|
மியாபூர் சிக்னலை ஒட்டிய பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் கூட்டம்
அதிகமாகயிருந்தது. காலைநேரம் என்பதால் பயணிகள் நிறுத்தம் பரபரப்பாக
காட்சியளித்தது. பஸ் வராது ஏமாற்றமடைந்தவர்கள் ஷேர் ஆட்டோவில் செல்வதற்காக
ஆட்டோ நிறுத்தத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். அங்கேயும் கூட்டம்
வழிந்து கொண்டிருந்தது. ஜீன்ஸ்பேண்ட் டீ-சர்ட் அணிந்திருந்த ஆள் அந்த
நிறுத்தத்திலிருந்து கிளம்பும் ஆட்டோ ஒட்டுனரிடமிருந்து பத்து ரூபாய்
வீதம் வசூல் செய்து கொண்டிருந்தான். 'கொத்த கொடா, கொண்டபூர்,
ஹைய்டெக்சிட்டி, கொத்தகொடா,.......' என்று வசூலிப்பவன்
கூவிக்கொண்டிருந்தான். மன்சூரின் ஆட்டோ அந்த ஆட்டோ ஸ்டேண்டில் வந்து
நின்றது. வசூலிப்பவன் மன்சூர் ஆட்டோ அருகில்வந்து 'எங்கே போகுது?.'
'ஹைய்டெக் சிட்டி' என்றான் மன்சூர். வசூலிப்பவன்' ஹைய்டெக் சிட்டி' என்று
கூவி முடிப்பதற்கு முன் ஆட்டோவினுள் ஐந்து பேர் ஏறிக்கொண்டனர்.
வசூலிப்பவன் மன்சூரிடம் 'பத்து ரூபாய் கொடு', மன்சூர் 'இந்தப் பக்கமா வா
தர்றேன்' என்று அவனை ஆட்டோவின் வலது பக்கத்திற்கு அழைத்தான். வசூலிப்பன்
அசந்த சமயத்தில் ஆட்டோவுடன் மறைந்தான் மன்சூர்.
'பெரிய பருப்பு அவனுங்க, காசு கொடுக்காட்டி என்ன பண்ணிடுவான். ஒரு
சுத்துக்கு ஐம்பது ரூபாய் கிடைக்கும். இவங்களுக்கும் பத்து ரூபாய்
கொடுத்துட்டா மிச்சம் நாற்பது ரூபாயை வச்சி ஆட்டோ ஒட்டுறது கஷ்டம் ஸார்'.
மன்சூர் அவன் அருகில் அமர்ந்திருந்த இளைஞ்கரிடம் கூறினான். அந்த நபர்
'தெலுங்கு ராது'. மன்சூர் 'ஹிந்தி', அந்த நபர் 'ராது', மன்சூர் 'தமிழா?'
'எஸ்' என்றான் அந்த நபர். மன்சூர் 'உன்னிடம் பேசி புரோஜனமில்லை'.
ஆட்டோவின் வேகம் முன்பைவிட இப்போது மூன்று மடங்கு அதிகமாயிருந்தது.
ஆட்டோவினுள் கேசட் பிளேயரில் தெலுங்கு பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
சிக்னலில் பச்சை விளக்கு சிகப்பாக மாறியது. ஆட்டோ சிக்னலில் நிற்காது வலது
பக்கமாக திரும்பியது. ஆட்டோ வேகம் குறையாமல் சிக்னலை கடக்க முயன்றது.
மன்சூர் ஆட்டோவின் வேகத்தை மேலும் அதிகரித்தான். ஆட்டோ சிக்னலை கடக்க
முயன்ற குழந்தையின் மேல் மோதியது. குழந்தை தூக்கி எறியப்பட்டு சாலையோரம்
நின்றிருந்த மரத்தின் மேல் மோதியது. மன்சூh பதற்றத்துடன் ஆட்டோவை விட்டு
இறங்கி குழந்தையை நோக்கி நடந்தான். பயம் வயிற்றில் ஒரு விதமான வலியை
உருவாக்கியது. முகத்தில் வேர்வை துளிகள் முத்து போட்டது. வெள்ளை உடையில்
நின்றிருந்த போலீஸ்காரர்கள் அடிபட்ட குழந்தையை நோக்கி ஒடினார். சிக்னலில்
டிராபிக் அதிகரித்தது. மன்சூரை அடிக்க கூட்;டம் திரண்டு வந்தது.
