இதழ் 13
ஜனவரி 2010
  நேர்காணல் - பகுதி 1
"அர‌சாங்க‌த்திற்குத் தேவை ந‌ம்மை நாமே குறை சொல்லிக்கொள்ளும் ஏமாளித்த‌ன‌ம்"
பி.உத‌ய‌குமார்
 
     
  நேர்காண‌ல்:

"அர‌சாங்க‌த்திற்குத் தேவை ந‌ம்மை நாமே குறை சொல்லிக் கொள்ளும் ஏமாளித்த‌ன‌ம்"

பி. உத‌ய‌குமார்

சிறப்புப் பகுதி:

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் - ஒரு பார்வை


பத்தி:

தமிழகத்திலும் ஒரு நீரோ மன்னன்

அ. ரெங்கசாமி

அவஸ்தை
இராம. கண்ணபிரான்


கட்டுரை:

பிலிப் கலாஸ் : இசையின் தீராத‌ ப‌க்க‌ங்க‌ள்
அகிலன்

காற்று வேட்டை
கெ.எல்.

வரமா? சாபமா?
நெடுவை தவத்திருமணி

மொழி ஆணால் உருவாக்கப்பட்டது...
வீ.அ. மணிமொழி

இலங்கைத் தமிழர்களின் ஆங்கில நூல்கள்: நூல்தேட்டம் ஆங்கில நூல் தொகுப்புக்கானதொரு அறிமுகம்
என். செல்வராஜா

சிறுகதை:

குரங்கு
கிரகம்


பிரமைகள்
ஸ்ரீரஞ்சனி

தொடர்:


ப‌ல வேடிக்கை ம‌னிதரைப் போல‌ ...5
ம‌. ந‌வீன்

எனது நங்கூரங்கள் ...6
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...1
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்


கவிதை:

இளங்கோவன்


இரா. சரவணதீர்த்தா


மன்னார் அமுதன்

ஏ.தேவராஜன்

பதிவு:

மலேசியத் தமிழ்க் கவிதாயினிகளின் முதலாவது மலையருவிக் கவியரங்கம்
தினேசுவரி

புத்தகப்பார்வை:

விட்டு விடுதலை காண்
நிந்தவுர் ஷிப்லி

லும்ப‌ன் ப‌க்க‌ம்:


ஒரு கோமாளியின் வ‌ருகை...
லும்ப‌ன்

அறிவிப்பு:


அஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி

எதிர்வினை:


கடிதம்
     
     
 

வ‌ழ‌க்க‌றிஞ‌ர் பி.உத‌ய‌குமார் 1961இல் ந‌வ‌ம்ப‌ர் மாத‌ம் ஏழாம் திக‌தி பிற‌ந்தார்.இவ‌ர் கிள‌ந்தான் மாநில‌த்தைச் சேர்ந்த‌வ‌ர்.உல‌க‌த் த‌மிழ‌ர்க‌ளின் க‌வ‌ன‌த்திற்கு ம‌லேசிய‌த் த‌மிழ‌ர் நிலையினை திசை திருப்பிய‌ 'ஹிண்ட்ராப்' இய‌க்க‌த்தின் ஆலோச‌க‌ர் இவ‌ர் என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. ஒரு ல‌ட்ச‌த்துக்கும் மேலான‌ ம‌லேசிய‌ இந்திய‌ர்க‌ள் க‌ல‌ந்துகொண்ட‌ அந்த‌ப் பேர‌ணியைத் தொட‌ர்ந்து இவ‌ரும் இத‌ர‌ நான்கு வ‌ழ‌க்க‌றிஞ‌ர்க‌ளுக்கும் சுமார் ஓன்ற‌ரை ஆண்டு உள்நாட்டு பாதுகாப்புச் ச‌ட்ட‌த்தின் கீழ் த‌டுத்துவைக்க‌ப்பட்ட‌ன‌ர். இன்றும் மிக‌ உற்சாக‌மாக‌ ச‌மூக‌ப் ப‌ணியில் இய‌ங்கி வ‌ரும் வ‌ழ‌க்க‌றிஞ‌ர் உத‌ய‌குமார் அவ‌ர்க‌ளை நேர்காண‌ல் செய்ய‌ என்னுட‌ன் யுவராஜன், சிவா பெரியண்ணன், மணிமொழி ம‌ற்றும் தோழி வ‌ந்திருந்தன‌ர். எல்லா தயார் நிலைக்குப் பின் அவ‌ருக்காக‌ அலுவலகத்தில் காத்திருந்தோம். அன்புடன் எங்களை வரவேற்ற வழக்கறிஞர் உதயகுமார் ஓர் சிறிய அறிமுகத்திற்கு பின் எங்களுக்கு எந்தச் சிரமும் தராமல் பேசத் தொடங்கினார்.

