இதழ் 13
ஜனவரி 2010
  அவஸ்தை
இராம. கண்ணபிரான்
 
     
  நேர்காண‌ல்:

"அர‌சாங்க‌த்திற்குத் தேவை ந‌ம்மை நாமே குறை சொல்லிக் கொள்ளும் ஏமாளித்த‌ன‌ம்"

பி. உத‌ய‌குமார்

சிறப்புப் பகுதி:

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் - ஒரு பார்வை


பத்தி:

தமிழகத்திலும் ஒரு நீரோ மன்னன்

அ. ரெங்கசாமி

அவஸ்தை
இராம. கண்ணபிரான்


கட்டுரை:

பிலிப் கலாஸ் : இசையின் தீராத‌ ப‌க்க‌ங்க‌ள்
அகிலன்

காற்று வேட்டை
கெ.எல்.

வரமா? சாபமா?
நெடுவை தவத்திருமணி

மொழி ஆணால் உருவாக்கப்பட்டது...
வீ.அ. மணிமொழி

இலங்கைத் தமிழர்களின் ஆங்கில நூல்கள்: நூல்தேட்டம் ஆங்கில நூல் தொகுப்புக்கானதொரு அறிமுகம்
என். செல்வராஜா

சிறுகதை:

குரங்கு
கிரகம்


பிரமைகள்
ஸ்ரீரஞ்சனி

தொடர்:


ப‌ல வேடிக்கை ம‌னிதரைப் போல‌ ...5
ம‌. ந‌வீன்

எனது நங்கூரங்கள் ...6
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...1
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன்


இரா. சரவணதீர்த்தா


மன்னார் அமுதன்

ஏ.தேவராஜன்

பதிவு:

மலேசியத் தமிழ்க் கவிதாயினிகளின் முதலாவது மலையருவிக் கவியரங்கம்
தினேசுவரி

புத்தகப்பார்வை:

விட்டு விடுதலை காண்
நிந்தவுர் ஷிப்லி

லும்ப‌ன் ப‌க்க‌ம்:


ஒரு கோமாளியின் வ‌ருகை...
லும்ப‌ன்

அறிவிப்பு:


அஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி

எதிர்வினை:


கடிதம்
     
     
 

தமிழில் கடந்த பத்து வருடங்களாக, ‘ஷார்ட் ஃபிலிம்ஸ்’ எனப்படும் குறும்படங்களின் தயாரிப்பும், திரையிடலும் கணிசமாக நடைபெற்று வருகின்றன. பத்து முதல் முப்பது நிமிஷங்கள் வரை நீடிக்கும் இவ்வகைப் படங்கள், நவீனக் காட்சி ஊடகத்தில் முக்கிய வடிவங்களாக உருப்பெற்று, பார்ப்பவர்களின் உள்ளங்களில் சிந்திப்புச் சலனங்களை பெருமளவில் ஏற்படுத்தி வருகின்றன.

‘தனி’ எனும் குறும்படம், ஒரு நகர்ப்புற ‘அபார்ட்மெண்ட்’ அறையில் தனிமையில் உழலும் ஓர் இளைஞனின் அவஸ்தையைப் பத்து நிமிடங்களுக்குக் காட்சிப்படுத்துகிறது. திரைக்கதையும், இயக்கமும் கவிஞர் அய்யப்ப மாதவனுக்குச் சொந்தம். படப்பிடிப்பைச் செழியனும், படத்தொகுப்பை மாமல்லன் கார்த்தியும், சப்த அமைப்பை வாசுதேவனும் பொறுப்பேற்க, ‘சாலிட்டரி’ குறும்படத்தைச் சிங்கப்பூர் நீதிபாண்டியும், அறிவுமதியும் தயாரித்துள்ளார்கள்.

இனித் ‘தனி’ குறும்படத் திரைக்கதையைக் காண்போம்.

