|
தமிழ்
செம்மொழியானது பற்றியும் அதனைக் கொண்டாடுவது தமிழனுக்குப் பெருமை தரும்
என்பதிலும் உண்மைத் தமிழன் எவனுக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.
ஆனால் கொண்டாடப்படுகின்ற சூழல், காலகட்டம் தான் ஏற்புடையதாய் இல்லை என்பதை
அந்த உண்மைத் தமிழன் சிந்தித்து உணர்ந்து ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
2009-மே திங்களில் மட்டும் பல லட்சம் தமிழர்கள் கொன்றுக்
குவிக்கப்பட்டிருக்கின்றனர். மற்றும் பல்லாயிரம் - பல்லாயிரம் மக்கள்
முகாம்கள் எனப்படும் சிங்களத் தீவாந்திரச் சிறைக்குள் தாகத்துக்குத்
தண்ணீர் கூட இன்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர். பச்சிளங்குழந்தைகள்
பாலுக்கு ஏங்கி மடிய, போரில் காயம் உற்றவர்களும் உறுப்புகளை இழந்தவர்களும்
சரியான மருத்துவ வசதி இன்றி அன்றாடம் மடிந்த வண்ணம் இருக்கின்றனர்.
இளைஞர்கள் கூட்டம் கூட்டமாய் கடத்தப்பட்டு காணாமல் போகின்றனர். இளம்
பெண்கள் சிங்களப் படையினருக்கு இலவசப் பாலியல் விருந்துக்காக இழுத்துச்
செல்லப்படுகின்றனர். எப்படியோ இங்கே இருந்து தப்பிச் செல்ல முயல்பவர்கள்
கொஞ்சமும் ஈவு இரக்கம் இன்றி சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.
இவை அனைத்துமே பொய்யான கட்டுக்கதை என்று முரசறைந்து முழங்கிக்
கொண்டிருக்கிறது சிங்கள அரசு. சத்திய சோதனை எழுதிய காந்தி நாடு, அதுதான்
உண்மை என்று ஒத்தூதுகின்றது. தமிழ்நாடு திமுக கூட்டணி அரசு சிங்கள அரசுக்கு
மாலை அணிவித்து வாழ்த்துரைக்கின்றது.
சரி இந்நாடுகளின் கூற்றை ஏற்றுக் கொள்வோம். ஆனால், பின்வரும் கேள்விகளுக்கு
இந்நாடுகள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.
முகாம்களுக்குள் நடக்கின்ற உண்மை நிலையைக் கண்டறிந்து, வெளியில் சொல்வதற்கு
நடுநிலையாளர் எவரையும் அனுமதிக்கவே இல்லை சிங்கள அரசு. இது உலகம் அறிந்த
உண்மை.
மாறாக, ஏற்கெனவே அங்கு செயல்பட்டுக் கொண்டு இருந்த செஞ்சிலுவைச் சங்கம்,
மனிதநேயக்குழு, ஊடக நிருபர்கள் ஆகிய அனைவரையும் கட்டாயப்படுத்தி வெளியேற்றி
இருக்கின்றது அந்த அரசு.
சிங்கள அரசின் எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கூட அனுமதிப்பது இல்லை அது.
தப்பித்தவறி எப்படியோ உண்மைச் செய்தியை வெளியிட்ட சிங்கள ஊடக
உறுப்பினர்களைக் கூட சிங்கள அரசு உயிருடன் விட்டுவைக்கவில்லை.
முள்வேலி முகாமுக்குள் அடைக்கப்பட்டிருக்கின்ற நம் உடன்பிறப்புக்களான
தமிழ்மக்கள் நீதியாக - நேர்மையாக - மனித நேயத்துடன் நடத்தப்படுகின்றனர்
என்றால், சிங்கள அரசு அங்கே இரும்புத்திரை போட்டப்பட்டிருப்பதை ஏன் என்ற
கேள்விக்குச் சிங்கள அரசு மட்டும் அல்ல அதற்குத் துணைப் போகின்ற ஏனைய
நாடுகளும் இதற்குப் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.
மடியில் கனமிருந்தால் வழியில் பயம் உண்டு என்பதும் குற்றமுள்ள நெஞ்சு குறு
குறுக்கும் என்பதும் உண்மையை மறைக்கும் பொய்யர்களுக்காகச் சொல்லபட்டவைதான்!
அண்மையில் சிங்கள அரசின் மரணப் பிடிக்குள் இருந்து தப்பி, பஞ்சை பனாதியாய்
ஐ.நா.சபையின் அகதிகள் முத்திரையோடு ஆஸ்திரேலியா நோக்கி, சிறு கப்பலில்
பயணித்துக் கொண்டிருந்தனர் பல நூறு மக்கள்.
அக்கப்பலைப் பிடித்து, நடுக்கடலில் சிறை வைத்து ஏதோ சோமலினா
கடற்கொள்ளையர்களைப் பிடித்து விட்டது போன்று நெஞ்சை நிமிர்த்தி பெருமை
பேசிக் கொண்டிருக்கின்றது இந்தோனேசிய அரசு.
