|
அ. ரெங்கசாமியின் வரலாற்றுப் புதினங்கள் - 2
ஒரே காலகட்ட வரலாற்றைப் பேசும் ‘இமயத் தியாகம்’, ‘நினைவுச் சின்னம்’ ஆகிய
இரு நாவல்களின் மாந்தர்களும் சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் இரு
நாவல்களிலும் உண்டு. போசின் இந்திய தேசிய இராணுவ வீரர்கள் உற்சாகத்துடனும்
லட்சிய வேட்கையுடனும் பர்மாவை நோக்கிச் சென்று கொண்டிருப்பார்கள். அப்போது
பர்மாவை இணைக்கும் ரயில் தண்டவாளம் மற்றும் சாலைகளைப் போடுவதற்காக
ஜப்பானியர்களால் கட்டாய உழைப்பாளிகளாகக் கொண்டு வந்து கடும்
துயரங்களுக்கும், வேதனைகளுக்கும், கொடிய அடக்குமுறைகளுக்கும் இடையில்
செத்தொழிந்து கொண்டிருக்கும் “தோல் போர்த்திய எலும்புக் கூடான” தமிழர்களை
நேருக்கு நேர் சந்தித்துக் கொள்வார்கள்.
மரண ரயில் பாதை போடக் கொண்டுவரப்பட்டவர்களின் சோகக் கதையைக் கேட்கும்
இந்திய தேசிய இராணுவ அதிகாரி ஒருவர் சொல்வார் ‘”இங்கே இம்புட்டு அநியாயம்
நடந்திருக்கிறது நேதாஜிக்குத் தெரியாதுங்க. இதுபற்றி நம்ம நேதாஜிகிட்ட
சொல்றேனுங்க. கட்டாயம் அவரு இங்கே வருவாருங்க. இந்தக் கதையெல்லாம் கட்டாயம்
அவருகிட்டே சொல்லுங்க. நிச்சயம் நேதாஜி உங்களையெல்லாம் காப்பாத்துவாரு”
(நி.சி. பக்.443). இதைச் சொல்லிவிட்டு அவர் போய்விடுவார்.
கடைசியாக நேதாஜி வருவார் மரண ரயில் பாதை போட்டுக் கொண்டிருப்பவர்களைச்
சந்திப்பார். அவர்களும் நம்பிக்கையோடு தம் துயரங்களைச் சொல்வார்கள்.
எல்லாவற்றையும் கேட்டபின் நேதாஜி, வழக்கமாக நாளைய உன்னத வாழ்வொன்றை
முன்வைத்து இன்றைய துயரங்களை ஏற்றுக்கொள்ள வற்புறுத்தும் எல்லா
இலட்சியவாதிகளும் என்ன சொல்வார்களோ அதையே சொல்வார். இந்தத்
துயரங்களுக்கெல்லம் முடிவு காணத்தான் தனது இராணுவம் இம்பாலை நோக்கிச்
சென்று கொண்டுள்ளது என்பார் .”இந்த நீண்ட பயணத்தில் நாம் பல தியாகங்கள்
செய்ய வேண்டி வரலாம். அத்தகைய தியாகங்களில் ஒன்றுதான் இங்கு மக்கள்
உயிழப்பு, பட்ட துன்பங்கள் அத்தனையும். ஆகவே இதைப் பெரிது படுத்தாதீர்கள்.
இயன்றவரை உங்கள் குறைகளை நிவர்த்திக்கும்படி நமது சப்பானியத் தோழர்களிடம்
நான் பேசுகிறேன். நன்றி. ஜேய்ஹிந்த்!” என்று சொல்லிவிட்டு அவரும்
போய்விடுவார் (நி.சி. பக்.461). வரலாற்றுப் பெருங்கதையாடலின் வழி நின்று
ரெங்கசாமி கட்டமைக்கும் நேதாஜி பிம்பத்திற்கு, அவர் உதிர்க்கும் இந்த
வார்த்தைகள் சற்றும் பொருத்தமற்றுப் போவதை யாரும் உணர முடியும். இது
ரெங்கசாமிக்கும் உறுத்தத்தான் செய்கின்றது நினைவுச் சின்னம் நாவலில்
திடீரென முளைக்கும் ஒரு பாத்திரத்தின் வாயிலாக அவர் நிலைமையைச்
சமாளிப்பார். நேதாஜியை ஏற்கனவே பக்கத்திலிருந்து பார்த்துக்
கைகுலுக்கியிருந்த அந்த நபர், “இப்ப இங்கே பேசிட்டுப் போனவரு சத்தியமா நம்ம
தலைவரு நேதாஜி இல்லீங்க. இந்தக் கட்டப்பயலுக யாரோ ஒருத்தருக்கு வேஷம்
போட்டுக் காட்டி சனங்களை ஏமாத்திப்புட்டானுங்க.” என்று சொல்லி நடையைக்
கட்டுவார் (நி.சி. பக் 462). வந்தவர் சொன்னது உண்மைதானா என்கிற ஆய்வுக்குள்
ரெங்கசாமி போவதில்லை.
