவின் பால்யம்!

 

இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கிய நாள் 16 மே. கல்விச்சூழலைப் பற்றி எழுதி வருகின்ற இந்தக் கட்டுரையில் இடைச்செருகலாக இதையும் சொல்வது ஒரு பதிவு நிமித்தம்தான். ஊரே ஆசிரியர் தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கின்ற சூழலில் அப்பாவின் இறந்த தினத்தை அனுசரிக்கின்ற நிலையில் உள்ளேன். தமிழ்ப்பள்ளிக்கும் அப்பாவுக்கும் நெருப்பான தொடர்புண்டு.நான் வசித்த தோட்டத்தில் என் அப்பாவைப் போல ஒரு மதுப்பித்தரைப் பார்க்க முடியாது. அவர் இரண்டு ஆட்களாக உருமாறியபோதெல்லாம் இரண்டாமவர்தான் அவரைப் பிரதிநிதித்து தத்துவங்களை உதிர்ப்பார். சில நேரங்களில் மலைப்பிரசங்கத்தைக் கேட்பதுபோல் அவரைச் சுற்றி ஒரு கூட்டம் சதா இருந்துகொண்டே இருக்கும். ஒரு கூட்டம் ஊற்றிக்கொடுக்க,மற்றொரு கூட்டம் கேட்டுத் தலையாட்ட. நான் அப்பாவுக்கு இந்த இரண்டு வேலைகளைவிட மேலும் ஒரு முக்கியமான வேலை செய்திருக்கிறேன். அதுதான் சாராயம் காய்ச்சுவது! கள்ளச் சாராயம் காய்ச்சுகின்ற நுணுக்கங்களும் அதன் காட்டமும் எனக்குத் தெரியும். பள்ளி விட்டு வந்ததும் எட்டு வயதிலேயே சாராயக் காட்டத்தை உணர்வதற்காக நான் அளவுமானியாக இருந்திருக்கிறேன். தேவபானத்தைப் பருகியதால்தான் என்னவோ எனக்குத் தேவராஜன் என்று பெயர் சூட்டினாரோ என்னவோ! அதைப் பருகியவுடன் அதிக எரிச்சலில் என் முகம் கோணல் மாணலாய்ச் சுருங்கும்போது போதுன்டாவென நிறுத்தச் சொல்லிவிட்டு நானும் அவருமாகச் சேர்ந்து கால்புட்டியில் நிரப்புவோம்.கோயில் திருவிழாக் காலங்களில் கோயிலைவிட எங்கள் வீட்டு வாசற்படியில்தான் ஆட்கள் அதிகமாக இருப்பர். குடிகாரர்களின் ரோதனை பொல்லாப்பாய் இருக்கும். சரிந்து கிடக்கும் அவர்களைச் சரிப்படுத்துவது என் வேலை.அம்மாவுக்குக் கோபம் தலைக்கேறி பால்காட்டுக்குள் தற்கொலை செய்துபோனது இன்னமும் ஞாபகத்திற்குள் உள்ளது.

