|
பிலிப்
கலாஸ் (Philip Glass), ஒரு புறம் மிகப்பெரிய வரவேற்பையும் அதேசமயம்
மறுபுறம் மிகப்பெரிய நிராகரிப்பையும் தனது இசைக்காக பெற்றுவரும்
இசையமைப்பாளன். அவருடைய இசையில் எனது முதல் அனுபவம் பிலிப் கலாஸும் இந்திய
சிதார் கலைஞர், இசை மேதை ரவிசங்கரும் இணைந்து பணியாற்றியிருந்த தி பெஸெஜ்ஸ்
(The Passages) இசைத்தொகுப்பின் மூலமாகத்தான். ரவி சங்கரின் இசையில் எனக்கு
எப்பொழுதும் ஒரு காதல் உண்டு. அவருடைய பல இசைத்தொகுப்புக்களில் ஒன்றாகதான்
இதையும் நான் வாங்கினேன். ஆனால் அந்த இசை எனக்குள் இசையின் இன்னொரு உலகை
ஈர்த்துக்கொண்டது.
அவருடைய தனி இசையில் எனது கவனத்தை ஈர்த்த முதல் இசை, குண்டூன் (KUNDUN)
என்ற டலாய் லாமா பற்றிய திரைப்பட இசைதான். அதுதான் ஆஸ்கார் விருதுக்காக
இசைப்பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவருடைய முதல் திரைப்படம். அது
அப்பொழுது எனக்கு தெரியாது. அந்தத் திரைப்பட இசைக்கு அவருக்கு ஆஸ்கார்
கிடைக்கவில்லை. அந்தத் திரைப்படம் மட்டுமல்ல, அதன் பிறகு
தேர்ந்தெடுக்கப்பட்ட தி ஹவர்ஸ் (The Hours) மற்றும் நோட்ஸ் ஓன் எ ஸ்கேண்டல்
(Notes On The Scandal) உட்பட எந்தத் திரைப்படத்திற்கும் அவருடைய ஆஸ்கார்
கனவு கைகூடவில்லை. தி த்ரூமென் சோவுக்காக (The Truman Show) அவர் ஒரே ஒரு
முறை கோல்டன் கொலோப் (Golden Globe) விருதையும் தி ஹவர்ஸ் திரையிசைக்காக
ப்வ்தா (BAFTA) விருதையும் வென்றிருக்கிறார்.
அவருடைய இசை பெரும்பாலும் நிராகரிப்புக்குள்ளாவதற்கு முக்கியக் காரணம் அது
மினிமலிஸ்த் (Minimalist) தன்மைகொண்ட அழகியலும் மேதமையும் அற்ற இசை என்ற
குற்றச்சாட்டின் காரணமாகத்தான். எழுபதுகளில் சில விமர்சகர்கள் 'ஒலி இம்சை'
என்று இவருடைய இசையை விமர்சித்து இருக்கிறார்கள். அதற்கு முக்கியக் காரணம்
அவருடைய இசை எல்லோருக்கும் அந்நியப்பட்டிருப்பதுபோன்ற ஒரு உணர்வை
உண்டாக்கியிருந்தது. வழக்கமான மேற்கத்திய இசைகளின் எந்தச் சாயலும்
தன்மையும் கொண்டிராமல் அதே சமயம் உலகின் எந்த இசைப் பிரிவுடனும் அடையாளம்
காணமுடியாத, அந்தக் காலகட்டங்களில் மிகவும் விநோதமான, வரையரைகளில் சிக்காத
இசையாக இருந்தது அவருடையது. விமர்சகர்கள் ஒரு படைப்பை மதிப்பீடு செய்யும்
போது அல்லது விமர்சனம் செய்யும் போது, சில கோட்பாடுகளை முன்னிறுத்தியும்,
இசை விதிகளை முன்னிறுத்தியும், அதன் எல்லைகளையும் உச்சங்களையும்
விவாதிப்பார்கள். ஆனால் கலாஸுடைய இசையோ எந்தக் கோட்பாடுகளுகுள்ளும்
அடங்கிடாமல் ஒரு புதியக் கோட்பாடை உருவாக்கிக்கொண்டது. அதை விமர்சகர்களால்
புரிந்து கொள்ள முடியாதுபோனது மட்டுமல்லாமல் அவர்களுக்கு அது அபத்த இசையாக
தோன்றியது.
