|
விஷ்ணுவிற்கு தூக்கம் கலைந்த போது, சாந்தி புன் சிரிப்போடு கட்டிலின்
விளிம்பில் அமர்ந்து கொண்டிருந்தாள்! அவளைப் பார்த்து சிரித்தவன்
ஜன்னலுக்கு வெளியே சாரல் அடிப்பதை பார்த்து ரசிக்கிறான். மேசைமேல் கடிதம்
காற்றில் படபடத்துக் கொண்டிருக்கிறது. சாந்தியைப் பார்த்துச் சொன்னான்,
வீட்டிலிருந்து கடிதம் வந்திருப்பதை.... "ஆமாம்! பார்த்தேன்!" என்று பதில்
சொன்னாள் சாந்தி. "கடிதத்தை அப்பாதான் எழுதியிருக்கிறார். வேண்டுமானால்
எடுத்துப் படித்துப் பாரேன்" என்று விஷ்ணு சொல்லியவுடன், கட்டிலில்
இருந்து எழுந்தவள் கால்களை கொஞ்சம் இழுத்து இழுத்து நடந்து மேசை மேல்
இருக்கும் கடிதத்தை எடுத்துக் கொண்டு மீண்டும் இழுத்து இழுத்து நடந்து
வந்து கட்டிலில் அவனுக்கு அருகில் கொஞ்சம் நெருங்கி அமர்ந்துக் கொண்டாள்.
விஷ்ணு தன்னுடைய மேசைக்கு மேல் பெரிய பிரேம் போட்டு எடுத்து வந்து
மாட்டியிருந்த தன்னுடையக் குடும்பப் படத்தை ஒரு தரம் உற்று நோக்கினான்.
முதலில் அப்பாவும் அவருக்கு அருகில் அம்மாவும் அவருக்கு அருகில்
பாட்டியும், அண்ணன் மணி, விஷ்ணு, அவனுக்கு அருகில் தம்பி ஜெகன், அம்மாவின்
மடியில் ஏழு வயது தங்கை சற்குணவதி, இரு சூம்பிப் போன கால்களைத் தொங்கவிட்ட
படியே அமர்ந்திருக்கும் கருப்பு வெள்ளைப் படம்.
கஸ்தூரிபாய் மெடிக்கல் காலேஜில் மருத்துவம் படிப்பதற்கு இடம் கிடைப்பது
உறுதியானவுடன், புறப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பதாக, கம்போங்
சித்தியவான் சாலையில் உள்ள 'ஜிம் போட்டோ ஸ்டுடியோவிற்கு' குடும்பத்தோடு
சென்று எடுத்துக் கொண்ட முதல் குடும்பப்படம். காலையில் எழுந்தவுடனும்,
இரவில் படுப்பதற்கு முன்பும் ஒரு நிமிட நேரமாவது நின்று ஆசை தீரப்
பார்த்துவிட்டு அடுத்த காரியத்தில் ஈடுபட விரும்புவதை இங்கு வந்த நான்கு
ஆண்டு காலமும் வழக்கமாக்கிக் கொண்டிருந்தான் விஷ்ணு.
சுவரில் மாட்டியிருந்த குடும்பப் படத்தை பார்த்து நினைவிலிருந்து
மீண்டவன், வீட்டிலிருந்து வந்த கடிதத்தைப் படித்துவிட்டு, கண்களில் ஈரம்
கசிய அமர்ந்திருப்பவளைப் பார்க்கிறான்! நேற்று மதியம் இந்தக் கடிதத்தைப்
படித்து விட்டு அவன் குலுங்கி அழுததை நல்ல வேளை சாந்தி பார்க்கவில்லை.
பார்த்திருந்தால் அவளும் கூட உடைந்து அழுதிருப்பாள்! நிச்சயம் அது
நடந்திருக்கும்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு தான், கோலாலம்பூரில் உள்ள அவர்களின்
வீட்டிலிருந்து வந்திருந்த கடிதத்தை கொண்டு வந்து என்னிடம் கொடுத்துப்
படிக்கச் சொல்லி கேட்டுக் கொண்டான்.
