இதழ் 13
ஜனவரி 2010
  மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் - ஒரு பார்வை  
     
  நேர்காண‌ல்:

"அர‌சாங்க‌த்திற்குத் தேவை ந‌ம்மை நாமே குறை சொல்லிக் கொள்ளும் ஏமாளித்த‌ன‌ம்"

பி. உத‌ய‌குமார்

சிறப்புப் பகுதி:

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் - ஒரு பார்வை


பத்தி:

தமிழகத்திலும் ஒரு நீரோ மன்னன்

அ. ரெங்கசாமி

அவஸ்தை
இராம. கண்ணபிரான்


கட்டுரை:

பிலிப் கலாஸ் : இசையின் தீராத‌ ப‌க்க‌ங்க‌ள்
அகிலன்

காற்று வேட்டை
கெ.எல்.

வரமா? சாபமா?
நெடுவை தவத்திருமணி

மொழி ஆணால் உருவாக்கப்பட்டது...
வீ.அ. மணிமொழி

இலங்கைத் தமிழர்களின் ஆங்கில நூல்கள்: நூல்தேட்டம் ஆங்கில நூல் தொகுப்புக்கானதொரு அறிமுகம்
என். செல்வராஜா

சிறுகதை:

குரங்கு
கிரகம்


பிரமைகள்
ஸ்ரீரஞ்சனி

தொடர்:


ப‌ல வேடிக்கை ம‌னிதரைப் போல‌ ...5
ம‌. ந‌வீன்

எனது நங்கூரங்கள் ...6
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...1
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன்


இரா. சரவணதீர்த்தா


மன்னார் அமுதன்

ஏ.தேவராஜன்

பதிவு:

மலேசியத் தமிழ்க் கவிதாயினிகளின் முதலாவது மலையருவிக் கவியரங்கம்
தினேசுவரி

புத்தகப்பார்வை:

விட்டு விடுதலை காண்
நிந்தவுர் ஷிப்லி

லும்ப‌ன் ப‌க்க‌ம்:


ஒரு கோமாளியின் வ‌ருகை...
லும்ப‌ன்

அறிவிப்பு:


அஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி

எதிர்வினை:


கடிதம்
     
     
 

அண்மைய காலமாக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு தரப்பினர்களிடமிருந்தும் விமர்சனங்கள் எழுந்தபடி உள்ளன. இது குறித்து நாடுதழுவிய அளவில் பல எழுத்தாளர்களிடமும் கருத்துகள் சேகரித்தோம். சிலர் கருத்துகள் கூற தயங்கினார்கள். பலர் பயந்தார்கள். அதிகாரத்தை நோக்கி உண்மையைக் கூறத் துணிந்த சிலரின் கருத்துகள் இவை. மேலும் கருத்துகள் கூற விரும்புகிறவர்கள் வல்லினம் மின் அஞ்சலுக்குத் தங்கள் கருத்துகளை அனுப்பலாம்.

 

ஆ.ரெங்கசாமி

 

இலக்கியக்குரிசில் மா. இராமையா 

 
 

 சு.யுவராஜன்

 

எம். கருணாகரன் 

 
 

ஏ.தேவராஜன் 

 

க.பாக்கியம் 

 
 

தோழி 

 

கோ.முனியாண்டி 

 
 

வீ.அ.ம‌ணிமொழி 

 

ஜானகிராமன் மாணிக்கம் 

 
 

மணிஜெகதீசன் 

 

சீ.முத்துசாமி 

 
 

சி.அருண் 

 

சிவா பெரிய‌ண்ணன் 

 

தேவைகள் - ஆ.ரெங்கசாமி

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு மிக நீண்ட நாள் வரலாறு உண்டு. இந்த நீண்ட காலகட்டத்தில் அச்சங்கம் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்தல் வேண்டி தேசிய ரீதியில் நாவல், குறுநாவல் போட்டிகளை நடத்தியிருக்கின்றது. சிறந்த படைப்பாளர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ் அறிஞர்களின் பேரால் விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகின்றது.

மலேசியத் தமிழ் எழுத்தாளர்களை தமிழகத்திற்கு அழைத்துச் சென்று மலேசிய நாட்டிலும் சிறந்த படைப்பாளர்கள் உள்ளனர் என்பதை பறைச்சாற்றியிருக்கின்றது. சில மலேசியத் தமிழ் படைப்பாளிகளின் நூல்களை தமிழக் கல்லூரிகளில் பாடநூல்களாவதற்கும் நமது சங்கம் உறவுப் பாலம் அமைத்துக் கொடுத்திருக்கின்றது. அந்த முறையில் மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் நமது சங்கத்தைப் பற்றிப் பெருமை கொள்கிறோம். பாராட்டுகின்றோம்.வாழ்த்துகின்றோம்!

என்றாலும் காலத்திற்கேற்ப நமது சங்கம் மென்மேலும் இன்னும் வளர்ந்து சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று நினைப்பதிலும் வேண்டுவதிலும் தவறேதும் இல்லையே!

எனவே, நமது சங்கத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, சங்கத்தின் முன்னாள் உறுப்பினன் என்ற உரிமையில் சில ஆலோசனைகளை சங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.

அ) உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்துதல்.
ஆ) திங்கள் தோறும் செயலவைக் கூட்டப்பட்டு நடப்பு விசயங்களை பரிசீலிக்கப்படுதல்.
இ) இளந்தலைமுறை படைப்பாளர்களை உருவாக்க வேண்டி மூன்று திங்களுக்கு
ஒருமுறை படைப்பாற்றல் பற்றிய வழிகாட்டி வகுப்புகள் நடத்துதல்.
ஈ) நம் எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளை இனம் கண்டு அவற்றை அரசாங்கமே அங்கீகரித்து பதிப்பித்து, தமிழ்துறை சார்ந்த நிலையங்களுக்கு வழங்கச் செய்தல்.
உ) சுமார் அரை நூற்றாண்டு காலமாக மலசியத் தமிழ் மாணவர்கள் தமிழ் இலக்கிய பாடத்திற்கு அக்கரை நூல்களையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். மலேசியத் தமிழ் படைப்பாளிகளின் நூல்களே இனி. பயன்படுத்த வழு காணுதல் வேண்டும்.
ஊ) ஏழை எழுத்தாளர்களின் எத்தனையோ அரிய படைப்புகள் நூல்வடிவம் பெறாமல் முடங்கிக் கிடக்கின்றன.அவற்றை நூலாக்க நமது சங்கம் துணை நிற்க வேண்டும்.
எ) தமிழ்மொழிக்கு எந்த வகையில் ஊறுவரினும் அதை தடுத்து நிறுத்துவதற்கும் தட்டிக் கேட்பதற்கும் சங்கம் முன்வரிசையில் நிற்றல்.
ஏ) சங்கத்தினர் செயல்கள் அனைத்தும் ஆக்க்கரமாய்ச் செயல்பட பொருளாதார பலம் அவசியம். எனவே, உறுப்பினர் கட்டணத்தை உயர்த்தல், தக்காரிடம் நன்கொடை கேற்றல் போன்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல்.
ஐ) சங்கத்தின் பேரால் நிதி அறவாரியம் அமைத்தல்.
ஒ) அனைத்துக்கும் மேலாக நமக்குள் ஒற்றுமையையும் மொழி உணர்வையும் பேணிக்காத்தல்.

மலேசியத் திருநாட்டில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இமயமாக உயர்ந்து நின்று தமிழ்மொழிக்கும் தமிழ் இனத்துக்கும் காவல் தெய்வமாக இருத்தல் வேண்டும் என்ற பேராசையினால் உந்தப்பட்டு அடியேன் இக்கருத்துகளை எழுத துணிந்தேன்.

Top 


சுரண்டலும் சுரணையும் - சு. யுவராஜன்

மு.கு: மிகவும் நிதானமாக என் கருத்தைப் பதிவு செய்யவதற்கு, எழுதுவதை சில நாட்கள் தள்ளிப் போட்டப் பின்பும் காட்டம் குறைய மாட்டேன் என்கிறது. அன்பு, பண்பு, ஒழுக்கம் மொத்தத்தில் தமிழ பண்புகளின் மொத்த உருவமாக விளங்கும் தமிழ்ப் பெரியவர்கள் இந்தக் கட்டுரையைப் படிக்காமல் இருப்பார்களாக.

‘உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்’ என்பார் வள்ளலார். யாருக்கு இது பொருந்தி வருமோ இல்லையோ, மலேசிய தலைவர்களுக்கு நச்சென பொருந்தும். தானைத் தலைவர் தொடங்கி, மக்கள் தலைவர், சின்னச் சின்ன விக்கல் தலைவர்கள் வரை இந்தப் பட்டியல் நீளும். ஆனால் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவரும் இந்த பட்டியலில் இருப்பவர் என்பதை அண்மையில் அறிந்தேன். (இவரின் அசட்டுதனங்களை முன்பே அறிந்தவன் என்பதால் ‘அதிர்ச்சியடைந்தேன்’ என எழுத முடியவில்லை.) இதை நான் அறிந்தபோது, தலைவர் தமிழ், தமிழ் இலக்கியப் பாடங்களை அழிக்க முயலும் அரசாங்கத்தின் நரிப் புத்திக்கு எதிராக மேடையில் சிம்ம கர்ஜனை எழுப்பிக் கொண்டிருந்தார். (தன் பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளியில் படிக்கவைக்காதவர் பிறகு எதற்கு இத்தனை சிலுப்பு சிலுப்பினார், யான் இன்றும் அறியேன் பராபரமே).

எழுத்தாளர் சங்கத் தலைவருக்கு வைரமுத்து மட்டும்தான் கவிஞர். கருணாநிதி மட்டும்தான் தமிழர் தலைவர். வாழ்க அவரது நம்பிக்கை. அவர்களின் கவிதை வரிகளோடு மட்டும் வளரட்டும் அவர் பணி. எல்லா தமிழர்களையும் தமிழ்ப்பள்ளியில் படிக்க சொல்ல நான் ஒன்றும் ஃபாஸிஸ்ட் அல்ல. தமிழின் முக்கியமான கவிஞர்களின் ஒருவரான ஞானகூத்தனின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகிறது.

‘எனக்கும் தமிழ்தான் மூச்சு - ஆனால்
அதை பிறர் மேல் விடமாட்டேன்’

தனிப்பட்ட கருத்தில் இந்த கவிதையோடு எனக்கு உடன்பாடுதான். தமிழைத் தங்கள் வாழ்வு நெறியாக கொள்ள விரும்பாதவர்கள் தமிழைக் கட்டாயமாக படிக்க சொல்ல நான் ஒன்றும் பிற்போக்குவாதியல்ல. உங்கள் சுதந்திர தேர்வில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. ஆனால் அப்படி முடிவெடுத்து தொடர்ந்து செல்பவர்கள் என்ன இழவுக்கு ‘தமிழ் எங்கள் உயிர், தமிழ் எங்கள் மயிர்’ என மேடையில் போலியாக முழக்கமிடுகிறார்கள் என்பதுதான் எனக்குப் புரிய மாட்டேன் என்கிறது. இப்படிப் போலியாக முழக்கமிடுபவர்களைப் பார்த்து சிறுவயதில் என் குடிக்கார தாத்தாவின் தயவில் கற்றுக் கொண்ட, மனதின் மூலையில் இன்னும் பதுங்கியிருக்கும் கெட்ட வார்த்தைகளில் அர்ச்சனைச் செய்தால்கூட ஆத்திரம் அடங்காது போலும்.

சரி விஷயத்திற்கு வருவோம். எழுத்தாளர் சங்கத் தலைவருக்கு திடீரென ஞானோதயம் பிறந்திருக்கிறது. அதன் அடிப்படையில் சில முக்கியமான கண்டுபிடிப்புகளை இலக்கிய உலகத்திற்கு தந்துள்ளார். அவை பின்வருமாறு:

1. நான்கு ஐந்து பேர் கொண்ட கூட்டம் ஆபாசமாக எழுதிக் கொண்டிருக்கிறது.
2. இவர்களும் விருதுகளை மறுத்துவிடுவார்கள்; மற்றவர்கள் வாங்கினாலும் திட்டுவார்கள்.
3. இப்படியே இருந்தால் எழுத்தாளர் சங்கம் இவர்களை அங்கீகரிக்காது.

பதில்கள் பின்வருமாறு:

1. தன் காதலியை, மனைவியை (அல்லது காதலனை, கணவனை) தவிர பிற பெண்ணை/ஆணை மனதிலும் நினையாத உத்தமர்கள் யாராவது இருப்பார்கள் என்றால் அவர்களிடம் மட்டும் இப்படி ஆபாசமாக எழுதும் மோசமானவர்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்.

