முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 32
ஆகஸ்ட் 2011

  ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்தி
 
 
       
நேர்காணல்:

"இலக்கியவாதிகள் உண்மைக்குக் குரல் கொடுக்க வேண்டும்"

சமாட் சைட்



பத்தி:

யார் இந்த அம்பிகா சீனிவாசன்?

கே. பாலமுருகன்

சுரண்டப்படும் மலேசிய எழுத்தாளர்கள்

ம. நவீன்



கட்டுரை:

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி : ஆளுமைகளின் சேர்க்கை
லதா

நான் உதவ முடியாது!
அ. முத்துலிங்கம்

உணர்வுசார் நுண்ணறிவு (EQ) குறித்து நாம் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்?
சிவா பெரியண்ணன்



சிறுகதை:

கனவைக் கொல்வது அல்லது கனவுக்குள் சாவது
கே. பாலமுருகன்



கேள்வி பதில்:

ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்தி



தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...14
எம். ஜி. சுரேஷ்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


நிலத்தினும் பெரிதே
ரவிக்குமார்

மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...22

லதாமகன்

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

ஒவ்வொரு மாதமும் வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எழுத்தாளர் ஷோபாசக்தி பதில் அளிப்பார். கேள்விகளை ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதிக்குள் editor@vallinam.com.my என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவிடும்படி கேட்டுக்கொள்கிறோம்.


ஈஸ், துபாய்


கேள்வி : உங்களுக்கும் சாருவுக்கும் என்ன பிரச்சனை?

பதில் : ஏன் வந்து தீர்த்து வைக்கப்போகிறீர்களா? வேலையைப் பாருங்க பாஸ்.

கேள்வி : நீங்கள் ஒரு அகதியாக ஆனதை எப்படிப் பார்க்கிறீர்கள்? அந்த அடையாளத்தை விரும்புகிறீர்களா?

பதில் : இது கேள்வி! இந்தக் கேள்விக்கு ஏற்கனவே சில பத்திரிகைகளில் பதிலளித்துள்ளேன் எனினும் சற்று விரிவாக இப்போது சொல்லிவிடுகிறேன்.

1983ல் இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனரீதியான வன்முறைகளைத் தொடர்ந்து பெருமளவிலான தமிழ் இளைஞர்கள் அகதிகளாக மேற்கிற்குப் புலம்பெயரத் தொடங்கினார்கள். அப்போது நான் அவ்வாறு அகதிகளாகப் போகிறவர்களைப் பழித்துக் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தேன். "நாங்கள் தமிழீழத்திற்காக இரத்தம் சிந்திப் போராடிக்கொண்டிருக்கும் போது தப்பியோடும் கோழைகளே" என்பது மாதிரியிருக்கும் அந்தக் கவிதைகள். கவிஞர் செழியன் எழுதிய 'பெர்லினுக்கு ஒரு கடிதம்' என்ற கவிதை அப்போது மிகவும் புகழ் பெற்றிருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எவ். போராளியான செழியனின் கவிதை 'எம்மவர் குருதியின் சுவடுகள் / உறைந்துபோகும் முன்னரே /எங்கள் தேசத்து இளைஞர்களின் / சடலங்களின் மேல் நடந்து / பெர்லின் விமான நிலையத்தில் / வந்து இறங்கும் /அகதிகள் கூட்டத்தில் / என்னைத் தேடி நீ அலையாதே" என்பதாக முடியும். அந்தக் கவிதை அப்போது எனக்குக் கொள்கை விளக்கக் கையேடு. இப்போது நான் பாரிஸில், செழியன் கனடாவில்.

