|
இந்திய
தொலைத்தொடர்பு அமைச்சகத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது
என்று பத்திரிக்கைகள் கதறுகின்றன. டிவிக்களில் பரபரப்பாய் விவாதம்
செய்கிறார்கள். அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதாரங்களை அடுக்குகின்றார்கள்.
சாதாரண மாநிலக் கட்சியைச் சேர்ந்த ஒரு அமைச்சர் இத்தகைய குற்றச்சாட்டுக்கு
ஆளாகிற நிலையில், தன் மீது அவதூறான செய்திகளை எழுதக்கூடாது என்று
கோர்ட்டில் தடையானை வாங்குகிறார். ரோட்டில் போகிற குப்பனோ, சுப்பனோ தடை
பெற்றால் பெரிய விஷயமில்லை. தடையாணை பெற்றவர் மக்கள் சேவைக்கு வந்தவர்.
அவர் தன்னைப் பற்றி பத்திரிக்கைகள் விமர்சனம் எழுதக் கூடாது என்று
சொல்கிறார். பின்னர் ஏன் அவர் பொது வாழ்க்கைக்கு வரவேண்டும்? தன் மீது
சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவைகளாக இருந்தால் அதற்கு தகுந்த
ஆதாரத்தைக் காட்டி தான் நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும். முன்பு தான்
பதவி வகித்த துறையோடு சம்பந்தமுடைய நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் துறையில்
அனுபவம் பெற்ற கம்பெனிகள் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் திடீரென்று
தொலைபேசித் துறையில் புகுந்ததன் காரணம் என்ன? ஸ்பெக்ட்ரம் அலாட்மென்ட்
பெற்றவுடனே வெளி நாட்டுக் கம்பெனிகளுக்கு அதிக விலையில் தன் கம்பெனி
பங்குகளை எப்படி விற்றார்கள்? முதலில் வந்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு
என்ற கொள்கையினை பிரதமர் அலுவலகம் மறுபரிசீலனை செய்யும்படி அறிவுருத்திய
பிறகும், அதனை செயல்படுத்தாத காரணம் என்ன? தனியார் கம்பெனி தன் பங்குகளை
வெளி நாட்டினருக்கு விற்க ஏதுவாகத்தான் ஸ்பெக்ட்ரம் வழங்கும் விதிமுறை
வகுக்கப்பட்டதா? கேள்விகள் கேள்விகள். பதில் சொல்வார் யாருமில்லை. பிரதமரோ
வாய் மூடி நிற்கின்றார். மாநிலக் கட்சியோ அதைப் பற்றி ஒரு வார்த்தை
சொல்லவில்லை. பிரதமரையும் தன் ஊழலுக்கு துணைக்கு அழைக்கிறார் மந்திரி.
வெளிப்படையாக ஊழலுக்கான சாத்தியக்கூறுகள் கண்ணுக்குத் தெரிய நடந்த இந்த
ஊழலைப் பற்றி இந்தியாவை ஆளும் சட்டத்தினால் என்ன செய்ய முடிந்தது.
சட்டம் வல்லானுக்கு வென்சாமரம் வீசும். ஏழைக்கு சட்டம் பேசும்.
இன்றைய பொழுதில் பெரும் தொழிற்சாலைகள், கல்விக்கூடங்கள், தாது வளம் செழித்த
பூமியில் தாது வெட்டி எடுக்க லைசென்சுகள், கேஸ் கம்பெனிகள், பெட்ரோல்
நிலையங்கள், ஹோட்டல்கள், எஸ்டேட்டுகள், சாட்டிலைட் டிவிக்கள்,
செய்தித்தாள்கள், விமானம் என்று அனைத்து துறையிலும் அரசியல்வாதிகள்தான்
ஆதிக்கம் செலுத்துகின்றனர். இரயில்வேயில் மட்டும்தான் இன்னும் அரசியல்வாதி
தன் பிசினஸை அதிகம் புகுத்தவில்லை. இருப்பினும் உணவு கேட்டரிங், மற்றும்
கட்டுமானப் பணிகளுக்கான டென்டர்களையும் அரசியல்வாதியின் பினாமிக்
கம்பெனிகள்தான் செய்து வருகின்றன. தனது அரசியல் செல்வாக்கை தன் தொழில்
சிறக்க பயன்படுத்திக் கொள்கின்றார்கள். இல்லையென்று எந்த அரசியல்வாதியாலும்
மறுப்பு சொல்ல முடியுமா?