2. அதிகார வர்க்கத்திடம் முதுகை வளைத்து வளைத்து முதுகெலும்பே இல்லாமல் போய்விட்டவர்கள் இடும் பிச்சையைச் சுரணையுள்ளவர்கள் மறுப்பார்கள். சுரணைக்கெட்டவர்கள் சிரித்துக் கொண்டே பெற்றுக் கொள்வார்கள். கொடுப்பதையெல்லாம் வாங்கி சட்டைப்பையில் போட்டுக் கொள்ளவேண்டும் என நினைப்பவர்களுக்கு விருது வேண்டாம் என சொல்பவர்களைப் பார்க்க அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கத்தான் செய்யும்.

3. அய்ய்யோடா... விருதே வேண்டாம் என்பவர்களுக்கு அங்கீகாரம் ஒன்றுதான் குறைச்சல்.

அடிப்படைத் தார்மீகமில்லாதவர்களோடு தொடர்ந்து உரையாட அலுப்பாக இருந்தாலும் இன்னும் ஒரு விஷயத்தோடு முடித்துக் கொள்கிறேன். எழுத்துக் கலைக்காகவோ, இல்லை சமூகத்துக்காகவோ ஏதாவதொன்றுக்காக இருந்துவிட்டுப் போகட்டும். எழுத்தின் அடிப்படை சிந்தனைகளில் ஒன்று சமுகநீதி. சமுகநீதியின் முக்கிய கூறுகளில் ஒன்று சுரண்டலுக்கு எதிரான வலுவான குரல். ஆனால் மலேசியாவில் எழுத்தாளனே சுரண்டப்படுவதும் அதை எதிர்த்து குரல் கொடுக்காமல் வாளாவிருப்பதும் பல காலமாக நடந்து வரும் கொடுமை. (இந்த சுரண்டலுக்கு எதிராக எப்போதும் குரல் கொடுத்து வரும் சீ.முத்துசாமி, க.பாக்கியம் போன்றவர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.)

பாமரத் தமிழ் மக்களின் உரிமைக் குரலாக வெட்கமில்லாமல் பறைசாற்றிக்கொள்ளும் மலேசிய தமிழ் நாளிதழ்கள், எந்த பெருமுதலாளியின் சுரண்டலுக்கு முன்னும் சளைத்ததல்ல. 2002-ல் சிறுகதை எழுதத் தொடங்கிய நான் இதுவரையில் பத்துக்கும் குறைவான சிறுகதைகளை எழுதியுள்ளேன். ஒரே ஒரு சிறுகதைதான் தமிழ் நாளேட்டில் வெளி வந்தது. அப்போது இலட்சக்கணக்கில் விற்ற ஞாயிறுப் பதிப்பு, எழுத்தாளனின் படைப்புக்கு தந்த சன்மானம் என்ன தெரியுமா? ரி.ம.30. இத்தனைக்கும் அன்றைய எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்தான் அந்நாளேட்டுக்கு ஆசிரியராக இருந்தார். மில்லியன் கணக்கில் சம்பாதித்துக் கொண்டு மெர்சிடிஸ் பென்சில் வலம் வருபவர்கள் தமிழ்க் காவலர்களாம். தன் உழைப்புக்கு மரியாதையான ஊதியத்தை கோரும் எழுத்தாளன் பேராசைக்காரனாம். என்னே இவர்களின் சமுகநீதி.

அந்தச் சம்பவத்திற்குப் பிறகு என்னுடைய எழுத்துக்கள் அத்தனையும் சிற்றேடுகள் எனச் சொல்லதக்க காதல், வல்லினம், அநங்கம் ஏடுகளில்தான் வெளிவந்தன. சிலர் எழுதுவதுப் போல் இந்த குழுவினர் சிறுப்பிள்ளைத்தனமான கருத்துக்களை முன் வைப்பவர்கள் அல்ல. தங்களின் சிந்தனைக்கு உட்பட்ட உண்மைகளைத் தயங்காமல் முன் வைப்பவர்கள். அதன் போதாமை முறையாக சுட்டிகாட்டப்படும் பட்சத்தில் அவற்றோடு தொடர்ந்து உரையாட தயங்காதவர்கள். தலைவரின் இப்படிப்பட்ட சிறுப்பிள்ளைத்தனமான கூற்றுகளால் எங்கள் தலைமுடியைக் கூட அசைக்க முடியாது. இறுதியாக தலைவருக்குச் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அற்ப புகழுக்காகவும் விருதுக்காகவும் என் முதுகில் ஏறி சவாரி செய்ய யாரையும் அனுமதிப்பதில்லை. ஏனெனில் நான் சுரணையுள்ளவன்.

Top 


தர்க்கங்களின் நுண் அரசியல் - ஏ.தேவராஜன்

தர்க்கங்களின் நிமித்தம் குரோதங்கள் முளைவிடவேண்டுமென்பதல்ல. அவற்றிற்குள் இயங்குகின்ற நுண் அரசியலின் தகிடு தத்தங்களைத் தோலுரித்துக் காட்டுவதே தர்க்கங்களின் உச்ச உண்மையாக இருக்கின்றது. அண்மைய காலமாக வாதப் பிரதிவாதங்களுக்கிடையில் அரங்கேறும் சொல்லாடல்களில் அவற்றின் சுனைப்பான வார்த்தைப் பிரயோகங்கள் சிக்கிக்கொண்டு ஆரோக்கியமான செல்லிலக்குக்கு ஊறு செய்வதாகப் படுகிறது. அந்தப் பனிப்போர் ஆரோக்கியமானதா, எதிர்மறையானதா என்பதை முடிவு செய்வதற்கு ஒருவன் நடுநிலைமையாளன் என்பதைக் காட்டிலும் அவனது துறைசார் ஈடுபாடே முகாமையாகப்படுகிறது. அதாவது துறைக்கு அப்பாற்பட்ட, நுனிப்புல் மேய்கின்ற இயல்பைக் கொண்ட ஒருவன் மூக்கை நுழைப்பதைவிட ஒதுங்கி நின்று பார்ப்பதே உத்தமம். ஆழ அகலமற்ற தகாதோரின் தலையீடுகளே பெரும்பாலான சிக்கல் இல்லாத முடிச்சுகளையுங்கூட குழப்பிவிடுகிறு.

தமிழ் இலக்கியம் சார்ந்த மலேசிய உலகில் இந்தத் தர்க்கங்களுக்கு மூலமானவர் அதன் தலைமைபீடத்தில் அமர்ந்திருப்பவரையே சுட்டிக்காட்டப்படுகிறது. தர்க்கங்களின் சிக்கவிழ்ப்புக்குரிய பண்பியல்பைக் கொண்டு வழிநடத்துவதும் இயக்கத்தை மேன்மைக்கு இட்டுச் செல்வதும் அநேகமாக அனைத்து அமைப்புகளுக்கும் பொருந்தக்கூடியவைதான். இதில் எழுத்தாளர் சங்கமும் விதிவிலக்கல்ல என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். மாற்றுக் கருத்துக்குச் செவிசாய்ப்பதும், அதனைத் தகுமுறையில் எதிர்கொள்வதும், பின்பு அதற்கோர் அறிவார்ந்த தீர்வு காண்பதுவுந்தான் அவரின் செயற்பாடுகளைப் பட்டை தீட்டும். தலைமை பீடத்தில் உள்ளோர் காலம் முழுக்க தம் மீது தூசு படியக்கூடாது என்பதில் நியாயமில்லை. அதே வேளையில் தூசு வந்து படிவதும் மோதுவதும் தூசு புரிந்த தவறாகாது; அஃது இயல்பு. தூசைத் தட்டிச் சுத்தம் செய்வதை விடுத்துச் சட்டையைக் கிழித்துக் கொள்வது எவ்வகையில் அறிவுடைமை? எல்லார்க் கண்களும் தலைமையைக் கவனித்துக் கொண்டுதானிருக்கின்றன. ஆனால், எல்லார் விழிகளுமா பேசுகின்றன? பேசா விழிகளைவிட உண்மையைப் பேசுகின்ற விழிகளைத் தாராளமாக நம்பலாம். வேறு மாதிரியாகச் சொல்லவேண்டுமானால், எதிரிகளாகக் கருதப்படுபவர்கள் அக்கறையானவர்கள் என்று சொல்வதே நனிச் சிறப்பு. எனவே, சிக்கலைக் கையாள்வதில் மிகுந்த நிதானத்துடன் இருப்பதும் தர்க்கங்களின் மூலத்தை அலசுவதும் தலைமைக்கு வலுச் சேர்க்கும்.

முதலாவதாக, மலேசிய தமிழ் இலக்கிய உலகம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவருவதை உலகத் தமிழர்கள் அறிந்துவைத்திருக்கின்றனர் என்றால் அதற்கு முழுமுதற் காரணம் மாற்றுச் சிந்தனையும் கோட்பாட்டியலையும் அறிந்து எழுதுகின்ற தீவிர படைப்பாளர்களால்தான். பழையவர்களில் ஒரு சிலரும் புதியவர்களில் ஒரு சிலரும் வெகுச் சிறு எண்ணிக்கையிலான எழுத்தாளர்கள்தான் இந்த நவீன நகர்தலை இந்த மண்ணில் முடுக்கிவிட்டுள்ளனர். இவர்கள் யாவரும் சங்க நடவடிக்கைகளின் மூலமாகத்தான் உருவானார்கள் என்பதில் 10% உண்மை மட்டுமே உள்ளது. அதாவது சங்க நடவடிக்கைகளின் மூலம் நமது மலேசிய தமிழ் இலக்கியம் எத்துனைக் கீழ் நிலையில் உள்ளது என்பது மேற்குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். ஆனால், எல்லோருமா இந்த உண்மையை மேலிடத்துக்கு எடுத்துச் சொல்கிறார்கள்? புதுக்கவிதை பற்றிப் பேசுபவர்கள் அதன் நீட்சியையும் உள்ளடக்கித்தான் பேச வேண்டும். தற்கால இலக்கிய உலகில் நடக்கின்ற கட்டுடைப்பையும் மீள் கட்டுதலையும் மரபார்ந்த இலக்கிய (புதுக்கவிதை உட்பட) மீறுதல்களையும் தவறென்றும், ஆபாசம்-அருவருப்பு, வக்கிரம்-வன்மம், என்று கறுப்புப் பட்டியலிட்டு வசை பாடுவது தம் தலைமைப் பொறுப்பின் நிதானத்திற்குச் சறுக்கலாகும். அப்படிப் பேசவோ, சம்பந்தப்பட்ட சிந்தனையாளர்களை அரவணைக்கவோ தவறினால் அது நவீன இலக்கியத்தைப் பேசுபவர்களின் தவறாகாது. மொழியில் நீட்சித் தன்மை காலா காலம் நிகழ்ந்து வருவதைப் புதுக்கவிதை அரங்கை நடத்துபவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்; அதற்கேற்ற தக்க நடவடிக்கைகளுடன் துலங்க வேண்டும்.

