இதழ் 12
டிசம்பர் 2009
  குருநாதர் கும்பமுனியின் பொன் வாக்கும் கலைந்ததொரு கனவும்
சீ. முத்துசாமி
 
     
  பத்தி:

டடவாவும் ஈ ஷந்தியனும்

அகிலன்

குருநாதர் கும்பமுனியின் பொன் வாக்கும் கலைந்ததொரு கனவும்
சீ. முத்துசாமி


Bye… Bye
தோழி

மலர்ந்தது ஈழம்!
அ. ரெங்கசாமி

கட்டுரை:

உல‌கில் புதிய‌ வ‌ழித்த‌ட‌ம் - ஏபெக் மாநாடு : ஒரு பார்வை
கெ.எல்.

மக்கள் எவ்வழியோ அவ்வழியே அரசும்
நெடுவை தவத்திருமணி

ஒரு தேசாந்திரியின் யாத்திரையில்
முனைவர் M.S ஸ்ரீலக்ஷ்மி

சிறுகதை:

அவள் - நான் - அவர்கள்
மா. சண்முகசிவா


கருப்பண்ணன்
சு. யுவராஜன்

ராதா: எண் 7, இருபத்து நான்காவது மாடி
முனிஸ்வரன்

உற்றுழி
கமலாதேவி அரவிந்தன்

கார்ட்டூன் வரைபவனின் கதை
ம. நவீன்

நீலக்கடல் மீது பாவும் நீலகண்டப் பறவைகள்!
கோ. முனியாண்டி

சிகப்பு விளக்கு
விக்னேஸ் பாபு

தொடர்:


செம்புழுதி மழைச்சாரலில் கரைந்துருகும் காலம் ...9
சீ. முத்துசாமி

பரதேசியின் நாட்குறிப்புகள் ...5
மஹாத்மன்


எனது நங்கூரங்கள் ...5
இளைய அப்துல்லாஹ்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...3


எம். ரிஷான் ஷெரீப்


தீபச்செல்வன்

தர்மினி

ஏ.தேவராஜன்

செல்வராஜ் ஜெகதீசன்

பதிவு:

"நா கோவிந்தசாமி எனும் படைப்பாளி"
புஷ்பலதா கதிரவேலு

குரு அரவிந்தனின் நூல், ஒலிவட்டு வெளியீட்டு விழா
மணிமாலா

இதழ் அறிமுகம்:

மரங்கொத்தி
மன்னார் அமுதன்

நேர்காணல்
பவுத்த அய்யனார்

புத்தகப்பார்வை:

குரு அரவிந்தனின் நீர்மூழ்கி நீரில் மூழ்கி... (குறுநாவல் தொகுதி)
முனைவர் கௌசல்யா சுப்பிரமணியன்
     
     
 

கொஞ்ச காலமாகவே விசித்திரமானதொரு ஆசை ஒன்று மனதில் குமிழ்விட்டு குழப்பிக் கொண்டிருந்தது.

அதன் தொடக்கப்புள்ளி எதுவாக இருக்கலாம் என்பதான தெளிவான குறிப்பு ஏதும் கைவசமில்லை.

ஆனாலும், அந்தப் பயணம் அதனை தீவிரப்படுத்திய உந்துவிசை என்பதை மட்டும் மறுப்பதற்கில்லை.

ஒருநாள் மாலை. ஒரு செல்போன் அழைப்பு. "என்ன நாளக்கி ஏதாவது வேல இருக்கா? இல்லன்னா ரெடியா இருங்க. இரு எடம் போய்ட்டு வருவோம்".

காலை எட்டு மணிக்கெல்லாம் நண்பர் அகஸ்டின் வாகனத்தோடு வாசலில் வந்து நின்று ஹாரன் அடித்தார். தயார் நிலையில் இருந்தவன் வெளிவந்து வாகனத்தை நெருங்க, உள்ளே ஒரு படையே உட்கார்ந்திருப்பது தெரிந்தது. "என்ன அகஸ்டின்? எங்க இப்படி காலயிலேயே கூட்டத்தோட கெளம்பிட்ட?"

