முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 46
அக்டோபர் 2012

  நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்... 5
அ. மார்க்ஸ்
 
 
       

பதிவு:

வல்லினம் வகுப்புகள் 2 - 'மஹாத்மன் சிறுகதைகள் உலகத்தரமானவை'
தமிழவன்



கட்டுரை:

காலாவதியான இரசனையும் சினிமாவும்
கே. பாலமுருகன்

அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும்
கே. எஸ். சுதாகர்

மதமாற்றத்தின் அரசியல்
கே. பாலமுருகன்

ஈழன்: சமூகம் தொலைத்த மனிதர்
லதா



நேர்காணல்:

எனக்கு அறிவியல் பள்ளியில் இடம் இல்லை
ஸ்ரீ அறிவேஷ்

சிறுவர் இலக்கியம் உருவாக்கப்பட வேண்டும்
கே. பாலமுருகன்



சிறுவர் சிறுகதை:

ஓரம் போ
கே. பாலமுருகன்


தொட‌ர்:

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்... 5
அ. மார்க்ஸ்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

அவர்களின் பேனாவில் இருந்து கொஞ்சம் மை
அ. பாண்டியன்

அச்சில் ஏறாத உண்மைகள்
இரா. சரவணதீர்த்தா

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்



கவிதை:

இரா. சரவண தீர்த்தா

சின்னப்பயல்

செ. சுஜாதா

ந. பெரியசாமி

துரோணா

அ. ரெங்கசாமியின் வரலாற்றுப் புதினங்கள்

ஒரு வகையில் பார்த்தால் எல்லாப் புதினங்களுமே வரலாற்றுப் புதினங்கள்தான். ஏதோ ஒரு காலப் பின்னணியில் எழுதப்படுபவைதான். சம காலத்தில் எழுதிக் கொண்டுள்ள யோ.கர்ணனின் சிறுகதைகள் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலைப் பின்னணியாகக் கொண்டவைதானே. ஆனாலும் சமகாலத்தில் எழுதப்படும் இவற்றை நாம் வரலாற்றுப் புதினங்கள் என்பதில்லை. தமிழின் முதல் நாவல்கள் எழுதப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது. மாதவையா அல்லது வேதநாயகம் பிள்ளையின் நாவல்கள் சுமார் 120 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்ச் சூழலைக் காலப் பின்னணியாகக் கொண்டவை என்றபோதிலும் அவற்றையும் நாம் வரலாற்று நாவல்கள் என்பதில்லை.

வரலாற்றுப் புதினங்கள் என்பன இவற்றிலிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றன? வரலாறு குறித்த ஒரு பிரக்ஞையுடன் எழுதப்படுபவற்றைத்தான் நாம் வரலாற்றுப் புதினங்கள் என்கிறோம். வரலாறு அவற்றில் ஒரு பாத்திரமாகி விடுகிறது. வரலாறு எழுதுபவனின் கரங்களைக் கட்டுப்படுத்துகிறது. ஒரு வகையில் அவனது கற்பனை வீச்சிற்கு அது ஒரூ சுமையாகி விடுகிறது. யோசித்துப் பார்ர்க்கும்போது இந்த ‘வரலாற்றுப் புதினம்’ என்கிற சொற் சேர்க்கையே பொருத்தமற்ற ஒரு இணைவாகத் தோன்றுகிறது. ‘வரலாறு’ என்னும்போது அதற்கு ஏற்கனவே நிகழ்ந்தது (what happened) என்கிற பொருள் வந்துவிடுகிறது. ‘புதினம்’ எனும்போது அது இதுவரை நிகழாத ஒன்று, கற்பனை என்றாகிறது. ஆங்கிலத்தில் History என்னும் சொல்லுக்கு இரு பொருள்கள் உண்டு. ஏற்கனவே நிகழ்ந்தவைகளும் History தான். நிகழ்ந்தவற்றச் சொல்கிற பிரதிகளைக் குறிப்பதற்கும் நாம் History என்கிற சொல்லைத்தான் பாவிக்கிறோம்.

