முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 41
மே 2012

  சுவடுகள் பதியுமொரு பாதை... 17
பூங்குழலி வீரன்
 
 
       
நேர்காணல்:

பாரிசான் அரசாங்கம் தலையிட மறுத்தால் அடுத்து எதிர்க்கட்சிதான்!



திரை விவாதம்:


கவனிக்கத்தக்க தமிழ் சினிமா: ஆண்மையும் அதிகாரமும்
கே. பாலமுருகன்


கவிதைத்தொட‌ர்

இனியவளின் குறிப்புகள்... 2
பூங்குழலி வீரன்



கேள்வி பதில்:

ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யா



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு
ம. நவீன்

சமகால அரசியல் : ஒரு பார்வை
கி. புவனேஸ்வரி



கவிதை:

எம். ராஜா

சம்பு

இரா.சரவண தீர்த்தா

ந. பெரியசாமி

ஷம்மி முத்துவேல்


உயிர் கொல்லும் வார்த்தைகள் - உருத்திரமூர்த்தி சேரன்

கவிஞர் சேரனை முகம் முழுக்க முளைத்துக் கிடந்த தாடியோடு ஒரு முறை சந்தித்த நினைவு இருக்கிறது. புலம்பெயர் தமிழர்கள் மாநாடு மலேசியாவில் நடந்தபோது அவர் இங்கு வந்திருந்த போது சந்தித்திருந்தேன். பல்கலைக்கழகத்தில் “இலங்கை-சிங்கப்பூர் தமிழ் இலக்கியம்” பயிலும்போது ஈழத்து நவீன கவிதையின் முன்னோடி மஹாகவி பற்றியும் புலம்பெயர் நாடொன்றில் கவிஞராய் வாழும் அவரது மகன் சேரன் பற்றியும் முனைவர் சபாபதி அடிக்கடி பதிவு செய்வார். இவ்வார வல்லினத்தின் “சுவடுகள் தொலையுமொரு பாதையில்” கவிஞர் சேரனின் கவிதைகளோடு பயணிப்போம்.

ஈழத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர்களில் ஒருவரான உருத்திரமூர்த்தி சேரன் யாழ்ப்பாணம் அளவெட்டியில் பிறந்தவர். ஈழத்தின் நவீன கவிதையின் தந்தை என புகழப்படும் மஹாகவியின் மகன் என்ற பிறப்பு அடையாளமும் இவருக்கு இருக்கிறது. எழுபதுகளின் பிற்பகுதியில் தீவிரமாக எழுதத் தொடங்கிய இவரது முதல் கவிதை 1972-இல் பிரசுரமானது. கவிதை, சிறுகதை, ஓவியம் என பன்முக படைப்பாளரான சேரன் இலக்கிய விமர்சனங்களை முன்வைப்பதில் முக்கியமானவர். கனடா, யோர்க் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்று பேராசிரியராக பணியாற்றுகிறார்.

இரண்டாவது சூரிய உதயம், யமன், கானல் வரி, எலும்புக் கூடுகளின் ஊர்வலம், எரிந்து கொண்டிருக்கும் நேரம், நீ இப்பொழுது இறங்கும் ஆறு, உயிர் கொல்லும் வார்த்தைகள், மீண்டும் கடலும் என இலக்கிய பரப்பில் குறிப்பிடத்தக்க கவிதை தொகுப்புகளை வெளியிட்டிருக்கின்றார்.

கடவுளரும் பிசாசுகளும்
இணைந்து புரிந்த
இனப்படுகொலையின்
ஒரு குருதித்துளி
பாலைப்பட்டினத்தின்
ஒதுக்குப்புறத்தில்
தெறிந்து வீழ்ந்தது

