| பொத்தல்கள்
 ஒரு மரத்தின் கிளைகளின் அடர்வுக்குள்
 செங்குத்தாய் இன்னொரு மரம்.
 பெருமர கிளையின் அழுத்தத்தில்
 செங்குத்தான மரத்தின் முறிந்த கிளை.
 பெருமர கிளையிலும் சேதத்தின் தழும்பு.
 ஆனாலும் உராய்வு தொடர்கிறது
 காற்று தூண்டிவிடும் பகையாய்.
 ஒவ்வொரு உராய்விலும்
 சுமைதாங்காத கட்டிலின் முனகல் ஒலி.
 கிளை இழந்த செங்குத்தான மரம்
 இனியும் விட்டுக்கொடுப்பதில்லையென
 தீவிரமும் உறுதியும் காட்டுகிறது.
 ஆகவே முனகலொலியை
 பெருமர கிளைதான் எழுப்பியிருக்க வேண்டும்.
 அந்த தீன ஒலியை பொத்தலிடுவதுபோல
 கண்ணுக்குத் தெரியமாட்டாத
 மரங்கொத்தியின் டொட்டட்-டொட்டட்-டொட்டட்-டொட்டட்.
 சமிக்ஞை
 நீர்ப்பரப்பின்மீது
 தனது பெரும் இறக்கைகளை
 அடித்து அடித்து
 கவனத்தில் நிறுவுகிறது
 கவிதையிலிருந்து வானமற்ற வெளிக்கு மீண்ட
 பிரமிளின் பறவையோவென.
 
 நீர்த்தரையை ஒரு கணம்தொட்டு
 வெளி கிழித்துப்பறக்கிறது.
 மீண்டும் பெரும் இறக்கைகளின் சிறகசைப்பு
 இரையுண்ணும் கிளை தேர்ந்து அடைய.
 
 எங்கிருந்தோ வந்த இன்னொரு பறவை
 கச்சிதமான இடைவெளியில் பின்தொடர்கிறது
 ஜோடிப் பறவையோவென
 
 இரையைப் பங்கிட இயலாதென்கிற
 சமிக்ஞை
 இரண்டாவது பறவையின் மட்டுப்படும் சிறகசைப்பாயும்
 இரு பறத்தல்களுக்கிடையிலான தூரமாயும் விழுகிறது.
 
 நான்காய் மடித்து விரியும் கருங்கோடு
 இளநீலத்தில் கரைகிறது
 கடைசிக் காட்சியைப்போல்.
                                           
 |