|
நண்பன் அப்போது
சோர்ந்திருந்தான். மீத மதுவைக் கொடுத்துக் குறியைக் கழுவிக்கொள்ளக்
கோபமாகப் பணித்தான். அன்றைய உறவு, சோர்வு சலனம் என ஒன்றையும்
ஏற்படுத்தாமல் இருந்தது. அவனுக்கு நான் பெண்களோடு அதிகம் சேரத்
தொடங்கி விட்டதாகச் சந்தேகம் வந்திருக்கக் கூடும். இல்லையென
அடித்துச் சத்தியம் செய்தேன். இரவின் அடர்த்தியில் கை எங்கோ பட்டுவிட
அலறினான். அவனுக்கு இன்னும் அடங்காதது, எனக்கு மேலும் வியப்பை
ஏற்படுத்தியது.
அன்று முழுதும் அழுவதும் சிரிப்பதுமாக இருந்த என் உதடுக்கு ஒருதரம்
முத்தமிட்டவன் காரணம் வினவினான். அன்று காலையில் (12.12.2009
காரிக்கிழமை) தோட்ட மாளிகையில் எஸ்.பி.எம் தமிழ் மொழி & தமிழ் இலக்கியம்
மீட்புக் குழு தலைமையில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டது
பற்றியும் அதன் உன்னதமான நோக்கில் கல்லெறியும் வண்ணம் ஒரு கோமாளி
யாருக்கும் தெரியாமல் உள்ளே நுழைந்து விட்டது பற்றியும் சொல்ல
ஆரம்பித்தேன். எல்லா வகையிலும் கவனமாக நடந்த கூட்டம் தனது
அஜாக்கிரதைத் தனத்தால் ஒரு கோமாளி வந்து மேடையில் காமடி
செய்துவிட்டுப் போக வழி செய்தது எனக்கு மன அழுத்தம் ஏற்படக்
காரணமாக இருந்தது.
நண்பனுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கக் கூடும். இது போன்ற சின்ன
விஷயத்திற்கெல்லாம் அஞ்சாத சிங்கம் நான் என அவன் அறிந்ததுதான்.
திருவேங்கடம் அவர்களின் முயற்சியால் 1500க்கும் மேற்பட்டோர்
கலந்துகொண்ட அந்தப் பேரணியில் ஒரு லும்பனான நானும் கலந்துகொண்டு
பேரணியில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு ஆதரவு தெரிவித்துக்
கையெழுத்துமிட்டது அவனுக்கு மேலும் ஆச்சரியத்தை வர வழைத்திருந்தது.
ஆனாலும் அவன் அது பற்றியெல்லாம் அதிக அக்கறைக் கொள்வதாக இல்லை.
கோமாளியின் வருகைதான் அவனை கவர்ந்திருந்தது. அவன் கோமாளியைப் பற்றி
விசாரிக்க ஆரம்பித்தான். கோமாளியின் மூக்கு குறித்து... முடி குறித்து...
உடை குறித்து அவன் கேள்விகள் நீண்டன.
நான் அந்தக் கோமாளியைக் கொஞ்ச நாட்களாக இப்படிப் பல மேடைகளில்
பார்த்திருப்பதையும் ஆச்சரியமாக அந்தக் கோமாளி மற்ற கோமாளி போல்
அல்லாமல் வெள்ளை ஜிப்பா போட்டு வெள்ளை செருப்பும் போட்டிருந்தது என்றேன்.
இந்தக் கோமாளி ஏறும் மேடைகள் தோறும் 'தமிழ் நாட்டில் மலேசிய
இலக்கியத்திற்கு பீடம் வைத்துள்ளேன்... நாற்காலி வைத்துள்ளேன்... மேசை
வைத்துள்ளேன்...' என ஜோக் அடிக்கும். ஜோக்கை ரசித்து அனைவரும் கை தட்டி
சிரிப்பார்கள்.
நான் கூறிய கோமாளியின் மகத்துவம் கேட்டு நண்பனுக்கு சிரிப்பு
வந்திருக்க வேண்டும். ஆர்வம் தாங்காமல் கோமாளி பற்றி மேலும் வினவத்
தொடங்கினான்.
சில சமயங்களில் கோமாளிக்கு என்ன சேஷ்டைகள் செய்வது என்று தெரியாது.