சிக்னலிலிருந்த எல்லா விளக்குகளும் சிகப்பு நிற ஒளியை உமிழ்ந்து
கொண்டிருந்தது.
சில வருடங்களுக்குப் பின்பு, பஞ்சகுட்டா பாலத்தின் கீழே அமைந்துள்ள
ஹைதராபாத் சென்டரலை ஒட்டிய சாலையில் நடந்து கொண்டிருந்தான் மன்சூர்.
'மன்சூர்' என்று யாரோ அழைப்பது கேட்டு மன்சூர் நின்றான். 'இன்னைக்குதானே
ரிலீஸ் ஆன', என்று எதிரில் தென்பட்ட பாய் பேச ஆரம்பித்தார். அவருக்கு
இங்கு ஆள் பழக்கம் அதிகம். ஹைதராபாத்தில் ஐந்து பெட்டிக்கடைகள்
வைத்திருக்கிறார். பீடி, சிகரெட், பான், சர்தா என்று சில்லரை வியாபாரம்
தான் பெட்டிக்கடையில் நடக்கிறது. ஆனாலும் நல்ல வருமானம். 'ஆமா பாய்' 'என்ன
செய்றதா இருக்க'. 'தெரியலை பாய், கால் நடந்த பாதையில் போய்கிட்டு
இருக்கேன்', 'என்னடா இது, எதுக்கு இந்த விரக்தி, இப்ப என்னாச்சி?' 'என்ன
பாய் நீங்க பேசுறது', சின்ன பிள்ளையை ஆட்டோ ஏத்தி கொன்னுட்டு ஐந்து வருடம்
ஜெயிலுக்கு போயிட்டு வந்திருக்கேன். என்ன பார்த்து என்னாச்சின்னுகேட்டா?
இன்னும் இரண்டு நாள் பாய், அதற்குப் பிறகு அல்லாகிட்ட போயிடுவேன் பாய்'.
'லூசு பயலே, விஷத்தை எதையும் குடிச்சிடாதடா, சாகுறதா இருந்தா ஐந்து
வருஷத்துக்கு முன்னாடியே செத்து போயிருக்க வேண்டியது தானே'. அவர் குரலில்
அதட்டல் தெரிந்தது. தொடர்ந்து பேச தொடங்கினார். 'மன்சூர், தப்பு செஞ்சவங்க
எல்லாம் செத்தா போயிட்டாங்க, திருந்தி வாழல, உன்னாலையும் முடியும்,
வாழ்ந்து காட்டணும். பின்னாடி ஏறிக்கோ' என்றார் பாய். எக்ஸ்ஸல் சூப்பர்
மன்சூர் ஏறிக்கொண்டதும் கிளம்பியது.
'தம்பி, தம்பி' என்று பாயின் மனைவி மன்சூரை எழுப்பினாள். மன்சூர்
எழுந்தவுடன் காப்பி டம்ளரை அவன்முன் நீட்டினாள். மன்சூர் 'பாய் எங்க'?
பாய் மனைவி 'அவர் சாமான் வாங்க பஜார் போயிருக்கிறார். அவர் உங்களை
குளித்து முடிச்சிட்டு கடையை போய் திறக்க சொன்னார். சாவி இந்தாங்க' என்று
கொடுத்துவிட்டு சமையல்கட்டினுள் நுழைந்தாள்.
எக்ஸ்ஸல் சூப்பர் டாக்கிடவுன் தியேட்டர் வாசலை ஒட்டி அமைந்திருந்த
பெட்டிக்கடையின் அருகே வந்து நின்றது. 'என்னடா, வியாபாரம் எப்படி?' பாய்.