தமிழன் ஆளுகின்ற - ஆறு கோடி தமிழன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற - தமிழ்
நாட்டிலும் ஈழத்தமிழர்களான நம் உடன்பிறப்புகள் ‘முகாம்’ என்ற சிறைக்குள்
தானே அடைபட்டுக் கிடக்கின்றனர். அந்த உடன்பிறப்புகளைச் சந்தித்து நலம்
விசாரிக்கச் சென்ற தமிழினத்தின் உண்மைத் தலைவர் ஐயா பழ. நெடுமாறன்
அவர்களுக்கு, தமிழக அரசே தடை விதித்திருப்பதையும் இந்தத் தமிழ் உலகம்
வேடிக்கை பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றது.
16-11-2009 மக்கள் தொலைக்காட்சியில் காலை 8 மணிச் செய்தியில் வந்த செய்தி
இது:
“தமிழக மீனவர்கள் இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததால், 9 லட்சம்
ரூபாய் அபராதம், மூன்று மாதம் சிறை வாசம்.அதே வேளையில் பிறநாட்டு,
மீனவர்கள் இந்தியக் கடலுக்குள் மீன்பிடிக்க எந்தத் தடையும் இல்லை.
“ஓர் ஆண்டில் வரையறுக்கப்பட்ட அளவுதான் மீன் பிடித்தல் வேண்டும்.
குறிப்பிட்ட வகை மீன்களை மட்டுமே பிடிக்க வேண்டும். பிடிக்கப்பட்ட
மீன்களின் மதிப்பு விலை பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் போதல் கூடாது. முப்பது
அடி நீளம் உள்ள படகுகள் மட்டுமே மீன் பிடிக்க அனுமதிக்கப்படும்.”
இந்த அறிவிப்பைப் பார்த்த பிறகும் நடுவன் அரசு, தமிழக மீனவர்களைக்
காப்பாற்றும் என்று அம்மீனவர்கள் நம்பினால், அவர்கள் இருக்க வேண்டிய இடம்
மனநோய் மருத்துவமனைதான்.
இத்தகைய மீளாத் துன்பத்தில் சிக்குண்டு தவித்துக் கொண்டிருக்கும் நம் உடன்
பிறப்புகளுக்கு வெளியில் இருக்கின்ற தமிழ் மக்கள், உடுக்கை இழந்தவன் கை
போன்று விரைந்து சென்று உதவுவது தலையாய கடமை என்பதை உண்மைத் தமிழன் எவனுமே
மறுக்க மாட்டான்.
உடன் பிறப்பு - உடன்பிறப்பு என்று சதா ஓலை எழுதும் தமிழக முதல்வர்
மாண்புமிகு கருணாநிதி அவர்கள், இந்த உடன்பிறப்புகளுக்காக ஓராண்டு துக்கம்
கடைப்பிடித்து தமிழினத்தின் இனமான உணர்வை இந்த உலகத்துக்குப் பறைசாற்றி
இருக்கலாமே! ஏன் செய்யவில்லை?
மாறாக, உதிர்ந்த சருகுகளைப்போன்று அந்த அப்பாவி உடன்பிறப்புகளைப்
புறந்தள்ளிவிட்டு பாட்டனுக்குப் பதினாறாம் நாள் துக்கத்தில் பாட்டிக்குப்
பிறந்த நாள் விழா கொண்டாடுவது போன்று, “தமிழ் செம்மொழி” விழாவைக்
கோலாகலமாய் கோவை மாநகரில் கொண்டாடுவதில் முனைப்பாய் நிற்கின்றார், அந்த
முதுபெரும் கலைஞர். ஆக, தமிழகத்திலும் ஒரு நீரோ மன்னர் இருக்கத்தான்
செய்கிறார்.
ஒரு மொழி, செம்மொழி என்ற பெருமையைப் பெறுவதற்கும் பல தகுதிகள் வேண்டும்.
அத்தகுதிகளில் ஒன்றுதான் அம்மொழிக்கு பிறமொழிச் சொற்கள் கலப்பில்லாமல்
இயங்கக் கூடிய ஆற்றல் வேண்டும் என்பது. அந்த ஆற்றல் தமிழ் மொழிக்கு உண்டு
என்பது தமிழறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும்.
ஆனால், இன்றையத் தமிழ்கூறும் நல்லுலகில் தனித்தமிழ் ஆற்றலை அழித்து,
செம்மொழி என்ற பெருமையை சிதைப்பதற்காக எப்படி எப்படி எல்லாம் சொந்தத்
தமிழனாலேயே கேடுகள் செய்யப்படுகின்றன என்பதையும் பார்த்துக் கொண்டுதான்
இருக்கிறோம்.
தமிழக அரசு இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு ஆவன செய்ய வேண்டும்.
அப்பொழுதுதான் நடக்கவிருப்பது தமிழ் செம்மொழி மாநாடு இல்லையேல் அது
மாண்புமிகு தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் விளம்பர மாநாடுதான்!
|
|