|  | 
 | சீன சினிமா - Not One Less'தீர்ந்துபோகாத வெண்கட்டிகள்'
 
		 வெயிலொழுகும் நகரம்தூரத்துப் பயணிகள்
 ஆட்களைக் கொன்று தீர்க்கும் பரப்பரப்பு
 சீனாவின் மிக விசாலமான வாழ்வு.
 
 நகரத்தின் வாழ்வைப் பற்றி எப்பொழுதும் பிரக்ஞையில்லாமல் அல்லது அரை 
		பிரக்ஞையுடன் வெளிப்படுத்தும் திரைப்படங்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. 
		ஒரு சில படங்களின் இயக்குனர்கள் தனது நேர்காணலில் படத்தைப் பற்றி 
		சொல்லுபோது ஓர் இடத்தில்கூட அப்படம் காட்டிய நகர வாழ்வு குறித்தான 
		தகவல்கள்/பகிர்வுகள் இடம் பெற்றிருக்காது. எடுத்துக்காட்டாக அண்மையில் 
		தமிழில் வெளிவந்து அதன் கதாநாயகன் மலேசியாவிற்கு வந்து பேட்டியெல்லாம் 
		கொடுத்து அசத்திய, ‘வா குவாட்டர் கட்டிங்” படத்தைச் சொல்லலாம். அதிகாலையில் 
		ஒரு நகரத்தின் இருண்ட பகுதிகள் எப்படியெல்லாம் விழித்துக்கொண்டிருக்கிறது 
		என்பதை மிக அழகாகக் காட்டியிருந்தார்கள். ஆனால் அதைப் பற்றிய விவாதமோ 
		அடையாளப்படுத்துதலோ, விமர்சனமோ திரைப்படத்துறை சார்ந்தவர்களிடமிருந்தும் 
		வரவில்லை பிற முக்கியமான விமர்சகர்களிமிருந்தும் வெளிப்படவில்லை. 
		மலேசியாவுக்கு வந்து பேட்டியளித்த நடிகர் சிவாவுக்கும் தெரியவில்லை.
 
 இப்படியான சபிக்கப்பட்ட புலன்களுடன் மட்டுமே இன்று முன்வைக்கப்படும் கலை, 
		இலக்கியம் எப்படியோ தப்பித்து தன்னை விடுவித்துக்கொள்கின்றன.
 
 சீனாவின் இரைச்சலான பெருநகரத்தில் நிகழும் ஒரு சம்பவம் என்பதை முதலில் 
		நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? சமீபத்தில் “Back to Home” எனும் 
		ஒரு குறும்படத்தைப் பார்த்திருந்தேன். விழாக்காலங்களின் போதும் பள்ளி 
		விடுமுறையின் போதும் சீனாவிலிருந்து வெளியேறும் மனிதர்களைப் பற்றிய கதை 
		அது. ஒவ்வொரு விழாக்காலங்களிலும் இருபது லட்சத்திற்கும் மேலானவர்கள் 
		சீனாவைவிட்டு வெளியேற முயற்சி செய்கின்றனர். போக்குவரத்து தடை, சாலை 
		நெரிசல் என சீனா முழுவதும் பெரும் பரப்பரப்பும் நெருக்கடியும் உருவாகி 
		வழிவதை அக்குறும்படத்தில் பார்க்க நேர்கிறது. வெளியேற 
		வாய்ப்புக்கிடைக்காதவர்கள் தூரத்து தேசத்தில் வசிக்கும் தன்னால் சந்திக்க 
		முடியாமல் போகும் உறவுகளை நினைத்து சோகமுடன் திரும்புவதைப் படம் முழுக்க 
		அடர்த்தியான காட்சிகளாகப் பார்க்க முடிந்தது. அது ஒரு சில தனிமனிதர்களின் 
		துயரம் என்பதைவிட, ஒரு தேசத்தின் துயரம் என்றே சொல்ல முடிகிறது.
 