பெ. இராஜெந்திரன் அவர்கள் நன்னோக்கத்தை முன்னிட்டு நிறைய இலக்கிய நிகழ்வுகளை முன் நின்று நடத்தியுள்ளதை மறுக்க முடியாது. புதுக்கவிதைக் கருத்தரங்கம், சிறுகதைக் கருத்தரங்கம், தமிழக இலக்கியச் சுற்றுலா போன்றவற்றை உயர் நோக்கில் ஏற்று நடத்தியுள்ளமை பாராட்டுக்குரியதெனினும், அவையே இலக்கியச் செழுமைக்கு வழிகோலிவிடாது. அது இராஜேந்திரன் அவர்களின் தவறல்ல. கையில் கிடைத்த களிமண்ணை வைத்துத்தான் வனைய முடியும் அல்லது அப்படிப்பட்ட களிமண்ணைத் தகுந்த இடங்களில் தேடுவது அவரது தலைமைக்கு பலம் கூட்டும். நமது வாசககர்களும் இலக்கியவாதிகளும் 85% பேர், இதுவரை நடந்த பாதையை விட்டு நகர்வதாயில்லை; வளர்வதாயுமில்லை. அப்படியொரு வாய்ப்பை அவர் ஏற்படுத்தித் தந்தாரா என்றும் தெரியவில்லை. இன்று மலேசிய இலக்கிய உலகின் பெரும்பான்மையான செக்கு மாட்டுத்தனத்திற்கு இதுவே முகாந்திர காரணம். இதில் எல்லோரும் சம்பத்தப்பட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு மக்கள் ஓசையில் முனிஸ்வரன் குமாரின் சிறுகதை ஒன்று பிரசுரம் கண்டிருந்தது மகிழ்ச்சி. ஆனால், சிறுகதைக்குரிய பக்கத்தில் ‘மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதைப் பட்டறையில் உருவான இளம் எழுத்தாளர்’ என ஒரு வாசகத்தையும் இடம்பெறச் செய்திருந்தார் இராஜேந்திரன். இஃது அவருக்கே மிகையாகப் படவில்லையா? பிறகு, மா. இராமையாவின் சிறுகதை இடம்பெற்றிருந்தபோது இதுபோல ஒரு வாசகத்தைக் குறிப்பிட்டுத் தம் இருத்தலை நிலைநிறுத்த முற்பட்டார். இதன் உள்நோக்கம் இராஜேந்திரன் அவர்கள் திருவாய் மலர்ந்தால் மாத்திரமே தெரியும். அண்மைய காலமாக அவர் இனம்புரியாத் தடுமாற்றத்தில் இருப்பதுபோல் தெரிகிறது. அதன் விளைவுதான் பெர்னாமா நேர்காணலின் வெளிப்பாடோ என்று தெரியவில்லை. இலக்கியத்தில் நுண் அரசியல் பேசலாம். ஆனால், பொறுப்புக்குரியவர்கள் சுயத்தைக் கருத்திற் கொண்டு அரசியலாக்கக் கூடாது. அஃது இலக்கியத்தை வளப்படுத்தாது. மேலே குறிப்பிட்டது மாதிரிக்கு ஒன்று மட்டுமே. தர்க்கங்களின் உச்சபட்ச விளைவு பட்டை தீட்டப்படுதலும் பலப்படுதலும் ஆகும். எமது கருத்துகளும் நேர்மையின் அடிப்படையில்தான் என்பதை இராஜேந்திரன் அவர்கள் உணர்வார் எனும் நம்பிக்கை எனக்குண்டு.

Top 


எது ஆபாசம்? - தோழி

2005 அல்லது 2006, ஒரு மாலை வேளையில் எழுத்தாளர் சங்கத் தலைவரிடம், சங்க உறுப்பினராக சேர விண்ணப்ப படிவம் கேட்டேன். இப்போது போலில்லாமல் இன்னும் படு சுமாரான தரத்தில் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தேன். அதுவும் தமிழ் பண்புகளைக் உயர்த்திப் பிடிக்கும் கவிதைகள். உதாரணமாக நல்ல காதலனுக்காக ஏங்கும் மங்கையரின் ஏக்க கவிதைகள்.

என்னுடைய கேள்விக்கான தலைவரின் பதில் அதிர்ச்சியைத் தந்தது. ‘சங்கத்தில் சேர்ந்தால் எனக்குதான் ஓட்டு போட வேண்டும்’ என்றார் தலைவர். அச்சமயம் அவருக்கு சங்கத் தேர்தலில் கடுமையான போட்டி நிலவியது. மூன்றாந்தர அரசியல் கட்சிக்கு ஆள் பிடிப்பது போல் இருந்தது அவருடைய செய்கை. உறுப்பினராகும் எண்ணத்தை அன்றோடு கைவிட்டு விட்டேன்.

2008-ல் திருமணமானவுடன் தோழருடன் சுங்கைப்பட்டாணி செல்ல வேண்டியிருந்தது. தோழரும் என்னைப் போலவே சுமாராக எழுதுபவர் என்பதால் அங்குள்ள மாநில எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார். அப்போது எழுத்தாளர் சீ.முத்துசாமி மாநில சங்கத்தின் தலைவராக இருந்தார். அவருடைய தலைமைத்துவத்தின் போது இரண்டு தவணைக்கு மேல தலைவராக நீடிக்க முடியாது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

எனக்கு இது மிக ஆச்சரியத்தைக்கொடுத்தது. சாகும் வரை பதவி நாற்காலியில் ஒட்டிக் கொண்டிருக்க ஆசைப்படுபவர்கள் மத்தியில் இப்படியும் சிலர். நீண்ட காலம் பதவிலிருப்பவர்கள் பதவியை துஷ்பிரயோகம் செய்வதுதான் நாம் தொடர்ந்து உணரும் அனுபவம். புதியவர்கள் பதவிக்கு வரும்போது குறைந்த பட்சம் அவர்களிடம் மாற்று சிந்தனையும், புதிய அணுகுமுறையையும் எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில் பெர்னமா பேட்டியில் அங்கீகாரம் குறிதது கூறியுள்ளார் தலைவர். அங்கீகாரத்தை பற்றி சில வார்த்தைகள். மேடையில் மைக் கிடைத்துவிட்டால் தனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஓயாமல் ஒப்பாரி வைப்பதும், விருது கிடைத்தவுடன் இருக்கின்ற எல்லா பற்களும் தெரிய சிரிப்பவர்களை முதலில் கவனியுங்கள் தலைவரே!

கடைசியாக ஆபாசம் பற்றி சில வார்த்தைகள். தமிழகத்தில் பலர் விவாதித்து ஒருவழியாக ஓய்ந்து விட்ட சர்ச்சை இது. அதைப் பற்றிய எவ்வித புரிதலும் வாசிப்பும் இல்லாத உங்களைப் போன்றவர்கள் உத்தமர்கள் போல கருத்து சொல்வது வேடிக்கையானது. வெறும் அதிர்ச்சி மதிப்பிற்காகவும், விற்பனை நோக்கத்திற்காகவும் உற்பத்தி செய்யும் ஆபாச எழுத்துக்கள் அல்ல எங்களுடையது. சிக்கலான வாழ்வில் சமன் குலைந்த காமத்தின் பிரதிபலிப்பை வெறும் ஆபாசம் என குறுக்குவது சரியாகாது. மற்றப்படி மர்ம உறுப்புகளின் விவரிப்புகள் மட்டும் ஆபாசமாகது தலைவரே! ஜனநாயக ஓட்டுரிமையை விண்ணப்ப படிவத்தின் பதிலாக லஞ்சமாக கேட்பதும், தனக்குப் பிடித்தவர்களுக்கே தொடர்ந்து விருது கொடுக்கும் அசிங்கமும் நிச்சயம் மகா ஆபாசமானது என்பதை மட்டும் தெளிவாக சொல்லமுடியும்.

Top 


செயல்பாட்டில் எங்கே நவீனம்? - வீ.அ.ம‌ணிமொழி

‘நான் ஓர் எழுத்தாளர்’ என்று பறைச்சாற்றிக் கொள்ள இன்னும் தைரியம் பிறக்கவில்லை. என்னைப்போன்றக் கோழைகளை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் எந்தளவிற்கு வரவேற்கும் என்பதில் ஒரு சிறு ஐயம். ஞாயிறு ஏடுகளில் எழுதாமலும் ஆங்காங்கு நடக்கும் கூட்டங்களுக்குச் செல்லாமலும் வெறும் சிற்றிதழ்களில் மட்டுமே எழுதுவதால் இந்த ஐயம் இன்னும் வலுத்துள்ளது. சிந்தனை மாற்றத்தை இலக்கிய வடிவ மாற்றத்தை விரும்பாதவர்கள் என்னை போன்றவர்களை ஏற்பது சிரமம்தான்.

ஒரு டப்பிக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் காற்றைப் போல உலவும் இச்சங்கம் புதிதாய் எழுத்துலகில் நுழையும் எழுத்தாளர்களுக்குக் கொடுக்கும் மரியாதை மேலிருந்து கீழ் ஒரு பார்வை, ஏளன சிரிப்பு (இவனென்ன எழுதி கிழிச்சிட போறான்?). பல கேள்விகளுக்கும் பார்வைகளுக்கும் பதிலளித்தப் பின்னர், சில எடுபிடி வேலைகளைச் செய்தப்பின்னர், சில முடிவுகளுக்குக் கோவில் மாடுகள் போல் தலையாட்டிய பின்னர் ‘இவன் நல்ல எழுத்தாளர்’ என்ற அங்கீகாரம் கிடைக்கும். எழுத்தாளர் சங்கத் தலைவர் யாரைக் விரல் நுனியில் சுட்டிக் காட்டுகிறாரோ அவரே ‘நல்ல எழுத்தாளர்’.

ஒரு நீண்ட நாள் கேள்வி கடந்த ஆறு வருடங்களாக மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. உங்களுக்குப் பதில் தெரிந்தால் சொல்லுங்கள். இன்றளவும் எனக்கு தெரியவில்லை. எங்கு எழுத்தாளர் சங்க உறுப்பினர் பாரத்தைப் பெற்றுக் கொள்வது? மற்றொன்று உறுப்பினராவதற்கான அடிப்படை விதிமுறைகள் என்ன?. “புதிய எழுத்தாளர்களை நாங்கள் உருவாக்குகின்றோம். அவர்களை நாங்கள் வரவேற்கிறோம். அவர்களை உருவாக்க பல திட்டங்களைத் தீட்டி கொண்டிருக்கிறோம்” என வாய் வலிக்க பேசும் சங்கத் தலைவர் இதுநாள் வரை ஓர் எழுத்தாளன் மிக எளிதாக உறுப்பினர் பாரத்தைப் பெற்றுக் கொள்ளும் எளிய வடிவை உருவாக்கியபாடில்லை. என் இல்லத்திற்கு மிக அருகாமையில் இருக்கும் எழுத்தாளர் கட்டிடமோ வருடத்திற்கு ஒரு முறைதான் திறக்கும் போல. அங்கு, காப்புறுதி நிறுவனம் ஒன்றிற்கு கட்டிடத்தை வாடகை விட்டிருந்தார்கள். இப்பொழுது யாருக்கென்று தெரியவில்லை. விவரம் தெரிந்த வயதில் மலேசிய எழுத்தாளர்களுக்குக் கட்டிடம் உண்டென்று மார்தட்டிக்கொண்ட காட்சி நிழலாடுகிறது. இன்று அதன் செயல்பாடு என்ன?

நான் பார்த்து பல மேடைகளில் தலைவர் “இளைய எழுத்தாளர்கள் காணாமல் போய்விடுகிறார்கள்” எனக் குற்றம் சாட்டுவது வழக்கம். குற்றத்தைமுன் வைக்கத் தெரிந்த தலைவருக்கு இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் ஏன் தோன்றவில்லை? உறுப்பினர் பாரம் வேண்டும் என்றால் என் வீட்டில் பெற்றுக் கொள்ளுங்கள் அல்லது என் தொலைபேசி எண்ணுக்குத் தொடர்ப்பு கொள்ளுங்கள் என கூறும் தலைவரைக் கண்டு மனம் நெகிழ்கின்றேன். சங்கச்செயலாளர் செய்ய வேண்டிய வேலைகளைத் தலைவரே களம் இறங்கி செய்வது தலைவரின் கடமையுணர்ச்சியையும் சங்கத்தின் மேல் உள்ள பற்றையும் காட்டுகிறது.

காலம் மாறிக் கொண்டிருக்கிறது. காலத்தோடு வாழாதவன் பின்தள்ளப்படுவான் என்பது நான் அறிந்த உண்மை. இணையத்தின் வழி உலகத்தை நொடியில் அலசி ஆராய்ந்து விடலாம். அப்படி இருக்க எழுத்தாளர் சங்கத்திற்கெனொரு இணையத் தளம் இல்லை என்பது பெருமைதான் (அப்படி உள்ளது என்று கூறினால் அதன் செயல்பாடு என்ன?). மலேசிய இலக்கியத்தைத் தமிழ்நாட்டில் வளர்க்க பல ஆயிரங்கள் செலவழித்து விமானப் பயணம் செய்யத் தெரிந்த தலைவருக்கு ஏன் உலகமே கொண்டாடும் இணையத்தின் வழி மலேசிய இலக்கியத்தைப்பரப்ப தெரியவில்லை என்பது ஆச்சிரியம்தான். ஓ...இணைய‌த்தின் மூல‌ம் மாலை அணிவிக்க முடியாத‌ல்ல‌வா? உலகம் முழுவதும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். தமிழ் நாட்டில் மட்டும் அல்ல.

எழுத்தாளர்களுக்கு வாசிப்பு எத்தனை முக்கியமானது. ஒரு பத்திரிகை துறையில் இருக்கும் தலைவருக்கு எழுத்தாளர்களின் படைப்புகளை, கருத்துகளை, விமர்சனங்களை வரவேற்கும் வண்ணம் நாளிதழ்களைத் தவிர்த்துச் சங்கத்திற்கென ஓர் ஏடு தொடங்கும் எண்ணம் தோன்றாதது ஒரு வேடிக்கைதான். முன்பு மூன்று மாதத்திற்கு ஒருமுறை புதுக்கவிதை திறனாய்வு கட்டுரை அடங்கிய நூலை வெளியிட்டது, இப்போது ஞாபகத்திற்கு வருகிறது. அது ஓர் அழகிய கனா காலம்.