அப்பாவுக்கு அரசியல், இலக்கியம், சோதிடம், ஹோக்கியென், ஜப்பான் என ஏகப்பட்ட சமாச்சாரங்கள் தெரிந்திருக்கின்றன. அவர்களைப் போல் பேசுவார், அவர்களைப் போல் சமைப்பார் என அடுக்கலாம். அவரது பால்யத்தின் பெரும்பகுதி அவர்களோடே கழிந்தது. இதில் வியப்புக்குரியது என்னவென்றால் சீனனுக்கும் ஜப்பானுக்கும் ஆகாது, எப்படி இரண்டையும் கற்றுக்கொண்டார்? இருசாராரின் பக்கம் வேலை பார்த்தாரா, வேவு பார்த்தாரா? அது இருக்கட்டும். இவற்றையெல்லாம்விட தமிழில் சொல்லத்தக்க பாண்டித்தியம் பெற்றிருந்தார். தடிமனான புத்தகங்கள் பல அவரிடம் இருந்து பின்னாளில் காணாமற் போயின. சிலவற்றைப் படிக்கவியலாமல் நானே கிழித்துப்போட்டு வாங்கிக் கட்டிக்கொண்டேன். கிழித்தது நானெனும் வாக்குமூலம் ஒருபுறமிருக்க, காணாமற்போன புத்தகங்கள் பற்றிச் சில சம்பவங்களோடு ஒப்பு நோக்கும்போது இந்தப் புத்தகங்கள் அநேகமாக யாருடைய கைக்கு மாறியிருக்கும் என நினைக்கிறீர்கள்? இது பற்றி அப்பாவிடம் பிறிதொருநாள் கேட்டேன். தாமாக வாய் திறந்து சொல்லாமல் உரிய காலத்தில் அது எனக்குத் தெரியவருன்டா என்று பட்டும் படாமலும் கூறி, அப்பொழுதே ஆசிரியராக வந்திருக்க வேண்டியவரென்று அவர் சொன்னதுண்டு.சொன்னது உண்மையாகத்தானிருக்கும் என்று இப்பொழுது நம்புகிறேன். தமது 73 வது வயதில் அவர் காலமாவதற்குச் சில தினங்களுக்கு முன்பு, செலவு சாமான்களை வாங்குவதற்காகத் தாம் எழுதிய கையெழுத்துகள்கூட ஒற்றுப் பிழைகளின்றியும் பிசிறின்றியும் தெளிவாக இருந்தன. அப்பா இறந்த சில மாதங்களுக்குப் பின் அவரது நண்பரை ஏதேச்சையாக குடியிருப்புப் பகுதியில் சந்திக்க நேர்ந்தது. மிகவும் கட்டுக்கோப்பான ஆசிரியர் என்றும் அவரிடம் படித்த மாணவர்கள் யாரும் சோடை போனதில்லை என்று பெயர் வாங்கியவர். தட்டச்சுப் பொறிகளைப் பயன்படுத்தாமலேயே மணிமணியாக எழுதக் கூடியவரென்பதை அவர் எழுதிய கையெழுத்துப் பிரதிகளையும் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்ட நிகழ்வறிக்கைகளையும் பார்த்துப் புரிந்துகொண்டேன். மூப்புத் தளர்வும் உடல் நடுக்க நோவும் அவரை வெகுவாகத் தாக்கியிருந்தன. வார்த்தைகள் தாமதப்பட்டே வெளிவந்தன. அப்பாவைப் பற்றி எக்கச் சக்கமாகச் சொன்னார். இந்த ஆசிரியரை அடிக்கடி இங்குள்ள பொது நூலகத்தில் பார்த்துள்ளேன். பள்ளி வேலைக்காக மீள்பார்வை செய்துகொண்டிருந்தபோது அவர் தமிழ்ப்பத்திரிகைகளில் மையங்கொண்டிருந்தார். நேருக்கு நேர் சந்தித்தும் பேசாத அவர் இப்பொழுது வலிய வந்து பேசுவதன் மர்மம் என்ன எனும் குடைச்சல் எனக்குள். என் அப்பாவைப் பற்றி அந்த ஆசிரியர் கூறியவற்றை அப்படியே தருகிறேன்:

“தேவராஜன், உங்கப்பாவும் நானும் ஒரே தோட்டத்துல பிறந்து வளர்ந்தவங்க. அவரு மாதிரி திறமையான ஆளைப் பார்த்தது கிடையாதப்பா. ரொம்ப தங்கமான மனசு! ஆனா மத்தவங்களுக்காகவே வாழ்ந்து தன்னைக் கவனிக்காம விட்டுட்டாரு. உங்க சித்தப்பாவைப் படிக்க வைக்க அப்பவே கான்வென்டுக்குச் சைக்கிள் எல்லாம் வாங்கிக் கொடுத்து அனுப்பி வெச்சாரு தெரியுமா? நானும் ஒங்க சித்தப்பாவும் அவ்வளவு கூட்டாளி. என்னா... குடிப்பழக்கத்துக்கு மட்டும் உங்கப்பா அடிமையாகாம இருந்தா ஆளு எப்படியிருப்பாரு தெரியுமா?”