1986 பிற்பகுதியில் நான் புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறிய பின்னும் புலம்பெயருவது என்ற சிந்தனையே என்னிடமிருக்கவில்லை. அப்போது யாழ்ப்பாணம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததால் இராணுவத்தால் அபாயம் ஏதுமிருக்கவில்லை. ஆனால் புலிகள் இயக்கத்தால் ஒரு சில பிரச்சினைகள் எனக்கு இருந்தன. நான் என்னுடைய இயக்க வாழ்வின் கடைசி எட்டு மாதங்கள் ஞானம் அம்மானின் அணியில் இருந்தேன். ஞானம் அம்மான் இயக்கத்திலிருந்து வெளியேறிய சில நாட்களிலேயே நானும் வெளியேறினேன். ஞானம் அம்மானைக் கிட்டு பிடித்துக் கொண்டு போக முயன்ற போது ஞானம் அம்மான் சயனைட் அருந்தி மரணமானார். அப்போது ஞானம் அம்மானுக்கு 23 வயது. எனக்குப் பத்தொன்பது வயது. ஞானம் அம்மானின் இயற் பெயர் காண்டீபன். 'முறிந்த பனை' நூலில் அவரின் மரணம் குறித்த பதிவுகளுள்ளன. எனக்கும் புலிகளால் பிரச்சினையிருந்தது. அவர்களது சிறையில் கொஞ்ச நாட்கள் அடைபட்டுக் கிடந்தேன். புலிகளின் அப்போதைய ஆயுதப் பொறுப்பாளர் ஜொனியின் பரிந்துரையால் விடுதலையானேன். அப்போதும் என்ன இடர் நேர்ந்தாலும் நாட்டை விட்டு வெளியேறுவதில்லை என்ற முடிவோடுதான் இருந்தேன். எனது முன்னைநாள் தோழர்களால் தொந்தரவு இருப்பினும் அது கொலை அளவிற்கு போகாது என்பது எனது கணிப்பு.

சில மாதங்களிலேயே இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு வந்தது. புலிகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் யுத்தம் தொடங்கிச் சில நாட்களிலேயே புலிகள் காடுகளுக்குள் பின்வாங்கினார்கள். நாட்டுக்குள் அமைதிப்படை அட்டகாசம் செய்தது. நான் இயக்கத்திலிருந்து விலகியிருந்தது அமைதிப் படைக்கு செய்தியல்ல. நான் இயக்கத்தில் இருந்தேன் என்பதுதான் அவர்களுக்கு முக்கியம். இரண்டு அதிகாலைகளில் என் வீடு சுற்றிவளைக்கப்பட்டது. இரண்டு தடவைகளும் தப்பிவிட்டேன். இந்திய அமைதிப்படையுடன் தேடுதல் வேட்டையில் 'திறீ ஸ்டார்' என அழைக்கப்பட்ட தமிழ்ப் போராளிக் குழுக்களும் இணைந்துவிட்டார்கள். இந்தியனை ஏமாற்றினாலும் நம்முடைய பொடியளிடம் தப்பிக்க முடியாது என்று நான் அஞ்சினேன். புலம் பெயர்ந்து அகதியாகச் செல்லும் முடிவை எடுத்தேன். என் அச்சம் துயரமான முறையில் நிரூபணமானது. நான் எனது கிராமத்திலிருந்து புறப்பட்டு கொழும்புக்கு வந்து சேர்ந்த சில நாட்களில் எனது அயல்வீட்டவனும் என்னுடன் புலிகள் இயக்கத்தில் இருந்தவனும் எனது உற்ற நண்பனுமான கொடி என்ற ரவிக்குமார் இந்திய அமைதிப்படையோடு இணைந்து செயற்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தால் உயிருடன் வாகனத்தில் கட்டியிழுக்கப்பட்டு கொல்லப்பட்டான் என்ற சேதி என்னை வந்தடைந்தது. கவிஞர் செழியன் புலிகளால் நாட்டை விட்டுத் துரத்தப்பட்டார். நான் இந்திய அமைதிகாக்கும் படையால் துரத்தப்பட்டேன்.

அகதி அடையாளத்தை விரும்புகிறீர்களா எனக் கேட்டீர்கள். வேறு எந்த வழியும் அப்போது என் முன்னால் இருக்கவில்லை, இப்போதுமில்லை.


முத்துகிருஷ்ணன் தனூஷ்கோடி


கேள்வி : திரு ஷோபா சக்தி அவர்களே, இன்னும் எவ்வளவு காலத்துக்கு விடுதலைப்புலிகளை பற்றியே குற்றம் சாற்றிக்கொண்டிருப்பது? இந்த நேரத்தில் பழைய கதைகள் தேவையா? ராஜபக்ஷேவை பற்றி எப்போது அதிகமாக பேச போகிறீர்கள்.