"வாப்பா பேசிக்கிட்டே போவோம்".

வாகனத்துள் அவரது மொத்த குடும்பமும் இருந்தது. "இன்னக்கி எங்களுக்கு கல்லற பெருநாளுப்பா. தெரியுமில்ல உனக்கு. All souls day".

பினாங்கு நோக்கி விரைந்தது வாகனம்.

நவம்பர் 1. ஞாயிற்றுக் கிழமை. பினாங்கு வெஸ்டர்ன் சாலை, ஜாலான் உத்தாமா கத்தோலிக்க கிருஷ்துவ கல்லறை. மேலே மேக மூட்டம். மெலிதான ஒளியின் ஊடுருவல். கண்களுக்கு குளிர்ச்சியும் இதமும் தந்து பரவசமூட்டியது. அடர்ந்து நின்ற மரங்களின் ஊடே அழகான கல்லறைகள் அணிவகுத்து நிற்பது போல். கல்லறைகளைச் சூழ்ந்து நிற்கும் குடும்ப உறுப்பினர்கள், புற்களைச் சுத்தம் செய்வதும் மலர்களை வைத்து அலங்கரிப்பதுமாக, இதமான காட்சி. ஆங்காங்கே பலரும் நினைவு நூற்களைப் பின்னிக்கொண்டு உணர்ச்சி வசப்பட்ட நிலையில் தரையில் உட்கார்ந்து பிரார்த்திக் கொண்டிருந்தனர்.

அந்தக் கல்லறைத் தோட்டத்துள் காலடி வைத்ததும் என்னை மிகுதியாய் ஆட்கொண்டது, பரபரப்பான சாலையையொட்டி அமைந்திருந்த அதன் வெளிக்குள் ஊடாடிய சாந்தம். சலனமுற்ற நிலையில் அதன் எல்லைக்கும் வரும் எந்தவொரு மனதையும் வருடிச் சென்று ஆழத் தொட்டு அமைதிப்படுத்தும் அதன் கரிசனம்.

அப்போதுதான், அந்தக் கேள்வியை அகஸ்டினிடம் கேட்கத் தோன்றியது. "ஏம்பா, நீங்க செத்தவங்கள எரிக்க மாட்டீங்களா?"

இறந்தவர்களை புதைப்பது என்பது நமது பாரம்பரிய வழிமுறைதான். எனினும், இன்றைய நிலையில் அதனை நாம் பெரிதும் மேற்கொள்வதில்லை என்கிற நடைமுறை உண்மையின் பின்னணியில் இந்தக் கேள்வி அகஸ்டினுக்கு வேடிக்கையாக தோற்றமளித்திருக்கலாம்.

கிருஷ்துவர்களின் புதைக்கும் மரபு குறித்து எனது அடுத்த கேள்விக்கு அகஸ்டின் சொன்ன பதிலை மஹாத்மனிடம் சரிபார்த்தபோது கிடைத்த விபரம். (அவரது சொற்களிலேயே) "கிருஷ்துவர்களை எரிக்கக் கூடாது. புதைக்க வேண்டும். ஏசுவின் இரண்டாம் வருகையில் கல்லறைகள் முதலில் வெடிக்கும். என் சிறுகதையில் அம்மா என்னிடம் 'எரிப்பது நம் வழக்கம்' என்பது இந்துமத அடிப்படையில். மகா நியாய தீர்ப்புக்கு எழும்பும் முதல் மனித வர்க்கம் அந்த வகையில் ஏசுவிற்காக வேத வசனத்தின் நிமித்தம் உயிர் கொடுத்தவர்கள், கொலை செய்யப்படுபவர்கள் எங்கெங்கு உயிர் விட்டார்களோ அங்கங்கு அவர்களின் ஆவி உடல் எழும்பும். அதன் பிறகே அடக்கம் செய்யப்பட்ட ஏசுவிற்காக வசனத்தின்படி கல்லறைகள் வெடிக்கும். அவர்கள் நடுவானில் சேர்க்கப்பட்டதும் உடனே உலகம் அழியாது. அது ஒரு காப்பாற்றப்படும் நடவடிக்கை."

