|
காக்கையும் குருவியும் எங்கள் ஜாதி
மனிதர்களைத் தவிர்த்து, அவர்களோடு ஒத்திசைவுடன் வாழும் ஜீவராசிகளில்
பெரும்பான்மையும் அந்த மண்ணில் இருந்தன என்பதுவே, அந்த மண்ணின் மகத்துவத்தை
என்றுமே மறக்கவொண்ணா காட்சிச் சித்திரங்களாக மனத்திரையில் வரைந்து இன்று
ஓடவிட்டு உணர்வுகளைக் கிளர்த்துகிறது.
அந்தச் சூழலின் செழுமைக்கான இவற்றின் பங்களிப்பு மகோன்னதம் பொருந்தியதாய்
விளங்கி, அவற்றோடு உறவாடிய மனிதர்களின் மனப் பரப்பை ஊடுருவி
ஈரப்படுத்தியது.
அவற்றில், ஆடுகளுக்கும், மாடுகளுக்கும் பெரும்பான்மையான வீடுகளில்
இடமிருந்தன. மாடுகளுக்கான கொட்டில்கள் லயங்களையொட்டி, கித்தா தோப்புக்குள்
சற்றே உள்வாங்கிய நிலையில், இடம் பிடித்துக் கொண்டிருந்தன. இதில்
ஆடுகளுக்கு மட்டும் தனிச் சலுகையாக வீட்டின் எதிர்ப்புறத்தில் வாதா மர
நிழலிலோ, சூஸ் பழ மர நிழலிலோ கொட்டில்கள் இருந்தன. அதனையொட்டி கோழிக்
கூண்டுகளும்.
நாய்களுக்கென அப்படியான விசேஷ குடியிருப்புகள் எதுமில்லை. வீட்டின்
ஏதேனுமொரு மூலை அவற்றிற்கென ஒதுக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் எல்லா
வீடுகளின் அஞ்சடியிலும் இரவு நேர கதையாடலுக்குத் தோதாக நீள வாங்கு சுவரை
அணைத்திருக்கும். கால்களை கீழே தொங்கப்போட்டு முதுகை சுவரில் சாய்த்து
சுகமாக உட்கார்ந்து கதை பேச ஏதுவாக.
அதனடியில் ஒன்றிரண்டு நாய்கள் படுக்கைப் போட வசதியாக காலி இடமிருக்கும்.
அப்படி சொந்த வீடு வாய்க்காத நாய்களுக்கு கோயில் கூத்துக் கொட்டகையின்
மறைவுப் பகுதி குடியிருப்பாக மாறியிருக்கும்.
இப்படியான மனித சொந்தங்கள் இல்லாத அனாதை நாய்களின் உற்பத்திக் கேந்திரமாக
கூத்துக் கொட்டகை திகழ்ந்தது. அதன் அடிப்பகுதியின் இருண்ட பிரதேசம்
பாதுகாப்புக்கும் இனவிருத்திக்கும் தோதான இடமாக இருந்தது.
நாய்கள் பயிராகும் காலம் முடிந்து, குட்டிகள் போடும் காலத்தில் கூத்துக்
கொட்டகையின் இருண்ட பிரதேசமெங்கும் குட்டிகளின் முனகல் மெலிதாய் கேட்கும்.
குனிந்து பார்க்க இருள் மட்டுமே தெரியும். கண் விழித்து குட்டிகள்
நடமாடவும் தொடங்கிவிடும். தட்டித் தடுமாறி எல்லைத் தாண்டி வெளிச்ச
உலகத்துள் அவை பிரவேசிக்கும் தருணம், சுற்றி வளைத்து நின்று வேடிக்கைப்
பார்க்க ஒரு பெருங்கூட்டம் கூடிவிடும்.
கோழிக்குஞ்சுகளை நிகர்த்த மென்மையான கையடக்க பொம்மைகள். தூக்கி வைத்து
கொஞ்ச கடும் போட்டி நிலவும். இதில் ஏதேனுமொன்று மனதுக்கு ரொம்பவும்
பிடித்துப்போவதும் உண்டு. அப்போது அது கூடவே வீடுவரை வந்து விடும்.
அப்படியொரு சுப நிகழ்வாக தொடங்கியதுதான் எனக்கும் இந்த நாய்கள் என்கிற
மனிதனின் அதியற்புத நண்பர்களுடனான ஆயுட்கால நட்பு.
ஒரு மாலைப் பொழுதில், கோயில் வளாகத்தில் நடந்தேறிய சில்லிப்பந்து ஆட்டம்
முடிகிற தருவாயில், கூத்து மேடை கீழிருந்து வெளிப்பட்ட முனகலோடு நான்கு
குட்டிகள் வெளியே தலைநீட்டி தள்ளாடி நின்றன. ஆளுக்கொன்றாக தூக்கி வைத்து
கொஞ்ச ஒருவன் ஆசை காட்டினான்.
உள்ளங் கைகளுக்குள் பவ்வியமாக உட்கார்ந்து முனகிய பஞ்சுப் பொதிய விரல்களால்
நீவிவிட அவன் காட்டிய ஆசை வலுவாய் கிளர்த்திக் கொண்டது. உடலோடு ஒட்டிய
மயிர். காது மடல்களில் வெள்ளைத் திட்டுகள். நெற்றிப் பொட்டில் சின்னதாய்
ராமர் நாமம். முகம் தொடங்கி வால் வரை சாக்லெட்டும் கறுமையும் பின்னிப்
பிணைந்த கலவை நிறம்.
ஆளுக்கொன்றாக மார்போடு அணைத்துக் கொண்டு லயத்துக்குள் நுழைந்தபோது, ஒரு
சிறுசுகள் பட்டாளமே பின் தொடர்ந்து வீட்டு வாசல் வரை வந்தது. ஆரவாரத்துடன்
வந்து நின்றவனைப் பார்த்து, வாசலில் வந்து நின்ற அம்மா சத்தம் போட்டாள்.