பதில் : அன்பான முத்துகிருஷ்ணன், விடுதலைப் புலிகளின் குற்றத்தின் நிழல் நமது சமூகத்திலிருந்து முற்றாக விலகும்வரை அதைப் பேசித்தான் ஆகவேண்டியிருக்கிறது. முன்பு புலிகளை விமர்சித்தபோது போராட்ட காலத்தில் விமர்சிக்கக் கூடாது என்றார்கள். இப்போது விமர்சித்தால் புலிகள் இல்லாத போது பழைய கதைகள் பேசலாமா என்கிறீர்கள். அப்போது எப்போதுதான் புலிகளைப் பற்றிப் பேச அனுமதிப்பீர்கள்? புலிகள் என்பது பிரபாகரனோ அல்லது ஓர் இராணுவ அணியோ அல்ல. அது சனநாயக மறுப்பையும் ஆயுதக் கலாசாரத்தையும் அதிதீவிர வலதுசாரி அரசியலையும் முப்பது வருடங்களாக ஈழச் சமூகத்தில் கட்டமைத்து வைத்திருந்த ஒரு பாஸிச அரசியல் போக்கு. அந்தப் போக்கு நமது சமூகத்தை ஆழ ஊடுருவிச் சிதைத்துள்ளது. பிரபாகரனின் மறைவுடனோ புலிகளின் இன்மையுடனோ இந்த அரசியல் போக்கு மறைந்துவிடவில்லை. அந்தப் போக்கு குறிப்பாகப் புலம் பெயர் தேசங்களில் அவிழ்த்துப்போட்டு ஆடுகிறது. அந்தப் பாஸிசக் கலாசாரத்தின் சவப்பெட்டியில் கடைசி ஆணியை அறையும்வரை நாம் அது குறித்துப் பேசத்தான் வேண்டியிருக்கிறது. எனது பங்கிற்கு நான் ஒரு ஆணியை அளிக்க விரும்புகிறேன்.

'ராஜபக்சவைப் பற்றி எப்போது அதிகமாகப் பேசப் போகிறீர்கள்?' எனக் கேட்டிருக்கிறீர்கள். அன்பான தோழா! இலங்கை அரசின் இனவாதத்தையும் மனித உரிமைகள் மீறல்களையும் குறித்து இலக்கியத்தில் என்னைவிட அதிகம் எழுதிய இன்னொருவரைக் காட்டிவிடுங்கள் பார்க்கலாம். நாவல்களாகவும் சிறுகதைகளாகவும் உரைச்சித்திரங்களாகவும் நாடகமாகவும் திரைப்படமாகவும் நான் கடந்த பதினைந்து வருடங்களாக அவற்றை விடாமல் எழுதிவருகிறேன். எனக்கு அடுத்ததாக அதிகம் எழுதியவரை நீங்கள் காட்டினாலும் அவர் நான் எழுதியவற்றில் பாதியளவுதான் எழுதியிருப்பார் அல்லவா?

இலங்கை அரசின் பேரினவாதம் குறித்து பிறமொழி ஊடகங்களிலும் என்னளவிற்கு பேசிய இலக்கிய எழுத்தாளர் எவரும் இல்லை என்பதும் உண்மையல்லவா. நேரமிருந்தால் எனது வலைப்பக்கத்தில் 'நேர்காணல்கள்' பகுதிக்குச் சென்று படித்துப்பாருங்கள். அனைத்தும் அங்கே தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. சிங்கள இதழியலாளர்களால் வெளியிடப்படும் 'லக்பீம' பத்திரிகைக்கு நான் வழங்கிய நேர்காணலின் தலைப்பு: Can Sinhalese live in peace when minorities suffer?