எனினும் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். தன்னிடம் உதவி நாடி வந்தவராயினும்
தனது கருத்துக்களை மறுத்துப் பேசுகிற அவரின் துணிச்சலைப் பாராட்டும்
அளவிற்கு ஒரு கம்பீரமான ஆகிருதியாக ஹிட்லரைக்கூடப் படைக்கும் ரெங்கசாமி,
ஜப்பானியர்கள் குறித்து மட்டும் ஒரு அய்யத்தை இமயத் தியாகம் நாவல்
முழுவதும் இழையோட விடுகிறார். இந்தச் சப்பான்காரங்க நல்லவுங்களா,
கெட்டவுங்களா என்கிற கேள்வி அவரது கதாபாத்திரத்தை மட்டுமல்ல
ரெங்கசாமியையும் உளைத்தெடுக்கிறது. முரணற்ற ஒரு வரலாற்றை அவர் கட்டமைக்க
முயன்றபோதும், புனைவு அந்த வரலாற்று முரணை வெளிக் கொண்டு வந்து விடுகிறது.
ஜப்பானியர்கள் மட்டுமல்ல அன்றைய மலேசிய சிங்கப்பூரை அடிமைப்படுத்தியிருந்த
ஆங்கிலேயர்களிடமும் கூட இந்த இரு பரிமாணங்களும் ஊடாடி இருந்ததையும் நாம்
இந்தப் புனைவுகளினூடாகப் புரிந்து கொள்ள இயலும். சஞ்சிக் கூலிகளாகத்
தம்மால் கொண்டுவரப்பட்ட இந்தியர்களை ரப்பர் புகைக் கூண்டில் அடைத்துச்
சித்திரவதை செய்த வெள்ளையர்கள்தான் இன்னொரு தருணத்தில் கம்யூனிஸ்டுகளின்
‘அராஜகங்களிலிருந்தும்’, ஜப்பானியர்களின் மரண ரயில் கொடுமைகளிலிருந்தும்
தப்புவித்துக் காப்பாற்றுபவர்களாகவும் உலா வருகின்றனர். எனினும் இந்த
வரலாற்று முரண்களை எல்லாம் ரெங்கசாமி பிரக்ஞை பூர்வமாக வெளிக் கொணர
முயற்சித்திருந்தாரேயானால் நாவல் இன்னும் சிறந்த பரிமாணத்தைப்
பெற்றிருக்கும்.
வரலாற்றுப் பின்னணியில் நாவல்களைப் படைக்கும் அமிதவ் கோஷ் போன்றோர் கடும்
உழைப்பை மேற்கொண்டு தரவுகளைச் சேகரித்துக் கொண்டபோதும், முற்றிலும்
கற்பனையான ஒரு பாத்திரத்தை வார்த்து, அதன் உருவாக்கத்தில் குறிப்பிட்ட
வரலாற்றுப் பின்னணியின் பங்கை விளக்கும் முகமாக அத் தரவுகளைப்
பயன்படுத்துவர். இதன்மூலம் அவர்கள் வரலாற்றுக்கு உண்மையாக இருக்கும் அதே
நேரத்தில் தங்களின் கற்பனைச் சுதந்திரத்தையும் தக்கவைத்துக் கொள்வர்.
‘இமயத் தியாகம்’ நாவலில் அந்த வாய்ப்பை நூலாசிரியர் இழந்து விடுகிறார்.