 அத்தனை நெரிசலான சீன நகரம் பரப்பரப்பில்லாமல் அமைதியில் கிடக்கும் ஒரு 
		நாளில்தான் தொலைத்த ஒரு மாணவனைத் தேடி வருகிறாள் சிறுமி வேய். அவளுடைய 
		தேடல்தான் Not One Less எனும் இப்படத்தின் மையம். உலக புகழ் பெற்ற சீனப் பட 
		இயக்குனரான ஷங் யீ மோவ் (Zhang Yimou) என்பவர் இயக்கிய படமான “Not One 
		Less” பயணத்தின் வலிமிக்க இன்னொரு பகுதியை அப்பட்டமாகக் காட்டும் மிகச் 
		சிறந்த முயற்சி. மலையடிவாரத்தின் அருகிலுள்ள ஒரு சீனக் கிராமத்து பள்ளியைப் 
		பின்னனியாகக் கொண்டு இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. எப்பொழுதுமே 
		நிஜ வாழ்க்கையின் பாதிப்புடைய சினிமாதான் கலை சினிமா என்றதொரு ஆதாரப் 
		புள்ளியை அடைய முடியும். சீனத்திலும் கொரியாவிலும் அத்தகையதொரு அனுபவத்தைத் 
		தரக்கூடிய ஆற்றலுடைய இயக்குனர்கள் நிறையவே இருப்பதோடு தங்களின் 
		படைப்புகளின் வழி சாதிக்கவும் செய்திருக்கிறார்கள்.
 
 சீனக்கிராமத்தின் பள்ளியும் இளம் ஆசிரியரும்
 
 100 மீட்டர் தொலைவில் தெரியும் பெரிய மலையின் அடிவாரத்தில் மிகவும் 
		பாழடைந்து வர்ணம் நீர்த்துப் போயிருக்கும் பள்ளி. இந்தியாவில் இந்தக் 
		காட்சியைத் தொலைவிலிருந்து பார்த்தால் மாட்டுக்கொட்டாய் எனக்கூட 
		சொல்லக்கூடும். ஆசிரியர் வருவதற்கு முன்பே வந்து சேர்ந்துவிட்டு வகுப்பறையை 
		நிரப்பி இருளாக்கும் மாணவர்கள். எல்லா தேசங்களிலும் அடித்தட்டு மக்களின் 
		பொதுவசதி என்பது மிகவும் தளர்ந்துபோய் பலவீனமடைந்துதான் 
		வைக்கப்பட்டிருக்கின்றன. சீனக்கிராமத்திலுள்ள இப்பள்ளி எனக்கு இந்தோனேசியா 
		காடுகளிலும் கிராமங்களிலும் உள்ள பள்ளிகளின் நிலையையே காட்டுகின்றன. வறுமை 
		கோடு என்பது பூமித்திய ரேகைப் போல உலகை இரண்டாகப் பிரித்து வைத்திருப்பதை 
		இது போன்ற முக்கியமான படங்களின் வழியே தரிசிக்க முடிகிறது.
 
 20 மாணவர்களைக் கொண்ட அந்தச் சீன கிராமத்துப் பள்ளியில் ஆசிரியராக 
		இருக்கும் கோவ் (Mr. Gou) தமது உடல் நலம் பாதித்த அம்மாவைப் பார்ப்பதற்காக 
		வேறு ஊருக்குப் புறப்படவிருப்பதால், அவருக்குப் பதிலாக பள்ளியில் தங்கி 
		மாணவர்களைக் கவனித்துக் கொள்ள கிராம அதிகாரியின் மூலம் 13 வயதே நிரம்பிய 
		பெண் (Wei) வந்து சேர்கிறாள். தயக்கமும் பயமும் கொண்ட அவளிடம் மனமில்லாமல் 
		பள்ளியின் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, “நான் வரும்வரை மாணவர்களைப் 
		பத்திரமாகப் பார்த்துக் கொள், யாரும் நீங்கிவிடக்கூடாது, பள்ளியிலிருந்து 
		நின்றுவிடக்கூடாது. அப்படி ஒரு மாணவன் நின்றாலும் உனக்குச் சம்பளம் 
		கிடையாது” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்படுகிறார். இந்தக் 
		காட்சிகள் யாவும் சிறிது நேரம் மட்டும் நடப்பதைப் போல கடந்து போனாலும் 
		மனதில் ஒரு வகையான மௌனத்தையும் காட்சிகளுக்குக் காட்சி அமைதியையும் 
		அப்பிவிட்டு போகின்றன.
 