எனவே, அவர்கள் தங்கள் மத நம்பிக்கையின் அடிப்படையில், மறுஜென்ம பிறப்புக்காக காத்திருத்தல், ஒரு குறிக்கோளுடன், மரித்தவர்களை புதைப்பதும் கல்லறைகளை பராமரிப்பதும் தங்கள் சமய செயல்பாடுகளின் முக்கியக் கூறாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளதாகவே இதனை நாம் புரிந்து கொள்கிறோம்.

நமக்கான ஆறடி நிலம் என்பது ஒரு சுயநலத்தின்பாற்பட்ட செயல்பாடு என்பதையும் கடந்த நிலையில், நம் எதிர்வரும் சந்ததிகளின், சங்கம இடமாகவும் விரிசல்களை சமன்செய்து காயங்களை ஆற்றும் ஒரு இணைப்புப் புள்ளியாகவும் கல்லறைகள் இயக்கம் கொள்ள முடியும் என்பதை சற்றே அதன் பரப்புக்குள் ஆழ ஊடுருவும் மனம் எளிதில் புரிந்து கொள்ளும்.

இத்தகைதொரு பிரக்ஞை மெலெம்ப எனக்கானதொரு கல்லறைக்கான இடத்தை நானே முன்கூட்டியே தெரிவுசெய்யும் நோக்கோடு சுற்று வட்டாரத்தில் இருக்கும் இடுகாடுகளை பரிசீலிக்கத் தொடங்கினேன்.

அதற்காக நான் தெரிவுசெய்து சர்வே செய்த முதல் இடம், எங்கள் ஊர் சுங்கை பட்டாணியிலுள்ள பொது இடுகாடு. அலோர் ஸ்டார் விரையும் பிரதான சாலையில், பொது மருத்துவமனைக்கு சற்று தள்ளி சாலையோரம்.

சுப்பிரமணிய தேவஸ்தானத்தின் பராமரிப்பில் உள்ள அந்த இடுகாடு, சிறிது காலம் முன்பு வரை புல்பூண்டு மண்டி சீர்கெட்டு கிடந்தாலும், தற்போது சீர்செய்யப்பட்டு கண்களுக்கும், மனதுக்கும் இதமாக இருந்தது.

ஆனால், அந்த இடத்திற்கும் ஏதோவொரு அரசாங்க இலாகாவிடமிருந்து 'ஆப்பு' தயாராகி வருவதாகவும், அதற்கான மாற்று இடம், இங்கிருந்து பல கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பீடோங், சிமிலிங் ஏய்ம்ஸ்ட் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் அருகாமையில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் உலவிய வதந்தி தயக்கத்தைக் கொடுத்தது.

சரி, எதற்கும் ஒரு நடைபோட்டு வைப்போமே என்று புறப்பட்டவனை, சிறிது தூரத்திலேயே எதிர்கொண்டு வரவேற்றது நான் சற்றும் எதிர்பாராத பிரச்னை ஒன்று.

ஒரு காலத்தில், அதாவது நான் இலக்கிய வனவாசம் மேற்கொண்டிருந்த இருபது ஆண்டுகள் உட்பட்ட காலத்தில், எனக்கு இன்சூரன்ஸ் துறையில் 'பாஸ்' ஆக இருந்த திருவாளர் வெள்ளைச்சாமி (இருந்தபோதுதான் பெரிதாக ஏதும் மரியாதை காட்டியதில்லை) அவர்கள் கல்லறைக்குள் புன்னகைத்தபடி வரவேற்றார்.

