|
நெத்திவெள்ளை முன்னே நடக்க ஆரம்பித்திருந்த போது சூரிய ஒளிக்கதிர்கள்
இரப்பர் இலைகளை மெல்ல ஊடுருவ தொடங்கியிருந்தது. இதமான வெப்ப ஒளிக்கதிர்கள்
காலைக் குளிரில் சுருங்கியிருந்த கருப்பண்ணனின் தோலுக்கு மேலும் இதமாக
இருந்தது. எல்லா கொட்டகைகளையும் திறந்து மாடுகள் அத்தனையும் நோக்காலம்மன்
கோவிலருகே கூட்டமாக நிறுத்தினார். கருப்பண்ணனின் நாயான மைக்கல் தன்
பங்குக்கு நான்கு முறை குரைத்து கூட்டத்தை மேலும் ஒழுங்குப்படுத்தியது.
வேறொருவராக இருந்தால் இன்னேரம் வேர்த்து விறுவிறுத்திருக்கும்.
கருப்பண்ணனின் உடல் இப்போதுதான் குளித்து துவட்டியது போலிருந்தது.
கடைசியாக அருகருகே இருந்த பெரியண்ணன், பெரியசாமி கொட்டகைகளை நோக்கி
நடந்தார். கொட்டகைளின் நடுவில் மேடுகள் போல சாணம் குவிந்துக் கிடந்தது.
எப்போதும் பெரியசாமி கொட்டகையைத்தான் கடைசியாகத் திறப்பார். பெரியசாமியின்
கொட்டகையை கடந்து செல்லும்போது உள்ளேயிருந்த வால் கருப்பு முறைப்பதுபோல்
பார்த்தது.
பெரியண்ணனின் கொட்டகையைத் திறந்ததும் முதலில் வெளியேறிய நெத்திவெள்ளையைத்
தொடர்ந்து மற்ற மாடுகள் நிதானமாக தலையை அசைத்து நடக்க ஆரம்பித்தன.
பெரியசாமியின் கொட்டகையைத் திறந்ததும் வால் கருப்பு அவசர அவசரமாக வெளியேறி
கும்பலை நோக்கி ஓடியது. கருப்பண்ணன் தலையை ஒருமுறை அசைத்துக் கொண்டார்.
மாடுகளில் எம்.ஜி.ஆர், நம்பியார் எனத் தரம் பிரிக்க முடியுமென்றால்
நெத்திவெள்ளைதான் எம்.ஜி.ஆர். கருப்பு வால் நம்பியார். புல்லை மேய்ந்துக்
கொண்டிருக்கும்போதே கும்பலிலிருந்து நைசாக நழுவிவிடும். தேடி
கண்டுப்பிடிப்பது சிரமம். பிறகு பெரியசாமியின் காதைப் பொத்திக் கொண்டு
கேட்க வேண்டிய வசைகளைக், காதைப் பொத்தாமலே கேட்க வேண்டியிருக்கும்.
ஏற்கனவே இருமுறை கேட்டாகிவிட்டது. நெத்திவெள்ளையைப் பின்தொடர்ந்த
முன்னணிக் கூட்டம் துரை ஆபிஸை நெருங்கிக் கொண்டிருந்தது. ‘ஹே, ஹே’ வென்று
பின் தங்கிய மாடுகளைக் கழியால் அடித்து விரட்டத் தொடங்கினார்.
ஐந்து மணிக்கு கொட்டகைகளுக்குத் திரும்பும் முன் மூன்று இடங்களைப் மாடுகள்
புல் மேயும் தளங்களாக வைத்திருந்தார் கருப்பண்ணன். முதலாவது இடமாக
தோட்டத்தின் திடல். பிறகு அங்கிருந்து பத்து மணி போல் மாடுகளை ஓட்டிக்
கொண்டு குளத்து பாசா, கொக்கோ ராஜாவின் தோட்டத்தைத் தாண்டி தித்தி பஞ்சாங்
அடைய சூரியன் நடுப்பகுதியிலிருந்து சிறிது இறங்கியிருக்கும்.
