இதழ் 13
ஜனவரி 2010
  எனது நங்கூரங்கள் ...6
தமிழன் லண்டனிலும் அகதி வவுனியாவிலும் அகதி
இளைய அப்துல்லாஹ்
 
     
  நேர்காண‌ல்:

"அர‌சாங்க‌த்திற்குத் தேவை ந‌ம்மை நாமே குறை சொல்லிக் கொள்ளும் ஏமாளித்த‌ன‌ம்"

பி. உத‌ய‌குமார்

சிறப்புப் பகுதி:

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் - ஒரு பார்வை


பத்தி:

தமிழகத்திலும் ஒரு நீரோ மன்னன்

அ. ரெங்கசாமி

அவஸ்தை
இராம. கண்ணபிரான்


கட்டுரை:

பிலிப் கலாஸ் : இசையின் தீராத‌ ப‌க்க‌ங்க‌ள்
அகிலன்

காற்று வேட்டை
கெ.எல்.

வரமா? சாபமா?
நெடுவை தவத்திருமணி

மொழி ஆணால் உருவாக்கப்பட்டது...
வீ.அ. மணிமொழி

இலங்கைத் தமிழர்களின் ஆங்கில நூல்கள்: நூல்தேட்டம் ஆங்கில நூல் தொகுப்புக்கானதொரு அறிமுகம்
என். செல்வராஜா

சிறுகதை:

குரங்கு
கிரகம்


பிரமைகள்
ஸ்ரீரஞ்சனி

தொடர்:


ப‌ல வேடிக்கை ம‌னிதரைப் போல‌ ...5
ம‌. ந‌வீன்

எனது நங்கூரங்கள் ...6
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...1
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன்


இரா. சரவணதீர்த்தா


மன்னார் அமுதன்

ஏ.தேவராஜன்

பதிவு:

மலேசியத் தமிழ்க் கவிதாயினிகளின் முதலாவது மலையருவிக் கவியரங்கம்
தினேசுவரி

புத்தகப்பார்வை:

விட்டு விடுதலை காண்
நிந்தவுர் ஷிப்லி

லும்ப‌ன் ப‌க்க‌ம்:


ஒரு கோமாளியின் வ‌ருகை...
லும்ப‌ன்

அறிவிப்பு:


அஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி

எதிர்வினை:


கடிதம்
     
     
 

எனது வீட்டில் இருந்து கூப்பிடு தூரத்தில் தான் ‘ஈட்டன் ஹவுஸ்’ இருக்கிறது. இங்கு லண்டனில் ‘ஈட்டன் ஹவுஸ்’ என்றால் தமிழ் அகதிகளுக்கு பரிச்சயமான இடம்.

வாரா வாரம் மாதா மாதம் அகதிகள் இங்கு வந்து கையெழுத்து போடுவார்கள். கையெழுத்து போடுவதே ஒருவகை உளவியல் வேதனைதான்.

போன கிழமை ஒரு குடும்பத்தை சந்தித்தேன். 10 வருடமாக ஈட்டன் ஹவுஸுக்கு கணவன் கையெழுத்து போட வருவதாக சொன்னா. “ஒரு முடிவும் சொல்கிறார்களில்லை” என்றும் ஆதங்கப்பட்டா. அப்பொழுது மனைவியின் கண்களில் குளமாகி கண்ணீர் உடைந்து விழுந்தது. எனது மனதில் பொட்டென்று ஒரு வலி.

பெண்ணின் கண்ணீர் கூரிய வாளை ஒக்கும். சரிதான். “ஏன்தான் இப்படி அலைக்கழிக்கிறார்கள்” என்று கணவன் விசனமாக என்னிடம் கேட்டார்.

அகதிகள் விடயத்தில் பிரித்தானியா விழி பிதுங்கி போய் இருப்பதாகவே ஈட்டன் ஹவுஸில் வேலை செய்யும் ஒப்பிஸர் ஒருவரை பள்ளிவாசலில் கண்ட பொழுது சொன்னார். அவர் இந்தியர் குஜராத் காரர்.. அவருக்கு இலங்கை அகதிகளின் விடயம் ஒரு பிரச்சனையாக இருக்கிறதே தவிர உணர்வு ரீதியான பிரச்சனை இல்லை.

சிலோன் யுத்தம் எல்லாம் அவர்களுக்கு பேப்பர் செய்திகளும் ரீவி செய்திகளும் தானே தவிர அதன் வலி உணரக் கூடிய நிலையில் இங்கு வெள்ளைக்காரரோ அல்லது அகதிகள் தொடர்பான கேஸ் வேக்கர்களோ அல்லது அதிகாரிகளோ ஏன் சட்டத்தரணிகளோ இல்லை.

