|
எழுத்துலகத்திற்கும்
மலேசியப் பெண்களுக்கும் பெரும் இடைவெளி இருப்பதாகவும் சில
வரையரைகளுக்குள்ளேயே பெண்கள் சுழன்றுக் கொண்டிருப்பதாகவே பல சாடல்கள்
இருந்த வண்ணமே இருக்க எல்லாவற்றையும் தகர்த்து எறியும் துடிப்போடு கடந்த
1.11.2009 ஞாயிற்றுக் கிழமை தைப்பிங் பேராக்கில் மலேசியத் தமிழ்ப் பெண்
கவிஞர்களின் முதலாவது மலையருவிக் கவியரங்கம் மிகச் சிறப்பாக நடந்தேறி இன்ப
அதிர்ச்சியைப் பலருக்கும் அளித்தது.
'இலக்கியத்தின் இன்றைய புரிமுகம் அசாதாரணமான திசையில் பயணித்துக்
கொண்டிருக்கும் போது இந்த நாட்டின் பெண் படைப்பாளிகளின் நிலை
கவலைக்குரியதாகவும் நிலையற்றும் இருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது.
பெண் படைப்பாளிகளை ஒன்று திரட்டி இலக்கியம் சார்ந்த பரிச்சயங்களும்
அறிமுகங்களையும் முன்னெடுத்து வைப்பதே இந்த மலையருவி கவியரங்கத்தின்
முக்கிய நோக்கம்' என்ற சாரத்துடன் இந்தக் கவியரங்கம் முன்னெடுக்கப்பட்டது
என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பெண் படைப்பாளிகளின் கவிதைத் தொகுப்பினை வெளியிடும் நோக்கத்தோடு எழுத்தாளர்
திருமதி வாணி ஜெயம் அவர்கள் பெண்படைப்பாளிகளின் உத்வேகத்தையும் ஆரோக்கியமான
வளமான இலக்கிய சிந்தனையும் வெளிக் கொணரவும் புதிய தளத்திற்கு புதிய
சிந்தனையோடு பெண்படைப்பாளிகள் பயணப்படவும் ஆக்ககரமான படைப்புக்களை அவர்கள்
உருவாக்க வேண்டும் என்ற இலக்கிய உணர்வோடு நம் நாட்டின் தமிழ் எழுத்துலகின்
முத்திரை பதிக்கும் நிகழ்வாக இக்கவியரங்கை ஏற்பாடு செய்தார்.
இயற்கையோடு இயந்து தண்ணீர் மலை ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய வளாகத்தில்
நடைப்பெற்ற இக்கவியரங்கம் தேனீர் உபசரிப்போடு தொடங்கியது. 21 பெண்
படைப்பாளிகளைக் கொண்டு கவிதைகள் சேகரிக்கப்பட்டன. சில தவிர்க்க முடியாத
காரணத்தால் 16 படைப்பாளிகளே இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். கவிதைகளை
அனுப்பிய பெண் எழுத்தாளர்கள்:-
1. அனுராதா நாகப்பன், கிள்ளான்
2. ஆனந்தி ஆறுமுகம், செலாயாங்
3. இராமசரஸ்வதி, தலைநகர்
4. இந்திரா மனோகரன், பாகான் செராய்
5. ஜெ. கஸ்தூரி
6. ரா. கோமதி @ கோமு, சுங்கை பட்டாணி
7. தமிழரசி, சிகாம்புட்
8. தினேசுவரி, தலைநகர்
9. பா. துர்க்காராணி, புக்கிட் மெர்த்தாஜாம்
10. தேவமலர் ஆறுமுகம்,தலைநகர்
11. சரஸ்வதி வீரபுத்திரன், காப்பார்
12. சரஸ், பினாங்கு
13. சந்திரா குப்பன், காப்பார்
14. கே.எஸ்.செண்பகவள்ளி, சுங்கை சிப்புட்
15. முல்லைராசு, ரவாங்
16. உமா சந்திரன், பத்துமலை
17. யுக பாரதி, சுங்கை பட்டாணி
18. லோ. திருமணி, பாகான் செராய்
19. தேவி ஆறுமுகம், போர்ட் டிக்சன்
20. பி. வனஜா, ஜோகூர்
21. மீராவாணி, பாகான் செராய்
கவியரங்கம் வரவேற்புரை வழங்கிய திருமதி வாணி ஜெயம் அவர்கள், பெண்
எழுத்தாளர்களின் நிலைப்பாட்டையும் அவர்கள் மனந்தளராது சிறந்த படைப்புக்களை
உருவாக்கவும் இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும்
இவ்வாரான கலந்துரையாடல்கள் மூலம் பல இலக்கிய சிந்தனைகளைப் பகிர்ந்துக்
கொள்ள முடியும் என்பதனையும் அவர் கூறினார். பெண் படைப்பாளிகள் ஒரு
வட்டத்துள்ளேயே செயல்படாமல் திறனை வளர்த்துக் கொண்டால் சிறந்த
படைப்பாளியாகலாம் என உற்சாக உரையை வழங்கினார்.
