|
மலையாள
நாடகத்துறையில் மூன்று விருதுகள் பெற்ற ஆண்டு, மும்முரமாய் அனைத்து மலையாள
அமைப்புக்களிலும், நாடகங்கள் எழுதிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில்,
சிங்கையின் முன்னோடி எழுத்தாளர், நா. கோவிந்தசாமி [இன்று அவர் உயிருடன்
இல்லை], சென்னையில் உள்ள ,'கூத்துப்பட்டறை' ந.முத்துசாமியைப்பற்றி
விஸ்தரித்தார்.நவீன நாடகம் குறித்து இவளுக்குத் துளியும் மதிப்பில்லாத
நேரம். பின் நவீனத்துவம் என்ற பெயரில் இவள் படித்த, பார்த்த நாடகங்கள்,
சினிமா, என்று எதுவுமே இவளுக்கு ரசிக்கவில்லை. ஒரு நாடகம்
பார்க்கச்சென்றபோது, முதல் காட்சிலேயே சிறுநீர் கழித்துவிட்டு,தொடைவரை
வழித்த சரீரம் காட்டிய அந்த நடிகன்...சே!கண்களை மூடி மூடித் திறந்து அந்த
நாடகம் முடியும் வரை விதியை நொந்து அமர்ந்திருந்தாள்.
பிறகு இன்னொரு நாடகம்.எண்டெ ஈஷ்வரன்மாரே! என்னென்பேன், எப்படிச் சொல்வேன்?
தீப்பறக்கும், கெட்ட வார்த்தையாம் [சத்தியமாய் அவளுக்குப் புரியவில்லை]
அவையோர் உறைந்து போய் அமர்ந்திருந்தனர். அருகில் அமர்ந்திருந்த நடுத்தர
வயது தமிழர் ஒருவர் , காட்டம் தாங்காமல் பளிச்சென்று தரையில் காறி
உமிழ்ந்தார்.இவளுக்கோ கணவர், குழந்தைகள் அருகிருக்க, நிமிர்ந்து பார்க்கவே
வெட்கமாகவே இருந்தது. இன்னொரு நாடகத்தில் சிறைக்காட்சி, கைதி
ஒருவரைச்சூழ்ந்து கொண்டு, பாலியல் தொந்தரவு கொடுப்பதாய்...அய்யோ! அய்யோ!
ஈஷ்வரன்மாரே, இதுதான் நவீனமாக்கும்... இதுதான் நவீன நாடகமாக்கும்...உவ்வே,
குமட்டி குமட்டி வந்தது அந்தக் கருமம் பிடித்த காட்சிகள் பல
நாட்களுக்கு.பிறமொழி நாடகங்களும் விதிவிலக்கல்ல. இவள் இந்த
வெறுப்பிலிருக்க, நா.கோவிந்தசாமி விளக்கினார்.
'முத்துசாமி எழுத்தாளர். புதுக்கவிதையாளர்...நாடகத்துறையில் புதிய பார்வை
கொண்டவர்.முத்துசாமியிடம் பயிற்சி பெற்றால், நிச்சயம் சிங்கையில் உங்களால்,
நாடகத்துறைக்கே புத்திலக்கியப்பார்வையைக் கொண்டு வரமுடியும்' என்று
விளக்கியபோது, முடிவெடுக்க ஒரு மாதம் பிடித்தது. சென்னை சென்று,
கூத்துப்பட்டறையில் நுழைந்த நிமிஷம், நீண்ட நெடிய உருவமும், கொடுவாள்
மீசையும் உர்ரென்ற தோற்றமுமாய் , 'வாங்கோ!' என்று அழைத்தவரைப்பார்த்ததும்,
தொலைபேசியில் பேசிய மனிதரா இவர்? என்று திகைக்க வைத்தார் முத்துசாமி.
இவளை
அழைத்துச் சென்று பத்திரமாய் விட்டுவிட்டு, உடனே மற்றவர்கள் போய்விட,
முத்துசாமி பேசிய முதல் வாக்கியம், ‘உங்களுக்கு இங்கு என்ன
கற்றுக்கொடுப்பதென்றே புரியவில்லை?' நீங்களே எழுத்தாளர், நாடகாசிரியர்,
கவிதாயினி, இங்கு உங்களுக்கு என்ன புதிதாய் கற்றுக்கொடுக்கப்போகிறோம்’
என்றபோது கவலை வந்தது. இவளது பைல், வானொலி, பத்திரிகைப்
பேட்டிகள்,விருதுபெற்ற ஸ்க்ரிப்ட் என , முக்கியமான சில கோப்புகள் அடங்கிய ,
டோக்யுமெண்ட் பையை, அவரிடம் நீட்ட, “ தேவையே இல்லை,கோவிந்தசாமியும்,
ராமானுஜமும் நிங்ஙளப்பற்றி நிரம்பவே சொல்லியிருக்கிறார்கள், என்றவர், அங்கு
குழுமியுள்ள மாணவர்களைப்பார்த்து, “இவர் கமலாதேவி" என்று ,சற்று அதிகமாகவே
இவளை அறிமுகப்படுத்திவிட்டுப் போய்விட்டார்.