இந்த நாவலிலும் கூட முத்து, பாண்டியன், சிட்டு, அழகி முதலிய கற்பனைப்
பாத்திரங்கள் நடமாடினாலும், நாவல் இயங்கும் வரலாற்றினூடாக அவர்கள்
இரத்தமும் சதையும் உணர்ச்சிகளும் மிக்க மனிதர்களாக உருப்பெறுவதில்லை.
முழுமையாக வரலாற்று நாயகர்களால் ஆக்ரமித்துக் கொள்ளப்படும் ‘இமயத்
தியாக’த்தில் மட்டுமல்ல, எனக்கு வாசிக்கக் கிடைத்த மற்ற இரு நாவல்களிலும்
கூட ஏராளமான கதா பாத்திரங்கள் உலா வந்தபோதும், அவர்களின் பாடுகளும்
துயரங்களும் சொல்லப்பட்டபோதும் மகத்தான மானுட அனுபவங்களாக அவை
பரிணமிப்பதில்லை. இந்த நாவல்கள் மூன்றும் ஒரு குறிப்பிட்ட காலத்தில்
வாழ்ந்த ஒரு குறிப்பிட்ட மக்கள்திரளின் வரலாற்றைச் சொல்பவை, தனிமனிதர்களின்
முக்கியத்துவத்திற்கு இங்கே இடம் இல்லை என நாம் சமாதானம் கொண்டபோதும்,
படித்து முடிக்கும்போது அவை வெறும் ஒரு வரலாற்றை வாசித்த அனுபவங்களாகவே
முடிந்து விடுகின்றன.
ரெங்கசாமியின் நாவல்களினூடாக இந்த மக்கள் திரளின் தேசிய உருவாக்கம் எவ்வாறு
நிகழ்கிறது? ஒரு மலேசிய-சிங்கை வாழ் தமிழருக்குக் குறைந்த பட்சம் மூன்று
அடையாளங்கள் உள்ளன. முதலாவதாக அவர் ஒரு தமிழர்; அப்புறம் இந்தியர்;
மூன்றாவதாக அவர் ஒரு இந்து. கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும்கூட
இருந்தபோதும், எண்ணிக்கையில் அவர்கள் வெகு குறைவு என்பதோடு ஒட்டு
மொத்தமாகத் தமிழர்களின் குறியீடுகளில் ஒன்றாக இந்து அடையாளம் அமைந்து
விடுகிறது. ஜப்பானியர்களுடன் நேதாஜி கைகோர்த்து இயங்கிய காலகட்டத்தில்
(மகா) கிழக்காசிய அடையாளம் ஒன்றும் அவர்கள்மீது போர்த்த
முயற்சிக்கப்பட்டது. எனினும் அது நிலைக்கவில்லை.
மலேயாத் தமிழர்கள் இந்தியாவில் வாழ்ந்தவரை ‘இந்திய’ அடையாளம் அத்தனை
முக்கியமாக உணரப்பட்டதற்கு வாய்ப்பில்லை. எனினும் 1905 க்குப்பின் இந்தியா
முழுவதிலும் உருவான ‘சுதேசிய’ எழுச்சியின் விளைவாக ‘இந்தியா’, ‘இந்தியர்’
என்கிற உணர்வு மேலோங்கியதை மறுக்க இயலாது. தோட்டச் சாகுபடிக்கென
ஆங்கிலேயர்களால் தமிழர்கள் பெரிய அளவில் அன்றைய மலேயா தீபகற்பத்திற்குக்
கொண்டுவரப்பட்டபோது, அதில் பெரிய அளவில் தமிழர்களே இருந்தபோதும் ஆங்கிலேய
அரசு அவர்களுக்கு அளித்த அடையாளம் ‘இந்தியர்கள்’. 1930களில் பெரியார்
ஈ.வெ.ரா அவர்களின் வருகை முதலியன தமிழர் என்கிற அடையாள விகசிப்பு
உருவாவதற்குக் காரணமானது குறித்து முன்பே பேசியுள்ளோம். ‘இந்தியர்’ என்பது
அரசு ஆவணங்களின் வழியாகப் பதிக்கப்பட்ட அடையாளமான போதிலும் அவர்களில்
பெரும்பாலோர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் என்கிற வகையில் தமிழ் மக்கள்
மத்தியில் ‘தமிழர்’ என்கிற அடையாளம் உருவானதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
எனினும் ரெங்கசாமியின் ‘இமயத் தியாகம்’, ‘நினைவுச் சின்னங்கள்’. ஆகிய
