இதழ் 12
டிசம்பர் 2009
  ஒரு தேசாந்திரியின் யாத்திரையில்
முனைவர் M.S ஸ்ரீலக்ஷ்மி
 
     
  பத்தி:

டடவாவும் ஈ ஷந்தியனும்

அகிலன்

குருநாதர் கும்பமுனியின் பொன் வாக்கும் கலைந்ததொரு கனவும்
சீ. முத்துசாமி


Bye… Bye
தோழி

மலர்ந்தது ஈழம்!
அ. ரெங்கசாமி

கட்டுரை:

உல‌கில் புதிய‌ வ‌ழித்த‌ட‌ம் - ஏபெக் மாநாடு : ஒரு பார்வை
கெ.எல்.

மக்கள் எவ்வழியோ அவ்வழியே அரசும்
நெடுவை தவத்திருமணி

ஒரு தேசாந்திரியின் யாத்திரையில்
முனைவர் M.S ஸ்ரீலக்ஷ்மி

சிறுகதை:

அவள் - நான் - அவர்கள்
மா. சண்முகசிவா


கருப்பண்ணன்
சு. யுவராஜன்

ராதா: எண் 7, இருபத்து நான்காவது மாடி
முனிஸ்வரன்

உற்றுழி
கமலாதேவி அரவிந்தன்

கார்ட்டூன் வரைபவனின் கதை
ம. நவீன்

நீலக்கடல் மீது பாவும் நீலகண்டப் பறவைகள்!
கோ. முனியாண்டி

சிகப்பு விளக்கு
விக்னேஸ் பாபு

தொடர்:


செம்புழுதி மழைச்சாரலில் கரைந்துருகும் காலம் ...9
சீ. முத்துசாமி

பரதேசியின் நாட்குறிப்புகள் ...5
மஹாத்மன்


எனது நங்கூரங்கள் ...5
இளைய அப்துல்லாஹ்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...3


எம். ரிஷான் ஷெரீப்


தீபச்செல்வன்

தர்மினி

ஏ.தேவராஜன்

செல்வராஜ் ஜெகதீசன்

பதிவு:

"நா கோவிந்தசாமி எனும் படைப்பாளி"
புஷ்பலதா கதிரவேலு

குரு அரவிந்தனின் நூல், ஒலிவட்டு வெளியீட்டு விழா
மணிமாலா

இதழ் அறிமுகம்:

மரங்கொத்தி
மன்னார் அமுதன்

நேர்காணல்
பவுத்த அய்யனார்

புத்தகப்பார்வை:

குரு அரவிந்தனின் நீர்மூழ்கி நீரில் மூழ்கி... (குறுநாவல் தொகுதி)
முனைவர் கௌசல்யா சுப்பிரமணியன்
     
     
 

ஈழத்துத் தமிழர்கள் பல்வேறு அரசியல் காரணங்களால் நாடிழந்து, புலம்பெயர்ந்து பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்ற அடையாளத்தை இழக்க விரும்புவதில்லை. தமிழ் என்னும் மொழி வழியான அடையாளத்தை மற்ற தமிழர்களை விட (மலேசியா, சிங்கப்பூர்) காத்திரமான எழுத்துக்களின் மூலம் தக்கவைத்துக் கொண்டு தமிழ் இலக்கியப் புலத்தை விரிவடையச் செய்தும், ஆழப்படுத்தியும், கூர்மைப்படுத்தியும் வருகின்றனர். தமிழ் இலக்கியச் செழுமைக்குக் குறிப்பாக நவீனத் தமிழ் இலக்கியச் செழுமைக்குக் காரணகர்த்தாக்கள் என்று இலங்கைத் தமிழர்களை வருணிப்பதில் தவறேதும் இருக்க முடியாது என்பது என் அபிப்பிராயம். புலம்பெயர் மக்களின் வலிகள், அலைந்துழல்வின் வேதனைகள், அவற்றுக்குக் காரணமாகிய பிரச்னைகள் என இவர்களின் பாடுபொருள் பரவியுள்ளன. இவ்வெழுத்துகளுக்கு மத்தியில் வேலையின் பொருட்டுப் பல தேசங்களுக்கும் சென்று அங்கே தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை வித்தியாசமான பார்வையோடு முன்வைக்கும் அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள் என்னைப் போன்ற பல வாசகர்களை நிச்சயமாக ஈர்த்திருக்கும்.