தமிழ் சட்டத் தரணிகளை அகதிகள் திட்டி தீர்க்கிறார்கள். ஒருவருக்கு அகதி அந்தஸ்து கிடைக்க இரண்டு தரப்பாரும் கடுமையாக உழைக்க வேண்டும். இங்கு இரண்டு தரப்பார் என்றது சட்டதரணி மற்றது அகதி.

சட்டத் தரணிகள் அகதிகளிடமிருந்து காசு பறிக்கும் ஒரு தொழிலாகவே இதனை செய்கிறார்களே தவிர மன உணர்வு ரீதியாக தமிழர் என்று பார்க்கிறார்கள் இல்லை என்பது இங்குள்ள அகதிகளின் வாதம். சிலர் அப்படி இல்லை எனக்கு தெரியும்.

கடந்த வாரம் வவுனியா அகதி முகாமில் இருந்து யுத்தத்தில் தாயையும் தந்தையையும் பறி கொடுத்த 13 வயது பிள்ளையின் உறவினர் ஒருவரோடு கதைத்தேன்.

கூழா முறிப்பில் இருந்த குடும்பம் ஓடி ஓடி புதுக்குடியிருப்பு பகுதிகளூடாக ஒழிந்து ஒழிந்து காடுகளுக்குள் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடி கடைசியில் முள்ளி வாய்க்கால் வரை உயிரை தாக்காட்டி வைத்திருந்த அம்மாவும் அப்பாவும் துப்பாக்கி குண்டு பட்டு செத்துப் போனார்களாம்.

மிக அண்மையில் துப்பாக்கிகளுக்கு நடுவில் இருந்தவர்கள் அவர்கள். 13 வயது மகள் கதிர்காமர் முகாமில் மனம் பேதலித்த படியே இருக்கிறாளாம்.

தின்கிறாள் இல்லை குடிக்கிறாள் இல்லை. ஒரே யோசனையில் இருக்கிறாளாம். சிலநேரம் கண்ணீர் அவளின் கண்களில் இருந்து தானாக வழிகிறதாம். “என்ன கொடுமை செய்தோம்?” என்று சொல்லி அந்தப் பிள்ளையின் உறவினர் ஒருவர் லண்டனில் இருந்து கொண்டு அழுகிறார்.

அகதிகள் வாழ்வு நீண்டு நெடியதாய் இருக்கிறது. அண்மையில் அடைக்கல நாதன் எம்பி, கிஷோர் எம்பி போன்றவர்கள் துணுக்காய் பகுதிக்கு போய் விட்டு வந்திருக்கிறார்கள். துணுக்காய் மல்லாவி ஒட்டு சுட்டான் பகுதியில் இப்பொழுது மீள் குடியேற்றம் இடம் பெற மாட்டாது என்று சொல்கிறார்கள் அவர்கள். பரந்த வன்னிப் பகுதியில் வாழ்ந்த மக்களில் செத்துப் போனவர்கள் போக மீதியாக உள்ள மூன்று லட்சம் பேரும் வடக்கு கிழக்கின் அகதி முகாம்களில் தொடர்ந்தும் அகதிகளாகவே இருக்கின்றனர். இந்த அவலமான வாழ்க்கை தமிழருக்கு விதிக்கப்பட்ட வாழ்வுதானாக்கும்.

“ஊரோடு போய் வாழ்வதற்கும் இன்னும் துணிச்சல் வருகுதில்லை” என்று ஈஸ்ட்ஹாம் பகுதியில் சந்தித்த அகதி ஒருவர் சொல்கிறார். அவர் இங்கு வந்து ஒன்பது வருடங்கள் ஆகின்றன. வழக்கை எடுக்கிறார்களில்லை என்று புலம்புகிறார் அவர்.

அகதி வாழ்வு இங்குள்ள லண்டன் தமிழ் ஏழைகள் மத்தியில் பெரும் வாழ்வு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. உண்மையில் ஏன் இந்த விடயத்தை அழுத்தி சொல்கிறேன் என்றால் லண்டனில் இருக்கும் எல்லோரும் பணக்காரர்கள் என்ற நினைப்பு சிலோனில் உள்ள உறவினர்களுக்கும் மற்றவர்களுக்கும் இருக்கிறது. அந்த நினைப்பை இந்த நிமிடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி சொன்னேன்.

வாழ்வோ அகதி, இரண்டு மூன்று வேலை செய்து மாடு மாதிரி உழைத்து நாலு பணம் சம்பாதிக்க ஊரில் உள்ளவர்கள் ஒரு தொலைபேசி அழைப்பில் ஒரு லட்சம் அனுப்பு இரண்டு லட்சம் அனுப்பு என்று கேட்டு விடுகிறார்கள்.