ஓர் அறையின் தனித் தரையில் விரிக்கப்பட்ட ‘ஃபோம்’ மெத்தையில், வெற்று மார்போடு அரைக்காற்சட்டை அணிந்திருக்கும் ஓர் இளைஞன் ஒருக்களித்து உறங்கிக் கொண்டிருப்பதைப் படக் ‘கேமரா’ நமக்கு அறிமுகப்படுத்துகிறது.

சில விநாடிகளில் தூக்கம் கலைந்த தனி இளைஞன், கொட்டாவி விட்டபடி எழுந்து, படுக்கையில் அமர்ந்தவாறு தீப்பெட்டியைத் துழாவி எடுத்து, ஒரு சிகரெட்டைப் பற்றவைக்கிறான். புகைச் சுருள் கிளம்பி இவன் இடப்பக்கச் சாளரத்தை நோக்கி நகர்கிறது. இவன் விரல்கள் ஒரு கெட்டி அட்டைப் புத்தகத்தின் சில பக்கங்களைப் பிரிக்க, புரட்டப்படும் தாள்களின் சத்தம் நம் செவிகளுக்குக் கேட்கிறது. அடுத்துத் தன் படுக்கையில் கிடக்கும் ஒரு சினிமாச் சஞ்சிகையை இவன் எடுக்கிறான்; மூன்று நடிகையர் படங்களை அதில் காண்கிறான். காலை வெளிச்சம் அறையில் பரவியிருந்தாலும், இவன் தலையில் நிழல், நடிகைகளின் படங்களில் கருந்திட்டாய் விழுகிறது. கிளர்ச்சி அடைந்து, ‘அட்டேச்ட்’ குளியலறைக்குள் இவன் நுழையும்போது, அதன் கதவு சாத்தப்படும் ஒலி கேட்கிறது.

இப்போது ஒரு ‘ஃப்ளேஸ்பேக்’ காட்சி நமக்குக் காட்டப்படுகிறது. இவன் படுக்கையின் விளிம்பில், சுவரில் சாய்ந்தபடி, சேலை வஸ்திரத்தில், ஒரு பெண் அசைவற்று நிற்கிறாள். படுக்கையின் இடப்பக்கத்திலே, முழுக்காற்சட்டையில் சிகரெட் புதைத்தபடி, இவன் திறந்த மார்போடு நிற்கிறான்.

உடனே இந்தப் பின்னோக்கு ‘ஷாட்’ தேய்கிறது. ‘பாத்ரூமி’லிருந்து இளைஞன் வியர்வைத் துளிகளுடன் வெளியே வருகிறான்; தன்னுடைய ஒரு கையில் பற்றியிருக்கும் கசங்கிய தாளைத் தரையில் போடுகிறான்.

ஜன்னல் ஓரம் சென்று, அங்கே குவிக்கப்பட்டிருக்கும் சில காலி மதுப் போத்தல்கள் முன்னே, தனியாய் அமர்கிறான். சாளரம் வழியாகப் புகுந்துள்ள இயற்கை ஒளி, வண்ணக் காலி ‘பாட்டில்’களை ஊடுருவிச் செல்கிறது.

பிறகு இவன் எழுந்து, சட்டை அணிந்து கொண்டு, அறைக் கதவைச் சாத்திவிட்டு, படிகளில் இறங்கிக் கீழ்த் தளத்து இருளில் புதைகிறான்.

இப்போது இளைஞனின் அறையில், இன்னொரு காட்சி நம் கண்களுக்குக் காட்டப்படுகிறது. ‘பாத்ரூம்’ திசையிலிருந்து ‘மியாவ்’ ஒலியுடன் ஒரு கறுப்புப் பூனை தோன்றி, இவனுடைய கசங்கிய படுக்கையை முகர்கிறது. மூடப்பட்டிருக்கும் ஜன்னல் மேல் அது ஏறுகிறது. அப்போது தன் மேல்மாடி அறைக்குத் திரும்பும் இளைஞனின் செருப்புச் சத்தம் கேட்கிறது.