அடுத்த ஒரு மணிநேரத்தில் களரி வகுப்புக்கு பார்வையாளராகப் போய் அமர்ந்தாள்.
பின் வேறு ஓர் உடல் பயிற்சி,மதிய உணவுக்குப்பின்னர், இசைப்பயிற்சி, பின்னர்
நாடக நிகழ்வுப் பயிற்சிப்பட்டறை,என முதல் நாள் தொடங்கியது. மாணவர்கள்
அனைவரும் ஆசிரியரின் உரைக்கேற்ப, அடவுகளில் அபினயிக்க, பின்னர், கேள்வி -
பதில்,அதன் பின்னர் நிகழ்வின் உச்சமாய், நவீனத்துவத்தின் பார்வை என்று
விளக்க, அப்படியே மாலை வரை வகுப்பு தொடர்ந்தது. ஆறுமணிக்குமேல் ஆசிரியர்
விடைபெற்றுப்போக, மாணவர்களும் போக, இவளும் சமையல் அம்மாவும், கலைராணியும்
மட்டுமே விடப்பட்டார்கள். மூன்றுமாடிக்கட்டிடம், அதில் 2வது மாடியில்,
இவளது அறை. ஏனோ அறைக்குள் வந்ததும் மனசு காங்கிகலங்கி வந்தது. மாணவர்களில்
சிலர், அன்றைய வகுப்பில் பேசிய தமிழ் இவளுக்குப் புரியவே இல்லை. அதிலும்
தோட்டியாக அபினயித்தவரின் மொழி ஒருவரி கூட புரியவில்லை.எப்படி ஒரு மாதம்
இங்கு இருக்கப்போகிறோம் என்ற நினைப்பே, இவளுக்கு திகைப்பாய் இருந்தது.
மறுநாள் காலை 9 மணிக்கு இவளும் ஆர்வத்தோடு களறி வகுப்பில், உடல் பயிற்சி,
வகுப்பில்,என்று சேர்ந்து கொள்ள முத்துசாமி சபாஷ் என்றார். வகுப்பு
முடிந்து, மதிய சாய குடிக்க எல்லோரும் கீழே இறங்கி
வந்தபோது,கறுப்பாய்,ஒல்லியாய்,உயரமாய், ஒரு இளைஞன் பழனி, வினாயகம், ஜோர்ஜ்,
இவர்களை ஏதோ அதட்டுவதுபோல்பேசிக்கொண்டிருக்க,கடந்துபோக முற்பட்டபோது,
'சேச்சி' என்றொரு விளி.
“வணக்கம்", என்று மொச்சைப்பற்கள் தெரிய, பளீரென்ற சிரிப்போடு, "என் பேர்
பசுபதி” என்றார், அந்த ஒல்லி இளைஞன்.
நமஸ்காரம் என்று முகமன் கூறிவிட்டு அறைக்குள் திரும்பிவிட்டாள். மதிய
வகுப்பில் அன்று இவளது முறை. இவளுக்குப்பிடித்தமான பாரதிக்கவிதையும், இவளே
எழுதிய 4 மொழிக்கவிதையையும், experimental viewல் இவளே வாசிக்க மாணவர்கள்
முகத்தில் ஈயாடவில்லை. மலாய், மலையாளம் தவிர்த்து, ஆங்கிலமும், தமிழும்,
இந்தியும் கூடத்தெரிந்த மாணவர்கள் அங்கிருந்தனர். உடனே எழுந்தான் பசுபதி. “
ரவிவர்மா, சந்திரா, குமார், இவர்களை வைத்து ஞான் நடத்துகிறேன் சேச்சியின்
கவிதையை” என்றபோது, முதலில் நம்பமுடியவில்லை. ஆனால், அடுத்த 25
நிமிஷங்கட்கு, வரிவடிவத்தை நிகழ் வடிவத்தில், துளிகூட லயம் கெடாமல்
நடத்திக்காட்டிய திறமையில் ஸ்தம்பித்துப்போனாள். ஆசிரியர் முத்துசாமியின்
முகத்தில் வழிந்த பெருமிதம் லேசுபாசு அல்ல. என்ன சேச்சி சரியா, என்று
மீண்டும் இவளைப்பார்த்துக்கேட்க, தட்ஷணமே பசுபதியை இவளுக்கு மிகவும்
பிடித்துப் போயிற்று.
-தொடரும்
|
|