இலங்கை அரசு குறித்தும் ராஜபக்ச குறித்தும் நான் சொல்பவற்றைவிட நான் ஒரு வார்த்தை புலிகள் குறித்துப் பேசினால் அதுதான் புலியாதரவாளர்களை எரிச்சல்படுத்துகிறது. என்னுடைய பிரபலமான "நான் புலிகளை நூறு சதவீதம் எதிர்க்கிறேன், இலங்கை அரசை இருநூறு சதவீதம் எதிர்க்கிறேன்" என்ற பிரகடனம் இணையங்களில் வாழைப்பழ காமெடி ரேஞ்சுக்குப் படாதபாடு படுகிறது. குற்றம் என்னிடமில்லைத் தோழா. நீ இலங்கை அரசை விமர்சிக்கிறாயோ இல்லையோ புலிகளைப் பற்றிப் பேசாதே என்ற மன அவசம் தான் இவ்வாறு சாரமற்ற கேள்விகளை உங்களைக் கேட்க வைக்கிறது.

சென்ற மாதம் இலங்கை அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் நான் நிகழ்த்திய உரை கீழேயுள்ள தொடுப்பிலுள்ளது. பேஸ்புக்கிலும் டிவிட்டிரிலும் பிரச்சினையைப் பேசுவதைவிட அதைச் சம்மந்தப்பட்டவர்கள் முன்னிலையில் பேசுவது முக்கியமானதல்லவா? நிதானமாக இந்த உரையைப் படியுங்கள். ஏதாவது கேள்வியிருந்தால் வல்லினத்திற்கு அனுப்பிவையுங்கள். அடுத்த இதழில் பதிலளிக்கிறேன். எனது உரை: http://www.shobasakthi.com/shobasakthi/?p=881


வேலாயுதம் (பாஸ்கி), தமிழ்நாடு


கேள்வி : சகோதரரே, நான் உங்கள் வாசகன். அதாவது சிறுகதைக்கு. உங்கள் 'ம்' நாவலை வாசித்து உங்களை வாசிப்பது வீண் என்று நினைத்தேன். எவ்வளவு கொடூரமான மனம் உங்களுக்கு. பெண்ணியம் பேசும் நீங்கள் உங்கள் நாவலில் ஒரு சிறுமி தன் தகப்பனால் கற்பிணியாக்கப்படுவதை நியாயப்படுத்துகிறீர்கள். இதில் உங்கள் அரசியல் என்ன?

பதில் : வணக்கம் சகோதரா, நான் த. ஜெயகாந்தனின் இரண்டு பழக்கங்களைக் கடுமையாகப் பின்பற்றி வந்தேன். தன்னுடைய புனைகதைகள் குறித்து வரும் விமர்சனங்களிற்கு ஆசான் பதிலளிப்பதில்லை. "என்னுடைய கதை சொல்லாத எதை நான் கதைக்கு வெளியில் சொல்லிவிட முடியும்" என்பார் ஆசான். நானும் ஆசானைப் பின்பற்றி வருகிறேன். ஒரேயொருமுறை மட்டும் யமுனா ராஜேந்திரன் கொடுத்த ஆய்க்கினையால் 'ம்' நாவல் குறித்துச் சிலவற்றை அவருக்குச் சொல்ல நேரிட்டது. யமுனாவுடைய விமர்சனமும் உங்களது கேள்வியும் தற்செயலாக ஒரேமாதிரியாக அமைந்துவிட்டதால் அவருக்குச் சொன்ன பதிலையே உங்களுக்குமான பதிலாக இங்கே பதிவு செய்கிறேன்.

"ஈழத்தின் வன்முறையினால் மனப்பிறழ்வுற்ற ஒரு நபர் தனது பெற்ற குழந்தையை கர்ப்பமாக்கியதனை, அப்பெண் குழந்தையின் கண்களில் காதல் தெரிவதை எழுதுகின்ற ஷோவின் 'ம்' நாவலது சித்திரிப்பும் குழந்தைகள் மீதான காதல் எனும் அளவில் சமூக விரோதமானதுதான். அதைச் சித்தரிக்கும் ஷோபாசக்தியும் சமூகவிரோதிதான்" எனத் தீர்ப்பிடுகிறார் யமுனா.