Top 


எதிர்பார்ப்பு - இலக்கியக்குரிசில் மா. இராமையா

மலேசிய தமிழ் எழுத்துலகத்தைத் திரும்பிப் பார்த்தால் ஓர் அதிசயமும் மலைப்பும் கண்முன்னே தோன்றும். எந்த அடிப்படையும் இல்லாமல், புதிதாகப் பதியம் போட்டுத் தமிழை வளர்த்த பின்னரே இலக்கியம் பற்றிச் சிந்திக்க முடிந்தது. அன்றைய எழுத்தாளனுக்கு இரண்டு கடப்பாடுகள் இருந்தன. ஒன்று, மொழியை வளர்ப்பது. இரண்டு, இலக்கியம் படைப்பது. இன்றுபோல் பல்கலைக்கழகம் வரை சென்று தமிழைக் கற்றுப் புலமை பெறும் வாய்ப்பு இல்லாதிருந்தும், தமிழின்பால் ஏற்பட்ட தாக்கமே தமிழ் இலக்கியம் உருவாக வழியமைத்துக் கொடுத்தது.

'இந்நாட்டில் தமிழ் எழுத்தாளர்களை உருவாக்குவதற்கான நேரம் இன்னும் கனியவில்லை' என்று கோ.சா. கையை விரித்துத் தமிழகப் பத்திரிகைகளிலிருந்து சிறுகதைகளைக் கத்தரித்து வெளியிட்டுக் கொண்டிருந்தபோது கந்தசாமி வாத்தியாரின் 'கதை வகுப்பு' ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தமிழ் முரசும் சிறுகதைப் போட்டிகளை நடத்தி எழுத்தாளர்களை ஊக்குவிக்கத் துவங்கியது. இன்னும் பலரும் இலக்கியத் துறை வளர்ச்சி காணவும் வளம் பெறவும் இந்த நற்பணியைச் செய்திருக்கிறார்கள். இது முந்தைய வரலாறு.

எழுத்தாளர்களின் படைப்புகளில் திரட்சியும் முதிர்ச்சியும் தரமும் கூடியபோது, அவற்றைப் பத்திரிகைகளில் பார்ப்பதோடு திருப்தி அடைந்துவிட எந்த எழுத்தாளனும் நினைப்பதில்லை. அவற்றிற்கு ஓர் அடையாளம் - பதிவு ஏற்படுத்தி வைப்பதையே பெரிதும் விரும்புவான். தமிழகம் போல எழுத்தாளர்களின் நூல்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையலான படிகளை நூலகங்களுக்காக வாங்கி ஆதரவு தரும் நிலை இங்கு இல்லை.

ஒவ்வோர் எழுத்தாளனும் தன் படைப்புகளை நூலாக்கிப் பதியம் போட்டு வைக்கத் தன் சுயமுயற்சியைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. வெளியிடப்படும் நூல்களைப் பரவலாக விநியோகிக்கும் வாய்ப்புக் கிஞ்சிற்றும் கிடையாது. யாராவது 'பிரமுகர்' களின் தலைமையில் நூல் வெளியீடு செய்து திரட்டப்படும் பணம் - 'வெண்டைக்காய்' அளவு செய்த செலவுக்குச் 'சுண்டைக்காய்' அளவு தேறுவதுகூட கடினம்.

எனது 'மலேசிய தமிழ் இலக்கிய வரலாறு' (1979) நூல் வெளியீட்டு விழாவிற்குத் தலைமை தாங்கிய டத்தோ ஸ்ரீ சாமிவேலு அவர்கள் “இன்னும் எத்தனை காலத்திற்கு நூல் வெளியீட்டு விழாவை நடத்திக் கொண்டிருக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டதோடு நின்றுவிடாது ஓர் ஆலோசனையையும் சொன்னார். “இந்நாட்டில் ஐந்நூறுக்கும் அதிகமான தமிழ்ப் பள்ளிகள் இருக்கின்றன. ஒரு பள்ளி இரண்டு நூல்கள் வீதம் எடுத்துக்கொண்டால் ஆயிரம் பிரதிகள் சல்லியாகத் தீர்ந்துவிடும்” என்றார். அருமையான யோசனை. இந்த நூல்களை எப்படிப் பள்ளிகளில் கொண்டு சேர்ப்பது? அது மட்டுமல்ல, தமிழாசிரியர்கள் மலேசிய படைப்புகளை வாங்கி ஆதரிப்பதில்லை. அக்கரை படைப்புகளில் காட்டும் ஆர்வத்தை உள்ளூர்ப் படைப்புகளில் துளி அளவாவது காட்டலாம்! ஒரு வேளை அவர்களுடைய வாசிப்புத் தரத்திற்கு உள்ளூர்ப் படைப்புகள் இல்லையோ என்னவோ !

டத்தோ ஸ்ரீ சாமிவேலு அவர்கள் சொன்ன திட்டத்தை அப்படியே திருப்பிப் போட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும். நாலாயிரம் ம.இ.கா கிளைகள் நானூறு தொகுதிகள். தொகுதி ஒன்று ஐந்து படிகளை எடுத்துக்கொண்டால் இரண்டாயிரம் படிகள் விற்பனையாகிப் பரவலாகப் படிக்கும் வாய்ப்பு உருவாகும். இவையெல்லாம் எதிர்பார்ப்பு! ஆனால், இவை கானல் நீர்தான்! தமிழ் எழுத்தாளர்கள் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பதைவிட, எழுத்தாளர்களுக்குச் செய்யக் கடமைப்பட்டுள்ள மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்திடமிருந்து அதிகமாகவே எதிர்பார்க்கிறார்கள். அதற்காக, ம.த.எ.ச, எழுத்தாளர்களுக்காக இதுவரை எதுவுமே செய்யவில்லை என்று பொருள்படாது.

தொடக்க காலத்திலிருந்தே எழுத்தாளர்களுக்காகப் பல செயல் திட்டங்களைச் செயல்படுத்தி வந்திருக்கிறது. முத்தமிழ் வித்தகர் முருகு. சுப்பிரமணியம், சிறுகதைச் சிற்பி லாபு சி. வடிவேலு காலம் தொடங்கி சிறுகதைக் கருத்தரங்குகளை நடத்தி தேர்வு பெற்ற சிறுகதைகளை 'பரிசு' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளது. திரு எம். துரைராஜ் தலைமைத்துவத்தில் 'புதையல்' சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. திரு. ஆதி. குமணம் தலைமைத்துவத்தில் சிறுகதைக் கருத்தரங்கு நடத்தப்பட்டிருந்தாலும், 'கடிகாரக் கதைகள்' போட்டி நடத்தி, 'சமுதாயக் கதைகள்' என்ற தலைப்பில் வெளியீடு செய்துள்ளார். இப்போது ம.த.எ.சங்கத்தின் தலைமைத்துவத்தை ஏற்றிருக்கும் திரு. பெ. இராஜேந்திரன், ஒரு படி மேலே சென்று சிறுகதை, உரைவீச்சுக் கருத்தரங்குகள் எனப் பல கருத்தரங்குகளை நடத்தியிருக்கிறார். சிறுகதைக் கருத்தரங்குகளில் தேர்வு பெற்ற சிறுகதைகளில் ஒரு கால எல்லைக்குட்பட்ட படைப்புகளை மட்டும் தொகுப்பாக வெளியிட்டுள்ளார்.

இரண்டு முறை தமிழகத்துக்குச் சில எழுத்தாளர்களுடன் இலக்கியச் சுற்றுச் செலவை மேற்கொண்டு, உள்ளூர்ப் படைப்புகளை அங்குள்ள பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இவ்வளவும் செய்துள்ள எழுத்தாளர் சங்கத்திடமிருந்து வேறு சிலவற்றையும் எழுத்தாளர்கள் எதிர்பார்க்கவே செய்கின்றனர். பணம், புகழ், சொத்து, சுகம் அனைத்திலும் உயர்ந்து நிற்கும் வைரமுத்து அவர்களின் 'கள்ளிக்காட்டு இதிகாசம்' நூலை இங்கே அறிமுகம் செய்துவைத்து இலட்சக் கணக்கில் பணம் திரட்டிக் கொடுத்தது அவசியந்தானா என்று கேட்கின்றனர்.

மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் நூல்களை அச்சிட்டு வைத்துக்கொண்டு, பிரமுகர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி தேதி வாங்கி வெளியீடு செய்து திரட்டப்படும் பணம், நட்டக்கணக்கைத்தான் காட்டுகிறது. ஒரு வேளை கோலாலம்பூரில் நிலைமை வேறாக இருக்கலாம். நூல் வெளியீட்டு விழாவையே நம்பி இருக்காமல் இயல்பான ஒரு விற்பனைக்கு எழுத்தாளர் சங்கம் வழி காண வேண்டுமென்று எதிர்ப்பார்க்கிறோம்.

Top 


அரசியல் - மணிஜெகதீசன்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் என்பது ஒரு `பாப்` கலாச்சாரத்தை கட்டமைத்து வருகிறது. அதன் செயல்பாடுகள் பெரும்பாலும் குறுகியகால செயல்திட்டங்களையே முதன்மைப்படுத்தி, உள்ளீடற்ற அல்லது நீட்சியற்ற காரியங்களை பெரிய விளம்பரங்களுடன் தொடர்ந்து முன்னெடுக்கிறது. தமிழகத்திற்கு மேற்கொள்ளப்படும் குழுப்பயணங்கள், இலக்கியப்பயணங்கள் என பெயர்சூட்டப்படினும், எந்தவகையான தொடர்செயல்பாடுகளும் மேற்கொள்ளப்படாமல், சங்கத்தின் ஒரு சிலரின் சுய தேவைகளை சுமந்து, தீர்த்துக்கொள்ளும் களமாகிவிட்டது. ம.த.எ.சங்க நடவடிக்கைகளை இலக்கிய அரசியல் என்று சொல்வதுகூட சரியன்று; வெறும் அரசியல்தான்!

Top 


ஆற்றலும் தன்மானமும் - சி.அருண்

உலகெங்கிலுமுள்ள எழுத்தாளர் சங்கங்கள் இருநிலையிலான செயல்களை இடையறாது செய்கின்றன. எழுத்தாளனின் ஆற்றலை வளர்ப்பதும் அவனின் தன்மானத்தினைக் காப்பதுவுமே இவ்விரண்டு செயல்களாகும். இவ்விரண்டும் கைக்கூடிட எழுத்தாளனும் எழத்தாளர் சங்கமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்விரண்டு நிலைகளே தரமான படைப்பாக்கத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளன.

ஆற்றலும் தன்மானமும் குன்றிய எழுத்தாளனால் தரமான படைப்புக்களை உருவாக்கிட இயலுமா? படைப்பாக்கத் துறையில் அவனால் வெற்றிப் பெற்றிட இயலுமா?

மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் தாய் வீடாக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (ம.த.எ.ச) திகழ்கின்றது. தொடக்கக் காலம் முதற்கொண்டு மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு உதவிட வேண்டுமென்னும் நோக்கிலேயே இச்சங்கம் செயல்பட்டு வருகின்றது. எழுத்தாளனுக்கு விருது கொடுப்பது, பரிசுத்தொகை கொடுப்பது, தமிழகத்தைச் சுற்றிக் காட்டுவது முதலிய செயல்களில் முழுமையாக ஈடுபட்டுள்ளது. இத்தகைய செயல்களால் எழுத்தாளன் ஏதோவொரு நிலையில் நன்மை பெற வேண்டுமென்னும் நோக்கத்தினை இச்சங்கம் கொண்டிருக்கின்றது.

இத்தகைய உதவிகளைத் துணையாகக் கொண்டு தன் ஆற்றலை வளர்த்துக் கொள்வதோடு தன்மானத்தைக் காத்துக் கொள்ள வேண்டுமென்னும் பொறுப்புணர்வினை மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் பெறவில்லை. மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் பலவீனமாகும். இதனைச் சுட்டிக்காட்டி உணர்த்த வேண்டிய கடமை ம.த.எ.சங்கத்திற்கு உண்டு. ஆனால், ஏனோ தெரியவில்லை! ம.த.எ.ச. இதனைச் செய்யாமலிருக்கின்றது.

எழுத்துக்களைப் படைப்பாக்கி, படைப்புக்களை நூலாக்கி, நூல்களைக் காசாக்கும் தொழிற்சாலைகளாகவே மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் செயல்படுகிறனர். படைப்பு என்பது 'அறம் சார்ந்த தொழில்' என்னும் சிந்தனை நம் எழுத்தாளர்களுள் பெரும்பாலோருக்கு இல்லை.

