|
ஒரு புரட்சிவாதியின் விசாரணை
(பள்ளி அறிக்கை)
கற்பவை அனைத்திலும் சந்தேகம்
எதற்கெடுத்தாலும் கேள்விகள்
தனித்துவச் சிந்தனை
கண்டிப்பில் அலட்சியம்
விருப்பத்திற்கேற்ப வேலை செய்வது
ஒழுங்கின்மை.
(மத போதகரின் அறிக்கை)
எதிலும் நம்பிக்கையில்லை
பாவப்பட்ட மனம்
ஜாதகம் கூட சிறப்பில்லை
எரிச்சல், நக்கல், கிண்டல் முற்றிவிட்டது
கடவுள் தத்துவஞானம் கிடையாது
நான் புத்தரிடம் சரணடைவதுபோல்
இவனும் செய்ய வேண்டும்.
(நீதிமன்ற அறிக்கை)
சட்டத்தை மீற நினைத்தான்
அமைதியைக் கெடுத்தான்
கசையடி கொடுக்கப்பட வேண்டும்
நற்குடி மகனாக்கப்பட வேண்டும்
(மருத்துவரின் அறிக்கை)
நோயாளி
மனநோய் சிகிச்சை அவசியம்
பயம், சித்தக்கலக்கம், பீதி, வெறி,
நரம்புத்தளர்ச்சி, அதீதக்கிறுக்கு
சராசரித் தன்மையற்ற குற்றவாளி
விநோத நடத்தை
மூளை அறுவைச் சிகிச்சை வலியுறுத்தப்படுகிறது
பேய்க்கனவுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்
உறங்கச் செல்லுமுன்
சில பெனோபார்ட்டிடோன்
மாத்திரைகள் கொடுக்கப்படவேண்டும்
(குற்றவாளியின் வாக்குமூலம்)
உணர்வுறுப்புக்களை
அறுத்துவிட்டு ஊரும்
நத்தையாக்கி விடாதீர்கள்
கடவுளைப் பற்றிய
பிரசங்கங்களால்
கோழையாக்கி விடாதீர்கள்
ஓட்டை நம்பிக்கைகளை
சுமக்கும்
எருமையாக்கி விடாதீர்கள்
கையைக் கட்டி
வாயை அடைத்து
நல்லப் பிள்ளை ஆக்கிவிடாதீர்கள்
சாக்ரடீஸ் போல்
வினாத்தொடுக்க விடுங்கள்
டெக்கார்ட் போல்
சந்தேகிக்க விடுங்கள்
நதியாய் மடையுடைக்க
கத்தியாய் வெட்டிவீச
என்னை உயரவிடுங்கள்
விறைத்தக்
குறியாய்
|
|