அது மட்டுமல்ல எங்கோ ஒரு தூரத்து உறவுக்கார பிள்ளைக்கு கலியாணம் அவளுக்கு தாலி செய்ய காசு அனுப்பு றிசப்ஸன் செய்யக் காசு அனுப்பு என்று நச்சரிக்கிறார்கள்.

இங்கு லண்டனில் உள்ளவர்களும் ஏதோ சீமையில் இருக்கிற நினைப்பில் அங்கு இங்கு கடன் பட்டு வங்கியில் கடன் பட்டு சீரழிந்து போய் இருக்கிறார்கள்.

எனது நெருங்கிய நண்பன் ஒருவன் ஊரில் கேட்கும் நேரமெல்லாம் பணம் கொடுத்து விட்டு இப்பொழுது உடைந்து நொருங்கிப் போய் இருக்கிறான்.

பெண் சாதியின் உறவினர்கள் அகதியிடம் பணம் கேட்பார்கள். ஏதோ முந்தி கொடுத்து வைத்தவர்கள் போல.

அவனும் பெருமைக்கு கொடுத்து விட்டு அல்லாடிக் கொண்டிருக்கிறான்.

இப்பொழுது அகதிகளுக்கு 5 வருட விசாதான் கொடுக்கிறார்கள். அது முடிய என்ன செய்யப் போகிறார்களோ தெரியாது.

“வவுனியா அகதி முகாமில் இருக்கும் எனக்குத் தெரிந்த ஒருவரோடு பேசினேன். ஊரோடை போக விட மாட்டாங்கள் போலத்தான் கிடக்குது தம்பி. எனக்கு இழப்பதற்கு இனி ஒண்டுமில்லை” என்கிறார் அவர். அவரது கண்ணுக்கு முன்னால் அவரது மனைவி ஷெல் விழுந்து உடல் சிதறிப் போனதை இன்னும் சொல்கிறார்.

மனிதர்களாக நடமாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாங்கள் சவங்கள் தான் என்கிறார் அவர்.

உண்மைதான் மனம் நொருங்கிப் போய் இருக்கும் அவரின் ஒரே மகளை ஆமிக்காரங்கள் விசாரணைக்கு என்று கூட்டிப் போனவர்கள் இன்னும் விடவில்லை. தேடி தேடி களைத்துப் போனார் அவர். வெளியில் விட்டவர்கள் என்று சொல்லப்பட்டவர்களும் உறவினர்கள் தெரிந்தவர்களின் முற்றங்களில் கொட்டிலைப் போட்டுக் கொண்டு இருக்கின்றனர். “உந்த வாழ்க்கை என்னத்துக்கு” என்று சலித்துக் கொண்டார் அவர்.

இனி வாழ்வதில் என்ன பிரயோசனம் இருக்கிறது என்று நொந்து போயிருக்கிறவர்கள் தான் அதிகம். இருந்த வீடு, வருமானத்தின் தோட்டம் வயல்கள், ஆடு மாடு, கோழி என்று எல்லாவற்றையும் பறி கொடுத்து விட்டு வாழ்வை அடுத்த நாட்டில் எப்படி வாழ்ந்து தொலைப்பது என்று மனம் உடைந்து போன அவரின் கவலை சொல்லிமாளாதது.

“முல்லைத்தீவு பகுதியில் என்ன செல்வாக்காக சீமானாக இருந்த நான் இப்பொழுது தோளில் போட்டுக் கொள்ள ஒரு சால்வை கூட இல்லாமல் பிச்சை எடுக்க வேண்டியிருக்கிறது தம்பி. இனியும் ஏன் இந்த அகதியாய் வாழ வேணுமா ஏதாவது மருந்து கிருந்தை குடிச்சுசெத்துப் போகலாம் போல கிடக்குது தம்பி. அனேகமாக வெகு விரைவிலை நான் தற்கொலை செய்து கொண்டு விடுவேன்” என்கிறார் அவர்.

தொலைபேசியில் பேசிய நான் அவருக்கு என்னத்தை சொல்ல வாயடைத்து நின்றேன். ‘இல்லை தற்கொலை செய்யாதீங்க’’ என்று சொல்லவோ அல்லது “உங்களுக்கு நல்ல வாழ்க்கை எதிர்காலத்தில் அமையும்” என்றோ அல்லது “எதிர்காலத்தில் நல்லாட்சி சிலோனில் வந்து நீங்கள் கண் கலங்காமல் வாழலாம்” என்றோ எந்த ஆறுதலையும் என்னால் சொல்ல முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன். இது ஒரு கையாலாகாத தனம் தான் என்னது. “தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் செகத்தினை அழிக்கும்” துணிவு என்னிடம் இல்லை என்பது எனக்குத் தெரியும்.