யமுனாவோடு இலக்கியம் பேசிப் புண்ணியமில்லை. யமுனாவுக்குப் புரிந்த மொழியிலேயே இதை விளக்க முயற்சிக்கிறேன். பிரதாப் போத்தனும் ஷோபாவும் நடித்த 'மூடுபனி' என்றொரு படம் பார்த்திருப்பீர்கள். அத்திரைப்படத்தின் நாயகன், பாலியல் தொழிலாளர்களைத் தொடர்ச்சியாகக் கொலை செய்வான். அப்படிக் கொலை செய்வதை அவன் நியாயம் என்றும் நம்புவான். அவன் கொலைகாரனாவதற்குரிய புறச் சூழல்களையும் அவனின் ஆழ்மனச் சிக்கல்களையும் இயக்குநர் திரைப்படத்தின் அடிநாதமாகச் சித்திரித்தும் காட்டியிருப்பார். அதற்காகப் படத்தை உருவாக்கிய பாலு மகேந்திரா பாலியல் தொழிலாளர்களைக் கொலை செய்வதை நியாயப்படுத்துகிறார் என்றோ பாலு மகேந்திரா ஒரு சமூகவிரோதியென்றோ எந்த முட்டாளாவது சொல்வானா.

நல்லவன் X கெட்டவன், நன்மை X தீமை, தியாகம் X துரோகம் போன்ற இருமை எதிர்வுகளைக் கட்டமைத்துத் தட்டையாக இலக்கியப் பிரதிகளை உருவாக்கும் இலக்கியமுறைமை விக்டர் ஹியுகோ, பால்சாக் காலத்தைச் சேர்ந்தவை. இன்றைய இலக்கியம் பல்வேறு அடுக்குகளையும் சிடுக்குகளையும் கலைத்துப்போட்டு இந்த இருமை எதிர்வுகளைக் கடந்து வாசகர்களோடு பேச முயல்வது. எம்.ஜி. ஆரின் ரசிகர்கள் திரைப்பட அரங்கினுள் நம்பியாரைத் தும்பு பறக்கத் திட்டுவதுண்டு. அந்த இரசிக மனோநிலையில் நவீன இலக்கியப் பிரதிகளை அணுகினால் இப்படியான பாரதூரமான விமர்சன விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. (எதிர்ப்பதும் எமது மரபு/ சத்தியக்கடதாசி.com/ 2008)

பி.கு: ஆசானிடமிருந்து பின்பற்றிய இரண்டாவது பழக்கத்தை நிறுத்திப் பத்து வருடங்களாகின்றன. 


கிருஷ்ணன், சென்னை


கேள்வி : ஷோபா, கடந்த பத்து ஆண்டுகளாக அமெரிக்காவில் இருந்த நான் இவ்வருடம் தமிழகம் வந்தேன். அதுவரை எனக்கு இணைய வாசிப்பு மட்டும்தான். உங்களின் அகப்பக்கம் பார்ப்பதுண்டு. இங்குத் தமிழக நண்பர்கள் தமிழில் முக்கியமான எழுத்தாளர்களாக ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா என சொல்கிறார். ஒவ்வொருவரையும் வாசித்தேன். எனக்கு பிடிக்கவில்லை. உங்கள் அபிப்பிராயம் என்ன?

பதில் : அன்பான கிருஷ்ணன், சாரு நிவேதிதா என்கிற புதுமையான கதைசொல்லி இல்லாமற்போய் 10 வருடங்களாகின்றன. வெறும் இலக்கிய வம்புகளையும் பாலியல் அறியாமைகளையும் அவர் இப்போது 'கோணல்' பக்கங்களாக எழுதி அதையே தொகுத்து நாவல் என்கிறார். அவரது கடைசி நாவலான 'தேகம்' அதனது பின்னட்டையில் சொல்லப்படுவதுபோல வாதைகளின் நாவலல்ல. அந்த நாவலே வாதைதான். தமிழ் இலக்கிய உலகம் சரியான எதிர்வினையை தொடர்ந்து அவருக்கு ஆற்றிவருக்கிறது... மௌனம்! சாரு இந்த இருள்வெளியிலிருந்து மீளவேண்டும். தல மலைக்கு மாலை போட்டிருக்குதாம். அய்யப்பனாவது நல்ல புத்தியை வழங்கட்டும். சாரு முதலில் அவரைச் சூழவுள்ள அரைகுறை அல்லக்கைககளை விரட்டிவிட்டாலே பாதி தேறிவிடுவார்.