'போனவாரத்துக்கு இந்த வாரம் பரவாயில்லை பாய்' என்றான் மன்சூர். பாய்
'புதுப்படம் எடுத்துருக்காங்கள்ள அதான்'. பாய் கொண்டு வந்திருந்த மதிய
உணவு கேரியரை மன்சூரிடம் கொடுத்தார். 'என்னது பாய்?' 'தெரியலை, என்ன
செய்துரக்கான்னு'. 'நைட்டு வீட்டுக்கு வர கொஞ்சம் நேரமாகும், சந்தாநகர்
பசங்களை பார்க்க போறேன்'. 'எங்க வேணாபோ, சீக்கிரம் வந்து சேர்ந்திடு,
தண்ணி அடிச்சிட்டு மட்டும் வந்த, என் பொண்டாட்டி உன்னை விளக்க மாத்தால
அடிப்பா பார்த்துக்கோ'.
பாய்வீட்டு வாசற்கதவு தட்டப்பட்டது. பாய் மனைவி வாசற்கதவை
திறந்துவிட்டாள். பாய் மனைவி 'தண்ணி அடிச்சிருக்கியா?' என்று வாசலின்
வெளியே நின்று கொண்டிருந்த மன்சூரிடம் கேட்டாள் 'இல்லை' என்றான். அவன்
வீட்டினுள் நுழைந்தவுடன் பாய் மனைவி அவனிடமிருந்து வாடை வருகிறதா என்று
மோப்பம் பிடித்து பார்த்தாள். 'பாய் தூங்கிட்டாஷா' 'இப்பதான் படுத்தார்'.
'இன்னைக்கு கணக்கு பார்க்கலை' 'அவசரமில்லை, நாளைக்கு காலையில் பார்த்துக்
கொள்ளலாம், சாப்பிட்டியா?' 'இல்லை' 'கைகால் அலம்பிட்டு வா சாப்பாடு
போடுறேன் சத்தமில்லாம மெதுவாக போயிட்டு வா'.
சமையற்கட்டில் மஞ்சள் நிற குண்டு பல்வு ஒளிர்ந்து கொண்டிருந்தது. பாய்
மனைவி முன்பு போட்டு வைத்திருந்த சாப்பாத்தியை கல்லில் போட்டு சூடு
செய்தாள். சப்ஜியையும் லேசாக சூடு செய்து மன்சூருக்கு பரிமாறினாள். பாய்
மனைவி சுட்டுபோட்ட கோதுமை சப்பாத்தியுடன் உருளைக்கிழங்கு சப்ஜியை சேர்த்து
தின்றான். ஐந்து சப்பாத்தியை காழி செய்தபின் 'இன்னும் எத்தனை வேனும்'
மன்சூர் 'ஐந்து' என்றான். மன்சூர் 'கடையிலே ஒக்காந்து இருக்கிறது போர்
அடிக்குது'. 'அதுக்கு, டிவி வேணுமா?' 'இல்லை, சும்மா இருக்கிற நேரத்தில்
ஆட்டோ ஒட்டாலம்னு பார்க்கிறேன்'. 'ஆனா எங்ககிட்ட ஆட்டோ இல்லையே'.
'உங்ககிட்ட இல்லைன்னு தெரியும், சந்தா நகர் பசங்கள்ள ஒருத்தன் சொந்தமா
ஐந்து ஆட்டோ வச்சிருக்கான்', 'வேலையை விட்டு நிக்கலாம்னு இருக்கியா,
பாய்க்கு தெரியுமா?' 'முழுநேர வேலை இல்லை, காலையில் ஒரு மணிநேரம்
சாயங்காலம் ஒரு மணி நேரம்', 'அது ஏன் காலையிலேயும், சாயங்காலமும்
மட்டும்', 'சின்ன பிள்ளைகளை ஸ்கூலுக்கு கொண்டு போய்விடனும், பிறகு
சாயங்காலம் போய் கூப்பிட்டு வரனும்' 'என்னையிலிருந்து போகிறதா இருக்க?'
'நாளையிலிருந்து....'.