நாவல்களுக்குப் பின்னணியாக அமைந்த காலகட்டத்தில் மலேயாத் தமிழர்கள்
மத்தியில் ‘இந்திய’ அடையாளம் மேலோங்கி நின்றது. இந்தியாவில் காந்தியின்
தலைமையில் உருவாகியிருந்த சுதந்திர இயக்கம் இதில் ஒரு முக்கிய பங்கு
வகித்தபோதும், 1940 களில் மலேயா தீபகற்பத்தில், கடல்கடந்து வந்து கடுமையான
சுரண்டலுக்கு ஆளாகியிருந்தவர்களை ஆதாரமாகக் கொண்டு உருவாகிய ‘இந்திய
சுதந்திர சங்கம்’, ‘இந்தியத் தொண்டர் படை’, ‘இந்திய தேசிய இராணுவம்’
முதலியன இதில் முக்கிய பங்கு வகித்தன. சுபாஷ் சந்திர போசின் வருகையும்,
தலைமை ஏற்பும் இதன் உச்ச நிலையாய் அமைந்தன. “டில்லி சலோ”, “வந்தே மாதரம்”,
“ஜேய்ஹிந்த்”, “பாரத மாதாவுக்கு ஜே”, “இன்குலாப் ஜிந்தாபாத்”, “ஆசாத்
ஹிந்த் ஜிந்தாபாத்” முதலான முழக்கங்கள் கொடும் யுத்த கால வறுமையையும்
அழிவுகளையும் மீறி மேலெழுந்தன. ‘வங்கச் சிங்கம்’ போஸ் மட்டுமின்றி
பிரிதாம்சிங், மோகன்சிங், ராஷ் பிஹாரி போஸ், ஹபிபுர் ரஹ்மான் ஆகியோரும் இன,
மொழி, மத வேறுபாடுகளைத் தாண்டி மலேயா இதியர்களின் நாயகர்கள் ஆயினர்.
‘எங்களின் தாய்த் திரு நாடாம் இந்திய நாட்டின் விடுதலைக்காக எங்கள் உடல்
பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்கிறோம்..” என்கிற உறுதி மொழியுடன்
(இ.தி. பக்.122). தமிழ் மக்கள் இந்திய விடுதலைப் போரின் கிழக்காசியப்
பங்களிப்பில் சங்கமமாயினர். மூவண்ணக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன.
இவ்வாறு மலாயா வாழ் தமிழ் மக்கள்….ஒற்றுமை- கடமை- தியாகம் ஆகிய மூன்றையும்
முன்வைத்து ‘இந்திய விடுதலை’ என்ற மகத்தான் நோக்கத்திற்காகத் தங்களை
அர்ப்பணித்துக்” கொண்டிருந்த நிலையை ரெங்கசாமியின் ‘இமயத் தியாகம்’ பதிவு
செய்கிறது (பக்.142).
எனினும் இத்தகைய நடவடிக்கைகளின் ஊடாகத் தமிழ் அடையாள விகசிப்பு ஒன்றும்
கூடவே உருவாவதாக ரெங்கசாமி பதிவு செய்கிறார், நாம் பேசிக்கொண்டிருக்கும்
ரெங்கசாமியின் இம் மூன்று நாவல்களும் 2000க்குக்குப் பின் உருவானவை. 2005
வாக்கில் பதிப்புக் கண்டவை. ரெங்கசாமியின் நாவல்களின் ஊடாக மலேசியத்
தமிழ்த் தேசிய அடையாள உருவாக்கத்தை ஆய்வு செய்யும்போது 2000க்குப் பிந்திய
காலகட்டத்தில் இவ் அடையாள உருவாக்கம் எவ்வாறு நடந்தது என அறிவதற்கே இந்த
எழுத்துக்கள் பயன்படும் என்பதை நாம் மறந்து விட இயலாது. எனினும் இந்த
நாவல்கள் பேசும் வரலாற்றுக் காலகட்டத்திலேயே (1940கள்) ஒரு தமிழ் அடையாள
உருவாக்கமும் செயல்பட்டது குறித்து முன்னதாக நாம் பேசியுள்ளது
நினைவிருக்கலாம். ஈழப் போராட்டத்தின் பின்னணியில் மலேசியத் தமிழர்களின்
மத்தியில் உருவான தமிழ்த் தேசிய எழுச்சியுடன் ரெங்கசாமியின் நாவல்களைப்
(2005-06) பொருத்திப் பார்ப்பதே சரியாக இருக்கும். இனி ரெங்கசாமியின்
புனைவுகளினூடான தமிழ் அடையாளக் கட்டமைப்பின் முக்கிய கூறுகளைக் காணலாம்.
