முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 32
ஆகஸ்ட் 2011

  சுரண்டப்படும் மலேசிய எழுத்தாளர்கள்
ம. நவீன்
 
 
       
நேர்காணல்:

"இலக்கியவாதிகள் உண்மைக்குக் குரல் கொடுக்க வேண்டும்"

சமாட் சைட்



பத்தி:

யார் இந்த அம்பிகா சீனிவாசன்?

கே. பாலமுருகன்

சுரண்டப்படும் மலேசிய எழுத்தாளர்கள்

ம. நவீன்



கட்டுரை:

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி : ஆளுமைகளின் சேர்க்கை
லதா

நான் உதவ முடியாது!
அ. முத்துலிங்கம்

உணர்வுசார் நுண்ணறிவு (EQ) குறித்து நாம் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்?
சிவா பெரியண்ணன்



சிறுகதை:

கனவைக் கொல்வது அல்லது கனவுக்குள் சாவது
கே. பாலமுருகன்



கேள்வி பதில்:

ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்தி



தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...14
எம். ஜி. சுரேஷ்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


நிலத்தினும் பெரிதே
ரவிக்குமார்

மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...22

லதாமகன்

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

இந்த எதிர்வினையை எழுதும் பொழுது மேலும் மேலும் கீழ் நோக்கிச் செல்வது போன்றதொரு மனநிலையைத் தவிர்க்க இயலவில்லை. மரத்துப்போய்விட்ட மலேசியத் தமிழ் சமூகத்தை எழுத்தின் மூலமாகவும் உரையாடல்கள் மூலமாக மட்டுமே மீண்டும் மீண்டும் சுயநினைவுக்குக் கொண்டுவர முடியும் என்கிற படியால் சமகால இலக்கிய சூழல் மற்றும் அதை கீழ் நோக்கி இழுக்க முயலும் அரசியல் செயல்பாடுகள் இவற்றிற்கு மத்தியில் மிக நுணுக்கமாக நடக்கும் சுரண்டல்கள் குறித்து பேச விழைகிறேன். நேரடியான அறிவுப்பூர்வமான இலக்கியச் விவாதங்களுக்கு பதில் சொல்ல திரணியற்றவர்கள் இவ்வெதிர்வினையின் குரலை மாற்றி அமைக்கக் கூடும் எனும் கவனம் கூடியுள்ளது.

அண்மையில் (13.7.2011) மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், மிகவும் தந்திரமாக கண்ணதாசன் அறவாரியத்தையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு 'வைரமுத்துவின் திரைப்படப்பாடல்கள் 1000' எனும் நூலை மலேசியாவில் வெளியீடு செய்துள்ளது. இதற்கு முன்பும் அச்சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் வைரமுத்துவின் 'கள்ளிக்காட்டு இதிகாசம்' எனும் நாவலை வெளியீடு செய்தார். ஆனால் அதை அவர் சங்கத்தின் பெயரைப் பயன்படுத்தாமல் தனது செலவிலேயே செய்ததாகச் சொல்லியிருப்பதால் அது குறித்து இங்கு விவாதிக்கத் தேவையில்லை. ஆனால் இம்முறை ராஜேந்திரன் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தைப் பயன்படுத்தியே தனது வைரமுத்து நூலை வெளியீடு செய்துள்ளார்.

இது குறித்து மலேசியத் தமிழ்ச்சூழலில் உள்ள யாரும் வாய் திறந்ததாய் இல்லை. இத்தனை ஒரு மந்தமான இலக்கியச் சூழல் தமிழர் வாழும் வேறெந்த நாட்டிலாவது இருக்குமா என்றும் தெரியவில்லை? நிகழ்வில் என்ன நடந்தது... யார் காலில் யார் விழுந்தது... யார் மனம் நெகிழ்ந்தது... என்பது குறித்தெல்லாம் என்னிடம் கேள்விகள் இல்லை. பொதுவாகவே இலக்கியச் சூழலை இரண்டு வகையாகப் பார்க்கலாம். ஒன்று தீவிரப்போக்குக் கொண்டது. மற்றது ஜனரஞ்சகமானது. அவ்வகையில் மலிவான ரசனை கொண்டவர்களின் இலக்கியச் செயல்பாடுகள் குறித்து அதிர்ச்சி அடைய ஒன்றும் இல்லை. அது விவாதத்தின் திசையை மாற்றும். அதனால் எனது கேள்வி நேரடியானது.