ஒரு வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு நாம் ஒரு வரலாற்றுப் புதினத்தைப் படைக்கும்போது அந்த வரலாறு குறித்த எராளமான, அல்லது குறைந்த பட்சம் பல வரலாற்றுப் பிரதிகள் முன்னதாகவே உருவாகி விடுகின்றன. சுபாஷ் சந்திர போசின் இந்திய தேசிய இராணுவ முயற்சிகள் அல்லது மரண ரயில் பாதை அமைத்தல் என்கிற வரலாற்று நிகழ்வுகளை எடுத்துக் கொண்டால் அவை குறித்து ஏற்கனவே பல பெருங்கதையாடல்கள் (Historical Metanarratives) உள்ளன. இத்தகைய வரலாறு குறித்த புனிதக் கட்டமைப்புகளுக்கு (Historical Moralizing) மத்தியில்தான் நாம் இது குறித்த புதின முயற்சியில் இரங்குகிறோம்.

இப்படி எழுதப்பட்ட வரலாறுகள் எல்லாம் ‘சான்றுகளை’ (evidences) அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. ஆனால் புனைவுகள் சான்றுகளின் அடிப்படையில் இயங்காதவை. ‘புனைவு’ என்கிற சொல்லே சான்றுகள் இல்லாதது என்பதைத்தான் பொருள் கொள்கிறது. ஆக, வரலாறாக எழுதப்பட்ட பிரதிகள் காட்டும் சான்றுகள் ஒரு வகையில் வரலாற்று நாவலாசிரியனுக்கு பெரிய இடையூறுதான். அதிலும் போஸ், காந்தி அல்லது வீர பாண்டிய கட்டபொம்மன், இராஜராஜ சோழன் முதலான வரலாற்று நாயகர்களை முக்கிய பாத்திரமாக ஏற்கும்போது நாவலாசிரியர் இவ்வகையில் மிகப் பெரிய சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டியவராகிறார். அவர்கள் குறித்து உருவாக்கப் பட்டுள்ள குற்றங்களுக்கு அப்பாற்பட்ட புனிதப் பிம்பங்கள், நாவலாசிரியரின் கற்பனைக்குப் பெரிய சவால்களாகவும் விலங்குகளாகவும் அமைந்து விடுகின்றன.

வரலாறுக்கும் புனைவுக்குமான இந்த முரண்கள் அரிஸ்டாட்டிலின் காலத்திலிருந்து இலக்கிய ஆய்வுகளில் கவனத்திற்குள்ளாகி இருக்கின்றன. “வரலாற்றாசிரியன் என்ன நிகழ்ந்தது என்பதைச் சொல்கிறான். கவிஞனோ என்ன நிகழலாம் (what may happen) என்பதைப் பேசுகிறான்” என்பார் அரிஸ்டாட்டில். வரலாற்றாசிரியன் குறிப்பான நிகழ்வொன்றைப் (particular) பதிகிறான். கவிஞனோ எல்லோருக்குமான எல்லாக் காலங்களுக்குமான சர்வ வியாபகமான ஒன்றைப் (universal) படைக்கிறான் என அவர் தொடர்வார். ஆக அரிஸ்டாட்டிலின் கருத்துப்படி புனைவு என்பது தத்துவ அழுத்தம் மிக்கதாகவும் வரலாற்றைக் காட்டிலும் உயர் தளம் ஒன்றில் இயங்குவதாகவும் ஆகிறது. நிகழ் சாத்தியங்கள் மற்றும் அவசியங்களின் இயங்கு விதிகளின் ஊடாகப் (according to the higher laws of probability and necessity)) புனைவாசிரியன் என்ன நிகழும் என்பதைப் படைத்துக் காட்டுகிறான். ஆக பகுத்தறிவு சார்ந்த சான்றுகளும், உண்மைகளும் இங்கே இரண்டாம் பட்சமாகி விடுகின்றன. ஆனால் பகுத்தறிவைப் பிரதானப்படுத்தி இயங்கிய அறிவொளிக்காலச் சிந்தனை மரபு, புனைவைப் பின்னுக்குத் தள்ளி, சான்றுகள் அடிப்படையில் எழுதப்படும் ‘உண்மைகளுக்கு’ முதலிடம் அளித்தது.