"நாம் தொடர்ந்து திசை திருப்பப் படுகிறோம். அதற்கு நமது பத்திரிகைகளும் காரணமாக இருக்கின்றன. நமது கட்சிகளுக்கிடையேயான உட்பூசலுக்கும் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட தாக்குதலுக்கும் முதல் பக்கத்தில் முக்கியத்துவம் அளிக்கும் பத்திரிக்கைகள் சமுதாயப் பிரச்சனைகளுக்கு எந்த இடமும் தருவதில்லை. நமது சமுதாயத்திற்கிடையே ஊடருவியுள்ள பிளவுபாட்டை படம் பிடித்துக் காட்டுவதன் வழி அவர்கள் சார்ந்த அரசியல்வாதிக்கோ கட்சிக்கே ஒரு மலிவான விளம்பரத்தைத் தருகின்றன. இதனால், ஒற்றுமையற்ற ஒரு சமூகத்தில் வாழ்வதாக இயல்பாகவே இந்தியர்களின் மனம் கட்டமைக்கப்படுகின்றது.

ஹிண்ட்ராப் போராட்டத்திற்குப் பிறகு இந்த நிலை கொஞ்சம் மாறியுள்ளதாகத்தான் கூற வேண்டும். தமிழ்ப் பள்ளிகளின் நில விவகாரம், கோயில் உடைப்பு போன்ற சமூகப் பிரச்சனைகளுக்கு அவ்வப்போது முக்கியத்துவம் நாளிதழ்களில் காட்டப்படுகிறது. ஆனால் இது போதாது. அண்மையில் ஸ்டார் பத்திரிகையில்லொரு செய்தி. தெமெர்லோவில் உள்ள ஓர் இந்திய மினி மார்க்கேட் உரிமையாளருக்கு விற்பனைக்கான உரிமம் புதுப்பிக்க அனுமதிக்கப்படவில்லை. சுமார் 25 ஆண்டுகளாக அவ்வணிகத்தை நடத்தி வரும் அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த அவல நிலைப்பற்றி நமது பத்திரிகைளுக்கும் கவலை இல்லை. ஓர் இந்திய வணிகனை ஒடுக்கினால்தான் அவ்விடத்தில் பெரும்பாண்மை மலாய்க்காரர்கள் வணிகம் செய்ய முடியும் என முடிவெடுத்து செயல்படுத்துவதை இன அழிப்பு என்று தானே கூற வேண்டும்.

ஏன் இதைப்பற்றியெல்லாம் நமது இந்திய இயக்கங்கள் கேள்வி கேட்பதில்லை? இது போன்ற பிரச்சனைகளை தட்டிக் கேட்டதன் பலனாகத்தான் என்னை சிறையில் அடைத்தார்கள். யாரும் ஒன்றை தட்டிக் கேட்காதப் போது முதலில் கேள்வி எழுப்புபவன், இது போன்ற தண்டனைகளை அனுபவிப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும். அதற்காக நான் ஒரு நாளும் அழுததில்லை. சிறைவாசம் என்னை மேலும் பலப்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் சிறையில் ஒரு நாளைக்கு 13 மணிநேரம் படிப்பேன்; எழுதுவேன். அதில் கிடைத்த தெளிவின் பலனாக நாங்கள் இப்போது அகப்பக்கம் ஒன்றை நடத்தி வருகிறோம். அதில் கல்வி, பொருளாதாரம் சமூகப் பிரச்சனைகள் என பலவற்றையும் பதிவு செய்து வருகிறோம்.

இந்நாட்டில் இன்றும் பிறப்பு பத்திரம் இல்லாதத் தமிழ் சமூகம் இருப்பது எதனால் என்பதை உணர முடிகிறதா? பிறப்பு பத்திரம் என்பது நமக்கு கிடைக்க வேண்டிய ஓர் அடிப்படை உரிமை. அதைக் கொடுப்பதற்கு ஏன் இத்தனை சிக்கலான அணுகுமுறைகள். போர் சூழல் கொண்ட இலங்கையில் கூட பிறப்பு பத்திரம் கிடைப்பதில் எந்தச் சிரமமும் இல்லை. ஆனால், நமது நாட்டில் ஒருலட்சத்து ஐப்பதாயிரம் பேருக்கு பிறப்பு பத்திரம் இல்லாதது ஏன்?”

