|  | 
 | ஒரு நல்ல தலைவன்...
 தொடர்பு சாதனங்கள்
 யாவற்றிலும் பறந்தது அந் நற்செய்தி
 தன் ஒன்னேகாலணா டிவிஎஸ் பிஃப்டியில்
 எதேச்சையாக வந்தான் நல்ல தலைவன்
 கோணிப்பை வீசி கோழி அமுக்குவது போல
 அவன் அப்படியே அமுக்கப்பட்டான்
 
 பிதிர்கலங்கி அவன் நிற்கையில்
 காரசாரமாக விவாதிக்கப்பட்டது
 ஒரு நல்ல தலைவன் என்றைக்காவது சொல்வானா
 தன்னையொரு நல்ல தலைவனென்று
 
 தப்பிக்க வழியின்றி
 ஒரு டஜன் பச்சை முட்டைகளை தினம் குடித்து
 தண்டால் பஸ்கி எடுத்தான் நல்ல தலைவன்
 அறிவாளிகள் கூட்டத்தில் விவாதம்
 தேவைக்கேற்ப ஜினுக்கு வேலைத் தந்திரம்
 அறுசுவை நவரசம்
 இன்னும் இன்னுமாக அலையோ அலைந்தான்.
 
 ஒருவாறாக
 சுபயோக சுபதினத்தில்
 நல்ல தலைவன் முடிசூட்டிக் கொண்டபோது
 வயிறு நிரம்ப நிரம்ப
 எல்லோருக்கும் வித்தை காட்டப்பட்டது
 ஒரே உதையில் விமானத்தை வீழ்த்தி
 கிளம்பிய ராக்கெட்டை ஊதித் தள்ளினான்
 கரகோஷம் பொங்கப் பொங்க
 நிகழ்ச்சி தொடர்ந்தது பலமணி நேரமாய்
 
 இறுதியாகத்தான்
 அதுவும் ஒரு சிறிய ஏப்பம் வரும்முன்
 நல்ல தலைவன் சோர்ந்து போய்
 பெரிய குசுவை விட்டான் டர்ர்ர்ர்'ரென்று
 
 கதிகலங்கி ஓடிப்போனது கூட்டம்
 நிகழ்ச்சி அத்துடன் முடிந்தது
 முடிந்தே விட்டது
 சுபோ மஸ்து
 
 மறுநாள் செய்திகளில் விளம்பரம்:
 சிவந்த/உயரமான/
 எல்லா வித்தைகளிலும் டிகிரி முடித்த/
 நல்ல தலைவன் தேவை
 அணுக வேண்டிய முகவரி:
 --------------------------------------
 --------------------------------------
 
 கடவுளின் மீது 
		பொழியும் மழை
 இருமுறை தவறியதைப் போலன்றி
 இம்முறை
 இரண்டாகக் கிழித்துவிடவேண்டும் அவ்விதியை
 எனக் கிளம்பிய ஜோசஃப்
 மறக்காமல் ஒரு வார்த்தை
 கதவைத் தட்டியெழுப்பி
 சொல்லிவிட்டே செல்கிறான் தன் கடவுளிடம்
 
 அலங்கமலங்க விழித்தபடி வந்து
 அவரும் தலையைத்தலையை ஆட்டுகிறார்
 
 அவன்
 எதிர்பார்த்ததைவிடவும் பிரம்மாண்டமாக
 விதி
 நங்கூரமிட்டுப் படுத்திருக்கிறது
 நடுவீதியில்
 ஆத்திரத்தின் உச்சியிலிருந்த ஜோசஃப்
 ஓடிப்போய் சரமாரியாய் உதைவிட்டு
 பின்
 கீழே சரிந்து விழுகிறான்
 
 விதியோ சற்றும் அசையவே இல்லை
 
 ஒன்றும் புரியாமல் அதையே
 சுற்றிச்சுற்றிப் பார்த்து
 மெல்ல
 மனமுடைந்து அழத்துவங்குகிறான் ஜோசஃப்
 
 பின் பதட்டமும் வெறியும் கூடி
 அவன் வீடு திரும்புகையில்
 கடவுளோ
 இம்முறை
 கைலாகு கொடுத்துத் தூக்கிக்கொண்டிருக்கிறார்
 ரூபாயைத் தின்று
 சகாக்களைக் கொன்று
 காதலைக் கைகழுவும் மங்காத்தா நாயகனை
 
 அதை
 வியந்து பார்த்துக் கைதட்டிக்கொண்டிருக்கிறது
 உலகமே
 
 அடிவயிற்றிலிருந்து ஓங்கரித்து
 ஜோசஃப்
 காறி காறி அவர்மீது உமிழ்கையில்
 கடவுளோ லாவகமாய்
 மூன்றாவது முறையும் முகம் திருப்பி
 அசைவற்றே நின்றிருந்தார்
 கொழுத்த எருமையின் பின்புறத்தின்மீது
 மழை
 தூவிப்பொழிவதைப் போலவும்
 ஜோசஃப்
 உதைத்து உதைத்து ஓய்ந்துபோன
 துர்விதியைப்போலவும்
 |  |