 மாணவர்களை எதிர்க்கொள்ளல் அத்துணைச் சாதரணமாக செய்துவிடக்கூடிய காரியம் 
		அல்ல. அதற்கு நிரம்ப விசயங்களும் தன்னம்பிக்கையும் பயிற்சியும் வேண்டும். 
		வெய் சிறுமியைப் போல காட்சியளிக்கிறாள். வெய்யை ஒரு ஆசிரியராக ஏற்றுக்கொள்ள 
		எந்த மாணவரும் சம்மதிக்கவில்லை. ஒவ்வொரு மாணவரும் தனது வெறுப்பையும் 
		முரணையும் ஏதேனும் ஒரு செயலின் வழி காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். 
		வெளிச்சம் குறைவான அந்த வகுப்பில் வெய் செய்வதறியாத நிற்கிறாள். வெய் 
		மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கக்கூட தடுமாறுவதால், ஆசிரியர் கூறியது போல் 
		ஒவ்வொரு நாளும் ஒரு பாடப்பகுதியைக் கரும்பலகையில் எழுதிவிட்டு மாணவர்களை 
		பின்பற்றி எழுதச் சொல்கிறாள். அதற்கு தகுந்த மாதிரி ஆசிரியரும் அவளிடம் 22 
		வெண்கட்டிகளை தந்துவிட்டுப் போகிறார். ஒவ்வொரு வெண்கட்டியாக எடுத்து அன்றைய 
		பாடத்தை வெய் ஓர் இயந்திரம் போல எழுதி முடிக்கிறாள்.
 
 இன்றும் இது போன்ற இயந்திரத்தனமான ஆசிரியர்களை எங்கும் காண நேரிடும். 
		அவர்களிடம் சொற்கள் இருக்காது, சிரிப்பு இருக்காது, சிந்தனையும் இருக்காது. 
		வெறுமனே உயிரில்லாத எழுத்துக்கூட்டங்களைக் கரும்பலகையில் எழுதிவிட்டு, 
		பார்த்து எழுதுங்கள் எனச் சொல்லி விடுவார்கள். ஆசிரியர் எழுதிப் போட்ட 
		உயிரில்லாத அந்த எழுத்துக்கூட்டங்களைப் பார்த்து எழுதி எழுதி மாணவர்கள் 
		எழுத்துகளை மெல்ல வெறுக்கத் துவங்கிவிடுகிறார்கள். அதே வெறுப்பு ஆசிரியரின் 
		மீது படர்ந்துவிடும். இப்படித்தான் வகுப்பறைகள் மெல்ல சிறைச்சாலையைப் போல 
		இறுகத் துவங்குகின்றன. வார்த்தைகளையும் பேச்சுக்களையும் கொன்றுவிட்டு 
		வகுப்பறையை மௌனமாக்கும் பயிற்சிப்பெற்ற ஆசிரியருக்கும் அனுபவமே இல்லாமல் 
		வறுமையின் காரணமாகத் தற்காலிக ஆசிரியர் வேலைக்கு வந்து சேரும் சிறுமி 
		வேயும் வெவ்வேறான இடத்தில் வைத்து மதிப்பிடக்கூடியவர்கள்.
 
 பதற்றத்தைத் தவிர்ப்பதற்கு வெய்யும் கரும்பலகையில் எழுதி அதைப் பார்த்து 
		எழுதும் பயிற்சியைத்தான் கொடுக்கிறாள். வெய்யின் இச்செயலைக் கண்டு 
		மாணவர்களிடையே அவள் மீது மேலும் அதிருப்தியும் கோபமும் ஏற்படுகிறது. ஒருசில 
		மாணவர்கள் அவளை தற்காலிக ஆசிரியராக ஏற்றுக் கொண்டு பாடம் படிக்க உறுதியாக 
		மறுத்து விடுகிறார்கள்.
 
 காணாமல் போவதும் பொறுப்பெனும் சுமையும்
 
 இதற்கிடையில் பள்ளியின் ஒரு மாணவனான (Zhang) என்பவன் இரண்டு நாட்களாகப் 
		பள்ளிக்கு வராமலிருந்ததால், வெய் பதற்றம் கொள்கிறாள். ஆசிரியருக்குக் 
		கொடுத்த வாக்குப்படி யாரும் பள்ளியிலிருந்து நீங்காமல் பார்த்துக் கொள்ள 
		வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தாள். ஓர் இழப்பு சராசரி மனிதனுக்குப் 
		பெருமளவு துக்கத்தையும் இறுக்கத்தையும் கொடுப்பது இயல்பானாது. ஆனால் 
		தொலைந்த மாணவனைப் பற்றி முழுமையாக அறிமுகம் இல்லாதிருந்தபோதும், வெய் 
		அவனுடைய இல்லாமையை நோக்கி நிலைக்குழைகிறாள். பொறுப்பு என்ற சொல் 
		சிறுவர்களுக்கு எத்துணைக் கனமானது என அந்தத் தருணத்தில் வெய் கொள்ளும் 
		பதற்றம் தடுமாற்றம் வழி அறிந்துகொள்ள முடிந்தது. நாம் தான் உடனே 
		குழந்தைகளுக்குப் பொறுப்பை அள்ளி வழங்குவதில் அவசரமுடையவர்களாயிற்றே. 
		பெரியவர்களே பின்பற்ற இயலாத நேர ஒழுக்கத்தைப் பற்றி நாம் இன்னமும் ஒரு 
		பாடமாக கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்கிற நிபந்தனையுடன் வகுப்பறையில் 
		போதித்துக்கொண்டிருக்கிறோம்.
 