நல்லதையும் கெட்டதையும் சரிவிகிதமாய்ச் சொல்லிக்கொண்டு என்னையும் கேட்கவிடாது அந்த ஆசிரியரே சவித்தாரமாய்ச் சொல்லிக்கொண்டு போனது மனத்துக்குள் இனம்புரியாப் பெருமிதத்தைக் கிளர்த்தியது. ஆனாலும், இந்த ஆசிரியர் ஏன் இத்தனை நாட்களாக எத்தனையோ சந்தர்ப்பங்கள் வாய்த்தும் இது பற்றி ஒரு வார்த்தைகூட என்னிடம் மூச்சுவிடவில்லை என்ற நெருடலையும் தவிர்க்க முடியவில்லை. ஒரே வட்டாரத்தில் வசித்தாலும் ஏன் ஒரு தடவைகூட வந்து அப்பாவைப் பார்க்கவில்லை? வீடு வாகன லாகரி எல்லாம் இருந்தும், அப்பாவின் இறுதிச் சடங்கின்போதாவது வந்து பார்த்திருக்கலாமே? அப்பாவின் மரணத்தின்போது பழையவர்கள் பலரும் வந்திருந்தனர். பழக்கமில்லாத மாநில முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஆர். இராகவனும், தென்றல் ஆசிரியர் வித்தியாசகரும், பாலகோபால நம்பியாரும் எனப் பல வந்திருக்க, பால்ய நட்பென்று சொல்லிக்கொண்டிருக்கும் இவர் ஏன் வரவில்லை? இவர் மட்டுமல்ல, இவரைப் போன்ற ஆசிரியர்கள் யாரும் என் கண்களுக்குத் தட்டுப்படவில்லை. மரணத்தில் மக்கள் கூட வேண்டுமென்பது எனது வாதமல்ல, நட்புக்கு என்ன பொருள் என்பதுதான் எனது கேள்வி.

இப்பொழுது அந்த ஆசிரியரால் ஆள் துணையின்றி ஓரடிகூட எடுத்து வைக்க இயலாது என்பது போல எழுந்திருக்க முயன்றார். தண்ணியெல்லாம் வேண்டாம் சார் என அவரைத் தடுக்க முயன்றேன்.

“இல்லப்ப்பா நான் என் கையாலே உங்கிட்ட கொடுக்கணும். அதான் மரியாதை” என்றவாறு மனைவியின் துணையுடன் பின் பக்கமாக மெல்ல நடந்தார். அவரை பார்க்க மனம் மிகவும் வலித்தது. ஒரு காலத்தில் எப்படி இருந்த உடம்பு, இப்படியாகிவிட்டதே!

அவர் பெயரைச் சொன்னாலே அடங்கிப் போகும் மாணவர்க் குழாமைக் கட்டியாண்டவர்! தரமான அசிரியர்! கம்பீரமான குரலும் உச்சரிப்பும் இப்பொழுது எங்கே போய் மறைந்துவிட்டன! எல்லோருடைய அந்திமமும் இப்படித்தான் இருளால் மெல்ல கவியுமா?