அங்கிருக்கும் அ கியாட் கடையில் தேங்காப்பூ ரொட்டியும், சீராப்பும்
குடித்துவிட்டு வெள்ளை லயனை நோக்கி மாடுகளை விரட்டுவார். மீண்டும் நான்கு
மணிப்போல தோட்டத்திற்கு மாடுகளோடு திரும்பினால் கஞ்சித்தண்ணியோடு
காத்திருப்பார்கள் மாடுகளின் சொந்தக்காரர்கள். ஒவ்வொரு கொட்டகைக்கும் ஒரு
மாதத்திற்கு ஐந்து வெள்ளி. மாதம் முடிந்ததும் கருப்பண்ணனின் கையில் 150
வெள்ளி தேறும்.
மாடுகள் அத்தனையும் திடலில் மேயத் தொடங்கிய போது கருப்பண்ணனுக்கு
லட்சுமியின் முகம் நினைவுக்கு வந்தது. அவருக்கு உணவு சமைத்து தரும் ராஜாலு
அக்காவின் பேத்தி. அந்த குழந்தையின் வருகைக்கு பின்புதான் உற்றார்
உறவினரற்ற அவருடைய வெறுமைப் பொழுதுகள் அன்பின் தொடுதல்களால் நிறைவடையத்
தொடங்கியிருந்தன. கண்கள் உருட்டி பொக்கைப் பல் தெரிய ஒரு சிரிப்பு.
கறுப்பு வெற்றிலையில் சுண்ணாம்பும் கொட்டைப் பாக்கும் சரியான அளவில்
வெற்றிலை உரலில் இடித்து வாயில் போட்டு மெல்லும்போது தொண்டையில் இறங்கும்
சாறு தரும் நிறைவையும் மிஞ்சியது அவள் சிரிப்பு. அலின் கடையில் நாசி
லெமாக், மீஹுன் மற்றும் பெங்காங் இன்னேரம் தயாராக இருக்கும். லட்சுமிக்கு
பெங்காங் என்றால் உயிர்.
‘மைக்கல் மாடுகள செம்பன தோப்பு குழிக்கு பக்கமா போகாம பாத்துக்க, சரியா’
என்றவாறே அலின் கடையை நோக்கி நடக்க தொடங்கினார். பத்து வருடத்திற்கு
முன்புவரை இரப்பர் தோட்டமாக மட்டுமே இருந்த ஸ்கார்புரோ தோட்டத்தைக்
கொஞ்சம் கொஞ்சமாக செம்பனை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தது. திடலின்
வடக்குப் பகுதியில் இருந்த முற்றின இரப்பர் மரங்கள் வெட்டப்பட்டு செம்பனை
கன்றுகள் நடப்பட்டன. கன்றுகளை மாடுகள் தின்றுவிடாமல் இருக்க பகுதியைச்
சுற்றிலும் பத்து அடிக்கு ஆழமான குழிகள் வெட்டப்பட்டன. மனிதர்கள் கடக்க
சிவப்பு நிறத்திலான இரும்பு பாலம் போடப்பட்டது. மாடுகள் தாண்ட நினைத்தால்
குளம்புகள் இரும்புகளின் இடுக்குகளில் மாட்டி கால் ஒடிய வேண்டியதுதான்.
ஏற்கெனவே சில மாடுகள் காலொடிந்து அடி மாடாக கைருடினிடம் விற்க
வேண்டியதாயிற்று.