 இப்பொழுது எது மாணவர்களுக்குப் போதிக்கக்கூடிய நன்னெறிப் பண்பென்றால் 
		எதுவெல்லாம் நம் சமூகத்துப் பெரியவர்களாலே பின்பற்ற முடியவில்லையோ, 
		எதுவெல்லாம் நம் சமூகத்தில் விளம்பர உத்திகளாக இருக்கின்றனவோ எதுவெல்லாம் 
		இடத்திற்கும் காலத்திற்கும் தகுந்தமாதிரி தளர்த்தப்பட்டு இலகுவாக்கப்பட்டு 
		மனிதர்களின் வாலைப் பிடித்துக்கொண்டு திரிந்துகொண்டிருக்கின்றனவோ, 
		அதுவெல்லாமும்தான். காலம் முழுக்க நாம் செய்ய முடியாததைச் சிறார்களின் மீது 
		திணித்து ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறோம். நம்முடைய அனைத்து ஒழுக்கப் 
		பரிசோதனைகளும் குழந்தைகளிடமும் அப்பாவி பெண்களிடமும்தான் தொடர்ந்து 
		நிகழ்த்தப்படுகின்றன. வெய் இப்பிரச்சனையை எதிர்க்கொள்ள முடியாமல் அடையும் 
		ஒட்டுமொத்த பதற்றமும் அந்தச் சமூகம் அவளுடைய வயதுக்கு மீறி வழங்கிய 
		பொறுப்பின் மீதான பயம்தான் காரணம்.
 
 வெய் பள்ளிக்கு வராமல்போன அந்த மாணவனின் வீட்டைத் தேடிப் போகிறாள். இருண்ட 
		அந்த வீட்டின் கட்டிலில் அந்த மாணவனின் அம்மா உடல் நலமில்லாமல் 
		படுத்திருக்கிறாள். அந்தக் கிராமத்தின் எல்லா இடங்களிலும் இருள் 
		கவிந்திருக்கிறது. அது யாரும் கவனிக்காமல் போன ஒரு துயரத்தைப் பற்றி 
		தொடர்ந்து தேடிக்கொண்டிருப்பது போன்றே தோன்றுகிறது. மகனைத் தேடி வந்த 
		வெய்யிடம், 'அவன் வேலை செய்வதற்காக நகரத்திற்குச் சென்றுவிட்டான், அவனைப் 
		படிக்க வைக்கவும் எங்களிடம் வசதியில்லை' என்று அந்த மாணவனின் அம்மா 
		கூறுவதைக் கேட்டது வெய் மனமுடைந்து சாய்கிறாள்.
 
 தற்காலக ஆசிரியரான வெய் எப்படியாவது நகரத்திற்குச் சென்று அந்த மாணவனைத் 
		தேடி கண்டறிந்து மீண்டும் பள்ளிக்குக் கொண்டு வரவேண்டும் என்று 
		மாணவர்களிடையே சொல்லிவிட்டு நகரத்திற்குச் செல்வதற்கான பேருந்து டிக்கெட் 
		விலையை விசாரிக்கச் செல்கிறாள். காணாமல் போன அந்த மாணவனை மீட்பதில் வெய் 
		காட்டுக் அக்கறையின் மீது மாணவர்களுக்குத் திடீர் விருப்பம் வருகிறது. 
		தன்னுடைய நண்பனைத் தேடுவதில் எல்லோருக்கும் பங்கிருக்கிறது என 
		உணர்கிறார்கள். பேருந்து பணம் அதிகமாக இருப்பதால் அதைச் சேகரிப்பதற்காக 
		மாணவர்கள் எல்லோரையும் அழைத்துக் கொண்டு செங்கள் சூழைக்கு வேலைக்குப் 
		போகிறாள். அங்கே கிடைக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு நகரத்திற்குப் 
		புறப்படுகிறாள்.
 