மலேசியத் தமிழ் எழுத்தாளர்களையும் அவர்களின் படைப்புக்களையும் உலகத் தரத்திற்கு உயர்த்த வேண்டுமென்ும் பேராவலை ம.த.எ.ச. கொண்டிருக்கின்றது. மலேசியப் படைப்புக்களுக்கு தமிழகத்தில் மகுடம் சூட்ட வேண்டுமென்னும் நோக்கில் இடையறாமல் உழைக்கின்றது. ஆனால், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கும் அவர்களின் படைப்புகளுக்கும் மலேசிய (தேசிய) அளவில்கூட அங்கீகாரம் கிடைக்காமலிருக்கின்றது. மலாய், சீனம் எழுத்தாளர்களோடு போட்டியிடக்கூடிய வல்லமையை நாம் கொண்டிருக்கவில்லை. நம்முடைய ஆற்றலும் ஆளுமையும் நம்மளவிலேயே நின்றுவிடுகின்றது.

தமிழ்ப் படைப்புகளின் வல்லமையை நம் தேசியம் எவ்வாறு, எப்படி உணர்ந்துக் கொள்ளவிருக்கின்றது? இதற்கான முயற்சிகளையே ம.த.எ.சங்கம் மேற்கொள்ள வேண்டும். இம்முயற்சி வெற்றிப் பெறுவதற்கான ஆக்கத்தையும் ஊக்கத்தையும் கொடுக்க வேண்டியது தமிழ் எழுத்தாளர்களின் பொறுப்பாகும்.

Top 


எழுத்தாளர் சங்கமும் நானும் - எம். கருணாகரன்

மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் அறிமுகம் எனக்கு எப்போது என்று நினைத்துப் பார்க்கிறேன்.

1982 அல்லது 1983ஆக இருக்கலாம். அப்போது அதன் தலைவராக இருந்தவர் எம். துரைராஜ் என்று நினைக்கிறேன். நினைவு மங்கலாகத்தான் தெரிகிறது. சுங்கை வேயில் நடைபெற்ற, அதன் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு திடீர் கவிதை போட்டியிலும், அந்த வட்டார எழுத்தாளர் என்றும் பரிசைப் பெற்றதாக நினைவு. அந்நிகழ்வில் இன்றைய எழுத்தாளர் சங்கத்தின் தலைவரான திரு. ராஜேந்திரனும் கலந்துக் கொண்டு, பட்டி மன்றத்தில்லெல்லாம் பேசியதாக நினைக்கிறேன்.

அதன் பின், ஒரு ஆண்டு கூட்டத்தில் கலந்து, வாக்களித்தும் இருக்கிறேன். அச்சமயம் அமரர் ஆதி. குமணன் அவர்கள் தலைவர். அவ்வளவு தான் எனக்கும் எழுத்தாளர் சங்கத்திற்கான தொடர்பு நிலைகள். பிறகு அண்மையில் அதன் நடவடிக்கைகளின் கொஞ்சம் ஈடுபாடு காட்டியிருக்கிறேன். மலாக்காவில் நடைபெற்ற புதுக்கவிதை பட்டறை, கோலாலம்பூரில் நிகழ்ந்த சிறுகதை கருத்தரங்கு, மலாயா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற புதுக் கவிதை கருத்தரங்கு, கோலசிலாங்கூர் ராஜா மூசா தோட்டத்தில் நிகழ்ந்த புதுக்கவிதை பட்டறை. இவ்வளவு தான் எழுத்தாளர் சங்கத்தின் நிகழ்வுகளில் எனது ஈடுபாடு. அப்படியாயின், நான் எழுத்தாளர் சங்கத்தைப் பற்றி கருத்துரைக்க தகுதியானவனா என்றால் எனக்குள் ஒரு குற்றயுணர்வு எழும்புகிறது. முழு தகுதியுடையவனாக என்னை நான் பிரகடப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. ஆயினும், ஒரு படைப்பாளன் என்பதிலும், எழுத்தாளர்களின் தாய் இயக்கமாக அது இருப்பதாலும், கருத்து சொல்ல எனக்கு கொஞ்சம் தகுதியுண்டே என்றே நினைக்கிறேன்.

திரு. இராஜேந்திரனுக்கு முன்பு, பல ஆளுமைமிக்க இலக்கிய கர்த்தாக்கள், அதன் தலைமை பீடத்தை அலங்கரித்துள்ளார்கள். அவர்களின் பலர் படைப்பாளர்களாக இருந்தவர்கள். முத்தமிழ் வித்தகர் முருகு. சுப்ரமணியம், ஆதி.குமணன் போன்றவர்கள், அதன் தோற்றத்திற்கு ஒரு தனி மதிப்பை ஏற்படுத்தியிருந்தார்கள். அவர்களின் காலத்தில் இலக்கியத்திற்குள் அரசியல் இருந்தாலும், இலக்கிய வளர்ச்சியை முதன்மை படுத்தி, அரசியலை அதன் தேவைக்கு பயன்படுத்திக் கொண்டார்கள். பல கேள்விகள் எழுந்தாலும், அவர்களின் செயல்பாட்டில் இலக்கியம் முன்னிலை பெற்றதால், எழுத்தாளர் எழுத்தாளர்களுக்குரிய ஓர் இயக்கமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது. அந்நிலை தற்போது இருக்கிறதா என்றால், அப்படி ஒட்டு மொத்த எழுத்தாள சமூகத்தின் பிரதிநிதியாக எழுத்தாள சங்கம் இல்லையென்றே நினைக்கத் தோன்றுகிறது.

எழுத்தாளர்களை இனங்கண்டு, அவர்களை முன்னிலைப் படுத்தி கௌரவிக்கின்ற நிகழ்வு ஒவ்வொரு ஆண்டு கூட்டத்திலும் நிகழ்கிறது.

அதிக எண்ணிக்கையிலான விருதுகள் உள்ளன. ஆனால் அந்த விருதுகளை பெறுகின்ற எழுத்தாளர்களின் எழுத்தாளுமையை கணக்கிட்டால், அந்த விருது அவர்களுக்கு பொருத்தமானதா..? அல்லது கொடுக்க எழுதாளரின்றி வழங்கப்படுகிறதா? எப்படியாயினும் விருது பெறுகின்ற எழுத்தாளர்கள் பெருமைக்குரியவர்கள் தான், காரணம் எழுத்தின் மூலம் பெரிய சம்பாத்தியம் எதையும் பெற்று விடுவதில்லை. அதனால் இந்த முயற்சி தொடர்வதை பாராட்டலாம்.

இன்றைய இலக்கிய வளர்ச்சியில், மலேசிய தமிழ் இலக்கிய வளர்ச்சி மேம்பாடு அடைந்து வருகிறதா...? அதை முன்னிலைப் படுத்தி அதன் சார்பான நிகழ்வுகள் நிகழ்கிறதா என்று எண்ணிப் பார்க்கையில் கொஞ்சம் சங்கடமே தெரிகிறது.

நிறைய வெளிநாட்டு பயணங்கள், அதுவும் தமிழ் நாட்டுக்கு ‘இலக்கிய சுற்றுலாவை’ எழுத்தாளர் ஏற்பாடு செய்து வருவதை நாளிகைகளில் காண முடிகிறது. ஆயினும் அதன் பின் அல்லது அதில் கலந்து கொண்டு, எந்த அளவுக்கு தங்கள் எழுத்தாளுமையை மேம்படுத்தியிருக்கிறார்கள் நமது எழுத்தாளர்கள் என்பதும் கேள்விகுறி?

தமிழ் இலக்கிய வானில், புதிய நட்சத்திரங்களாக மிளிர்ந்துக் கொண்டிருக்கும், இளம் எழுத்தாளர்களின் எழுத்தாளுமையை, எழுத்தாளர் சங்கமும், அதன் தலைமையும் அறிந்திருக்கிறதா? அல்லது புறந்தள்ளி விடுகிறதா?

கவிதை, சிறுகதை, நாவல் துறைகளில் அதிலும் நவீன கவிதைகளின் தீவிரமான பங்களிப்பை வழங்கி வரும் ஒரு எழுத்தாளர் வட்டம், மிக அழுத்தம் கொண்டு உருவாகி வருகிறது. அவர்களின் செயல்பாடுகள் ரொம்ப தெளிவாகவும், உறுதியாகவும் இருப்பதைப் காணவும் முடிகிறது.

ம.நவீன், ப.அ.சிவம், மஹாத்மன், யுவராஜன், யோகி, தோழி, தினேஸ்வரி, மணிமொழி, தேவராஜன், கோ.புண்ணியவான், கோ.முனியாண்டி, சீ.முத்துசாமி, ந.பச்சைபாலன், சீ.அருண், மகேந்திர நவமணி, பாலமுருகன் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இவர்களின் எழுத்துக்களுக்கு அங்கீகாரம் கிடைக்குமாவென அவர்கள் ஏங்குவதாக தெரியவில்லை. ஆனால் எழுத்தாளர் சங்கம் அவர்களின் எழுத்துக்கான கௌரவிப்பை செய்கிறதா? என்றால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையும் எதுவும் தெரியவில்லை.

எத்தனையோ விருதுகளை வழங்கி வரும் எழுத்தாளர் சங்கம், இவர்களுக்கென்று தனித்த அடையாளமென ‘நவீன இலக்கிய பார்வைக்குள்’ விருதுகள் வழங்குவதை நடைமுறைப்படுத்தலாம்.

எழுத்தாளர் சங்கத்தின் செயலவையில் எழுத்தாண்மைமிக்க உறுப்பினர்கள் உள்ளனர், அவர்கள் இதை பற்றி தீவிரமாக சிந்திப்பார்களா?

இன்றைய இலக்கிய உலகம், அந்த இளைய எழுத்தாளர்களின் கைகளின் ஆளுமையில் அடங்கியிடுகிறதென்பதை நாம் மறுத்து விட முடியாது. நாளைய எழுத்து உலகமும், அவர்களின் படைப்புக்களின் பங்களிப்பை வைத்தே, மலேசிய இலக்கியத்தை விமர்சிக்கும்.

நான் இன்னமும் விலகி நின்று வேடிக்கை பார்க்கும், பார்வையாளனாகவே இருக்கிறேன். என்னைப் போல் இன்றும் அநேகர் எழுத்தாளர் சங்கத்தை விட்டு விலகி கிடக்கிறார்கள். அனைவரையும் அரவணைத்து செல்லும் ஒரு தாய் இயக்கமாக மலேசிய எழுத்தாளர் சங்கம் விளங்கிட வேண்டும். முயற்சிப்பார்களா......?

Top 


மதிப்பின்றி வந்த மதிப்பு! - க.பாக்கியம்

மலேசிய இலக்கிய உலகில் ஈடுபட்டுள்ள எழுத்தாளர்களின் சேவை ஈடு இணையற்றது. தன்னலன் கருதாதது.

சமூக அநீதிகளைச் சமூகப் பார்வைக்குக் கொண்டுவரக் கூர்தீட்டப்பட்டவையே அவர்களின் எழுதுகோல்கள். அவர்களின் புனிதப் பணிகருதி இலக்கிய ஆர்வமும் நன்மனமும் கொண்டவ்களால் உருவாக்கப்பட்டவை தான் கீழ்க் காணும் பரிசுத் திட்டங்கள்:

அ. இலக்கியப் போட்டிகள்

ஆ. புத்தகங்களுக்கான பரிசளிப்பு

இ. தமிழறிஞர்கள் பெயர்களால் வழங்கப்படும் விருதுகள்

பணம் (கூலி) வாங்காமல் ஆற்றப்படும் எழுத்துப் பணிக்கு நன்றிக் கடனாற்றும் புனிதத் தொண்டாகவே மேற்கண்ட நன்முயற்சிகள் வடிவமைக்கப்பட்டுச் செயற்படுத்தப் படுகின்றன.

தொடர்ந்த காலப்போக்கின் விளைவாக இலக்கியத்தினூடாகப் புகுந்து வசதியாகச் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்ட தன்னல வாதிகளின் செயலால் ஒரு சமூகப் பணியின் அளவுகோல் அவலத்திற்குள்ளானதும், அதன் விளைவாகப் பரவலாக எழுந்துள்ள குறைகூறல்களும்.... ஒரு புறம் இருக்கட்டும்.

