இதழ் 12
டிசம்பர் 2009
  மலர்ந்தது ஈழம்!
அ. ரெங்கசாமி
 
     
  பத்தி:

டடவாவும் ஈ ஷந்தியனும்

அகிலன்

குருநாதர் கும்பமுனியின் பொன் வாக்கும் கலைந்ததொரு கனவும்
சீ. முத்துசாமி


Bye… Bye
தோழி

மலர்ந்தது ஈழம்!
அ. ரெங்கசாமி

கட்டுரை:

உல‌கில் புதிய‌ வ‌ழித்த‌ட‌ம் - ஏபெக் மாநாடு : ஒரு பார்வை
கெ.எல்.

மக்கள் எவ்வழியோ அவ்வழியே அரசும்
நெடுவை தவத்திருமணி

ஒரு தேசாந்திரியின் யாத்திரையில்
முனைவர் M.S ஸ்ரீலக்ஷ்மி

சிறுகதை:

அவள் - நான் - அவர்கள்
மா. சண்முகசிவா


கருப்பண்ணன்
சு. யுவராஜன்

ராதா: எண் 7, இருபத்து நான்காவது மாடி
முனிஸ்வரன்

உற்றுழி
கமலாதேவி அரவிந்தன்

கார்ட்டூன் வரைபவனின் கதை
ம. நவீன்

நீலக்கடல் மீது பாவும் நீலகண்டப் பறவைகள்!
கோ. முனியாண்டி

சிகப்பு விளக்கு
விக்னேஸ் பாபு

தொடர்:


செம்புழுதி மழைச்சாரலில் கரைந்துருகும் காலம் ...9
சீ. முத்துசாமி

பரதேசியின் நாட்குறிப்புகள் ...5
மஹாத்மன்


எனது நங்கூரங்கள் ...5
இளைய அப்துல்லாஹ்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...3


எம். ரிஷான் ஷெரீப்


தீபச்செல்வன்

தர்மினி

ஏ.தேவராஜன்

செல்வராஜ் ஜெகதீசன்

பதிவு:

"நா கோவிந்தசாமி எனும் படைப்பாளி"
புஷ்பலதா கதிரவேலு

குரு அரவிந்தனின் நூல், ஒலிவட்டு வெளியீட்டு விழா
மணிமாலா

இதழ் அறிமுகம்:

மரங்கொத்தி
மன்னார் அமுதன்

நேர்காணல்
பவுத்த அய்யனார்

புத்தகப்பார்வை:

குரு அரவிந்தனின் நீர்மூழ்கி நீரில் மூழ்கி... (குறுநாவல் தொகுதி)
முனைவர் கௌசல்யா சுப்பிரமணியன்
     
     
 

"கேப்பையில் நெய்வடிகிறது என்றால் கேட்பாருக்குப் புத்தி எங்கே போச்சு!" என்பது ஒரு பழமொழி. நடவாத - நடக்க இயலாத ஒரு செயலை நடந்ததாக எடுத்துக் காட்டி, பொய் சொல்வது என்பது தான் இதன் பொருள் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

இதனை இன்று நடைமுறைப் படுத்திக் கொண்டு இருப்பவர் மாண்புமிகு தமிழக முதல்வர் கருணாநிதி என்பதை, உலகமே பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றது.

"இன்னும் இரண்டு வாரத்தில் இலங்கை அகதிகள் முகாமுக்குள் அடைப்பட்டுக்கிடக்கும் அனைத்துத் தமிழர்களும் விடுவிக்கப்பட்டு, தங்களின் சொந்தக் கிராமங்களுக்குத் திரும்பி விடுவர். அதற்கான பணிகள் அத்தனையும் செய்து முடித்து விட்டேன்" என்று அறிக்கை விடுகின்றார் தமிழக முதல்வர்.

தமிழக முதல்வரையும் பின்னுக்குத் தள்ளி ஒருபடி மேலே நின்று, "தமிழக முதல்வரின் தூதுவர்களில் ஒருவனாக இலங்கைக்குச் சென்ற போதே, ஆயிரத்து ஐநூறு பேரை விடுவித்து, அவர்களை, அவர்களின் சொந்த வீட்டுக்கு அனுப்பி விட்டுத்தான் வந்துள்ளேன்" என்று என்று முழுப்பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைத்திருக்கிறார் - அதிபர் ராசபக்சேயின் புதிய தம்பி விபீடணன் திருமாவளவன் அவர்கள்.

