கேள்வி: ஒரு சமுகத்தைப் பற்றியோ சாதியைப் பற்றியோ அல்லது மதத்தை பற்றியோ
சர்தார் ஜோக்குகள் போல அல்லது ரஸ்ஸல் பீட்டர்ஸ் stand up comedy போல நக்கல்
அடிப்பது பற்றி உங்கள் கருத்து? சீக்கியர்கள், இப்படிப்பட்ட ஜோக்குகளை
எவ்வாறு எதிர்கொள்கிறார்கள், சீக்கியர்களோடு நல்ல பரிச்சியம் உள்ளவர்
நீங்கள்,அதை பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன். தங்கள் சமுகத்தைப் பற்றிய சிறு
விமர்சனத்தைக் கூட பொறுத்துக் கொள்ளமுடியாத சமூகம்தான் தமிழ்ச் சமுகம்
என்று நினைகிறேன்? உங்கள் கருத்து?
பதில்: யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் கிண்டல் அடிக்கலாம். என் கேரள
நண்பர் ஒருவர் நேற்று என்னை அவர் வீட்டுக்கு மதிய விருந்துக்கு அழைத்தார்.
அப்போது அவர் என்ன சொன்னார் தெரியுமா? My wife will rape you with her
paraphernalia of kerala dishes. மிகப் பிரமாதமான சமையல் அந்தப்
பெண்மணியினுடையது. அதைத்தான் நண்பர் அப்படிச் சொன்னார். இந்த உலகிலேயே
நகைச்சுவை உணர்வே இல்லாத இனம் என்றால் அது தமிழ் இனம்தான். அப்படிப்பட்ட
இனத்தில் நகைச்சுவையையும் பகடியையுமே ஆதாரமாகக் கொண்ட எழுத்தை எழுதும் என்
துர்ப்பாக்கிய நிலையை என்னவென்று சொல்வது? என் எழுத்தைக் கிட்டத்தட்ட தமிழ்
சமூகத்தின் மீதான கெரில்லா தாக்குதல் என்றுதான் இதை எதிர்கொள்கிறார்கள்.
என்னுடைய கிண்டலுக்கு முழுக்க முழுக்க நான் பிறந்து வளர்ந்த நாகூரைத் தான்
காரணமாகச் சொல்ல வேண்டும். எந்த நாகூர்க்காரரிடமும் பேசிப் பாருங்கள்.
கிண்டலும் கேலியும் துள்ளி விளையாடும். நானெல்லாம் ஜுஜுபி. சர்தார்கள்
அட்டகாசம். சுய எள்ளல் அவர்களின் தனித் தன்மை.
கேள்வி: ஆன்மீகத் தேடல் என்பது மனிதனுக்கு முக்கியம்தானா ? அந்தத் தேடல்
இல்லையென்றால் வாழ்வு முழுமை பெறாதா? ஞானம் பெற ஆன்மீகம் ஒன்றுதான் வழியா?
பதில்: ஆன்மீகத் தேடல் என்பது மனிதனின் அடிப்படைத் தேவை என்று நான் சொல்ல
மாட்டேன். பெரியார், காந்தி, அம்பேத்கர், பாரதி ஆகியோரை எடுத்துக்
கொள்ளுங்கள். பெரியாரின் சிந்தனைகள் சமூக மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டவை.