மக்கள் சொத்து மகேசன் சொத்து என்பார்கள். தற்போதைய ட்ரெண்ட் - மக்களின்
பணம் மந்திரிகளின் பணம் என்றாகிவிட்டது. யார் கேட்க முடியும்? யார் தான்
கேட்பார்கள்? யாரால் தான் கேட்க முடியும்? கேட்டால் போதும், கேட்பவனை ஓட ஓட
விரட்டுவார்கள். வழக்குகளை தொடருவார்கள். கஞ்சாவை வீட்டில் வைப்பார்கள்.
கைது செய்வார்கள். கேட்டவனை குடும்பத்தோடு கொளுத்துவார்கள். இவர்களைத்தான்
தமிழர்கள் எங்கள் ‘தலைவர்கள்’ என்று சொல்கின்றார்கள்.
அரசியல்வாதிகளால் அரசியல் படுகொலைகள் தினமும் நடந்து கொண்டே தான்
இருக்கின்றன. கொலைக்குக் காரணமாய் இருக்கும் அரசியல்தலைவர்கள் சட்டத்தின்
பாதுகாப்போடு குளிர்சாதன வண்டியில் வலம் வருகின்றார்கள். டீ, முறுக்கு
சாப்பிட லட்சக் கணக்கில் செலவிடுவார்கள். தினமும் காலணா காசு கூட
கிடைக்காமல் பசியோடு அலைந்து திரியும் மக்களை காருக்குள் இருந்து
பார்த்தபடியே கோட்டைகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தங்களை
மக்கள் சேவைக்காக பொது வாழ்வுக்கு வந்தவர்கள் நாங்கள் என்று சொல்லிக்
கொள்வார்கள். தேர்தலின் போது அழைக்கும் குரலுக்கு ஓடோடி வரும் உங்கள்
தொண்டன் நான் என்பார்கள். ஜெயித்த பிறகு அமைச்சரையோ யெம்மெல்யேவையோ
கிட்டத்தில் நெருங்க முடியுமா? விடுவார்களா? ஓட்டுப் போட்டவன்
வந்திருக்கின்றானே என்று அமைச்சரோ யெம்மெல்யேவோ மரியாதை தான் தருவாரா?
இவர்களை யார் தட்டிக் கேட்பது? கோர்ட்டுகள் இருக்கின்றன என்ற நம்பிக்கைகள்
தகர்ந்து போய் எத்தனையோ நாட்களாகி விட்டன. நீதிபதிகளும் பதவியேற்றவுடன்
அரசியல்வாதிக்கு கும்பிடு போடுகின்றார்கள். கோர்ட்டுகளும் இன்று
கோபாலபுரத்தில் குழுமிவிட்டன. நாளைக்கு கார்டனில் குழுமக்கூடும். அரசு
நிலத்தை ஒரு முதலமைச்சர் வாங்கினார். வழக்கு கோர்ட்டுக்குச் சென்றது.
கோர்ட்டு என்ன சொன்னது? கண்டனம் தெரிவித்தது. இதே சாதாரண அரசு அதிகாரி
ஒருவர் வாங்கியிருந்தால் இந்நேரம் அவர் அந்த வேலையில் தொடர அனுமதித்து
இருக்குமா இந்த கோர்ட்டுகள்.
தனி மனிதன் ஊழல் செய்தால் கைது, கோர்ட்டு என்று நடவடிக்கைகள் பாயும். ஆனால்
அரசியல்வாதி ஊழல் செய்தால் இந்திய நீதிச் சட்டங்களால் என்ன செய்ய முடியும்?
வழக்குகள் விசாரிக்கப்பட்டு கோர்ட்டுகள் ஏதாவது தண்டனையை அறிவித்தால்
மக்களை பஸ்ஸுக்குள் உயிரோடு வைத்துக் கொளுத்துவார்கள். யாருக்காக
உயிர்களைக் கொழுத்தினார்களோ அவர்களுக்கு அந்தக் கட்சியே வக்கீல் வைத்து
வாதாடும். குற்றம் செய்பவனை விட குற்றத்தை செய்யத் தூண்டியவனுக்கு அதிக
தண்டனை என்கிறது இந்திய அரசியல் சட்டம். குற்றத்திற்கு துணை
போனவர்களுக்கும் தண்டனை என்றும் சொல்கிறது. சட்டம் என்ன சொல்லி என்ன பயன்?