இத்தலைவர்களின் இக்கூற்றுகளுக்கு ஈழத் தமிழர்களோ தமிழகத் தமிழர்களோ மறுப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால் கன்னத்தில் அறைந்தாற் போன்று சிங்கள முக்கிய அமைச்சர் ஒருவரும் அதிபர் ராசபக்சேயும் பதில் அளித்திருக்கின்றனர். எப்படி?

"முகாமுக்குள் அடைபட்டுக் கிடக்கும் தமிழ் அகதிகளுக்கு விடுதலையா? அது கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு செய்தி!" என்று சிரித்து ஏளனம் செய்திருக்கின்றார் இலங்கை அதிபர் ராசபக்சே!

"முகாமில் அடைக்கப்பட்டிருப்பவர்களே விரைவில் விடுதலையாகப் போகின்றனர் என்ற செய்தியைப் பத்திரிக்கைகளில் பார்த்துத்தான் தெரிந்துக் கொண்டேன். மற்றபடி இதுபற்றி எங்கள் அமைச்சர் அவைக்கு எதுவுமே தெரியாது" என்று சொல்கின்றார் சிங்கள அரசின் முக்கிய அமைச்சர் ஒருவர்.

ஆனால், தமிழக முதல்வரும், அவர் தூது அனுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், "இதோ, கேப்பையில் நெய் வடிகின்றது! நெய் வடிகின்றது! பாருங்கள்! பாருங்கள்!" என்று தமிழக மக்களுக்கு, ‘பயாசு கோப்’ படம் காட்டி மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

தமிழக முதல்வரின் தூதுக் குழு இலங்கைக்குச் சென்றதனால், முகாம் அகதிகள் அடைந்த ஒரே நன்மை, தூதுக் குழுவுக்குப் பேட்டியளித்த பல அகதிகள் காணாமல் போனது தான். (ஏன் - எப்படி?)

இதனால் தான் என்னவோ ஈழநாட்டுத் தமிழ் இதழ் ஒன்று, இலங்கைக்குச் சென்ற தூதுக்குழுவுக்குத் தலைமை ஏற்றுச்சென்ற தலைவர் தங்கபாலுவை, ‘சனீசுவரன் வந்திருக்கிறார்’ என்று பாராட்டி இருக்கின்றது!

புறநாநூறு கண்ட தமிழக முதல்வர், "நடுவன் அரங்கில் உறுப்பியம் வகிக்கும் நாற்பது தி.மு.க. உறுப்பினர்களையும் பதவி துறக்கச் செய்து காங்கிரசு ஆட்சியைக் கவிழ்த்து என் அருமை ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுவேன்" என்று அனைத்துக் கட்சிகளின் அவையில் முழங்கி கைதட்டல் பெற்றார்.

இந்த வாக்குறுதி என்ன ஆயிற்று?

ஒரு காலத்தில், "தெற்கு தேய்கிறது! வடக்கு வாழ்கிறது" என்று வடவரை வசைபாடிய வாய் இன்று, சோனியா காந்தியை நாவினிக்க வாழ்த்துவது ஏன்?

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்த தமிழ் நெஞ்சன் - தமிழ் வெறியன் - தமிழ்த் தொண்டன் அல்ல இன்றையக் கருணாநிதி அவர்கள்.

இன்று தமிழகத்தின் பேரரசர். உலகக் கோடீசுவராக்களின் வரிசையில் இடம் பிடித்துக் கொண்டவர். தேர்தலில் வெற்றி பெற்ற அருமை மகன் அழகிரிக்கு எழுபது பவுனில் தங்க மாலை அணிவித்து பெருமை பெற்றவர்.

இந்தக் குபேர வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ளவே இந்தத் தமிழ் இமயம் இன்று வடவரின் காலடியில் வீழ்ந்து கிடக்கின்றது!