கேள்வி 1 : மலேசியாவில் காலங்காலமாக எவ்வித பிரதிபலனும் எதிர்ப்பார்க்காமல் இலக்கியத்தோடு இயங்கும் மூத்தப் படைப்பாளிகள் உண்டு. மரபு இலக்கியம் தொடங்கி, வரலாறு, புனைக்கதை, நாடகம், கவிதை, நவீன இலக்கியம் என இலக்கியத்தில் பல்வேறு அம்சங்களையும் முன்னெடுக்கும் பல நூறு எழுத்தாளர்களில் எத்தனையோ பேர் இன்னமும் தங்களின் ஒரு நூலை வெளியிடவே திணறிக்கொண்டிருக்கும் நிலை உண்டு. இந்நிலையில் சினிமாவுக்குப் பாடல் எழுதி, அதில் நன்கு சம்பாதித்துச் செல்வச் செழிப்புடன் தமிழ்நாட்டில் வாழும் வைரமுத்துவுக்கு இந்நாட்டில் புத்தக வெளியீட்டு விழா நடத்த வேண்டிய அவசியம் என்ன?

கேள்வி 2 : இந்நிகழ்வுக்காக ராஜேந்திரன் சங்கத்தின் பெயரைப் பயன்படுத்தியுள்ளார். மலேசிய எழுத்தாளர் சங்கம் மலேசியத் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு நூல் வெளியிடவும் அதை தகுந்த முறையில் வாசகர்களிடம் சேர்க்கவும் ஏற்ற பாதையை வகுக்காமல், சினிமா பாட்டை இந்நாட்டில் விற்பனைச் செய்ய பாதை வகுக்க ஏன் மெனக்கெட வேண்டும்?

கேள்வி 3 : வைரமுத்து எங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார், மலேசிய இலக்கியத்தை அறிமுகப்படுத்த உதவினார் என்று தொடர்ந்து ராஜேந்திரன் பிதற்றிக்கொண்டிருப்பதால், இது வைரமுத்துவுக்கு செய்த நன்றிக்கடனா? அல்லது கொடுக்கல் வாங்கலா?

கேள்வி 4 : ஒரு நேர்காணலில் ராஜேந்திரன் இன்றைய இளைஞர்கள் ஆபாசமாக எழுதுவதாகக் குற்றம் சாட்டினார். அவர் முன்னின்று வெளியிட்டுள்ள வைரமுத்துவின் 1000 பாடல்களில் ஒரு பாடல் ஆபாசமாக இருந்தாலும் 'நான் அதை அறுத்துக்கொள்கிறேன்... இதை அறுத்துக்கொள்கிறேன்...' என அடிக்கடி ஆவேசப்படும் ராஜேந்திரன் இனியாவது எதையாவது அறுத்துக்கொள்வாரா?

கேள்வி 5 : இன்னமும் எத்தனை காலத்துக்குத் தமிழகப் படைப்பாளிகளின் நூல்களுக்கு இங்கு வெளியீடு செய்து சம்பாதித்துக்கொடுத்துக் கொண்டிருக்கிறப் போகிறோம்? இன்று எவ்வித அரசியல் சமூகத் தொடர்பும் அற்று எழுத்தை மட்டுமே மையப்படுத்தி இயங்கும் எழுத்தாளர்கள் வாசகர்களிடம் சேர எழுத்தாளர் சங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? மலேசியத் தமிழ் இலக்கியங்களை மொழிமாற்றவும் மலேசியர் முழுவதும் வாசிக்கவும் என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது?

கேள்வி 6: திரும்பத் திரும்ப வைரமுத்துவுக்கு இந்நாட்டினர் உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தை வாரி வழங்க வழிவகுப்பது ஏன்? ஒரு சினிமா பாடலாசிரியனுக்கு ஏன் இந்நாட்டு இலக்கிய சூழலில் மட்டும் இத்தனை முக்கியத்துவம்? இதை முன்னெடுப்பவர்களுக்கு இன்றைய உலக இலக்கிய போக்கின் அறிமுகம் உண்டா? அதன் பரிணாமம் தெரியுமா? குறைந்த பட்சம் தற்கால கவிதைக்கான வாசிப்பு உண்டா?