என்னைப் பொறுத்தவரையில் ஜெயமோகன் எழுதும் இலக்கியம் குறித்த கட்டுரைகள் அவரது புனைகதைகளைவிட முக்கியமானவை என்பேன். அவரளவிற்கு நுணுகி ஆராய்ந்து இலக்கியத்தின் அழகியல் கூறுகளையும் இலக்கிய நுட்பங்களையும் இலக்கியங்களின் செல்நெறியையும் எழுதிய இன்னொரு ஆளுமை தமிழில் கிடையாது. மனிதர்களை அவதானிப்பதில் அவர் 'எந்திரன்' போலயிருக்கிறார். கிடைக்கும் ஓர் இடைவெளியில் வித்தியாசம் வித்தியாசமான மனிதர்கள் குறித்துப் பலவற்றைக் கிரகித்துவிடுகிறார். "பொதுவாக ஊர்ச் சண்டியர்களிடம் ஒரு சிறிய உடல் ஊனம் இருக்கும்" என்று ஒருமுறை எழுதியிருப்பார்... அது கல்வெட்டு. இந்த நுட்பமான பார்வைதான் இலக்கிய அழகியலின் அடிப்படை.

எஸ்.ராவின் எழுத்துகளைப் படிக்கும்போது ஆஸ்பத்திரியில் யாரோ நோயாளியைப் பார்க்கச் சென்றது போலவே எனக்கொரு பீலிங். என்னுடைய வாசிப்பு அலைவரிசையில் எஸ்.ரா பொருந்துவதாகயில்லை. ஆனால் இன்று மிக அதிக இளைய வாசகர்களைப் பெற்றிருப்பவர் எஸ்.ரா தான். 'பாரிஸ் அறிவாலயம்' புத்தகக் கடையில் ஒரு நாளைக்குப் பத்துப் பேராவது எஸ்.ராவின் நூல்களைத் தேடி வருகிறார்கள். ஒருமுறை இயக்குனர் சசி எனக்கு எஸ்.ராவின் 'கதாவிலாசம்' நூலைப் பரிசளித்துவிட்டு அந்தப் புத்தகம் குறித்து இரண்டு மணிநேரங்கள் பரவசத்தோடு பேசிக்கொண்டிருந்தார்.

எல்லோருக்கும் பிடித்தமாதிரி எவராலும் எழுதிவிட முடியாதல்லவா. டால்ஸ்டாயின் எழுத்துகளைப் பிடிக்காதவர்களைக் கூட நான் சந்தித்திருக்கிறேன். பிடிக்கவில்லையானால் வேறு எழுத்தாளர்களைத் தேடிப் படியுங்கள். புனைகதையாளர்களில் என்னுடைய வாசிப்பு அடிப்படையிலான எளிய பரிந்துரை: கு.அழகிரிசாமி, இலங்கையர்கோன், ப.சிங்காரம், பூமணி, கே.டானியல், பிரேம் - ரமேஷ், எஸ்.பொ, சு.வெங்கடேசன் (காவல் கோட்டம்), ஜெயகாந்தன், ஆதவன் தீட்சண்யா, தோப்பில் முகமது மீரான், ச. தமிழ்ச்செல்வன், நாஞ்சில் நாடன், குமார செல்வா.
.
இவர்களும் பிடிக்கவில்லையெனில் சொல்லுங்கள் இன்னொரு பட்டியல் தருகிறேன். தமிழ் இலக்கியம் பாலையல்ல, அது நெய்தல். முத்துகள், வலம்புரிச் சங்குகள், தங்க மீன்கள், சுறாக்கள், திமிங்கலங்கள் இவ்விடம் கிடைக்கும்.


நோர் ரஷிடா, மலேசியா


கேள்வி : உலகில் எத்தனை நாடுகளுக்குப் பயணித்துள்ளீர்கள் ஷோபா, உங்களை கவர்ந்த நாடு எது? ஏன்? மலேசியா வந்துள்ளீர்களா? ஷோபா, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கூற முடியுமா? உறவுகள்... விருப்பங்கள்...