இருக்கட்டும். வரலாற்றுப் புதினம் எவ்வகையில் வரலாற்றுப் பதிவிலிருந்து வேறுபடுகிறது? இரண்டு அம்சங்கள் இங்கே முக்கியமானதாகத் தோன்றுகின்றன. ஒன்று: சான்றுகள் என்பன எப்போதும் முழுமையானவையோ, இல்லை தவறுகளுக்கு அப்பாற்பட்டவையோ அல்ல என்பது. சான்றுகள் ஒற்றை விளக்கங்களுக்கு (interpretations) மட்டுமே உட்பட்டவையும் அல்ல. வரலாற்றுச் சான்றுகளுக்கும் நீதிமன்றச் சான்றுகளுக்கும் பெரிய வித்தியாசமில்லை. எல்லாச் சான்றுகளுக்கும் பல்வேறு விளக்கங்கள் சாத்தியமே. ஒரு புனைவாசிரியன் அத்து மீறி வரலாற்றுக்குள் நுழைவதற்கான முதல் பலவீனமான புள்ளி இது. இரண்டு: வரலாற்றைப் புனிதப் படுத்தும் முயற்சிகள் என்பன வரலாற்றைத் தட்டையாக்கி விடுகின்றன. வரலாற்றை ஒழுங்குபடுத்தி, வரலாற்று நிகழ்வுகளின் அபத்தங்களையும், முரண்களையும், தெளிவின்மையையும் அகற்றித் ‘தூய்மை’ செய்துவிடுகின்றன. எனவே வரலாறு எந்த வகைப் பிரச்சினைப்பாடும் (problematic) இல்லாது நமக்குக் கையளிக்கப்படுகுகின்றது. ஒரு புனைவாசிரியன் வரலாற்றுக்குள் அத்துமீறி நுழைவதைச் (trespass) சாத்தியப்படுத்தும் இரண்டாவது புள்ளி இது.

வரலாறு என்பது நிகழ் காலத்தைப் போலவே சிக்கலான ஒன்று. பிரச்சினைப்பாடுகள் நிறைந்த ஒன்று. இந்தச் சிக்கலை. வரலாற்றின் பன்முகப் பரிமாணத்தை இரத்தமும் சதையுமாகக் கொண்டு வருவதே ஒரு வரலாற்றுப் புனைவாசிரியனின் பணி. வரலாற்றுப் பழைமையின் இந்தச் சிக்கல்களுக்கு அழுத்தம் கொடுப்பதென்பது, நிகழ்காலத்தின் சிக்கல்களின்பால் வாசகரோடு உரையாடுகிற ஒரு செயலாகவும் ஆகிவிடுகிறது.

