முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 34
அக்டோபர் 2011

  ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்தி
 
 
       
கட்டுரை:

உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு : பாலில் விழுந்த நஞ்சு
ம. நவீன்நேர்காணல்:

“வன்முறைதான் மிகக் கவர்ச்சியான ஒன்றாகத் தெரிகிறது” றியாஸ் குறானாவுடன் உரையாடல்: பாகம் 1
ம. நவீன் - கே. பாலமுருகன்


பத்தி:

தேர்தலும் கலர் துண்டும்

கே. பாலமுருகன்

புலம்பெயர் முகங்கள் ...2

வி. ஜீவகுமாரன்


சிறுகதை:

தமிழ்க்கதை
யோ. கர்ணன்பதிவு:

தூது போகும் போராளிகளும், போராடும் தூதுவர்களும்...
தயாஜிஎதிர்வினை


கேள்வி பதில்:

ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்திக‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

நிலத்தினும் பெரிதே
ரவிக்குமார்

மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு

விருந்தாளிகள் விட்டு செல்லும் வாழ்வு
ம. நவீன்

தர்மினி பக்கம்
தர்மினி


கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...24

ந. பெரியசாமி

மாதங்கி

லதாமகன்

வ.ஐ.ச. ஜெயபாலன்

ஷம்மி முத்துவேல்

ரவிக்குமார்

தேனு

ஒவ்வொரு மாதமும் வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எழுத்தாளர் ஷோபாசக்தி பதில் அளிப்பார். கேள்விகளை ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதிக்குள் editor@vallinam.com.my என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவிடும்படி கேட்டுக்கொள்கிறோம்.


கனடாவில் நடந்த கூட்டமொன்றில் "எழுத்தாளனும் ஒரு போராளிதான்" என்ற வகையில் ஒரு கருத்தை சொல்லியிருந்தீர்கள். ஒரு நல்ல எழுத்தாளனுக்கு இந்த விதி பொருந்தும். ஆனால் செயலில் ஒன்றும் எழுத்தில் இன்னொன்றுமாக செயல்படும் போலி எழுத்தாளர்களுக்கு இந்த விதி பொருந்தாதே. பல்கிப் பெருகும் இந்தப் போலிகளில் பலர் உங்கள் நண்பர்களாக இருக்கிறார்களே?

 செல்வன் - கனடா

நான் உங்களது குற்றச்சாட்டை மறுக்கிறேன்!! சேரன், கி. பி. அரவிந்தன், க. வாசுதேவன், தமிழ்நதி, யமுனா ராஜேந்திரன் ஆகியோர் ஒருபோதும் எனது நண்பர்களாக இருந்ததில்லை.


இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் மார்க்ஸிச அறிவு ஏற்படுவது எதிர்காலத்தில் ஆரோக்கியமானதா?

ஜெ. நிவர்சன்

மார்க்ஸியத்தின் அடிப்படைகள் 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியல் அய்ரோப்பியச் சூழலில் உருவாகியவை. கார்ல் மார்க்ஸுக்கும் தனக்குமான கால இடைவெளியில் நிகழ்ந்த சமூக மாற்றங்களை ஆய்வு செய்து எழுத இன்னும் எழுபது மார்க்ஸுகள் தேவை என்றார் லெனின். நாங்கள் இப்போது லெனின் காலத்திலிருந்து நூறு வருடங்களைக் கடந்து வந்துவிட்டோம். இந்தக் கால இடைவெளியோடு இந்தியா - இலங்கை போன்ற சாதியச் சமூகங்களிற்கான குறிப்பான பண்பாட்டுப் பிரச்சினைப்பாடுகளையும் பின்காலனியச் சூழல் தோற்றுவித்திருக்கும் குறிப்பான தேசிய இன முரண்களையும் நாம் கவனத்தில் எடுத்தாக வேண்டும். நமது மார்க்ஸியப் பேராசான்கள் கிட்டத்தட்டப் புரட்சிக்கு நாளே குறித்திருந்தார்கள். 'ஜெர்மனியில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் பாட்டாளி வர்க்கப் புரட்சி தெரிகிறது' என நம்பிக்கையோடு எழுதினார் ஏங்கெல்ஸ். எனினும் தனக்கு ஏற்பட்ட அத்தனை வரலாற்று நெருக்கடிகளையும் சமாளித்துக்கொண்டு நம் காலத்தில் ஏகாதிபத்தியங்களாக உருக்கொண்டு உலகமயமாக்கல் என்ற பெயரில் தேசிய எல்லைகளைக் கடந்து மூலதனத்தைப் பாய்ச்சுவதையும் முதலாளித்துவம் செய்திருக்கிறது. தேசங்களின் இறையாண்மையையே மூலதனம் சவால் செய்யும் காலம் இது.