காந்தி ஒரு அரசியல்வாதி. அம்பேத்கர் ஒரு சிந்தனையாளர். பாரதி கவிஞன். இந்த
நால்வரும் தாங்கள் ஈடுபட்ட துறையில் மிக நேர்மையாகவும், தீவிரமாகவும்
இருந்தார்கள் என்பதே இவர்களுடைய வாழ்க்கை நமக்குத் தரும் செய்தி. இதில்
பெரியாரும் அம்பேத்கரும் நாத்திகவாதிகள். ஆனால் காந்தியையும் பாரதியையும்
எடுத்துக் கொண்டால் அவர்கள் இருவரும் என்னதான் ஆன்மீகம் பேசினாலும் அவர்கள்
ஆன்மீகத்தின் வழி தங்களுடைய சிந்தனையையும் வாழ்வையும் அமைத்துக்
கொண்டவர்கள் அல்ல. காந்தி முழுக்க முழுக்க ஒரு அரசியல்வாதி. பாரதி முழுக்க
முழுக்க ஒரு கவிஞன். ஆக, நாம் எந்த இடத்தில் இருந்தாலும் நம்முடைய
intensityயும், கடின உழைப்பும், நேர்மையும்தான் நம்மை உச்சத்துக்குக்
கொண்டு செல்கின்றன. நேர்மை என்றால் என்ன என்பதற்கு நேற்று (20.3.11)
சேப்பாக்கத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸுக்கும் இந்தியாவுக்கும் நடந்த
கிரிக்கெட் ஆட்டத்தில் சச்சின் நடந்து கொண்ட விதத்தை உதாரணமாகக் கூறலாம்.
தமிழ்நாட்டில் கிரிக்கெட் ஒரு மதத்தைப் போல் கருதப்படுகிறது. நேற்று
சச்சின் சதம் அடிப்பார் என்றே எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். அப்படி
சதம் அடித்திருந்தால் அது அவருடைய 50-ஆவது சதமாக இருந்திருக்கும்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், சச்சின் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்திருந்த
நிலையில் ரவி ராம்பால் வீசிய பந்தைத் தடுத்த போது அது அவருடைய மட்டையில்
பட்டு விக்கட் கீப்பரின் கையில் சேர்கிறது. ஆனால் நடுவர் அதை
கவனிக்கவில்லை. அதனால் அவுட் கொடுக்க மறுக்கிறார். டிவியில் கூட சரியாகக்
கண்டு பிடிக்க முடியாதபடி நூலிழையில் பட்டுச் சென்றிருக்கிறது பந்து. ஆனால்
சச்சின் மட்டையைக் கக்கத்தில் செருகிக் கொண்டு பெவிலியனை நோக்கி நடந்தார்.
இதுதான் நேர்மை. நம் மனசாட்சியே நமக்குக் கடவுள். நம் மனசாட்சியை
ஏமாற்றுவது நம்மையே ஏமாற்றிக் கொள்வதாகும். நம்மையும் நம் மனசாட்சியையும்
மதிப்பதே உண்மையான ஆன்மீகம். தன்னை மதிக்காதவனே அடுத்தவனையும்
மதிக்காதிருக்கிறான்.
கேள்வி: இலக்கியவாதி vs Pulp Writer, வித்தியாசம் என்ன?
பதில்: மனுஷ்ய புத்திரன் - பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன்
சே குவேரா - தொல். திருமாவளவன்
பாரதியார் - பா. விஜய்
சுஜாதா - குரும்பூர் குப்புசாமி
சாரு நிவேதிதா - புஷ்பா தங்கதுரை
மகாத்மா காந்தி - சோனியா காந்தி
மார்லன் ப்ராண்டோ - கமல்ஹாசன்
நெல்சன் மண்டேலா - கருணாநிதி
இளங்கோவன் (சிங்கப்பூர்) - எஸ்.வி. சேகர்
இலக்கியவாதிக்கும் பல்ப் எழுத்தாளனுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து
கொள்ள இப்படி ஒரு பெரிய பட்டியல் போடலாம்.
செந்தில்குமார். தி.
கேள்வி: கம்ப்யூட்டர் துறையின் அபரிமிதமான வளர்ச்சி மக்களின் புத்தகம்
படிப்பதற்கான நேரத்தை தின்றுவிட்டது என்ற உண்மை சரியா?
பதில்: தமிழனின் கையில் எது கிடைத்தாலும் அது குரங்கின் கையில் கிடைத்த
பூமாலையைப் போல் தான் ஆகும். கணினி என்பது நம் ஒரு அற்புதமான தகவல் தொடர்பு
சாதனம். ஒரு அறிவுச் சுரங்கம். இந்த உலகின் நூலகங்கள் அனைத்தையும்
கைவிரலில் வைத்துக் கொள்ளக் கூடிய ஒரு மேஜிக் விளக்கு. ஆனால் இது தமிழனின்
கையில் வெறும் கையடித்து விந்து சிந்துவதற்கான ஒரு சாதனமாகவே பயன்படுகிறது.