காலைப்பொழுது தெருவில் ஆட்கள் நடமாட்டம் அவ்வளவாகயில்லை. நீண்ட
நாட்களுக்கு பிறகு ஆட்டோவை ஆன் செய்தான். பல வருடங்களுக்கு முன் உருவான
வயிற்றில் வலியை மீண்டும் உணர்ந்தான். ஆட்டோ ஆப் ஆகியது. மீண்டும் ஆன்
செய்தான். தூரம் செல்லச்செல்ல ஆட்டோ ஒட்டுவது சுலபமானது. மிதவேகத்திலே
ஆட்டோவை இயக்கினான். காற்றிலிருந்த குளுமையை அவன் கைகள் உணர்ந்தன. மனதில்
புத்துணர்ச்சி எழுந்தது. அவனது கைகள் கேசட் பிளேயரை ஆன் செய்தன. இனிமையான
பாடல் ஸ்பீக்கரிலிருந்து கசிந்து வந்தது. ஹோமாமாலனி அபார்ட்மெண்ட் வாசலில்
ஆட்டோ வந்து நின்றது. 'வெங்கடேஷ் அனுப்பிய ஆளா?' என்று
அபார்ட்மெண்டிலிருந்து வெளியே வந்த பெண் மன்சூரிடம் கேட்டாள். 'ஆமாங்க'
என்றான் மன்சூர். 'உங்க பெயர்?' 'மன்சூர்'. அந்த பெண்ணின் ஏழு வயது மகள்
பிரதீபா ஆட்டோவினுள் ஏறிக்கொண்டாள். 'பத்திரமா கூப்பிட்டு போங்க' என்று
அந்தபெண் மன்சூரிடம் கூறிவிட்டு தன் மகளிடமிருந்து முத்தம் ஒன்றை பெற்றுக்
கொண்டாள். அடுத்தடுத்து இரண்டு அபார்ட்மெண்டிலிருந்து ஒரு பையனையும்,
ஒருபெண்னையும் ஏற்றிக் கொண்டு ஆட்டோ சந்தா நகரிலிருந்து கொண்டபூரிலுள்ள
ப்ரைம்ரோஸ் பள்ளிக்கூடம் நோக்கி சென்றது.
ஹைய்டெக் சிட்டி ஜங்ஷன் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
பிச்சைக்காரர்கள் கூட்டமும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
பிச்சைக்காரர்கள் சிக்னலில் நின்று கொண்டிருந்தவர்களிடம் அவர்களின்
சட்டையை இழுத்துவிட்டும், கால்களை தொட்டு;கும்மிட்டும், துரத்திச்
சென்றும் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தனர். சில பிச்சை குழந்தைகள்
ஒடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அதில் ஒரு பெண் பிச்சை
குழந்தையை ஆண் பிச்சை குழந்தை அடித்தது. அந்த பெண் பிச்சை திருப்பி அடிக்க
முயன்றும் ஆண் பிச்சை குழந்தையின் மேல் அடிவிலவில்லை. ஆண் பிச்சை அடி
வாங்காமல் விலகிக் கொண்டே நகர்ந்து ரோட்டின் மத்தியில் வந்து சேர்ந்தது.
அதுவரை விலாமலிருந்த பச்சைவிளக்கு அந்த சாலைக்கு விழுந்தது. வாகனங்கள்
வருவதை பார்த்த ஆண் பிச்சை வேகமாக நகர்ந்து ரோட்டின் மறுபுறம் சென்றது.
இதை பார்க்காமல் பெண் பிச்சை ரோட்டை கடக்க முயன்றது. ஆட்டோ தன்னை நோக்கி
வருவதை பார்த்த பெண் பிச்சை ஒட முயன்று கால்கள் இடறி கீழே விழுந்தாள்.
ஆட்டோ சரியான நேரத்தில் பிரேக் பிடித்து நின்றது. சற்று நேரம்
தாமதித்திருந்தால் பெண் பிச்சையின் தலைமேல் ஆட்டோ ஏறியிருக்கும்.