எனவே இந்தக் குறிப்பான பிரச்சினைகளைக் கவனத்தில் எடுத்தே இன்றைக்கான மார்க்ஸியத்தை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும். ஈழப் போராட்டத்தின் தொடக்க காலத்திலிருந்தே 'மண்ணுக்கேற்ற மார்க்ஸியம்', 'கீழை மார்க்ஸியம்' என்றவாறான விவாதங்கள் நடத்தப்பட்டுத்தான் வந்தன. எனினும் அவ்வகையான உரையாடல்கள் தொடராமலேயே போய்விட்டன. வர்க்கப் புரட்சி அல்லது ஒரு பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு நோக்கி மார்க்ஸிய இயக்கத்தைக் கட்டியெழுப்பும் அதீத கனவுகள் குறித்தெல்லாம் நான் பேசவில்லை. இலங்கையின் இன்றைய அரசியல் சூழலையும், உலகமயமாக்கலின் நச்சுச் சூழலையும் புரிந்துகொள்வதற்கும் அதிகாரத்தை நோக்கிய எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கவும் மார்க்ஸிய சித்தாந்தம் நமக்கான அறிவுசார் கருவிகளில் ஒன்று.

கம்யூனிஸம் மனித குலத்தின் மனசாட்சி என்றார் கபிரியல் பெரி. ஒருவர் கம்யூனிஸ்டாகத் தன்னை அடையாளம் கண்டுகொள்வது அரசியல் செயற்பாடுகளிற்கு அப்பால் தனிப்பட்ட முறையில் பரந்த சமூகப் பார்வையையும் போர்க்குணத்தையும் நேர்மைத்திறத்தையும் எளிமையையும் அவருக்கு அளிக்கும் என்பது எனது நம்பிக்கை. எனது இந்த நம்பிக்கையை நான் சந்தித்த பல கம்யூனிஸ்டுகள் எனக்கு நிரூபணமும் செய்திருக்கிறார்கள்.


ஷோபா, உங்கள் வாதங்களெல்லாம் சரி. என்னுடைய கேள்வி ஒன்றுதான். தமிழர்களுக்கென ஒரு நாடு உருவாக நீங்கள் விரும்புகிறீர்களா இல்லையா? இப்போது எம் மக்களுக்காகப் போராடியவர்கள் இல்லாத சூழலில் அவர்கள் அனாதைகள் போல இன்னலுக்குள்ளாக்கப்படுகிறார்களே… அதற்கு என்ன பதில்?
மிருதன்

எங்களுக்கென ஒரு நாடு உருவாக வேண்டும் என்ற விருப்பத்தில்தானே நானும் என்போன்ற ஆயிரக்கணக்கானவர்களும் ஈழப் போராட்டத்தில் எங்களை இணைத்துக்கொண்டோம். தோழா! நாங்கள் கேட்டது தமிழீழம், கிடைத்ததோ கிறீஸ் பூதம். இந்த எதார்த்தச் சூழலிலிருந்துதான் என்னால் உங்களது கேள்விக்குப் பதிலளிக்க முடியும்.

இன்றைய உலக அரசியற் சூழலில் தமிழீழம் என்பது சாத்தியமே இல்லை என்பதுதான் உண்மை. ராசதந்திரப் போராட்டத்தால் தமிழீழத்தைப் பெற்றுவிடலாம் என நாடு கடந்த அரசாங்கம் போன்ற அமைப்புகள் சொல்லிவருவதெல்லாம் எந்தவித அரசியற் தர்க்கத்திற்கும் உட்படாத வீணபேச்சுகளே. பிரபாகரன் மீண்டும் வருவார், அய்தாம் கட்ட ஈழப்போரில் கொழும்பு சிதறும் என்றவாறெல்லாம் தமிழகத்துத் தமிழ்த் தேசிய இயக்கங்கள் கற்பனைகளைப் பேசுவது தமிழகத்தில் அவர்களது அரசியற் செல்வாக்கை சிறிதளவு வளர்க்க மட்டுமே தற்காலிகமாகப் பயன்படலாம். இதற்காக இன்று மரணதண்டனைக்கு எதிராக அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களையும் இலங்கை இனவாத அரசிற்கு எதிரான அவர்களது போராட்டச் செயற்பாடுகளையும் நான் குறைத்து மதிப்பிடுகிறேன் என்றாகாது. தமிழர்களும் சிங்களர்களும் இனிச் சேர்ந்துவாழ முடியாது என அவர்கள் அறிக்கையிட்டுத் தமிழீழமே தீர்வென அவர்கள் முழுங்குவதை, இலங்கையின் இனமுரண்களின் உள்ளார்ந்த சிக்கல்களை அவர்கள் புரிந்துகொள்ளாமல் எளிமையான அரசியல் கற்பனாவாதங்களில் அவர்கள் மூழ்கியிருப்பதாகவே புரிந்துகொள்ள முடியும்.