தமிழர்களின் தொன்மைப் பெருமை, குறிப்பாக இன்று மலேசியத் தமிழர்கள் எந்த
நாட்டில் இரண்டாந் தரக் குடிமக்களாக வாழ நேர்ந்ததோ, அந்த நாட்டை ஒரு
காலத்தில் வெற்றி கொண்டு ஆண்ட பெருமை, அவன்கள் மற்றும் அவள்களது வீரம்,
தாய்நாட்டு விடுதலைக்காக எதையும் தியாகம் செய்யத் தயங்காத பண்பு, அதே
நேரத்தில் இன்று அவர்களது அவல நிலையின் விளைவாக உருவான சுய பச்சாதாபம்
ஆகியவற்றை ஆங்காங்கு வற்புறுத்துவதின் ஊடாக மலேசியத் தமிழ்த் தேசிய அடையாள
உருவாக்கத்திற்குப் பங்களிக்கின்றன ரெங்கசாமியின் எழுத்துக்கள்.
‘ஆடுற கூத்தும் பாடுர பாட்டும் படிப்பினை தந்தாகணும்” என்பதைத் தனது
கொள்கையாகப் பிரகடனப்படுத்தும் ரெங்கசாமி, ‘மலேசியத் தமிழர்களின் வீரம்,
தியாகம், நாட்டுப்பற்று ஆகியவற்றைக் கருவாகக் கொண்டு” (இ.தி. பக்.5) தன்
நாவல்களைப் படைக்கிறார். ‘உலகமே வாழவேண்டும் என்ற பரந்த மனம் கொண்டவன்
தமிழன். ஆனால் தம்மினம் வாழ்கின்றதா என்று திரும்பிப் பார்க்க தமிழனுக்கு
நேரமில்லை” எனத் தன்னிரக்கம் கொள்கிறார். “முன்னீர் பழந்தீவு பன்னீராயிரம்
என்ற சொற்றொடர் நம் இலக்கியத்தில் உள்ளது. மலாயா உள்ளிட்ட தென்கிழக்கு
நாடுகளையே அத்தொடர் குறிக்கின்றது……….. எனவே பழந்தீவு பன்னீராயிரமும் தமிழன்
ஆட்சிக்குள் இருந்திருக்கின்றன... இது அன்றைய தமிழன் நிலை!” எனப் பழம்
பெருமையை நினைவு கூறும் ரெங்கசாமி (ல.ந. பக்.9), ஆனால் இன்றைய மலேசியத்
தமிழன் “திக்கற்ற நிலைக்குத்” தள்ளப்பட்டுள்ளதைக் கண்டு வெதும்பித் தன்
எழுத்துப் பணியை அவனது தியாகங்களுக்கான ‘நினைவுச் சின்னமாக’ அர்ப்பணித்துக்
கொள்கிறார்.
“தாய் நாட்டின் விடுதலைக்காகத் தயங்கமாட்டான் தமிழன் என்பதைக்
காட்டுவதற்காகத்தான் அப்படிச் செய்தேங்க..” (இ.தி. பக். 210)
“…ஆனால் தமிழனின் தன்மானத்திற்கு இழுக்கு வரும்போது எதிர்க்கத் தயஙமாட்டான்
தமிழன். அதுதான் இன்று நடந்தது…” (இ.தி. பக்.267)
“பாராண்ட தமிழினம் அங்கே வானமே கூரையாக, மண்மேடே பஞ்சணையாக பசி பட்டினியோடு
படுத்துப் புரண்டு கொண்டிருந்தது” (நிசி. பக்.9)
“…ஏன்னு கேட்க இங்கே நாதியில்லை. அதுக்காக நாம கோழைகளாச் சாகக்கூடாது. நாம
தமிழச்சிங்கிறத அவனுக்குக் காட்டணும்டி! புரியுதா?” (நி.சி. பக்.252)
“நாம யாரு தமிழச்சிடி..” (நி.சி. பக்.257)
“உலகிற்கே உடையுடுத்தும் நாகரீகத்தைக் கற்றுக் கொடுத்த தமிழன், அங்கே
இடுப்பில் ஒற்றைத் துணியோடு சேற்றில் குளித்துக் கொண்டிருந்தான்.” (நி.சி.