இன்னும் சில மாடுகள் பிடிவாதமாக குழிகளைத் தாண்ட முயற்சித்து குழிகளில்
விழுந்து மாட்டிக் கொள்ளும்.இப்படி ஒருமுறை மாட்டிக் கொண்ட கருப்பு வாலை
கழுத்து மற்றும் நான்கு கால்களிலும் கயிறு கட்டி இருபது பேர் வரைத்
தூக்கினார்கள். அந்த நிகழ்வு முழுவதும் பெரியசாமியின் கொச்சை அர்ச்சனையை
மெளனமாக கேட்டப்படி நின்றிருந்தார் கருப்பண்ணன். கடைசியாக ‘கண்டார ஓலி
மவனுங்க’ என்று தோட்ட நிர்வாகத்தை பெரியசாமி வைததைப் எண்ணி சிரித்தப்படியே
அலின் கடையை நோக்கி நடக்க தொடங்கினார் கருப்பண்ணன்.
கடையில் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. கருப்பண்ணன் உள்ளே நுழையும்போது
அலின் மீஹுனை மடித்தப்படியே பைடியாவிடம் தெலுங்கில் பேசிக்
கொண்டிருந்தார். அலினுக்கு கருப்பண்ணனைவிட இருந்தால் பத்து வயதுகுறைவாக
இருக்கும். கிட்டதட்ட ஐம்பது இருக்கும். தன்னைப்போல்தான் அலின்
அனைவரிடமும் பழகுகிறார். அலீனுக்கு சீனத்தோடு மலாய், ஆங்கிலம், தமிழ்,
தெலுங்கு, மலையாளம் என பேச வருகிறது. அறுபது வருட மலாயா வாழ்க்கையில்
தமிழோடு மலாய் ஏதோ கொஞ்சம் அறிந்ததோடு சரி. பெருமூச்சு விட்டுக்கொண்டார்.
‘ரெண்டு பெங்காங் போதுமாண்ணே’ என வெள்ளைப் பையில் மடித்து காசை வாங்கிக்
கொண்டார் அலீன்.
ஆயம்மா காளி மலம் கழித்துவிட்ட குழந்தையை முட்டி காலில் போட்டு நீர்
விட்டு சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார். குழந்தை வீறிட்டு அழுதுக்
கொண்டிருந்தது. கருப்பண்ணனைக் கண்டதும் உள்ளே என சைகைக் காட்டிவிட்டு
வேலையைத் தொடர்ந்தார். கருப்பண்ணனைக் கண்டதும் சிரித்தப்படியே தத்தி தத்தி
நடந்து கதவின் குறுக்கேப் போடப்பட்ட பலகையைப் பிடித்துக் கொண்டாள்
லட்சுமி. அப்படியே வாரியெடுத்து மார்பினில் அணைத்துக் கொண்டார். லட்சுமி
தன்னிரு மழலைக் கரங்களால் கருப்பண்ணனின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.
அம்மாவுக்குப் பிறகு தன்னை அணைக்கும் இன்னொரு மனித உயிர். இரண்டே வயதான
உயிர். கருப்பண்ணனுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. வாங்கி வந்த
பெங்காங்கை கொஞ்சம் பிய்த்து லட்சுமிக்கு ஊட்டினார். லட்சுமியைத் தூக்கிக்
கொண்டு ஆயக் கொட்டகையிலிருந்து வெளியே வந்தார். ஆயக் கொட்டகைக்குப்
பக்கத்தில் இருந்த பிரமாண்டமான புறாக் கூண்டை லட்சுமிக்கு காண்பித்தார்.
ஒரே நேரத்தில் 200 புறாக்கள் தங்குவதற்கான கூண்டு. கூண்டு என்பதே தவறு.
புறாக்கள் உணவைப் பெற்றுக் கொள்வதற்கான இடம் என்று வேண்டுமானால்
சொல்லலாம். 40-களில் இத்தோட்டத்திற்கு அம்மாவுடன் சிறுவனாக வந்தபோதே
இக்கூண்டு இருந்தது. 15 அடி உயரம் கொண்ட இரண்டு தூண்களின் மேல் அதன்
இயல்பான பச்சை வண்ணத்தை இழந்துவிட்டாலும் இன்னும் உறுதியாய்
வீற்றிருக்கும் கூண்டு. மக்களே சோற்றுக்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்த
காலத்தில் புறாக்கள் தங்கி செல்லவும், உணவு பெறவும் இக்கூண்டைக் கட்டியவரை
யாரென்று தெரிந்துக் கொள்ளாமல் காலத்தைக் கடத்திவிட்ட தன் அலட்சியத்தை
எண்ணி வருந்தினார். இந்தப் புறாக்களும் தானும் ஒன்றுதானோ என எண்ணம்
திடீரென அவருக்கு எழுந்தது. லட்சுமி புறாக்களை நோக்கி கைகளை அசைத்துக்
கொண்டிருந்தாள்.