கேள்வி: இந்த நிலைக்கு அரசாங்கம் மட்டும்தான் காரணம் என்கிறீர்களா?

பதில் : நிச்சயமாக. ஆனால் அரசாங்கம் இந்தியர்கள் மீது பழிகூறும். நம்மையே குற்றவாளியாக்கும்.

கேள்வி: பிறப்பு பத்திரத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வற்ற சமூகத்தை நாம் தானே உருவாக்கி வைத்துள்ளோம்.

பதில் : நாம் உருவாக்கவில்லை. அரசாங்கம்தான் உருவாக்கியுள்ளது.

கேள்வி: அரசாங்கத்தின் குறைபாடுகள் இருக்கட்டும். நம்முடைய மனப்போக்கில் குறைபாடுகள் இருப்பதாகத் தோன்றுகிறது.

பதில் : இல்லை. இப்படித்தான் அரசாங்கம் இந்தியர்கள் மன அமைப்பை தன்னைத்தானே குறை சொல்லும் வகையில் உருவாக்கியுள்ளது. ஒரு பெண் விஷம் குடித்தால் தமிழ்ப் படத்தை பார்ப்பதனால்தான் அவள் அப்படிச் செய்தாள் என்றும் குண்டர் கும்பலுக்கிடையே சண்டை ஏற்பட்டால் திரைப்படம் பார்த்துதான் அது நடைபெற்றது எனக் கூறி நம்மை நாமே சவுக்கால் அடித்துக் கொள்கிறோம். இதைதான் self beating theory என்பேன். ஆற்றுக்கு அக்கறையில் இருக்கும் பூர்வக் குடியினருக்குப் படகில் ஏறி பயணம் செய்து பிறப்பு பத்திரம் வழங்க முடிந்த இவர்களால் ஏன் இந்தியர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க முடியவில்லை. அம்னோ அரசாங்கத்திற்கு வேண்டியது வேறு ஒன்றுமில்லை. “நம்ம ஆளுங்க சரியில்ல” என நம்மை நாமே குறை கூறிக்கொள்ளச் செய்வதுதான் அவர்களின் விருப்பம்.

கேள்வி: நீங்கள் சொல்லும் நிலை இந்தியர்களில் அனைவருக்கும் நிகழ்வதில்லையே. பொறுப்பற்ற ஒரு சிலருக்கு மட்டும்தானே நிகழ்கிறது. நமது உரிமைகளைக் கேட்டுப் பெறுவதுதானே நியாயம்.

பதில்: நாம் நமது நிலையில் வைத்து எதையும் கணிக்க முடியாது. படிப்பறிவு இல்லாத, வழிக்காட்டி இல்லாத பலர் பதிவு இலாக்காவிற்குச் சென்று எந்தப் பதிலும் முறையாக கிடைக்கப் பெறாமால் திரும்பி இருக்கின்றன. அவர்களுக்கு குழப்படியான இந்த படிநிலைகளை அறிந்து செயல்படுவது சிரமம்.

கேள்வி: தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சனைகள் ஏன் சீனர்களுக்கு ஏற்படவில்லை?

பதில்: பிரிட்டிஷார் இந்நாட்டில் அவர்களை அமர்த்திய விதம் அவர்கள் பொருளாதார வளர்ச்சிக்கு ஏதுவானது. பொதுவாகவே பட்டண புறங்களில் வாழ்ந்த அவர்களுக்கு இது போன்ற சிக்கல்கள் குறைவாக இருப்பதில் ஆச்சரியமில்லை.

கேள்வி: இந்த அரசாங்கம் இனப் பாகுபாடு உள்ள அரசாங்கம் என்பது நாம் அறிந்ததே. நாம் நமது சக்தியை அவர்களைக் குறை சொல்வதில் செலவிடுவதைவிட நாமே ஓர் இயக்கமாக தமிழர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் என்ன?