தனது தகுதிக்கு மீறிய ஒரு வேடம் அணிந்திருப்பது அவ்வப்போது
கோமாளிக்கு நினைவு வர அதை சரிகட்டும் விதமாக கிடைக்கும் ஆட்களை
அழைத்துக் கொண்டு தமிழகத்துக்குப் பறக்கும். தமிழகத்தில் தன் சக
தோழர் கோமாளிகளின் உதவியோடு மலேசிய இலக்கியத்துக்கு நாற்காலி
அமைக்கும். அதில் ஏறி நின்று குதித்தும் குப்புற விழுந்தும் அனைவரையும்
சிரிக்கவைக்கும்.
கோமாளியின் பரிதாப நிலையை எண்ணி நண்பன் 'ச்சு' கொட்டத் தொடங்கினான்.
நண்பனின் முகத்தைப் பார்த்ததும் எனக்கும் கோமாளியின் மேல் ஒரு
வகையான பரிதாப உணார்ச்சி வரத் தொடங்கியது. இருவரும் சற்று நேரம்
அமைதி காத்தோம். நண்பன் தணிந்த குரலில் கேட்டான். 'இத்தனை சேஷ்டைகள்
செய்யும் கோமாளியை எப்படித் தாங்கி கொள்கிறார்கள்?' நண்பனின் கூரிய
அறிவு எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. யாருக்கும் தெரியாத அந்த
இரகசியத்தை மெல்லிய குரலில் சொல்லத் தொடங்கினேன். 'அந்தக் கோமாளி
ம.த.எ.சங்கம் எனும் மந்திர வார்த்தைகளை அவ்வப்போது
உபயோகிப்பதையும் அதையும் மீறி பேசும் சிலரின் வாயில் 'விருது' என்ற
அசுர பலம் கொண்ட பசையைத் தடவி விட்டுவிடும். 'விருது' பசை
ஒட்டப்பட்டவர்கள் கடைசி வரை வாயைத் திறக்கவே மாட்டார்கள்.
கோமாளிக்கு 'ஜே' போட மட்டுமே அவர்கள் கைகள் உயரும்' என்றேன்.
நண்பனுக்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை. இத்தனைக் கொடூரமான கோமாளியை
நினைத்து நான் அழுததற்கான காரணத்தை வினவினான்.
எல்லாவற்றையும் மீறி இன்று அந்தக் கோமாளி செய்த கூத்தின் கொடூரம்
ஒருதரம் கண்முன் ஓடியது. கோமாளி துள்ளி குதித்து மேடை ஏறுகிறது.
உணர்ச்சி பொங்க தமிழைக் கக்குகிறது. எஸ்.பி.எம்.மில் தமிழ்
இலக்கியத்தை எடுக்க வேண்டிய அவசியத்தை ஆணியடித்தார்போல் கூறுகிறது.
தமிழ்... மொழி... இலக்கியம் என பிதற்றுகிறது. 'கருப்பு தமிலன்',
'சிவப்பு தமிலன்' என்றெல்லாம் வசனம் விடுகிறது. ஆனால் தனது
குழந்தைகள் ஒருவரையும் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பாமல் 'பெப்பே'
காட்டுகிறது. அதுமட்டுமல்லாமல் இறுதியாய் எஸ்.பி.எம் முடித்த அவரின்
வாரிசு ஒருவர் கடமைக்காகக்கூட தமிழ் மொழியையும் தமிழ்
இலக்கியத்தையும் ஒரு பாடமாக எடுக்காததும் ஆதாரப்பூர்வமாக கையில்
இருந்த நகல் சான்றிதழை நண்பனிடம் நீட்டினேன். நண்பன் போதையில்
உறங்கியிருந்தான். கோமாளியின் பொய்யுணர்ச்சியின் ததும்பலைக் கேட்டு
கைதட்டும் மக்களின் முகத்தை நினைத்தபோது மீண்டும் அழுகை முட்டியது.
மறுநாள் நண்பன், தனது கனவிலும் முகம் முழுதும் வண்ணங்கள் பூசிய
கோமாளி வந்தான் என்றும் அவன் சைக்கிள் ஓட்டும் போதும், கயிற்றில்
நடக்கும் போதும், தாவி குதிக்கும் போதும் அடிக்கடி தவறி விழுந்தான்
என்றும்... ஆச்சரியமாக அவன் விழும்போது யாரும் சலிப்படையாமல்
கைதட்டி ஆரவாரம் செய்தனர் என்றும் ஆச்சரியம் ததும்ப கூறினான்.
|
|