பூனை உடனே குளியலறைப் பக்கம் ஓடி மறைகிறது.

தனியன் தன் அறையிலுள்ள வெற்றுப் ‘பாட்டில்’கள் அருகே தரையில் உட்கார்ந்து, தான் வாங்கிவந்த புது மதுப்புட்டியைத் தன் பற்களால் நெம்பித் திறக்கிறான்; பானத்தைத் திரவ ஓசையுடன் ‘கிளாஸி’ல் ஊற்றி, அதில் தண்ணீர் கலந்து அருந்துகிறான்.

பின்னர், தன் ஒற்றை அறையிலுள்ள மேசையில் அமர்ந்து, அச்சிடப்பட்ட ஒரு புத்தகத்தை இளைஞன் பிரிக்கிறான். மின்விசிறிக் காற்றில் படபடக்கும் தாள்களின் ஓசை மீண்டும் எழுகிறது. இவன் தன் இடக்கை நரம்புகளைச் சிறிது நேரம் உற்றுப் பார்க்கிறான். இவனுடைய சிகரெட் புதைத்தல் தொடர, குறும்படம் முடிவடைகிறது.

* * * * * *

இப்போது ‘தனி’ குறும்படத்தில் கையாளப்பட்டுள்ள சில சினிமா உத்திகளைக் காண்போம்.

செழியனின் ‘கேமரா’, வார்த்தைகள் இல்லாத ‘தனி’ திரைக்கதையை மாறுபட்ட ‘ஷாட்ஸ்’களிலும் கோணங்களிலும் படமாக்கியுள்ளது. இளைஞனின் காலை எழுச்சி ‘மீடியம் ஷாட்’ ஆகவும், இவன் நடிகை படங்களைப் பார்த்தல் ‘குளோசப் ஷாட்’ ஆகவும், இவனும் அவளும் படுக்கை அருகே நின்றிருப்பதை ‘லாங் ஷாட்’ ஆகவும், பூனை படுக்கையில் ஓடுவதை மேல் கோணத்திலும், அது ஜன்னலில் ஏறுவதைப் பக்கவாட்டுக் கோணத்திலும், ‘சினி கேமரா’ படம் பிடித்துள்ளது. பெரும்பாலான காட்சிகள் உட்புறமானவை என்பதால், அறையின் ஜன்னல் வழி விழும் இயற்கையான சூரிய ஒளியையும், அறையின் உள்ளே கிடைக்கும் செயற்கையான மின்சார ஒளியையும் பயன்படுத்திக் கொண்டு, ஒளி இல்லாத இருளையும் உண்டாக்கி, தம்முடைய ‘கேமிரா’வை நேர்த்தியாகச் செழியன் நகர்த்தியிருக்கிறார்.

புத்தகத் தாள்கள் புரட்டப்படும் சத்தம், குளியலறையின் கதவு சாத்தப்படும் ஓசை, மதுபானம் ‘கிளாஸி’ல் ஊற்றப்படும் போது எழுகின்ற திரவ ஓசை, பூனையின் ‘மியாவ்’ ஒலி முதலியன வாசுதேவனின் ஒலிப்பதிவில் நமக்கு ரம்மியமாகக் கேட்கின்றன.

பேச்சு இல்லாத ‘தனி’ குறும்படத்தைப் பார்வையாளர்கள் தொய்வில்லாமல் பார்க்கும்வண்ணம், மாமல்லன் கார்த்தி, மூலக் கதைச் சுருளைத் தம் ‘சீம்லெஸ் எடிட்டிங்’ மூலம் செம்மைப்படுத்தியிருக்கிறார்.

* * * * * *

சம்பாஷணை இல்லாமல் படம் ஓடுவதால், கதையின் நபர்களைப்பற்றி நம்முள் பல அனுமானங்களைத் திரைப்பிரதி ஏற்படுத்துகிறது.