சுண்டைக்காய் நாடு இலங்கை. அதன் கடற்படை இந்தியக் குடிமக்களான தமிழக மீனவர்களை அன்றாடம் அழித்துக் கொண்டிருக்கின்றது. அந்த ஏழை மீனவர்களின் அழுகுரல் தமிழக முதல்வரின் காதுகளில் விழவில்லையே! அந்த ஏழைகளுக்காக, கருணாநிதியின் கண்கள் கலங்கவில்லையே!

ஏனெனில், தமிழக முதல்வர் இன்று ஒரு மேட்டுக்குடி! ஏழைகளுக்காக இரங்குவதும் கண்ணீர் வடிப்பதும் கேவலம் என்பது மேட்டுக் குடியினரின் மரபு!

ஒரு வல்லரசு நாட்டின் குடிமகன் ஒருவனுக்கு வெளிநாட்டில் துன்பம் விளைந்தால் - அந்த வல்லரசு பொங்கி எழுகின்றது. சம்பந்தப்பட்ட நாட்டிடம் காரணம் கோருகின்றது. கண்டனம் செய்கின்றது - எச்சரிக்கை விடுக்கின்றது.

1983 கொழும்பு இனக்கலவரத்தில் தமிழினம் அழிக்கப்பட்டபோது, அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அவர்கள், இலங்கை அதிபர் சயவர்த்தனாவை இந்த முறையில்தான் மிரட்டி, பணிய வைத்தார். வல்லாண்மை மிக்க ஒரு வல்லரசின் செயல்பாடு இப்படித்தான் இருக்க வேண்டும்.

ஆனால், தமிழக மீனவர்கள் விசயத்தில் இன்றைய இந்திய அரசின் செயல்பாடு எப்படி இருக்கின்றது என்பதை மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டும்.

சோனியா காந்தியையும் சிங்கள அரசையும் மகிழ்ச்சிப் படுத்துவதற்காகவே தமிழர்களுக்கு எதிரான அனைத்தையும் செய்து கொண்டிருக்கின்றது இன்றைய இந்திய அரசு. தமிழக தி.மு.க. கூட்டணி அரசும் தங்களின் நல்வாழ்விற்காக நடுவன் அரசுக்குத் துணை போவதோடு சிங்கள அரசையும் வாழ்த்திக் கொண்டிருக்கின்றது.

அந்த முறையில்தான் இலங்கை சென்ற தமிழக முதல்வரின் தூதுக்குழுவினர், தமிழினத்தின் முதன்மைப் பகைவன், நவீன இட்லர் ராச பக்சேக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி, அதிபர் அளித்த விருந்தினை உண்டதோடு அவருடன் கொஞ்சிக் குலாவி நகைச்சுவை ததும்ப உரையாடி மகிழ்ந்து ஆனந்தராகம் பாடி வந்திருக்கின்றனர் என்றால் இவர்கள் தமிழர்களா?

1948ல் இலங்கை சுதந்திரம் அடைந்து ஆட்சி அதிகாரம் சிங்களவர்களின் கையில் கிடைத்ததில் இருந்து சிங்கள அரசு அனைத்து வகையிலும் தமிழினத்தை அழித்துக் கொண்டேதான் இருக்கின்றது.

இந்த அழிவில் இருந்து தப்பிப் பிழைப்பதற்காகத்தான் ஈழமக்கள் உடுத்திய துணியுடன் வெளி நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர். புலம்பெயர்ந்த மக்களின் சொத்துக்கள் அனைத்தையும் சிங்கள மக்களுக்கு வாரி வழங்கியது சிங்கள அரசு!

தமிழ்க் கிராமங்கள் சிங்கள சேரிகளாக மாற்றப்பட்டன. பள்ளி, கோயில், வளாகங்கள் சிங்களப் படையின் பாசறைகளாயின.

காரணமின்றி தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை என்ற போர்வையில் சிறைக்குள் ஆயிரம் ஆயிரமாய் கொன்று குவிக்கப்பட்டிருக்கின்றனர். உலகமே கண்டிராத அளவு, சிங்கள வெறிப்படை தமிழ்ப்பெண்களைப் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிக் கொன்று குவித்து அவர்களின் உடலை நிர்வாணமாக்கி வீதியில் கிடத்திக் கண்காட்சி நடத்தியிருக்கின்றது!