மறுபுறம்
இவரது வித்தியாசமான இசை முயற்சி, புதிய ரசனையையும் ரசிகர்களையும்
பெற்றுக்கொண்டதோடு, மடிந்துகொண்டு வந்த பல ஆர்கெஸ்டராக்கள் இவரது இசையால்
புத்துணர்ச்சிப் பெற்றன. அவருடையை இசையை நிகழ்கால செவ்வியல் (contemporary
classical)இசையென்று போற்றியது. அதற்கு இன்னொரு காரணம் ஆர்கெஸ்டராக்கள்
அவருடைய இசையால் புதிய இளம் தலைமுறை ரசிகர்களை ஈர்த்துக்கொண்டது. அதிலும்
குறிப்பாக அவருடைய ஒபெரா (Opera). மீடியாக்கள், இதுவரை கலாஸ் மட்டுமே
பெரும் ரசிகர் எண்ணிக்கையை வயது வரம்பற்று எல்லா தரப்பினரிடமும்,
(செவ்வியல் முதல் பரப்பிசை வரை, பரப்பிசை முதல் சினிமா இசை என்ற எல்லா
நிலையிலும்) பெற்றிருந்த முதல் இசையமைப்பாளர் என்று போற்றியது.
90களிலெல்லாம், அவர் இருபதாம் நூற்றாண்டின் தலைச்சிறந்த இசையமைப்பாளர்
என்றே பேசப்பட்டார்.
அவருடைய இசை இதுவரை இருந்துவந்த மேலை செவ்வியல் இசையின் எந்த
விதிகளுக்குள்ளும் அடங்காததாகவே இருந்திருக்கிறது. அவருடைய பிரபலமான
ஐன்ஸ்டீன் என்ற ஒபெரா நிகழ்ச்சி, ஒபெரா இசையின் எல்லா விதிகளையும் மீறியது.
அவரது எல்லா திரையிசையும், ஹலிவூட் திரையிசை இன்றுவரை பின்பற்றி வரும்
விதிகளை தகர்த்திருக்கிறது. அதனாலேயே அவருடைய இசையை அங்கீகரிக்க இசை
விருதுகள் தருபவர்களும் விமர்சகர்களும் தயங்கினார்கள். ஆனால் மறுபுறம்
அவருடைய இசை சார்ந்த பட்டறைகள், வகுப்புகள், ஆய்வுகள் பல இசை கல்லூரிகளில்
நடத்தப்பட்டது; விவாதிக்கப்பட்டது; போதிக்கப்பட்டது.
இன்று
அவருடைய பாதிப்பில்லாதத் திரையிசையையோ இசையமைப்பாளர்களையோ காண்பது அரிது.
ஜேம்ஸ் ஹானராகட்டும் (James Horner) ஹன்ஸ் ஷிம்மர் (Hans Zimmer) ஆகட்டும்
இன்றைய திரையிசையில் கலாஸின் பாதிப்பு இல்லாமல் இருப்பதில்லை.