இவரை தொடர்ந்து மலேசியப் புதுக்கவிதை முன்னோடிகளாகத் திகழும் எழுத்தாளர்கள்
திரு கோ.முனியாண்டி, திரு முகிலரசன், திருமதி திலகவதி முகிலரசன், திரு.ப.
மனஹரன் ஆகியோர் பங்கேற்று புதுக்கவிதை சார்ந்த கருத்துகளையும்
சிந்தனையைத்தூண்டும் உரையினையும் வழங்கி படைப்பாளிகளை உற்சாகமூட்டினர்.
எழுத்தாளர் கோ. முனியாண்டி அவர்கள் 'உங்களுடன்' என்ற அங்கத்தில்
உரையாற்றினார். நவீன இலக்கிய வளர்ச்சி, நம் நாட்டின் நவீன கவிதையின்
பரிணாமங்களும் அதன் பரிமானங்களும், நவீன இலக்கிய சிந்தனை அமைப்பின் தோற்றம்
நோக்கம் என பல விவரங்களை வழங்கினார்.
‘பெண் படைப்பாளிகளும் அவர்களின் இலக்கிய போராட்டமும்’ என்ற தலைப்பில்
உரையாற்றிய திருமதி திலகவதி முகிலரசன் அவர்கள் உரை எழுத்தாளர்களுக்கு
எழுச்சி ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. எண்ண விதைதான் லட்சியங்களை உறுதி
செய்கின்றன என்பதனையும் பெண் படைப்பாளிகள் மனம் தளராது தொடர்ந்து
படைப்பிலக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனக்கூறினார்.
கவிஞர் திரு. மனஹரன் ‘மலேசியாவிற்கு அப்பால் தமிழ் பெண்ணியவாதிகளின் கவிதை
நிலை முன்னெடுப்புகள்’ என்ற தலைப்பில் பேசினார். இவர் உரைக்குப் பிறகு
மலேசிய தமிழ் கவிதாயினிகளின் மலையருவி கவியரங்கம் சிறப்பாக நடந்தேறியது.
மலையருவியின் இயற்கை இரைச்சலோடும் கவிதாயினிகளின் கவிதைகள் இனிமையோடு
படைக்கப்பட்டது. வந்திருந்த 16 பெண் படைப்பாளிகளும் இனிதே கவிதைகளை
வழங்கினர்.
கவிஞர் திரு. முகிலரசன் அவர்கள் ‘புதுக்கவிதை 1979 முதல் 2009 வரை ஒரு
பொதுப் பார்வை' என்ற தலைப்பில் உரையாற்றினார். புதுக்கவிதை வளர்ச்சியில்
வானம்பாடி, காதல், நயனம் மற்றும் மௌனம் இதழ்களின் பங்களிப்பையும் தோழி,
யோகி மற்றும் வீ.ஆ. மணிமொழி போன்ற பெண் எழுத்தாளர்களின் பங்களிப்பையும்
குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
கலந்துரையாடல் அங்கத்தில் பெண் எழுத்தாளர்களின் மனகுமுறல்கள் வெளிப்பட்டன.
பெண் எழுத்தாளர்களின் வாய்ப்பு நிலைகளையும் அவர்களைச் சார்ந்த அடுத்த
நகர்வுகளையும் ஒட்டிய கேள்விகள் எழுந்தன. இவ்வங்கத்தில் எழுத்தாளர் திரு.
கோ. முனியாண்டி அவர்கள் படைப்பாளிகளுக்கு விளக்கம் அளித்தார். பெண்
எழுத்தாளர்களின் இன்றைய நிலை, அவர்களின் அங்கீகாரத்தின் அலட்சியம் தொடர்பான
பல கேள்விகளும் எழுந்தன. பல உண்மைகளுடனும் சில அதிர்ச்சிகளுடனும்
இக்கலந்துரையாடல் நிறைவு பெற்றது.
நினைவு பரிசுகளை வழங்கிய பிறகு இறுதியாக நயனம் இதழின் துணை ஆசிரியர்
திருமதி இராம. சரஸ்வதி அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
மலேசிய தமிழ் பெண் எழுத்தாளர்களின் ஆர்வத்தை வெளிக்கொணர்ந்தது மட்டுமல்லாது
இக்கவியரங்கம் சிறந்த படைப்புக்களை கொண்டு வரும் களமாக அமைந்தது. பெண்
எழுத்தாளர்களின் வளர்ச்சியில் அவநம்பிக்கை கொண்டுள்ள பலருக்கு இது
சாட்டையடியாக நிச்சயம் அமையும். அடுத்த கட்ட நகர்வுகளை உறுதி செய்யும்
வண்ணமாக இக்கவியரங்கத்தை பல இன்னல்களுக்கு மத்தியில் ஏற்பாடு செய்த
எழுத்தாளர் மீராவாணி என்ற திருமதி வாணிஜெயம் அவர்களை நாம் பாராட்டித்தான்
ஆக வேண்டும்.
|
|