 வெய் நகரத்தில் வந்திறங்கும்போது அவன் கண்கள் முழுக்க ஆச்சர்யமும் பயமும் 
		மட்டுமே தேங்கியிருக்கின்றன. வீதி வீதியாய் அந்த மாணவனைத் தேடி அலைகிறாள். 
		அவன் வேலைக்கு வந்ததாகக் கூறப்படும் இடத்திற்குச் சென்று விசாரிக்கும்போது, 
		அவன் இங்கு வந்த முதல் நாளிலேயே காணாமல் போய்விட்டான் என்று கூறுகிறார்கள். 
		அதைக் கேட்டதும் அவள் அங்கேயே கண்ணீர்விட்டு அழுது புலம்புகிறாள். 
		எப்படியாவது தன் மாணவனைக் கண்டுப்பிடித்துவிடலாம் என்கிற நம்பிக்கையுடன் 
		விடாமல் தேடி அலைகிறாள். நகரம் அவளுடன் கண்ணாம்பூச்சி ஆடுவது போல நல்ல நல்ல 
		மனிதர்களை ஒளித்து வைத்துக்கொள்கிறது. நகரம் தனக்கு வேண்டிய ஓர் உயிரைத் 
		தன்னிடமிருந்து அபகரித்துவிட்டதாகவே கருதி வெய் சிரமம்பாராமல் பல சாலைகள், 
		கடைகள் ஏறி இறங்குகிறாள்.
 
 அவன் தொலைந்ததாக நம்பப்படும் இரயில் நிலையத்திற்குச் சென்று அவனைப் பற்றிய 
		தகவல்களை தாள்களில் எழுதி ஒட்டுவதற்காக முயற்சி செய்கிறாள். பிறகு 
		தொலைகாட்சி நிலையத்தில் தகவல் கொடுத்தால் மாணவன் கிடைத்துவிடுவான் என்று 
		ஒருவன் சொல்ல, இவளும் தொலைக்காட்சி நிறுவனத்தைத் தேடி நடக்கிறாள். 
		இறுதியில் அந்த இடைத்தை அடைந்தும் அவளிடம் சரியான பத்திரங்கள் இல்லாததால் 
		உள்ளே விட மறுக்கிறார்கள். நிலையத்தின் வாசலிலேயே 2 நாட்களாகக் 
		காத்திருக்கிறாள், எல்லோரிடமும் உதவி கேட்டு அலுப்பில், முன்வாசல் கதவின் 
		ஓரமாகவே படுத்துக் கொள்கிறாள்.
 
 இறுதியில் அவள் அந்தத் தொலைகாட்சி நிலையத்தின் முதல்வரின் கண்களில் பட, 
		அவளை ஒரு நேரடி தொலைகாட்சி பேட்டி நிகழ்விற்கு அனுமதிக்கிறார்கள். அந்த 
		நிகழ்வில் கிராமப்புற பள்ளியின் சூழலைப் பற்றியும் மாணவனைத் தேடி இவ்வளவு 
		தொலைவு வந்திருக்கும் வெய் என்ற அந்தத் தற்காலிக ஆசிரியைப் பற்றியும் 
		பேசுகிறார்கள். காணாமல் போன அந்த மாணவனைப் பற்றிய அடையாளங்களைச் சொல்வதற்கு 
		அவளிடம் கேட்க, வார்த்தைகள் வராமல் தடுமாறுகிறாள். கண்களிலிருந்து கண்ணீர் 
		ஒழுக, “Zhang... நீ எங்க இருக்கெ? வந்துருடா... திரும்பவும் பள்ளிக்கு 
		வந்துரு!” என்று உடைகிறாள். நாடே அந்த நிகழ்வைக் கண்டு ஆழத்துயரத்தில் 
		மூழ்குகிறது.
 
 இறுதியில் ஒரு சாப்பாட்டுக் கடையில் வேலை செய்து கொண்டிருக்கும் அந்தச் 
		சிறுவனைக் கண்டுபிடித்து அவளிடம் ஒப்படைக்கிறார்கள். வெய் அந்தச் சிறுவனைச் 
		சந்திக்கும் அந்தக் காட்சி மிகவும் உருக்கமானது. நகரத்திற்கு ஏதோ ஒரு 
		தேவையால் வந்து சேர்ந்து தனது பள்ளி நாட்களைத் தொலைத்துவிட்ட Zhang மற்றும் 
		அதே தேவை காரணமாகத் தற்காலிக வேலைக்கு ஒப்புக்கொண்டு, அதில் கிடைக்கும் 
		பணத்திற்காக இப்படித் தேடி அலைந்து களைத்து நிற்கும் வேயும் வாழ்வை ஒரே 
		மாதிரியே உணர்கிறார்கள். இருவரையும் அழைத்துக் கொண்டு அந்தத் தொலைக்காட்சி 
		நிறுவனமே நகர மக்கள் பள்ளிக்கு கொடுத்த உதவிகளுடன் அவர்களைக் கிராமத்தில் 
		வந்து விட்டுச் செல்வதாகப் படம் நிறைவு பெறுகிறது.
 