கலாஸின் இசை மினிமலிஸ்ட் இசை என்று பலர் வரையறுத்தாலும், கலாஸ் அவருடைய
இசையை அப்படி அடையாளப்படுத்தப்படுவதை நிராகரித்தார். அவருடைய இசை ஒரு
நெசவாளன் ஒரு சேலையை நெய்வதுபோல், ஒரு அடி நாதம், பல ஒற்றைத்தன்மையுள்ள
நாதங்களோடு பின்னி பின்னி, இணைந்து இறுதியில் ஒரு அழகியலையும்
அடர்த்தியையும் தருவதாக இருக்கும். மேம்போக்காகக் கேட்கப்படும் போது அது
இசை இலக்கணங்களை விட்டு விழகிய ஒற்றை நாதங்களின் சங்கமிப்புப்போல்
தோன்றும். சாதாரண இசையாகவும், யார்வேண்டுமென்றாலுல் இத்தகைய இசையை
படைக்கமுடியும் என்ற உணர்வை ஏற்படுத்தக்கூடியவை. இன்னொரு காரணம் அவருடைய
இசை இடைவெளியில்லாத ஒரு தொடர் நாதமாகவே இறுதிவரை இசைக்கப்படும். எங்கும்
எந்த தடையும் அழகியல் பொருட்டு இருப்பதில்லை, அதோடு மேலையிசைக்கே உரிய
லட்சணங்களான ஒரு அதி மென்மையான இசை கொஞ்ச நேரமும் பிறகு பிரமாண்டமாக
அதிரடியாக கொஞ்ச நேரமும் என்று மேடு பள்ளங்கள் இவருடைய இசையில்
இருப்பதில்லை.
இருந்தபோதும்
அந்த இசையை நாம் உள்வாங்கிக் கொள்ளும்போது அது தரும் ஆச்சரியங்கள் அதிகம்.
உங்களை ஹிப்னோடைஸ் செய்வதுபோல். தியானத்துக்குள் ஆழ்த்துவதுபோல் எங்கு
ஆரம்பித்தது எப்பொழுது முடியும் அல்லது எது முடிவு என்று உணரத்தலைப்படாது
விரிந்துகொண்டே செல்லும் ஒரு மாயை வலைபோன்று உணர்வீர்கள். இன்றையா பல நியூ
ஏஜ் இசைக்கும், விண்வெளி அல்லது பாராநோர்மல் (Paranormal) சார்ந்த
காட்சிகளுக்கும் உணர்வுகளுக்கும் கலாஸின் இசை விட்டுச்செல்லும்
விளக்கங்களும் சாத்தியங்களும் பிரமிப்பானவை. மனித அறிவிற்கும்
புரிதலுக்கும் அப்பாற்பட்ட விஷயங்களுக்கு கலாஸின் இசைதான் உணர்வுகளையும்
படிமங்களையும் கொடுக்க முடியும் என்பது என் கருத்து. ஏடுகளில் மட்டுமே
இதுவரை படித்துவந்த விஞ்ஞான சித்தாந்தங்களுக்கும், கோட்பாடுகளுக்கும்
இசையமைத்த ஒரே இசையமைப்பாளர் பிலிப் கலாஸ் மட்டுமே. அதில் பெரும்பாலானவை
ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் கோட்பாடுகள். ஒலி ஒரே நேர்க்கோட்டில் மட்டுமே
செல்லும் என்பதை மறுத்து ஐன்ஸ்டைன் முன்னிறுத்திய புதிய கோட்பாட்டிற்கு
சிம்பொனி இசை வடிவம் தந்திருக்கிறார் பிலிப் கலாஸ், தனது தி லைட் (THE
LIGHT) என்ற சிம்பொனி இசையின் வழியாக.
அவர் தனது ஆரம்பகாலங்களில் அதிகமாக தியேட்டர்ஸ் (Theaters) என்று
அழைக்கப்படும் இசை நாடகங்களுக்கு தான் அதிகம் இசையமைத்தார். அவருடைய இசை
ஆளுமை இந்த இசை நாடகங்கள் வழி உருப்பெற்றவைதான். அவர் சொல்லியிருக்கிறார்,
'எனது இசைப் படைப்பு மனம், இசை நாடகங்கள் வழி வளர்ந்து வந்தது. அந்த
நாடகங்களில் இசை, கதைப்போக்கை விளக்ககூடிய ஒரு மொழியாகவே
பயன்படுத்தப்படும். அத்தகைய நாடகங்களில் காட்சி, சூழல் மற்றும் வசனங்கள்
எல்லாமே இசையாகவே, இசைவழியே அணுகப்பட்டது. அதன் காரணமாகவே எனது இசையமைப்பு
எல்லோருக்கும் பழக்கப்பட்ட இசையாக இல்லாமல், வேறு தளத்தில் பயணிப்பதாகவே
தோன்றுகிறது.'