இலங்கைத் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள். ஆனால் அந்த உரிமையை நாம் கனவிலிலும் நெருங்க முடியாதவாறே இன்றைய அரசியல் சூழல்கள் அமைந்துள்ளன. இலங்கையில் இன்னும் நாடாளுமன்ற சனநாயகம் நீடிப்பது மட்டுமே இன்று தமிழர்களிற்குள்ள சிறிய நம்பிக்கைக் கீற்று. எனினும் நாட்டின் மொத்த சனத்தொகையில் நமது சனத்தொகை வீதம் பத்து விழுக்காட்டை அண்மித்ததாகவேயுள்ளது. வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் குவித்தாலும் இருபதிலிருந்து முப்பதுவரையான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களே நாடாளுமன்றத்தில் இருப்பார்கள். தமிழர்களின் அரசியல் உரிமைகள் குறித்த எந்த முன்னெடுப்பும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைச் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களால் தோற்கடிக்கப்படும்.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதும் அந்த ஒப்பந்தத்தில் உள்ளபடி இலங்கையின் மாகாணங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து வழங்குவதுமே இன்றைய சூழலில் ஓரளவாவது சரியான தீர்வாக இருக்கமுடியும். ஆனால் மகிந்த அரசு அதற்குத் தயாரில்லை.

ஆக ஈழத் தமிழர்களின் அரசியலை இனி எவ்வாறு முன்னே நகர்த்திச் செல்வது என்பது உங்களுக்கும் எனக்கும் மட்டுமல்ல சம்மந்தர், ஆனந்தசங்கரி போன்ற தலைவர்களிற்கும் தெரியவில்லை என்பதுதான் உண்மை. எனக்குத் தெரிந்து காகிதத்திலுள்ள ஒரு வேலைத்திட்டம் என்றளவிலாவது இதற்கொரு தீர்வை வைத்திருப்பவர் தோழர் ரயாகரன் மட்டுமே. அவரது 'தமிழரங்கம்' இணையத்தளத்திற்குச் சென்றீர்கள் என்றால் அவரது வேலைத்திட்டத்தை நீங்கள் பார்வையிடலாம். ஆனால் அதன் பின்பு உங்களுக்கு மனநிலை பிறழ்ந்தால் அதற்கு நானோ வல்லினம் ஆசிரியர் குழுவோ பொறுப்பல்ல.

முப்பது வருட யுத்தம் தமிழர்களின் அரசியலை முட்டுச்சந்துக்குள் நிறுத்தியுள்ளது. மறுபுறத்தில் அந்த யுத்தம் மிருகத்தனமான வலுவுள்ள ஒரு பேரினவாதியை நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தியுள்ளது. புலிகள் இருந்தால் இந்த நிலை தோன்றியிராதல்லவா என்று ஒருவர் கேட்கக் கூடும். வரலாற்றை 'ரீவைண்ட்' செய்ய முடியாது. புலிகளின் தவறான அரசியல் அணுகுமுறைகள் தான் அவர்களை அழித்தது. அந்தத் தவறான அரசியலின் விளைவு அழிவு அல்லாமல் தமிழீழமாக ஒருபோதும் இருந்திருக்க முடியாது. தமிழீழத்தை விடுங்கள், தமிழர்களிற்கு ஓர் அற்ப அரசியல் உரிமையைப் பெற்றுத்தரும் வலுவைக் கூடப் புலிகளின் அரசியல் கொண்டிருக்கவில்லை. அவ்வாறான உரிமைகள் கிட்டும் சந்தர்ப்பங்களை எல்லாம் அவர்கள் இல்லாமல் செய்யததைத்தான் அவர்களது 'அரசியல் வலு இன்மை' என்கிறேன்.