மருத்துவக் கல்லூரியிலிருந்து விஷ்ணுவிற்கு இரண்டு வார விடுமுறை
கொடுத்திருந்தார்கள். பெரியம்மை போட்டு அவனை வாட்டிக் கொண்டிருந்தது.
வாடகை அறையில் தங்கியிருந்த சக மாணவ நண்பர்களை இரண்டு மூன்று வாரங்களுக்கு
வேறு வேறு நண்பர்களுடன் தற்காலிகமாக தங்கியிருக்கும் ஏற்பாடுகளைச்
செய்துக் கொள்ளுமாறு முடிவு செய்யப்பட்டதிலிருந்து, சாந்தி மட்டும்தான்
விஷ்ணுவுக்கு துணையாக உதவிகள் செய்வதற்காக வந்து போய்க் கொண்டிருக்கிறாள்
கடந்த சில நாட்களாக.
கல்லூரிக்கு காலையில் புறப்படுவதற்கு முன்பும், இடைவேளையிலும் வகுப்பு
முடிந்த பின்னரும், விஷ்ணுவிற்கான அத்தனை ஏற்பாடுகளையும் அவளே எடுத்துக்
கொண்டு விஷ்ணு எவ்வளவோ தடுத்தும் வலிய வந்து செய்துக் கொடுத்துக்
கொண்டிருந்தாள்!
இரண்டு வருடங்களுக்கு முன், மருத்துவக் கல்லூரியில் நிகழ்ந்த மாணவர்களின்
கருத்தறியும் நிகழ்ச்சி ஒன்றில் விஷ்ணுவின் உரையைக் கேட்டறிந்த
தினத்தன்றுதான் இருவருமே அறிமுகமானார்கள். அந்த நிகழ்வில் பேசிய விஷ்ணு,
கல்லூரியின் சில நடைமுறைகளையும், கடைபிடிக்கப்படும் பழக்க வழக்கங்களையும்
கடுமையாக விமர்சனம் செய்திருந்தான். விஷ்ணுவினுடைய விமர்சனம் கடுமையாக
இருந்ததைக் கண்டு நிர்வாகத் தரப்பிலிருந்து சல சலப்பு ஏற்பட்டது. உலகம்
முழுவதிலும், ஏன் இந்தியாவிலும் கூட ஏழைகள் ஒரு வேளை உணவுக்காக ஏங்கிக்
கொண்டிருக்க இந்தக் கல்லூரியில் மூன்று வேளையும் வழங்கப்படும் உணவுகளில்
இருந்து வீணாக்கப்படும் உணவை ஒரு கிராமத்து மக்களுக்கே வழங்கி அவர்களின்
கோரப் பசிப் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடலாம் என்றும் இதுபோன்ற அவலத்தை
'ஐ.நா' அறிவித்திருக்கும் உலகக் குழந்தைகள் ஆண்டிலும் கூட புரிந்துக்
கொள்ளும் பக்குவம் இல்லாத நிலைக்கு, சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் பொறுப்பு
ஏற்க வேண்டும் எனவும், மாணவர்களின் உடல் ஆரோக்கியத்திற்காக கல்லூரி
நிர்வாகம் முட்டைகளை உணவில் சேர்த்துள்ளதையும் மருத்துவக் கல்லூரி
மாணவர்களோ அதனை ஒருவர் மீது ஒருவர் எறிந்து விளையாடும் பந்தாகக் கருதிக்
கொண்டு செயல்படுவதைப் பார்க்கும் போது மனம் வேதனையுள் மூழ்குகிறது என்றும்
தெரிவித்து விட்டு, மேடையை விட்டு இறங்கிக் கொண்டிருந்த போது, சாந்திதான்
இழுத்து இழுத்து நடந்து வந்து 'விஷ்ணு'வுக்கு கை கொடுத்து குலுக்கி
வாழ்த்து தெரிவித்த முதல் ஆளாக விளங்கினாள்!