இனப்படுகொலையின் ஈரத்தை ஈழத்தமிழர் வாழ்விலிருந்து யாராலும் பிரித்தெடுத்துவிட முடியாது. காலங் காலமாய் பரம்பரை பரம்பரையாக அவர்கள் கடந்து வந்த குருதி தோய்ந்த அந்த வாழ்வினை எண்ணற்ற வார்த்தைகள் கொண்டு அந்த வலியை இழைத்து இழைத்து கவிதைகள் பிறந்திருக்கின்றன. கடவுள் என்ற உயர்பரம்பொருளும் பிசாசு என்ற இருட்டு வீதிகளின் உலவித் திரியும் விலங்கும் மனிதனுமற்ற; இருப்பதாகவும் இல்லாததாகவும் கருதப்படும் ஒரு உயிரியும் இணைந்து புரியும் மனிதனைக் காவு கொள்ளும் இனப்படுகொலையின் கோர காட்சியை இக்கவிதை மெல்ல நம்கண் முன் நகர்த்தி வருகின்றது. பிசாசு பயம் காட்டினால் கடவுளிடம் போவோம்; அந்த கடவுளே பயம் காட்டினால் - கனவுகளை கலைத்துவிட்டு வெறும் காயங்களை மட்டுமே அளிக்க விரும்பினால் யாரிடம் முறையிடுவது என்ற இறுதி மரண ஓலத்தை இக்கவிதை வெளிப்படுத்தி நிற்கின்றது.

அந்த புள்ளியிலிருந்து
மூன்று தெருக்கள்
கிளை பிரிந்தன
ஒன்று தெற்கே போயிற்று
எவரும்
திரும்பி வர முடியாத தெரு அது எனப்
போனவர்க்குத் தெரியாது
அவர் சாம்பலையும் காணோம்.

ஒரு மரண வலியிலிருந்து மிஞ்சிய சில உயிர்கள் மீண்டும் மரண வலியைத் தந்த எதிரியிடமே போய் மாட்டிக் கொண்டதைப் பற்றி இந்த வரிகளின் பேசுவதாக நான் கருதுகின்றேன். எதிரியிடம் மாட்டிக் கொள்ளும் தெருதான் எவராலும் உயிரோடு திரும்பி வர முடியாத தெருவாக இருக்கலாம். கருணை என்பதற்கு அங்கே கிஞ்சிற்றும் வழியில்லை. கருணை இருந்தால்தானே திரும்பி வருவதற்கான வழி குறித்து யோசிக்க முடியும்? சாம்பல் கூட மிஞ்சாமல் இப்படி எண்ணற்ற உயிர்கள் பலியெடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை வெறும் வார்த்தைகளாக மட்டும் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். கவிஞர் அதை மிகக் குறைந்த வார்த்தைகளில் பெரியதொரு பாதிப்பைத் தரும் விதத்தில் இங்கே பதிவாக்கியிருக்கிறார். எங்கு போனார்கள், யாரிடம் போனார்கள் திரும்பி வர முடியாத அந்த இடம் எது, யார் அவர்களைப் பலியெடுத்த அந்த குற்றவாளிகள், இவராய் இருக்குமா அல்லது அவராய் இருக்குமா என்ற கேள்விகள் எல்லா திசைகளிலிருந்தும் எதிர்ரொலித்தபடியே இருக்கின்றன.

இன்னொன்று மேற்கே போயிற்று
கடலும் காடுகளும் தாண்டி
இரவல் முனங்களுடன்
குளிர்காலத்து
ஆறுகளின் குறுக்கே நடந்து
எல்லைக் காவலர்களின்
கொள்ளிக் கண்களுக்கும் தப்பி
இரவுப் பயணங்களில்
புதிய நாடுகளுக்குச் சென்றனர்
கறுப்பு முகங்களில்
அவர்களுடைய வெள்ளை அநியாயம் படிந்தது
திரும்பி வரும் கனவுகள்
தொலைந்து போக
வந்து சேர்ந்த வழியும்
மறந்து போய்த்
திசைகெட்டது உலகம்