இதே கருத்தை அண்மையில் நான் ஒரு கூட்டத்தில் பேசியபோது பார்வையாளர் தரப்பிலிருந்து 'புலிகளின் போராட்டத்தால் தமிழர்களின் பிரச்சினை சர்வதேச அரங்கிற்கு எடுத்தச் செல்லப்பட்டிருக்கிறதே என்றொரு கேள்வி எழுப்பப்பட்டது. அதனால் வெளிநாட்டில் புலிகளிற்குக் காசு சேர்த்தவர்களைத் தவிர வேறு யாருக்கு என்ன நன்மை? நமது முப்பது வருடகாலத்தின் மொத்த இழப்புகளும் வெறும் சர்வதேசக் கவனத்தைப் மட்டுமே பெற்றுத் தந்திருக்கிறது எனில் அதற்காக நாம் கொடுத்தது அநியாய விலை. ஒருமுறை வரதராஜப் பெருமாள் சொன்னதுதான் ஞாபகத்திற்கு வருகிறது; ஒரு நல்ல உழவன் என்பவன் யாரெனில் விளைச்சலை வீடுகொண்டு வந்து சேர்ப்பவனே நல்ல உழவன். ஆனால் பிரபாகரன் என்ற உழவன் வயலை ஆழ உழுதான். பின்பு வயலில் விதைகளையிட்டு விட்டு மறுபடியும் ஆழ உழுதான். பயிர் பச்சை தோன்றிய போது அதையும் ஆழ உழுதான்.


எழுத்தாளர்கள் சிலரின் எதோ ஒன்றை படித்துவிட்டு அவருடைய மற்ற நூல்களை வாங்கினால் அதில் மோசமான படைப்பும் இருக்கின்றது. குறைவாக எழுதினாலும் உங்களுடைய 'ம்' மற்றும் 'கொரில்லா' மாதிரி காலத்திற்கும் பெயர் சொல்வது போன்று மட்டும் எழுதினால் போதாதா? ஏன் அவர்களுக்கு இந்த படைப்பு (அ) கவிதை சரியாக வரவில்லை என்று தெரியாதா? எழுத்தாளரின் எழுதிய எல்லாவற்றையும் வாசகரின் தலையில் திணிப்பது சரியா?

முத்துக்கிருஷ்ணன், தனுஷ்கோடி

எனது எழுத்துகளை மோசம் என்பவர்கள் உண்டு. என்னால் கொண்டாடப்படும் 'காவல் கோட்டம்' நாவலை குப்பையென்று எஸ்.ரா. எழுதினார். ராஜன் குறையால் கொண்டாடப்பட்ட 'தாண்டவராயன் கதையை' என்னால் படிக்கவே முடியவில்லை. ஆக இந்த மோசம் / மோசமில்லை எல்லாம் ஆளாளுக்கு வேறுபடும். 'பாழி' யையே எதிர்கொண்டதல்லவா இந்த இலக்கிய உலகம். நீங்கள் இப்படிச் சலித்துக்கொண்டால் எப்படி! தைரியமாக இருங்கள்.

டச்சு மொழி பேசுபவர்கள் வெறும் ஒன்றரைக் கோடி மக்கள்தான். ஆனால் அந்த மொழியில் ஒரு வெற்றிகரமான நாவலை ஓர் எழுத்தாளன் எழுதிவிட்டால் அவனது ஆயுளுக்கும் சோற்றுப் பிரச்சினை தீர்ந்தது. கேரளாவில் எழுத்தாளனின் வீடு தேடிவந்து அவனது கையால் குழந்தைகளுக்கு ஏடு தொடக்கி வைக்க மக்கள் வரிசையில் நிற்கிறார்களாம். தமிழ் வாசகர்கள் எங்களுக்கு எதைக் கொடுத்தீர்கள்? வயிற்றுப்பாட்டுக்காக மோசமான வணிகச் சினிமாக்களில் வசனம் எழுதவல்லவா நீங்கள் புதுமைப்பித்தனிலிருந்து இன்று வரைக்கும் எழுத்தாளர்களை அனுப்பிவைக்கிறீர்கள்.