நான் இப்படிச் சொல்வதற்காக யாரும் கோபப்பட வேண்டாம். கணினி மையங்களில் போய்
உட்கார்ந்தால் தரையெல்லாம் வழுக்குகிறது. நகரம் கிராமம் என்று வித்தியாசம்
இல்லாமல் தரை வழுக்குகிறது. பேசாமல் மேற்கத்திய நாடுகளின் செக்ஸ்
ஷாப்புகளில் வைத்திருப்பது போல் டிஷ்யூ பேப்பரையும் கணினியின் பக்கத்திலேயே
வைக்கலாம்.
கணினி இல்லாத காலத்தில் மட்டும் தமிழர்கள் ரொம்பப் படித்துக் கிழித்து
விட்டார்களா என்ன? தமிழனுக்கு சினிமாவும் குடியுமே உயிர் மூச்சு. இன்னும்
100 ஆண்டுக் காலத்துக்கு இதை மாற்ற முடியாது.
கேள்வி: எழுத்தாளனாக என்ன தகுதிகள் வேண்டும், எழுத்தாளன் ஆன பிறகு அந்த
இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?
பதில்: எழுத்தாளன் என்பவன் ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரனோ, ஒரு நடிகனோ அல்ல.
அவன் ஒரு கடவுளைப் போன்றவன். காலம் இடம் இரண்டையும் கடந்தவன். ஒருவன்
ராமகிருஷ்ண பரமஹம்சராகவோ ரமணராகவோ பட்டினத்தாரைப் போன்ற சித்தராகவோ ஆவதற்கு
என்ன தகுதிகள் வேண்டுமோ அதே தகுதிகள்தான் எழுத்தாளனாவதற்கும் தேவை. அவை
என்ன என்று நீங்களேதான் கண்டு கொள்ள வேண்டும். எனக்குத் தெரியும். ஆனால்
நான் அதைச் சொன்னால் உங்களால் புரிந்து கொள்ள முடியாது. அது ஒவ்வொருவரும்
தானே அனுபவித்துக் கண்டு கொள்ள வேண்டிய ஒன்று. அப்படிக் கண்டு கொள்வதற்கான
ஒரு எளிய வழியை வேண்டுமானால் என்னால் சொல்ல முடியும். கிரேக்க எழுத்தாளர்
கஸான்ஸாகிஸ் (Nikos Kazantzakis), மகாபாரதம் மற்றும் ஷேக்ஸ்பியரைப்
படியுங்கள். எழுத்தாளன் ஆன பிறகு அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள
எதுவும் செய்ய வேண்டியதில்லை. அதுவே நிழலைப் போல் உங்களைத் தொடர்ந்து வந்து
கொண்டிருக்கும்.
கேள்வி: கருணைக் கொலை பற்றி உங்கள் கருத்து (Euthanasia) என்ன? சரி அல்லது
வேண்டாம்? என்ற பதிலோடு அதற்கான விளக்கமும் வேண்டும்?
பதில்: அதைப் பற்றி முடிவு சொல்லும் அளவுக்கு எனக்குத் தகுதி இல்லை. என்
அறிவுக்கு மீறிய பல விஷயங்கள் உண்டு. அவற்றில் இதுவும் ஒன்று.
கேள்வி: எழுத்தாளன் பாமர மக்கள் மூலமும் அறியப் படவேண்டும்; அப்பொழுதுதான்
அவன் எழுத்துக்கள் மதிக்கப் படுவதாக ஆகும். சரியா?