ஆட்டோவிலிருந்து இறங்கிய மன்சூர் பெண் பிச்சையின் தலைமயிரை பிடித்து
தூக்கி கன்னத்தில் ஓங்கி அறை கொடுத்தான். பெண் பிச்சை கன்னத்தை தடவிவிட்டு
கையை அவன் முன் நீட்டி பிச்சை கேட்டாள். 'சீபோ' என்று கத்தினான். எதிர்
திசையில் நின்று கொண்டிருந்த ஆண் பிச்சையை பார்த்த பெண் பிச்சை அடிக்க
ஒடினாள்.
சைபர் கேட்வேயின் எதிரே அமைக்கப்பட்டிருந்த இரவு வேளை உணவுக் கடையில்
மன்சூர் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். யாரோ பின்னே சட்டையை பிடித்து
இழுப்பதை உணர்ந்த மன்சூர் திரும்பிப் பார்த்தான். அதே பெண் பிச்சை நின்று
கொண்டிருந்தாள். மன்சூர் 'சாப்பிட்டியா?' பெண் பிச்சை 'இல்லை, காசு கொடு'.
மன்சூர் இட்லி வாங்கி பெண் பிச்சை குழந்தையிடம் கொடுத்தான். பெண் பிச்சை
இட்லியை கையில் வாங்கிக் கொண்டு தரையில் உட்கார்ந்து சாப்பிட
ஆரம்பித்தாள். ரோட்டில் பறந்த தூசிகள் இட்லியின் மேல் உட்கார்ந்தது. அதை
பெண் பிச்சை பொருட்படுத்தாமல் தின்றாள். சாப்பிட்டு முடித்தபின் சிறு
ஏப்பம் விட்டாள். மன்சூர் 'அம்மா என்ன பண்ணுறா?' பெண் பிச்சை 'அங்க,
பாப்பாவுக்கு பால் கொடுத்துட்டே பிச்சை எடுக்கிறாள்' என்று சிக்னலை காட்டி
கூறினாள். 'அப்பா என்ன பண்றான்?' 'தெரியலை, நான் பார்த்ததேயில்லை'.
மன்சூர் இவளின் எதிர்காலம் என்னவாகயிருக்குமென்று யோசித்து பார்த்தான்.
பெரிய கேள்விக்குறியொன்று அவன் உள்ளத்தில் எழுந்தது.
இரவு வேளை ஆட்டத்துக்காக வந்தவர்கள் குழுக்கள் அமைத்து கூட்டமாக டாக்கி
டவுண் தியேட்டர் வாசலில் நின்று கொண்டிருந்தனர். மன்சூர் கடையில் கூண்டாய்
ஜ20 யிலிருந்து இறங்கிய ஆள் ஸ்வீட்பீடா வாங்க வந்திருந்தான். அவன்
வெள்ளைக்காரன் போல் இருந்தான். அவனை எங்கோ பார்த்திருப்பது நியாபகம்
வந்தது. ஆனால் எங்கே? எப்போது? என்று சரியாக அவனால் புரிந்து கொள்ள
முடியவில்லை. வெள்ளைக்காரன் ஜ20 காரின் பின் சீட்டில் திறந்திருந்த ஜன்னல்
வழியே பீடாவை உள்ளே கொடுத்தான் அப்போது பின்சீட்டில் அமர்ந்திருந்த
பெண்ணின் முகத்தை பார்த்தான் மன்சூர். 'அவள்... அவள்' என்று அவனின்
உதடுகள் முணுமுணுத்தன.
அவனது கடந்தகால நினைவுகள் அவனை பின்நோக்கி இழுத்துச் சென்றது.
அவள் அழகாக இருப்பாள், எப்போதுமே புன்னகையுடன் இருப்பாள். இன்றோடு அவளை
சந்தித்து ஒருமாதம் முடிவடைகிறது. மன்சூர் அவளுக்கு கடிதம் எழுத முடிவு
செய்தான். ஆட்டோவினுள் அமர்ந்து கொண்டு எழுத துவங்கினான்.