திடலிருந்து மாடுகளை தித்தி பஞ்சாங் நோக்கி ஓட்டுவதற்கு முன்,
என்ணிக்கையைச் சரிப் பார்த்துக் கொண்டார். மைக்கல் கூட்டத்தை விட்டு நழுவ
நினைத்த மாடுகளைக் குரைத்து அடக்கிக் கொண்டிருந்தது.
52-ம் தீம்பாரைக் கடக்கும்போது பெரியண்ணனைப் பார்த்துவிட்ட நெத்திவெள்ளை
தன் எஜமானனை நோக்கி நடக்க தொடங்கியது. மரம் சீவிமுடித்து ஓய்வாக
களைப்பாறும் நேரம். கொசுக்கள் தலையைசுற்றி மொய்த்துக் கொண்டிருக்க நாளிதழ்
படித்துக் கொண்டிருந்தவர் அருகே வந்துவிட்ட பிறகுதான் நெத்திவெள்ளையின்
வருகையை உணர்ந்தார். நாளிதழை மடித்துவிட்டு அதன் முகத்தைத் தடவவும்
கருப்பண்ணன் அவ்விடம் சேரவும் சரியாக இருந்தது. ‘உங்கள பார்த்தும்
வந்திருச்சி தலவரே’ தலையைச் சொறிந்துக் கொண்டே கருப்பண்ணன். ‘அதுக்கென்ன’
என்றுவிட்டு நெத்திவெள்ளையின் கழுத்துப் பகுதியைத் தடவத் தொடங்கினார்.
‘அண்ணே, வெத்தல ஒன்னு மடிச்சு கொடு’ என்றார் பெரியண்ணனின் மனைவி
முனியம்மா. கட்டிப்பாலிருந்து கோட்டுப்பாலைப் பிரித்து, கட்டிப்பாலைச்
சாக்கினுள் அடைத்துக் கொண்டிருந்தார். மலம் போல் நாறியது கட்டிப்பால்.
ஏழு வருடத்திற்கு முன் ஓய்வு பெற்ற பெரியண்ணன் அதற்கு முன் தோட்டத்து
யூனியன் தலைவராக இருந்தார். அவர் நினைத்திருந்தால் முனியம்மாவுக்கு இளமரம்
வாங்கிக் கொடுத்திருக்கலாம். அநியாயத்திற்கு நேர்மை. இன்னும் முனியம்மா
ஏணியைத் தூக்கிக் கொண்டு முத்தின மரத்தைதான் சீவிக் கொண்டிருக்கிறார்.
‘கருப்பா, கதய கேட்டியா, அரசாங்கம் நம்ம இனத்துக்கு கொடுத்த டெலிகம்ஸ்
பங்கைத் தலைவரு தன் பங்கா நினைச்சு சாப்பிட்டு ஏப்பம் விட்டுடாரு’
திடீரென்று பெரியண்ணன் சொன்னதால் கருப்பண்ணனுக்குச் சரியாக புரியவில்லை.
கருப்பண்ணனின் நிலை பெரியண்ணனுக்குப் புரிந்தது. ‘நம்ப இளிச்சவாயித்தனம்
இவனுங்க மூலதனம்’ என்று சொல்லிவிட்டு நெத்திவெள்ளையைக் கூட்டத்தின் திசையை
நோக்கி விரட்டினார். முனியம்மாவிடம் வெற்றிலையைக் கொடுத்துவிட்டு
நெத்திவெள்ளையின் பின்னால் நடக்கத் தொடங்கினார் கருப்பண்ணன்.