பதில்: சரியில்லை. பாமரர்களால் நல்ல எழுத்தை ரசிக்க முடியாது. அதற்கான
தளவாடங்கள் அவர்களிடம் இல்லை. கண் இல்லாதவன் எப்படி ஒரு ஓவியத்தை ரசிக்க
முடியாதோ அதே போன்றதுதான் இது. பாமரர்களும் இலக்கியத்தை ரசிக்க வேண்டும்
என்று எதிர்பார்ப்பது அவர்கள் மீது வைக்கப்படும் வன்முறையே ஆகும். அப்படி
நினைப்பதெல்லாம் கம்யூனிஸ்டுகளின் மூட நம்பிக்கைகளில் ஒன்று. அதெல்லாம்
காலாவதி ஆகி பல காலம் ஆகி விட்டது. தமிழ்நாட்டின் பிரச்சினை என்னவென்றால்,
புத்திஜீவிகள், அரசியல்வாதிகள், சிந்தனையாளர்கள், அறிஞர்கள், விஞ்ஞானிகள்,
பணக்காரர்கள், படித்தவர்கள், கலைஞர்கள், பல்கலைக்கழகத்
துணைவேந்தர்கள்/பேராசிரியர்கள், மாணவர்கள், மருத்துவர்கள் போன்றவர்கள் கூட
பாமரர்களாக இருக்கிறார்கள் என்பதுதான். அப்துல் கலாம் ஒரு நல்ல உதாரணம்.
அதனால்தான் தமிழ்நாட்டை philistine சமூகம் என்று சொல்லிக்
கொண்டிருக்கிறேன்.
கேள்வி: சுஜாதா எந்திரன் பார்த்து இருந்தால் என்ன நினைத்து இருப்பார்?
பதில்: என்ன நினைத்திருப்பார் என்பது முக்கியம் அல்ல; என்ன
சொல்லியிருப்பார் என்பதுதான் சுவாரசியம். சூப்பர், காவியம், ஹாலிவுட்டுக்கே
சவால், மிரண்டு போனேன் என்றெல்லாம்தான் சொல்லியிருப்பார் சுஜாதா. ஒரு
முக்கியமான விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். கணையாழியில் கடைசிப்
பக்கங்கள் எழுதிக் கொண்டிருந்த சுஜாதா வேறு; மைய நீரோட்டத்தில் கலந்த
பிறகான சுஜாதா வேறு. கணையாழியில் அவர் கண்ணதாசன், பஞ்சு அருணாசலம், சிவாஜி
கணேசன் போன்ற சகலரையும் கிழிகிழி என்று கிழித்திருக்கிறார். அந்த சுஜாதா
அல்ல பெரும் பத்திரிகைகளில் எழுதிய சுஜாதா. பெரும் பத்திரிகைகளில் சமரசம்
செய்யாமல் எழுதுவது மிகப் பெரிய சவால். பெரும் பத்திரிகைகளில் நான் எழுதும்
போது நீங்கள் கவனித்திருக்கலாம். மக்களுக்குப் புரியக் கூடிய விஷயங்களை
எடுத்துக் கொள்வேனே தவிர யாருக்கும் ஜால்ரா அடிக்கும் வேலையெல்லாம்
என்னிடம் இருக்காது. எந்திரனை ஊரே வியந்து பாராட்டிக் கொண்டிருந்த போது அது
ஒரு குப்பை என்று விகடனிலேயே எழுதினேன். சுஜாதாவின் எழுத்தின் மீது எனக்கு
மிகுந்த மரியாதை உண்டு. அவரது புனைகதைகளின் மிகத் தீவிர விசிறி நான். அதே
போல் அவர் எழுதிய கட்டுரைகளும் மிகவும் சுவாரசியமானவை. அந்த அளவுக்கு
சுவாரசியமாகவும், ஆழமாகவும் கட்டுரை எழுதக் கூடியவர்கள் தமிழில் இல்லை.
ஆனால் அவருடைய விமர்சனங்கள் எதுவும் மரியாதைக்குரியவை அல்ல. அவர் பாராட்டிய
கவிஞர்கள் அனைவருமே - மனுஷ்ய புத்திரன் தவிர - மிகவும் சராசரியானவர்கள்.