இளைஞன் தற்சமயம் வேலை இல்லாமல் இருக்கிறான். ஆனால், சிகரெட், மதுபானம் வாங்க, அவன் வசம் பணம் இருக்கிறது. இளைஞன் ஒரு விடுப்பில் இருக்கிறான். புத்தக வாசிப்பைத் தவிர, இவனுக்கு வேறு பொழுதுபோக்கு இல்லை. இளைஞன் சமீபத்தில்தான் கிராமத்திலிருந்து நகர்புறத்தில் குடியேறியிருக்கிறான். இவன் பெற்றோர் தந்த பணம், இவன் கையிருப்பில் இருக்கிறது. இளைஞன் படைப்பிலக்கியவாதி. இவன் புரட்டுகின்ற புத்தகம், இவன் எழுதி வெளியிட்ட புத்தகம். இளைஞன், புடைத்திருக்கும் தன் கை நரம்புகளைப் பார்க்கிறான். இவன் போதை ஊசி போட்டுக் கொள்ளும் பழக்கம் உடையவன்.

படத்திலே தோன்றும் சேலை அணிந்த பெண், இளைஞனின் மனைவி. இவனோடு சில தினங்கள் தங்கிவிட்டு, கிராமத்திற்குத் திரும்புகிறாள். சேலை போர்த்திய நங்கை, இளைஞனுக்கு நுகர்வுத் தோழி; அதனால், படுக்கை அருகே தயாராக நிற்கிறாள்.

திரையில் ஒரு சரடாக வந்துபோகும் பூனை, ஒரு குறியீட்டு உருவம். தனிமைப்பட்ட இளைஞனால், தன் அட்டைப் பெட்டி அறையிலிருந்து மீளவே முடியவில்லை. பூனையோ அறையில் புகுந்து, சடுதியில் விடுதலை ஆகிறது.

ஒற்றை அர்த்தத்தைக் கட்டுமானம் செய்யாமல், பன்முக அர்த்தங்களைப் பார்வையாளர்களிடம் ஏற்படுத்துவதால், ‘தனி’ திரைப்பிரதியை ஒரு பின்நவீனத்துவப் பனுவல் என்று கூறலாம்.

* * * * * *

பிரக்ஞை பெற்ற ஆதி மனிதன், தன் தனிமையை விரட்ட, மற்ற மனிதர்களோடு கூடி வாழ்ந்தான். இடைக்காலத்தில் இவனக்கும் சக மனிதர்களுக்கும் இடையே கொள்கை வேறுபாடுகள் கிளைவிட்டபோது, இவன் தனிமையை நாடினான். தற்காலச் சூழலில் இவன் நகருக்கு இடம்பெயர்ந்திருக்கும் வேளையில், தனிமை அவஸ்தை இவனைக் கொடூரமாகத் தின்றுவருகிறது.

இந்தத் தருணத்தில், தனி மனித வாழ்க்கையின் வெறிச்சோடலைப் பதிவாக்கியிருக்கும் அய்யப்ப மாதவனின் ‘தனி’ குறும்படம், பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் செய்து எதுவாக இருக்கும்?

ஒரு நிலையில், இன்றைய தனியன், உண்டும் உறங்கியும், படித்தும் துய்த்தும், புகைத்தும் குடித்தும் தன் நேரத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறான். ‘சாலிட்டரி என்ங்குய்ஷ்’ (solitary anguish) எனப்படும் இத்தகைய நடத்தைக் கோலம், அவஸ்தைக்கும், அவதிக்கும் உரியது.

இன்னொரு நிலையில், தற்காலத் தனியன், தன் எண்ணங்களையும், செயல்களையும் மடைமாற்றம் செய்து, மானுட மேம்பாட்டிற்கான துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளையும், ஆக்கங்களையும் நல்கிக் கொண்டிருக்கிறான். ‘சாலிட்டரி சப்லிமேஷன்’ (solitary supplemation) எனப்படும் இத்தகைய முயற்சி, காலத்தை வெல்லும் அர்த்தப்பாடு உடையது.

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768