|
|
|
|
|
|
இதழ் 12
டிசம்பர் 2009 |
|
Bye… Bye
தோழி |
|
|
|
|
|
|
|
|
|
|
குழந்தைகளின்
உலகம் வர்ணங்களால் நிறைந்தது என்பர். அவர்களை வளர விட வேண்டுமே தவிர நாம்
வளர்க்கிறோம் என்ற பெயரில் அவர்களுக்கே உரித்தான இயல்பான விஷயங்களிலிருந்து
தள்ளிவிடக் கூடாது. இப்போதெல்லாம் குழந்தைகளை மூன்று வயது முதலே பாலர்
பள்ளிக்கு அனுப்பி விடுகிறார்கள் பெற்றோர்கள். தங்களது பிள்ளை வெகு
சீக்கிரம் பள்ளிக்குச் செல்வதை நினைத்துப் பெருமைக் கொள்கிறார்கள்.
இதுவெல்லாம் பெற்றோர்களின் பெருமைக்காகவும் கெளரவத்திற்காகவும் என்பதை
வெளிப்படையாக மறைத்து குழந்தைகளின் நலனுக்காகவும் எதிர் காலத்திற்காகவும்
என்கிறார்கள்.
பூச்சோங் கின்ராராப் பகுதியில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில்
மூன்று மாதத்திற்கு முன் வாடகைக்குக் குடியேறினோம். 8 புளோக்குகளை கொண்ட
பெரிய அடுக்குமாடி குடியிருப்பு அது. குழந்தைகள் விளையாட ஒரு சிறு மைதானம்
இருந்தும் பிள்ளைகள் விளையாடிக் கண்டதில்லை.
நாங்கள் G - புளோக்கில் ஏழாவது மாடியில் இருக்கிறோம். பக்கத்து மற்றும்
எதிர் வீட்டில் மலாய்காரர்கள் வசிக்கிறார்கள் என்பது மட்டும் தெரியும். சில
நேரங்களில் வீடுகளைப் பூட்டுகிற தருணங்களில் சந்திக்க நேர்ந்தால் கூட
மெளனமாகவே பூட்டிவிட்டு நகர்ந்து விடுவோம். எதிர் வீட்டில் எத்தனை
குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. நான்கு பிள்ளைகள்
இருப்பதைக் கண்டதாக யுவா ஒருமுறை சொன்னார்.
குழந்தைகள் சார்ந்து நிகழ்ந்த இரண்டு சம்பவங்கள் உடனே நினைவிற்கு வருகிறது.
முதலாவது சம்பவம் பக்கத்து புளோக்கில் நடந்தது. திடீரென்று பையன் கத்தி
அழத் தொடங்கியிருந்தான். அவன் அப்பா அவனை அடிக்க அடிக்க அவன் குரல்
உயர்ந்து கொண்டே சென்றது. வெகு நேரம் இந்த நாடகம் நீடித்துக்
கொண்டிருந்தது. கடைசியில் அப்பாதான் தோற்றுப் போனார். நான் யுவாவின் கைகளை
இறுகப் பற்றிக் கொண்டேன். கண்களால் பார்க்க முடியாத ஓசைகள் மட்டும்
பயமுறுத்திய அனுபவம்.
இரண்டாவது சம்பவம் இரண்டு வாரங்களுக்கு முன் நிகழ்ந்தது. இரவு உணவுக்குப்
பின் புத்தகங்கள் வாசிப்பது அல்லது பால்கனி அருகே அமர்ந்து வேடிக்கைப்
பார்ப்பது வழக்கம். கிட்டத்தட்ட 9.30-லிருந்து 10.15க்குள் பலத்த
சத்தத்தோடு ஒரு பிள்ளையின் குரல் கேட்கும். மட்டற்ற மகிழ்ச்சியோடு Bye..
Bye என்று உரக்க கத்தி விடைப் பெறும் குரல். ஏன் இப்படி ஊரே கேட்கும்படி
கத்துகிறாள் என நினைத்துக் கொள்வேன். மறு நாளும் அக்குரல் அதே நேரத்தில்
கேட்கத் தொடங்கியது. பிறகு தினமும் அவள் குரலை கவனிக்கத் தொடங்கினேன்.
ஞாயிற்று கிழமை மட்டும் அக்குரல் கேட்பதில்லை. சில நாட்கள் கழித்து
அப்பிள்ளை யாரென பால்கனியில் நின்று கவனிக்கத் தொடங்கினேன்.
இரண்டு நாட்களுக்கு முன் அக்குரலுக்குரியவளைக் பால்கனியில் நின்று
கண்டுப்பிடித்தேன். இருட்டில் மங்கலாக தெரிந்தாலும் அழகானப் பெண்
பிள்ளைதான். கையில் குட்டி தலையணையோடு Bye என்று கத்திக் கொண்டே காரை
நோக்கி மகிழ்ச்சியாக ஓடினாள். அவள் பின்னால் அவள் பெற்றோர்கள்.
இந்தியர்கள்.
பகல் பொழுதில் வேறொருவர் வீட்டில் பாதுகாக்கப்படும் பிள்ளை இரவில் சொந்த
வீட்டிற்குச் செல்லும் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் அவள் குரலில் உணர
முடிந்தது. பிள்ளைகள் பெற்றோருக்கு என்னென்னவோ சொல்ல முயல்கிறார்கள்.
புரியாத சமயத்தில் கத்திச் சொல்கிறார்கள். என்ன கொடுமையென்றால் குழந்தைகள்
சொல்ல முயன்றதைப் பெற்றோர்கள் உணரும்போது பிள்ளைகள் பிள்ளைகளாக
இருப்பதில்லை.
|
|
|
|
|
|
|
|
உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் |
|
|
|
|
|
வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine
For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved.
2009. | Designed by CVA | Best View in : Mozilla Firefox | Best
resolution : 1024 X 768
|