முன்னுரையில் க.மோகனரங்கன் (கள்ளிருக்கும் மலர்க் கூந்தல்) கூறியிருப்பது போல இந்தியா, பாகிஸ்தான், சுவீடன், சூடான், ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான், லியாரா, அமெரிக்கா, கனடா என பல்வேறு தேசமக்களை, அவர்களின் பழக்கவழக்கங்களை, மொழிகளை, நாகரிகங்களை ஒரு யாத்ரீக மனோபாவத்தில் மட்டும் சொல்லாமல் நூதனமான நோக்கத்தோடு அ.முத்துலிங்கம் சொல்லியுள்ளார். இப்படிக் கதைப்புலங்கள் பன்முகப்பட்டு விரிவடைவதால் அழகை ஆராதரிக்கும் முத்துலிங்கத்தின் மனநிலையைச் செவ்வையாய்ப் பிரதிபலிக்கின்றன இவரது கதைகள். வேலையின் பொருட்டுப் பல நாடுகளுக்குச் செல்லும் எல்லோரும் முத்துலிங்கத்தைப் போலத் தம் அனுபவங்களை ஆர்வத்தோடும், விஸ்தாரமாகவும், தமக்கே உரிய நகைச்சுவை உணர்வோடும் பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. முத்துலிங்கத்தின் கதைகளில் விரவி, இழையோடும் நகைச்சுவை தொல்காப்பியர் கூறுவது போல எள்ளல், இளமை, பேதைமை, மடமை என நான்கின் அடிப்படையாகவும் அமைந்து, சுற்றுச்சூழலை மறந்து பேருந்தில் பயணம் செய்கையில் என்னை வாய்விட்டுச் சிரிக்க வைத்தது. புதுமைப்பித்தனின் கூர்மையான அங்கதத்திற்கும், சிங்கை எழுத்தாளர் பி.கிருஷ்ணனின் அங்கதத்திற்கும் முத்துலிங்கத்தின் அங்கதத்திற்கும் உள்ள வேறுபாடுகளை என்னால் உணர முடிந்தது. வாசகி என்ற நிலையிலிருந்து என்னை முத்துலிங்கத்தின் ரசிகை (அவரது எழுத்துக்களின் ரசிகை) என மாற்றி அல்லது உயர்த்தியுள்ளது முத்துலிங்கம் படைத்துக் காட்டும் வராஸ்யம்.

முத்துலிங்கம் ஒரு யாத்ரீகனாக மட்டுமின்றிப் பிறந்த மண்ணை மறவாத, தன்னை அடையாளப் படுத்தும் தமிழ்மொழியை மறவாத படைப்பாளியாக உயர்ந்து நிற்கிறார். அவர் தமது கதைகளின் ஊடாகப் புராண இதிகாசங்கள், சங்க இலக்கியம், ஔவையார் பாடல்கள், பாரதியார் பாடல்கள், ஆன்மீகக் கருத்துக்கள் போன்றவற்றை எழுதுவது அவரது தமிழ் இலக்கிய அறிவை - பரந்துபட்ட அறிவை மட்டும் காட்டாமல் அவற்றைக் கொள்கை ரீதியாக, அணுகுமுறையாக (ஔவையின் strategy, கச்சியப்பர் விதி போன்றவை) பாவிப்பது என்பது முத்துலிங்கத்தால் மட்டுமே இயலும் செயல் என எண்ணி நான் மலைப்பதுண்டு. மதிப்பெண் பெறுவதற்காகவே இலக்கியங்களைக் கற்கும் இன்றைய நவீன உலகில் (தமிழர்கள் மத்தியில்) அவற்றிலிருந்து வாழ்க்கைக்குத் தேவைப்படும் அணுகுமுறைகளைப் பெறமுடியும் என முத்துலிங்கம் காட்டுவது புதிய பார்வை மட்டுமின்றி நம்பிக்கை ஒளி நல்கும் தன்மை கொண்டது என்பது என் அபிப்பிராயம்.