'ஏய்! மோனோலிசா எப்படியிருக்கிறாய்? இன்றோடு உன்னை நேசிக்கத் துவங்கி
முப்பது நாட்கள் முடிவடைகின்றன. நீ என் ஆட்டோவினுள் நுழைவதை உன் முகத்தில்
கழுத்துப் பகுதியில் போட்டுவரும் குட்டிகுறா பவுடர் மணம் சொல்லும், உன்
பெயர் எனக்கு தெரியாது. நான் உனக்கு வைத்துள்ள பெயர் மோனோலிசா. உனக்கு
நினைவு இருக்குமென்று நினைக்கிறேன் முதல்நாள் நீ என் ஆட்டோவில்
காசில்லாமல் பயணம் செய்தது. அதற்காக நீ என்னிடம் ஒப்படைத்திருந்த உன்
கடிகாரம் என் இதயத் துடிப்பை அதிகரித்தது. மறுநாள் நீ என்னை தேடிவந்து
முப்பது ரூபாய் கொடுத்துவிட்டு கடிகாரம் பெற்றுக் கொண்ட பின்பு தான் என்
இதயத்துடிப்பு சீரானது உனக்கு தெரியுமா? நான் உன்னை விரும்புகிறேன். நீ
என்னை விரும்பினால் உன் விருப்பத்தை தெரிவி. இல்லையேல் இந்த கடிதத்தை
கிழித்து விடு.'
அன்புள்ள,
மன்சூர்.
கடிதத்தை விரித்து படிப்பதும் படித்த பின்பு மடித்து வைப்பதாகவும் காலை
முதல் செய்து கொண்டிருந்தான். வசூல்காரன் 'என்ன மன்சூர்? காலையிலேயிருந்து
சவாரியே போகாமாயிருக்க, என்ன விஷயம்?'. 'உடம்பு சரியில்லை'. 'ஏதோ லெட்டரை
காலையிலேயிருந்து படிக்கிறியோ என்னது?' 'வேற வேலையிருந்தா பாரு, எவன் என்ன
செய்றான்னு பார்க்கிறதே வேலையா போச்சி.....'. குட்டிகுறா வாசம் காற்றில்
கலந்திருப்பதை உணர்ந்தான். ஆட்டோவினுள் அவள் கை குழந்தையுடன்
அமர்ந்திருந்தாள் கூடவே ஆணும் அமர்ந்திருந்தான். அந்த ஆண் அவளை தொட்டு
பேசுவதும் நெருக்கமாக அமர்ந்திருப்பதையும் கண்ணாடியில் பார்த்தான்
மன்சூர். மேடு பள்ளங்களில் ஆட்டோ போகும்போது அவர்கள் இடித்துக் கொண்டனர்
அவள் அதற்கும் புன்னகை வீசினாள். மன்சூர் அவள் ஆட்டோவை விட்டு இறங்கும்
போது அவள் கால் விரல்களை பார்த்தான் மெட்டி அணியவில்லை. அவனுக்கு
குழப்பமாகயிருந்தது. குழப்பம் தீரும் வரை அவளிடம் கடிதத்தை தரப்போவதில்லை
என்று முடிவு செய்தான்.
மன்சூர் இந்தக் கடிதம் எழுதி ஐந்து வருஷத்துக் மேல் ஆனதால் வெள்ளை கடிதம்
மஞ்சள் கடிதம் போல் காட்சியளித்தது. கடிதத்தை கிழிக்க முயன்று பாதி
கிழித்த பின்பு மேற்கொண்டு கிழிக்காமல் மீண்டும் மடித்து மணி பிரஸ்சில்
வைத்துக் கொண்டான்.
ஹைதராபாத் ஒன்றும் மற்ற நகரங்களிலிருந்து எதிலும் விதிவிலக்கானது அல்ல.