அழகிய சிங்கர், பழமலை போன்றவர்கள்தான் அவர் மெச்சிய கவிஞர்கள். தன்
வாழ்நாளில் அவர் சேகரித்த விலை மதிக்க முடியாத புத்தகங்களைக் கூட ஊர் பேர்
தெரியாத யாரோ ஒருவருக்குத்தான் கொடுத்து விட்டுப் போனார்.
சாரு நிவேதிதாவின் எழுத்தை மலம் என்று வர்ணித்தவர் ஒரு சராசரி எழுத்தாளரான
சுந்தர ராமசாமியின் எழுத்தைக் கொண்டாடியதற்கு எழுத்தைத் தாண்டியும் சில
சமூகவியல் காரணங்கள் உண்டு. ஸ்ரீரங்கத்தைப் பற்றி எவ்வளவு ஆத்மார்த்தமாக
எழுதுவாரோ அதே அளவுக்குப் பிரியத்தோடு “நாகர்கோவில் சென்றால் சுந்தர
ராமசாமியை சந்தித்துப் பேச வேண்டும்” என்று பலமுறை சுஜாதா எழுதியதைப்
படித்திருக்கிறேன்.
சுந்தர ராமசாமியால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத உயரங்களைச் சென்று
அடைந்தவர் சுஜாதா. கோடிக்கணக்கான மக்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை
ஏற்படுத்தியவர். ஆனால் சுந்தர ராமசாமி காஞ்சீபுரம் மடத்தைப் போலவும்,
தர்மபுரம் ஆதீனத்தைப் போலவும் ஒரு நூறு பேருக்கு மட்டுமே குருவாக
இருந்தவர். அப்படிப்பட்டவரைப் போய் வாழ்நாள் பூராவும் சிலாகித்துக்
கொண்டிருந்தார் சுஜாதா. ஆனால் சுந்தர ராமசாமி தன் சீடரைப் பற்றித் தன்
வாழ்நாளில் ஒரு வார்த்தை கூட எழுதாமல் அவமானப்படுத்தினார் என்பதுதான்
உண்மை. ஒருமுறை ஒரு இலக்கியக் கூட்டத்தில் சு.ரா., சுஜாதா இருவரையும் நான்
காண நேர்ந்தது. சுஜாதா சு.ரா.விடம் வலிய சென்று ஹலோ என்கிறார். ஆனால்
சு.ரா. அதைப் பார்க்காதது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றதை நேரில்
கண்டிருக்கிறேன்.
எம்.டி. வாசுதேவன் நாயர் சுமார் 70 படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார்.
அவருடைய 20 கதைகள் சினிமாவாக எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த
மரியாதையெல்லாம் சுஜாதாவுக்குத் தமிழ் சினிமா உலகத்திலிருந்து
கிடைக்கவில்லை. ஒரு உதவி இயக்குனர் எழுதக் கூடிய வசனங்களை எழுதுபவராக
மட்டுமே சினிமா உலகம் அவரைப் பயன்படுத்திக் கொண்டது. இது அவருடைய தவறு
அல்ல. ஆனால் இதற்காக அவர் படு மோசமான சமரசங்களைச் செய்து கொள்ள
வேண்டியிருந்தது.ஒரு பயங்கரமான கலாச்சார வியாதியைப் பரப்பிக்
கொண்டிருக்கும் ஷங்கரின் படத்துக்கு அவர் எப்படி வசனம் எழுத முடியும்?
காரணம், ஒரு எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய அரசியல் பார்வை அவரிடம் இல்லை
என்பதுதான். இல்லாவிட்டால் அவர் பிராமண சங்கத்திடமிருந்து கிடைத்த விருதை
எப்படி ஒரு கௌரவமாக ஏற்று நேரில் போய் வாங்கிக் கொண்டார். சுஜாதாவுக்கு
சாதியில் நம்பிக்கை இருந்தது இல்லை. அப்படிப்பட்டவர் பிராமண சங்க விருதை
வாங்கிக் கொள்கிறார். சுஜாதாவுக்கு ஏன் அந்த விருது வழங்கப்பட்டது? அவர்
ஒரு பிராமணர் என்பதால்தானே? சுஜாதாவின் அடையாளம் வெறும் பிராமணர்
என்பதுதானா? எவ்வளவு பெரிய கேவலம் இது?