முதலிரு திட்டங்கள் போல மூன்றாவது திட்டமான விருதளிப்பும் கால நியதிப்படி நடக்க வில்லை என்பதும், எழுத்தாளர்களின் மன வருத்தத்திற்கு உரியதாக விளங்குகின்றது. காரணம் தமிழறிஞர்கள் பெயராலான விருதளிப்பு என்பது தகுதி அடிப்படையில் வழங்கப்படுவது. அதுவுங்கூட, மரபொழுங்கு மீறியே பலகாலம் நடத்தப்பட்டு வருவதை எழுத்தாளர் சங்கம் வெளியிடும், எழுத்தாளர் பட்டியலிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக எழுதிவரும் எத்தனையோ தகுதி வாய்ந்த மூத்த எழுத்தாளர்கள் இப்பட்டியலில் இடம் பெற்றிருக்க வில்லை என்பது இலக்கிய நீதியை மதிப்பவர்களால் ஏற்கவியலாத ஒன்றாகும்.

விடுபட்டவர்கள் பட்டியலில் நானும் இடம்பெற்றிருக்கிறேன் என்பதைச் சொல்லிக் கொள்ளச் சரியான தருணம் இதுவே (காரணம் பின்னர் தெரியவரும்; தொடர்ந்து வாருங்கள்)

எனக்குள்ளும் எதிர்பார்ப்புகள் நிறையவே இருந்தன. பரிசுபெற வேண்டும்; பாராட்டுப் பெற வேண்டும் என்ற கனவுகளெல்லாம் மனத்தில் நிறையவே இடமிருந்தது. நான் முற்றும் துறைந்த ஞானியும் அல்லள்; எல்லாம் கடந்தவளும் அல்லள். இலக்கிய விருதுகளைப் பெறும் தகுதியும் உரிமையும் எனக்கு உண்டு என்பதைத் தலைநிமிர்ந்து என்னால் கூற முடியும். இதனை இலக்கிய உலகம் மறுக்குமா? தெரியவில்லை. அப்படியே மறுத்தாலும் எனக்கு எந்தவித நட்டமோ கவலையோ இல்லை.

காலம் மெல்லமெல்லக் கடந்து செல்லவே, எனது எதிர்பார்ப்புகளும் மெல்ல மெல்ல மறைந்து என்னை முற்றாகவே கடந்து போயின.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் தமிழறிஞர்களின் பெயரால் வழங்கப்படும் தங்கப் பதக்கம் பரிசுக்கு நான் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்ததுடன், மேலும் மகிழ்ச்சியும் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டிருந்தன. தொலைபேசி வழி, நான் அப்பரிசினை மறுக்கக் கூடாது எனவும் கோரிக்கை விடப்பட்டது.

எனினும் பரிசுத் தேர்வுக்கு நன்றி தெரிவித்து, அதனை ஏற்கவியலாத நிலைக்கு வருத்தம் தெரிவித்து, எனக்கு வழங்க முடிவெடுத்த அப்பரிசினைத் தகுதி வாய்ந்த ஓர் இலக்கியவாதிக்கு உரிய காலத்தில் வழங்கிக் கெளரவிக்குமாறு வேண்டுகோள் விடுத்து நான்கே வரிகளில் அக்கடிதத்தை முடித்து அனுப்பினேன்.

மிகக் காலந்தாழ்ந்து எதற்காக இது? எதுவோ ஒன்று திடீரென என்னை ஞாபகப் படுத்தி விட, ஒரு சப்பைக்கட்டுக்காகவோ...!

ஓ... இந்நாட்டு இலக்கியவாதிகள் என்ன ஏமாளிகளா? இளிச்சவாயர்களா? இந்தப் பரிசுகளுக்கும் பாராட்டுகளுக்கும் வீங்கி வெதும்பிக் கிடப்பவர்களா? கூப்பிட்ட குரலுக்குத் தட்டாமல் ஓடி வந்து தலைதாழ்த்திக் கரமுயர்த்தி நிற்க? இதைவிட ஓர் அவமானம் எழுத்தாளருக்கு நேருமா?

ஓர் எழுத்தாளனுககுரிய அங்கீகாரத்திற்குச் சில அடிப்படைத் தகுதிகள் இருக்க வேண்டுவது எவ்வளவு முக்கியமோ அதைப்போல பரிசுகள் வழங்கும் அமைப்புக்களின் தகுதி பற்றி இனிவரும் எழுத்தாளர்கள் சீர் தூக்கிப் பார்க்க வேண்டிய நிலை நேர்ந்துள்ளதை இப்போதிய இலக்கியச் சூழல் தெளிவாகவே உணர்த்துகிறது.

அ. நான் எடுத்துள்ள முடிவின் அடிப்படையில் சிறுகதைப் போட்டிகளில் பங்குபெறுவதை ஏற்கனவே தவிர்த்துவிட்டேன்.

ஆ. அடுத்து, மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் வழங்கும் தங்கப் பரிசு. இதனையும் முற்றாக நிராகரித்துவிட்டேன்.

சிறுகதை எழுதுவது என்பது எனது தனிப்பட்ட உரிமையும் உயிர்ப்பும் ஆகும். எனது எழுதுகோலின் கூர்மையைப் பரிசோதிக்க அவ்வப்போது சிறுகதைகளை எழுதிவருகிறேன்.

எனக்குத் தர முன்வந்த ‘தங்கப் பதக்கப் பரிசின்’ நிராகரிப்புக்குப் பின்னராவது, தகுதியுள்ள எழுத்தாளர்களுக்கு உரிய காலத்தில் வழங்கப்பட வேண்டியவற்றை வழங்க வேண்டும் என்ற தன்ணுணர்வு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு எழுமேயானால் அதுவே எனக்கு மனநிறைவு தருவதாகும்.

Top 


சிந்த‌னை மாற்ற‌ம் - கோ.முனியாண்டி

இனம், மொழி, இலக்கியத்தின் முதிர்ச்சியான காப்பகம் என்ற தகுதியை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏனோ இன்னமும் சரியான வழியில் சென்று நிரூபிக்கத் தவறியிருக்கிறது. தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தொடர்ச்சியான சார்பு நிலை கோட்பாடுகள் அதன் மீதான குற்றச் சாட்டுகள் அதிகரிப்பதற்கு காரணமாகிறது. இலக்கியத்தின் மீதான பார்வைகளில் தெரிய வேண்டியதும் தெளிய வேண்டியதுமான மேலதிக கவனக் குறைபாடுகளின் காரணமாக நவீன இலக்கியத்தின் மீதும், அதனை எழுதுபவர்களின் மீதுமான புற நடவடிக்கைகள் புறக்கணிப்பு நடவடிக்கைகளாய் மாறியிருப்பதாகவே பலருக்கும் புலப்படுகிறது.

உண்மையிலேயே இந்த நாட்டில் எழுதிக் கொண்டிருக்கும், ஓய்வெடுத்திருக்கும் அதிகமான எழுத்தாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், அதே அனுபவத் தகுதியைக் கொண்டிருக்கும் உலகளாவிய அமைப்புகளுடன் (உலகம் முழுவதும் உள்ள தமிழ் எழுத்தாளர் இலக்கிய வட்டங்கள், சங்கங்கள்) ஒப்பிடும் போது, முழு இலக்கிய வீச்சோடும் விசாலத்தோடும், ஆழ அகலத்தோடுமான சகலத்தோடும் இயங்கத் தவறியுள்ளது என்றே படுகிறது. இன்னும் எத்தனை காலத்துக்கு சுற்றுலாக் கனவுகளிலும், பயணம் தரும் குதூகலங்களிலும், தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் குளிர்விக்கும் கருவியாக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் பயன்படப் போகிறது? புலம் பெயர் தமிழர்களும், அவர்களின் தமிழ்ப் படைப்புகளும் உலகத் தரத்திற்கு மிக அருகில் மீட்சி பெற்று நிற்கும் போது ஒட்டுமொத்தமாக நம் அனைவரையும் சிக்கலின்றி சேர்த்து வைத்திருக்கும் சங்கத்தின் சம கால நோக்கமும் சித்தாந்தமும் என்ன?

யார் வந்தாலும், செய்வது சிறப்பானது என்றால் சிறந்ததொரு பதிவை ஏற்படுத்த முடியும். கூடுவோம், கூடிப்பேசுவோம். இலக்கியத்தில் இதுதான் சிறந்த வடிவம் என்று கூறுவதற்கு நாம் யார்? இதனைக் கூறுவதற்கு வரலாற்றுப் பெருமை கொண்ட எழுத்தாளர் சங்கத்திற்கு என்ன உரிமை?

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் வயதில் மூத்திருக்கலாம். தவறில்லை. ஆனால இலக்கியத்தின் வடிவங்களின் மீதான பார்வை ஊனங்கள் தவிர்த்து, என்று இளமையான சிந்தனைகளைக் கொண்டிருக்கப் போகிறது?

Top 


மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு காலத்திற்கேற்ப சிந்தனை மாற்றம் தேவை - ஜானகிராமன் மாணிக்கம்

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 1962ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக பதிவு பெற்று தற்பொழுது 38 ஆண்டு காலம் ஆகிவிட்டது. ஒரு இயக்கத்திற்கு 38 ஆண்டுகள் என்பது ஒரு முதிர்ச்சிபெற்ற வரலாறு ஆகும். ஆனால் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், மலேசிய நீரோட்டத்தின் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது அது ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே சுழன்றுக் கொண்டிருக்கிறது.

டேவான் பகாசா டான் புஸ்தாகா, கபேனா, தேசிய நூலகம் ஆகியவற்றின் வழி கிடைக்கப் பெறும் வாய்ப்புகள், நன்மைகள் போன்றவற்றை பெறுவதில் எழுத்தாளர் சங்கத்தின் நிலை குறித்து கேள்வி எழுகிறது. அதோடு அந்த அமைப்புகளோடு எவ்வாறு தொடர்பு கொள்ள வேண்டும், எவ்வாறு அவைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதனை சிந்திப்பது எழுத்தாளர் சங்கத்தின் பணிகளில் ஒன்று. ஆனால் அது அவ்வாறு சிந்திப்பதாக தெரியவில்லை. இது சம்பந்தமாக அதன் ஆண்டறிக்கைகளிலும் எந்த விபரங்களும் காணப்படுவதில்லை.

தற்போதைய மலேசிய சமூக வாழ்வியல் அடிப்படையில், தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் வெளிவருவது மிகவும் குறைவாக காணப்படுகிறது. ஓர் இனத்தின் வரலாறு, சமூக வாழ்வியல், மொழி, கலாச்சாரம், பண்பாட்டுக் கூறுகளை மற்ற சமூகங்களின் பார்வைக்கு கொண்டு செல்லவும் அதனை எவ்வாறு காலத்திற்கேற்ப படைக்க முயற்சிக்க வேண்டும் என்ற அடிப்படை கூறுகளை பழைய புதிய எழுத்தாளர்களுக்கு, எடுத்து கூறுவதில் அக்கறைக் கொள்ளாததால், நமது படைப்புக்கள் மற்றவர்களின் பார்வைக்கு கொண்டு செல்லப்படுவதில்லை. இதன் வழி எப்படி எவ்வாறு அவர்கள் அறிந்து கொள்ள முடியும் என்ற கேள்வியும் நமது மனதில் எழுகிறது.

நமது தமிழ் எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகள் எத்தனை மற்ற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டன. இதனை காலச்சூழலுக்கு ஏற்றவாறு செய்யப்படாத போது பதிவு என்ற ஒன்று இல்லாமல் போய்விடும். தேசிய நீரோட்டத்தில் நமது நிலை என்ன என்ற கேள்வியும் மற்றவர்களால் எதிர்காலத்தில் கேட்கக் கூடிய நிலை ஏற்படலாம்

புதிய எழுத்தாளர்களின் உருவாக்குவதில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் நிலை ஒரு தொய்வு நிலையிலேயே உள்ளது. முன்பும் தற்பொழுதும் கல்விமான்கள் பலர் சங்க நிர்வாகத்தில் இடம் பெற்ற போதிலும், படைப்பிலக்கியங்களை புதிய சூழலில் உருவாக்கவும் அதனை மேற்கொள்வதற்கான உத்தி முறைகளையும் இளம் எழுத்தாளர்ளிடையே உருவாக்குவதில் என்ன பங்கு வகிக்கின்றனர் என்பது ஒரு கேள்வி குறியாகவே உள்ளது.

இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளும்போது, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நவீன சிந்தனை, மற்ற மலேசிய படைப்பாளர்களுடன் அணுக்க உறவு, அரசு அங்கீகாரம் போன்றவற்றில் நன்மதிப்பைப் பெறுவதில் பின் தங்கியிருப்பது மன வேதனையை தருகிறது. எனவே, எதிர்காலத்தில் சங்கத்தின் செயல் நடவடிக்கை முறையில் நல்லதோறு மாற்றம் ஏற்பட வேண்டும் என்று எழுத்தாளர்களும், இந்திய சமுதாயமும் எதிர்ப்பார்க்கிறது.