முகாமுக்குள் அகதிகளாய் வாடிக் கிடக்கின்ற இளைஞர்களையும் இளம்பெண்களையும் கூட சிங்களப் படை விட்டு வைக்கவில்லை! அவர்களை அனைத்துக் கொடுமைக‌ளுக்கும் ஆளாக்கி, நிர்வாணப்படுத்தி, கைகளைக் கட்டி, குருவிகளைச் சுடுவதுபோன்று இன்னும் சுட்டுக் குவித்துக் கொண்டிருக்கிறது.

சிங்கள அரசு செய்கின்ற இக்கொடுமைகள் அனைத்தையும் ஆய்ந்து - அறிந்து - உண்மையைத் தெரிந்து கொண்ட ஓர் அமெரிக்கப் பெண்மணி கண்ணீர் விடுகின்றாள். "ராச பக்சேயின் அரசை உலக நீதிமன்றத்தில் நிறுத்தி, தண்டிக்க வேண்டும்" என்று அறைகூவல் விடுக்கின்றாள்! யார் இவர்? தமிழினத்துக்குத் தொடர்பே இல்லாத ஒரு வேற்று நாட்டுப் பெண்!

செய்யாத குற்றத்துக்காக, தமது தாலியைப் பறித்து விட்டான் பாண்டிய மன்னன் என்பதற்காக அவனையும் அவனின் நகரையும் அழித்தாள் அன்றையத் தமிழச்சி கண்ணகி! அந்தக் கண்ணகி பிறந்த மண்ணில் பிறந்த இன்றையத் தமிழச்சி கனிமொழி, லட்சோப லட்சம் தமிழச்சிகளின் தாலிகளைப் பறித்திட்ட ராசபக்சேயின் விருந்தினராகச் சென்று திரும்பி இருக்கின்றார்!

ஈராயிரத்து ஒன்பது மே திங்கள் பதினெட்டாம் நாள் தமிழ்க்குலத்துக்கு ஒரு கருநாள். இந்தியப் படையும் சிங்களப் படையும் இணைந்து நின்று ஒரே நாளில் ஈழ மண்ணில் ஐம்பதாயிரம் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து இட்லரையும் வென்ற நாள் அது.

வெள்ளைக் கொடி ஏந்தி சமாதானத் தூது சென்ற வீரமறவன் நடேசனையும் அவரது குழுவினரையும், கொஞ்சமும் இரக்கமின்றி சுட்டுத்தள்ளி, பேயாட்டம் ஆடி நின்றதும் அந்த நாளில் தான்!

இத்தகையத் தமிழ்ப்படுகொலை நடந்தேறிய பிறகும் நவீன இட்லர் ராசபக்சேயிடம் ஒரு தமிழன் கை குலுக்கி, உறவாட நினைக்கிறான் என்றால் அவன் தமிழனே அல்ல!

"புலிகளை விட்டுப் பிரிந்து வாருங்கள். உங்களை வாழ வைக்கின்றோம்" என்று வெற்று வாக்குறுதி அளித்த ராச பக்சேயின் பேச்சை நம்பி ஏமாந்து இன்று முகாம்களில் நிரந்தர நரகத்தில் உழன்று கொண்டிருக்கின்ற மக்களை, சிங்கள அரசு ஒரு போதும் உயிரோடு விடுதலை செய்யப் போவதே இல்லை. அவர்கள் அனைவருமே ‘புலிகள்’ என்று முத்திரை குத்தி வைத்திருக்கின்றது சிங்கள அரசு. எனவே அம்மக்கள் அனைவரையும் சாகடிப்பது என்பதுதான் சிங்கள அரசின் முடிந்த முடிவு. இந்த உண்மையைத்தான் "முகாமில் உள்ள மக்களை விடுவிப்பது என்பது கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு செயல்" என்று சொல்லாமல் சொல்லி இருக்கின்றார் அதிபர் ராஜபக்சே!

ஆக, முகாம்களில் அன்றாடம் செத்துக் கொண்டிருக்கும் நம் ஈழ மக்களை விடுவிக்கின்ற பொறுப்பு உலகத் தமிழர்களின் கைகளில் தான் இருக்கின்றது என்பதை உண்மைத் தமிழன் ஒவ்வொருவரும் உள்ளத்தில் பதித்துக் கொள்ளல் வேண்டும்.

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768