பதில்: அம்னோ அரசாக்கம் எதை விரும்புகிறதோ அதை துல்லியமாகச் சொல்கிறீர்கள். அவர்களுக்கு வேண்டியது இதுதான். உங்களுக்குத் தேவையானதை நீங்களே தருவித்துக் கொள்வது. அதற்காக அரசாங்கம் சார்ந்த அல்லது சார்பற்ற இயக்கங்களுக்கு சிறு சிறு தொகைகளைப் பகிர்ந்து கொடுத்து விடுவார்கள். நாமும் இதுவே போதும் என்று நின்று விடுவோம். உண்மையில் நமக்கு பயம். அரசாங்கத்தில் அதிகாரத்தைக் கண்டு பயப்படுகிறோம். பய உணர்ச்சியால்தான் நாம் கேட்காமல் இருக்கிறோம். தொழிலதிபராக ஆவதற்கு உதவி தொகையாக ம.இ.கா. அண்மையில் சிலருக்கு RM8000.00 கொடுத்ததாக சிலர் கூறினார்கள். RM8000.00 வைத்துக் கொண்டு எப்படித் தொழிலதிபராக முடியும். கச்சாங் பூத்தே தொழிலதிபரா? நாம் தற்காலிகத் தீர்வுகளுக்கே ஆசைப்படுகிறோம். நிரந்தர விடிவு பிறக்க நாமும் இந்நாட்டின் பிரஜைகள் என்பதை நம்ப வேண்டும்.

கேள்வி : இந்த நாடு உங்களுடையதா?

பதில்: நிச்சயமாக. அதிலென்ன சந்தேகம். எல்லா சொகுசுகளும் வந்துவிட்டப்பின் சிலர் தங்களை இரண்டாந்தர பிரஜைகளாகவும் இந்நாடு தனதில்லை எனவும் கூறும் ரகம் நான் இல்லை. பயந்தவர்கள் தங்களின் உரிமைகளைப்பற்றி அக்கறை கொள்ள மாட்டார்கள். அப்படி அக்கறை கொண்டால் அவர்களின் நிம்மதி குழையும். தங்களின் வசதியான வாழ்வை விட்டுக்கொடுக்க நேரிடும். இந்நாட்டில் பிறந்ததால் நாமும் இந்நாட்டின் பிரஜை என்ற சட்டத்தின் அடிப்படையில் பேசுகிறேன். இந்நாட்டில் எனக்கு எல்லா உரிமையும் உண்டு. 1957ல் சுதந்திரம் பெற்றபோது கொத்தடிமையாய் வந்த அமெரிக்க கருப்பின மக்களில் ஒருவர் இன்று அமெரிக்க அதிபராகி உள்ளார். நமது நிலை என்ன?

கேள்வி : நிறைய வழக்கறிஞர்கள் இந்நாட்டில் உருவாகிறார்கள். ஆனால் உங்களுக்கு எப்படி இந்தச் சமூகத்தின் மீது தனித்த அக்கறை வந்தது?