Top 


மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும் கோவேறு கழுதைகளும் - சீ.முத்துசாமி

பெர்னாமா செய்தித் தொகுப்பில் அண்மையில் நமது மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவரும் வருடாந்திர தமிழக இலக்கியச் சுற்றுலா ஏஜென்சியின் நிறுவனருமான திரு.பெ.ராஜேந்திரன் அவர்கள் வழங்கிய பேட்டியில் - நமது இப்போதைய தமிழ் இலக்கிய உலகம் குறித்தும் - அதன் சில கூறுகள் குறித்தும் - தனது கூர்மையான அவதானிப்புகளை அள்ளி வழங்கியிருந்தார்.

அது நமக்கும் தொடர்புடைய ஒரு துறை என்பதால் இயல்பிலேயே நமக்கு அவரின் அவதானிப்புகள் முன் வைத்த கருத்துக் கருவூலங்கள் குறித்தெல்லாம் சில எதிர்வினைகள் தோன்றின. அதனைக் கூறும் உரிமையும் அவசியமும் இருப்பதை உணர்ந்து அவற்றை இங்கு சற்றே விரிவாக பதிவு செய்வதன் வழி அதனை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

எது சிறு கூட்டம்?

‘தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயல்பாடுகளை குறை கூறுபவர்கள் ஒரு சிறு கூட்டமே’.

அந்தச் சிறுகூட்டம் எது என்பதை தெளிவாக நீங்கள் அடையாளப்படுத்தாவிட்டாலும் - உங்களின் தொனியில் ஒலித்த ‘நெகடிவ்’ கூறு - அவர்கள் பொருட்படுத்தத்தக்கவர்கள் அல்ல என்பதான பொருள் கொண்டதாகவே இருந்தது.

சிறு கூட்டம் என்பதால் அவர்கள் முன் வைக்கும் விமர்சனங்கள் அலட்சியப்படுத்தலுக்குரியவை ஆகுமா?

20/80 சூத்திரத்தை தாங்கள் கேள்விப்பட்டதுண்டா? எத்துறையாக இருப்பினும் அதன் மேன்மைக்கு உந்து விசையாக இருப்பது அதன் 20 சதவிகித மனித வளமான ‘சிறு கூட்டமே!’ அதன் எஞ்சிய 80 சதவிகித மனித வளம் சராசரி அல்லது அதற்கும் கீழே.

எனவே ‘சிறு கூட்டம்’ என்பதால் அதனை ஒரு ‘நெகடிவ்’ விஷயமாக உருவகித்து ஒதுக்கி வைப்பது முற்றிலும் தவறானதொரு அணுகுமுறை.

இத்தகைய அணுகுமுறையால் சமூகப் பரப்பில் உருப்படியான கருதுகோள்களை உருவாக்கவும் அதன் வழி அதனை சரியான வழிக்குத் திசை திருப்பி அழைத்துச் செல்லவும் ஆற்றல் கொண்ட வீரியமிக்க ஓர் ஆக்கச் சக்தி நீர்த்துப் போக நேரிடுகிறது.

‘சிறுகூட்டம்’ என அவர்களை நீங்கள் முத்திரை குத்துவதன் பின்னனியும் அதுதான் என்பதில் சந்தேகமில்லை. அவர்களை நீர்த்துப் போகச் செய்வது.

ஜனநாயக சித்தாந்தத்தின் மூல சக்தியான பெருந்திரள் கூட்டம் உங்களுக்கு நன்கு பிடிபட்டிருக்கிறது. எனவே அந்த பெருந்திரள் கூட்டத்தை பல்வேறு தந்திரோபாயங்களின் வழி வசியப்படுத்தவும் கையகப்படுத்தி பாக்கெட்டுக்குள் போட்டுக் கொள்வதன் வழி உங்களின் சுயநல அரசியல் Personal Agendaவை சாதுரியமாக நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது உங்களால்.

அதாவது ஜனநாயக வழிமுறை வகுத்துக் கொடுத்த mob rule உங்களுக்குச் சாதகமாகி சமூக வெளியில் அதன் நலன் கருதி இயங்கும் பல்வேறு அமைப்புகளில் ஏதேனுமொன்றில் கொல்லைப்புற வழியாகவேனும் ஓட்டை போட்டு அதன் பதவி நாற்காலியில் நங்கூரம் பாய்ச்சி நிரந்தரமாக உட்கார்ந்து விட முடிகிறது.

அதன் பிறகு கேள்வி கேட்பவர்களை சிறு கூட்டம் என்று அலட்சியப்படுத்த ஏதுவாகிறது. mob rule என்பது அரசியலுக்கு மட்டுமல்ல சகலமும் அரசியல் மயமாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் இலக்கிய உலகிலும் அதுதான் சர்வம் ப்ரம்மாஸ்மி!

எனவே உங்களை விமர்சிப்பவர்களை சிறுபான்மை என்கிற வட்டத்துள் அடைத்து பெரும்பான்மையின் ஆதரவோடு உங்கள் அரசியல் சதுரங்க விளையாட்டை வெற்றிகரமாக நடத்திச் செல்ல முயல்கிறீர்கள்.

இந்தச் சிறுகூட்டம் குறித்த உங்களின் அடுத்த புகார் அவர்கள் எழுதுவதுதான் இலக்கியம் என்று இறுமாப்புடன் பேசி பிறர் எழுதுவதை கீழாக நினைக்கிறார்கள்.

அப்படி எவரும் பேசித் திரிவதாக தெரியாவிட்டாலும் நீங்கள் ரொம்பவும் ஆதங்கப்பட்டு இதைச் சொல்வதனால் சரி, ஒரு பேச்சுக்கு அப்படிப் பேசித் திரிவதாகவே வைத்துக் கொள்வோமே.

ஆனால், அத்தகையதொரு குற்றச்சாட்டை வைப்பவர் அதை வைப்பதற்குத் தகுந்தவர்தானா என்பதை நாம் முதலில் முடிவு செய்ய வேண்டும்.

அதன் அடிப்படையில் நோக்க உங்களுக்கு அத்தகைய தகுதி உண்டா என்பதை நீங்கள் ஒரு சுய பரிசோதனை செய்து பார்த்த பின்னர் அத்தகையதொரு கருத்தை சொல்லியிருக்க வேண்டும்.

சுய பரிசோதனை செய்தீர்களா? இல்லை என்பதுதான் அதற்கான தெளிவான பதில். காரணம் அத்தகையதொரு சுய பரிசோதனை நடந்திருக்கும் பட்சத்தில் இலக்கியத்திற்கும் உங்களுக்கும் உள்ள தூரம் அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் இருக்கும் தூரத்தை விடவும் சற்றே கூடுதல் என்பதை நன்கு உணர்ந்திருப்பீர்கள்.

சுருங்கச் சொன்னால்- இலக்கியம் குறித்துப் பேச நீங்கள் யார்? அத்தகையதொரு குற்றச்சாட்டை யாரேனும் ஓர் இலக்கியவாதி வைத்திருப்பின் அதற்குப் பொருள் இருக்கும். அது குறித்த வாதப் பிரதிவாதங்கள் முன்னெடுக்கப்படலாம். நியாயம் பிறக்கலாம்.

ஆனால், நீங்கள் அது குறித்து அங்கலாய்த்திருப்பது எப்படி இருக்கிறதென்றால் - ஐயா திருவேங்கடம் அவர்கள் அண்மையில் SPM 12 பாட தமிழ்மொழி / இலக்கியம் சார்ந்த பிரச்சனை குறித்து விவாதிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கூட்டத்தில் தமிழ்மொழி / இலக்கியம் சார்ந்த இயக்கத்தின் தலைவர் தனது பிள்ளைகளை குசுவிடக் கூட தமிழ்ப் பள்ளிகளின் நிழலில் அனுமதிக்காதவர் மேடை ஏறி தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் நேர்ந்துள்ள இந்த அவலம் குறித்து பொங்கி அழுது ஆவேச உரையாற்றியது போல ஏனோ ஒட்டமாட்டேன் என்று அடம் பிடிக்கிறது.

இவை போதாதென்று இந்தச் சிறு கூட்டத்தை ஆபாச எழுத்தாளர்கள் என்று வேறு வாய் கூசாமல் வசை பாடியிருக்கிறீர்கள்.

இலக்கியம் வேறு, அதைச் சார்ந்த இயக்கத்தில் ஆள் வைத்து ‘நாற்காலி’ பிடித்து பிழைப்பு அரசியல் நடத்துவது வேறு.

இரண்டுமே வெவ்வேறு முரண்பட்ட தளங்களில் இயக்கம் கொண்டவை. உங்களின் இந்த ஆபாச எழுத்தாளர்கள் என்கிற சொல்லாடலில் ஒளிந்திருப்பது உங்கள் குதர்க்க அரசியல் மூளையின் நுட்பமான செயல்பாடு என்பதில் சந்தேகமில்லை.

எதிரியை அடையாளம் காண். பேரம் பேசு. பேரத்திற்கு மடியவில்லையெனில் தாக்குதலைத் தொடங்கு.

சமூகத் தளங்களில் மிகுந்த தீவிரத்துடன் இயக்கம் கொள்ளத் தொடங்கிவிட்ட பல்வேறு சமூக அவலங்களை அதன் மூல வேர் தேடி அதில் பொதிந்திருக்கும் அருவருப்பான உண்மைகளை வெளித் தோண்டி கொண்டு வர அவர்கள் யத்தனிக்கும் பொழுதுகள் மிகவும் அந்தரங்கமானதும் வலி மிக்கதுமான காத்திரமான தருணங்கள்.

அத்தருணங்கள் தெரிவு செய்து கொடுக்கும் ‘சொல்லாடல்களும்’ தீவிரத் தன்மை கொண்டு குறி வைத்த இலக்கை இரக்கமின்றி உக்கிரத்துடன் தாக்கி கதி கலங்க வைக்கின்றன.

நீங்கள் குறிப்பிடும் சிறு கூட்டம் செய்து கொண்டிருப்பது அதைத்தான்.

கசடுகள் - அந்தத் தாக்குதலின் உக்கிரத்தை தாள இயலாமல் கத்திக் கதறுவது இயல்புதான். உங்களைப் போல!

‘மொழியின் காவலன்’ என்கிற பம்மாத்து பேனரை முதுகில் சுமந்து கொண்டு சாக்கடையில் அழுக்கைத் தின்று கொழுக்கும் மீனைப் போல இச்சமூக சீர்கேடுகளையே தனக்கான பிழைப்பு மூலதனமாகக் கொண்டு ‘பொழப்பு’ நடத்தும் உங்களுக்கு அது புரிவது சாத்தியமற்ற ஒன்றுதான்.

நமது சமூக பண்பாட்டு கலாச்சார அரசியல் கல்வி தளங்களில் நிலவும் சீர்கேடுகளை அவர்கள் அணுகும் விதத்திலும் அதனை விசாரணைக்குட்படுத்தும் முறையிலும் பெரியதொரு வேறுபாடும் முனைப்பும் தெரிகிறது.

அது தீர்க்கமான சமரசமற்ற கண்ணோட்டம் உடையது. சொரிந்து விட்டு குணப்படுத்த நினைக்கும் புழுத்துப் போன பத்தாம்பசலி அணுகல் அவர்களிடம் இல்லை. நோயின் மூல வேரை நாடி விரைந்து பாயும் கூரிய கத்தி அது.

உங்களுக்கு வலித்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை!

போன் போட்டதும் ‘ஒடனே வாங்க சார்’ என்று பேட்டி எடுக்க ஆள் இருக்கிறது. கையில் சுய விளம்பரத்துக்கெனவே உருட்டி விளையாட ஒரு குடும்பப் பத்திரிகை இருக்கிறது. ஓர் இளிச்சவாய இயக்கத்தின் தலைமை பீடம் (விரைவில் சாமிவேலுவின் 28 ஆண்டுகால சாதனையையும் முறிக்கும் விதத்தில்) தன் காலடியில் குப்புற விழுந்து கிடக்கிறது என்பதற்காக இந்நாட்டின் நவீன தமிழ் இலக்கியத்தை தங்கள் வாழ்நாளில் ஓர் இம்மியளவேனும் மேல் நகர்த்திட தேவையான அனைத்து முயற்சிகளிலும் பல இடையூறுகளுக்கு மத்தியிலும் சுயநலம் கருதாது பாடுபட்டு வரும் ஒரு சிறு எண்ணிக்கையிலான இலக்கியவாதிகளே கிஞ்சிற்றும் மனச்சான்று இல்லாது ‘ஆபாச எழுத்தாளர்கள்’ என்கிற தரங்கெட்ட முத்திரையைக் குத்த முயன்றுள்ளீர்கள்.