நேற்று பெய்த மழையினால் குளத்து பாசாவில் தண்ணீர் இடுப்புவரைத்
தேங்கியிருந்தது. தெளிந்த நீர். கெண்டையும் சண்டை மீன்களும் இங்கும்
அங்கும் ஓடிக் கொண்டிருந்தன. சாலையோரத்தில் நின்றே தண்ணீரில் தன்
உருவநிழலைப் பார்த்தவாறிருந்தார்.
நீரிலும் அவர் குள்ளமாகத்தான் தெரிந்தார். தலைமுடி இன்னும் அடர்த்தியாக
இருந்தாலும் எல்லாம் வெள்ளையாகியிருந்தது. மீசை மட்டும் இன்னும் முளைக்க
காணோம். பிரஜா உரிமை எடுக்காததனால் நாட்டின் சுதந்திரத்திற்குப் பின்
சிவப்பு அடையாள கார்டுதான் கிடைத்தது. ஏனோ படிப்பு அவருக்குப் பிடிக்காமல்
போனது. அவர் சீவும் மரங்கள் காயமாக இருந்ததால் வெளிக்காட்டு வேலைதான்
கிடைத்தது. அதுவும் மே 13க்கு பிறகு, அந்த வேலையும் பெர்மிட் சிக்கலில்
இல்லாமல் போனது. ராஜாலு அக்காவின் கணவர்தான் அவருடன் மரம் சீவ உதவிக்கு
வைத்துக் கொண்டார். மாதம் முடிந்ததும் கையில் 20 வெள்ளியோடு காலைப்
பசியாற, மத்தியான சாப்பாடு, இரவு உணவு. தூங்குவதற்கு முன் வெள்ளை லயக்
கள், படுத்தால் கனவுகளற்ற தூக்கம்.
தோட்ட மக்கள் தன்னை விவரம் குறைந்தவன் என நினைப்பதைப் பற்றி
கருப்பண்ணனுக்கு கொஞ்சம் வருத்தம் உண்டு. ஏன் அப்படி ஒரு நினைப்பு
இருப்பதைப் பற்றி யோசித்துப் பார்த்தார். தான் ஐந்து அடிக்கு மேல்
வளராதது, மரம் சீவ ஆளெடுப்பின் போது சீவிய மரங்கள் எல்லாம் காயமானது,
கல்யாணம் பண்ணாதது, இன்னும் சிவப்பு அடையாள கார்டோடு இருப்பது, எண்ணும்
எழுத்தும் மண்டையில் ஏறாதது, இல்லை யார் பேசினாலும் பதில் சொல்லாமல்
மெலிதாக சிரித்துக் கொண்டிருப்பது, இதற்கும் விவரமானவர்களுக்கும் என்ன
சம்பந்தம் என்றே புரியவில்லை. என் உழைப்பில் என் ஜடம் நகர்கிறது.
திடீரென்று செத்தால் கூட புதைப்பதற்கோ, எரிப்பதற்கோ ராஜாலு அக்காவிடம்
சிறுகச் சிறுக சேமித்து ஆயிரம் வெள்ளி வரைத் தந்திருக்கிறேன்.
லெட்சுமியும் வளர்ந்துவிட்டால் மற்றவர்களைப் போலவே லூசு, கிறுக்கன் என்று
சொல்வாளோ? அப்படி நினக்கும்போதே கருப்பண்ணனுக்கு கண் கலங்கியது. அதற்குள்
செத்துவிட வேண்டும் என எண்ணிக் கொண்டார்.