முன் வரிசையில் உட்கார்ந்திருந்தவளை, அவன் மேடையில் நின்று பேசிக்
கொண்டிருந்த போது இரண்டொரு முறை கவனிக்கத்தான் செய்தான். அவள் அழகும்
நிறமும் அவனது பார்வையில் பட்டு மின்னலடிக்கத்தான் செய்தது. ஆனால்! இப்படி
உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருப்பாள் என்று அவன் சிறிதும் எதிர்
பார்த்தானில்லை. தன் தங்கை ஏழு வயது சற்குண தேவி. அவளுக்கு இப்பொழுது வயது
ஒன்பது ஆகியிருக்கும். அதே நிலையில் உள்ளவள் வந்து தன்னுடைய மேடைக்
கருத்தை பாராட்டி விட்டுச் செல்வதைப் பார்த்து விஷ்ணுவிற்கு ஆச்சரியமாக
இருந்தது.
அதன் பிறகு அவனிடம் வந்து யார் யாரோ பாராட்டி விட்டுச் சென்றது எதுவும்
அவனுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. அந்த நினைவுடன் தான் விஷ்ணுவும்
அவனுடைய அறைக்குத் திரும்பினான். அதே நிலை, என் தங்கை தாயாரின் மடியில்
ஒன்பது வயது வரையிலும் துவண்டுக் கிடக்கிறாளே. அதே கதியில் அழகும் அறிவும்
நிரம்பிக் கிடக்கும் இந்தப் பெண்ணுக்கும் வந்து நேர்ந்திருக்கிறதே.
சாந்தியுடன் நிகழ்ந்த ஒவ்வொரு சந்திப்பும், விஷ்ணுவின் லட்சியத்தை மிகவும்
வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று விரும்பினான். அவனுடைய மனதிற்குள்
சிறு வயது லட்சியம் ஒன்று நீறுபூத்த நெருப்பாகக் கனன்றுக் கொண்டிருந்தது.
அந்த நெருப்பின் அடையாளத்தை விஷ்ணு இந்தியாவுக்கு கொண்டு வந்து
கண்டுபிடித்தான். தனக்காகவே நிச்சயிக்கப்பட்டிருக்கிற பெண் இவள் தான்
என்று அவன் நிச்சயமாக நம்பினான். பழக நேர்ந்த இரண்டு ஆண்டுகளுக்குப்
பிறகுதான்! ஒரு நாள், மாலை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கலை
நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக இருந்து யாருமே இன்னும் வந்து அமராத
வரிசையில் உள்ள நாற்காலிகளில் இருவரும் அருகருகே அமர்ந்திருந்த சூழலில்,
தன் காதலைப்பற்றி தெளிவாகவும் மிக மென்மையாகவும் சாந்தியிடம் தெரிவித்தான்
விஷ்ணு! பார்வையாளர்கள் இன்னமும் பாதியளவு கூட வந்து அமராத நிலையில்
இருந்த அரங்கத்தில் பிரகாசமாக இருந்த ஒளிவெள்ளத்தில், சாந்தியிடம் தன்
விருப்பத்தை தெரிவித்த போது, அவளுடைய முகம் சிறிய அதிர்வுடன் மேலும்
சிவந்து விட்டதையும், நடுங்குவதையும் கண்டு, விஷ்ணுவிற்கு கொஞ்சம் பதற்றம்
ஏற்பட்டது. அப்போது அவளுக்கு ஏற்பட்ட சங்கடங்களில் இருந்து சட்டென்று
மீண்டவளாக, "விஷ்ணு, இதற்கு என்னால் உடனடியாகப் பதில் சொல்ல முடியாது.
கொஞ்சம் எனக்கு அவகாசம் வேண்டும்" நிறுத்திக் கொண்டாள் சாந்தி.
அதன் பிறகு விஷ்ணுவிற்கு, நிகழ்ச்சியில் மனம் லயிக்கவில்லை. மருத்துவக்
கல்லூரி மாணவர்களில் சிலர், பையத் திரைப்பட பாடல்கள் பாடும்போது மட்டும்
கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தான். சாந்தி தங்கியிருக்கும் விடுதி வரை
சென்று அவளை விட்டு விட்டுத் திரும்பினான்.
மனம் ஒரு நிலையில் இல்லை! சாந்தியும் இதே மன நிலையோடுதானே இருப்பாள். நான்
அவளிடம் சொல்வதற்கு கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேனோ. சதா காலமும் அவளுடைய
நினைவாகவே இருந்து சஞ்சலப் பட்டுக் கொண்டிருந்த சில நாட்களும் ஓடிவிட்டது.