போரின் கொடுமைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் புலம்பெயர்ந்து மேலைநாடுகளுக்குப் போன மக்களை இவ்வரிகள் பதிவாக்குகின்றன. எந்தவொரு முறையான அடிப்படை வசதிகளும் அற்ற கப்பல்களில், போய்ச்சேர்ந்தால் மட்டுமே உயிருக்கு உத்தரவாதம் இல்லையென்றால் கடலுக்கு இரையாகிவிடும் நிலையில் உயிரைக் கையில் பிடித்து கொண்டு பயணிக்கும் அவர்களது வாழ்தலின் துன்பம் கொடுமையானது. ஆசிய கடல் பிரதேசத்திலிருந்து கனடா போய்ச் சேர 45 நாட்கள் ஆனது என நண்பர் ஒருவர் சொல்ல கேட்டிருக்கிறேன். வழக்கமான கப்பல்கள் பயன்படுத்தும் கடல் பாதையிலிருந்து விலகி கடற்படையினரின் கண்களின் அகப்படாமல் கடற்கொள்ளையர்களிடமிருந்து தப்பித்து கடற்சீற்றங்களிலிருந்து மீண்டு அடுத்த தலைமுறையினரின் வாழ்வுக்காக புலம்பெயர் தேசங்களில் டிகிரி குளிருக்கு மத்தியில் அல்லாடும் தமிழர்களின் கதையைத் தான் இவ்வரிகள் பேசுகின்றன.

எல்லாவற்றையும் மறந்து விடலாம்
உன் குழந்தைகளை ஒளித்து வைத்த
தேயிலைச் செடிகளின் மேல்
முகில்களும் இறங்கி மறைத்த
அந்தப் பின் மாலையில்
நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த
கொஞ்ச அரிசியைப் பானையிலிட்டுச்
சோறு பொங்கும் என்று
ஒளிந்தபடி காத்திருந்தபோது போது
பிடுங்கி எறியப்பட்ட என் பெண்ணே
உடைந்த பானையையும்
நிலத்தில் சிதறி
உலர்ந்த சோற்றையும்
நான் எப்படி மறக்க?

இழந்துபோனதைப் பதிவு செய்யும்போது அந்த இழப்பை வார்த்தைகளின் வழி கொண்டு வந்து சேர்ப்பது அவ்வளவு எளிதல்ல. ஒரு தேர்ந்த, அந்த இழப்போடு இணைந்து வாழ்ந்த ஒரு கவிஞனால் மட்டுமே அதை கொண்டு வந்து சேர்க்க முடியும். இல்லையென்றால் தேர்ந்த வாசகர்களால் ஒருவித பொய்த்தன்மையை அந்த வரிகளிலிருந்து கண்டு கொள்ள முடியும். அந்த பொய்த்தன்மையானது அந்த கவிதையைச் சிதைக்கும் தன்மைக் கொண்டதாவே தெரியும். வார்த்தைகளைத் தேடாமல் அடுக்மொழியில் அலங்காரம் தேடாமல் உண்மையை உள்ளபடியே பதிவு செய்யும் கவிதைகள் எப்போதும் வாழ்ந்தபடியே இருக்கின்றன.

மொழியின் தனிமையிலிருந்து பிறப்பது என்ன என்பதைத்
திசை தொலையப் புலம்பெயர்ந்தவர்களிடமும்
துயரத்தில் சாறு பிழிந்த தனிமை எப்படியிருக்கும்
என்பதை என் பனிப்பாறையுள் நெருப்பின்
உயிர்ச்சுவட்டை எறிந்தவளிடம்
இரவின் கடைசி ரயிலும் போய்விட்ட
பிற்பாடு தண்டவாளங்களும் குளிரில் துடித்துப்
பிளக்க, ஒற்றைச் சிறகுடன் கையில் ஒற்றைப்
பூவுடன் காத்திருப்பது எப்படி என்பதை
என்னிடம் கேள்.

சேரனை வெளிப்படுத்திக் காட்டுவது அவரது சொல் அமைப்புகள் தான். மென்மை என்றால் ஒரு மெல்லிய இழையோடும் துயரம் தோய்ந்த வரிகளில் பதிவு செய்வதும் உக்கிரம் என்றால் சுட்டெரிக்கும் பாலைவன வெயில் வீச்சாய் வெளிவருகின்றன அவரது கவிதைகள். ஒற்றைச் சிறகுடன் கையில் ஒற்றைப் பூவுடன் காத்திருப்பது எப்படிஎன்பதை சேரனின் கவிதைகள் காட்டி நிற்கின்றன.

இன்னொரு முறை சேரனைச் சந்தித்தால் அவரது கவிதைகளின் பிறப்பின் வரலாறு குறித்து மறக்காமல் கதைத்துவிட வேண்டும். அதை நான் ஒரு கவிதையாக பதிவும் செய்ய வேண்டும்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768