பயம் சூழ்ந்து கொண்டது. நாமும் ஒருநாள் இங்கேயே வந்து சேர்ந்துவிட்டால் நிச்சயம் பழைய நினைவுகளோடு வெள்ளைச்சாமி நம்மை தேடிக்கொண்டு வந்துவிடுவார். அதுவும் நடுநிசி தாண்டிய நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் நேரமாகப் பார்த்து வந்து நின்று கதவைத் தட்டி எழுப்புவார்.

"என்ன முத்துச்சாமி, நீயும் நம்ம எடத்துக்கே வந்து சேர்ந்துட்டியா? ஏன் இத்தன லேட்? பரவால்ல. இப்பவாவது வந்து சேந்தியே அது போதும்! நான் இருந்த வரைக்கும் நீ எம் பேச்சையும் கேக்கல, மத்தவங்க பேச்சையும் கேக்கல! அதுக்கு பின்னாலயாவது கேட்டயா? நீ எங்க கேட்டிருக்கப் போற? சரி சரி, செத்த பின்னால எதுக்கு அதெல்லாம்! ஒரு முக்கிய விசயமாகத்தான் உன்ன பாத்து பேசிட்டு போலாம்னு வந்தேன் முத்துசாமி. நம்ம புது GSM கிருஷ்ணன் உனக்கு தெரியுமில்ல? அவரு நேத்து வந்து பேசிட்டு போனாருப்பா. இந்த சுடுகாட்டுக்கு என்னதான் அவரோட சப்-ஏஜென்டா நியமிச்சுருக்காரு. செத்து போனவங்களுக்கு புதுசா ஒரு பாலிசி நம்ம கம்பெனியில வந்திருக்காம். நல்ல பாலிசியா தெரியுது. நாம மறுபெறப்பு எடுக்கிற வரைக்கும் மாசா மாசம் பென்சன் மாதிரி ஒரு தொக வந்து கிட்டிருக்கும். எப்படி உனக்கும் ஒரு பாலிசி போட்டிரட்டுமா?" என பாலிசி விண்ணப்ப் பாரத்தை நீட்டிக் கொண்டு நிற்பார்.

அல்லது இப்படியும் ஒன்று நடக்கலாம்.

எங்கள் ஊர் தெனாவெட்டு இலக்கியவாதிகளில் யாரேனும் ஒருவர் எனக்கும் முந்தியோ அல்லது பிந்தியோ இங்கு வந்து சேரக்கூடும்.

தனது புஜபல பராக்கிரமத்தை, அறிவு தீட்சண்ய மேலாண்மையை பறைசாற்றவும் கூர் தீட்டிப் பார்க்கவும், தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் சுழல வந்து எதிரில் நின்று, "post-modernism அப்படீன்னா என்னன்னு தெரியுமா உங்களுக்கு? அதனோட ஒரே ஒரு ஒத்த சரட தொட்டுக் காட்டி ஒரு பத்து வரிக்குள்ள கச்சிதமா விளக்க முடியுமா உங்களால? தெரியலனா சொல்லுங்க. நானே தெனமும் இங்க வட்து உங்களுக்கு டியூசன் எடுத்து சொல்லிக் குடுக்கிறேன். பீஸ் ரொம்ப கம்மிதான். மணிக்கு ரிங்கிட் 500 மட்டுந்தான். என்ன சொல்றீங்க?" என்று பச்சபுள்ள சிரிப்போட தோரண காட்டுவான்.

அவன் பேசிமுடிக்க காத்திருந்ததுபோல், அவன் முதுகுப் பின்னாலிருந்து ஒரு தலை முன்னே நீளும். விஷமப் புன்னகை முகத்தைக் குத்தகை எடுத்திருக்க, "என்ன முத்துசாமி? இந்த நாட்டுல நான் ஒருத்தன்தான் புதுக்கவிதைக்கு அன்னிலிருந்து இன்னக்கி வரைக்கும் நம்பர் 1 அத்தாரிட்டின்னு செத்த பின்னாலயாவது ஒத்துக்கிறியா?" என்று கடுப்பேத்துவான்.