புனிதப்படுத்தப்பட்ட வரலாற்றுப் பதிவுகள், தனி நபரின் தேர்வுச் சாத்தியங்களைப் புறந்தள்ளி விடுகிறது. புனிதப் படுத்தப்பட்ட வரலாற்று நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படும் ஒன்றாகவே எல்லா நிகழ்வுகளும் மாற்றப்பட்டு விடுகின்றன. இந்தியச் சுதந்திரப் போராட்டக் காலத்தில் மணியாச்சி சந்திப்பில் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த சப் கலெக்டர் ஆஷ் என்னும் வெள்ளை அதிகாரியை சுட்டுக் கொன்று அதே கைத் துப்பாக்கியால் தன்னையும் மாய்த்துக் கொண்டார் வாஞ்சிநாதன் என்ற ஒரு பார்ப்பன இளைஞர். வெள்ளை ஏகாதிபதியத்தை எதிர்த்துத் தியாகம் செய்த வீர வாஞ்சியாக இன்று வரலாறு அவரைப் போற்றுகிறது. மணியாச்சி ரயில் நிலையத்தின் பெயரும் இன்று வீர வாஞ்சியாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந் நிகழ்வு குறித்து வேறொரு கதையாடலும் உண்டு. சப் கலெக்டர் ஆஷ் அப்பகுதியில் தீண்டாமை ஒதுக்கல்களுக்கு எதிராக இருந்தார் எனவும், அதனால் ஆத்திரப்பட்டே உயர் சாதியைச் சேர்ந்த வாஞ்சி அவரைக் கொன்றார் என்றும் ஒரு பார்வை உண்டு.

இந்தப் பிரச்சினையில் ஒரு புனைவாசிரியனின் பணியாக நான் சொல்லவருவது என்னவெனில் இரண்டாவதாகச் சொன்ன பார்வையின் அடிப்படையில் இன்னொரு வரலாற்றை எழுதுவது அல்ல. அப்படி எழுதுவது தேவையில்லை என நான் சொல்லவில்லை. அதுவும் அவசியந்தான். ஆனால் அப்படி எழுதப்படுவது ஒரு மாற்று வரலாறு என்கிற அளவிலேயே நின்றுவிடும்: வரலாற்றுப் புனைவின் நோக்கம் அதுவல்ல என்பதே. சென்ற நூற்றாண்டுத் தொடக்கத்தில் உருவான ஏகாதிபத்திய எதிர்ப்பில் பொதிந்து நிற்கும் இந்தச் சிக்கலை ஒரு புனைவுதான் வெளிக் கொணர இயலும். அந்தச் சிக்கலை கொணரும்போதே அது ஒரு புனைவாகவும் இயலும்.ஐந்தச் சிக்கலைப் புனைவாக்குவதற்கு நமக்குச் சான்றுகளைக் காட்டிலும் விவ்வரங்களும் (details) கற்பனையுமே (imagination) அதிகம் தேவைப்படும்.

ரெங்கசாமியின் ‘இமயத் தியாகம்’ நாவல் வரலாற்றுச் சான்றுகளை அதிகம் சார்ந்து நின்று எழுதப்பட்ட ஒன்று. விவரமான தேதிக் குறிப்புகளுடன் எழுதப்பட்டுள்ள நாவல் அது. இது குறித்து மேலே பேசுவதற்கு முன் ஒன்றைச் சொல்லிவிட வேண்டும். வரலாற்றுப் புதினத்தில் வரலாறு ஒரு பாத்திரமாகப் பங்கேற்பதை நாம் மறுக்க இயலாது. வரலாற்று நாவலாசிரியர் வரலாற்றுக்குக் கடன்பட்டுள்ளார் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. அந்த வகையில் வரலாற்று நாவலாசிரியருக்கு ஆவணக் காப்பக ஆய்வு, முந்திய நூற்களில் சொல்லப்பட்டவை குறித்த ஆய்வு, நாவலின் வரலாற்றுச் சூழலில் வாழ்ந்தவர்கள் அல்லது அந்த நிகழ்வில் பங்கேற்றவர்கள் உயிரோடு இருக்கும் பட்சத்தில் அவர்களுடைய நேர்காணல்கள் என்பன முக்கியம். மார்க் ட்வெய்ன் சொன்னதைப்போல, “முதலில் உண்மைகளைச் சேகரித்துக் கொள். பின் அதை எதையாவது செய்”.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான ரெங்கசாமி இந்தப் பணிகளச் செவ்வனே செய்பவர். கள ஆய்வு. நாற்பதுகளில் வாழ்ந்தவர்களோடு உரையாடுதல், குறித்த நூல்களை ஆழமாக வாசித்தல் என்கிற அடிப்படையிலேயே அவாரது வரலாற்று நாவல்கள் அனைத்தும் அமைகின்றன. இமயத் தியாகம் நாவலில் பாத்திரமாகியுள்ளவர்களில் பெரும்பாலோர் புகழ்பெற்ற் வரலாற்று நாயகர்கள். சுபாஷ் போஸ், ஹிட்லர், சர்ச்சில், ராஷ் பிஹாரி போஸ், ஷா நவாஸ் கான், மோகன் சிங், ஃப்யூஜிவேரா இப்படி நிறையப் போர் நாயகர்கள் நாவலில் வலம் வருகின்றனர். இப்படியான வராலாற்று நாயகர்கள் பெரிதும் வலம் வருவதென்பது ரெங்கசாமியின் கற்பனைத் திறனுக்குப் பெருந் தடையாகி விடுகிறது. ஒரு வரலாற்று நாவலாக அது பரிணமிப்பது தடுக்கப்பட்டு, இன்னொரு மைய நீரோட்ட வரலாற்றுக் கதை சொல்லலாக (mainstream history) மாறிவிடுகிறது. வரலாற்று முரண்கள், அபத்தங்கள், பிரச்சினைப்பாடுகள் எல்லாம் துடைத்தெறியப்பட்டு ஒரு தூய வரலாறே நமக்குக் கையளிக்கப்படுகிறது.