பக்.259)
இப்படி ரெங்கசாமியிலிருந்து நிறைய எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும்.
இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர்களின் பங்களிப்பு இருந்த அளவிற்கு
இல்லாவிடினும் மலேசியக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கத்திலும் இரண்டாம் உலகப்
போரை ஒட்டிய ஃபாசிச எதிர்ப்பு முன்னணியிலும், ஏகாதிபத்தியங்களின்
பிடியிலிருந்து மலாயா தீபகர்ப்பத்தை விடுதலை செய்வது என்ற நோக்கத்தை
முன்நிறுத்தி உருவாக்கப்பட்ட ‘மலாயா விடுதலைப் படையிலும்’ கூட மலேயாத்
தமிழர்களுக்கு ஒரு பங்கிருந்தது. ஆனால் இந்த இயக்கங்களை முற்றிலும்
எதிர்மறையாகப் பார்க்கிறார் ரெங்கசாமி. தோட்டத் தொழிலாளர்களுக்கான
தொழிற்சங்க இயக்க உருவாக்கத்திலும் மலேசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கைக்
குறைத்து மதிப்பிட்டு விட இயலாது. தொழிற்சங்க இயக்கத் தலைமையில்
தமிழர்களின் பங்கு பிற இனத்தவரைக்காட்டிலும் அதிகமாக இருந்தது
குறிப்பிடத்தக்கது. இக்காலகட்ட வரலாற்றை மையமாகக் கொண்டு தன் எழுத்துப்
பணியை அர்ப்பணித்துள்ள ரெங்கசாமி இந்தத் திசையில் கவனம் செலுத்தாதது
வியப்பே.
ஆங்கிலேயத் தோட்டத் துரைமார்களின் தோட்டத்திலிருந்து தப்பித்தோடி வந்து
லங்காட் நதிக்கரையிலிருந்த ஒரு சீனரின் தோட்டத்தில் தஞ்சமடைந்து,
காலப்போக்கில் ஒரு தமிழ்க் குடியிருப்பே அங்கு உருவாகியதையும், அங்கே
மலாய்க்காரர்கள், தமிழர்கள், சீனர்கள் மூவரும் ஒற்றுமையாக
வாழ்ந்திருந்ததையும், ஜப்பானியர்களின் தோல்வியை ஒட்டி மலேசியக்
காம்யூனிஸ்ட் இயக்கம் உருவாக்கியிருந்த மலாயா விடுதலைப் படை அங்கே புகுந்து
தேச விடுதலை என்ற பெயரால் இழைத்த கொடூரங்களையும், அதன் விளைவாக அந்தக்
கம்பம் சிதைந்த வரலாற்றையும் சொல்கிற குறுநாவல்தான் மலேசியத் தமிழ்
எழுத்தாளர் சங்கத்தின் முதன்மைப் பரிசு பெற்ற ‘லங்காட் நதிக்கரை’.
கம்பம் உருவான வரலாற்றைச் சொல்லும்போது, “பிறர் வாழ்வதற்காகத் தன்னையே
வருத்திக் கொள்பவன் தமிழன். தனது முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில் கொண்டு
உழைப்பவன் சீனன். அந்த முறையில் சொற்ப விலையில் நிலத்தை வாங்கி, துண்டு
போட்டு, பட்டா போட்டுக் கொண்டார்கள் சீனர்கள்” என்பார் ரெங்கசாமி.