கேள்வி 7 : எழுத்தாளர் சங்கம் உறுப்பினர்களின் பணத்திலும் நன்கொடையாலும் இயங்குகிறது. அவ்வாறாயின் உறுப்பினர்களாக இருக்கும் மலேசிய தமிழ் எழுத்தாளர்களின் பணத்தில் தமிழ் நாட்டு சினிமா பாடல் புத்தகத்தை வெளியிட வேண்டியதன் அவசியந்தான் என்ன?

இந்தக் கேள்விகளுக்கான பதிலைச் சொல்ல திரணியற்றவர்கள் இவ்விவாதத்தை வெவ்வேறு வடிவங்களில் திசைமாற்ற முயல்வர். ஓரளவு அவர்களின் கேள்விகளை அனுமானிக்க முடிவதால் சில விளக்கங்களை முன்னவே கொடுத்துவிடுகிறேன்.

முதலில் ஓர் எழுத்தாளனுக்கு விருதைவிட, அவனது படைப்பு பரவலாக பலரிடமும் சென்று சேர்வதுதான் அவனுக்குரிய பெருமை. நிகழ்வில் இரண்டு பேருக்கு விருது கொடுத்து மலேசியர்கள் வாயை மூடிவிட்டதாக முடிவெடுத்துக்கொண்டு, வைரமுத்துவின் நூலை பல ஆயிரம் ரிங்கிட்டுக்கு விற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகப் படைப்பாளியோ அல்லது எந்த நாட்டிலிருந்து படைப்பாளிகள் இந்நாட்டுக்கு வருவதையோ கருத்துப் பரிமாற்றம் செய்வதையோ நான் ஆரோக்கியமாக நினைக்கிறேன். ஆனால் அறிவுப்பூர்வமான எவ்வித கருத்துப்பரிமாற்றமும் இல்லாமல் வெறும் மேலான உணர்ச்சியை சிலுசிலுக்க வைக்கும் மேடைப்பேச்சும் புத்தக வெளியீடும் பச்சையான இலக்கியச் சுரண்டல் அல்லவா?

இந்நிலையில் இந்த விவாவதத்தையே திசை மாற்றும் வகையில் சில புத்திஜீவிகள் 'வைரமுத்து மாபெரும் கவி' என்ற ஒரு கருத்தை முன்வைக்கலாம். நான் அதற்கு 'இல்லை' என்பேன். விவாதம் திசைமாறும்... காலம் காலமாக இத்தகைய திசைமாறும் விவாதங்களால்தான் சுரண்டல் பேர்வழிகள் தப்பித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நாடகம் எல்லாம் வேண்டாம். ஒரே கேள்வி. மலேசியாவில் எழுதி, எவ்வித அரசியல் செல்வாக்கும் இல்லாமல் நூல் வெளியிட முனையும் ஒவ்வொருவரின் சார்பாகவும் கேட்கிறேன்... "மலேசியாவில் காலங்காலமாக எவ்வித பிரதிபலனும் எதிர்ப்பார்க்காமல் இலக்கியத்தில் இயங்கும் மூத்தப் படைப்பாளிகள் உண்டு. சங்க இலக்கியம் தொடங்கி, வரலாறு , புனைக்கதை, நாடகம், கவிதை, நவீன இலக்கியம் என இலக்கியத்தில் பல்வேறு அம்சங்களையும் முன்னெடுக்கும் பல நூறு எழுத்தாளர்களில் எத்தனையோ பேர் இன்னமும் தங்களின் ஒரு நூலை வெளியிடவே திணறிக்கொண்டிருக்கும் நிலை உண்டு. இந்நிலையில் சினிமாவுக்குப் பாடல் எழுதி அதில் நன்கு சம்பாதித்து செல்வச் செழிப்புடன் தமிழ்நாட்டில் வாழும் வைரமுத்துவுக்கு இந்நாட்டில் புத்தக வெளியீட்டு விழா நடத்த வேண்டியதின் அவசியந்தான் என்ன?"

இதற்கு சுரண்டல் செய்பவர்களிடமிருந்து நிச்சயம் சால்ஜாப்புகள் வரலாம். ஆனாலும் யாரோ ஒரு சுய சிந்தனை கொண்ட இளைஞன் இந்தக் கேள்விகளைப் பற்றிக்கொண்டு சிந்திக்கத் தொடங்குவான் என்ற நம்பிக்கையால் மட்டுமே இதை எழுத வேண்டியுள்ளது.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2011.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768