 இதைச் சினிமா என்று சொல்வதைவிட அசலான வாழ்வு என்றே கூறலாம். தற்காலிக 
		ஆசிரியராக நடித்திருக்கும் வெய் அதன்படியே வாழ்ந்து மிகவும் யதார்த்தமான 
		ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார். இயக்குனர் சீன நாட்டின் கிராமப்புற 
		வாழ்வியலையும் கிராமத்து பள்ளிகளின் நிலைகளையும் இந்தப் படத்தின் மூலம் 
		காட்சிப்படுத்தியுள்ளார். தோட்டப்புற சூழலில் அல்லது கிராமப்புற சூழலில் 
		அமைந்திருக்கும் பள்ளிகளின் முக்கிய பிரச்சனைகளான மாணவர் எண்ணிக்கைக் 
		குறைவது குறித்து மிகவும் ஆழமாகவும் அழகான கதையின் மூலமாகவும் பதிவு 
		செய்துள்ளார் இயக்குனர் ஷங் யி மோவ்.
 
 இந்தப் படத்தைப் பார்த்து முடித்தக் கணம் மனதில் எத்தனையோ விசயங்கள் சட்டென 
		விழித்துக்கொண்டன. வகுப்பறையில் வெண்கட்டிகள் தீர்ந்துவிட்டால், அடுத்த 
		வகுப்பிற்குச் சென்று இரவல் வாங்கி வர ஆசிரியர் என்னைத்தான் அடிக்கடி 
		அனுப்புவார். ஏதோ சுற்றுலாவிற்கு அனுப்பி வைக்கும்போது உருவாகும் பரவசம் 
		முகம் முழுக்கப் படர்ந்திருக்கும். கால்கள் இரண்டையும் உதறிக்கொண்டே 
		நீண்டிருக்கும் வகுப்பு வராந்தாவின் கைப்பிடியைத் தேய்த்துக்கொண்டே 
		ஓடுவேன். அன்று கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு முடிந்தவரை 
		தாமதமாகவே வந்து சேர்வேன். ஆசிரியர் தலையில் கொடுக்கும் வலியே இல்லாத 
		கொட்டுக்கு ஒரு சில நிமிடங்கள் தாமதமாகவே வரலாம் எனத் தோன்றும்.
 
 வகுப்பில் நிரம்பியிருக்கும் இலேசான இருளை நான் எப்பொழுதும் வெறுத்தே 
		வந்தேன். திடல் முழுக்கப் பரவியிருக்கும் அபாரமான வெளிச்சத்திற்குக் கைகள் 
		முளைத்து வகுப்பின் வாசல்வரை வந்து கால்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும். 
		ஓய்வு நேரம் முழுக்க திடலில் ஓடிப்பிடித்து விளையாடி முடிந்த அளவிற்கு 
		திருப்திப்படுத்திக்கொள்வேன். தூரத்தில் தெரியும் என் வகுப்பில் அந்த 
		இருளின் அடர்த்தி கூடி, மேலும் இருண்டு பார்வையிலிருந்து மறைந்திருக்கும். 
		ஆனால் இப்படத்தில் குழந்தைகள் அந்த இருளை நேசித்திருக்கிறார்கள். அதனுடன் 
		வாழப் பழகிக்கொண்டார்கள். முடியப் போகும் வெண்கட்டியின் மீத உடலைக் கைகளில் 
		பிடித்துக்கொண்டிருக்கும் வேய் இளம் ஆசிரியரிடம் காணும் ஒரு மாபெரும் 
		பயிற்சியையும் அதே சமயம் வழிந்து உருவாக்கிக்கொண்ட பொறுப்பையும் ஒன்றுசேர 
		எல்லாம் மனிதர்களிடத்திலும் குழந்தைகளிடத்திலும் பார்ப்பது போலவே 
		உணர்கிறேன்.
 |  |