இஸ்திரிக்காரரின் மகள்
வீடுவீடாய்ச் சென்று படியேறி
உடுப்புச் சுமந்து சுமந்து
பழுக்காய்கள் நீக்கி
வெள்ளாவி வைத்து
உவர்மண்ணில் துவைத்து
கரைமண்ணில் உலர்த்தி
பெட்டிபோட்டுக்
காய்ப்பேறிப் போன கைகளை
நீவிவிட்டுக் கொள்கிறாள்..
உடுப்பெடுக்கச் சென்ற
மாடிவீட்டு அம்மாவின்
வேலையற்றுச் சிவந்திருந்த
ரோஜாக் கரங்களைப்
பார்க்கும் போதெல்லாம்...
அப்போதெல்லாம்
அவள் கண்கள் கனலும்
இஸ்திரிப்பெட்டியின் கங்குகளாய்..
அதிகச் சூட்டில் தீய்ந்த
ஓட்டையாய்..துளையிட்டுச்
செல்லும் பார்வையோடு..
சென்றபின்னும் உடுப்புக்களில்
கறுப்புத் தீற்றலாய்....
அங்குமிங்கும் பறந்து கிடக்கிறது
அவள் கோபத்தின் சாம்பல்.
நா கொடுக்கு
கொட்டிவிட்டு மட்டுமல்ல
விதைத்துவிட்டும் செல்கிறது
அடுத்த கோபத்தை..
கசாப்புக் கடைக் கத்தியாயும்.,
ரத்தம் ருசிக்கும் அடித்தண்டாயும்..
இரும்பு கலந்து..
வால் முறுக்கி.,
விரட்டும் மாடாய்..
வெருட்டும் அரவாய்..
புன்னகைக் கைப்பிடி..
பொருத்திய வளைவாள்
உதடெனும் நாதாங்கிக்குள்..
எச்சமிட்டு எச்சமிட்டு
எச்சில் அமுதம்
பல்லி எச்சமாய்..
அன்பு புனைந்ததான
உயிர்மெய்கள் உண்டு
எச்சில் தழும்பு..
தேவதைப் பலியும்
நரம்பறுக்கும் எருதும்
காமாக்கியா தெப்பமாய்...
வெட்டி விழுந்தாலும்
திரும்ப வளரும்
பல்லிவாலும் கருவைமுட்களும்..
|