கல்லூரி முடிந்து திரும்பி வந்த அன்றைக்கு, கடிதம் வந்திருந்தது. அதில்,
ஒவ்வொரு வார்த்தையையும், சாந்தி மனம் திறந்து எழுதியிருந்தாள். பல
இடங்களில் மனதைத் தைத்து விடும் வகையில் வார்த்தைகளை அந்தப் பெண்
வெளியிட்டிருந்தாள். விஷ்ணுவிற்கு பிரமிப்பாய் இருந்து திகைப்பை
ஏற்படுத்தியது.
விஷ்ணுவிற்கு,
வணக்கம் தெரிவித்து சாந்தி எழுதிக் கொள்வது.
உங்கள் காதலை என்னிடம் நீங்கள் தெரிவித்ததிலிருந்து எனக்குள்ளும் சில
கேள்விகள் எழுந்தது. பெண் எதையும் எளிதில் ஒப்புக் கொண்டு விடக்கூடாது
என்கிற மனோபாவத்துடன் வளர்ந்து நிற்கிற குணத்துடனேயே வாழ்கிறவள் நான்!
வாழ்க்கை மீதான என் லட்சியங்களில் ஒன்றுதான் இந்த மருத்துவப்படிப்பு.
எனக்குள்ள தன்னம்பிக்கை எப்போதுமே சவால் நிறைந்த பிரச்னைகளை ஒரு சராசரிப்
பெண்ணைப் போலவே எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான்! வசதிகள் உள்ள குடும்பத்து
பெண்ணாக நான் பிறந்திருந்தாலும், இந்த நிலையிலும், இந்தியா வரை வந்து
வந்து மருத்துவம் பயிலுவதற்கு எடுத்த எடுப்பில் ஒப்புக் கொள்வதற்கு
தயாராய் முன்வருகிற குடும்பம் இல்லை என்னுடையது. எனக்கு முன்னால்
வைக்கப்பட்ட ஒவ்வொரு சோதனையையும் தாண்டித்தான் இங்கு வந்திருக்கிறேன்; என்
மீது தணியாத பாசம் வைத்திருக்கும் என் பெற்றோர்கள், ஒரு சின்னப் பறவையைப்
போலவே கருதிக் கொண்டு தங்களின் கண்ணிலேயே வைத்து காலம் முழுவதும்
காப்பாற்றுவது என்கிற கனவில் ஊறிப் போய் இருந்தார்கள். என் உடன்
பிறப்புகள் மூவருமே, இந்த நிலையில் இருக்கின்ற ஒரே ஒரு தங்கையின் மீது
வைத்திருக்கும் அளவிட முடியாத அன்பின் காரணமாக தங்களது வருமானத்திலிருந்து
ஒரு பங்கை எனக்கென்று வங்கிக் கணக்கை திறந்து சேமித்துக்
கொண்டிருந்தார்கள்.
எனக்காகப் பெருகும் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை வைத்துக் கொண்டு நான்
என்ன சாதித்து விட முடியும்? நவீன காரும், தங்க நகைகளும், பள பளக்கும்
உடைகளும் மட்டுமே வாங்கிக் குவிக்க உதவும். எனக்கென்று குவிந்துக்
கிடக்கும் வசதிகளையும் சொத்துக்களையும் பார்த்து எச்சில் ஊறிய நிலையில்
வந்து நிற்கும் என் பெற்றோர்களால் சகோதரர்களால் என் உறவுக்காரர்களால்
கொண்டு வந்து நிறுத்தப் படும் ஒருவனுக்கு, மாலையிட வேண்டும் என்ற
நெருக்கடிக்குள் தள்ளப்படும் ஒரு நிலை எனக்கு உருவாகலாம்.