2.30 மணிக்கு தித்தி பஞ்சாங்கில் அ கியாட் கடையில் அதிகமாக பசித்ததால்
கொய்த்தியோவ் கோரேங்கும், எஃப்.&என் ஓரஞ்சும் குடித்துவிட்டு மாடுகளுடன்
வெள்ளை லயனை நோக்கி நடக்கத் தொடங்கினார். பத்து செம்பிலான் இடதுப்
பக்கமாய் மாடுகளை ஓட்டும்போது யு.டி.சி பேருந்திலிருந்து கூடுதல் நேர
வகுப்பை முடித்துவிட்டு மாணவ கூட்டம் சாலையைத் தாண்டுவதற்காக நின்று
கொண்டிருந்தனர். அனைவர் முகமும் களைத்திருந்தது. இந்தப் பேருந்து ஐந்து
வருடத்திற்கு முன்பே ஸ்கார்புரோவை சுற்றி செல்வதாக பெரியண்ணன் சொல்லிக்
கேட்டதாக ஞாபகம். இந்தப் பிள்ளைகள் இன்னும் 5 மைலாவது நடக்க வேண்டும்.
மாடுகள் வெள்ளை லயத்தை நோக்கி நடக்க தொடங்கியபோது பிள்ளைகள் தோட்டத்தை
நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தனர்.
வெள்ளை லயத்தை ஒட்டியிருந்த புல்வெளியில் மாடுகள் மேய்ந்துக்
கொண்டிருந்தன. மீண்டுமொருமுறை மாடுகளின் எண்ணிக்கையைச் சரிப் பார்த்துக்
கொண்டார். மைக்கலை அழைத்துக் கொண்டு பக்கத்திலிருந்த கள்ளுக் கடையை நோக்கி
நடந்தார்.
முனியாண்டி இப்போதுதான் கள் வந்து இறங்கியதாக சொல்லி ஒரு குவளைக் கள்ளை
கருப்பண்ணனின் மேஜையில் வைத்தார். வேண்டாமென்று சொல்லியும் இன்னும் சூடாக
இருந்த காட்டு பன்றியின் சம்பாலையும் எடுத்து வைத்தார். ஒரு மொடக்கு கள்ளை
அருந்திவிட்டு வாயில் ஒரு துண்டு இறைச்சியைப் போட்டு கொண்டார். குளுமைக்கு
உறைப்பு அருமையாக இருந்தது. கடையில் மேலும் இருவர் சத்தமாக பேசிக்
கொண்டிருந்தனர். கோல முடா தோட்டத்தைச் சேர்ந்தவர்கள். தோட்டத்துக்
கிராணியைத் திட்டிக் கொண்டிருந்தனர். ‘ஒரு பைண்ட் கள் புங்குஸ்’
கருப்பண்ணன் முனியாண்டியிடம் சொன்னார். கந்தசாமி கங்காணி வாங்கி வரச்
சொல்லியிருந்தார். மைக்கல் இறைச்சியை கடித்துத் தின்றுக் கொண்டிருந்தது.
கருப்பண்ணனின் இரத்த ஓட்டம் வேகமாகியது. கறுப்பு வாலையும் சாபுவின்
விரிஞ்ச மூக்கனையும் காணவில்லை. புல்வெளி முடியும் இடத்திற்கு குரைத்துக்
கொண்டே ஓடிய மைக்கலைப் பின்தொடர்ந்து ஓட்டமும் நடையுமாக ஓடினார்
கருப்பண்ணன். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இரண்டையும் காணோம். முழுதும்
வேர்த்திருந்த உடலில் கைகள் வேகமாகவே நடுங்கத் தொடங்கியிருந்தன.
பெரியசாமியின் வசைகள் ஞாபகத்திற்கு வந்தன. ஆனால் அதைவிட இன்னொரு விஷயம்
மனதைப் பெரிதும் அலைக்கழித்தது. முன்பெல்லாம் மாடுகள் இப்படி ஓடிவிடுவதும்
பிறகு மறுநாள் காலை உடம்பு முழுதும் சேறோடு கொட்டகை முன் நிற்பதும்
சஜகம்தான். ஆனால் சமீப காலமாக இப்படி வழித் தவறிய மூன்று மாடுகள் இன்னும்
வரவேயில்லை. காட்டுப் பகுதியிலேயே லோரி வைத்து ஏற்றி மாடுகளைத் திருடும்
கும்பல் ஒன்று செயல்படுவதாகவும், மேலும் எச்சரிக்கையாக இருக்கும்படி
பெரியண்ணன் நினைவுறுத்தியது இப்போது நினைவுக்கு வந்தது.