காலப்போக்கில் கடும் உழைப்பினூடாக அந்த நிலத்தைத் தோட்டச் சாகுபடிக்கு
ஏற்றதாகச் சீனர்கள் மாற்றுகின்றனர். அவர்களிடம் தஞ்சம் புகுந்த தமிழ்க்
குடும்பங்கள், ஆங்கிலேயத் தோட்டக் கொடுமைகளெல்லம் இன்றி அங்கு ஓரளவு
சுதந்திரமாக வாழ்ந்ததையும் ரெங்கசாமி பதிவு செய்கிறார். இன்னொரு பக்கம்
இதுபோன்ற சீனர்களின் நிலங்களை, அங்கே வட்டிக் கடை வைத்திருந்த தனவணிகச்
செட்டிமார், அடகு பிடித்துப் பின்னர் படிப்படியாகச் சொந்தமாக்கிக்
கொள்வதையும் அவரால் சொல்லாதிருக்க இயலவில்லை. ஆக இனங்களின் ஊடாக
வெளிப்படும் வர்க்க வேறுபாடுகளையும், வர்க்கக் குணாம்சங்களையும்
ரெங்கசாமியால் தவிர்த்துவிட இயலவில்லை. எனினும் அவர் தம் வரலாற்று ஆய்வில்
இந்தக் கோணத்திற்கு இடமளிக்கத் தயாராகவும் இல்லை.
‘காட்டுக்காரங்க’ என ரெங்கசாமியாலும், கம்பத்திலுள்ள தமிழர்களாலும்
அழைக்கப்பட்ட மலேயா விடுதலைப் படையினரை இம்மியும் மனிதாபிமானமில்லாத,
இரக்கமற்ற கொடுங்கோலர்களாகவும், அப்பாவி மக்களைத் துன்புறுத்திச்
சுகங்காண்பவர்களாகவும், எள்ளளவும் பண்பாடும் நாகரீகமும் அற்ற
வன்முறையாளர்களாகவும் குறுநாவல் முழுவதும் வரைந்து செல்கிறார் ரெங்கசாமி.
தமிழர்களின் வரலாற்று நினைவுகளிலிருந்து துடைத்தெறியப்பட வேண்டிய ஒரு
காலகட்டமாக கம்யூனிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட காலத்தைச் சித்திரிக்கிறார்.
எனக்குத் தெரிந்து கடும் பொதுவுடைமைச் சித்தாந்த எதிர்ப்பாளர்களும்கூட
இத்தனை கொடூரர்களகக் கம்யூனிஸ்டுகளைச் சித்திரித்தது இல்லை.
‘தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்கமாட்டான்’ என்றொரு தமிழ்ப்
பழமொழி உண்டு. அதேபோல ஆய்தங்களை எடுத்தவன் அத்துமீறாமல் இருக்கமாட்டான்
என்கிற கருத்தில் எனக்கும் உடன்பாடுண்டு. நிச்சயமற்ற ஒரு எதிர்காலப்
பொற்காலத்தைச் சுட்டிக்காட்டி சமகால மக்கள் தம் நிகழ்காலத்தை அழித்துக்
கொள்ளவேண்டும் என எந்த உன்னதக் கொள்கைகளின் பெயராலும் சொல்வதை என்னாலும்
ஏற்கமுடியாது. உலகில் நடந்த அனைத்து ஆயுதப் போராட்டங்களையும் போலவே மலேயா
கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுதப் போராட்டத்திலும் அத்துமீறல்கள் நிச்சயம் நடை
பெற்றிருக்கும், அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டிருப்பார்கள். அதேபோல
மிகக் கொடூரமாக அழித்து ஒழிக்கப்பட்ட ஆயுதப் போராட்டங்களில் ஒன்று மலேசியக்
கம்யூனிஸ்டுகளின் போராட்டம் என்பதையும் நாம் மறந்து விடலாகாது.