ஷிவம்
கேள்வி: சாருவின் எப்போதைக்கெப்போதுமான ஆசைகள் என்ன?
பதில்: எப்போதுமான ஆசை எனக்குப் பிடித்த தென்னமெரிக்க நாடுகளையும்,
ஐரோப்பிய நாடுகளையும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்பதுதான். சுற்றிப்
பார்ப்பது என்றால் டூரிஸ்டு மாதிரி அல்ல. வேறு மாதிரி. அது என்ன மாதிரி
என்று ராஸ லீலாவைப் படித்தால் உங்களுக்குப் புரியும். அது இன்னமும்
நிறைவேறாத ஆசையாகவே இருக்கிறது.
நெல்லையப்பன், திருநெல்வேலி.
கேள்வி: சாரு, உங்களால் எந்த ஜென்மத்திலும் மறக்கவே முடியாதவன் நான்.
திமுகவுக்கும், கருணாநிதிக்கும் ஜால்ரா அடித்துக் கொண்டிருக்கும்
வைரமுத்துவைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
பதில்: உங்கள் தொலைபேசி எண் என்ன நெல்லையப்பன்? உங்களையும் உங்கள் பெயரில்
திருநெல்வேலியில் வாழும் அந்தக் கொடூரமான ரவுடியையும் என்னால் மறக்கவே
முடியாது. அதிலும் பயங்கரம், உங்களுடைய பழைய தொலைபேசி எண் அந்த ரவுடிக்குப்
போய் இருக்கிறது என்பது. இது எல்லாவற்றையும் விட பயங்கரம், அந்தப் பழைய
எண்ணை உங்களின் லெட்டர் பேடிலிருந்து நீக்காமல் வைத்திருப்பது. என்னைப்
போல் இன்னும் எத்தனை பேர் ‘அந்த’ நெல்லையப்பனிடம் மாட்டி அவதிப்பட்டார்கள்?
வைரமுத்து கருணாநிதிக்கு ஜால்ரா அடிப்பதை விடுங்கள். அதில் ஆச்சரியம்
ஒன்றுமில்லை. ஆனால் இந்த எழுத்தாளர்கள் செய்யும் அக்குறும்புதான் தாங்க
முடியவில்லை. ஒருமுறை கருணாநிதி திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் ஒரு
விழா நடத்தி, சில எழுத்தாளர்களை அழைத்திருந்தார். அப்போது நம்
எழுத்தாளர்கள் நடந்து கொண்ட விதம் தமிழ் இலக்கியத்துக்கே அவமானகரமானது.
தமிழின் சிறந்த கவிஞர்களில் ஒருவரான ஞானக்கூத்தன் கருணாநிதி கை குலுக்கிய
போது தன் தேகமே சிலிர்த்ததாக மேடையிலேயே குறிப்பிட்டார். இவ்வளவுக்கும் தன்
வாழ்நாள் பூராவும் திராவிடக் கட்சிகளைப் பற்றிப் படு பயங்கரமாகக் கிண்டல்
அடித்துக் கவிதை எழுதிக் கொண்டிருந்தவர் ஞானக்கூத்தம். மற்ற எழுத்தாளர்கள்
அடித்த ஜால்ராவோ அதை விட அதிகம். கருணாநிதியே இதைப் பார்த்து மிரண்டு போய்
தன் பக்கத்தில் அமர்ந்திருந்த அப்துல் ரகுமானிடம் “என்ன இது, நம்
கட்சிக்காரர்களே தேவலாம் போலிருக்கிறது; இப்படிப் புகழ்ந்து
தள்ளுகிறார்கள்!” என்றாராம். இது பற்றிக் கடுமையான கண்டனத்தை அப்போது
தெரிவித்திருந்தார் ஜெயமோகன். ஆனால் இப்போது அவர் சினிமாவில் வசனம் எழுதும்
சான்ஸுக்காக எப்படியெல்லாம் சமரசம் செய்து கொள்கிறார் என்பதை நாம்
கேள்விப்பட்டுக் கொண்டுதானிருக்கிறோம்.