இங்கேயும் எல்லா தவறுகளும் தங்குதடையின்றி நடைபெறுகிறது. சிலவற்றை இங்கு
சகித்தே கொள்ள முடியாது. அதில் ஒன்று டிராபிக் ரூல்ஸ். ஒருவன் கூட இங்கு
டிராபிக் விதிமுறைகளை மதிப்பதில்லை. சிக்னலில் சிகப்பு விளக்கு
ஒளிர்ந்தால் கூட சாலையை கடக்க முயல்கிறான். டிராபிக் போலீஸ் பிள்ளையார்
போல் சிக்னல் ஒரத்தில் சேர் போட்டு உட்கார்ந்து கொண்டு இதை பார்த்துக்
கொண்டிருக்கிறான். வளைவுகளில் வேகமாக திரும்புவதும் இங்கு சாதாரணமாக
நிகழ்வது. இங்கு இயங்கும் எந்த காரை எடுத்துக் கொண்டாலும் அதன் பக்கவாட்டு
பகுதி, முன்னே இல்லை பின்பகுதியிலோ சொட்டை விழுந்திருக்கும். அப்படி
இல்லாமல் இருந்தால் அது அதிசயம். ஒரு நாள் வெள்ளைக்காரன் ரு வளைவில்
வளைவதற்காக காத்திருந்தான். மெதுவாக காரை திருப்பினான் வலது பக்கமிருந்து
வந்த டூவீலர் ஜ20ல் முட்டி நின்றது.
மன்சூர் குழந்தைகளை அவரவர் வீட்டில் சேர்த்துவிட்டு ஆட்டோவை வசூல்காரனிடம்
கொடுப்பதற்காக சென்றிருந்தான். வசூல்காரன் 'மன்சூர், சின்ன வேலையிருக்கு
முடிச்சிட்டுவாரீயா?' மன்சூர் 'என்னவேலை?' வசூல்காரன் மன்சூரிடம் வேலையை
கூறினான்.
காலீங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டு அந்த வீட்டின் கதவு திறக்கப்பட்டது.
வீட்டின் கதவை திறந்து கொண்டு பெண் வெளியே வந்தாள். மன்சூர் எழுதியிருந்த
கடிதத்தின் பெறுநர் அவள். அவள் மன்சூரை அடையாளம் கண்டு கொண்டாள். ஒரு
நிமிட மௌனம் அவர்களிடையே நிலவியது. அவள் கடந்தகால நிகழ்வுகளை நினைவு
கூர்ந்து பேசத்துவங்கினாள். அவள் ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும்
புன்னகை வீசினாள். மன்சூர் 'உங்க கணவரை கொஞ்சம் பார்க்கணும்'. அவள்
'எனக்கு இன்னும் கல்யாணமாகவில்லை'. மன்சூர் 'அன்னைக்கு குழந்தையோட
வந்தீங்கலே'. 'அந்த குழந்தை என் முதலாளியோட பெண். அவ அம்மா இல்லாத பெண்.
அவளை பார்த்துக் கொள்ளத்தான் நான் இருக்கேன்'. இவர்கள் பேச்சைக் கேட்ட
வெள்ளைக்காரன் வெளியே வந்தான். 'யார் இவர்?' மன்சூர் ' உங்க ஜ20 காரை சரி
செய்து கொண்டு வந்திருக்கேன். வந்து பார்த்துக்கோங்க' வெள்ளைக்காரன் ஜ20
காரின் சொட்டை விழுந்த இடம் சரி செய்யப்பட்டிருப்பதை பார்த்தான்.
'வெரிகுட் ஒர்க்' என்று வெள்ளைக்காரன் மன்சூரின் கையை பிடித்து
குலுக்கினான். வெள்ளைக்காரன் 'கோமதி என்னோட பர்ஸை எடுத்துட்டு வா' என்று
கார் செட்டிலிருந்து முதல் மாடியில் நின்று கொண்டிருந்தவளை பார்த்து
கூறினான். மன்சூர் ரூபாயை பெற்றுக் கொண்ட பின்பு அவளை பார்த்தான். கோமதி
மோனோலிசா புன்னகையை வீசினாள். மணிபர்ஸை ஒரு முறை தடவிப்பார்த்தான்
மன்சூர்.
|
|