இரண்டு வயதில் எனக்கு ஏற்பட்ட இந்த என் நிலையின் தாக்குதலை, பத்து
வயதிற்குள்ளாகவே நான் எதிர்கொள்ள தயாராகிவிட்டேன் என்பதை உங்களுக்கு
சொல்கிறேன். 'ஹெலன் கெல்லரையும்', 'வெற்றி என் கைகளிலே' என்று வந்த
புத்தகங்களையும் படிக்கக் கிடைத்த அனுபவங்களை வைத்து நான் ஓரளவு தெளிவு
பெற்றிருந்தேன். ஒவ்வொரு தேர்வையும், அக்கினிப் பரிட்சையாகவே நான் ஏற்றுக்
கொண்டு நின்றேன்! ஒவ்வொரு தேர்விலும் நான் சராசரிக்கும் கொஞ்சம் அதிகமாகவே
தேர்ச்சி பெற்றுக் கொண்டிருந்தேன். அதற்கான இலக்கைத் தொடருவதற்கு, என்னால்
முடிந்தது. தேர்வுகள் என்பது அறிவைக் கொண்டு இயங்குவது தானே!
இது என்ன திடல் தடப் போட்டியா? நான் தோல்வி அடைவதற்கு. நான் மருத்துவம்
பயில வேண்டும் என்ற எண்ணத்தை என் குடும்பத்தில் வைத்த போது மிகவும் கலங்கி
நின்றவர்கள் என் தாயும் தந்தையும் மட்டும்தான். பாவம்! மனதளவில் என்
குறைகளைக் கண்டு கண்ணீர் வடித்துக் கொண்டு கிடந்தவர்கள் அவர்கள் தான்!
நான் மருத்துவம் பயில விரும்புகிறேன் என்று சொன்னால் எங்கே என் அண்ணன்கள்
ஒப்புக் கொள்ள மாட்டார்களோ என்று தயங்கிக் கொண்டிருந்தேன. ஆனால் என்
அண்ணன்மார்கள் மூவருமே அதை மிகவும் வரவேற்று கொண்டாடினார்கள். இன்னும் ஓர்
ஆண்டில் மருத்துவப் படிப்பு முடிந்து ஊர் திரும்பும் பறவைகளில் ஒன்றாக
வலம் வந்துக் கொண்டிருக்கிறேன். இந்த நிலையில்தான், நீங்கள் என்னைக்
காதலிப்பதாக சொல்லியிருக்கிறீர்கள். நானும் பெண்தான். மருத்துவம் பயில
வந்த கல்லூரியில் இளைஞர்களைப் பார்க்கிறேன். அவர்களில் நீங்கள் தனித்துவம்
மிக்கவர் என்பதை நானும் உணர்கிறேன். உங்கள் அழகும், பழகும் தன்மையையும்
பார்த்து எந்தப் பெண்ணுமே உங்கள் காதலை வேண்டாம் என்று மறுக்க மாட்டாள்.
நமக்குள் ஏற்பட்ட முதல் சந்திப்பு அனுபவம் நடந்த அதே அரங்கில்
வைத்துத்தான், என்னிடம் உங்கள் காதலை சொன்னீர்கள். நான் உங்கள் கைகளைக்
குலுக்கி வாழ்த்துக்களை சொன்ன முதல் அனுபவத்தையும், உங்கள் காதலை மிகவும்
மென்மையாக என்னிடம் தெரிவித்து விட்டு நிகழ்ச்சி முடிவடையும் வரை என்னை
ஏறெடுத்தும் பாராமல் அமர்ந்திருந்தீர்களே. அந்த அனுபவத்தையும் என் உயிர்
உள்ள வரையிலும் மறக்க முடியாது விஷ்ணு. கடைசியாக ஒரே ஒரு வேண்டுகோள்
இதுதான். உங்கள் தங்கையைப்போலவே நானும் குறையுடையவளாக இருப்பதினால்தான்
உங்களுக்கு என் மீது காதல் ஏற்பட்டிருக்கிறதா? அதுதான் என்றால்
அப்படிப்பட்ட காதலை ஏற்க நான் தயாராய் இல்லை என்பதை மிகவும் உறுதியாகத்
தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இப்படிப்பட்ட அனுதாபங்களும் பச்சாதாபங்களும், எதிர்காலத்தில் மிகப்பெரிய
பாதிப்புகளை இருவரிடத்திலேயும் ஏற்படுத்தி வாழ்க்கையை சிதற அடித்துவிடும்
என்பதை நான் மிகவும் நம்புகிறேன்!
அதுதான் என்றால் நீங்களும் நானும் வேறு வேறு திசையில் விலகிச் சென்று விட
வேண்டும் என்பதே என்னுடைய தரப்பு நியாயம். போதும் என்று நினைக்கிறேன்.