எனவே, நிம்மதியாக நிரந்தமாக தூங்க வந்த இடத்தில் இப்படி தெரிந்தவன் எவனாவது வந்து நின்று கழுத்தறுப்பதற்கான சாத்தியக் கூறுகள் மிகுதியாகவே இருப்பது புரிய, அந்த இடத்தை எனது பட்டியலிருந்து நிரந்தரமாகவே நீக்கிவிட்டேன்.

இப்படியே சில பல காரணங்களுக்காக மேலும் சில இடுகாடுகளை நிராகரித்தப் பின், எனது பூர்வீக மண்ணுக்கே மீண்டேன். என்ன இருந்தாலும் நாம் விழுந்து, தவழ்ந்து ஓடி ஆடி உண்டு சுகித்த அந்த மண்ணிலேயே அடங்கிப்போவதென்பது மிகுதியும் திருப்தியளிக்கக்கூடிய ஒரு செயலாகவே இருக்க முடியும் என்பதை யார்தான் மறுக்க இயலும்?

கையடக்கமான நிலப்பகுதி. பெரிய ஆறு கூப்பிடு தொலைவில். குச்சிக் காட்டிலிருந்து குறைந்தது இரண்டு கிலோ மீட்டர் தூரம். ஓரளவு பராமரிக்கப்பட்டு மோசமில்லை என்னும்படியான தோற்றம். புதிதாய் தோண்டப்பட்ட குழி. மண்ணில் ஈரம் காய்ந்திருக்கவில்லை. அலாவுதின் முனியாண்டியின் மனைவி முனியம்மா புதைக்கப்பட்டிருக்கும் இடம். புதிதாய் ஒரு கல்லறை வேலை பாதி முடிந்த நிலையில், சமீபத்தில் ரெட்டைமலை சந்தருகே, சாலையோரம் இறந்து கிடந்த எங்கள் தோட்டத்து எம்.ஜி.யின் கல்லறை புத்தம் புதுசாய் பளிச்சென நின்றது. நடுவாய் அவரது சிரித்த முகம் கொண்ட நிழற்படம். முன்னும் பின்னுமாய் மேலும் சில அழகிய கல்லறைகள்.

அங்கிருந்து புறப்படும்போது, இதுதான் நமக்கான இடம் என்பது உறுதிப்பட்டிருந்தது. எனது கல்லறைக்கான வரைபடம்கூட மனதில் உருக்கொண்டிருந்தது. இனி குடும்பத்தாரிடம் விசயத்தைச் சொல்லி சம்மதம் வாங்க வேண்டிய ஒரே ஒரு காரியம் மட்டுமே பாக்கி.

அந்த நேரம் பார்த்து விடியற்காலை கனவில் வந்து கோபத்துடன் நின்றார் குருநாதர் கும்பமுனி.

"என்னடாது முத்துசாமி? ஊர்ல நடக்கிற நாட்டு நடப்பு எதுவுமே தெரியாதாடா உனக்கு? ஆறடி மண் வேணும்னு ஆசப்பட்டுக்கிட்டு அலயற!"

"கம்போங் புவா பலா (Kampung Buah Pala) மறந்து போச்சாடா அதுக்குள்ள உனக்கு? உசுரா உள்ளவனே 200 வருசமா உக்காந்து குப்ப கொட்டன இடத்துல இன்னக்கி ஒரு சதுர அடி மண் கூட சொந்தமில்லாம, கழுத்த புடிச்சி தள்ளி ரோட்ல கொண்டு நிப்பாட்டி வைச்சிட்டானுங்க!"

"இதுல, உனக்கு ஆறடி மண் நெரந்தரமா வேணும்னு நிக்கிற... பெருமாளே கைமுஷ்டி அடிக்கிறாராம், பொம்பள வரம் கேட்டு நின்னானாம் பூசாரிங்கிற கதையா இல்லடா இருக்கு உங்கத!"

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768