சரி உங்களது ரூட்டிலேயே வரலாம் எனத் தீர்மானித்து இலக்கியப் புத்தக வெளியீடுகளிற்கு மிஷ்கின் முதல் குஷ்பூ வரை அழைத்து வந்தோம். திரளாக வந்த நீங்கள் குஷ்பூவை பார்த்துவிட்டு மிஷ்கினிடம் ஓட்டோகிராப் வாங்கிச் சென்றீர்களே தவிர புத்தகம் வாங்கவில்லை. ஒரு புத்தகத்தை ஆயிரம் பிரதிகள் அச்சிட்டுவிட்டு அதைப் பத்து வருடங்கள் கட்டிச் சுமக்கும் நிலையில்தான் பதிப்பாளர் இருக்கிறார். நீங்கள் என்னவென்றால் திணிப்பு என்கிறீர்கள்.

தேர்வு என்ற ஒன்று கையிலிருக்கும் போது திணிப்பு என்று ஏன் பெரிய வார்த்தையை எல்லாம் உபயோகிக்கிறீர்கள். வாங்கிய புத்தகத்தை உங்களால் படிக்க முடியவில்லை என்றால் வேறு யாராவது நண்பருக்குக் கொடுத்துவிடுங்கள். யாராவது ஒருவருக்கு அந்தப் புத்தகம் பிடித்தே தீரும். எத்தகைய மோசமான புத்தகத்துக்கும் ஒரு அர்ப்பணிப்பான வாசகர் எங்கேயாவது இருக்கத்தான் செய்வார். 'ராஸலீலா'வைக் கூட ரசித்துப் படித்த ஒன்றிரண்டு பேரை நான் அறிவேன். எனவே தைரியமாக இருங்கள்.


ஷோபாசக்தி அண்ணா, உங்களை அதிகம் கவர்ந்த, தமிழ் நாவல் எழுத்தாளர், சிறுகதை எழுத்தாளர், கவிதை எழுத்தாளர், இணையதளம், சினிமா விமர்சகர், மொழிப்பெயர்ப்பாளர், விமர்சகர்… என பட்டியலிடுங்கள் பார்ப்போம்.

அபி, சென்னை

அதிகம் கவர்ந்தவர்களா? அவர்கள் எல்லோரும் கனடாவில்தான் இருக்கிறார்கள். என்னவொரு சிறப்பான விருந்தோம்பல்!


ஷோபா சக்தி, உங்களுக்கு பிராமணர்களைப் பிடிக்காதா? பிராமண எதிர்ப்பு எதற்காக? எனக்குத் தெளிவான வரலாற்று ஆதாரத்தோடு பதில் வேண்டும்.

மஹேஸ், திருச்சி

தனிப்பட்ட முறையில் எந்தப் பார்ப்பனரோடும் எனக்கு இதுவரை விரோதமில்லை. ஆனால் இவ்வாறெல்லாம் மிரட்டிக் கேட்டீர்கள் என்றால் எனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யவேண்டிவரும்.

என்னைப் போன்றவர்கள் 'பார்ப்பனப் பத்திரிகையாளர்கள்' என அடிக்கடி விளித்து எழுதுவதைப் படித்திருப்பீர்கள்.

இது சோ ராமசாமி, வாஸந்தி, மாலன் போன்றவர்களையே குறிக்குமல்லாமல் அது ஒருபோதும் சின்னக் குத்தூசி அய்யாவைக் குறிப்பிடாது. பார்ப்பனராகப் பிறந்தாலும் சொந்தச் சாதிக்குத் துரோகம் செய்தவர் அவர். ஆதிக்க சாதிகளில் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் அவர்களது சொந்தச் சாதிகளுக்குத் துரோகம் செய்தே ஆகவேண்டும்.