எவன் மதிக்கப்போகிறான் சட்டத்தை? அக்கட்சியின் ஆட்சி நடந்தால் தீர்ப்பே
மாற்றப்படும். நீதிபதி ஒருவர் கோடிக்கணக்கில் அரசுச் சொத்துக்களை
கையகப்படுத்தி வைத்திருக்கிறார். கலெக்டர் ஆமாம் என்று அறிக்கை அனுப்பி
வைக்கிறார். இதுவரை அவர் நீதிபதியாகவே தொடர்ந்து பணி புரிய சட்ட விதிகள்
இடமளிக்கின்றன போலும்.
அரசியல் சார்பற்ற தனிமனிதனின் தப்பு மட்டுமே கோர்ட்டில் அரங்கேற்றப்படும்.
ஏழைகள் அரும்பாடு பட்ட சொத்தை விற்றுக் கொடுத்த காசை வாங்கிக் கொண்டு சட்ட
நிபுணர்கள் என்ற வக்கீல்கள் சட்டப் புத்தகத்திலிருந்து வரிகளை
நீதிபதிக்குச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். பத்து வயதில் கோர்ட்டுக்கு
ஏறினால் நாப்பது வயதில் தீர்ப்புக் கிடைக்கும். இது தான் இந்தியாவின்
நீதிமன்றத்தின் லட்சனம். மக்களுக்கு எப்படி நீதியின் பேரிலும்
நீதிமன்றங்களின் பேரிலும், நீதிபதிகளின் பேரிலும் நம்பிக்கை வரும்?
வேடிக்கையாய் இல்லை.
ஜன நாயகம் என்பது அரசியல்வாதிகளுக்கு மட்டுமே தவிர சாதாரண தனி மனிதனுக்கு
இல்லை. அரசியல்வாதியைக் கைது செய்தால் தொண்டர்கள் களேபரம் செய்வார்கள்.
கடைகளை அடித்து நொறுக்குவார்கள். கொள்ளை அடிப்பார்கள். பஸ்ஸைக்
கொளுத்துவார்கள். மக்களை ஓட ஓட விரட்டி கொன்று குவிப்பார்கள். கர்ப்பிணிப்
பெண்ணை ஓட ஓட விரட்டி சாலையில் நடுவே அவளின் துயிலை உறிந்து அவள்
பிறப்புறுப்பில் கையை விட்டு கருவை வெளியே இழுத்து உயிரோடு கழுத்தை
நெறித்துக் கொல்வார்கள். இச்சம்பவம் இந்தியாவில் தானே நடந்தது. காவல்துறை
கைகட்டி வேடிக்கை பார்த்ததே யார் என்ன செய்து கிழித்து விட்டார்கள்? ஒரு
அரசியல்வாதி செத்தால் உடனே கடையடைப்பு, கலாட்டா என்று ஊரையே கதிகலங்க
அடிப்பார்கள். மனிதன் செத்துப் போனால் மற்றவர்கள் அவனுக்காக பரிதாப்பட்டு
அழுவார்கள். அவனது பெருமைகளைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால் அரசியல்வாதி
செத்தால் மற்றவர்களை நஷ்டமடையச் செய்கிறான். கடைகளை அடித்து நொறுக்கும்
தொ(கு)ண்டர்களை காவல்துறை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும்.
குண்டர்களை வளர்த்து வரும் கட்சித் தலைமை மீது குண்டர் சட்டம் பாயாமல்
சாதாரண திருட்டைச் செய்பவன் மீது பாய்கிறது.