நேதாஜி போசின் ஆளுமை, பேச்சுத் திறன், அர்ப்பணிப்பு, தியாகம், துணிச்சல் முதலியன பெரிய அளவில் நாவலில் விதந்தோதப்படுவதில் நமக்கு மறுப்பில்லை. சிஙகப்பூரிலும் மலேசியாவிலும் பெருந்திரள் மக்கள் மத்தியில் அவரது உரைகள் முடிந்தவுடன் கூடியிருந்த இந்தியர்கள் தாங்களாகவே முன்வந்து, தம்மிடம் இருப்பவற்றையெல்லாம், அல்லது கொடுக்க முடிந்ததவற்றையெல்லாம் வாரி வழங்கியவதை ரெங்கசாமி விரிவாகப் பதிவு செய்கிறார். ஆனால் பிரச்சினை அத்தோடு முடிந்துவிடவில்லை. அரசல்லாத ஒரு அமைப்பு வலிமையான ஒரு அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் ஒன்றைக் கட்டமைப்பதிலுள்ள பல்வேறு சிக்கல்களையும் போஸ் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. என்னதான் ஜப்பானின் ஆதரவு இருந்தபோதிலும் இந்திய தேசிய இராணுவத்திற்கான நிதித் தேவையை பெருமளவில் அவரே திரட்ட வேண்டியிருந்தது. ஒரு கணக்குப்படி இந்திய தேசிய இராணுவத்திற்கான அன்றைய ஒரு மாதச் செலவு 5 மில்லியன் டாலர்கள். தொடக்கத்தில் கிழக்காசியாவில் வசித்த இந்தியர்கள் தாமாகவே முன்வந்து நிதியளித்தபோதும், போகப் போக இது குறைந்தது. போஸ் மேலும் மேலும் நிதி கோரியபோது மக்கள் அதைத் தொந்தரவாகக் கருதத் தொடங்கினர். அதிகாரத்தைப் பயன்படுத்தி நிதி கோருவதைத் தவிர போசுக்கு வேறு வழி தெரியவில்லை. நிதி திரட்டுவதற்கென ஒரு நிர்வாக வாரியம் 1944ல் தொடங்கப்பட்டது. இந்தியர்கள் அனைவரும் இந்த வாரியத்தின் முன் தம் சொத்து விவரங்களைத் தெரிவிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டனர். 25 சதம் வரை ஒவ்வொருவருக்கும் ‘லெவி’ விதிக்கப்பட்டது. ஜப்பானின் தோல்வி உறுதியானபோது இந்திய தேசிய இராணுவத்திற்கான நிதி வசூல் சாத்தியமில்லாமல் ஆனது (J.R. Manickam, The Malaysian Indian Dilemma, p.96). இந்த நிதி வசூலில் வெறுப்படைந்தவர்களில் பெரும் பகுதியினர் சொத்துக்கள் வைத்திருந்த மேல்தட்டினராகத்தான் இருந்திருப்பர் என்பது உண்மைதான். ஆனால் அன்று மிகப்பெஈய அளவில் நாட்டில் பஞ்சம் தலை விரித்தாடியதையும் நாம் மறந்து விட இயலாது. உடுக்கத் துணியின்றி வெறும் சாக்குகளைச் சுற்றிக்கொண்டு தமிழர்கள் திரிந்ததை ரெங்கசாமியே பதிவு செய்ய்கிறார்.

