|
இரவினில் பேசுகிறேன்
ஒன்றாய் நூறாய்ப்
பல்கிப் பெருகி
புதிய கட்டுரையாய்
எனக்கே எதிரொலிக்கும்
பகலில் பேசிய
ஓரிரு வார்த்தைகளும்
மானிட அரிதார
மாக்களின் சர்ச்சையில்
மெளன விரதமாய்க்
கழியுமென் பகல்கள்
தோழிக்கும், தோழனுக்கும்
துரோகிக்கும், காதலிக்குமாய்
எத்தனைமுறை உரைத்துக் காட்டுவேன்
நான் அவனே தானென
பகல்களில் செத்து
உறக்கத்தில் உயிப்பதற்கே
இரவினை நாடுகின்றேன்
எண்ணச் சிதறல்கள்
ஒலியாய் வெடிக்க
விழித்துக் கொள்கின்றன
என் இரவுகள்
எங்கோ பார்த்த முகத்தோடும்
அதே கனிவோடும்
அதட்டல் தொனியோடும்
வெளிச்சத்தில் வீசிய
வார்த்தைகள் எல்லாம்
இருட்டில் மோதி
அவளிதழில் எதிரொலிக்க
ஏகாந்தத்தில் சுற்றித் திரிகிறேன்
உணர்ந்த ஸ்பரிசமாய்
அவளணைக்கையில்
இராக்கோழியை சேவல் எழுப்பும்
|
|