ஏழைகளை கட்சிக்கு கொடி பிடிக்க வைக்கிறான். கோஷம் போடவைக்கிறான். அதற்கு
பத்து ரூபாய் காசும், வயித்துக்கு சோத்தையும் போட வைத்து கோடி கோடியாய்
கொள்ளை அடிக்கிறான் அரசியல்வாதி. ஏழை கடைசி வரை ஏழையாகவே இருந்து
வயிற்றுக்கும் வாய்க்கும் போதாமலே உடம்பு சுருங்கி, உயிர் விட்டு
பரதேசியாய் செத்துப் போவான். உடல் வலிக்க வேலை செய்து கொண்டு வரும்
காசையும் டாஸ்மாக்குகள் பறித்துக் கொண்டு குடும்பத்தையே பட்டினி போட
வைக்கின்றன. ஏழைகள் பசி பசி என்று அலறுகின்றார்கள். ஒரு முருங்கைக்காய்
ஐந்து ரூபாய் விற்கிறது. பருப்பு எண்பது ரூபாய் விற்கின்றது. எண்ணையோ நூறு
ரூபாயைத் தாண்டி விட்டது. அரசாள்பவர்கள் வாய்மூடி மவுனியாய்
இருக்கின்றார்கள். நாள்தோறும் சினிமா விழாக்களில் தொப்புள், தொடை, முலை
குலுங்க ஆடும் ஆட்டக்காரிகளின் இடுப்பிலும், உதட்டுச் சுழிப்பிலும் தன்னை
மறந்து கிடக்கின்றார்கள். தாங்களே பாராட்டுக் கூட்டங்களை
நடத்திக்கொள்கின்றார்கள். அங்கு அரசியல்வாதிகளை பாராட்ட தமிழ் கவிஞர்கள்
என்ற காக்காய்கள் கூட்டம் அல்லோலகல்லோலப் படுகின்றன. யார் எப்படி கரைவது
என்பதில் போட்டா போட்டி நடக்கின்றது.
அரசியல்வாதிதான் இப்படியென்றால், சமூகப் பிராணியான மனிதர்கள் வாழ்வது
எதற்கு என்பதே தெரியாமல் விலைக்கு தன்னையும், தன் மூளை, செயல், உழைப்பு
போன்றவற்றை வேலை என்ற பெயரில் விற்றுக் கொண்டிருக்கின்றார்கள். அதிகச்
சம்பளம் கொடுக்கும் வேலைக்கு தன் பிள்ளையையும் படிக்க வைத்து அடிமாட்டு
வேலைக்கு அனுப்பி வைத்து அவன் கொண்டு வரும் காசைக் காட்டி திருமணச்
சந்தையில் தன் மகனை விலை பேசித் திரிகின்றார்கள். காசைக் கொட்டிக் கொடுத்து
தன் மகளை இன்னொரு ஆடவனுடன் படுக்க வைக்க திருமண விழா எடுத்து புளகாங்கிதம்
அடைகின்றார்கள் மக்கள். காசுக்கு மாறடிக்கும் கூட்டமாக மாறிவிட்டார்கள்
பொதுமக்கள். காசு எவன் அதிகம் கொடுக்கின்றானோ அவனுக்கே ஓட்டு என்கிறார்கள்.
படித்தவனும், படிக்காதவனும் நுகர்வோர் கலாச்சாரத்தில் மயங்கிக்
கிடக்கின்றார்கள். இந்த மூளைச் சலவை வேலையை செவ்வனே செய்து வருகின்றன
மீடியாக்கள்.
சினிமாக்காரி ரோட்டில் காரில் சென்றால் கூட கூடவே ஓடிப் போய் அவளிடம்
கையெழுத்து வாங்கித் திரிகின்றார்கள். கிரிக்கெட் என்ற பெயரில் உலகம்
முழுவதும் சோம்பேறிக் கூட்டமொன்று அந்தக் காலத்து டீக்கடைப் பேச்சைப் போல,
அவன் அடித்தான், இவன் அடித்தான் என்று கதை பேசித் திரிகின்றார்கள்.
காதலிக்கச் சொல்வார்கள். ஆனால் பார்க்குகளிலோ, பொதுவிடங்களிலோ காதலித்தால்
கைது செய்வார்கள். தன் மகன் காதலித்தால் கூக்குரலிட்டு கொலையும்
செய்வார்கள். வரதட்சினை கொண்டு வராத மருமகளை பெட்ரோல் ஊத்திக்
கொழுத்துகிறார்கள். அரும்பாடு பட்டு வளர்த்த பெற்றோரை குடிக்க கஞ்சி
ஊற்றாமல் பட்டினியில் போட்டுக் கொல்கின்றார்கள்.
கண்ணுக்குத் தெரியாத சாமியின் பெயரால் சக மனிதனைக் கொலை செய்கிறார்கள்.
கூட்டம் கூட்டமாக வேற்று மதத்தினரைக் கொன்று குவிக்கின்றார்கள்.