போசின் வீரமும் தியாகமும் போற்றதக்கது என்பதை இன்னொரு முறை வலியுறுத்திச் சொல்வதில் நமக்குத் தயக்கமில்லை. ஆனால் அதே நேரத்தில் போரில் கைதான பிரிட்டிஷ் இந்திய வீரர்களையும் மலேசிய சிங்கப்பூரில் சேர்க்கப்பட்ட படை வீரர்களையும் ஜப்பானிய உதவியயும் நம்பி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கெதிரான ஆயுதப் போராட்டத்தில் இறங்கிய போசின் துணிச்சல் ஒரு misadventure ஆக முடிந்ததையும் நாம் காணத் தவறக்கூடாது.

கமலஹாசனின் ‘நாயகன்’ திரைப்படத்தில் ஒரு குழந்தை கேட்குமே, “நாய்க்கரே நீங்கள் நல்லவரா கெட்டவரா?” என்று. அதுபோல ரெங்கசாமியின் பாத்திரம் ஒன்று, “இந்த ஜப்பானியர்கள் நல்லவுங்களா கெட்டவுங்களா?” என்று கேட்கும். ரெங்கசாமியின் நாவல்கள் பேசுகிற இந்த வரலாற்றுக் காலகட்டத்தின் மிக முக்கியமான ஒரு முரண் இந்தக் கேள்வியில் அடங்கியுள்ளது. ‘இமயத் தியாகம்’, ‘நினைவுச் சின்னம் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே கால கட்டத்தில் நடைபெறும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. முதலாவது மலேசியா சிங்கப்பூரை மையமாக வைத்து இந்திய தேசிய இராணுவத்தை அமைத்து பர்மா வழியாக “டில்லி சலோ” என்கிற முழக்கத்துடன் இம்பால் வரை வெற்றியைச் சந்தித்துப் பின் தோல்வியுடன் திரும்பிய வரலாற்றைச் சொல்வது. மற்றது சயாமிலுள்ள போம்போங்கிலிருந்து பர்மாவிலுள்ள தன்பியூஜயாத் வரை காடுகளை அழித்து மரண ரயில்பாதை போடப்பட்டபோது ஜப்பானியர்களால் கட்டாயமாகப் பிடித்துக் கொண்டு செல்லப்பட்ட தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் மடிந்த வரலாற்றைச் சொல்வது. இந்த இரண்டிலும் இந்தியர்களைப் பொருத்தமட்டில் ஜப்பானியர்களின் பாத்திரம் முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக இருந்தது. ஜப்பனிய உதவியை நம்பிக் களத்தில் இறங்கிய போஸ் அவர்களாலும் ஜப்பானியக் கொடுமையிலிருந்து அவர் எந்த இந்தியர்களை விடுதலை செய்யப் படை திரட்டினாரோ அந்த இந்தியர்களின் ஒரு பகுதியைக் காப்பாற்ற இயலாமற் போனது வரலாற்றின் அபத்தமின்றிப் பின் வேறென்ன?


       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768