பதில் : ஸ்கண்டிநேவியா தவிர்த்து முழு மேற்கு அய்ரோப்பிய நாடுகளுக்கும் கிழக்கு அய்ரோப்பாவில் சேர்பியா, செக் ஆகிய நாடுகளிற்கும் கியூபா, கம்போடியா, லாவோஸ், சிங்கப்பூர், ஹொங்கொங், ஆகிய நாடுகளிற்கும் பயணித்திருக்கிறேன். தாய்லாந்தில் மூன்று வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன். மலேசியாவிற்கு மூன்று தடவைகள் வந்துள்ளேன். கடைசித் தடவை 'வல்லினம்' நவீனின் அழைப்பில் வந்தேன். அந்தப் பயணத்தில் நானும் சிங்கை இளங்கோவனும் மஹாத்மனும் செய்த நடுநிசி அமர்க்களத்தில் ஜலான் மஸ்ஜிட் இந்தியா ஏரியாவே சும்மா அதிர்ந்துதில்ல!

ஒருமுறை விழுப்புரத்தில் நடைபெற்ற திருநங்கைகள் மாநாடு ஒன்றிற்கு சென்னையிலிருந்து நானும் நண்பர்களும் ரயிலில் பயணப்பட்டோம். மதியவேளை, கடுமையான வெப்பம். ரயில் பெட்டிக்குள் காலோடு கால் சேர்த்து வைக்க முடியாதளவிற்கு கடும் நெரிசல். நரகத்தை நோக்கிய பயணம்போல அந்தப் பயணம் இருந்தது. ஓடும் ரயிலுக்குள் ஒரு குழந்தை வீறிட்டு அழத் தொடங்கியது. பயணிகளில் ஒருவர் குழந்தையின் தாயாரிடம் ஆதுரத்துடன் விசாரிக்க, இன்னொருவர் குழந்தைக்கு விசிறிவிட, இன்னொரு பயணி தனது பையிலிருந்து வேட்டியை எடுத்து ரயிலுக்குள்ளேயே குழந்தைக்கு ஒரு தூளி கட்ட அந்த ரயில் பெட்டியே அந்தக் குழந்தையைத் தாலாட்டியது. இத்தகையவொரு காட்சியை வேறெந்த நிலத்தில் காண முடியும்! விழுப்புரத்திற்கு ரயில் வந்தபோது மழை கொட்டிக்கொண்டிருந்தது. தமிழகம் அளவிற்கு என்னைக் கவர்ந்த இன்னொரு நாடு இல்லை. தமிழக மக்களின் சகிப்புத்தன்மையையும் விட்டுக் கொடுத்துப் போகும் இயல்பையும் பார்த்து நான் வியந்து நிற்பது தெளிவதற்குள் எனக்கு விசா முடிந்துவிடுகிறது. ஏதோவொருவகையில் காந்தியாரையும் பெரியாரையும் தமிழகத்தின் கூட்டு நனவிலி மனது தனக்குள் பொதிந்து வைத்திருக்கிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

தனிப்பட்ட வாழ்க்கை என்று குறிப்பாக ஏதுமில்லை. 'சித்தன் போக்கு சிவன் போக்கு' என்பார்களே அதுபோல வாழ்க்கை கழிகிறது. தனிப்பட்ட கவலைகள், ஏமாற்றங்கள் என்றெல்லாம் ஏதுமில்லை. எப்போதும் மகிழ்ச்சியைக் கற்பனை செய்து உள்ளத்தில் நிறுத்தி உற்சாகமான மனநிலையிலேயே என்னை வைத்திருப்பேன். சலிப்பு, விரக்தி என்றெல்லாம் நூல்களில் படித்துள்ளேனே தவிர ஒருபோதும் உணர்ந்ததில்லை. எனது எழுத்தாற்றல் என்னைக் கைவிடாதவரை என்னைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நல்லாசிரியர்களையும், உலகம் முழுவதும் அருமையான நண்பர்களையும், எளிதில் வெற்றிகொள்ளக் கூடிய நோஞ்சானான எதிரிகளையும் பெற்றிருக்கிறேன். வேறென்ன வேண்டும்!

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2011.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768