ஞானக்கூத்தனைப் போல் தன் வாழ்நாள் பூராவும் திராவிடக் கட்சிகளையும்
கருணாநிதியையும் திட்டிக் கொண்டிருந்த இன்னொரு எழுத்தாளர் நாஞ்சில் நாடன்.
ஆனால் அவர் சாகித்ய அகாதமி பரிசு வாங்குவதற்காக அடித்த குட்டிக்கரணங்கள்
எல்லாம் குரங்காட்டி தன் குரங்கை வைத்துச் செய்யும் சேஷ்டைகளை விடவும்
கேவலமானவை. ஆனால் இது பற்றியெல்லாம் எந்த எழுத்தாளனும் இங்கே பேச மாட்டான்.
நாஞ்சில் நாடனைப் பகைத்துக் கொள்ள முடியாதே? நாஞ்சில் நாடனைப் பகைத்துக்
கொள்வது ஜெயமோகனையே பகைத்துக் கொள்வதைப் போன்றது. ஜெயமோகனைப் பகைத்துக்
கொள்வதும் மதுரை அழகிரியைப் பகைத்துக் கொள்வதும் ஒரே விஷயம்தான். சாகித்ய
அகாதமி பரிசு வாங்கிய கையோடு உலகத்தின் மிக கௌரவமான பரிசான கலைமாமணி விருது
வாங்க நாஞ்சில் நாடன் செய்த குரங்கு வித்தைகளை எழுதினால் எனக்கும் சாதிக்
பாட்சாவுக்கு ஏற்பட்ட கதியே ஏற்படும் என்று அஞ்சுவதால் அதை எழுதாமல்
விடுகிறேன்.
சித்தானந்தன்
கேள்வி: உங்களின் ஐந்து நாவல்களையும் வாசித்துவிட்டேன் சாரு. அடுத்த ஆக்கம்
என்ன?
பதில்: அடக் கடவுளே, இது உங்களுக்கே நியாயமாகப் படுகிறதா? உங்களுக்கு
வேண்டிய ஒருவர் உங்களை அழைத்து விருந்து படைக்கிறார். இலையில் அவியல்,
மாங்காய்ப் பச்சடி, தயிர்ப் பச்சடி, பத்திரி, எரிசேரி, உருளைக் கிழங்கு
வறுவல், பொரியல், முருங்கைக் காய் சாம்பார், எலுமிச்சை ரசம், அக்கார
அடிசில், புளியோதரை, பாயாசம் என்று 40, 50 வகை பதார்த்தங்களோடு உங்களுக்கு
விருந்து வைக்கிறார் அவர். அவ்வளவையும் சாப்பிட்டு விட்டு, ”சாப்ட்டேன்,
அடுத்த விருந்து எப்போ?” என்று கேட்பது போல் இருக்கிறது உங்கள் கேள்வி.
அதுவாவது வெறும் சமையல். எழுத்தோ இன்னும் வேறு விதமானது. அதுவும் என்
எழுத்துக்கு என் உயிரையும் வாழ்வையுமே பணயம் வைத்திருக்கிறேன். காமரூப
கதைகளின் இறுதிப் பகுதியைப் படித்தாலே நான் சொல்வது உங்களுக்குப் புரியும்.
ஒருவர் தன் வாழ்வையே இழந்தால்தான் என் எழுத்தைப் போல் உருவாக்க முடியும்.
அவ்வளவையும் படித்து விட்டு “உங்கள் அடுத்த ஆக்கம் என்ன?” என்று
கேட்பவர்களுக்காக எழுதுவது எவ்வளவு துரதிர்ஷ்டமானது என்று யோசித்துப்
பாருங்கள்.