கம்யூனிஸ்டுகளின் இந்த ஆயுதப் போராட்டத்தை இத்தனை வன்மையாக ரெங்கசாமி
கண்டிப்பதைக்கூட என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது. ஆனால் இத்தனை ஆவேசமாக
இதைக் கண்டிக்கும் இவரால், இதே போன்ற அத்துமீறல்களை நம் கண் முன் மேற்கொண்ட
விடுதலைப் புலிகள் இயக்கத்தை எப்படி ஆதரிக்க முடிகிறது? புலிகளை ஆதரித்து
அவர் ஒரு குறு நூல் எழுதியிருப்பதாக அறிகிறேன். சகோதர இயக்கங்களைப்
பூண்டோடு கொன்று தீர்த்தது, பாரம்பரியமாக வடக்கில் வாழ்ந்து வந்த
முஸ்லிம்களை இரண்டு மணி நேர அவகாசத்தில் வெளியேற்றி இனச்சுத்திகரிப்புச்
செய்தது, பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த கிழக்கு முஸ்லிம்களை சுட்டுக்
கொன்றது, திருடர்கள், விபச்சாரிகள், துரோகிகள் எனக் குற்றஞ்சாட்டி மக்களைக்
கொன்று விளக்குக் கம்பங்களில் தொங்கவிட்டது, கட்டாய இராணுவ சேவைக்குக்
குழந்தைகளைக் கொத்திச் சென்றது, இறுதி நேரத்தில் சொந்த இன மக்களையே மனிதக்
கவசமாகப் பயன்படுத்தியது என ஏராளமான மனித உரிமை மீறல்களை மேற்கொண்ட
விடுதலைப் புலிகளை ஒரு பக்கம் விமர்சனமின்றி ஆதரிக்கும் ஒரு எழுத்தாளரால்
எப்படி இதே குற்றச்சாட்டுகளை முன்வைத்து மலேசியக் கம்யூனிஸ்ட் கட்சியை
முற்றாக நிராகரிக்க முடிகிறது என்பதுதான் சற்றுக் கவலை அளிக்கிறது.
எனினும் ரெங்கசாமிடம் மட்டுமே காணக்கூடிய முரணாக இதை நான் பார்க்கவில்லை.
மலேசியக் கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றை மறக்க முயலும் போக்கு இன்று மலேசியத்
தமிழர்கள் மத்தியில் பொதுவாகவே நிலவுவதையும் என்னால் காணமுடிகிறது. இது
வெறும் அரச அடக்குமுறை கருதித்தான் என முடிவுகட்ட இயலவில்லை. இது குறித்து
தேசியம், ஆயுதப் போராட்டங்களின் இன்றைய பொருத்தப்பாடு, மார்க்சீயம் குறித்த
மறு வாசிப்பு ஆகியவற்றில் ஆர்வமுடைய மலேசியச் சிந்தனையாளர்கள் ஆர்வம்
செலுத்த வேண்டும்.
ரெங்கசாமியின் இந்த வரலாற்று நவல்கள், நாவல்கள் என்கிற வகையில் எத்தனை
குறைபாடுகள் உடையதாயினும் மலேசியத் தமிழர்களின் வாழ்வின் ஒரு முக்கியமான
காலகட்டத்தைப் பதிவு செய்த வகையில் முக்கியமானவை.
வாசிக்கக் கிடைத்த ரெங்கசாமியின் நூல்கள்:
1. நினைவுச்சின்னம், பிந்தாங் அச்சகம், சிலாங்கூர் டாருல் ஏசான், 2005
(நி.சி)
2. இமயத் தியாகம்,இளங்கோ நூலகம், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு, 2006 (இ.தி)
3. லங்காட் நதிக்கரை, மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்,சிலாங்கூர்,
2006 (ல.ந)
(மூத்த எழுத்தாளர் அ.ரெங்கசாமியின் நாவல்கள் குறித்த ஆய்வு இத்துடன்
முடிகிறது. மலேசியத் தமிழ் எழுத்துக்களில் முக்கியமான அனைத்தையும் கூடியவரை
இந்தத் தொடரில் ஆய்வுக்குட்படுத்த பேராசை கொண்டுள்ளேன். இதில் எனக்குள்ள
ஒரே பிரச்சினை நூல்கள் இல்லாமைதான். சிறுகதைகளின் தொகுப்பு, கவிதைகள்
தொகுப்பு எல்லாம் வந்துள்ளதாக அறிகிறேன். பல முக்கிய நாவல்களும்
என்னிடமில்லை. தமிழகத்தில் வாங்க இயலும் என்றால் விவரம் தெரிவித்தால்
வாங்கிக் கொள்வேன். இந்தத் தொடரை வாசிப்போர் ஏதோ ஒரு வகையில் முக்கிய
நூல்கள் எனக்குக் கிடைக்குமாறு செய்தால் நன்றியுடையவனாக இருப்பேன். சென்ற
வாரத்தில் சிங்கையின் முக்கிய எழுத்தாளரும் நாடகாசிரியரும் இயக்குநருமான
இளங்கோவன் தனது நூல்களை அனுப்பியிருந்தார். அவருக்கு என் நன்றிகள்.)
|
|