வியாபாரிகள் என்ன செய்கிறார்கள்? மக்களை மூளைச் சலவை செய்வதும், தரமில்லாத
பொருளை அதிக விலைக்கு விற்பதும், பதுக்கல்களையும் செய்து வருகின்றனர்.
சாரயம் விற்கும் அரசு, குடித்து விட்டு வருபவர்களை பிடித்து ஜெயிலில்
தள்ளுகிறது. விவசாயிகள் இறக்கினால் குற்றமென்கின்றார்கள். கோடிகளைக்
குவித்து வைத்திருக்கும் கோடீஸ்வரன் சாராயம் காய்ச்சலாம். அன்னாடங்காச்சி
சாராயம் காய்ச்சினால் கோர்ட்டுகள் ஜெயிலில் தள்ளுகின்றன. சட்டமாம் சட்டம்.
இது என்ன சட்டம். சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்கிறார்கள். அச்சட்டம்
அரசியல்வாதிக்கும், கோடீஸ்வரனுக்கும் ஒரு மாதிரியாகவும் ஏழைக்கு ஒரு
மாதிரியாகவும் இருக்கிறது.
அரசு அலுவலர்கள் செய்யும் அக்கிரமங்களுக்கு அளவே இல்லை. சக மனிதனை மதிக்கத்
தெரியாத படித்த ஜென்மங்கள் இவர்கள். திங்கள் கிழமை தோறும் கலக்டெர் ஆஃபீஸ்
பக்கம் சென்று பாருங்கள். என்ன விரட்டு விரட்டுவார்கள் என்று. அவ்விடத்தில்
லஞ்சதேவி தவிர வேறு ஒன்றினையும் நாம் பார்க்க முடியாது. எதற்கெடுத்தாலும்
லஞ்சம். சமீபத்தில் ஏர்போர்ட்டில் பிடிபட்ட அதிகாரிகளைப் போல எத்தனையோ
அதிகாரிகள் வெளியில் தெரியாமல் அடிக்கும் கொள்ளை கொஞ்சம் நஞ்சமல்ல. கப்பல்
துறையில் புழங்கும் லஞ்சத்தைப் பற்றி எழுத ஆரம்பித்தால் சிந்துபாத்
கதையாகும். புரோக்கருக்கு தின வருமானம் 50,000 ஆயிரம் ரூபாய் என்று
செய்தித் தாள்கள் சொல்கின்றன. மாத்த்திற்கு 15 லட்சம் வருமானம்
பார்த்திருக்கிறான் ஒரு புரோக்கர். அதிகாரி எத்தனை ரூபாய் சம்பாதித்து
இருப்பான் என்று எண்ணிப் பாருங்கள்.
முடிவாக ஜெயமோகன் அவர்களின் 'என் அரசியல்' என்ற கட்டுரையிலிருந்து ஒரு
பகுதியை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
”பெரும்பாலான பொது விஷயங்கள், நீதிமன்ற வழக்குகள்கூட, எப்படி
தீர்மானிக்கப்படுகின்றன என்பதைக் கேட்டால் இந்த நாட்டில் நாமெல்லாம் ஒரு
கருணை காரணமாக மட்டுமே வாழ அனுமதிக்கப்பட்டிருக்கிறோம் என்று
தோன்றக்கூடும். இந்திய அரசியல், நிர்வாகம், நீதி மூன்றுமே பெரும்பாலும்
ஊழலால் மட்டுமே இயங்கிக்கொண்டிருப்பவை. கடந்த இருபதாண்டுகளில் ஒன்றின்
உள்ளே புகுந்து சென்று பார்த்தால் அப்பட்டமான தனிநலன்கள் மட்டுமே
செயல்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்க முடியும். அந்த யதார்த்தத்துக்கும்
வெளியே பேசப்படும் அரசியலுக்கும் எந்தவகையான தொடர்பும் இல்லை. வெளியே
நாளிதழ்செய்திகளை அலசி ஆராய்ந்து சூடாக விவாதிக்கும் அறிவுஜீவிகள் மிகவும்
பரிதாபத்துக்குரியவர்கள் மட்டுமே.“
இன்னும் எழுதிக் கொண்டே போகலாம். உங்களுக்கு நேரமிருக்காது. மேற்கண்டவர்கள்
எல்லாம் யார் என்று பார்த்தால் “பொது மக்கள் கூட்டத்தில் இவர்களும் அங்கம்”
|
|