அழிவு,அழித்தல், கொல்லுதல், கைது செய்தல், சிறையில் தள்ளுதல் என்ற அரசாட்சியின் கீழ் என்னத்தை செய்து தொலைக்கலாம். மனித உயிருக்கும் உணர்வுக்கும் என்ன மதிப்பு இருக்கிறது சிலோனில்.

பணக்காரர்கள் கொழுத்துக் கொண்டு போகிறார்கள். கொள்ளையர்கள் கொள்ளையடிக்கிறார்கள். ஊழல் செய்கின்றவர்கள் ஊழல் பெரு முதலைகளாக இருக்கின்றனர். மனித வாழ்வு அகிம்சை மனித உணர்வு தொடர்பாகவும் உரிமைகள் தொடர்பாகவும் யாரும் சிந்திக்க தயாராக இல்லாத பொழுது அந்த மனிதனை தற்கொலை செய்யாதே என்று சொல்வதற்கு எனக்கு எந்த வழியும் தெரிய வில்லை. எனக்கு மனம் நெருடியபடியே இருக்கிறது அந்த அகதி தமிழனை எண்ணி.

லண்டனில் அகதி வாழ்வு பல குடும்பங்களில் ஆயிரம் பிரச்சனைகளை அள்ளிக் கொண்டு வருகிறது.

எனக்குத் தெரிந்த தமிழ் அகதி ஒருர் தமிழகம் போய் தடல் புடலாக கலியாணம் முடித்துவிட்டு வந்தார். அவரின் மனைவி கொழும்பில் இருக்கிறார். நல்ல பொடியன். அவனுக்கு 5 வருட விசா கொடுத்தார்கள். இன்னும் இரண்டு வருடம் தான் மீதி இருக்கிறது அந்த அகதி விசா முடிவதற்கு.

இப்பொழுது மனைவியை கொழும்பில் இருந்து எடுப்பதற்கு விசாவுக்கு அப்ளை பண்ணினால் றிஜக்ட் பண்ணி விட்டார்கள். காரணம் இவரின் விசா தொடர்பாக சமுசியமாம் அங்குள்ள விசா ஒபிஸருக்கு.

இப்பொழுது இலங்கைகாரருக்கும் சென்னையில் தான் இங்கிலாந்து விசா கொடுக்கிறார்கள். இனி அப்பீல் அது இது என்று ஒரு வருடம் இழுபடும். அப்போதும் கொடுக்கிறார்களா இல்லையா தெரியாது.

புதுப் பெண்சாதி கண்ணீரும் கம்பலையுமாய் கிடக்குது. அவவின் உறவினர்கள் சொல்கிறார்களாம் விசா இல்லாத மாப்பிள்ளையை கலியாணம் கட்டி விட்டாயே என்று.

பாருங்கள் பிரச்சனைகள் என்னன்ன ரூபத்தில் எல்லாம் வருகிறது அகதிகளுக்கு. உண்மையில் இது உணர்வு ரீதியான பிரச்சனை. விசா தொடர்பாக யாருக்கும் விளங்கப்படுத்த முடியாது. அது பெரும் இடியப்ப சிக்கல். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.

அன்னிய நாட்டில் அவர்கள் இருக்க விட்டதே பெரிசு என்று நினைப்பவர்கள் ஒரு புறம். அகதி அந்தஸ்து கிடைக்காமல் அலைபவர்கள் ஒரு புறம்இ அகதி அந்தஸ்து கிடைத்தும் குடிகாரர்களாய் போத்தலும் கையுமாக அலைபவர்கள் மறு புறம், கிறிமினல் வேலைகளில் ஈடுபடுபவர்கள் வெட்டு, கொத்து என்று திரிகிறவர்கள் ஒரு புறம்இ ஆரம்ப காலங்களில் அதாவது 80 களில் வந்து லண்டனில் செட்டிலாகி தாங்கள் தான் பெருந்தமிழர்கள் என்று தலைக்கனத்தில் அலைபவர்கள் ஒரு புறம்.

எத்தனை மனிதர்கள் இங்கே லண்டனில் இருக்கிறார்கள்.

என்னத்தைச் சொன்னாலும் அகதிகளாய் அலையும் தமிழரின் அவலம் நெருடல் மிக்கது. அதன் துயரங்கள் அளப்பரியன. நெருக்கடிகள் அதிகமானவை. அது லண்டன் என்றாலும் சரி வவுனியா என்றாலும் சரி; எல்லாமே துயரங்கள்தான்.

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வவல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768/span>