ஆசிரியர் நெகிழிப் பொட்டலத்தை இறுகப் பற்றிக்கொண்டு எனை நோக்கி வந்து அருகில் அமர்ந்துகொண்டபோது அன்பளிப்பேதும் தரப்போகிறாரோ என சின்ன மகிழ்ச்சி சில்லிட்டது. பொட்டலத்தைத் திறந்த வயோதிக ஆசிரியர் அதிலிருந்து சிலவற்றை மேசையின் மீது கிடத்தி,

“தேவராஜன்! நீ தமிழ் இலக்கியத்துல ஆர்வம் உள்ளவன்னு ரொம்ப நாளாவே எனக்குத் தெரியும். இதெல்லாம் ரொம்ப அற்புதமான புத்தகங்கள். உனக்கு ரொம்ப உபயோகப்படும்.அந்தக் காலத்துல எழுதுனவங்களோட. எங்கப் போயி தேடினாலும் இந்த மாதிரியான புத்தகங்கள் கிடைக்கவே கிடைக்காது. ரொம்பப் பத்திரப்படுத்தி இனிமே என்ன செய்யப்போறேன்? கரையான் சாப்பிட்றதவிட நீயே பயன்படுத்திக்கலாமே,” என்றார்.

“சார்! இதை தமிழ்ப்பள்ளி நூலகத்துக்குக் கொடுக்கலாமே?” எனக் கேட்டேன்.

பின்னால் நின்றுகொண்டிருந்த அந்த அம்மா அடுக்களைக்கு நகர்ந்துவிட்டார்.

“இந்தப் புத்தகங்கள் எல்லாம் உங்க அப்பாவோட! அதனால முறையா உனக்குத்தான் சேரணும்!” என்றார். மனம் பகீரென்றது எனக்கு. இவ்வளவு நேரம் பேசிய மனிதர் கடைசி கடைசியாக ஒப்புக்குச் சொன்னது மனத்தை இரணப்படுத்தியது. தமிழ்ப் புத்தகத்துக்கும் அப்பாவுடனான நட்புக்கும் இதுதான் அழகா என்று என் மனம் அதிகபட்ச யோசனைக்கு இடம் தராமல் கொந்தளித்தது. புத்தகத் திருட்டுக்கும் மோசடிக்கும் சிறுபிள்ளைத்தனமான சில்மிஷங்களுக்கும் ஆசிரியர்கள் ‘பேர் போனவர்கள்’ என்று மீண்டும் உணர முடிந்தது. இன்றுகூட தமிழாசிரியர்களில் பலருக்குப் பாடப் புத்தகத்தையும் மிஞ்சிப்போனால் அன்றைக்கான தினசரிகளையும் அல்லது கொஞ்சம் மிகையாக தேவாரம் திருவாசகம் மட்டுமே அத்துப்படி. பிறவற்றை மருந்துக்கும் காசு போட்டு வாங்குவது கிடையாது. அவற்றிலிருந்து பெரும் பலன் கிடைக்குமா என்பதுதான் அவர்களைப் பீடித்திருக்கின்ற மனநோய்! தமிழைக் கொண்டு சென்றவர்கள் பெருமையும் இலக்கியத்தைச் சாகடித்தவர்கள் என்ற சிறுமையும் ஒருசேர அமையப் பெற்றவர்கள்தான் நான் கண்ட தமிழாசிரியர்கள்! இப்படிச் சொல்வதனால் மீண்டும் பலருக்குப் பகைவனாய் மாறுவேன்!

என் அப்பாவைக் கனம் பண்ண வேண்டும் விதமாய், அந்தப் புத்தகங்களை அப்படியே அந்த இடத்திலேயே வைத்துவிட்டு இல்லம் திரும்பிவிட்டேன். இது போல் எத்தனையெத்தனை ஆசிரியர்களோ தெரியவில்லை.அந்த ஆசிரியரின் பெயர், விலாசம் ஆகியவற்றை இங்குச் சொல்வது அழகல்ல. ஆசிரியர்களிடம் பாடத்தை மட்டும் கற்றுக்கொள்ளலாம். அப்பாவிடம் வாழ்க்கையையே கற்றுக்கொள்ளலாம்! என் அப்பாவின் பெயர் திரு ஏசுதாஸ் த/பெ ஏசையா த/பெ மாணிக்கம் பிள்ளை த/பெ ? தெரியாது! கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் சென்று கேட்டால் பூர்வீகம் தெரியும்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2011.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768