-சாந்தி
கடிதத்தைப் படித்து முடித்து விட்டுப் பெருமூச்சு விட்டான் விஷ்ணு.
உண்மைதானே, என் தங்கையின் நிலையில் இருந்த காரணத்தினால் ஏற்பட்ட
அனுதாபம்தான். அவள் மேல் ஏற்பட்ட காதலுக்கு முதல் அடிப்படைக் காரணமே.
சாந்தியுடன் மனம் விட்டுப் பேசுவதற்கான ஒரு சந்தர்ப்பத்திற்காக
காத்திருந்தான் விஷ்ணு. என்னுடைய காதலை வெளியிட்ட தினத்தன்று கூட அவளைப்
பற்றி நினைத்து சாந்தியும் இதே போன்ற மனநிலையில் தான் உழன்றுக்
கொண்டிருப்பாள். பெண் என்பதால் தன்னுடைய சுயமரியாதை கருதி, இதுவரை தன்
மனதில் இறுத்தி வைத்திருந்த காதலை வெளிப்படுத்த முடியாமல் தவித்துக்
கொண்டிருப்பாள் என்று தானே நான் அவளை எடை போட்டு வைத்திருந்தேன்.
அவளிடம் என் காதலைச் சொல்லுவதில் நான் அவசரப்பட்டுவிட்டேனோ. விஷ்ணு தன்
மனதில் பல விதமான எண்ணங்களின் மத்தியில் உழன்றான். இருந்தும் சாந்தியை தன்
வாழ்க்கைத் துணைவியாக அடைய வேண்டும் என்ற நிலையிலிருந்து கொஞ்சமும்
மாறவில்லை. அவள் கடிதம் எழுதி தன்னுடைய நிலையைத் தெளிவாக தெரிவித்த பிறகு
அவள் மீதான காதலும் அன்பும் எப்போதும் போலவே இருந்தது.
ஒருமுறை விஷ்ணுவைத் தேடிக் கொண்டு, அவனுடைய அறைக்கு வந்த சாந்தி. விஷ்ணு
தன் காதலைத் தெரிவிப்பதற்கு முன் எப்போது நேரில் சந்தித்துக் கொண்டாலும்
பேசிக் கொள்வார்களோ அதே மன நிலையில் தான் அப்போதும் பேசி விட்டுப் போவாள்.
அது போலத்தான் இன்றும் அவள் வந்திருப்பாள் என்று விஷ்ணு நினைத்தான்.
வழக்கமாகப் பேசும் ஒரு சில வார்த்தைகளைப் பேசியவளிடம் எப்போதும் இல்லாத
ஒரு படபடப்பு இருப்பதை விஷ்ணுவால் புரிந்துக் கொள்ள முடிந்தது. தன்னுடையப்
புத்தகப் பையை திறந்தவள். அதனுள்ளிருந்து ஒரு கடிதத்தை எடுத்து அவனிடம்
கொடுத்துவிட்டு "முதலில் இதைப் படித்துப் பாருங்கள்" என்று சொல்லி விட்டு
விடுதி அறைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள்.
விஷ்ணுவிற்கு முதலில் திகைப்பாக இருந்தாலும் கடித உறையைப் பார்த்தான்.
மலேசியாவிலிருந்து வந்திருந்த கடிதம் அது! நிச்சயம், சாந்தியின்
வீட்டிலிருந்து அவளுடைய குடும்பத்தார் அனுப்பி வைத்திருக்கும்
கடிதமாகத்தான் இது இருக்க வேண்டும். பின் எதற்காக இதைக் கொண்டு வந்து
கொடுக்க வேண்டும் மனதில் எழுந்த கேள்வியுடன் கடிதத்தைப் பிரித்துப்
பார்த்தான் விஷ்ணு! கடிதத்தை சாந்தியின் அம்மா எழுதியிருந்தார்!
அன்புள்ள மகள் சாந்திக்கு,
அம்மா எழுதிக் கொள்வது. உன் கடிதம் கிடைத்தது. எப்போதும் கேள்விக்குறியாய்
எங்களுக்கு இருப்பது உன் உடல் நிலை பற்றிய விஷயங்கள் மட்டும் தான். ஆனால்
இந்த முறை உன்னிடமிருந்து வந்த கடிதம் உன் மனநிலையைப் பற்றியதாக இருந்தது.