இதோடு இணைத்துச் சொல்லத்தக்கதாக இன்னொரு சம்பவமும் எனக்கு ஞாபகத்தில் வருகிறது. சில ஆண்டுகளிற்கு முன்பு புதுவிசை இதழ் நேர்காணலில் பெண் படைப்பாளிகள் பற்றிய கேள்வியொன்றிற்குப் பதிலளிக்கையில் "தமிழ்நாட்டிலிருந்து எத்தனை பெண் படைப்பாளிகள் உருவாக்கியிருக்கிறார்கள், மாமிகளைக் கழித்துவிட்டுப் பார்த்தால் கவனிக்கத்தக்கதாக ஒரு இருபதுபேர்கள் இருப்பார்கள்" என்று நான் சொன்னேன். இங்கே மாமிகள் என நான் குறிப்பிடுவது பார்ப்பனியக் கருத்தியல் எல்லைக்குள் இயங்கும் பார்ப்பன சாதியினரையே தவிர அந்தக் கருத்தியல் எல்லையை உடைத்துக்கொண்டு வந்த எழுத்தாளர்களை அல்ல. தோழர்கள் வ. கீதாவையோ அ. மங்கையையோ மோனிகாவையோ நான் மாமிகள் என்ற வரையறைக்குள் சொல்வதில்லை. எனது இந்தக் கருத்து தனது சாதிக்குத் துரோகம் செய்துவிட்டு வெளியே வந்த ஒருவருக்கு எந்த வருத்தத்தையும் அளிக்க நியாயமில்லை என்றே இப்போதும் நினைக்கிறேன்.

ஆனால் எனது அந்தக் கருத்துக்கு நான் முற்றிலும் எதிர்பாராத இடமொன்றிலிருந்து ஆதங்கம் எழுந்தது. தோழர் லதா ராமகிருஷ்ணன் எனது கருத்துக்கு ஓர் எதிர்வினையை எழுதியிருந்தார். அந்த எதிர்வினைக்கு "கழித்துவிடப்பட்ட ஒரு மாமியின் கடிதம்" என அவர் தலைப்பிட்டிருந்ததாக ஞாபகம். நான் கடுமையாக வருத்தமுற்றேன். வழமையாகவே எதிர்வினைகளை அல்வா போல எதிர்கொண்டு ஒன்றுக்கு இரண்டாகப் பதிலளிக்கும் நான் லதாவின் எதிர்வினைக்கு பதிலேதும் எழுதவேயில்லை. மாமி என்ற வரையறைக்குள் லதா தன்னை எவ்வாறு சிக்கவைத்துக்கொண்டார் என்ற கேள்வி என்னை இப்போதும் அலைக்கழித்தவாறேயிருக்கிறது. பார்ப்பனிய ஆதிக்கக் கருத்தாக்கத்தின் மீதான எதிர்ப்புணர்வை தனிநபர்கள் மீதான எதிர்ப்பாகக் கருத வேண்டியதில்லை.

ஏன் பார்ப்பனிய எதிர்ப்பு என்பதற்கு வரலாற்று ஆதாரத்தோடு பதில் வேண்டும் எனக் கேட்டிருக்கிறீர்கள். நிரம்பிய வரலாற்று ஆதாரங்களுடன் அம்பேத்கர் ஒரு இலட்சம் பக்கங்களில் இது குறித்து ஆய்வு செய்து எழுதியிருக்கிறார்.

அறுபது வருடங்கள் ஒருநாள் விடாமல் பெரியார் இது குறித்துப் பேசியிருக்கிறார். உங்களது நோக்கம் இது குறித்து வரலாற்றுரீதியாக அறிந்துகொள்வதே என்றால் அவற்றைத் தேடிப் படியுங்கள். வரவேற்று வாழ்த்துகிறேன்.


உங்களுக்கு எத்தனை காதலிகள்?

கு.நா.அழகேசன், துபாய்

ஊரொச்சம் உடையார் வீடு பட்டினி!


உங்கள் சிறுகதைகள் உலகத்தரமிக்க எழுதுக்களோடு ஒத்திருக்கிறது என தாராளமாகச் சொல்லலாம். உலக இலக்கியங்களோடு உங்கள் பரிட்சயம் பற்றி விளக்குங்கள்?

நரேன்

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பிறமொழி இலக்கியங்கள் வழியாக (குறிப்பாக ருஷ்ய இலக்கியங்கள்) மிகச் சொற்பமாகவே உலக இலக்கியங்களுடனான எனது பரிச்சயம் இருக்கிறது. தமிழ்மொழி வாசிப்பின் வழியாக மட்டுமே எனது எழுத்துமுறையை நான் உருவாக்கிக்கொண்டேன். கு. அழகிரிசாமியிலிருந்து யோ. கர்ணன் வரை நான் கற்றுக்கொள்வதற்கு ஒவ்வொரு எழுத்தாளரிடமும் ஒரு விசயம் இருந்துகொண்டேயிருக்கிறது. என்னை வழி நடத்திச் செல்லும் ஆதர்ச எழுத்துகள் லியோ டால்ஸ்டாயுடையவை.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2011.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768