அவர்
இதையும் சொல்லியிருக்கிறார், 'எனது ஆரம்பக் காலங்களில் இத்தகைய இசையை நான்
நிறுவ முயற்சித்தப் போது, என்னை ஒரு பைத்தியக்காரனாகவே எல்லோரும்
கருதினார்கள். நான் எனது இசையை நிறுவுவதற்காக எல்லா அரங்குகளிலும்,
மேடைகளிலும் இலவசமாகவே எனது இசையை படைத்து வந்தேன். சில அரங்குகள்,
தேவாலயங்கள் சிறிய அன்பளிப்பு மூலமாக என்னை ஊக்குவித்தன.'
அவருடைய இசை நிகழ்ச்சிக்குக் கிடைத்த வரவேற்பையும் ஆதாரவையும், சிறுக சிறுக
பெருகிய ரசிகர்களையும் அதிலும் இளைஞர்களின் ஆர்வத்தையும் கண்ட
ஆர்கெஸ்டராக்களும் பெரிய பெரிய அரங்குகளும் அவருக்கு வாய்ப்புகள் தர
ஆரம்பித்தன. ஒபேராக்கள், இசை நிகழ்வுகள், நாடகங்கள் என அவரின்
இசைவாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே போனது. அந்தக் காலகட்டத்தில் அவர்தான்
அதிகமான வருமானம் பெரும் இசையமைப்பாளரானார். ஆனாலும் இன்றும்
நற்காரியங்களுக்காக இலவசமாக நிகழ்ச்சிகள் நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்.
ஆரம்பத்தில் தனது இசையை நிறுவ அவர் போராடியதாலும், பிற இசை கலைஞர்கள் இன்றி
தானே அதை இசைக்கவேண்டிய நிர்பந்தங்களாலும், பெரும்பாலும் இலவசமாக
நிகழ்ச்சிகள் படைத்ததாலும், செலவுகளை கட்டுப்படுத்துவதற்காகவே அவருடை
பல்கலைக்கழக இசை நண்பர்களுடன் சேர்ந்து அவர் பிலிப் கலாஸ் என்செம்பள்
(Philip Glass Ensemble) என்ற தனது சொந்த இசைக்குழுவை தொடங்கினார்.
இன்றுவரை அவருடைய பல இசைப் படைப்புகளை இசைப்பதும் பதிவு செய்வதும் இந்த
இசைக்குழுவின் வாயிலாகத்தான்.
ககலாஸ், மேரிலாண்டில் குடிப்பெயர்ந்த புலம்பெயர்ந்த யூத பெற்றோருக்குப்
பிறந்ததிருந்தாலும், பெளத்த மதத்தை ஏற்றுக்கொண்டவராகவும், சைவ உணவு
பழக்கத்தை பின்பற்றுபவராகவும் இருக்கிறார். அவரும், நடிகர் ரிச்சர்ட்
கேரும் பிற பிரபல நண்பர்களும் சேர்ந்து தீபெத் ஹவுஸ் (Tibet House) என்ற
மன்றத்தை நிறுவி, தீபெத் கலாச்சாரத்தையும், நம்பிக்கைகளையும், கலைகளையும்
பாதுகாக்கவும், மேற்குத் தேசங்களில் அவைகளைப் பிரபலபடுத்தும் சேவைகளிலும்
ஈடுபட்டு வருகிறார்.