பதில்: இந்தக் கேள்வி, என்னை நோக்கி இரண்டாவது முறையாக வந்திருக்கிறது. இது முக்கியமான கேள்வி. நாட்டில் மொத்தம் 5000 இந்திய வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் எல்லோரின் வாழ்வின் வளர்ச்சி ஒரே போல் அமைவதில்லை. நான் என் இள வயதிலேயே செய்தி தாள்களைப் படிப்பேன். அதில் நான் காணும் இந்தியர் பிரச்சனைகளைக் கண்டு மனம் கொதிப்பேன். அப்போது செய்தித்தாள் வாங்க கூட பணம் இருக்காது. ஆனால் நமது பிரச்சனைகளின் தொடர் நடவடிக்கைகளை அறிய ஒரு விளையாட்டு கிளப்பில்தான் செய்திதாள் வாசிப்பதற்கு நேரத்தைச் செலவிடுவேன். நான் கிளந்தானிலிருந்து சிரம்பானுக்கு மாறி வந்த போதுதான் இந்தியர்கள் நிறைய பேர் இருப்பதும் அவர்கள் ஓரளவு வளர்ச்சியடைந்திருப்பதும் தெரிய வந்தது. எனக்குள் அப்போதுதான் ஒரு கேள்வி எழுந்தது. இவ்வளவு வளர்ச்சியடைந்த தமிழர்கள் இருந்தும் ஏன் நமது பிரச்சனைகளுக்குக் குரல் தர யாரும் முன் வரவில்லை என யோசிக்கத் தொடங்கினேன். நான் இந்திய சமூகத்தை ஊன்றிப் பார்க்கத் தொடங்கிய காலம் அது. இந்தியர்கள் மது அருந்துபவர்களாக அப்போது அடையாளம் காட்டப்பட்டனர். இந்தச் சூழலை எப்படியும் மாற்ற வேண்டும் என விரும்பினேன். முதலில் நான் இதுபோன்ற பழக்கங்களுக்கு அடிமையாகாமல் மனவுறுதி கொண்டேன். நான் வெளிநாடுகளில் இருந்த எந்தக் காலக்கட்டத்திலும் இந்த மனவுறுதியை விட்டுக்கொடுக்கவில்லை. இதுபோன்ற மனவுறுதிதான் ஒரு போராட்டவாதியாவதற்கான முதல் தளமாக அமைந்தது. இந்த நிலையில் ஒரு சம்பவம் என் வாழ்க்கையில் நான் இன்னும் ஆழ்ந்து சிந்திக்க தூண்டுக்கோளாக அமைந்தது. ஒரு நாள் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் நடந்து வந்து கொண்டிருக்கும் போது ஒரு போலீஸ்காரரால் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு தமிழர் தலைமுடி பற்றப்பட்டு தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார். இந்தக் காட்சி என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. எனது கேள்வி இதுதான். ஏதோ தவறு செய்திருக்கும் அந்த இளைஞரை காவலர்கள் பிடிப்பது தவறில்லை. தலைமுடியை பற்றி இழுத்துச் செல்லும் வன்முறை ஏன்? கைகளைப் பற்றி இழுத்துச் சென்றிருக்கலாமே? அப்போதே நான் முடிவெடுத்தேன். நான் வழக்கறிஞராகியப்பின் உன்னை கவனித்துக் கொள்கிறேன் என மனதிற்குள் கூறிக்கொண்டேன். தமிழ்ப்படம் கதைபோல இருக்கிறதா....(உரக்கச் சிரிக்கிறார்...பின்னர் சற்று நேரம் நிறுத்தியவர்) எல்லோருக்கும் வாழ்வதற்கு பணம் தேவைதான். எனக்கும் அந்த தேவை உண்டு. அதற்காக நீதியை நாம் விட்டுக் கொடுக்கக் கூடாது. இந்தியர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அது குறித்துக் கேள்வி எழுப்ப எந்தக் கட்சியும் தயாராக இல்லை. ஆளுங்கட்சி எதிர்கட்சி என எல்லாமே ஒரே மனநிலையில்தான் இயங்குகின்றன. ம.இ.கா. மட்டும் படம் காட்டுவதற்காக கொஞ்ச நேரம் அதைக் குறித்து பேசுவார்கள். அது நிரந்தர தீர்வாக இருக்காது.

கேள்வி : உங்களின் இந்தச்சமூக அக்கறையில் ஹிண்ட்ராப் தோற்றம் எப்படி உருவானது?

பதில்: அதுகுறித்துதான் புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன். முதலில் சராசரி மனிதர்களைப் போலதான் நாங்களும் சிந்தித்தோம். ஒரு சிறு இயக்கத்தின் மூலம் நடைபெற்ற எங்கள் செயல்பாட்டின் வெற்றியாக டத்தோ ஸ்ரீ சாமிவேலு எங்கள் ஆண்டு இறுதி கூட்டத்திற்கு வந்தால் போதும் என கருதிய காலம் உண்டு. ஆனால், இப்போது எங்கள் சிந்தனை ஓட்டம் மாறிவிட்டது. இந்திய சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் ஒரு இடை ஆளாக டத்தோ ஸ்ரீ சாமிவேலு தேவையில்லை. நமது பிரச்சனைகளுக்குப் பதில் சொல்ல வேண்டியவர் பிரதமர். அம்னோவை பதில் கூறச் சொல்லுங்கள் என்கிறோம். அம்னோ விரும்புவது இந்திய சமூகங்களுக்கிடையே நிகழும் பிளவுகளைத்தான். அதனால்தான் இந்திய சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண எந்த அதிகார பலமும் இல்லாத ம.இ.கா. பிரதிநிதிகளை அனுப்பி வைக்கிறது. இதன் மூலம் நமக்கிடையே நாம் வாக்குவதாம் செய்து ஒருவருக்கொருவரைக் குறைச் சொல்லி இரண்டு படுகிறோம். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்தானே. கம்போங் மேடான் பிரச்சனைக் குறித்தும் சிறையில் இந்தியர்களுக்கு மரணம் விளைவிப்பது குறித்தும் யாரும் கேள்வி எழுப்பாத சூழ்நிலையில் நாங்கள் ஹிண்ட்ராப் மூலமாகத்தான் எங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். கம்போங் மேடான் பிரச்சனையை பலரும் சொல்வது போல் ஒரு கலவரமாக நான் நினைக்கவில்லை. கலவரம் என்றால் இரு சாராருக்கும் பாதிப்புகள் இருந்திருக்க வேண்டும். இதில் தமிழர்களுக்கு மட்டுமே பாதிப்பு இருக்கின்றது. இது கலவரம் இல்லை. தாக்குதல்..