"எதுக்குடா இத வேற தூக்கிட்டு வந்து நிக்கிற? இந்த குஞ்சீத்தா கோழி
புள்ளங்கள இழுத்துகிட்டு வூட்டுக்குள்ள வந்து அங்கங்க புசுக்கு புசுக்குனு
கழிஞ்சு நாறடிக்கிறது பத்தாதா? இது வேற வூட்ட பேண்டு நாறடிக்குனுமா?" என்று
கத்தினாள்.
இறுதியில் வெற்றி பெற்றது என்னவோ எனது பிடிவாதமாகத்தான் இருந்தது. எனது
முதல் உயிர்த்தோழனின் வீட்டுப்பிரவேசம் நிகழ்ந்தது இப்படித்தான்.
அம்மா அன்று சொன்னது உண்மைதான். எங்கள் வீடு என்பது, ஏன்
குச்சிக்காட்டிலிருந்த பெரும்பான்மை வீடுகளும்தான், வெறும் இரண்டு கால்
ஜீவன்களான மனிதர்கள் மட்டுமே உலவிய தனி ராஜ்ஜியமல்ல! அது பிற
ஜீவன்களுக்கும் தனது வெளிக்கும் இடமளித்து சகல உரிமைகளுடனும்
சுதந்திரத்துடனும் நடமாடி உறவாடிய கூட்டுக் குடும்பம்.
அப்பா, பெரியானுடன் ஜோடிப்போட்டுக் காட்டுக்குப் போய் வெட்டி வந்த காட்டுக்
கம்புகளினால் கட்டி முடிக்கப்பட்டிருந்த ஆட்டுக் கொட்டகையும் கோழிக்
கூண்டும் வீட்டுக்கு எதிரே உயர்ந்து நின்ற வாதா மர நிழலில்.
கோழிக்கூண்டில் கோழிகளோடு ஒரு பக்கம் வாத்துகளும் இருந்த நினைவு. கேணிக்கு
இறங்கி நடக்கும் சரிவை ஒட்டி ஓடிய சின்ன ஆறு. நான் ஒரு நல்ல மழைநாளில் அந்த
ஒத்தையடி பாலத்திலிருந்து கால் இடறி நீருக்குள் விழுந்த அதே இடம்தான்.
பாலத்தையொட்டி ஒரு திருப்பத்தில் கூடுதல் ஆழத்துடன் இருந்த இடத்திற்கு,
வாத்துக்களை காலை வேளையில் நீந்தவும், ஜோடியோடு சல்லாபிக்கவும் ஓட்டிச்
சென்ற நாட்களை நினைவுக்கூர முடிகிறது.
கோழிகள் அட்டைப் பெட்டிகளில் முட்டையிட்டு ஊருக்கு அறிவிப்பு செய்து,
கூவிக்கொண்டு இறங்கி ஓட, ஓடிப்போய் முட்டையைத் தொட்டுப் பார்த்து அதன்
இளஞ்சூடு விரல்களில் பரவ ஒரு சுகம். பின் அவை அடைபடுத்து குஞ்சுகள்
பொரிக்கும் நாள் வரை ஒருநாட் பொழுதில் சில முறைகளேனும், கோபத்தில் இறகுகளை
சிலுப்பி குரல் கொடுக்கும் அடை கோழியை கை நுழைத்து மெதுவாக மேல் தூக்கிப்
பிடித்து, முட்டைகளின் அப்போதைய நிலவரத்தைக் கண்காணிப்பது ஒரு சுகமான
பொழுதுபோக்கு. நிலவரத்தை அம்மாவிடம் வந்து வர்ணிக்க, அம்மா சிரித்துக்
கொண்டே கேட்டு வைப்பாள்.
தொடக்க நாட்களில் ஓரிரு முறையேனும் தீனிக்கு இறங்கி வரும் அடைகோழி,
குஞ்சுகள் பொரியும் நாட்கள் நெருங்க கீழே இறங்குவதோ இரை எடுப்பதோ
அருகிவிடும். முதல் குஞ்சு முட்டை ஓட்டை உள்ளிலிருந்து கொத்தி உடைக்கும்
நாள் எங்களுக்குத் திருநாள். சிலவேளைகளில் இரவுக்குள் நீண்டு போகும்
பிரசவம். மண்ணெண்ணை விளக்கோடு பக்கமே உட்கார்ந்து பார்த்திருந்ததுண்டு.
அம்மா அடிக்கொரு தரம் வெளியில் வந்து, "டே, இன்னும் அங்க என்னடா பண்றீங்க?
போய் படுங்கடா. காலையில பார்த்திக்கலாம்," என்பாள்.
வீட்டு
வாசலில் ஆட்டுப் புழுக்கையும், மூத்திர கவுச்சியும் எப்போதும் இருக்கும்.
குட்டி போட்ட ஆடும், அதன் குட்டிகளும் வீட்டு வாசலுக்கு இடம் பெயர்ந்து
விடுவதுண்டு. குட்டிகள் கவிழ்க்கப்பட்ட வக்குலுக்குள், நாய்க்
குட்டிகளுக்கும் கோழிக் குஞ்சுகளுக்கும் அடுத்த நிலையில் தூக்கி வைத்து
கொஞ்சத் தூண்டும், அழகு தேவதைகளாக இருந்தவை ஆட்டுக்குட்டிகள். அவற்றின்
உடலிலிருந்து வெளிப்பட்ட பால்மணம், இப்போதும் நாசியில் ஒட்டிக்கொண்டு
இன்புறுத்துகிறது.
|
|