விதவிதமான ஆயத்தங்களோடு
அவர்களின் நுழைதல்
நிகழ்கிறது
அவர்களுக்கான வெற்றிடங்களை
எமது வெற்றிடங்கள்
உற்று நோக்குகின்றன
எம்மால் அவற்றை
நிரப்ப முடியாதெனும் உணர்வு
அவர்களுக்குத் தெரியாத பட்சத்தில்
அவர்கள் பிரயாசைப்படுதலும்
பின்பு இடம் தடுமாறி
விழுதலும் வீணென்று
சொல்ல முடியாமல்
அவர்களைக் குறித்துத் தவித்தபடி
எமது வெற்றிடங்கள்
சில நினைவுகளை
நிரப்பிக்கொள்கின்றன.
2
எவ்வளவோ இருக்கின்றன
விவாதிக்கவும் பேசவும்
கடவுளிடம் பேசிப் பார்க்கலாம்
அவர்
இன்னொரு கடவுளைப்
பரிந்துரை செய்யாத வரை...
அந்தக் கடவுள்
இன்னுமொரு கடவுளைப்
பரிந்துரை செய்யாத வரை...
இத்தனை கடவுளரிடம்
பயணப்படுகையில்
இரண்டு நேரலாம்
அதில் ஒன்று
கடவுளை மறக்கக்கூடியதாகவும்
இருக்கலாம்.
3
சில விழிகளுக்குள்
ஊடுருவிச் செல்லலாம்
என முடிவெடுக்கையில்
எல்லார் உள் விழிகளுக்குள்ளும்
கடல் தெரிகிறது
அங்கே சுகமாய்
நீராட முடியவில்லை
அங்கு வீசும் பெருங்காற்றையும்
பேரலையையும்
சமாளிக்க முடிவதில்லை
ஒரு பாறையாய் நுழைந்து
துகளாகித் திரும்பும்
கரைகளின்
வாடிக்கையாகிவிட்டது.