ஆரம்ப
காலங்களில் தண்ணீர் குழாய் சரிச் செய்வதும், இரவு நேரங்களில் வாடகை வாகனம்
ஓட்டுவதும் என்று பல வேலைகளையும் செய்திருக்கிறார். காரணம் இலவசமாகவும்
சொற்ப அன்பளிப்புகளையும் நம்பி இசை நிகழ்ச்சி நடத்தி வாழ்க்கையை ஓட்ட
முடியாது என்பதாலும், கல்லூரி செலவுகளுக்காகவும். அவர் ஒரு வீட்டில் ஒரு
முறை இப்படி தண்ணீர் குழாய் சரி செய்துக்கொண்டிருக்கும் போது அந்த வீட்டின்
உரிமையாளர் இவரை பார்த்து ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்திருக்கிறார்.
காரணம் அந்த வீட்டின் உரிமையாளர் ஒரு பிரபல இசை விமர்சகர். கலாஸின் இசையைக்
கூட விமர்சித்து இருக்கிறார். 'நீ ஒரு கலைஞன், எப்படி இந்த வேலையை உன்னால்
செய்ய முடிகிறது? எப்படி செய்யலாம்?' என்று அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
காரணம் மேலை கலாச்சாரத்தில் ஒரு கலைஞன் கலை சாரா மற்ற வேலைகளில் ஈடுபடுவது
விநோதமாக பார்க்கப்படுகிறது. ஆனால் கலாஸின் கர்வமற்ற மனோநிலை அவர்
பிரபலமடைந்தப்பிறகும் அவருடனேயே இருந்திருக்கிறது.
ரவி சங்கர் கலாஸுடன் பணியாற்றிய அனுபவத்தைக் குறிப்பிடும் போது, 'புகழின்
உச்சத்தில் இருக்கும் மேலை இசையமைப்பாளர்கள் மிகவும் கர்வமாகவும், யாராலும்
எளிதில் அணுகமுடியாதவர்களாகவும் இருப்பார்கள். மேலை இசையைத்தவிர உலகின்
எந்த இசையையும் மதியாதவர்களாகவே இருப்பார்கள். ஆனால் கலாஸை சந்தித்தபோது
எனக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அளவு அத்தனை எளிமையானவராகவும்,
பண்பாளராகவும் இருப்பதைப் பார்த்தேன் என்று குறிப்பிடுகிறார். இந்தியாவில்
இருந்து சென்று, தனது இசைக்கு மேலை நாட்டில் ஒரு அங்கிகாரத்தைப்
பெற்றுக்கொண்ட ரவி சங்கரின் இந்த வார்த்தைகள் உண்மையானதாகவே இருக்கும்
என்று நம்பத்தோன்றுகிறது. br />
கலாஸ் இதுவரை 8 சிம்பொனிகள் படைத்திருக்கிறார். சிம்பொனி இசையின் சாஸ்தீரிய
அம்சங்களை தளர்த்தியபடி ஒலிக்கும் இவருடைய சிம்பொனி, சிம்பொனியே இல்லை
என்று ஒதுக்கவும் முடியாமல், சிம்பொனிதான் என்று கொண்டாடவும் முடியாத மேலை
செவ்வியல் இசை வல்லுனர்கள் இதை நிகழ்கால சிம்பொனி (Contemporary Symphony)
என்றப் புதுப்பிரிவில் பட்டியலிட்டார்கள்.
என்னுடைய அனுபவத்தில் கலாஸின் இசையை கேட்பது, நமது ஆழ்மனத்திற்கு நம்மை
கொண்டு சென்று நமது கனவுகளையும் வெற்றிகளின் மீதான வேட்கையையும்
அதிகப்படுத்துவதாகவும், நமது சிந்தனையையும் எண்ணங்களையும் ஒருமுகப்
படுத்துவதாகவும், பிரபஞ்ச வெளிப் பயணத்தில் நம்மை அதி வேகமாகவும்
செலுத்துவது போன்ற மனப்பிரம்மையை உண்டு பண்ணும். அதே சமயம் ஏதோ ஒரு
மறந்துபோன இழப்பும் சோகமும் நன்மை பின் தொடர்வதையும் உணரலாமல் இருக்க
முடியாது.