பல நாடுகளில் வசிக்கும் போது இடையிடையே பிறந்த மண்ணின் நினைவு வருவதும், மற்ற நாட்டுப் பழக்க வழக்கங்களைப் பார்க்கும் போது தனது மண்ணின் (பிறந்த மண்ணின்) நினைவு வருவதும் ஒரு யாத்ரீகனின் பார்வையில் தவிர்க்க முடியாதது. இந்த நினைவுகளை மிக நேர்த்தியாகப் பதிவு செய்துள்ள முத்துலிங்கத்தின் பணி காலப்பரிணாமத்தின் அடிப்படையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பது என் கருத்து. வருங்காலத் தலைமுறையினர் இலங்கைத் தமிழர்களின் வளமைகள், பழக்கங்கள் குறித்து ஓரளவாவது அறிந்து கொள்ள முடியும்.

ஒரே ஒரு கதையில் நாடிழந்து வேதனைப் படுவதை (கறுப்பு அணில்) காண முடிகிறதே தவிர எஞ்சிய கதைகளில் ஆசிரியர் புதிய நம்பிக்கையை ஊட்டும் வகையில், மகிழ்ச்சியைப் பெருக்கும் வகையில் கதைப்புலங்களை அமைக்கிறார். பெரும்பாலான கதைகளில் ‘நான்’ எனக் கதைசொல்லியே கதையைக் கூறுவதால் கதைகளோடு வாசகனுக்கு நெருக்கம் அதிகமாகி அக்கதைகளோடு ஒன்றி விடுகிறான். கதை சொல்லியின் அனுபவங்கள் வாசக அனுபவங்களாக மடைமாற்றம் பெறுகின்றன.

புனைவுகளில் முத்துலிங்கத்தின் முத்திரை விசேஷமானது. மனிதர்கள், மிருகங்கள், இடங்கள் போன்றவற்றை அறிவுபூர்வமாக, நகைச்சுவை ததும்ப, உணர்வுபூர்வமாக, காட்சிப்படுத்தும் முகமாக, (dramatisation) ஒப்பீட்டுப் பார்வையாக வருணிக்கிறார். கதைகளின் பாடுபொருள்கள் பல்வேறு திறத்தன. அறிவியல், ஆராய்ச்சி, நிர்வாகம், பொருளியல், எனப் பலவகையான பாடுபொருள்களிலும் முத்துலிங்கத்தின் நுண்மாண் நுழைபுலம் பளிச்சிடுகிறது. எனவே முத்துலிங்கம் அறிவுஜீவியாக ஒளிர்கிறார்.

நவீனக் கதைகள் என்பதால் முத்துலிங்கத்தின் கதை வடிவம் அவருடைய தனிப்பாணி என்று சொல்லும் அளவுக்கு அமைந்துள்ளன. மரபிலக்கியவாதிகளின் பார்வையில் முத்துலிங்கத்தின் கதைகள் வடிவச் செம்மையில்லாதவை என்று குறை கூறப்படலாம். ஆயின் இவருடைய கதைகளில் தொனிப்பொருள் அமைந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது. முத்துலிங்கம் ஒரு ரசிகர் என்ற முறையில் அவரது கதைகளில் வெளிப்படுகிறார். இதனால் ஒரு சில கதைகளில் ஆசிரியரே இடையிட்டுப் பேச நேரிடுகிறது. (எ.டு: கந்தையா வாத்தியாரின் கணக்கைப் பற்றி அவர் குறிப்பிடுவது). தமிழ்ச்சிறுகதைகளில் ஆசிரியர் இடையீடு அமைவது தொடக்க கால முயற்சிகளில் காணப்படுவது போல இவருடைய படைப்புகளிலும் காணப்படுகிறது.

மொத்தத்தில் அ.முத்துலிங்கத்தின் 75 கதைகளுள் 30 கதைகளை நான் வாசித்ததிலிருந்து முத்துலிங்கத்தின் கதைகள் என் உள்ளத்தைக் கவர்ந்துவிட்டன. அவருடைய நகைச்சுவை உணர்வை என்றுமே என்னால் மறக்கமுடியாது. ஒரு தேசாந்திரியின் யாத்திரையில் கிடைத்த அனுபவ முத்துக்கள் சிறுகதைக் கலையில் புதிய பரிமாணத்தைக் காட்டுவதாய் உள்ளன. முத்துலிங்கத்தின் ஆளுமையை எனக்கு உணர்த்துவனவாய் உள்ளன.

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768