இதில் நீ முன் வைத்த ஒவ்வொரு விஷயமும் எனக்கும் அப்பாவுக்கும் மனநிறைவைத்
தந்தது.
தன் தங்கையின் நிலையில் வைத்து உன்னை அவர் விரும்பியதாகக் குறிப்பிட்டது
தவறு ஒன்றும் இல்லை என்பதே எங்கள் இருவரின் கருத்தும். இறைவன் உனக்கு
அழகையும் அறிவையும் நிறைவாகவே கொடுத்திருக்கிறான். உனக்கு குறைவில்லாத
செல்வமும் இருக்கிறது. நீ வசதிகள் நிரம்பிய குடும்பத்தில் பிறந்து
வளர்ந்து நிற்கிறவள். உனக்கு கருத்து தெரிந்த நாள் முதல் ஆடம்பரத்தை
தவிர்த்து விட்டு, எளிமையை உடைகளில் மட்டும் அல்ல, உள்ளத்தினாலும்
கடைபிடித்து வாழ்ந்து வருபவள். இந்த உன்னுடைய அருங்குணமே, எங்களைப்
பெரிதும் கவர்ந்திருக்கிறது.
இத்தகைய குணமும் நடவடிக்கைகளும்கூட, உன்னை விரும்பியதாகச் சொன்னவரைக்
கவர்ந்து விட்டிருக்கலாம். ஏழைகளின் லட்சியம் வைராக்கியமானது என்பதை
வாழ்க்கை கற்றுத் தந்த அனுபவப் பாடத்திலிருந்து நாங்களும் தெரிந்துக்
கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை! நீ மிகவும் அறிவுப்பூர்வமாக சிந்திப்பவள்.
எதையும் உணர்ந்து பார்க்கும் தன்மையுடையவள். தன் தங்கையின் நிலையோடு உன்னை
ஒப்பிட்டுப் பார்த்து உன்னை விரும்புகிறவராக மட்டும் அவர் இருந்து விடாமல்
வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் சூழ்நிலையிலும் உனக்கு தன்மானக் குறைவை
ஏற்படுத்திவிடாத போக்குடையவராக இருந்தால் அதுவே போதும்.
அவரிடம் மனம் விட்டுப் பேசி உறுதி செய்துக் கொள். இதற்கெல்லாம்
பொருத்தமானவராக அவர் இருப்பவர் என்றால், எங்கள் இருவருக்கும்
கிடைத்திருக்கும் மூன்று மகன்களோடு சேர்த்து நான்காவதாகக் கிடைத்த மகன்
என்றே கருதி பாராட்டுவோம். உன் நலனைப் பற்றியே இரவும் பகலும் சிந்தனையில்
இருக்கிறோம். இங்கு எல்லோரும் நலம். அடுத்தது உன் கடிதத்தை படிப்பதற்கு
காத்திருக்கிறோம். உடம்பை கவனித்துக் கொள்ள மறந்து விட வேண்டாம்.
-உன் அம்மா...
கடிதத்தைப் படித்து முடித்துவிட்டு கண்களில் வழிந்த நீரைக் கட்டுப்படுத்த
முடியாமல் தவித்து தடுமாறிக் கொண்டிருந்தான் விஷ்ணு. இரண்டு நாள்
காய்ச்சலுக்குப் பின், படுக்கையில் இருந்து காலையில் எழுந்தவன், உடல்
முழுவதும் பொட்டு பொட்டாய் முத்துக்கள் முளைந்திருப்பதைப் பார்த்தான்.
பெரியம்மை என்று தெரிந்து விட்டது. அவனுடன் தங்கி இருந்த இரண்டு
நண்பர்களையும் வேறு இடங்களுக்கு தற்காலிகமாக மாறச் சொல்லிக் கேட்டுக்
கொண்டான். சாந்தி மட்டும் விஷ்ணு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்
மறுத்துவிட்டாள். அவனுக்கு தேவைப்படும் அத்தனை உதவிகளையும் சாந்தியே முன்
நின்று பார்த்துப் பார்த்து செய்துக் கொண்டு வந்தாள். இன்றைக்கும் அவள்
வந்த போதுதான், வீட்டிலிருந்து வந்த கடிதத்தை எடுத்துப் படிக்கச் சொல்லி
சாந்தியிடம் விஷ்ணு கேட்டுக் கொண்டான்.