கனடா சென்றிருந்த போது, வழக்கம் போல் இங்கும் ஒரு இசை நிலையத்திற்கு
சென்றேன். 4 மாடி கட்டங்கள் கொண்ட எஜ் எம் வி (HMV) இசை நிலையம். நான்கு
மாடியும் இசைத்தட்டுகள்தான். ஒவ்வொரு மாடியும் சில சில இசைப்பிரிவுகளுக்காக
ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு நான் சில இசை தொகுப்புகளை வாங்கினேன். அதில்
பிலிப் கலாஸின் ஐந்தாவது சிம்பொனியும் ஒன்று. பணம் செலுத்தும் போது,
கவுண்டரில் இருந்த ஒரு பதின்ம வயது இளைஞன், பிலிப் கிலாஸின் இசைத் தட்டை
நான் தேர்ந்தெடுத்திருப்பதைப் பார்த்து, உங்களுக்கு இவருடைய இசைப்
பிடிக்குமென்றால் அவருடைய புதிய தொகுப்பொன்று வெளிவந்திருக்கிறது, நான்
உங்களுக்கு அதைக் காட்டட்டுமா என்று கேட்டான். காரணம் நான் தேர்ந்தெடுத்த
சிம்பொனி மூன்றாவது மாடியில் செவ்வியல் இசைப்பிரிவில் இருந்தது. அவருடைய
புதிய இசையோ வேர்ல்ட் மியூஸிக் இசைப்பிரிவில் இரண்டாவது மாடியில் இருந்தது.
நான் சம்மதித்து அவனுடன் சென்றேன். அவன் கலாஸின் ஒரியன் (Orian) என்ற
இசைத்தொகுப்பை அறிமுகம் செய்தான். ஆனாலும் ஒரு தயக்கத்துடன்தான் அதை
செய்தான். 'உங்களுக்கு இதுபோன்ற இசைப்பிடிக்கும் என்று நினைக்கிறேன்
அதனால்தான்' என்றான். அப்பொழுது என்னால் உணரமுடிந்தது 'இந்தியாவிலும்
மலேசியாவிலும் இசை நிலையங்களில் வேலை செய்பவர்கள் இவனைப்போல் இருந்தால்,
இசைத்தட்டு விற்பனை இந்த டிஜிட்டல் யுகத்தில் நாம் அச்சப்படும் படியாக
இருக்காது' என்பதுதான். ஆனால் கலாஸைப் பற்றிய இந்தக் கட்டுரையை எழுதி
முடிக்கும் போது, மீண்டும் அந்த சம்பவத்தை நினைத்துப்பார்க்கிறேன்.
இப்பொழுது என்ன தோன்றுகிறதென்றால், அவன் இதை கடமை உணர்வோடு செய்திருப்பான்
என்று தோன்றவில்லை. எனக்கு அத்தனை நெருக்கமாக நான் உணரும் கிலாஸின் இசையை
அவனும் அப்படிதான் உணர்ந்திருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.
இல்லையென்றால் நான் வாங்கிய சில இசை தட்டுகளில் அவன் கலாஸின் இசையை மட்டும்
எனக்கு அறிமுகம் செய்திருக்க மாட்டான்.
பி.கு : நீங்கள் பிலிப் கலாஸின் இசையைக் கேட்க ஆர்வப்பட்டால் முதலில் தி
பெஸெஜ்ஸ் (The Passages) இசையிலிருந்து தொடங்குங்கள். இல்லையென்றால்
கலாஸின் இசை உங்களுக்கும் விநோதமாகவே தோன்றும்.
|
|