சரி, அந்தச் சிறு கூட்டத்துடன் உங்களுக்கிருக்கும் பிரச்சனைதான் என்ன? ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது.

நீங்கள் மன உளைச்சலுடன் வசைபாடும் அந்தச் சிறுகூட்டம் இப்பொழுது இணைய தளங்களில் காலூன்றி உலக வாசகர்களை நோக்கி நகர்ந்து அவர்களின் கவனத்தை ஈர்ப்பதில் கணிசமான வெற்றியையும் கண்டுள்ளனர் என்பது உங்களின் பார்வைக்கும் வந்திருக்கும்.

அந்த வாசிப்புத் தளம் அகன்றதும் ஆழமானதும் தவிர எதிர்வினைகளை உலகத் தமிழர்களிடமிருந்து பதிவு செய்யும் வல்லமையும் கொண்டது.

இதுதான் உங்களின் தற்போதைய பிரச்சினை.

உங்களின் இயக்க செயல்பாடுகள் குறித்த தீவிர விமர்சனங்கள் இனி அவர்கள் அதன் வழி மேற்கொள்ளலாம் என்கிற அச்சம் உங்களைப் பீடிக்கத் தொடங்கியுள்ளது. அதன் நீட்சியாய் உங்களின் ‘பிரபல்யம்’ உலகளவில் விஸ்தரிக்கப்படலாம் என்பதால் அது குறித்த நியாயமானதொரு கவலை உங்களை முற்றுகையிட்டதில் வியப்பேதுமில்லை.

இனி உங்களின் இதுகாறும் போட்டு வந்த போலி முகத்திரை ஈவிறக்கமின்றி கிழிக்கப்பட்டு உங்களின் அசலான கோர முகம் உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்படலாம் என்பதை முன்கூட்டி ஊகித்தறிந்த நீங்கள்- அதிலிருந்து விடுபடவும் அந்தச் சக்திகளை ஒடுக்கவும் மேற்கொண்ட ஒரு கபட நாடகமே இந்தக் கட்டுக் கதைகள்.

அதன் வழி சமூக வெளியில் அவர்கள் குறித்த நச்சு எண்ணங்களை தூவி விதைப்பதன் வழி அவர்களை அந்த வெளியிலிருந்து அகற்றி உங்களின் சுயநலமிக்க Personal Agendaவை தடைகள் ஏதுமின்றி நடத்திப்போக திட்டமிட்டுள்ளீர்கள்.

நடைமுறை கீழறுப்பு ஆபாச அரசியலின் அச்சு அசல் நகல்தானே இது!.

இதனை விடவுமா வேறு ஓர் ஆபாசம் இருக்க இயலும் தலைவரே? இதோ நேற்று முதல் நாடெங்கும் கேட்கத் தொடங்கி விட்டது தண்டோரா ஓசை. ..... டண்டணக்க.... டண்டணக்க..... டண்டணக்க.... இதனால் சகலவிதமான மலேசிய இளிச்சவாய தமிழ் மக்களுக்கும் உங்களின் அதி பராக்கிரம ராஜேந்திர சோழ மகாராஜா அறிவிக்க விரும்புவது என்னவெனில்....

.....மகா ஜனங்களே.... மகா பக்த கோடிகளே.... நமது மகாராஜா ராஜேந்திர சோழர் அவர்கள் ஆண்டுதோறும் அன்னார் மேற்கொள்ளும் தமிழ் நாட்டு புனித ஸ்தல யாத்திரையை வருகிற ஆண்டும் செம்மொழி எனும் பிரபல்யமான புனித ஸ்தலத்துக்கு யாத்திரை சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் தனது இஷ்ட தெய்வமான கருணாநிதி சர்வேஸ்வர மூர்த்தியின் தரிசனம் பெற்று ஆசிபெற திருவுளம் கொண்டுள்ளார்...

தனது இஷ்ட தெய்வமான கருணாநிதி சர்வேஸ்வர மூர்த்தி நேற்று சரியாக இரவு பன்னிரெண்டு மணிக்கு தனது கனவில் வந்து “பக்தா இந்த முறை எனக்கு சாதாரண ஆளுயர மாலை போட்டு ஏமாற்ற வேண்டாம். கட்டாயம் ஆளுயர பொன் மகுடம் சூட்டி என்னை ஆனந்தக் கடலில் மூழ்கச் செய். செய்வாயா?” எனக் கேட்டதாக மகாராஜா தனது மந்திரிப் பிரதமர்களிடம் சொல்ல- அவர்கள் உங்களைக் கை காட்ட...

எனவே மகா இளிச்சவாய ஜனங்களே... ஆளுயர மகுடத்தை காணிக்கைச் செலுத்த அரசர் திருவுளங் கொண்டு... உங்களிடம் உள்ள (திருடு போக மிச்சமிருக்கும்) பொன் ஆபரணங்கள் அனைத்தையும் மகாராஜாவின் P.R. TRAVEL AGENCY கோலாலம்பூர் அலுவலகத்திற்கு விரைந்து கொண்டு வந்து சேர்க்கும்படி மகாராஜா உத்தரவு...

இப்படியான மகாராஜாவின் உத்தரவை மீறும் அனைவரும் அன்னார் நடத்தும் முத்தமிழ் சங்கத்தின் ஆயுள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு ஆயுளுக்கும் கொத்தடிமைகளாக நடத்தப்படுவார்கள் என்பதாகவும் அரசர் எச்சரித்துள்ளார்...

இறுதியாக அறிவிக்க விரும்புவது என்னவெனில் மகாராஜாவின் புனித யாத்திரையில் பங்கு பெற விரும்பும் பக்தர்கள் கட்டாயம் ஆளுக்கொரு காவடி தூக்கி வர வேண்டும் எனவும் அதற்கான நுழைவுக் கட்டணமான 1000 வெள்ளியை உடனே அன்னாரது டிராவல் ஏஜென்சியில் செலுத்தி ரசீதை பெற்றுக் கொள்ளும்படியும் மகாராஜா உத்தரவிட்டுள்ளார்.... பராக்.. பராக்.... பராக்.... டண்டணக்க... டண்டணக்க....

குமட்டிக் கொண்டு வருகிறது தலைவரே! பிறரைப் பார்த்து ஆபாசம் என்று பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?

இறுதியில் அன்றைய பேட்டியின் விளைவின் உச்சமாக ஒரு புளோக்கில் உதிர்க்கப்பட்ட பொன்மொழி - “இங்கே எந்தக் கழுதை வேண்டுமானாலும் புத்தகம் போடலாம்....”

இந்தக் கூற்று எங்களை சாடுவதாக இல்லை தலைவரே. உங்கள் முத்தமிழ் சங்கத்தின் சார்பில் நீங்கள் போட்ட புத்தகங்களையும் உங்கள் மனைவியின் சார்பில் புத்தகம் போட்டு 7000 வெள்ளி பரிசையும் சுருட்டிக் கொண்டதையும் உங்கள் தலைமையில் நடந்த புத்தக வெளியீடுகளையும் ஞாபகப்படுத்துகிறது.

ஒரு முத்தமிழ் சங்கத்தின் தலைமை காப்பாளர் தெய்வமென பூஜிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்து உதிர்க்கத் தகுந்த வார்த்தைகளா இவை? இந்த புளோக் எழுத்தாளர்களை சும்மாவிடக்கூடாது. இதிலிருந்து ஒன்று புரிகிறது தலைவரே. இந்நாட்டில் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு எந்தக் கோவேறு கழுதை வேண்டுமானாலும் தலைவராகலாம்!

Top 


நாட‌க‌ம் - சிவா பெரிய‌ண்ணன்

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயல்பாடு குறித்து கருத்து கேட்கப்பட்டிருந்தது. நீண்ட நேர சிந்தனைக்குப் பிறகுதான் வருடம் தோறும் தமிழக சுற்றுலா ஏஜண்டாகவும், வைரமுத்துவுக்கு மலேசியாவில் புத்தகம் விற்றுத் தருபவர்களாகவும், தேர்தல் காலத்தில் மட்டும் புதுக்கவிதை திறனாய்வு, சிறுகதை திறனாய்வு என தடபுடல் செய்பவர்களாகவும் விளங்கும் ஓர் அமைப்பை நோக்கிய கேள்வி என விளங்கியது.

என் மனதில் இந்த அமைப்புக்கு இவ்வகையான படிமங்களைத்தான் வைத்திருந்தேன். அந்த அளவிற்கு இந்த அமைப்பின் செயல்பாடுகள், ஓர் அரசியல் கட்சியின் தேர்தலுக்கு முன்பான மலிவான நடவடிக்கைகளால் விளையும் மன நிலையை எனக்கு ஏற்படுத்துபவை.

மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் பரிதாபமானவர்கள். அவர்களின் எழுத்துக்கு இந்நாட்டில் எவ்வகையான சன்மானங்களும் கிடைப்பதில்லை. எவ்வகையான அரசு அங்கீகாரமும் இல்லை. மலேசியத் தமிழ் இலக்கியம் ஒரு தேசிய இலக்கியமாகவே கருதப்படவில்லை. இந்நாட்டின் தமிழ் இலக்கியத்தை கடல்தாண்டி கொண்டு போகிறேன் என்று கூறி கருணாநிதியின் காலடியில் கொண்டு சேர்க்கத்தெரிந்த சங்கத்தலைவருக்கு இந்நாட்டில் அதற்கு தக்க அங்கீகாரம் பெற்றுத்தரத் தெரியவில்லை. இந்நாட்டிலேயே பல்வேறு இனங்களுக்கிடையிலான இலக்கிய இடைவெளியை மொழிப்பெயர்ப்பின் மூலமாகவோ அவர்களுடனான கலந்துரையாடலகள் மூலமாகவோ அகற்ற வக்கில்லாமல், தனது செல்வாக்கை, தமிழகத்தில் மாலையும் பொன்னாடையும் போடுவதின் மூலமும் பெருவதின் மூலமும் நிரூபிக்கவே முயல்கிறார்.

இவர் சங்கத்தில் ஆளுமை மிக்க அடுத்தத் தலைமுறையை உருவாக்கியுள்ளாரா என்பதும் கேள்விகுறிதான். எப்படி சாமிவேலு ம.இ.காவில் அடுத்தத் தலைவராக தகுந்த நபர் இல்லை என புலம்புகிறாரோ அதே போல இராஜேந்திரன் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பதவி ஆசை பிடித்தவர்களின் குரல் எப்போதும் ஒன்று போலவே ஒலிக்கும் என கேள்விப்பட்டிருக்கிறேன்.

தனது மனைவியை 'மலேசிய புதுக்கவிதை வரலாறு' எனும் புத்தகம் எழுத வைத்து, அதில் மலேசிய எழுத்தாளர் சங்கம்தான் புதுக்கவிதைக்கு உயிர் ஊட்டியது போல தகவல்களைப் பரப்பி, அந்தப் புத்தகத்தை கருணாநிதியிடம் கொடுப்பதுபோல படமெல்லாம் பிடித்து, அதை இவரின் ஞாயிறு பதிப்பிலேயே கலரில் பிரசுரித்து, அந்தப் பிரச்சார புத்தகத்துக்கு இவரே மாணிக்க வாசக விருதான ஏழாயிரம் ரிங்கிட்டை பரிசாகக் கொடுத்து, இவர் தமிழ் நாட்டுக்கு போய் வந்ததை புத்தகமாக வெளியிட்டு, அந்த நேரத்தில் சுப்ரமணியமும் சாமிவேலுவும் சேர இருவரையும் இணைத்து தன் புத்தகத்தை வெளியிட்டு லாபம் சம்பாதித்து... அருவருப்பக்கு மேல் அருவருப்பு ஏற்படுத்தும் இராஜேந்திரன் ஒரு நேர்காணலில் ஆபாசம் பற்றி சொல்லியுள்ளதாகக் கேள்விப்பட்டேன். இந்த அருவருப்பின் உச்சமாகத் தன் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பாமல் மேடையில் தமிழ் இலக்கியத்திற்கு அங்கீகாரம் வேண்டும் என முழக்கமிட்ட அருவருப்பின் உச்சத்தால் இன்னமும் ஒரு நீர் தொட்டியில் மிதந்தபடி கிடக்கிறேன்.

என்னைப்பொருத்தவரை தமிழைப் பற்றி பேசவும் தமிழ் அமைப்புகளில் தலைவனாக அங்கம் வகிக்கவும் முதலில் ஒருவன் தன் பிள்ளையை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பியிருக்கவேண்டும். அப்படி இல்லாதவர்களின் மொழிப்பற்று இனப்பற்று எல்லாமும் நாடகம்தான்.

Top 

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வவல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768/span>