சாந்தி இரண்டாவது முறையும், விஷ்ணுவின் அப்பா ஆங்கிலத்தில் எழுதியிருந்த
கடிதத்தைப் படிக்கத் தொடங்கினாள்.
அன்புள்ள மகன் விஷ்ணுவிற்கு,
உன் கடிதம் வந்து கிடைத்தது. செலவுக்குத் தேவைப்படும் பணம் எவ்வளவு என்று
எனக்கு தெரிவிக்கவில்லை. வழக்கமாக அனுப்பும் பணத்தை விட, இந்த முறை மேலும்
கொஞ்சம் சேர்த்து அனுப்பி வைத்திருக்கிறேன். உன் அண்ணன் சுப்பிரமணிக்கு
விமான நிறுவனத்தில் பதவி உயர்வு கிடைத்திருக்கிறது. பாட்டிக்கு உன் ஞாபகம்
அதிகம். ஆயர்தாவாரிலிருக்கும் உன் பெரியப்பா மகன், சச்சிதானந்தன் ஜொகூரில்
நிகழ்ந்த சாலை விபத்தில் இறந்து விட்டார்.
நான் அட்டென்டராக வேலை பார்த்து வந்த வி.ஆர்.என் மேனன் அமெரிக்காவில்
மருத்துவம் பார்க்கச் சென்ற இடத்தில் இறந்து விட்டார். அந்தக் கிளினிக்கை
புதிதாக வந்த டாக்டர் ஒருவர் எடுத்துக் கொண்டு நடத்துகிறார். இப்போது
அவரிடம் தான் அதே வேலையைப் பார்த்து வருகிறேன்.
உன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி, உன் விஷயம் பற்றி யோசித்துப்
பார்த்தேன். நீ படித்தவன். அதனால் நான் உனக்கு அதிகம் சொல்ல வேண்டி
இருக்காது. உன் தங்கையைப் போலவே நீ விரும்புகிற பெண்ணும் இருப்பதால்
அந்தப் பெண்ணை காதலிப்பதாக எழுதி இருக்கிறாய். குடும்பத்தின் மீதும் உன்
தங்கையின் மீதும் எந்த அளவு பாசம் வைத்திருக்கிறாய் என்பதை என்னால் உணர
முடிகிறது. என் தாயும் தந்தையும் சஞ்சிக் கூலிகளாக இங்கு பிழைப்பு தேடி
வந்தவர்கள். கடைசி வரை ரோஷம் பாசத்தோடு, பழைமையிலும் ஊறி வாழ்ந்து
மறைந்தவர்கள். அவர்களின் பிள்ளைகளாகப் பிறந்து வளர்ந்து வாழ்ந்துக்
கொண்டிருக்கிறோம்.
நீ மனம் விரும்பி காதலிக்கும் பெண் எந்த ஜாதி, என்ன மொழி, என்ன இனம்
என்பதல்ல என் பிரச்சனை. அந்தப் பெண் என் வீட்டில் விளக்கேற்றி வைக்கும்
குணத்துடன் இருக்கும் தகுதி மட்டும் போதும். அதனை நான் மனப்பூர்வமாக
ஏற்றுக் கொள்வேன். உங்கள் இருவரையும் இங்கிருந்தபடியே அப்பா, சீரும்
சிறப்பும் பெற்று வாழ ஆசீர்வதிக்கிறேன்.
-அன்புடன் அப்பா
மீண்டும் மீண்டும் அவளை படிக்கச் சொல்லும் கடிதமாக இருந்து சாந்தியை மனம்
நெகிழ வைத்தது. சாந்தியின் கைகளைப் பிடித்து அவளை சமாதானப் படுத்துகிறான்
விஷ்ணு. அவனுடைய உடம்பு முழுவதும் போட்டிருந்த அம்மை முத்துக்கள் உலர்ந்து
உதிரத் தொடங்கிவிட்டது.
|
|