கேள்வி : ஹிண்ட்ராபின் வளர்ச்சி குறித்து கூறுங்கள்.

பதில்: ஆரம்பத்தில் இந்தியர்கள் பலர் வலுகட்டாயமாக மதம் மாற்றம் செய்யப்படுவதை எதிர்த்துதான் இந்த அமைப்பு உருவானது. ஆரம்பத்தில் இந்தப் பெயர் மட்டுமே இருந்தது. முறையான பதிவு இல்லை. அதன் பின்னர், சிறையில் தமிழ் இளைஞர்கள் கொல்லப்படுவதை எதிர்த்து நாங்கள் போராட்டம் நடத்தினோம். 2006ல் இறுதியில் ஹிண்ராப் என்றப் பெயரை ஒரு நிறுவனமாகவே மட்டுமே பதிவு செய்தோம். அரசுசாரா இயக்கங்களை இணைக்க எங்களுக்கு இது தேவைப்பட்டது. அக்காலக் கட்டத்தில் அதிக கோயில்கள் உடைக்கப்பட்டன. ஆக, இந்தியர்களுக்கு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஏற்படும் நெருக்கடிகளை தீர்க்க நாங்கள் மும்முரமாக இயங்கினோம். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரு பிரச்சனை அடங்கும் போது, மற்றும் ஒரு பிரச்சனை இந்தியர்களுக்குப் பூதகரமாக தலைத் தூக்குவதைக் காண முடிந்தது. அப்பொழுதெல்லாம் நாங்கள் அந்தப் பிரச்சனைகளை அணுக ‘ஹிண்ட்ராப்’ என்ற பெயரைப் பயன்படுத்திக் கொண்டோம். அதன் தலைவராக வேதமூர்த்தி இருந்தார். ஆரம்பகாலத்திலிருந்து எனக்கு நண்பராக இருந்த மனோகரன் மலையாளமும் சேர்ந்துக் கொண்டார். இந்தச் சமயத்தில் சகோதரர் வேதமூர்த்தி 2007-ஆம் ஆண்டு மலேசிய சுதந்திரம், அதன் ஒப்பந்தங்கள், அதில் அடங்கியுள்ள சட்டதிட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய லண்டன் சென்றார். இந்த ஆய்வின் முடிவை மக்களுக்குத் தெரிவிக்க பல கூட்டங்களை ஏற்பாடு செய்தோம். பலரையும் சந்தித்துப் பேசினோம். ஆரம்பக் காலங்களில் எங்களின் பேச்சைக்கேட்போர் யாருமில்லை. ஒரு பிரச்சினை நிகழுகையில் அப்போதைக்கு உள்ள உணர்ச்சியில் எங்களுடன் இருப்பர். பின்னர் உணர்ச்சி வற்றியதும் விலகி சென்றுவிடுவர். எங்களுக்கு யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்நிலை மே 2007 வரை தொடர்ந்தது. அதுவரையிலும் எங்களுக்குப் பொது மக்கள் ஆதரவு உள்ளது என வெளியில் நாங்கள் மட்டுமே சொல்லிக் கொள்வோம். 25 நவம்பரில் நடந்த ஹிண்ட்ராப் பேரணி நாங்களே எதிர்பாராதது. லண்டனில் செய்த ஆய்வையும் அதில் நமது உரிமைகளையும் ஒப்படைக்கப் போவதாக நாங்கள் அனுப்பிய குறுந்தகவல்கள் வெவ்வேறு ரூபங்களில் எங்களுக்கு மீண்டும் வரத் தொடங்கின. ஏதோ ஓர் அதிசயம் மட்டும் அந்நாளில் நடைபெறப்போகிறது என மட்டும் மனம் கூறிக்கொண்டே இருந்தது. ஆனாலும், மக்கள் திரளாக வருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. வீதி போராட்டத்திற்கு வர பயப்படுவார்கள் என்றே நம்பினோம். எல்லா அவநம்பிக்கைகளையும் தகர்த்தபடி... எல்லா கட்டுப்பாடுகளையும் மீறியபடி மலேசிய அதிகார சிந்தனையை ஏளனம் செய்தபடி ஹிண்ட்ராப் எழுச்சிப் பேரணி 25.11.2007 இல் கூடியது.

... இன்னும் பல அதிரடியான கேள்விகளுடன் அடுத்த மாதமும் தொடரும்

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768