பெரியசாமி போட்ட சத்தத்தில் பக்கத்துக் கொட்டகையில் இருந்தவர்களும்
பெரியசாமியின் கொட்டகை முன் கூடிவிட்டார்கள். கருப்பண்ணனின் பல தலைமுறை
மூதாதையர்கள் பெரியசாமியின் வாயில் நொறுங்கி கொண்டிருந்தார்கள்.
பெரியண்ணனும் சாபுவும் அவரை சமாதானப் படுத்த முயன்று கொண்டிருந்தார்கள்.
பெரியசாமி திடீரென பாய்ந்து தலைக்கவிழ்ந்து நின்றவரின் சட்டையைப் பிடித்து
இரண்டு அறை விட்டார். ‘கடசில ஒன் சாதி புத்திய காட்டிட்டல’, கத்தினார்
பெரியசாமி. தவறி விழ இருந்தவர் பக்கத்திலிருந்த மரத்தைத் தாங்கிப்
பிடித்துக் கொண்டார். அறுபது ஆண்டுகளில் கருப்பண்ணன் முதன் முதலாக தன்னை
அனாதையாக உணர்ந்த கணம் அது.
ராஜாலு அக்கா கொண்டுவந்திருந்த உணவு இன்னும் மூடி வைத்தபடியே இருந்தது.
கடிகாரம் பத்து முறை ஒலித்து ஏற்கெனவே ஒய்ந்திருந்தது. தோட்டம் ஒன்பது
மணிக்கெல்லாம் இருளில் மூழ்கிவிடும். கதவை மெதுவாக திறக்கும்போது கதவின்
ஓரத்தில் போடப்பட்ட சாக்கின் மேல் மைக்கல் படுத்துக் கிடந்தது. பெளர்ணமி
ஆதலால் கருமேகங்கள் சூழ்ந்த பகல் வெளிச்சத்தில் தோட்டம் கிடந்தது.
சங்கத்து ரூமிலிருந்த மாடு கட்டும் கயிறை எடுத்துக் கொண்டார். இன்னும்
தூங்கிக் கொண்டிருந்த மைக்கலை ஒரு முறைப் பார்த்துக் கொண்டார். கண்ணீர்
தொடர்ந்து கன்னங்களில் வழிந்துக் கொண்டிருந்தது.
திடலின் பக்கத்தில் செம்பனையையும் ரப்பரையும் பிரிக்கும் குழியின்
ஓரத்திலிருந்த ரப்பர் மரத்தின் தாழ்வான கிளையில் கயிரைக் கட்டினார்.
பூச்சிகளின் ரீங்காரத்தோடு அவ்வப்போது தவளைகளின் சத்தமும் கேட்டது.
கயிரைக் கழுத்தில் மாட்டிக் கொண்டு குழியில் குதித்தார். கயிறு நீளம்
குறைவாக இருந்ததால் குழியின் விளிம்பில் பிட்டம் அமர்வதற்கு சரியாக
இருந்தது. இடுப்பிலும் கழுத்திலும் பயங்கர வலி. நேசமற்றவர்களோடு இனி
வாழ்ந்து பயனில்லை என்ற முடிவோடு அமர்ந்தவாறே கால்களைக் குழியின்
அடிப்பகுதி நோக்கி இழுக்கத் தொடங்கினார். ஐந்து ஆறு இழுப்புக்குப் பின்
மூச்சு முட்டத் தொடங்கியது. அப்போது அவருக்கு லட்சுமியின் நினைவு
வந்தது. பட்டென்று பக்கத்திலிருந்த வேரைப் பிடித்து கால்களைக்
குழியிலிருந்து வெளியேற்றினார்.
|
|